ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகநானூற்றில் சமுதாய பண்பாடு

முனைவர்.ஜெயபுனிதவள்ளிமுனிராஜ்,  M.A.,NET.,Ph.D., இடிகரை, கோயம்புத்தூர் 09 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: முனைவர்.ஜெயபுனிதவள்ளிமுனிராஜ்,  M.A.,NET.,Ph.D., இடிகரை, கோயம்புத்தூர் - 22                                                                               

Abstract

Culture is something that changes over time and according to the life circumstances of the people. Culture in the Tamil tradition is what sets us apart from the rest of the world. Tamil literature is an excellent companion for understanding this proud culture. Literatures are symbols of the life of ancient Tamils. Tamilans are able to protect the people, to dispel the ignorance of the people and to face the society through the literary messages of the news about the necessity of life and the basic messages of the culture.

ஆய்வுச்சுருக்கம்

பண்பாடு என்பது காலத்திற்கேற்பவும், மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளுக்கேற்பவும் மாறக்கூடிய தன்மை உடையதுதான். தமிழ் மரபில் பண்பாடு என்பது நம்மை உலகுக்கு அடையாளங் காட்டும் தன்மையாகவே அமைகிறது. இத்தகு பெருமை மிகும் பண்பாட்டை அறிந்துகொள்வதற்கு தமிழ் இலக்கியங்கள் சிறந்த துணையாக அமைகின்றன. பண்டைத் தமிழரது வாழ்வின் அடையாளங்களாக இலக்கியங்கள் திகழ்கின்றன. தமிழர்கள் மக்களைக் காக்கவும், மக்களின் அறியாமையைப் போக்கவும், சமூகத்தினை எதிர்கொள்வதும், வாழ்க்கையின் இன்றியமையாமை பற்றிய செய்திகளையும், பண்பாட்டின் அடித்தள செய்திகளையும் இலக்கியச் செய்திகள் வழியாக உணரமுடிகின்றது.

திறவுச் சொற்கள்

பண்பாடு, சமுதாயம், சமுதாயம் மக்களின் உணர்வு.

முன்னுரை

ஆதிகாலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஒலியளவிலும் குறியீட்டு அளவிலும் தம் கருத்தை வெளியிட்டு வந்த மக்கள் பேச்சு மொழியை உருவாக்கிக் கொண்டனர். மனிதர்கள் தம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உரிய அறிவையும் திறமையையும் பண்பாடு அளிக்கிறது. தனிமனிதனின் சிறந்த செயல்களே பண்பாடாக மாறுகின்றன. ஒரு நாட்டின் பண்பாட்டு நிலைக்களன் அந்நாட்டில் வாழும் ஆடவர், பெண்டீரைச் சார்ந்துள்ளது. பண்பின் ஒவ்வொரு கூறும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தன்மை உடையதாக விளங்குகிறது.

இலக்கியப் பாடல்களில் அடிவரையறை மிகுதியாக இருப்பதால் புலவன் தான் நினைக்கின்ற செய்திகளையும் உணர்வுகளையும் விரிவாகப் பேசமுடியும். முதல் பொருள், கருப்பொருள் ஆகியவற்றை உள்ளுறை உவமமாகவும், இறைச்சியாகவும் பயன்படுத்தி காதலன், காதலி ஆகியோரின் நிலையையும், காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். இலக்கிய ஆசிரியன், இயற்கையைப் பயன்படுத்தி அல்லது பாடுபொருளாக்கி தலைவி அல்லது தோழியின் கருத்தினை, மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்துவான். மேலும் மனிதர்களின் பொருளியல் நடவடிக்கைகளினூடே காதல் காட்சிகளை வெளிப்படுத்தும் பாங்கும் குறிப்பிடத்தக்கது.

பண்பாடு

       ஒரு சமுதாயத்தின் செயல்பாடுகளிலிருந்து அச்சமுதாயத்தின் பண்பாட்டை அறியலாம். பண்பாடு என்பது சமூக அகவளர்ச்சியைக் கூறுவது. மக்களின் செறிவான வாழ்க்கை முறையைப் பண்பாடு வெளிப்படுத்துகிறது. சமுதாயம் மக்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டது. மக்களின் தேவையை நிறைவேற்றுவதாகவும் சமுதாயம் அமைகிது. சமுதாயம் சிறந்த வகையில் அமைய அதன் பண்பாடு அடிப்படையாக அமைகின்றது. மக்களின் வாழ்க்கையில் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் இருப்பதால் தான் மக்கள் இணக்கமாக வாழ முடிகிறது. ஆகவே சமுதாய வளர்ச்சிக்குப் பண்பாடு அடிப்படையாக அமைகிறது. பண்பாட்டால் மக்கள் வாழ்க்கைத் தனித்துவம் பெறுகிறது.

பண்பாடு சொற்பொருள் விளக்கம்

       பண்பாடு என்ற சொல் சங்க இலக்கியத்தில் பண்பு என்ற சொல்லிலே வழங்கப்பட்டு வந்துள்ளது. கால மாற்றத்திற்குப் பிறகு பண்பாடு என வழங்கப்பட்டு வந்தது. பண்பாடு என்பது பண்பு+பாடு எனப் பிரிந்து பொருள் தரும். பண்பு எனப்படுவது  உயிர். உயிரினால் ஆகிய பொருட்களின் குணம் ஆகும். பாடு என்பது பேசுதல், சொல்லுதல் ஆகும். பண்படுதல் என்பது சீர்திருத்துதல் எனப்பெறும். பண்பினைப் பேசுவது பண்பாடு எனப்படும். (தமிழ் மொழி அகராதி)  பண்பாடு என்னும் சொல் அண்மைக் காலத்தில் தான் வழக்கில் வந்துள்ளது. டி.கே.சி. அவர்கள் இச்சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியுள்ளார். ஆயினும், தொல்காப்பியர் காலத்தில் பண்பு என்னும் சொல் வழக்கில் இருந்துள்ளதை,

     இசையினும் குறிப்பினும் பண்பினும் தோற்றி (தொல், உரியியல், நூ.1)

என்ற நூற்பா வழி அறியலாம்.

அகப்பண்பாடு

பிறருக்குக் கொடுத்து வாழும் வாழ்வே சங்க காலத்தின் உயிர்ப்பண்பாய் விளங்கியது. பழந்தமிழர்கள் காதலையும் வீரத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டனர். ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வெட்சி  மறவர்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொன்று தின்றனர்.  தமிழரின் அக வாழ்வின் உயர்ந்த பண்பாக அறத்தொடு நிற்றல் திகழ்கிறது. மன உணர்வின் உண்மை வெளிப்பாடாகத் திகழ்வது அறத்தொடு நிற்றலாகும். நாணமும் கற்பும் மகளிரின் காக்கத்தகும் இரு பேரொழுக்கங்கள்.  கற்பைத் தலையான கோட்பாடாக தமிழர்கள் போற்றி, காத்து வந்துள்ளனர். திருமணம் என்பதைத் தொல்காப்பியர் கரணம் என்று குறிப்பிடுகிறார். வேங்கை மலர் மலரக்கூடிய வேனிற் காலத்தைத் திருமணத்திற்குரிய காலமாகதக் கருதினர் என்பதை

குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்

மன்ற வேங்கை மணநாள் பூத்த(அகம்.232:6-7)

என்ற அகநானுற்றுப்  பாடல் உணர்த்துக்கிறது. மரத்தின் அடியில் திருமணம் பேசுவது தமிழர்களின் மரபாக இருந்து வந்துள்ளது. தன் இல்லம் நாடி வருவோர் யாராயினும் அவர்கள்பால் இன்முகத்துடன் விருந்தோம்புதல் தமிழரின் முக்கியப் பண்பாக விளங்குகிறது. பழந்தமிழர் உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடில்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மனித நேயப் பண்போடு இருந்துள்ளனர். தமிழர்கள் ஈகைப் பண்பைத் தம் வாழ்வில் ஒரு பகுதியாகக் கருதினர். பொருள் ஈட்டலின் காரணம் அறமே எனவும் வலியுறுத்தப்படுகிறது. சங்ககால மக்கள் அறநெறியைப் போற்றி வாழ்ந்துள்ளனர் என்று செய்தியை அறிய முடிகிறது.

தொல்குடிப் பண்பாடு

குடி என்ற சொல் எல்லா திராவிட மொழியிலும் காணமுடிகிறது. அண்டர், அதியர், ஆரியர், இடையர், புல்லியலாளர், கடம்பர், காரி, கொங்கர், கோசர், கோவலர், கோழியர்,  தொண்டையர், பூழியர், மழவர், மறவர், வடுகர் போன்ற 17 தொல் குடிகள் குறிக்கப் பெறுகின்றனர்.

தொல்குடி மக்கள் கால்நடை வளர்ப்பில் சிறப்புற்றிருந்தனர். கானம், காடு, புறவு ஆகிய நிலப்பகுதிகள் குறிக்க பெற்றுள்ள செய்தி

சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்

கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,

தொடுதோற் கானவன் கவை பொருத்தன்ன (அகம்.34:1-3)

என்னும் பாடலடிகள் வழி அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் கான், கானம் எனக் கூறப்பெறும். நிலப்பகுதி இ மக்களின் வாழ்க்கையில் வருவாய் அளிக்கும் பகுதியாக விளங்கியது. கானத்தில் ஏனல், தினை, வரகு ஆகியவை பயிரிடப் பெற்றன. மேல்நிலைக் குடிகள்,  துணைநிலைக் கொடிகள் என இருவகைக் குடிகள் இருந்தனர். மேல்நிலைக்குடிகள்  தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் பெற்றிருந்தனர். அரசர்கள் தங்கள் செல்வத்தினைப் பெருக்கிக் கொள்ள ஆகோள் பூசலில் ஈடுபட்டனர் என்ற கருத்தும் உண்டு. வறுமையின் காரணமாகவோ, வளமின்மை காரணமாகவோ பூசல் நிகழவில்லை. முல்லைப் பகுதியில் சங்க காலத்தில் ஆநிரையே ஒப்பற்ற செல்வமாகக் கருதப்பெற்றது. அகநானூற்றில் ஆகோள் என்பதற்குப் பதிலாக சேக்கோள் என்று அழைக்கப்பெற்றுள்ளது. கவர்ந்த ஆநிரைகளைத் தம்முள் பகிர்ந்து கொள்ளும் மரபு பற்றிய செய்தியினை அறிய முடிகிறது. சேர மன்னர்கள் மழவர் மேய்ம்மளை என்று கூறப்படுவதிலுருந்து மன்னனுக்குக் காவல் வீரர்களாக மழவர் விளங்கினர் என்பது விளங்கும். வீரர்கள் வீரமரணம் அடைந்தால் வானுலகு செல்வார்கள் என்ற நம்பிக்கை சங்க கால மக்களிடம் இருந்ததால் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் நட்டு படையலிட்டு வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.

தொல்குடி பண்பாட்டில் தெய்வ வழிபாடு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. சமய உணர்வும் கடவுள் நம்பிக்கையும் பழந்தமிழர் வாழ்க்கையில் நிறைந்திருந்தன. சங்ககால மக்கள் சமயச் சார்பற்ற தெய்வ வழிபாட்டினைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது. கூத்து பழங்காலத்தமிழருக்குச் சிறந்த பொழுதுபோக்குச் சாதனமாக இருந்துள்ளது. கூத்தினை மயிலின் ஆட்டத்திற்கு ஒப்பிட்டு உவமை கூறும் வழக்கம் காணப்படுகிறது. அக்காலத்தில் பாமர மக்களுக்கே  உரிய பொழுதுபோக்கு கூத்தாகக்  குரவை இருந்துள்ளது. மகளிர் தமக்குரிய ஆடவரைத் தழுவி ஆடும் கூத்து துணங்கை எனப்படும்.

வெறியாடுவோர் தாமாக ஆடுவதில்லை. அவர்மீது ஏறிய கடவுளின் தூண்டுதலால் ஆடுவதாக நம்பினர். அதனால் தெய்வம் ஏறிய ஆடுங்கூத்து என்று அழைப்பர்.

நகரப் பண்பாடு

சங்க இலக்கியத்தில் நகர் என்ற சொல் பலவிடங்களில் பயின்று வந்துள்ளன. நகரம் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்ற காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலமாகும். காப்பியங்கள் நகர வாழ்க்கையை விரிவாகப் பேசுகின்றன. நகர வாழ்க்கை பல பண்பாடுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டது. அகப்பாடல்கள் நகரங்களைத் தலைவியின் பெருமைக்கும் அழகுக்கும் ஒப்பிட்டு பேசுகின்றன. நகர வாழ்க்கையின் பன்முகத்தன்மை, பல மொழி பேசும் மக்கள் கலப்பு, பல வழிபாட்டு முறைகள், வாணிக நீதி, மெய்யியல் கோட்பாடு, பாதுகாப்பு, வகுப்பு வேற்றுமை, ஏற்றத்தாழ்வு, பல்வேறு பழக்கவழக்கங்கள், ஐம்பெருங்குழு, எண்பேராயம், பழங்குடி சடங்குகள், குடியிருப்பில் நகரம், நியமம் (நெகமம்), நாணயங்களின் பயன்பாடு, யவனர், சீனர், ஈழத்தவர் குடியிருப்பு போன்ற செய்திகளும் கிடைத்துள்ளன. சங்கப் பாடல்களில் யவனர் காசுகள், மது, கலைப்பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாண்டியர்கள் கூடல் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளனர். முதலில் கொற்கையில் தான் பாண்டியர்கள் ஆட்சி செய்தனர் என்ற செய்தியை அறிய முடிகிறது. முசிறித் துறைமுகத்தில் இருந்த மரக்கலங்கள் பொன்னைக் கொணர்ந்து தந்துவிட்டு அதற்கு ஈடாக மிளகினை ஏற்றிச் சென்ற குறிப்பு

யவனர் தந்த வினைமான் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் (அகம்.149:9-10)

இப்பாடலடிகள் வழி அறிய முடிகிறது. பாண்டிய நாட்டில் தாமிரபரணியின் கழிமுகத்தில் அமைந்த பழைய துறைமுகம் கொற்கையாகும். இது முத்துக்கள் விளைகின்ற கடற்பரப்பினைக் கொண்டது. சோழரது விற்படை பொருந்திய வல்லம் என்னும் ஊரின் புறத்தேயுள்ள காவற்காட்டினை வந்தடைந்த ஆரியரது படையானது தோற்று ஓடிப்போனது என்ற வரலாற்று செய்தியையும் அறியமுடிகிறது. மிளை என்ற ஒரு நாடு இருந்தது என்ற குறிப்பும் கிடைத்துள்ளது. வள்ளல் தன்மையும் தேர்ப்படையையும் கொண்டவன் குட்டுவன். அவனின் ஊர் கழுமலம் ஆகும். இது சேர நாட்டில் உள்ள ஊர் என்ற குறிப்பும் உள்ளது. குடவாயில் என்பது சோழநாட்டில் உள்ள ஒரு மூதூர். தேர்களை இரவலருக்குப் பரிசாக வழங்கும் வள்ளல் தன்மையுடைய சோழ மன்னன் பெரும்பூட் சென்னி எனும் சோழனுக்குரியது. இனக்குழுச் சமுதாய முறைகள் மாறி உடைமைச் சமுதாயம் உருவான சூழலில் வேலைப் பிரிவினைகளும் சமுதாய அடுக்குகளும் உருவாகிவிட்டன. சங்ககாலத்து பெண்களில் ஒருசிலர் கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டனர். கள் விற்கும் அங்காடியை அடையாளப்படுத்தும் விதமாக கொடியை நடும் வழக்கம் இருந்துள்ளது. சங்க காலத்தில் வாணிகம் சிறப்புற்று விளங்கியது. வணிகர்கள் நடுவுநிலை தவறாது வணிகம் செய்துள்ளனர். உள்நாட்டு வாணிபம் பண்டமாற்று முறையில் நடைபெற்றுள்ளது. குதிரைகள், கழுதைகள், மாடுகள், வண்டிகள் சங்ககாலப் போக்குவரத்துச் சாதனங்களாகப் பயன்படுத்தப்பட்டன. வணிகப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் நிமித்தம் பார்த்து நல்ல வேலையில் புறப்பட்டனர். கடல் வணிகத்தையும் சங்ககால மக்கள் வளர்த்தனர். பாண்டிய நாட்டு வணிகர்கள் சாவகத்தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வணிகம் செய்துள்ளனர்.

அரசியல் பண்பாடு

பழங்குடி அரசியல், வேந்தர் அரசியல் தொடர்பான செய்திகள் வடக்கிருத்தல், போர் அறம், காஞ்சித்திணை, போர்முறை, போர் கருவிகள், அறண், கோட்டை தண்டனை, நீதி வழங்கும் முறை, அறங்கூறு அவையம் ஆகியவை பற்றி இலக்கியங்கள் கூறுகிறது. அரசர்கள் தனக்கென வாழாமல் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்தனர். கடையேழு வள்ளல்கள், குறுநில மன்னர்கள் தமிழகத்தை ஆண்டு வந்ததை இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகிறது. மன்னர்களும் தலைவர்களும் நாட்டை விரிவுபடுத்தவும்,  வருவாயைப் பெருக்கவும் பிற நாட்டின் மீது போர் செய்தனர். அகநானூற்று முல்லைப் பாடல்கள் அனைத்தும் வேளிர்கள் பற்றியே விவரிக்கின்றன. திறை செலுத்தி பேரரசர்களை நட்பாக்கி கொண்டனர் என்பதனை,

கேள் கேடு ஊன்றவும், கிளைஞர்

கேள் அல் கேளிர் கெழிஇயினர் ஒழுகவும்

ஆள்வினைக்கும் எதிரிய (அகம்93:1-3).

குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் காலத்தில் வாழ்ந்த பண்ணன் என்ற கிழான் பசிப்பிணி போக்குவதில் சிறந்தவனாக விளங்கினர். கிரேக்கர்களையும், ரோமானியர்களையும்  பழந்தமிழர் யவனர் என்ற பெயரால் அழைத்தனர். வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வான தலையாலாங்காணத்துப் போர், ஆதிமந்தியின் காதல் இவை வரலாற்றை உணர்த்துகின்றன.             சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. பல மன்னர்கள் வேளிர், வேந்தர் பங்கெடுத்த போர் பற்றிய செய்தியும் இலக்கியத்தில் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கின்றது.

தொகுப்புரை

  • சங்க காலத் தமிழரின் வாழ்க்கை, மனித சமூகத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. பழந்தமிழரின் உணர்வுகளையும், எண்ணங்களையும் காட்டும் விதமாக இலக்கியங்களில் பண்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அக்கால மக்கள் சிறந்த பண்பாட்டுக் கூறுகளைத் தமக்குள் வகுத்துக் கொண்டு வாழ்ந்தனர்.
  • பழந்தமிழர்கள் விட்டுச்சென்ற பண்பாட்டு எச்சங்கள் இன்றும் சமுதாயத்திற்கு ஒழுங்குமுறையான வாழ்க்கை முறையினை எடுத்துக் காட்டும் விதமாக அமைகிறது.
  • பண்பாடானது மக்களின் சமூக வளர்ச்சியினைக் கூறுகிறது.
  • தமிழர்கள் ஈகைப் பண்பைத் தம் வாழ்வில் ஒரு பகுதியாகக் ருதினர்.
  • சங்ககால மக்கள் அறநெறியைப் போற்றி வாழ்ந்துள்ளனர் என்று செய்தியை அறிய முடிகிறது.
  • தெய்வ வழிபாடு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. சமய உணர்வும் கடவுள் நம்பிக்கையும் பழந்தமிழர் வாழ்க்கையில் நிறைந்திருந்தன.
  • சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துணை நூற்பட்டியல்

  1. அகநானுற்றுச் சொற்பொழிவுகள், சைவ சித்தாந்த நூற்பதிவுக் கழகம், சென்னை -1, முதற்பதிவு -1956.
  2. அப்பாதுரை.க, தென்னாட்டுப் போர்க்களங்கள், மணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை.
  3. இராகவைங்கார்.மு, வேளிர் வரலாறு, வள்ளுவர் பண்ணை, சென்னை -2, மூன்றாம் பதிப்பு -1964.
  4. தமிழ் மொழி அகராதி.
  5. அ. கிருட்டிணன், தமிழர் பண்பாட்டியல்.
  6. அ.மு. பரமசிவானந்தம், சமுதாயமும் பண்பாடும்.
  7. க.த.திருநாவுக்கரசு, தமிழ்ப் பண்பாடு.
  8. தொல், உரியியல்.