ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சுற்றுலாவினால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள்

சௌ.ஜான் ஆபிரகாம், முனைவர் பட்ட ஆய்வாளர்,  மெய்யியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ,  தஞ்சாவூர் 09 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: சௌ.ஜான் ஆபிரகாம், முனைவர் பட்ட ஆய்வாளர்,  மெய்யியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ,  தஞ்சாவூர்-10            

நெறியாளர்: முனைவர் பொ. சுரேஷ், உதவிப் பேராசிரியர், மெய்யியல் துறை, தமிழ்ப்  பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10

Summary of the study

       The journey began around the time man appeared. Travel is a journey that focuses on one of man's pleasures, pursuits, entertainment, and intellectual development. In today's world tourism is a lucrative business. Tourism is the invisible economic treasure of a country. Tourism plays an important role in reducing the burden of a backward country having an unfavourable balance of payments. Tourism plays an important role in the national economic development of a country. As the various sectors grow, so does the human power. The economies of underdeveloped countries are strengthening and growing. Foreign exchange is more available. Therefore, the tourism sector is gaining more economic importance in every country and is growing rapidly.

Keywords

Foreign exchange, travel, quest for entertainment, entertainment, knowledge development.

ஆய்வுச்சுருக்கம்

          மனிதன் தோன்றிய காலத்திலேயே பயணமும் தொடங்கியது. மனிதன் இன்பம், இறைத்தேடல், பொழுதுபோக்கு, அறிவுவளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமே சுற்றுலா எனலாம். இன்றைய உலகில் சுற்றுலா ஒரு பயன்மிகு தொழிலாக விளங்குகிறது. ஒரு நாட்டின் கண்ணுக்குத் தெரியாத பொருளாதாரக் கருவூலம்தான் சுற்றுலா. பாதகமான செலுத்து சமநிலையைக் கொண்டிருக்கும் பின் தங்கிய நாட்டின் சுமையைக் குறைப்பதில் சுற்றுலா முக்கியமானதோர் இடம் வகிக்கிறது.  சுற்றுலா ஒரு நாட்டின் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பங்கைச் செலுத்துகிறது. பல்வேறு துறைகள் வளர்ச்சியடைவதுடன் மனித சக்தியும் வளர்ச்சியடைகிறது. முன்னேற்றமடையாத நாடுகளின் பொருளாதாரம் வலுப்படுத்துப்பட்டு வளர்ச்சியடைகிறது. அந்நிய செலவாணி அதிகமாகக் கிடைக்கிறது. எனவே சுற்றுலாத் துறையானது ஒவ்வொரு நாட்டிலும் அதிக பொருளாதார முக்கியத்துவம் பெற்று வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

திறவுச் சொற்கள்

அந்நியச் செலாவணி, பயணம், இறைத் தேடல், பொழுதுபோக்கு, அறிவு வளர்ச்சி.

முன்னுரை

       பயணம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. மனிதன் தோன்றிய காலத்திலேயே பயணமும் தொடங்கியது எனலாம். வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் உணவு தேடிக் காடு மேடெல்லாம் அலைந்தான். பிற்கால மனிதன் திரைகடலோடியும் திரவியம் தேடினான். இன்றைய மனிதன் இன்பம், இறைத்தேடல், பொழுதுபோக்கு, அறிவு வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு சுற்றுலாவை மேற்கொள்கிறான்  எனலாம்.

           பல்வேறு நடவடிக்கைகளின் கூட்டுத்தொகையே சுற்றுலா ஆகும்.  இது முக்கியமாக பொருளாதார நடவடிக்கை சம்பந்தப்பட்டது. ஒரு நாடு, நகரம் அல்லது நாட்டின் ஒரு பகுதியில் , வெளிப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் நுழைந்து, அங்கு தங்கி செயல்படுதல் சம்பந்தப்பட்ட நடவடிக்கையே சுற்றுலா ஆகும் என ஹெர்மான் வி ஷெல்லார்ட் என்ற ஆஸ்திரிய நாட்டு பொருளாதார நிபுணர் 1910 ஆம் ஆண்டு அளித்த விளக்கமே சுற்றுலா பற்றிய மிக பழமையான விளக்கமாக கருதப்படுகிறது.

                     இன்றைய உலகில் சுற்றுலா ஒரு பயன்மிகு தொழிலாக விளங்குகிறது. ஒரு நாட்டின் கண்ணுக்குத் தெரியாத பொருளாதாரக் கருவூலம்தான்சுற்றுலா. சுற்றுலா மூலம் ஒரு நாடு பல்வேறு வழிகளில் பயன்பெறுகிறது. சுற்றுலா மூலம் நாட்டின் தேசிய வருவாய் அதிகரிக்கிறது. இதனால் நாடு பொருளாதார வளர்ச்சியடைந்து பல துறைகளில் முன்னேறுகிறது. நாடு மட்டுமல்லாது தனிநபரும் பயன் அடைகின்றனர். சுற்றுலா பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருப்பதுடன் சமுதாய முக்கியத்துவமும் பெற்றுள்ளது. சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தனிமனித வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கினை வகிக்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சுற்றுலா எந்தளவுக்குப் பங்களிப்பினைத் தருகிறது என்பதைப் பற்றியும், சுற்றுலாவின் பொருளாதாரத் தாக்கத்தைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது.

சுற்றுலா பொருள் விளக்கம்

       சுற்றுலா என்னும் சொல் பற்றிக் கலைக்களஞ்சியங்களும் அறிஞர்களும் பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர். இருப்பினும் ‘Tour’எனும் ஆங்கிலச் சொல் TORNUS எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. டோர்னஸ் என்றால் சக்கரம். எனவே, இச்சொல் சுற்றி வருவதைக் குறிக்கிறது என்பது தெளிவு. “இன்பப் பொழுது போக்கிற்காகப் பயணம் மேற்கொள்ளுதல் அல்லது பயணிகளுக்கு வழிகாட்டுதல், சுற்றுலா மேற்கொள்ளுதல் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்தல் முதலிய பணிகளைச் செய்யும் தொழிலகம் சுற்றுலா எனப்பெறும்” என்று பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.

       சுற்றுலாவின் கூறுகளைப் பற்றி அறிஞர்கள் பலவாறு குறிப்பிட்டுள்ளனர். புர்கட்டு, மெட்லிக் போன்ற அறிஞா்கள். “சுற்றுலா என்பது ஒரு பயணியின் குறுகிய காலப் பயணமாகும். அவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வர். அவர்கள் பிற இடங்களில் தற்காலிகமாகத் தங்குவர்”.

        ஜோவியக் என்பார் “ஓய்வெடுப்பதற்காவும், பொழுது போக்கிற்காகவும் கலாச்சாரத் தேவைகளைப் நிறைவு செய்வதற்குமான ஒரு சமுதாய இயக்கம் இது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

                    இங்கிலாந்தில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு சுற்றுலா மாநாட்டில் , சுற்றுலா என்பது ஒரு குறிப்பிட்ட மக்களால் தாங்கள் வசித்து வரும் சூழலுக்கு அப்பால் சென்று செயல்படும் நடவடிக்கைகளேயாகும் என விளக்கம் அளித்துள்ளது.

                     மேற்குறிப்பிட்ட விளக்கங்களை ஆராயும் போது சுற்றுலாவானது, ஒருவர் அல்லது குழுவினரின்  பல தரப்பட்ட நோக்கங்களின் பயணமாகும்

சுற்றுலாவின் வகைகள்

       சுற்றுலா தற்காலத்தில் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ளது. அது நாட்டிற்கு அந்நியச் செலவாணியை ஈட்டித் தருவதால்அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு சுற்றுலாவை மேம்படுத்துகின்றன. இந்நிலையில் சுற்றுலாவின் நோக்கம், தன்மை, இடம், தூரம், பயன்பாடு இவற்றின் அடிப்படையில் சுற்றுலா பலவகையாகப் பகுக்கப்படுகின்றன. அவை, உள்நாட்டு - வெளிநாட்டுச் சுற்றுலா, தனிநபர் - குழுச் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, சமூகச் சுற்றுலா, தொழில் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, அரசியல் சுற்றுலா, ஓய்வுச் சுற்றுலா, பருவ காலச் சுற்றுலா, விடுமுறைச் சுற்றுலா, விளையாட்டு, துணிகரச் சுற்றுலா, சமய ஆன்மிகச் சுற்றுலா, சங்கச் சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, கடற்கரைச் சுற்றுலா எனசுற்றுலாவானது பல்வேறு நோக்கங்களுக்காகவும் பயன்பாட்டிற்காகவும் மேற்கொள்ளப் பெறுகின்றது.

சுற்றுலாவும் வாணிகச் சமநிலையும்

       ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட கால அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பும், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பும் சம அளவில் இருந்தால் அதனை நாம் பன்னாட்டு வாணிகச் சமநிலை என்கிறோம். அதேசமயம் ஏற்றுமதிப் பொருட்களின் மொத்த மதிப்பு இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் அதனை நாம் சாதகமான வாணிகச் சமநிலை என்கிறோம். அதற்கு மாறாக ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் இறக்குமதிப் பொருட்களின் மொத்தமதிப்பு கூடுதலாக இருப்பின் அதனை பாதகமாக வாணிகச் சமநிலை என்கிறோம்.

     பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகள் சாதகமான வாணிகச் சமநிலையையும், வளர்ந்துவரும் நாடுகள் பாதகமான வாணிகச் சமநிலையைக் கொண்டுள்ளன. பாதகமான வாணிகச் சமநிலையை விரைவில் சீர்செய்யாவிடில் நாட்டின் பொருளாதாரநிலை பாதிக்கப்படும். இதற்கு மிகவும் கைகொடுப்பது கண்ணுக்கு புலனாகாத ஏற்றுமதிகள் ஆகும். கண்ணுக்குப் புலனாகாத ஏற்றுமதிகளில் சுற்றுலா முக்கியமான இடம் வகிக்கிறது. சுற்றுலாவின் மூலம் அந்நிய நாட்டு வருமானத்தைப் பெருக்கி பாதகமான சமநிலையைக் குறைக்கலாம். முடிந்தால் போக்கவும் செய்யலாம். ஏனெனில் சுற்றுலாவினால் வரும் வருவாய் ஏற்றுமதித் தொகையுடன் சேரும் எனலாம்.

                லிகோரிஷ்  , கெர்ஷா ஆகியோர் சுற்றுலா, முதலீடு ஏதும் தேவைப்படாத மிக எளிதான தொழில் , ஒரு சமுதாயம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் இரண்டு டஜன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க முடியுமானால் அது பொருளியல் வளர்ச்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்கள் ஊதியப்பட்டியல்களைக் கொண்ட ஒரு புதிய தொழிற்ச்சாலையை பெற்றுள்ளதற்க்கு ஒப்பாகும். என்று கூறுகின்றனர்.

சுற்றுலாவும் அன்னியச் செலவாணியும்

       ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையில் நிலவும் அனைத்து தொடர்புகள் பற்றிய பதிவேடே 'அயல்நாட்டு செலுத்து சமநிலை' ஆகும். ஒரு நாட்டின் வாணிகச் சமநிலையும் கண்ணுக்குப் புலனாகாத பொருள்களின் வரவுகள் அனைத்தையும் கூட்டி பற்றுகளைக் கழித்துக் கொண்டால் செலுத்துதல் சமநிலை கிடைக்கிறது. அயல் நாட்டுப் பயணிகள் நம் நாட்டில் செலவிடும் பணம் புலனாகாத ஏற்றுமதியாகும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காகவும் உணவுக்காகவும் போக்குவரத்திற்காகவும், பொருட்களை வாங்கவும் செலவு செய்யும் தொகையானது அந்த நாட்டிற்கு அன்னியச் செலவாணியாகக் கிடைக்கிறது. இந்த அன்னியச் செலவாணி மூலம் பாதகமான வாணிகச் சமநிலையையும், பாதகமான செலுத்து சமநிலையையும் சமாளிக்க முடிகிறது. இந்த வகையில் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு நாட்டிற்கு வரப்பிரசாதமாகவே உள்ளது. குறிப்பாக பாதகமான செலுத்துசமநிலையைக் கொண்டிருக்கும் பின் தங்கிய நாட்டின் சுமையைக் குறைப்பதில் சுற்றுலா முக்கியமானதோர் இடம் வகிக்கிறது.

சுற்றுலாவும் நாட்டின் வருமானமும்

       சுற்றுலா மூலம் ஒவ்வொரு நாடும் பல வழிகளில் வருமானம் பெறுகின்றன. பொருட்களை உற்பத்தி செய்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பதைக் காட்டிலும் அதிகமான வருமானத்தைச் சுற்றுலாத்துறை தருகிறது. சுற்றுலா ஆய்வறிஞர்களான லிகோரிஷ், கெர்ஷா ஆகியோர் சுற்றுலா பற்றிக் குறிப்பிடுகையில் "சுற்றுலா முதலீடு ஏதும் தேவைப்படாத மிக எளிதான தொழில். ஒரு சமுதாயம் ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் இரண்டு டஜன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க முடியுமானால் அது பொருளியல் வளர்ச்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்கள் ஊதியப்பட்டியல்களைக் கொண்ட ஒரு புதிய தொழிற்சாலையைப் பெற்றுள்ளதற்கு ஒப்பாகும்” என்று கூறுகின்றனர்.

       அரசாங்கம் சுற்றுலாத் துறையிலிருந்து நேர்முக வரி மற்றும் மறைமுக வரி மூலம் வருவாயைப் பெறுகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சிப் பணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் நேர்முக வரி ஆகும். மறைமுகவரி என்பது பயணிகளுக்குச் சேவை செய்தோ, உபசரித்தோ கிடைக்கும் வருவாய் ஆகும். மறைமுக வரிகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்: 1. தங்கும் அறை மீதான வரி, 2.உணவு மீதான வரி, 3.சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில் தொடங்குவதற்கான உரிமம் மூலம் பெரும் தொகை, 4. நுழைவு வரி, சுங்கவரி, 5. இறக்குமதி வரி, சொத்து பராமரிப்பு வரி, 6. விமானத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான வரி போன்றவை ஆகும்.

சுற்றுலாத் துறையின் பன்முக விளைவு

       சுற்றுலாவிற்கு பயணிகளின் வருகையால் பல்வேறு துறைகள் வளர்ச்சியடைந்து வருமானம் கிடைக்கிறது. இதனாலும் பொருளாதார வளர்ச்சி மேம்படுகிறது. அடிப்படை வசதிகளான சாலைப் போக்குவரத்து ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, மின்சார வசதி, தண்ணீர்வசதி, தரமான உணவு வசதி, கட்டிடப்பணிகள், அருங்காட்சியங்கள், கேளிக்கை விடுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காகத் தொடங்கப்பட்டு பல தரப்பட்ட துறைகளுக்கு இது அதிக லாபத்தைத் தருகிறது. இவை மூலம் நாட்டின் வருமானமும்பெருமளவு உயர்ந்து வருகிறது.

                அதோடு தொழில்களும் , கைத்தொழில்களும் வளர்ச்சியடைகின்றன. உள்ளூர் கைவினைப் பொருட்கள் புத்துயிர் பெறத் துணைபுரிகிறது. பொதுவாகச் சுற்றுலா பயணிகளே அரிய கலைப்பொருட்களையும், பொம்மைகள் , பைகள் போன்ற நினைவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். உதாரணமாக தஞ்சை தலையாட்டி பொம்மைகள், தஞ்சை கலைத் தட்டுகள், கிளிஞ்சல் பொருட்கள், சந்தனமாலைகள், மூங்கில் கூடைகள் ஆகியவைகள் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளால் விரும்பி வாங்கப்படுகின்றன. இதனால் இத்தொழில்கள்  நலிவடையாதிருப்பதுடன் , அந்த தொழில் செய்யும் குடும்பங்கள் வாழ வழி ஏற்படுகிறது.

               இருந்தபோதும் தற்போதைய கொரோனா பொது முடக்க நேரத்தில் , சுற்றுலாவின் அவசியத்தை நிச்சயம் நம்மால் உணர முடியும். ஏனெனில் உலகத்தின் அத்தனை சுற்றுலா தளங்களும் மூடிக்கிடக்கின்றன. தொற்றுநோய் பயம் மற்றும் பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் உள்நாட்டுச் சுற்றுலா செல்வதற்க்கு கூட இயலாத நிலையில் மக்கள் உள்ளனர். பல தரப்பட்ட மக்களும் பொருளாதார நிலையில் பாதிப்படைந்துள்ளனர். அதோடு இச்சூழல் நாட்டின் வருவாய் மாற்றத்தினை ஏற்ப்படுத்தியிருக்கிறது.

       இவ்வாறு சுற்றுலா ஒரு நாட்டின் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பங்கைச் செலுத்துகிறது என்பதை அறியலாம். நாட்டின் பல துறைகளிலும் சீரான வளர்ச்சி ஏற்பட்டு தேசிய வருவாய் உயர்கிறது. சுற்றுலாத் தொடர்புடைய பல்வேறு துறைகள் வளர்ச்சியடைவதுடன் மனித சக்தியும் வளர்ச்சியடைகிறது. முன்னேற்றமடையாத நாடுகளின் பொருளாதாரம் வலுப்படுத்துப்பட்டு வளர்ச்சியடைகிறது. அந்நிய செலவாணி அதிகமாகக் கிடைக்கிறது. எனவே சுற்றுலாத் துறையானது ஒவ்வொரு நாட்டிலும் அதிக பொருளாதார முக்கியத்துவம் பெற்று வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

முடிவுரை

       திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். வள்ளுவரும் 'எண்ணித் துணிக கருமம்' என்று கூறியுள்ளார் சுற்றுலாத் துறையைப் பொறுத்துவரை எக்காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செய்யும் காரியங்கள் தோல்வியடையும். வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுலாவின் மேன்மையை அறிந்து, சுற்றுலாத் துறையை வளர்க்க முனைந்துள்ளன. சுற்றுலா மனிதவாழ்வுடன் இணைந்து, பிணைந்து பொருளாதார முன்னேற்றத்துடன்,  புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், பழைய கவலைகளை விட்டுத்தள்ளவும் எப்போதும் களம் அமைப்பது சுற்றுலா மட்டுமே என்பதை, எங்கும் செல்லமுடியாமல் வீட்டில் அடைபட்டு இருக்கும் இப்பொதுமுடக்க நாட்களில் சுற்றுலாவின் அவசியத்தை நாம் அனைவரும் உணரமுடியும். மேலும் சுற்றுலா சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தையும், உலக மக்களிடையே நல்லெண்ணங்களை வளர்க்கிறது. ஒரு நாட்டின் அந்நியச் செலாவணியைப் பெருக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்துகிறது

பார்வை நூல்கள்

  1. ம. இராசசேகர தங்கமணி, சுற்றுலாவியல் ஓர் அறிமுகம், கொங்கு பதிப்பகம், பாண்டியன் நகா், சின்னாண்டான் கோயில் கரூா், பதிப்பு, 2003.
  2. வே. கிருட்டிணசாமி, சுற்றுலா வளா்ச்சி, மணிவாசகா் பதிப்பகம், பாரிமுனை, சென்னை- 18. பதிப்பு 2000.
  3. Nirmal Kumar, Tourism and economic development, APLL publishing corporation, New Delhi.
  4. R.K Sinha, Travel and Tourism management, Dominant publishers, New Delhi.
  5. முனைவர்.ச.ஈஸ்வரன், சுற்றுலாவியல் - ஓர் அறிமுகம்,சாரதா பதிப்பகம், சென்னை- 14. பதிப்பு- 2010.