ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“குறிஞ்சி” - குறியீட்டாய்வு

அ. உமாமகேஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் 09 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: அ. உமாமகேஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் – 632 115.

ஆய்வுச் சுருக்கம்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இருப்பிரிவுகளைக் கொண்ட சங்க இலக்கியத்தில் ‘குறிஞ்சி’ எனும் சொல்லின் நிலைப்பாட்டை ஆய்வதே இங்கு நோக்கமாகிறது. மேலும், ‘குறிஞ்சி’ எனும் சொல் நிலம், செடி, பண், யாழ், ஒழுக்கம் இவற்றில் எதனைச் சுட்டுகிறது என்பது குறித்தும், ‘குறிஞ்சி’ சொல் குறித்த மாறுபட்ட கருத்தக்கள் எழுவதற்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது.

கலைச்சொற்கள்: குறிஞ்சி நிலம், குறிஞ்சிச்செடி, குறிஞ்சிப்பூ, குறிஞ்சிப்பண், குறிஞ்சி யாழ், குறிஞ்சித்திணை.

முன்னுரை

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக்குடி” என்று புறபொருள் வெண்பாமாலை கூறுவதின் வாயிலாக தமிழின் பழமையை உணரலாம். இலக்கண நூலான தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் தமிழகத்தின் எல்லையை “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்;” என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில் வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரிமுனை வரை உள்ள தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். இவர்களில் பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ்மொழியைப் போற்றி வளர்த்தனர். இச்சங்கத்தின் வாயிலாக சங்க இலக்கியங்கள் உருவாயின. இவ்விலக்கியங்கள் தோன்றிய காலத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம் என்றே கூறுகிறோம். இச்சங்க இலக்கியங்கள் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைப்பெற்ற வாழ்வினைப் பெற்று, தனித் தன்மையோடு விளங்கி வருகின்றன.

இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய தொல்லிலக்கியங்களுள் முதன்மையானதும் முதிர்ச்சி பெற்ற படைப்பாகவும் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழ் மரபின் தொடக்க நூல்கள் யாவும் செவ்விலக்கிய மரபைப் பறைசாற்றுகின்றன. செய்யுள் புனைவதில் ஆழங்கால்பட்ட மரபாகவும் சங்க மரபு திகழ்கிறது. மனிதனுக்கிடையே நிகழும் அகப்புற வாழ்வியலைப் பதிவு செய்வதால் இதனைத் திணை இலக்கியம் என்றே ஆய்வுலகம் கூறுகிறது.

தமிழின் ஆதிகாலப் படைப்பான சங்க இலக்கியம் அடிப்படையான சில முக்கியக் கருதுகோளை கொண்டு இயங்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இவ்விலக்கியம் நிலம் சார்ந்த குறிப்பிட்ட பகுதி சார்ந்துள்ள வாழ்க்கையைத் திணை மரபு என்று கட்டமைக்கிறது. திணைசார் ஒழுக்கங்களையும் இன்னபிற பண்பாடுகளையும் செவ்வனே எடுத்துக்காட்டுகின்றன. அகம், புறம் என்கிற பாகுபாடுகளோடு இயங்கிய பாட்டும் தொகையுமான சங்க இலக்கியம் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாகும். இப்பாடல்கள் உருவான காலத்துக்கும் தொகுக்கப்பட்ட காலத்துக்கும் உள்ள இடைவெளி மிக நீண்டது. இத்தொகுப்பு உருவான காலத்தில் அகம், புறம் என்ற பாகுபாடுகள், யாப்பு, அடிவரையறை, திணை, துறை  உள்ளிட்ட கருதுகோள்கள் உள்வாங்கப்பட்டன. எட்டுத்தொகை நூல்களை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் -கற்றறிந்தார்

ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை

என்னும் பாடலும், பத்துப்பாட்டு நூல்களை

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி –மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

என்னும் பாடலும் எடுத்துரைக்கின்றன.

செம்மாந்த செம்மொழியான தமிழை, தன்னிகரில்லாத சிறப்புடன் வளம்வர செய்வது இலக்கணத் தொன்னூலாகிய தொல்காப்பியம். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என இலக்கணத்தை வகைப்படுத்தித் தந்துள்ளது. எழுத்தும், சொல்லும் மொழிக்கு இலக்கணம் கூற பொருள் மக்களின் வாழ்வியலுக்கான இலக்கணத்தைப் பகர்கிறது. இந்நூல் இலக்கியங்களை அகம், புறம் எனும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு இலக்கிய வகைமைக்கும் தனிதனியே ஏழு திணைகளை வகைப்படுத்துகிறது. அவ்வகையில் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை மற்றும் பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகளாகின்றன. இவற்றின் நடுவிலுள்ள அன்பின் ஐந்திணைக்கு முதல், கரு, உரிப்பொருள்களை உரித்தாக்கினர். மேலும், அகத்தைக் களவு, கற்பு என்று வகுத்தனர்.

தமிழர்தம் அகப் புற வாழ்க்கையை எடுத்துக்காட்டும் சங்க இலக்கியத்தில் 2381 பாடல்கள் உள்ளன. இவை எட்டுத்தொகையில் 2371 பாடல்களும் பத்துப்பாட்டில் பத்து நெடும் பாடல்களுமாக இடம்பெற்றுள்ளன. இவற்றை 473 புலவர்கள் பாடியுள்ளனர். 102 புலவர்கள் பெயர் அறியப்படாதவர்கள். அகம் புறம் என்ற பாகுபாட்டில் 1862 அகப்பாடல்களை 378 புலவர்கள் பாடியுள்ளனர். அவற்றுள் களவு, கற்பிற்கு முறையே 882, 966 பாடல்கள் கிடைக்கின்றன. கலித்தொகையில் மட்டுமே இடம்பெறும் கைக்கிளை, பெருந்திணைக்கு முறையே 4, 10 பாடல்களே உள்ளன. இச்சங்கப் பாக்களில் ‘குறிஞ்சி’ என்ற சொல்லின் நிலைப்பாட்டை ஆராய்வதே இங்கு நோக்கமாகிறது.

குறிஞ்சி

குறிஞ்சி என்பது காதலர்கள் முதலில் கூடுவதைக் குறிப்பதாகும். குறிஞ்சி என்பது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பூக்கின்ற மலர். அப்பகுதியின் ஒழுக்கமாகப் புணர்தல் சொல்லப்படுகிறது.

குறிஞ்சி நிலம் ஏனைய நிலங்களுக்குத் தாயகம். குறிஞ்சியான மலையகம் காற்றைத் தடுத்தும் குறிப்பிட்ட எல்லையிகடந்து வண்டலைப் படியச் செய்கிறது. இதனால் நன்றாக மண்டித் தழைக்கும் காடு தோன்ற வழி ஏற்படுகிறது. மலைப் பகுதியின் ஒரு பால் வீசும் காற்று, ஒரு கால் ஈரத்தன்மை இழந்தும், உலர்ந்தும் ஆவியாகிய நிலையில் பாலைத் தன்மைக்கு வித்திடுகின்றது. காற்று மோதாத பக்கங்களிலும் பாலை விரிய ஏதுவாகிறது. முல்லை நிலம் திரிந்த பாலையினும் குறிஞ்சி திரிந்த பாலையே சங்க இலக்கியத்தில் மிகவும் பயின்று வருவதைக் காணமுடிகிறது.1

குறிஞ்சியின் பகுதி விரிந்து காடுகளை உண்டு பண்ணுதல் இயல்பு. குறிஞ்சியின் சாயல் பெற்ற முல்லைக் காடுகளைச் சங்க நூல்கள் குறித்துள்ளன. காடுகளையும் பண்டைத் தமிழர் குறிஞ்சி நிலமாகவே கருதினர் என்னும் கூற்று இதற்கு அரண் செய்வதாகும்.2

குறிஞ்சி - சொல்லாட்சி

தமிழில் முழுமையாகக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிஞ்சி என்ற சொல் மூன்று இடங்களில் வந்துள்ளன.

முல்லை குறிஞ்சி மருதம் எனச்

      சொல்லிய முறையால் சொல்லவும் படுமே  (தொல். பொருள்.5)

      குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்    (தொல். பொருள்.6)

      வெட்சி தானே குறிஞ்சியது புறனே        (தொல். பொருள்.56)

 

சங்க கால மக்களின் வாழ்வியல் நிலைகளை ஓவியம் போல எடுத்துரைக்கும் சங்க இலக்கியத்தில் குறிஞ்சி என்ற சொல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

குறிஞ்சி நல்லூர் பெண்டிர்

      இன்னும் ஓவார் என்திறத்து அலரே        (நற். 116:11-12)

      உருகெழு மரபின் குறிஞ்சிபாடி

      கடியுடை வியல்நகர் கானவர் துஞ்சார்     (நற். 252:2-3)

      கருங்கால் குறிஞ்சி மதன்இல் வான்பூ       (நற். 268:3)

      நீள்மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி  

      நாள்மலர் புரையும் மேனி                (நற். 301:1-2)

      கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு

      பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3:3-4)

      குறிஞ்சிக் குன்றவர் மறம்கெழு வள்ளிதமர்   (பரி. 9-67)

      ஓலியியல் வார்மயிர் உளறினள் கொடிச்சி

      பெருவரை மருங்கில் குறிஞ்சி பாட        (அகம். 102-6)

      கருங்கோல் குறிஞ்சி நும் உறைவுஇன் ஊர்க்கே     (அகம். 308-16)

      கருங்கோல் குறிஞ்சி அடுக்கம் பாட

      புலிப்பல்தாலி புன்தலைச் சிறாஅர்         (புறம். 374:8-9)

      நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி        (முருகு. 239)

      விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ      (முருகு. 267)

      குறிஞ்சி பரதவர் பாட                  (பொருந. 218)

      குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்

      செல்லிசை நிலைஇய பண்பின்

      நல்லியக் கோடனின் நயந்தனிர் செலினே   (சிறுபாண். 267-269)

      வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சிப்

      பல்கால் பறவை கிளைசெத்து ஓர்க்கும்

      புல்ஆர் வியன்புலம் போகி               (பெரும்பாண். 182-184)

      கருங்கால் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து    (மதுரைக். 300)

      கார்மலர்க் குறிஞ்சி சூடி                 (மதுரைக். 613)

      தண்கயக்குவளை குறிஞ்சி வெட்சி         (குறிஞ்சி. 63)

      மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின்

      குறையாக் குறிஞ்சிக் குணம்              (குறிஞ்சி. வெண்பா)

      வள்இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய    (மலைபடு. 334)

      நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி       (மலைபடு. 359)

குறிஞ்சி - சொல்லாட்சியின் வரலாறு

திணைப்பெயர் ஒவ்வொன்றும் பெயர்க் காரணத்தைக் கருதி வந்தது. குறுகுதல் குறிஞ்சி எனவும், மருவுதல் மருதம் எனவும், முல்லுதல் முல்லை எனவும், பற்றுதல் பாலை எனவும், நெய்வது நெய்தல் எனவும் செந்தமிழ் அகராதி கூறுகிறது.3

குறிஞ்சி என்பது குறி என்பதன் அடிப்படையாக வந்தது. குறி அடையாளம், காலம், அளவு, என்று பொருள்படும் எனவும், பல்லாண்டுக் கால அளவைக் குறிக்கும் பூ. அப்பூப் பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலை சார்ந்த இடமும் எனவும் விளக்கியுரைக்கிறார் தேவநேயப் பாவாணர்.4

தழுவுதல் தழிஞ்சி எனவும், நெரிப்பது நெருஞ்சி எனவும், ஆவது போலக் குறுகுதல் குறிஞ்சியாகவும், இறுகுதல் என்பது நெருங்குதல், அணைதல், சேர்தல், இணைதல், புணர்தல் எனப் பொருள் கூறலாம் என்கிறது செந்தமிழ் அகராதி.5

குறுகுதல் என்னும் அடிப்படையில் இச்சொல் தோன்றியதன் வரலாற்றினையும், விளக்குவர். குறிஞ்சி என்னும் சொல் குறு+இஞ்சி என்று பாகுபடும். குறு என்பது குறுகல் எனப்படும். பரவலாக பொருள் அந்நிலையினின்றும் சுருங்குதலைக் குறுகுதல் என்பர். இஞ்சி என்பது இடம், மலை என்றும் பொருள்படும். நானிலத்தில் குறுகுதலான நிலம் எதுவெனில் மலையும் மலை சார்ந்த நிலமுமாம் என்று காரணம் கண்டுரைப்பவர் சிவபாத சுந்தரனார்.6

இத்தகு காரணங்களைத் தெளிந்து அறியும் பொழுது, குறுகுதல் என்ற அடிப்படையில் குறிஞ்சி எனப் பெயர் பெற்றதை ஒருவாறு உணர முடிகிறது. எனினும் பழந்தமிழர் அஃதெண்ணிப் பெயரிட்டழைத்தனர். இயற்கை வாழ்வு நடத்திய அவர்தம் நோக்கிற்குக் குறிஞ்சிப்பூ சூழ்ந்த மலையகமே காட்சியளித்திருக்க வேண்டும். மலைமிசை அழகு தோன்றும் அக்காட்சியைக் கண்டு குறிஞ்சி எனப் பெயரிட்டழைத்தனர்.

 ‘குறிஞ்சி நிலமே மக்கள் ஆதியில் வாழ்ந்த இடம்’ என்கிறார் வேலுப்பிள்ளை. மேலும் அவர் “குறிஞ்சி நில மக்கள் குறவர் ஆவர். அவர் வாழ்ந்த இடங்களில் யானையும், புலியும், கரடியும் திரிந்தன. தினையே குறிஞ்சி நிலத்தில் விளைந்த முக்கிய தானியமாகும். இந்நில ஆடவர் வேட்டைக்குச் சென்றபோது பெண்கள் உயர்ந்த பரண்களில் ஏறியிருந்து காட்டு மிருகங்களிடமிருந்து தினைப்புனத்தைக் காத்தனர் இறைச்சி, கள் என்பன இவரின் உணவு வகைகள். இவர் குடியிருப்பு சிறுகுடி" என்கிறார் வேலுப்பிள்ளை.7

குறிஞ்சி - பெயர்க்காரணம்

‘குறிஞ்சி’- என்பது நிலத்தாற் பெற்ற பெயரா? பூவாற் பெற்ற பெயரா? செடியால் வந்த பெயரா? ஒழுக்கத்திற்கான பெயரா? அல்லது உலகத்தார் வழங்கிய பெயரா? இவ்வாறான ஐய வினாக்கள் எழுதல் இயல்பே. எனவே, குறிஞ்சி என்பதன் பெயர்க் காரணம் பற்றி நிலவும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையும் கூர்ந்து நோக்கிப் பொருத்தமானதொரு விடை காணுதல் இங்கு ஏற்புடையதாகும்.

குறிஞ்சி என்பது பூவாற் பெற்ற பெயர் என்ற கொள்கைக்கு வித்திட்டவர் இளம்பூரணர். ‘மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூ சிறந்ததாகலான’8 மலை நிலத்திற்குத் தொல்லாசிரியர் குறிஞ்சியெனக் குறியிட்டார் என்பது இளம்பூரணர் கருத்து. ‘குறிஞ்சி’ என்பது ஒழுக்கத்தாற் போந்த பெயர் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறியவர் இறையனார் களவியல் உரைகாரர்.

“குறிஞ்சியாகிய ஒழுக்கம் நிகழ்ந்த நிலமும் குறிஞ்சியெனப்பட்டது; எண்ணை விளக்காகிய சுடரிருந்த இடமும் விளக்கெனப்பட்டது போல”9 என்று களவியல் உரை குறிப்பிடுகிறது. ‘குறிஞ்சி’ என்பது செடியாற் பெற்ற பெயர் என்று பி.எல்.சாமி கூறுகின்றார்.10 ‘குறுகுதல்’- குறிஞ்சி இது காரணத் தொழிற்பெயர் நெருங்கிப் புணர்தல் என்று பொருள்படுமென்று கருதுவர் வீ.பா.கா.சுந்தரம்.11

குறிஞ்சியாகிய ஒழுக்கம் நிகழ்ந்த நிலமும் குறிஞ்சி என்னும் ஒழுக்கத்தின் பெயரே குறிஞ்சி எனப்பட்டது என்பது களவியல் உரைக்காரர் கூற்று.12 குறிஞ்சி என்பது முதலில் புணர்தல் ஒழுக்கத்தைக் குறித்துப் பின்னர் மலை நிலத்தைக் குறித்தது என்றும், குறிஞ்சி என்னும் ஒழுக்கத்தின் பெயரே குறிஞ்சி நிலத்திற்கும், குறிஞ்சி மலருக்கும் பெயராயிற்று என்றும் வலியுறுத்துவர்.13 ஆயினும், தன்மையும் பன்மையும் காரணமாக ஒரு பூவினால் நிலமும் நிலத்து ஒழுக்கமும் குறிப்பிடப்பெற்றன எனக் கருதுவது பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. மலை நிலத்தில் காந்தள், வேங்கை, கடம்பு, குளவி, முதலிய பிற பூக்கள் காணப்படினும் குறிஞ்சி மலரின் தனிச் சிறப்புக் கருதியே அந்நிலம் குறிஞ்சி எனப்பட்டது. குறிஞ்சி நிலத்திற்குரிய குறிஞ்சிப் பூ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.

கருத்து மாறுபாட்டிற்குக் காரணம்

ஒரு சொல் ஒரு பொருள் குறித்து மட்டும் வருகையில் கருத்து வேறுபாட்டிற்கு இடமிருக்காது. ஆனால் ஒரு சொல் பல பொருள் குறித்து வருகையில், அறிஞர்களிடையே அச்சொல் பற்றி - சொற்பொருள் விளக்கம் பற்றிக் கருத்து வேறுபாடு தோன்ற வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் ‘குறிஞ்சி’ என்னும் சொல் சங்க இலக்கியங்களில் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகப் பயின்று வந்துள்ளது. எனவே, குறிஞ்சி பற்றிக் கருத்து வேறுபாடுகள் எழலாயின.

குறிஞ்சி – நிலப்பொருட்டாதல்

திருமுருகாற்றுப்படையில் விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ (திருமுருகு.267) என்ற இடத்தில் ‘குறிஞ்சி’ என்ற சொல் மலையையும் மலைச்சார்ந்த இடத்தையும் குறித்து நிற்கின்றது.

      பரிபாடலிலும் குறிஞ்சிக் குறவர் மறங்கெழு வள்ளிதமர்… (பரிபா.9:67) ‘குறிஞ்சி’ என்ற சொல் நிலப்பொருளில் வருதலைக் காண்கிறோம். மேலும், தொல்காப்பியத்தில் தொல்காப்பியர்

                  முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

                சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொல்.951:4-5)

என்று கூறியுள்ளார். இங்கு ‘குறிஞ்சி’ என்ற சொல் குறிஞ்சி நிலத்தைச் சுட்டுவதை அறிகிறோம். இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் ‘குறிஞ்சி’ என்ற சொல் நிலத்தையே குறித்து நிற்கிறது.

குறிஞ்சி – செடியைச் சுட்டல்

புறநானூற்று பாடலில்

கருங்கோல் குறிஞ்சி அடுக்கம் பாட (புறம்.374:8)

‘குறிஞ்சி’ எனும் சொல் குறிஞ்சிச் செடியைக் குறித்து நிற்கின்றது.

கருங்கோல் குறிஞ்சி மதனில் வான்பூ (268:3)

நீண்மலர் புரையும் மேனி… (நற்.301:1-2)

எனும் நற்றிணை பாடல் வரிகளில் ‘குறிஞ்சி’ என்ற சொல் குறிஞ்சிச் செடியைச் சுட்டுகிறது. மேலும்,

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

            பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்.3:4-5) என்ற வழியும்,

            கருங்கோற் குறிஞ்சி நும்உறைவின் ஊர்க்கே (அகம்.308:16 ) என்ற போதும்,

            கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து (ம.காஞ்சி.300) என்றவிடத்தும் ‘குறிஞ்சி’ என்ற சொல் மலை சார்ந்த சூழலில் வளரும் குறிஞ்சிச் செடியைச் சுட்டி நிற்றலைக் காண்கிறோம்.

குறிஞ்சி – பூவைச் சுட்டல்

மதுரைக்காஞ்சியில் கார்மலர் குறிஞ்சி சூடி(ம.காஞ்சி.613 ) என்ற இடத்திலும், குறிஞ்சிப்பாட்டில் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி (குறிஞ்.63) என்ற இடத்திலும் ‘குறிஞ்சி’ என்னும் சொல் குறிஞ்சிப் பூவைச் சுட்டுவதைக் காண்கிறோம்.

குறிஞ்சி – பண்ணைச் சுட்டல்

சங்க பாடல்களில் ‘குறிஞ்சி’ என்ற சொல் குறிஞ்சிப் பண்ணையும் சுட்டுகின்றது.

நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி

நறும்புகை எடுத்துக் குறிஞ்சிபாடி (திருமுருகு.238-239) மற்றும்

வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சி (பெரும்பாண்.182)

ஆகிய பத்துப்பாட்டு பாடல் வரிகளில் ‘குறிஞ்சி’ என்ற சொல் குறிஞ்சிப் பண்ணைக் குறித்து நிற்கின்றதை அறிகின்றோம்

குறிஞ்சி – ஒழுக்கத்தைச் சுட்டல்

‘குறிஞ்சி’ என்பது கூடல் ஒழுக்கத்தைச் சுட்டும் சொல்லாகவும் ஆளப்பட்டுள்ளது.

            காரும் மாலையும் முல்லை குறிஞ்சி

           கூதிர் யாமம் என்மனார் புலவர்   (தொல்.952)

            வெட்சி தானே குறிஞ்சியது புறனே (தொல்.1002:3)

எனும் தொல்காப்பிய நூற்பாக்களில் ‘குறிஞ்சி’ என்ற சொல் கூடலும் கூடல் நிமித்தமும் ஆகிய ஒழுக்கத்தைச் சுட்டி நிற்கிறது.

சங்க இலக்கியத்தில் குறிஞ்சி

நற்றிணையில் 131 குறிஞ்சித் திணைப் பாடல்கள் உள்ளன. இதில் 123 பாடல்கள் களவொழுக்கம் பற்றியவை, எட்டுப் பாடல்கள் (1, 5, 129, 176, 217, 294, 341, 386) கற்பொழுக்கம் பற்றியவை. குறுந்தொகையில் 147 பாடல்கள் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளன. அவற்றில் நான்கு பாடல்கள் (101, 106, 201, 252) கற்பைப் பாடியுள்ளன. அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 80 குறிஞ்சித் திணைப் பாடல்களும் களவொழுக்கத்திற்கு உரியனவாய் உள்ளன. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் 100 குறிஞ்சிப் பாடல்களில், 95 ‘களவு’ என்ற கைகோளுக்கும், ஏனைய 5 (240, 265, 283, 292, 294)’கற்பு’ என்ற கைகோளுக்கும் உரியனவாகும். கலித்தொகையில் 29 குறிஞ்சிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மூன்று பாடல்கள் (கலி. 56,57,58) கைக்கிளைப் பொருண்மை சார்ந்து வருகின்றன. ஒன்று (கலி. 62) பெருந்திணை பற்றியது. ஏனைய இருபத்தைந்தும் அன்பின் ஐந்திணைக்குரிய களவுக் குறிஞ்சிப் பாடல்களாகும். பத்துப்பாட்டில் அறத்தொடு நிற்றல் துறையில் தோழி கூற்றாக வரும் ‘குறிஞ்சிப்பாட்டு’ மிகச் சிறந்த ஒன்றாக விளங்குகின்றது. ஆக, 488 குறிஞ்சித் திணைப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் நடுவண் ஐந்திணைக்குரியன 484 பாடல்கள்; கைக்கிளைக்குரியன மூன்று பாடல்கள்; பெருந்திணைக்குரியது ஒன்று; என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

குறிஞ்சித் திணையும் திணைச்சிறப்பும்

எல்லா உயிர்க்கும் இயல்பாக எழுந்து வருகின்ற இன்ப உணர்ச்சியாகிய இயற்கை கூடல் உணர்ச்சியைப் “புணர்ச்சி" என்று குறியீடு செய்து, அதைக் குறிஞ்சிக்குரிய உரிப்பொருளாக்கிக் கூதிர், யாமம், என்ற காலம் வரையறுத்தும், “பனியெதிர் பருவமும் உரித்து" என்று விதிமுறை கூறியும், மக்களுடைய இல்லற வாழ்விற்கும் பொது வாழ்விற்கும் வழிகாட்டவே பண்டைத் தமிழ்ச் சான்றோர் குறிஞ்சி இலக்கிய மரபை உருவாக்கினர்.

“ஆணும் பெண்ணும் தனித்தனியே வாழமுடியாதபடி இயற்கை மனித இனத்தைப் படைத்துள்ளது. ஒருவருக்கொருவர் துணையாகச் சேர்ந்தாலன்றி இயற்கையின்  நோக்கமாகிய உயிர் வளர்ச்சி நிறைவேறாது" என்பர்.14 இருபாலரும் இணைந்து வாழ்வதே இயற்கை வகுத்த சட்டம், இச்சட்டம் மக்கள் வகுத்த செயற்கைச் சட்டங்களைவிட ஆற்றல் வாய்ந்தது. ஆணை செலுத்துவது. பறவை உலகம் இதற்குப் பணிகிறது. விலங்குலகம் இதற்கு விதிவிலக்கன்று. புழு-பூச்சி உலகமும் இதற்குக் கட்டுப்படுகின்றது. அகில உலகமும் இதன் ஆட்சிக்குக் கட்டுப்படும் வேளையில், மக்களும் கட்டுப்படுகின்றனர்.

“இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாலெனின். அதுவும் காமங் கண்ணிற்றேல் இன்பத்துள் அடங்கும்"15 என்றார் நச்சினார்க்கினியர். புணர்ச்சியின்றிப் பிரிவேது? தலைவனும் தலைவியும் பாலைத்திணையில் பிரிவுத்துயரால் துடிக்கின்ற துடிப்பே துன்பத்தைத் தவிர்த்து இன்பப் புணர்ச்சியை அடைய வேண்டுமென்ற குறிக்கோளைக் காட்டுகின்றது.

மருதத்திணை என்பது “ஊடியும் கூடியும் போகம் நுகர்தல்"16 என்கிறார் நச்சினார்க்கினியர். நெய்தற்குரிய இரங்கலை “ஆற்றாமை"17 என்கிறார் இளம்பூரணர். பிறிதோர் வகையால் கூறின் மருதத்தை “ஊடிக் கூடல்" என்றும், நெய்தலை “இரங்கிக் கூடல்" என்றும், முல்லையை “ஆற்றிக் கூடல்" என்றும், பாலையைப் “பிரிந்து கூடல்" என்றும் கூறலாம். எல்லா அகத்திணைகளும் “குறிஞ்சி" ஒழுக்கமாகிய புணர்தலையும், புணர்தல் நிமித்தத்தையுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளதை உணர முடிகிறது. புணர்தலை மிகுவிப்பதற்காகவே இவையாவும் நிகழ்கின்றன என்று கூறலாம்.

முடிவுரை

“குறிஞ்சி" என்ற சொல் சங்க நூல்களில், மலை நிலத்தைக் குறிப்பிடும் போது குறிஞ்சி நிலம் என்றும், அந்நிலத்தில் வளரும் செடியைக் குறிப்பிடுகையில் குறிஞ்சிச்செடி என்றும், அச்செடியில் மலரும் மலரின் பெயரைச் சுட்டும் போது குறிஞ்சிப்பூ என்றும், குறிஞ்சி நில மக்களின் இசையைக் குறிக்கையில் குறிஞ்சிப்பண் என்றும், இசைக்கருவியைக் குறிப்பிடுகையில் குறிஞ்சியாழ் என்றும், அம்மக்களின் ஒழுக்கத்தைச் சுட்டும் போது குறிஞ்சி ஒழுக்கம் என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.

உயிரும் பயிரும் வளர்வதற்கும், ஒழுக்கம் நிலவுவதற்கும், நாகரிக பண்பாடுகள் மலர்வதற்கும், நிலமே மூலமுதலாக அமைவதால் ‘குறிஞ்சி’ என்பது நிலத்தால் பெற்ற பெயர் என்று கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. முதலில் மலை நிலத்தைக் குறித்து நின்ற குறிஞ்சி, ஆகுபெயராய் மலைச்சூழலில் வளர்ந்த குறிஞ்சிச் செடியினையும், மலர்ந்த குறிஞ்சிப் பூவினையும் குறித்து, பூவின் பெயர் ஒழுக்கத்திற்கு ஆயிற்று என்பதே ஏற்கும் வகையில் உள்ளது. மலையும் மலைசார்ந்த இடத்தையும் முதலில் குறித்து நின்ற ‘குறிஞ்சி’ என்னும் சொல் மலை நிலத்தில் நடைபெறுவதாகப் புலவர் பாடும் “கூடல்” ஒழுக்கத்திற்கு ஆகுபெயர் ஆனது. எனவே, ‘குறிஞ்சி’ என்பது நிலத்தால் பெற்ற பெயர் என்பதும், செடி, பூ, ஒழுக்கம் முதலிய பொருட்பேறுகள் ஆகுபெயர் பொருள்களாய் அமைந்தன என்றும் கொள்ளலாம். தற்காலத்தில் ‘குறிஞ்சி’ என்ற உடன் நம் எண்ணத்தில் உதிப்பவை குறிஞ்சி நில மக்களின் ஒழுக்கத்தைக் குறிக்க பயன்படுத்தும் சொல்லான “திணை” ஆகும். அவ்வகையில் ஐவகை நிலங்களைக் குறிக்க குறிஞ்சித் திணை, முல்லை திணை, மருதத்திணை, நெய்தல் திணை, பாலை திணை என்கிறோம். உலக உயிர்கள் அனைத்திற்கும் “புணர்தல்” அடிப்படை இயல்பாக இருப்பதையும், அகத்திணைகள் அனைத்திற்கும் குறிஞ்சியே அடிப்படை ஆதாரமாக, ஆணிவேராக உள்ளதையும் இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம்:

1. Huntington, C,C., Environmental Basis of Social Geography, P.231

2.தமிழ்நாட்டு வரலாறு, தொல், பழங்காலம், ப.44

3.செந்தமிழ், தொகுதி-55, எண்.9., பக்.301

4.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு, பக்.117

5.செந்தமிழ், தொகுதி-55, எண்.9., பக்.301

6.சிவபாத சுந்தரனார், நா., புறப்பொருள்வெண்பாமாலை ஆராய்ச்சி, பக்.15-17

7.வேலுப்பிள்ளை.ஆ, தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், பக்.11.

8.இளம்பூரணர் உரை.தொல். பொருள்.5

9.பவானந்தர் கழகம் (வெளியீட்டாளர்) இறையனார் அகப்பொருள் (மூலமும் உரையும்) பாயிரம், சென்னை 1939, பக்.25.

10.பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், பக்.28.

11.இளங்குமரன் (பதி.) உரையாசிரியர் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம், பக்.101.

12.இறையனார் அகப்பொருள் உரை, பக்.23-24

13.சுந்தரம், வீ.பா.க, செந்தமிழ், தொகுதி-55, எண்.9, பக்.297

14. Betrand Russel, Marriage and Morals Seventh Impression, P.64

(“Nature did not construct human beings to stand alone, since they cannot fulfil her biological purpose except with the help of another.")

15.தொல். பொருள். அகத். நச். 1

16.தொல். பொருள். அகத். நச்.5

17.தொல். பொருள். அகத். இளம்.14