ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இலக்கியத்தில் தெய்வ வழிபாடு

முனைவர். திருமதி ஜெயபுனிதவள்ளி முனிராஜ், M.A., NET., Ph.D., 33, இடிகரை, கோயம்புத்தூர் - 22. 09 Feb 2022 Read Full PDF

முனைவர். திருமதி ஜெயபுனிதவள்ளி முனிராஜ், M.A., NET., Ph.D., 33, இடிகரை, கோயம்புத்தூர் - 22.                                                       

Abstract

Religious feeling and belief in God pervaded the ancient Tamil life. Two thousand years old Tamil literature shows that faith in God did not depend on a particular religion during the Sangam period. The term religion and its emotion were found in later texts. Although the people of the Sangam period believed in God and worshiped gods like Shiva and Thirumal, but saivam, Vaishnavism and Jainism were not rooted. Religion or religious beliefs were brought by the Jains and Buddhists from the north. Before that there was no particular religion or denomination in Tamil Nadu.

ஆய்வுச்சுருக்கம்

        சமய உணர்வும் கடவுள் நம்பிக்கையும் பழந்தமிழர் வாழ்க்கையில் நிறைந்திருந்தன. சங்க காலத்தில் கடவுள் நம்பிக்கை ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்து உருவாகவில்லை என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களை வைத்து அறியலாம். அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே சங்க காலத்து மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர்கள் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவம், வைணவம், சமணம் போன்றவை  வேரூன்றவில்லை. சமயம் அல்லது மதம் என்பது வடநாட்டிலிருந்த சமணர்களாலும், பௌத்தர்களாலும் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பு குறிப்பிட்ட மதமோ, சமயமோ தமிழகத்தில் இல்லை எனலாம்.

திறவுச் சொற்கள்

 சமுதாயம், சங்க கால மக்கள் ,சமய உணர்வு, நம்பிக்கை, வழிபாடு

முன்னுரை

சங்க காலத்தில் உருவ வழிபாடுகளும், விழாக்களும் நிகழ்ந்தன என்பதை இலக்கியங்கள் வழி அறியலாம். ஆதி மனிதன் மிகக்கொடிய மிருகங்களிடையே வாழ்ந்த காலத்தில் தற்காப்பிற்காக பல கருவிகளைப் பயன்படுத்தி தங்களைக் காத்துக் கொண்டான். அவ்வாறு அவர்கள் கையில் ஏந்திய கருவிகள் இன்று நாம் வழிபடும் இறைவன் இறைவி கைகளில் ஆயுதங்களாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம். இலக்கியங்கள் சமயப் பண்பாட்டைக் குறிக்கும் விதமாக அமைகிறது. மக்களிடையே காணப்படும் சில செயல்களை மறுக்க முடியாத உண்மை எனக் கருதி ஏற்றுக்கெர்வதே நம்பிக்கை என்பதாகும். நம்பிக்கைகள உணர்ச்சிபூர்வமானவை. மனித மனத்தில் ஏற்படுகின்ற அச்சத்தின் காரணமாகவும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையின் காரணமாகவும் நம்பிக்கைகள் தோன்றுகின்றன. நம்பிக்கைகள் மக்களளால் உருவாக்கப்படுபவை. அம்மக்கள் சமுதாயமே அந்நம்பிக்கைகளைப் பாதுகாக்கவும் செய்கிறது. நம்பிக்கைகள் வளருவதற்கு மனிதனின் தன் உணர்வும் சமுதாய உணர்வும் காரணமாகின்றன். காலங்காலமாகத் தொடர்ந்து வருபவையே நம்பிக்கைகளாக உருபெறுகின்றன.

சிவன் வழிபாடு

       சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணால் திரிபுரத்தை அழித்த செய்தியினை,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

நாகம் நாணா, மலை வில்லாக,

மூவகை ஆர் எயில் ஓர் அழல் - அம்பின் முளிய,

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் (பரி.5:23-27)

என்னும் அடிகளின் மூலம் சிவபெருமான் தேரில் ஏறிச்சென்று இமயமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பினை நாணாகவும் கொண்டு, வெள்ளி, பொன், இரும்பு ஆகிய மூன்று வகையில் அமைந்த முப்புரம் என்னும் மூன்று மதில்களையும் அழித்த செய்தியை அறிய முடிகின்றது.

மிக உயர்ந்த இமயமலையில் நிலைத்து வாழ்கின்ற சிவனை,

      கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடு வரை(பதிற். 43:6)

என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது.

மேலும்,

நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்,

ஆல முற்றம் கவின்பெறத் தைஇய  (அகம்.181:16-17)   

சிவனுக்கு மூன்று கண்கள் உண்டு என்பதனை அகநானூற்றுப் பாடல் வழியாக அறியலாம்.

சிவனின் இயல்புகளான, உயர்த்திய வாளையுடைய மாறன்; ஆனேற்றினை வெற்றிக்கொடியாக உயர்த்தியவன்; தீயை ஒத்து விளங்கும் சடையை உடையவன்; விலக்குதற்கரிய மழுப்படையை உடையவன்; நீலமணி போலும் கழுத்தையுடையவன் என்பனவற்றை,

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும் (புறம்.56:1-2)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. பண்டைய மக்கள் சிவனை முக்கண் கடவுளாகப் போற்றி வழிபட்டுள்ளதை அறியலாம்.

திருமால் வழிபாடு

திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபட்டு வந்த முறை தமிழ் மக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். திருமால் காடுறையும் ஆயர்களால் சிறப்பாக வழிபடப் பெறும் தெய்வம். தொல்காப்பியர் திருமாலை முதலில் கூறியிருப்பதனை,

மாயோன் மேய காடு உறை உலகமும் (தொல்பொருள். அகம்.5)

என்ற நூற்பா வழி அறியலாம்.

     திருமாலை விண்ணவன், நெடியோன், நெடுமுடி அண்ணல் முதலிய பெயர்களால் அழைப்பர். திருமாலைப் பற்றிச் செய்தியாக,

வண் புணல் தொழுநை வார் மணல் அகன் துறை

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

மரம் செல மிதித்த மாஅல் போல  (அகம்.59:4-6)

என்று அகநானூறு சுட்டுகிறது. இது மகளிரிடம் திருமால் விளையாடியதைக் கூறுகிறது.

சிலப்பதிகாரமும் மாயோனும்

திருமாலை இளங்கோவடிகள் மாயோன், கரியவன், கடல்வண்ணன், மாயவன், மணிவண்ணன் என அவருடைய நிறத்தைக் குறித்து விளக்குகிறார்.

மணிவண்ணன் கோட்டம்( சிலம்பு, நாடு காண் காதை,வரி.10)

என்றும், ஆய்ச்சியர் குரவையுள் ஆயர் மாயோனைப் போற்றிப் புகழ்ந்தமையை,

மாயோன் பாணியும்(சிலம்பு, கடலாடு காதை,வரி.35)

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயர்கள் குரவையாடிப் போற்றிப் புகழ்ந்தமையை,

திருமறு மார்பன் போல் திறன் சான்ற காரியும்

மிக்கு ஒளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதல்(கலித்.104:10-11)

என்ற கலித்தொகை வரிகளால் அறியலாம். பன்னெடுங்காலமாகத் திருமாலின் வழிபாடு தமிழரிடையே இருந்துள்ளது என்பதை இச்செய்திகளினால் அறியலாம்.

பரிபாடலில்,

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!

பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண

பருதி வலவ! பொரு திறல் மல்ல!

திருவின் கணவ! பெருவிறல் மள்ள!

மா நிலம் இயலா முதல் முறை அமையத்து,

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனோடு மலர்ந்த

தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே(பரி.3:87-94)

என்று திருமாலின் பலதிறமான பெயரியல்புகளைப் போற்றியுள்ளார் கடுவன் இளவெயினனார். வளமான திருத்துழாய் மாலையணிந்த செல்வனே; வெற்றிச் சங்கினைக் கையில் கொள்பவனே; பொன்னிறமுடைய பட்டாடையினையுடையவனே; வலம்புரிச் சங்கினையொத்த நிறத்தையுடையவனே; கதிரவனைப் போன்ற ஆழிப்படையினை வலப்பக்கத்தே உடையவனே; போர் செய்வதில் வல்ல ஆற்றல் மிக்கமல்லனே; திருமகளுக்குக் கணவனே; பெரு வெற்றிக்குரிய வேந்தனே; வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரமனைக் கொண்டு உந்தியில் மலர்ந்த தாமரையினையுடையவனே; உன் சக்கரமே உலகிற்கு நிழலாவது ஆதலின் உலகிற்கு உன் அருளை வழங்குவாயாக என்று போற்றியுள்ளார்.

முருகன் வழிபாடு

       முருகன் தொடக்கக் காலத்தில் இருந்து தமிழ்க் கடவுளாக வழிபடப் பெற்றவன். முருகன் வீரப்பண்பு மிக்க வீரனாகப் போற்றப்பட்டான். சங்க இலக்கியம் முருகனைச் சேயோன் என்று கூறுகின்றது.

        இன்றளவும் அழகின் திருஉருவமாக விளங்கி முருகன் வணங்கப்படுகிறான். கடற்பரப்பில் காலையிலே தோன்றும் இளஞாயிறே செவ்வேளாகிய முருகன் என்றும், நீலக் கடற்பரப்பே மயிலாக்கப்பட்டது என்றும், கடும் பகலில் வெம்மையுள்ள கதிரே சிவன்( டாக்டர். அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும், பண்பாடும், ப.194) என்றும் குறிப்பிடுகின்றனர்.

முருகன் மலைவாழ் மக்கள் போற்றிய பெருந்தெய்வம் என்பதனை,

குறிஞ்சிக் கிழவன்(முருகு.267)

என்பது சுட்டுகிறது. குறிஞ்சிக்கிவன் என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றாகும்.

முருகனை,

…………………… பிறங்குமலை

மீமிசைக் கடவுள் (குறிஞ்.208-209)

எனவும் குறிப்பிடுகிறது.

முருகனுடைய உடையை,

நலம்பெறு கலிங்கத்து (முருகு. 109)

என முருகாற்றுப் படையும்,

வெண் துகில் (கலித். 105:17)

என கலித்தொகையும் குறிக்கின்றது.

நெடுவேள் மார்பின் ஆரம் போல,

செவ்வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்

பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப   (அகம்.120:1-3)

என்று அகப்பாடலாலும் அறியலாம். முருகனின் மார்பில் திகழும் முத்தாரம் போல செம்மையான வானத்தில் மீனை உண்ணும் இயல்பினதான கொக்குகள் பறந்தன என்பது இவ்வரிகள் உணர்த்தும் செய்தியாகும்.

முருகன் தலையில் கடம்பின் கண்ணியும் காந்தள் கண்ணியும் சூடுவான் என்பதை,

கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி (நற்றி.34:8)

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் (முருகு.44)

என்ற பாடல் வரிகளால் அறியலாம். இவற்றால் தமிழர் வழிபாடு செய்த தெய்வமாக முருகன் இருந்துள்ளான் என்பதனை அறிய முடிகின்றது.

பாவை வழிபாடு

பாவை வழிபாடு அல்லது தைந்நீராடுதல் என்பது இளம்பெண்களால் நிகழ்த்தப் பெறும் வழிபாடு ஆகும். மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கி தை முழுமதி நாள் வரை காலையில் நீராடி நோன்பிருப்பர் என்பது,

தைஇ நின்ற தண்பெயல் கடை நாள்

………………………………………………

வண்டற் பாவை உண்துறைத் தரீஇத்

திருநுதல் மகளிர் குரவை

அயரும்     (அகம்.269:14-20)

என்ற அகநானூற்றின் வழி அறிய முடிகின்றது. நல்ல கணவனை அடைய வேண்டும் என்ற நோக்கில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரில் உள்ள பெண்கள் வைகறைத் தூக்கத்தில் இருந்து எழுந்து தம்மையொத்த சிறுமியர்களை வீடுவீடாகச் சென்று அழைத்துக் கொண்டு நீர்நிலைக்குச் சென்று நீராடிப் பாவை நோன்பு நோற்பது தொன்று தொட்டு தொடர்ந்து வரும் வழக்கமாகும். இதுவே பிற்காலத்தில் பாவை வழிபாடு, பாவை நோன்பு என வளர்ந்துள்ளது. மேலும்;, திருப்பாவை, திருவெம்பாவை போன்ற சமயப் பாடல்கள் தோன்றுவதற்கும் அடிப்படையாய் அமைந்தது எனலாம். ஆண்டாள் பாடிய திருப்பாவையில் பாவை நோன்பு மேற்கொள்பவர் செய்ய வேண்டியவை எவை? செய்யக் கூடாதவை எவை? என்பதை அறியலாம்.

கொற்றவை

கொற்றவை பாலை நிலத்துக்குரிய தெய்வம் என்பர். இவள் காட்டில் வாழும் மறவர்களால் போற்றப்படுகிறாள். கொற்றவை,

கான் அமர் செல்வி (அகம். 345:4)

எனவும்,

பெருங்காட்டுக் கொற்றி (கலித்.9 89:8)

என்றும் குறிக்கப்படுகிறாள். மேலும்,

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!

இழையணி சிறப்பின் பழையோள் குழவி(முருகு. 258-259)

என்று முருகனைக் கொற்றவையின் சிறுவனாகக் கூறுவதும் மரபாக இருந்திருப்பதையும் காணலாம்.

இராமனைப் பற்றிய செய்தி

திருமால், இராமவதாரத்தில் சீதையை மீட்கச் செல்லும் பொழுது கோடிக்கரையின் கண் அமைந்த கூடுதுறையில் அரக்கரை வெல்லுவதற்குச் செய்யும் போர் பற்றிய செய்தியை அகநானூறு சுட்டுகிறது. மறைச் செய்தியை வானர வீரார்களோடு ஆலோசித்த செய்தியை,       

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கும் இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே (அகம்.70:12-17)

என்ற அகப்பாடல் வழி அறியலாம். அகப்பாடலில் இராமனைப் பற்றிய செய்தியைக் குறிக்கும் வரிகளே அதிகமாக இடம்பெற்றுள்ளது. அகப்பாடலின் கருத்து ஒருவரி மட்டுமே வந்துள்ளமையால் மேற்கண்ட பாடல் இதிகாசச் செய்தியைச் சுட்டுவதிலும் சிறந்து விளங்குவதை அறியலாம்.

கண்ணன்

திருமால், கண்ணன் அவதாரத்தில் ஆயர்பாடியில் ஆயர் மகளிருடன் ஆடியும் பாடியும் விளையாடினான். அவர்களுக்குப் பற்பல இன்பத் தொல்லைகளையும் கொடுத்தான்.  யமுனை ஆற்றில் நீராடிய ஆயர் மகளிரின் துகில்களைக் கவர்ந்தும், அவர் பொருட்டுக் குருந்த மரத்தை வளைத்தும் கண்ணன் புரிந்த ஆடல் ஒன்றினைப் பற்றி,

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

மரம் செல மதித்த மாஅல் போல  (அகம்.59:4-6)

என்று கூறுகிறார் மதுரை மருதனிளநாகன்.

கண்ணனின் இச்செயல்,

           நீலநிற வண்ணன (சீவகசிந். 209)

எனத் தொடங்கும் சீவகசிந்தாமணிப் பாடலிலும் இடம்பெறக் காணலாம்.

திருமகள்

திருமாலின் மார்;பில் இடம்பெற்றவளாகிய திருமகளைப் பற்றி,

செய்யோள் நீங்க, சில்பதம் கொழித்து,

தாம்அட்டு உண்டு, தமியர் ஆகி,

தேமொழிப் புதல்வர் திரங்குமலை சுவைப்ப,

வைகுநர் ஆகுதல்         (அகம்.316:13-16)

என்ற அகப்பாடல் குறிப்பிடுகிறது. இதில் ஒருவர் தம் இல்லத்தில் திருமகள் நிலைபெற்றிருக்கும் பொழுது அவர்கள் செல்வந்தர்களாக விளங்குவதும், திருமகள் அவர்களை விட்டு நீங்கினால் அவர்கள் வறிய நிலையை அடைவதும் சுட்டப்பெற்றுள்ளது. இதனால் திருமகள் செல்வத்தின் குறியீடாக விளங்கியமை புலனாகிறது.

இல் உறை கடவுளை வழிபடல்

தோழி தன் தலைவி ஒருத்திக்குக் குறித்த மணநாள் விரைவில் வரட்டும் என்று விரும்பி, அத்தலைவியுடன் மனையில் உறையும் தெய்வத்தைக் கைகூப்பி வணங்கி, அதற்குரிய பலியையும் செலுத்தியது பற்றி,

அடைய முயங்கேம் ஆயின், யாமும்

விறல்இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே

அன்னை அறியினும் அறிக! அலர்வாய்       (அகம்.218:16-18)

என்ற பாடலடி உணர்த்துகிறது. இதனால் மகளிர் தத்தம் மனைகளில் இல்லுறை தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளமை புலனாகும். அன்று பலிகொடுத்து இல்லுறை தெய்வத்தை வணங்கியதைப் போன்று இன்றும் சில ஊர்களில் திருவிழாவின் பேது பலிகொடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவதைக் காணலாம்.

தொகுப்புரை

  • சங்க கால மக்கள் சமயச் சார்பற்ற தெய்வ  வழிபாட்டினைக் கொண்டிருந்தனர்.
  • சங்க காலத்தில் உருவ வழிபாடுகளும், விழாக்களும் நிகழ்ந்தன என்பதை இலக்கியங்கள் வழி அறியலாம்.
  • சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, முருகன் வழிபாடு இவற்றால் தமிழர்கள் வழிபாடு செய்த தெய்வங்களைப் பற்றி அறிய முடிகின்றது.
  • சமய உணர்வும் கடவுள் நம்பிக்கையும் பழந்தமிழர் வாழ்க்கையில் நிறைந்திருந்தன என்பதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

துணை நூற்பட்டியல்

  1. இரா.சந்திரசேகரன் (ப.ஆ). சங்க இலக்கியம் பன்முகப் பார்வை, சொ. பழனிவேலு அவர்களின் கட்டுரை.
  2. Dravidian Etymological Dictionary 
  3. செங்கம் நடுகற்கள் எண். 110/1971
  4. செயபால் இரா.அகநானூறு நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை.
  5. தொல். பொருள்
  6. திருப்பாவை