ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“அதிகார வர்க்கத்தினருக்கெதிரான எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்துவதில் வாய்மொழி இலக்கியமும் செந்நெறி இலக்கியமும்”   ஓர் ஒப்பாய்வு

கலாநிதி. வானதி பகீரதன், சிரேஸ்ட விரிவுரையாளர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை 09 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: கலாநிதி. வானதி பகீரதன், சிரேஸ்ட விரிவுரையாளர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை

Abstract

A comparative study of the oral literature and written literature in expressing opposition to the ruling class

The written tradition was found solely among the limited number of the high class people until the late 19th century. When education was limited due to caste, class, political dominance and economic situation the literary expressions of ordinary laymen, farmers, and women were demonstrated through oral medium.

Oral usages include verbal performances, customary beliefs, habits, and rituals. Oral literature consists of oral songs, tales, poems, narrative poems, proverbs, and riddles.

Ancient medieval literature mostly belong to literate people. They were often created to reveal the opinions of those who in power due to caste and gender. As a result, the plight and tragedies of the grassroots people were not included in the themes of written literature until the late 19th century except for pallu and kuravanchi.

The problems and difficulties of the ordinary people and their characterizations were highlighted in oral literature. It is essential to discern how social criticism was delineated in oral literature as they claim to present a faithful portrayal of realistic life styles, social corruption than the written literature.

Keywords: Oral literatures, written literatures, Opposition, Upper classes, Land lords

ஆய்வுச்  சுருக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை எழுத்து மரபானது தமிழ்ச் சமூகத்தில் மிகச் சிறு பான்மையினரான உயர் குழாத்தினரிடமே காணப்பட்டது. சாதி, அந்தஸ்து, அரசியல் ஆதிக்கம், பொருளாதாரநிலை காரணமாக கல்வியறிவு மட்டுப்படுத்தப் பட்டிருந்தபோது சாதாரண பாமரமக்கள், கிராமிய விவசாயிகள், பெண்கள் போன்றோரது இலக்கிய வெளிப்பாடுகள் வாய்மொழி ஆக்கங்களாகவே வெளிப்படுத்தப்பட்டன.

வாய்மொழி வழக்காறுகள் என்பதில் வாய்மொழியாக வெளிப்படுத்தப்படும் நிகழ்த்துதல்கள், வழக்கத்திலுள்ள நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் முதலியன அடங்கும். மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்த பாடல்கள், கதைகள், கவிகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் யாவும் வாய்மொழி இலக்கிய வடிவங்களுள் அடங்கும்.

பண்டைய இடைக்கால எழுத்திலக்கியங்கள் யாவும் எழுத்தறிவு பெற்றவர்களுக்கே உரியவை. சாதி, பால்நிலை காரணமாக அதிகாரம் பெற்றவர்களுடைய கருத்து நிலையைக் தாங்கியவையாக அவை பெரும்பாலும் உருவாக்கப்பட்டிருந்தன. இதனால் எழுத்திலக்கியங்களில் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை) அடிநிலை மக்களின் நிலை துன்பங்கள் அவலங்கள் முதலானவை பெரும்பாலும் கருப்பொருளாக இடம் பெறவில்லை. (பள்ளு,குறவஞ்சி தவிர)

வாய்மொழி இலக்கியங்களிலேயே சாதாரண பாமர மக்களின் பிரச்சினைகள் கஷ்டங்கள் எடுத்துக்காட்டப்படுவதோடு அவர்கள் கதாபாத்திரங்களாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளதைக் காணலாம். எழுத்திலக்கியங்களைவிட யதார்த்தமான, உண்மையான வாழ்க்கை முறைகளையும் சமூக ஊழல்களையும் உள்ளவாறே கூறுபவையாக வாய்மொழி இலக்கியங்கள் அமைவதால் அவற்றில் சமூகவிமர்சனம் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.

திறவுச் சொற்கள்

வாய்மொழி இலக்கியங்கள்,  எழுத்திலக்கியங்கள், எதிர்ப்புணர்வு, மேல் வர்க்கத்தினர், நிலப்பிரபுக்கள்.

இலக்கியம் அது வழங்கிவரும் முறைமையினை அடிப்படையாகக் கொண்டு வாய்மொழி இலக்கியம், எழுத்துமொழி இலக்கியம் என வகைப்படுத்தப் படுகின்றது. வாய்மொழி இலக்கியங்களே உலகில் முதலில் தோன்றின என்பதையும் எழுத்து முறை வழக்கிற்கு வருமுன் எல்லா இலக்கியங்களும் வாய்மொழியாகவே வழங்கின என்பதையும் பழைய வீரயுகப் பாடல்கள் அனைத்தும் வாய்மொழியாகவே விளங்கின என்பதையும் ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர் (கைலாசபதி.க. 1968, பக் 68-84)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை எழுத்து மரபானது தமிழ்ச் சமூகத்தில் மிகச் சிறு பான்மையினரான உயர் குழாத்தினரிடமே காணப்பட்டது சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமை இருக்கவில்லை சாதி, அந்தஸ்து, அரசியல் ஆதிக்கம், பொருளாதாரநிலை காரணமாக கல்வியறிவு மட்டுப்படுத்தப் பட்டிருந்தபோது சாதாரண பாமரமக்கள், கிராமிய விவசாயிகள், பெண்கள் போன்றோரது இலக்கிய வெளிப்பாடுகள் வாய்மொழி ஆக்கங்களாகவே வெளிப்படுத்தப்பட்டன.

வாய்மொழி வழக்காறுகள் என்பதில் வாய்மொழியாக வெளிப்படுத்தப்படும் நிகழ்த்துதல்கள், வழக்கத்திலுள்ள நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் முதலியன அடங்கும். வாய்மொழி இலக்கியம் நாட்டார் இலக்கியம் என்ற இரு தொடர்களும் நெருங்கிய தொடர்புடையன. வாய்மொழி என்பது oral என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சமமாகவும் நாட்டார் என்பது Folk  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகவும் வழங்கப்படுகின்றது. வாய்மொழி என்ற தொடர் வாய்மொழியாக வெளிப்படுத்தப்படுவதை, பரப்பப்படுவதைக் குறிக்கின்றது. நாட்டார் என்பது வெளிப்படுத்தப்படும் மக்களையும் அதனைப் பயன்படுத்தும் மக்களையும் குறிக்கிறது எனவும் “வாய்மொழி இலக்கியங்களே நாட்டார் இலக்கியங்களாகும்”  எனவும் லூர்து கூறுகின்றார்  (லூர்து, பக்83-87)

மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்த பாடல்கள், கதைகள், கவிகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் யாவும் வாய்மொழி இலக்கிய வடிவங்களுள் அடங்கும்.

“வாய்மொழி இலக்கியம் என்ற தலைப்பினுள் பேசுதல் பாடுதல் குரல்சார்ந்த மரபுவழி வடிவங்கள் வந்தமையும். இந்த வடிவங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் தோரணிகளைக் கொண்டமையும். இதனுள் ஒரு பெரும் துணைப்பிரிவு நாட்டார் பாடல்கள் அல்லது கவிதைகளாகப் பிரிக்கலாம் குழந்தைப்பாடல்கள். ஒலிநயப்பாடல்கள் தாலாட்டுப் பாடல்கள்… கதைப்பாடல்கள் பழமொழிகள் விடுகதைகள்” (லூர்து பக் 35)

பண்டைய இடைக்கால எழுத்திலக்கியங்கள் யாவும் எழுத்தறிவு பெற்றவர்களுக்கே உரியவை எழுத்தறிவு பெற்றவர் முன்னர் குறைவாகக் காணப்பட்டதால் அது குறைந்த பகுதியினரையே சென்றடைந்தது. சாதி, பால்நிலை காரணமாக அதிகாரம் பெற்றவர்களுடைய கருத்து நிலையைக் தாங்கியவையாக அவை பெரும்பாலும் உருவாக்கப்பட்டிருந்தன. இதனால் எழுத்திலக்கியங்களில் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை) அடிநிலை மக்களின் நிலை துன்பங்கள் அவலங்கள் முதலானவை பெரும்பாலும் கருப்பொருளாக இடம் பெறவில்லை. (பள்ளு,குறவஞ்சி தவிர)

சமூக, பொருளாதார, பால்நிலை அந்தஸ்துடையவர்களே இலக்கியங்களில் பிரதான கதாபாத்திரங்களாகவோ பாட்டுடைப் தலைவர்களாகவோ விளங்கினர். அடிநிலை மக்களது வாழ்வியற் பிரச்சினைகள் பற்றி அவை பேசவில்லை. வாய்மொழி இலக்கியங்களிலேயே சாதாரண பாமர மக்களின் பிரச்சினைகள் கஷ்டங்கள் எடுத்துக்காட்டப்படுவதோடு அவர்கள் கதாபாத்திரங்களாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளதைக் காணலாம். இது பற்றி சு.வித்தியானந்தன் கூறுவது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

“இலக்கியத்துக்கும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமையுண்டு. இலக்கியங்கள் பெரும்பாலும் இலட்சிய வாழ்க்கையையே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டவை. இலக்கியங்களுக்குத் தலைவராக அமைபவர் குற்றமே இல்லாதவராய்க் குணங்களுக்கு இருப்பிடமாய் படைக்கப்படுகின்றனர். இது உண்மையான வாழ்க்கைக்கு பொருத்தமற்றதாக இருக்கின்றது. இதற்கு மாறாக மனிதனின் குறை, குற்றங்களையும் சமூக ஊழல்களையும் உள்ளவாறே எடுத்து இயம்புகின்றன நாட்டுப்புறப் பாடல்கள்”  (வித்தியானந்தன்.சு, 1962, பக் 9-10)

“நாடோடி இலக்கியப் பரம்பரையைச் சேர்ந்த கவிதைவகை எளிய கதையைப் பொருளாகக் கொண்ட இது தலைமுறை தலைமுறையாகப் பாமர மக்களால் பாடப்பெற்று வழங்கிவரும். இது அன்றாட வாழ்க்கையில் நிகழும் சாதாரண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எளிய நடையில் அமைந்திருக்கும் இதன் பாத்திரங்கள் சமானிய மக்களாகவே இருப்பர்”. (கலைக்களஞ்சியம், 1956.  பக் 186)   இவ்வாறு வாய்மொழி இலக்கியங்களின் கதாபாத்திரங்கள் பற்றி கலைக்களஞ்சியம் விளக்கமளிக்கிறது.

எழுத்திலக்கியங்களைவிட யதார்த்தமான, உண்மையான வாழ்க்கை முறைகளையும் சமூக ஊழல்களையும் உள்ளவாறே கூறுபவையாக வாய்மொழி இலக்கியங்கள் அமைவதால் அவற்றில் சமூகவிமர்சனம் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.

வாய்மொழி இலக்கியங்களிலேயே சாதாரண அடிநிலை மக்கள், சமூகம்சார் கொள்ளையர்கள் முதலானோர் பிரதான கதாபாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். தமக்கு இன்னல் விளைத்த அதிகார வர்க்கத்தினரைத் துன்புறுத்தி அவர்களை வெற்றி கொண்ட கொள்ளையர்களை தலைவர்களாகப் போற்றி அவர்களைப் புகழ்ந்து பாடும் மரபு நாட்டுக் கதைப் பாடல்களில் காணப்படுகின்றது. அடிநிலை மக்களைப் பாட்டுடைத் தலைவராகப் போற்றும் இலக்கியங்கள் பற்றியும் அவ்விலக்கியங்களில் வரும் தலைவன் தலைவியர் தமது சமூகத்திற்காக அதிகார வர்க்கத்தினரை எவ்வாறு எதிர்த்தார்கள் என்பதையும் கண்டறிய வாய்மொழி இலக்கியங்களில் சமூக விமர்சனம் பற்றி நோக்குவது அவசியமாகின்றது.

வாய்மொழி வரலாறு என்பது “ஆவணங்களாகப் பதியப்படாத வரலாற்று நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்களின் வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்துவதாகும்” என சுக்கோவ் என்ற ஆய்வாளர் கூறுகின்றார். அத்தகைய வாய்மொழிச் சான்றுகளில் பெரும்பாலானவை நாட்டார் வழக்கியலின் பகுதியாக அமைந்துள்ளன. குறிப்பாக நாட்டார் கதைகள், கதைப்பாடல்கள், செவிவழிச் செய்திகள் முதலானவை வாய்மொழி வரலாற்றின் கூறுகளாக அமைகின்றன. எழுத்தறிவைப் பெற்றிராத சமூகங்களின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு எழுத்து வடிவிலான சான்றுகளன்றி பிறசான்றுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தற்போது மானிடவியலாளர்கள் நாட்டார் வழக்காறுகளையும் வரலாற்றியலுக்குப் பயன்படுத்த முனைகின்றனர். இத்தகைய பின்னணியில் வாய்மொழி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடிய பஞ்சம் பற்றிய செய்திகள், சாதிக்கலகங்கள், சமூகம் சார் கொள்ளையர்கள், காலணித்துவத்தின் அடடூழியங்கள் பற்றிய தகவல்கள் வரவாற்றியலுக்கான ஆவணங்களாக கொள்ளப்படத்தக்கவை. எழுத்திலக்கியங்களைவிட வாய்மொழி இலக்கியங்களிலேயே இவை பற்றி அதிகளவில் அறிய முடிகின்றது என்பதால் சமூக விமர்சனம் பற்றி பார்க்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

எழுத்திலக்கியங்களில் எதிர்ப்புணர்வு

பண்டைய இடைக்கால எழுத்திலக்கியங்களிலும் அரசு, மதம் சார்ந்த நிறுவனங்கள், பொருளாதார, பால்நிலை அந்தஸ்துடையோருக்கான எதிர்ப்புணர்வுகள் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சங்கப் புலவர்களுள் கணியன் பூங்குன்றனார், ஒளவையார் போன்ற ஒரு சிலரது பாடல்களில் அரசு, சமூகத்துக்கெதிரான எதிர்ப்புணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இளங்கோ, கம்பன், சித்தர்கள், பாரதி பாடல்களிலும் இதனை அவதானிக்கலாம்,

“பெரியோரை வியத்ததும் இலமே சிறியோரை

இகழ்தல் அதனிலும் இலமே”

(புறநானூறு 192)

“மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆ ஆ ஒல் எனக் கூவுவேன் கொல்

அலமரல் அசைவளி அலைப்ப என்

உயவுறோயறியாது தூங்கும் ஊர்க்கே”

                                            (குறுந்தொகை பாடல் 28)

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆங்காங்கே இத்தகைய எதிர்ப்புணர்வுகள் வெளிப்படுத்தப் பட்டிருந்தாலும் அவை வாய்மொழி இலக்கியங்களில் வெளிவந்திருப்பதிலும் பார்க்க குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. தற்கால இலக்கிய வடிவங்களிலேயே இவற்றின் வெளிப்பாடு அதிகம் எனலாம்.

எழுத்திலக்கியங்களில் காணப்படும் எதிர்ப்புணர்விலும் பார்க்க வாய்மொழி இலக்கியங்களில் வரும்  எதிர்ப்புணர்வுகள் நேரடித்தன்மை உடையதாகவும் குறிப்பிட்ட நபரையோ சமூகத்தையோ சுட்டிப்பாக கூறுவதாகவும் அமைந்துள்ளன. எழுத்திலக்கியங்களில் அவை தனி ஒரு நபரையோ, நிறுவனத்தையோ, சமூகத்தையோ குறிப்பிட்டதாக அமையாது பொதுப்படையாக விமர்சிப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

கணியன் பூங்குன்றனார் “நன்மையால் சிறந்து விளங்கும் பெரியோரை நாம் மதிப்பது இல்லை” என பொதுவாகவே சாடுகின்றமையும் ஒளவையார் தனது உயவு நோயை அறியாது தூங்கும் ஊர்மக்களை தாக்குவேன் என கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. வாய்மொழி இலக்கியங்களில் வரும் பாதிக்கப்பட்ட நபர் தமக்கு அநீதி இழைத்தவர்கள் தமது உறவினராகவோ அன்றி தொழில் வழங்கும் துரைமாராகவோ இருந்தாலும் தமது எதிர்புணர்வை நேரடியாக வெளிப்படுத்துவதைக் காணலாம்,

“மாமன் மகனிருக்க

மாலையிடும் சாமி இருக்க

பேசும் கிளி நானிக்க

பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு

பெரும் கஷ்டத்துக்கு ஆளாச்சே”

                                                    (வானமாமலை, 1964, பக் 307)

இப்பாடலில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவனை பேயன் எனக்கூறி தனது எதிர்ப்புணர்வை நேரடியாக வெளிப்படுத்துகின்றார்.

எழுத்திலக்கியங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்கதாபாத்திரங்கள் யாவும் பெண்மை பற்றி ஆய்வாளர்கள் நிறுவியுள்ள கருத்து நிலைக்கேற்பவே படைக்கப்பட்டுள்ளன. கணவனே கண்கண்ட தெய்வம் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ எனக் கருதுகின்ற பெண்களாகவே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளனர். கண்ணகி, நளாயினி போன்ற பாத்திரங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். வாய்மொழி இலக்கியங்களில் வரும் பெண்பாத்திரங்கள் செந்நெறி இலக்கியங்களில் வருகின்ற பெண் பாத்திரங்களைப் போன்று அமைந்திருக்கவில்லை. சாதாரண நடைமுறை வாழ்க்கை வாழ்கின்ற கிராமத்துப் பெண்களாக அவை அமைந்திருப்பதால் அடக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு உள்ளான போது செந்நெறி இலக்கியங்களில வருகின்ற பெண் பாத்திரங்களைப் போன்று பேசா மடந்தைகளாக அடங்கி. அடிமைப்பட்டுப் போகாது கட்டுக்களைத் தகர்த்து எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றன.

மேல் வர்க்கத்தினருக்கெதிரான எதிர்ப்புணர்வுகள்            

ஒரு சமுதாயத்தில் மேல் வர்க்கத்தினர் கீழ் வர்க்கத்தினர் (அடிநிலைமக்கள் ) என இருவகைக் குழுவினர் காணப்படுகின்றனர். பொருளாதார ரீதியாக சொத்துடைமையும் அரசியல் ஆதிக்கமும் சாதி, பால், அந்தஸ்து நிலையில் உயர்ந்தவர்கள் மேல்வர்க்கத்தினராகவும் இவற்றில் குறைந்தவர்கள் கீழ்வர்க்கத்தினராகவும் கொள்ளப்படுகின்றனர்.

“ஒரு சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்டவர்களாக அச் சமூகவளங்களில் எத்தகைய பாத்தியதையுமில்லாது ஒடுக்கப்பட்டு வாழும் மக்களை அடித்தள மக்கள் எனலாம்”

“சாதி, செய்யும் தொழில், அரசயலாதிக்கம், பாலியல் நிலை, பொருளாதாரநிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் மக்களே அடித்தள மக்களாவர்” (சித்திரலேகா.மௌ, பக் 93) மேற்கூறப்பட்ட இரு வரைவிலக்கணங்களும் ரணஜித் குகா முதலியோரால் கூறப்பட்டுள்ளதாக மௌ.சித்திரலேகா குறிப்பிடுவது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

உற்பத்திமுறைகளையும் மூலதனத்தையும ஒரு சிலரது கையில் குவிக்கும் பொருகுளாதார விதியினால் தான் மேலோர் உருவாவதாகவும் இவர்கள் கடினமான உழைப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இப்பணியை தமக்குக்கீழுள்ள சொத்துரிமையற்ற பிறரிடம் ஒப்படைப்பதாகவும் உடலுழைப்பிலிருந்து விலகிய மேலோர் ஒரு சமூகத்தின் பாத்திரமான முழுமையான குழுக்களாக விளங்குவதாகவும் அவர்கள் நிலப்பிரபுக்கள், அரசவை அதிகாரிகள், பெருநிலக்கிழர்கள், ஆளும் ஆதிக்கம் பெற்றவர்கள், சாதி, பால் அந்தஸ்தில் உயர்ந்தவர்களாக காணப்படுவதாகவும் அவர்களே மேலோர் எனவும் இவ் அந்தஸ்து நிலையில் குறைந்தவர்கள் கீழோர் எனவும் கூறுவர் (ஆ. சிவசுப்ரமணியம், பண்பாடு, பக்12 )

இக்கீழ் வர்க்கத்தினர் மேல் வர்க்கத்தினரால் சுரண்டப்பட்ட போது அவர்களுக்கு எதிராக தம் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இதனை நாட்டார் பாடல்கள், கல்வெட்டுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே வாய்மொழி இலக்கிய வடிவங்களான நாட்டார் பாடல்கள், கதைப்பாடல்கள், பழமொழிகளில் போன்றவற்றில் சாதி எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்துவதை அவதானிக்கலாம்.

 நாட்டார் கதைப் பாடல் ஒன்றில் கீழ் வகுப்பைச் சார்ந்த மக்கள் காவிரியாற்றுக்கு அணைகட்ட கூலியில்லாமல்  வேலை செய்யும்படி உத்தரவிடப்பட்டனர், கூலியற்ற வேலை முறைக்கு ‘வெட்டி’ முறை என்று கூறுவர்.  இம்முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினர் அரசன் ஆறு சகோதரர்களை  தண்டித்து விட்டான் ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனாதலால் அரசன் அவனை நாடு கடத்தினான். என நாட்டுக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. கொலை செய்தல் நாடு கடத்தல் என்பன மேல்வர்க்கத்தினரின் அடக்குமுறையையும் வெட்டி முறையையும் எதிர்ப்பது கீழ்வர்க்கத்தினரின் எதிர்ப்புணர்வையே எடுத்;துக் காட்டுகின்றது எனலாம்.

நாட்டார் கதைப்பாடல்களில் உயர்சாதிக்காரன் தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்ணை மணம்புரிந்ததால் ஏற்பட்ட தகராறுகள் உயர்சாதிப் பெண்ணை அல்லது நிலவுடமை வர்க்கப் பெண்ணை உழைப்பாளி வர்க்க ஆடவன் காதலித்து மணம்புரிவதால் ஏற்படும் தகராறுகள் கருப்பொருளாக அமைந்துள்ளன.

“பெரிய பணக்காரரின் பேராசைக்கு ஏழை உழைப்பாளிகள் பலியாவதும் ஜாதிக் கட்டுப்பாடுகளை மீறி மணம் செய்து கொள்பவர்கள் ஜாதிக் கொடூரங்களுக்கு உள்ளாவதும் சொத்துரிமை இல்லாத பெண்கள் கூட்டுக் குடும்பத்தில் படும் துன்பங்களும் கதைப் பொருளாக அமைந்துள்ளன.” (வானமாமலை.நா, 1964 பக் 35)

சாதி அமைப்புக்களை தகர்க்கும் முறையில் திருமண உறவுகள் ஏற்படும் பொழுது சாதிக் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்  பட்டதை முத்துப்பட்டன், சீனித்தம்பி, மதுரைவீரன், சின்னநாடன் கதைப்பாடல்கள் மூலம் அறியலாம். உயர்ந்த - தாழ்ந்த சாதித் திருமண உறவுகளால் ஏற்படும் சிக்கல்களையும் உயர் சாதியினரின் அடக்குமுறைகளையும் இக்கதைப்பாடல்கள் மூலம் அறியலாம்.

முத்துப்பட்டன் கதையில் பிராமணகுலத்தில் பிறந்த முத்துப்பட்டன் இரு சக்கிலியப் பெண்களை மணந்து வர்ணாச்சிரம தர்மத்தைக் கைவிட்டு சக்கிலியர்களின் தொழிலை மேற்கொண்டு அவர்களது குலத்துக்குத் தலைவனாகிறான் உயர் சாதி ஜமீன்தார் கொள்ளைக்காரர்களின் துணையுடன் முத்துப்பட்டனை மறைந்நிருந்து கொல்கின்றனர்.

மதுரைவீரன் கதையில் சக்கிலியர்களால் வளர்க்கப்பட்ட மதுரைவீரன் உயர் சாதி பெண்ணை மணம் முடிக்கிறான் அவனும் மன்னனால் மாறுகால் வாங்கப் பெற்றுத் தண்டனை பெறுகிறான். சின்னநாடன், சின்னத்தம்பி, காத்தவராயன், வெங்கலராஜன், கதைகளும் சாதிப் போராட்டத்தையே      கருவாகக்     கொண்டிருந்தமை      குறிப்பிடத்தக்கது. உயர் சாதியினர் தாழ்ந்த சாதிக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தும் கொடுமைக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் கூறுவதாக அமைந்துள்ளன.

பழமொழிகளிலும் உயர்சாதியினருக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் வெளிப்படுவதைக் காணலாம்.

“வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோவை கெடுக்கும்”

“பிராமணனுக்கு இடம் கொடாதே”

“பிராமணன் போகும் போது மென்னியைப் பிடித்த மாதிரி”

இத்தகைய பழமொழிகள் சமூகத்தில் உயர் சாதியினராகக் கருதப்படும் பிராமணர், வேளாளர் போன்றோருக்கு எதிரான எதிர்புணர்வுகளையே வெளிப்படுத்துகின்றன எனக்கூறலாம்.

நிலப்பிரபுத்துவ, பணக்காரர் எதிர்ப்பு

நிலப்பிரபுக்கள், பணக்காரர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் வாய்மொழி இலக்கியங்களில் அதிகளவில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம், பணக்காரர்களுக்கு எதிர்ப்பு எவ்வுருவத்தில் வந்தாலும்   ஏழை  மக்கள் அதை வரவேற்பதை      ஜம்புலிங்கம், சந்தனத்தேவன், மணிக்குறவன், மலைக்கள்ளன் போன்றவர்கள் பற்றிய கதைப் பாடல்களிற் காணலாம். இக் கதைப் பாடல்களின் நாயகர்களாக கொள்ளையர்கள் அமைந்துள்ளனர். ஆங்கில இலக்கியங்களில் வரும் “ரொபின்கூட்” போன்ற சமூகம் சார் கொள்ளையர்களாக அவர்கள் இருப்பதாக வானமாமலை கருதுகின் (தமிழர் நாட்டுப்பாடல்கள், 1964, பக்)

சமூக நன்மையின் பொருட்டு கொள்ளையிடும் இக் கொள்ளையர்களை மக்கள் புகழ்ந்து போற்றுவதுடன் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வரும் அதிகார வர்க்கத்தினரையும் கேலி செய்து தமது எதிர்ப்புணர்வுகளைத் தெரிவிக்கின்றனர்.

இக் கொள்ளையர்கள் நிலவுடமையாளர்களைக் கொள்ளையடித்தல் கொலை செய்தல், பட்டித்தொழில் புரிவோரைக் கொள்ளையடித்தல், கொலை செய்தல் அதிகார வர்க்கத்தினரைக் கொள்ளையடித்தல் துன்பப்படுவோருக்தகு உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். இவை நிலவுடமையாளர். ஆளும் வர்க்கத்தினருக்கு எதிரான எதிர்ப்புணர்வுகளின் வெளிப்பாடு எனக்கூறலாம்.

பழமொழகளிலும் இந் நிலவுடமையாளர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்

“கணக்கன் செத்தல் பிணம்

கணக்கள் ஆத்தா செத்தால் மணம்”

“கணக்கன் இருந்தும் கெடுத்தான்

செத்தும் கெடுத்தான்”

“கணக்கன் விட்டுக் கல்யாணம் விளக்கெண்னெய்க்குக் கேடு”

“கணக்கன் கால் வைத்தால் கால்காணி பொட்டை”

“கணக்கன் கணக்கைக் தூக்கி கண்டவனெல்லாம் செருப்பைத் தூக்கி”

“கணக்கனுக்கு மோட்சம் இல்லை ஒட்டனுக்கு நரகம் இல்லை”

“கணக்கைப் பகைத்தாயோ காணியை இழந்தாயோ”

“கணக்கன் கணக்கு அறிவான் தன்கணக்கைத் தான் அறியான்”

நிலவுடமை முறையில் நிலங்கள் நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தன. மானியமுறை வந்த போது மானியங்களாக அளிக்கப்படும் நிலம் பற்றிய கணக்கெடுப்பு ஆவணப் படுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். கணக்கெழுதுவதற்கென நிலவுடமையாளர்களால் நியமிக்கப்பட்டவர்களே கணக்கராவர் இவர்கள் உயர் சாதியிலிருந்து உருவானவர்களாக அமைந்திருந்தனர். மக்கள் இவர்களுக்குப் பயந்து ஒண்டி வாழ்ந்த போதும் அவர்கள் மீது தமக்கிருந்த எதிர்ப்புணர்வை பழமொழிகள் மூலம் வெளிப்படுத்தியிருப்பதை மேற் கூறப்பட்ட பழமொழிகளிலருந்து உணர்ந்து கொள்ளலாம்.

பெண்களின் எதிர்ப்புணர்வு

வாய்மொழி இலக்கிய உருவாக்கத்தில் பெண்களுக்குப் பெரும் பங்குண்டு. அவர்கள் கதை சொல்லல் பாடல் உருவாக்குதல் (ஒப்பாரி. தாலாட்டு) முதலியவற்றில் முதன்மை பெறுகின்றனர். செந்நெறி இலக்கியங்களில் வரும் வெண் கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டவர்களாக வாய்மொழி இலக்கியக் கதாபாத்ததிரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். செந்நெறி இலக்கியப் பாத்திரங்கள் ஆணாதிக்க நோக்கிலமைந்த கருத்துநிலைக் கேற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளன. வாய்மொழிக் கதைப்பாடல்களில், பாடல்களில் வரும் பெண்கள் சாதாரண நாடமுறை வாழ்க்கையில் வரும் பெண்களாhக தமது எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பததைக் காணலாம்.

பெண்களின் எதிர்ப்புக் குரல்கள் ஆணாதிக்க நோக்குடைய கணவனுக்கு எதிராக மட்டுமன்றி தமது விருப்பத்துக்கு மாறாக தம்மை மணம் முடித்துக் கொடுக்கும் பெற்றோர் புகுந்த வீட்டில் துன்பம் விளைவிக்கும் மாமி, மைத்துனி. போன்றோருக்கு எதிராகவும் தமது குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்களத்தி, துரோக மிழைத்த காதலன் போன்றோருக்கு எதிராகவும் தொழில் புரியும் இடங்களில் பாலியல் சேட்டைகள் புரிய முற்படும் துரைமாருக்கு எதிராகவும் தம் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

தென்பாண்டி நாட்டில் உழவர் சாதியினரிடம் அறுத்துக்கட்டும் வழக்கம் நெடு நாட்களாக இருந்து வருகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவதாலோ குழந்தை இல்லாததாலோ ஆணோ பெண்ணோ துர் நடத்தை உடையவராக இருந்தாலோ சமூக வழக்கப்படி அவர்கள் மணமுறிவு செய்யலாம். மணமுறிவு கோருபவர்கள் தீர்த்துக் கட்டும் கூலி கொடுக்க வேண்டும் பெண்களால் இக்கூலியைக் கொடுக்க முடியாதிருப்பதால் பெரும்பாலும் மணமுறிவு செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இருப்பினும் சில பெண்கள் கணவனின் துன்புறுத்தல்களைத் தாங்க முடியாத பெண்கள் கணவனுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு அவன் கட்டிய தாலியையும் துச்சமாக மதித்து அறுத்தெறிவதைக் காணலாம். சேலம் மாவட்டத்தில் வழங்கி வரும் பாடல் ஒன்றில். திருமணமானது முதல் கணவன் தன் மனைவியின் சமையலைக் குறை கூறி வருகின்றான். இதனால் வெறுப்புற்ற அப்பெண்

“குத்தின அரிசி உரலிலே கொளிச்ச அரிசி மொறத்திலே

ஆக்கின சோத்துக்கு உண்ணாமை பேசின

இந்தாடா மாமா உன்தாலி” (தமிழர் நாட்டப்பாடல்கள் பக் 305)

எனத்தாலியை அறுத்து எறிந்து தன் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றாள்.

குடிகாரக் கணவன் தன் மனைவியைத் துன்புறுத்திய போது அவள் தன் கணவனை ஒதுங்கிப்போடா என கூறி விரட்டுவதை பின்வரும் பாடலில் காணலாம்.

                        “எத்தனையோ புத்திகள்

                        எடுத்துரைத்தன் சாராயத்த

                        நித்தம் போய்க் குடிக்கிறிய

                        நீயும் ஒரு ஆம்பளையா

                        ஒன்னோடு நான் பேசி நீ

                        ஒதுங்கிப் போடா சீ…சீ”

                                          (தமிழர் நாட்டுப் பாடல்கள் பக் 119)

தன்னை அவமதித்து விட்டு கணவன் வேறொரு பெண்ணை நாடிச் சென்றால் எந்தப் பெண்ணும் அதை சகித்துக்கொள்ளமாட்டாள் செந்நெறி இலக்கியங்களில் வரும் பெண்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளனர். ஆனால் வாய்மொழிக் கதைப்பாடல் , பாடல்களில் வரும் பெண்கள் இதற்கு மாறானவர்கள் இவர்கள் தம்மை அவமதித்த கணவன் இருப்பதிலும் பார்க்க இறப்பது மேல் என நினைத்து அவனுக்குத் திட்டுவதைக்காணலாம்.

                                                              “என்னைய விட்டுட்டு

                        இளையதாரம் கட்டினயே

                        போற வழியிலே உன்னைப்

                        பூ நாகம் தீண்டாதோ” (தமிழர் நாட்டுப்பாடல் பக் 345)

கணவன் வேறொரு பெண்ணை நாடினால் தனக்கே முழுமையாக வரவேண்டிய சொத்தும் சுகபோகமும் இன்னொருத்திக்குப் போய் விடும் என்ற ஆத்திரத்தினால் சக்களத்திகள் மீது தம் எதிர்ப்புணர்வுகளைப் பெண்கள்  வெளிப்படு;த்துவதையும் காணலாம்

“எல்லோரும் கொண்டையிலே ஈரிருக்கும் பேனிருக்கும்

தட்டுவாணி கொண்டையிலே தப்பாமல் பூவிருக்கும்”

“குதிரை வாலிக் கருது போல குறிச்சபொண்ணு நானிருக்கேன்

கூறுகெட்ட அத்தமகன் குறத்தியோட சகவாசம்”

                                                           (தமிழர் நாட்டுப்பாடல் பக் 168)

இவ்வாறாக சக்களத்தியை முண்டச்சி, குறத்தி, தட்டுவாணி, தேவடியாள் என்று ஏசுவதன் மூலம் தம் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

திருமணத்தின் போது பெண்ணின் விருப்பு வெறுப்புப் பற்றி அக்கறை கொள்ளாத சமூகம், பெற்றோர் சொத்துக்கு ஆசைப்பட்டு தாரமிழந்தவனுக்கோ வயோதிபனுக்கோ மணம் முடித்துக் கொடுக்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் சாதாரண பெண்கள் பொருந்தா மணத்தை எதிர்த்துக் குரல்கொடுக்கின்றனர்.

“சோளச் சோறு திங்கமாட்டேன்

சொன்னபடி கேட்க மாட்டேன்

நரைச்ச கிழவங்கிட்ட

நானிருந்து வாழமாட்டேன்

நாணலுத் தட்டை போல

நரைச்ச கிழவனுக்கு

கோவைப் பழம் போல

குமரி வந்து வாச்சனல்லோ”

(தமிழர் நாட்டப்பாடல்கள் பக் 309)

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படாததால் அவர்கள் கணவனைச் சார்ந்தே வாழ வேண்டியிருந்தது. திருமணமாகாத, விதவையான, ஆண்குழந்தை பெறாத பெண்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பு இருக்கவில்லை. புகுந்த வீட்டிலும் இவர்கள் மாமி, மைத்துணன், மைத்துணி போன்றோரில் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படுவதுடன் அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. புகுந்த வீட்டில் மாமியாரின் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண் பின்வருமாறு தன் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றாள்.

                        “பூமியுந்தான் நல்ல பூமி எனக்கு வாய்த்த

                        புண்ணி;யரும் புத்திசாலி

                        புண்ணியரைப் பெத்தெடுத்த

                        பெருங்குரங்கே தொந்தரவு”

                                                (தமிழர் நாட்டுப்பாடல் பக் 343)

கணவனை இழந்த பெண்ணொருத்தி தன் சகோதரனில் தங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறாள். அப்போது பிறந்த வீட்டில் அவளது சகோதரனின் மனைவியும் தன்னை மதிக்கவில்லை என்பதை பின்வரும் பாடல் வெளிப்படுத்துகின்றது.

 

                        “கள்ளிமேல் கத்தாளை

                        கருணனெல்லாம் எம்பிறப்பு

                        கருணனுக்கு வந்தவளே -  என்னை

                        மதிக்காளில்லை”

                                          (தமிழர் நாட்டுப்பாடல் பக் 458)

சமூகத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைத் தந்திரோபாயமாக பாலியல் ரீதியான சேட்டைகள், பெண்ணின் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய கேலி, பழிப்பு. விரச வார்த்தைகளைப் பிரயோகித்தல் பலாத்காரம் என்பன கையாளப்பட்டு வந்துள்ளது. சாதாரண கிராமியப் பெண்கள் பலரால் இத்தகைய இம்சைகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை சேட்டைகள் புரியும் ஆண்களுக்கெதிராகத் தம் எதிர்ப்புண்ர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.

காட்டில் ஈஞ்சி வெட்டப் போன தங்கையை அண்ணண் பாலியல் வல்லுறவு செய்ததை கொறவன் பாட்டு என்ற கதைப்பாடல் குறிப்பிடுகின்றது. இதில் அண்ணனுக்கு எதிராக தங்கை எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றாள்

                                     “அண்ணா என்ன ஒண்ணும் செய்ய வேணாம்

                        என்ன ஒண்ணும் செய்ய வேணாம்

                        ஆரடா பழிகாரா

                        ஆரடா கொலகாரா”

                                    (நாட்டுப் புறப்பாடல் களஞ்சியம்- 3- பக் 15)

பெண்கள், பெண் தெய்வங்கள் தொடர்பான கதைப்பாடல்களில் தம் குலப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதை விரும்பாது இடம்பெயர்ந்து செல்லுதல், வேறு ஊரில் குடியேறுதல், கொலைக்கு ஆளாதல், தற்கொலை செய்தல், பெண் தெய்வமாதல் போன்ற தன்மைகளைக் காணலாம். தம் குல, சாதி மானத்தின் குறியீடாக பெண்களைக் கருதுவதால் அதிகாரம் மிக்கவர்களது சக்திக்கு இரையாகாமல் தம் உயிரை நீத்தல், தப்பித்தல் போன்றவற்றின் மூலம் தம் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர். ஜமீன் மாளிகையிலருந்து அழைப்பு வந்தபோது தன் மானத்தைப்பறி கொடுக்கவிரும்பாத பெண் ஒருத்தி மணமேடையில பெண் நாயைக் கட்டி வைத்து விட்டு செல்வதாக மங்காத்தி யம்மன் கதைப் பாடல் கூறுகின்றது. இது எதிர்ப்புணர்வின் எதிரொலியாகும். பொன்னுமாரியம்மன், பேர்த்தியம்மன் கதைப் பாடல்களில் முறையே தற்கொலை, கொலை மூலம் எதிர்ப்புணர்வு வெளிப்படுத்தப்படுகின்றது எனலாம்.

காலணித்துவ எதிர்ப்பு 

காலணித்துவ ஆட்சியின் போது மக்கள் கடுமையான வரிச்சுமைகளுக்கு உள்ளாகியதுடன் சுதேசிய விளை பொருளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. காலணித்துவம் தமிழர் பண்பாடு கலாசாரம் போன்றவற்றையும் பாதித்தன. இவ்வாட்சியினால் சுரண்டல்களுக்கு உள்ளான போது மக்கள் தம் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தினர். இதனை கட்டபொம்மு கதைப்பாடல்களில் காணலாம் கட்டபொம்மு ஆங்கில எதிர்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியவனாதலால் அவனைப் பற்றி ஏழு கதைப்பாடல்கள் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழத்திலும் காலணித்துவத்துக்கு எதிரான கதைகள் பலவும் வழங்கி வருவதைக் காணலாம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கதை, மண்டூர் முருகன் கதை, கண்ணைக் கோதிக் காக்கைப்பிள்ளையார் கதை முதலானவை இதற்கு சான்றுகளாகும். ஆங்கிலேயர் இந்துக்களின் ஆலயங்களை சிதைக்க, அவமதிக்க முற்பட்ட வேளையில் இந்துக்கள் இத்ததைய கதைகள் மூலம் தம் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திருப்பதைக் காணலாம்.

வெள்ளையர் ஆட்சியின்போது விவசாயிகளிடம் கரும்பைக் குறைந்த விலைக்கு வாங்கிய வெள்ளையர்கள் அதை கப்பலில் ஏற்றினார்கள.; கரும்புவிற்றவன் கூழ்குடித்து வாழ வெள்ளையன் முப்பது முட்டையும் தின்று சாராயமும் குடிக்கிறான். ஏழை விவசாயி தன்னை வெள்ளையன் வஞ்சிப்பதை அறிந்து அவனைப் பறங்கி என ஏசுவதன் மூலம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறான்.

                                             “ஒரு கட்டுக் கரும்பாம் பரங்கி

                  ஓண்ணால் ஆயிரமாம்……

                  கப்பலில் இறக்கும் தண்ணியைக் குடிச்சா

                  தலை கிறுகிறுண்ணும்

                  முப்பது கோழி முட்டை – பரங்கி

                  முன்னூறு சாரயம்

                  எத்தனை தின்னாலும் - பரங்கிக்கு

                  வெத்திலை தின்னாப் போல”

                                          (தமிழர் நாட்டுப்பாடல்கள், பக் 371)

தங்கச் சுரங்கத்தில் வேலை செய்யும் ஒருவன் தன் தாயைப் பிரித்து வந்து வேலை செய்கின்றான். சுரங்கத்தில் உயிராபத்துக்குப் பயந்து கஷ்டப்பட்டு தொழில் புரிய வெள்ளைக்காரன் தன் நாட்டுக்குத் தங்கக் கட்டிகளை கப்பலிலே ஏற்றி அனுப்புகிறான். இதனை சுரங்கத்தில் தொழில் புரியும் ஒருவன் உணர்ந்து தன் எதிர்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதை நாட்டுப் பாடல்களில் காணலாம்.

                                              “மாடு துண்ணி மாடு துண்ணி

                  வெள்ளைக்காரன் - ஏலமா ஏலம்

                  மாயமாத்தான் மாயமாத்தான்

                  கிணியிறங்கி-----

                  கல்லையெல்லாம் கல்லையெல்லாம்

                  ஒண்ணாச் சேத்து ஏலமே ஏலம்

                  கப்பலுல கப்பலுல

                  ஏத்திட்டானாம்”

                                    (தமிழர் நாட்டுப் பாடல் பக் 380)

பறங்கிக்கீரை பறிக்கச் சென்ற பெண் ஒருத்தி காட்டு இலாகா அதிகாரியின் லஞ்சம் வாங்கும் செயலைக் கண்டித்தும் வெள்ளையர் ஆட்சியைக் கண்டித்தும் பாடும் பாடலாக கீழ் வரும் பாடல் அமைகிறது.

                  “பறங்கிக்கீரை பறிக்கப்போனேன்

                  சுங்கக் கேட்டிலே

                  பள்ளப்பயல் விசுவாசமா

                  நமது நாட்டிலே

                  பறங்கிப்பய விசுவாசமா

                  சுங்கச் கேட்டிலே-----“

                           (தமிழர் நாட்டுப்பாடல் பக் 380)

காலணித்துவ ஆட்சியின் வரிச்சுமையை எதிர்த்து மக்கள் தம் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும் காணலாம்.

                  “ ஊரான் ஊரான் தோட்டத்திலே

                  ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா

                  காசுக்கு ரெண்டாக விற்கச் சொல்லி

                  காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்….”

காலணித்துவ எதிர்ப்புணர்வுகளை மக்களிடம் வழங்தும் பழமொழிகளிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகின்றது

            “துலுக்கான் செத்தால் தூக்குவது எப்படி”

            “துலுக்கன் புத்தி தொண்டைக் குழிவரைக்கும்”

            “துரை ஆண்டால் என்ன துலுக்கன் ஆண்டால் என்ன”

            “துரை களோட சொக்கட்டான் போட்டால் தோற்றாலும்

                குட்டு வென்றாலும் குட்டு”

            “துரோகத்தால் கொண்ட துரைத்தனம் குடிகளை வருத்தம் கொடுங்கோல்” இவற்றின் மூலம் வாய்மொழி இலக்கியங்களில் காலணித்துவ எதிர்ப்பை மக்கள் வெளிக்காட்டியுள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.

உசாத்துணை நூல்கள்

1.வானமாமலை நா. (2014) தமிழர் நாட்டுப்பாடல்கள், சென்னை, நியூ செஞ்சரி புக்கவுஸ், (5ம் பதிப்பு)

2.பெருமாள் அ.நா, (1987). தமிழில் கதைப் பாடல்கள் , சென்னை , உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,

3.இராமநாதன் ஆறு (2002) நாட்டுப்புறப்பாடல் களஞ்சியம் தொகுதி -  9, சிதம்பரம், மெய்யப்பன் தமிழாய்வகம்.

4.சிவத்தம்பி.கா,(பதிப்பாசிரியர்), (1980), இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல், தமிழ்த்துறை வெளியீடு

5.பாலசுந்தரம்.இ, (1979) ஈழத்து நாட்டார்பாடல்கள், சென்னை ,தமிழ்ப்பதிப்பகம்.

6.லூர்து.தே, நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள், பாளையங்கோட்டை, (இ.ப).நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம்,

7.இராமச்சந்திரன்.நா, (1937) குமரி மாவட்டச் சமூகக் கதைப்பாடல்களின் இயல்புகளும் சிக்கல்களும், தமிழ் ஆய்வு மையம், தூய சவேரியார் கல்லூரி.

8.சண்முகசுந்தரம்.சு, (1995) நாட்டுப்புறப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம்,

9.சித்திரலேகா,மௌ (பதிப்பாசிரியர்),2004 வாய்மொழி மரபுகள் வரலாற்று மூலங்களாக, மொழித்துறை கிழக்குப்பல்கலைக்கழக வெளியீடு.

10.பாண்டுரங்கன்.அ, (2000)  பண்பாடு, நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், கொழும்பு, இதழ்2, மலர்10, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்.