ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இறைமையும் இறைவழியுரிமையும்

Dr.S.Muhunthan,Senior Lecturer,Head,Dept.of.Hindu Civilization,University of Jaffna 09 Feb 2022 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

      இறைவழியுரிமைக் கோட்பாடானது அரசின் இறைமையைச் சுமூகமாகப் பரவலாக்கம் செய்யவும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையினைப் பேணவும் ஏற்;படுத்தப்பட்ட முக்கிய ஏற்;பாடாகத் திகழ்கிறது. அரசன் இறைவனின் பிரதிநிதி, அரசனுக்கு வழங்கப்பட்ட இறைமை இறைவனின் திருவருட்பிரசாதம் அதனை எவரும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்பதனையே இறைவழியுரிமைக் கோட்பாடு வலியுறுத்த முனைகிறது. உலகின் புராதன நாகரிகங்கள் பலவற்றில் இறைவழியுரிமைக் கோட்பாடானது இறைமையுடன் தொடர்புபட்ட விதத்தில் பயின்று வந்துள்ளது. இந்துநாகரிக வரலாற்று மூலங்களிலும் இப்போக்கினை நன்கு அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் வைதிக இலக்கியங்கள், தர்மசாத்திரங்கள், அர்த்தசாத்திரம் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் என்பவற்றிலும் மௌரியர் சாசனங்களிலும் இறைவழியுரிமைக் கோட்பாட்டின் முக்கிய பரிமாணங்களை அவதானிக்க முடிகிறது. இந்தியாவுக்கு அப்பால் கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை இந்தியப்பண்பாட்டின் செல்வாக்கிற்குட்;பட்ட தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலும் இதன் தாக்கத்தினை இனங்கான முடிகிறது. அந்தவகையில் கம்போடியா, யாவா, தாய்லாந்து, சம்பா ஆகிய நாடுகளில் மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெற்றிருந்த தேவராஜ வழிபாட்டு முறைமையும் இறைவழியுரிமைக் கொள்கையின் பிறிதொரு முக்கிய பரிமாணத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

திறவுச்சொற்கள்:  இறைவழியுரிமை, இறைமை, இந்துநாகரிகம்

அறிமுகம்:  

“இறைமை” என்பது தலைமை, அரசாட்சி, தெய்வத்தன்மை என்ற பொருளமைதிகளைத் தரும் பதமாகும். இந்துநாகரிக வரலாற்றில் அரசாட்சியும் அரசுரிமையும் தெய்வாம்சத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட போக்கினை அவதானிக்க முடிந்துள்ளது. அரசியல் விஞ்ஞான அறிவுப்புலத்தில் “இறைமை” குறித்துப் பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டுள்ள போதிலும் அவற்றின் மையக்கருத்தாகத் தெய்வத்தன்மை அல்லது இறைவழியுரிமை பற்றிய கருத்தியல்கள் இழையோடுவதனை நன்கு அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் இறைமை குறித்து வூட்றோவில்சன், பேகஸ் (Burgess), வில்லோபி போன்ற அறிஞர்களின் வரைவிலக்கணங்கள் பிரபல்யமானவை.

“ஓர் அரசன் தனது மக்களின் மீதும் அம்மக்களின் நிறுவனங்கள் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதுமான எல்லையற்ற அதிகாரமே இறைமை” என்ற பேகஸ் என்பவரின் வரைவிலக்கணம் “இறைமை” குறித்த யதார்த்தத்தை நன்கு புலப்படுத்துவதாயுள்ளது. (Krishnamohan,T:2013)

அரசியல் விஞ்ஞான அறிவுப்புலத்தில் பேசப்படும் “இறைமை” ஆங்கிலத்தில் “ளுழஎநசநபைவெல” என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது. இது பிரான்சியச் சொல்லாகிய சவறினேற் (Soverainete) என்பதிலிருந்தும் இலத்தீன் சொல்லாகிய சுப்ரிமிஸ்ரஸ் (Supremitas)என்பதிலிருந்தும் தோற்றம் பெற்றதாகும். மிகவும் நேரடியான கருத்தில் இறைமை என்பது, “அரசினுடைய மேலான அதிகாரம்” என்பதையே குறித்து நிற்கும். இத்தகைய மேலான அதிகாரத்தை நியாயப்படுத்தவும், ஆளப்படுவோரிடத்தில் இதனைக் கேள்விக்குள்ளாக்கப்படாமல் எடுத்துச் செல்லவும், “இறைவழியுரிமை” என்ற கோட்பாடு தோற்றம் பெற்றது. இதுவே அரசின் தோற்றம் குறித்து மேற்கிளம்பிய கோட்பாடுகளில் காலத்தால் முற்பட்டதும் பிரபல்யமானதுமான கோட்பாடாகும்.

அரசு என்பதற்கு பல்வேறு வரையறைகள் காலத்துக்குக் காலம் வழங்கப்பட்டு வந்துள்ளன. அரிஸ்ரோட்டில் தொடங்கி,, சிசிரோ, கரோல்ஸ்கி, வூட்ரோ வில்சன், பிலன்ஸ்லி, ஸ்மித், கார்னர் எனப் பல புகழ் பெற்ற அரசியல்அறிஞர்களின் வரைவிலக்கணங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. நவீன அரசறிவியலில் கார்னர், கரோல்லஸ்கி ஆகியோர்களின் அரசு பற்றிய வரைவிலக்கணங்கள் அதிகம் விதந்துரைக்கப்படுகின்றன.

“அரசு என்பது வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் புறச் சக்திகளின் ஆதிக்கம் இன்றி (அல்லது மிக மிக குறைந்தளவுடைய) வாழுகின்ற குறித்த மக்கள் குழுமத்தினால் சமூகஒழுங்கைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட பெரிய நிறுவன அமைப்பாகும்.” - The State as a community of persons, more or less numerous, permanently occupying a definite portion of territory, independent or nearly so, of external control, and possessing an organized government to which the great body of inhabitants render habitual obedience. (Garner,J.W., 1994:52) “குறித்த வரையறைக்குள்ளான பௌதிக நிலப்பரப்பினுள் வாழுகின்ற குழுமத்தினரால் அந்த ஆள்புலத்தினுள் உள்ள எல்லா சமூகநிறுவனங்களை விடவும் மேலாதிக்கம் உடைய நிறுவனமாக அரசு திகழ்கிறது”என கரோல்ஸ்கி குறிப்பிடுவார். -The State as a territorial society divided into government and subjects claiming within its allotted physical area, a supremacy over all other institutions.

                                                                 (Laski, Harold:2003:10)அந்தவகையில் பொதுவாக இறைமையிருப்பதாக அங்கீகரிக்கப்பட்டு வலிமையால் ஆதரிக்கப்பட்ட சட்டத்தினால் குறித்த நிலப்பரப்பின் எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்தி சமூக ஒழுங்கைப்பேணுவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவன அமைப்பாக அரசைக் கருத இயலும்.

இறைவழியுரிமைக் கோட்பாடு (The Theory of Divine origin)

அரசின் தோற்றம் பற்றி எழுச்சி பெற்ற கோட்பாடுகளில் மிகப் புராதனமானது இறைவழியுரிமைக் கோட்பாடாகும்.

•     அரசு இறைவனின் சிரு~;டி

•     அரசன் இறைவனின் பிரதிநிதி

•     அரசுக்குரிய இறைமை இறைவனின் வழியே தரப்படுகிறது

என்பதே இதனடிப்படையாகும்

இறைவன் தன்னால் தீர்மானிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு அரச அதிகாரத்தினை வழங்குகிறார். அந்த மனிதன் (அதாவது அரசன்) தெய்வத்தின் பிரதிநிதியாக இருப்பதனால் அவனைக் கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் மண்ணுலகில்எவருக்கும் இல்லை. அவன் தன்னை அரசனாகத் தேர்ந்தெடுத்த தெய்வத்திற்கு மட்டுமே பொறுப்புக் கூற வேண்டியவனாவான். இக்கோட்பாடு தனது செயற்பாட்டு நிலையில் அரசு பற்றிய பரம்பரையுரிமையினையும் நியாயப்படுத்த முனைந்துள்ளது.

A.C. Kapur அவர்கள் தனது Principles of Political Science என்ற நூலில் இக்கொள்கை பற்றிப் பின்வருமாறு கருத்துரைத்துள்ளார்.

“The state, its advocates maintains, was created by God and governed by his  deputy of vice regent. The ruler was a divinely appointed agent and he was responsible for his actions to God alone”(Kapur, 2002:105)இக்கோட்பாட்டு புராதன கிரேக்க, ரோம, இந்து சாம்ராஜ்ஜியங்களில் ஆராதிக்கப்பட்டு வந்த ஒன்றாக விளங்கியது. மத்தியகால ஐரோப்பாவிலும் இக்கருத்தியலை முதலாம் ஜேம்ஸ், பிரான்சின் 14ஆம் லூயி போன்ற மன்னர்கள் ஆதரித்தனர்.

சேர் றொபட் பில்மர், ப்பூஸ்செற் (Bousset) போன்ற மத்தியகால அரசியல் அறிஞர்களும் இக்கோட்பாட்டை ஆதர்சமாக்கிச் சமகால அரசியல் செல்நெறிகளுக்கு நியாயம் கற்பிக்க முனைந்தனர்.

ஐரோப்பாவில் புகழ்பெற்ற மதச்சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்து சமூக மேம்பாட்டை ஏற்படுத்த முனைந்த மார்ட்டின் லூதர், கெல்வின் போன்றவர்களும் தெய்வீக வழியுரிமைக் கோட்பாட்டை நிராகரிக்கவில்லை. எனினும் காலப்போக்கில் இக்கொள்கை சமூக அரங்கில் தனது முக்கியத்துவத்தை இழந்தது.

இந்துநாகரிக மூலங்களிலும் அரசின் தோற்றம் பற்றிய விவரணங்களில் கோட்பாட்டின் சாயலை அனேக இடங்களில் அவதானிக்க முடிகிறது. வைதிக இலக்கியங்கள் பல சந்தர்ப்பங்களில் அரசனையும் அவனது இறைமையையும் தெய்வத்துடன் தொடர்புபடுத்திப் பேசுகின்றன.

வைதிக இலக்கியங்கள்:

சதபதப் பிராமணத்தில்; அரசன் பிரஜாபதியின் வடிவம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது(சதபதப்பிரமணம். V.4.11.11).சதபதப்பிராமணம் எழுச்சிபெற்ற பிந்திய வேதகாலத்தில்; பிரஜாபதியே முதன்மைத் தெய்வமாக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதர்வ வேதத்தில் புகழ்பெற்ற அரசனாக விவரிக்கப்படுகின்ற பரீ~pத் என்பவன் மனிதரில் தெய்வவடிவத்தையுடைவன் எனச் சுட்டப்படுகின்றான்.

தைத்திரீய உபநிடத்தில் குறிப்பிடப்படுகின்ற கதை ஒன்றில் தேவ அசுர யுத்தம் விவரிக்கப்படுகின்றது. யுத்தத்தில் தோல்வியுற்ற தேவர்கள் தமது தலைமைத் தெய்வமாகிய பிரஜாபதியைக் குறித்து யாகம் செய்தனர். யாகத்தினால் மகிழ்ந்த பிரஜாபதி தனது மகனாகிய இந்திரனைத் தேவர்களின் அரசனாக அனுப்பிவைத்தான். இதன்பின்னர் தேவர்கள் பலம் பெருகியது. அசுரர்கள் தோற்றோடினர்.(பசாம்,A.L.,1963:110)

இந்த விவரணக்கதை மூலம் ஒரு சமூகத்தின் வெற்றிக்கும்இ முன்னேற்றத்திற்கும் அவசியமான தலைமைத்துவம் கடவுளின் ஆசீர்வாதத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. வேதகால சமூகத்தின் பிரதிபலிப்பாக விளங்கிய வைதிக இலக்கியங்களில் தேவர்கள் என்ற உருவகிப்பு அக்கால மக்களின் சுயவிம்பங்கள் என்பதினை மறுப்பதற்கில்லை. இவ்வகையில்நோக்கும்போது வேதகால சமூகத்தின் பழைமையான தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகிய “இந்திரன்” அக்கால மக்களின் தலைமைத்தெய்வமாகிய பிரஜாபதியின்“மகனாக” உரிமை கோரப்படுவது அவதானிக்கத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக வேதகால அரசர்கள் யாவரும் யாகங்களை இயற்றுகின்றபொழுது இந்திரனாகவும், பிரஜாபதியாகவும் கருதப்பட்டுப் பிற்காலப் பிராமண இலக்கியங்களில் விவரிக்கப்படுவதும் நோக்கற்பாலது. யசுர் வேதத்தில்இடம்பெறுகின்ற “இரத்தினவிஹம்சி” விழா (பட்டாபிN~கம்) அரசனைத் தெய்வமாக மக்கள் முன் அங்கீகாரம் பெற்றுத்தரும் சடங்காகவே விவரிக்கப்பட்டுள்ளது. (யசுர்வேதம்.3.1)

இதில் புரோகிதர் மூலம் மேற்கொள்ளப்படும் “ஐந்திர அபிN~கம்” ஒவ்வொரு அரசனையும் இந்திரநிலைக்கு உயர்த்துவதாகக் கருதப்படுகிறது.

ஸ்மிருதிகள்

தர்மசாஸ்திரங்களில் முதன்மையான மனுஸ்மிருதியிலும் இறைவழியுரிமைக்கொள்கை பேசப்பட்டுள்ளது. மனுஸ்மிருதியின் ஏழாம் அத்தியாயம் இராசநீதி பற்றிக் குறிப்பிடும்போது அநேகஇடங்களில் அரசின் தெய்விக வழியுரிமை தொடர்பாகக் கருத்துரைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

                              “காவலன் இல்லையேல்      எளியோர் வலியோரை 

                             அஞ்சிஅமிழ்ந்து போவர். ஆதலால் உலகம்

                            அழியாதிருக்கும் பொருட்டே இறைவன்

                             மன்னனைப் படைத்தான்”    (மனுஸ்மிருதி, 7.3)

“இந்திரன், வாயு, இயமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், அழகேசன் ஆகிய திசைக் காவலர்கள் அனைவரின் தன்மைகளும் ஒருமித்துத் தோன்றியவனேஅரசன்”.(மனுஸ்மிருதி,7.4)

“தனது மகிமையால் அவ்வப்போது அரசன் தீயாகவும், காற்றாகவும், சூரியனாகவும்இ சந்திரனாகவும், யமனாகவும், குபேரனாகவும்இ வருணனாகவும், இந்திரானாகவும் இருப்பான்.”(மனுஸ்மிருதி7.5)

“தெய்வாம்சமுடைய திக்குபாலகர்களின் அம்சம் விளங்குபவனாதலால்

 அரசன் வயதிற் சிறியவனாக இருப்பினும் மனிதர் என்றே முறையில்

 அவனை அவமதித்தலாகாது.”(மனுஸ்மிருதி7.8)

“தத்தமது தர்மத்தை வழுவாது ஆற்றுகின்ற நான்கு வர்ணத்தாரையும்

காப்பாற்றுவதற்கென அரசன் பிரம்மாவால் சிருட்டிக்கப்பட்டான.;."              

                                                                                                                   (மனுஸ்மிருதி.7.35)

அர்த்தசாஸ்திரம்:

கௌடில்யர் அரசு நிறுவனம் பற்றிய யதார்த்தத்தை நன்கு உணர்ந்திருந்த போதும் தனது அர்த்தசாஸ்திரத்தில் இறைவழியுரிமைக் கோட்பாட்டினை நிராகரிக்கவில்லை. அரசின் ஸ்திரத்தன்மைக்கும் அரசனுக்கு அவசியமான கவர்ச்சியான தலைமைத்துவ ஆளுமைக்கும் இறைவழியுரிமைக் கோட்பாட்டின் பயில்நிலை இன்றியமையாதது என்பதனை அறிந்து அதனையும் தனது நூலில் கௌடில்யர் எடுத்தாண்டுள்ளார்.

 “ இந்திரனுடைய கடைமைகளும் யமனுடைய கடமைகளும் 

     அரசனிடத்தில் ஒன்று சேர்ந்துள்ளன...அவன் ரட்சிப்பதிலும்,  

        சிட்சிப்பதிலும் முறையே இந்திரன் இயமன் ஆகிய தேவர்களின் பிரத்தியட்சப் பிரதிநிதியாக உள்ளான்.”       (அர்த்தசாஸ்திரம்.4.2.3)

மேலும் அர்த்தசாஸ்திரம் அரசனை அவமதிப்போர் இவ்வுலகியல் சட்டத்தால்மட்டுமன்றி இறந்தபிறகு தேவலோகத்துச் சட்டத்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனக்குறிப்பிடப்படுகிறது.

மௌரியர் சாசனங்கள்:

மௌரியர் சாசனங்களும் அரசனைத் தெய்வாம்சப்படுத்தி விவரித்துள்ளன. குறிப்பாக அசோகரது சாசனங்களில் அவரைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள “தேவனாம்பிய”, “தேவப்பிரசாத”, “தேவான்வய” முதலிய விருதுப்பெயர்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.( Diskhitar,V.R.:1932:16)

பழந்தமிழ் இலக்கியங்கள்: 

பழந்தமிழ் இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் இறைவழியுரிமை பற்றிய கருத்தியல்கள் ஆங்காங்கே இழையோடியுள்ளன. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இடம்பெறும் “பூவை நிலை” இதற்குத் தகுந்த சான்றாகும்.

                            “மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்

                          தாவா விழுப்புகழ்ப்பூவை நிலையும்”

                                                (தொல்காப்பியம் பொருளதிகாரம்.புறத்.இயல் -5)

என்ற செய்யுள் மன்னர்களைத் திருமாலாகப் போற்றுகிறது. மேலும் ஆற்றுப்படை இலக்கியங்களிலும் புறநானூற்றிலும் அரசன் தெய்வாம்சமுடையவனாக சிவன்;, பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளருடன் தொடர்புபடுத்தப்பட்டுப் போற்றப்படுவதனை அவதானிக்க முடிகிறது. திருமாவளவன் எனப்பட்ட கரிகால சோழன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பாண்டியன்இ பெருவழுதி ஆகிய இரண்டு மன்னர்கள்இவ்வகையில் சங்க இலக்கியங்களில் அதிகம் இறைவழியுரிமையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

                  “பால்நிற உருவின் பனைக்கொடியோனும்

                நீர்நிற உருவின் நேமியோனும் என்று

                 இருபெருந் தெய்வமும் உடன் நின்றாங்கு”(புறநானூறு 58.13-16)

குறித்த ஆள்புலத்தில் இயற்கை நிகழ்ச்சிகளின் ஒழுங்குமுறையும் கட்டமைவும் ஆள்பவனின் தெய்வாம்சத்தினால் சாத்தியப்பட்டன என்ற பொருள்தரும் வகையில் அமைந்த,

“ஓங்கு திரைவியன் பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாக”(அகநானூறு 93.)

எனத்தொடங்கும் அகநானூற்றுப் பாடலும் இதற்குப் பிறிதொரு சான்றாகக் காட்டப்படத்தக்கது. மேலும் “இறை” என்ற பதம் அக்காலத்தில் அரசனுக்கும் கடவுளுக்கும் பொதுப்பெயராக வழங்கியது. இதனைப் பிற்காலத்தில் திருவள்ளுவரும் தனது திருக்குறளில் பயன்படுத்தியுள்ளார். அரசியலைப் பாடவந்த பொருட்பாலின் முதலாவது அதிகாரம் “இறைமாட்சி” என்ற தலைப்பில் அமைந்துள்ளமை கவனிக்கற்பாலது. (திருக்குறள், பொருட்பால்.அதிகாரம்.39)

அந்த அதிகாரத்தின் எட்டாவது குறளில் அரசனை “இறை” ஸ்தானத்தில் ஏற்றிக் காட்டுகின்ற திருவள்ளுவரும் இறைவழியுரிமைக் கோட்பாட்டினை முற்றிலுமாகப் புறந்தள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.(குறள்.388)

வைணவ பக்தி நெறியாளராகிய நம்மாழ்வார்

“திருவுடை மன்னரைக் காணில் திருமலைக்கண்டேன்.”(திருவாய்மொழி 34.8)

என்று தொல்காப்பியத்தின் பூவை நிலையின் தொடர்ச்சியை நினைவுபடுத்தினார். சோழர்களின் சாசனங்களும் அரசனைத் “தேவர்” என்றே சுட்டின.

இவ்வகையில் அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் ஆதிக்கொள்கையாகிய இறைவழியுரிமைக் கோட்பாட்டின் பதிவுகளை இந்துநாகரிக வரலாற்று மூலங்களினூடாக அவதானிக்க முடிகிறது.

தேவராஜவழிபாடு

அரசனைத் தெய்வமாகவும், அரசின் இறைமையைத் தெய்வத்திடமிருந்து தருவிக்கப்பட்டதாகவும் கருதும் போக்குத் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவலாக அறியப்பட்டிருந்தது. குறிப்பாகக் கம்போடியா, யாவா, தாய்லாந்து, சம்பா ஆகிய நாடுகளில் இதன் வேர்களை நன்கு அறிய முடியும். தென்கிழக்காசியநாடுகள் தொடர்பில் ஆய்வு செய்த வரலாற்றறிஞர்கள் இதனைத் தேவராஜவழிபாடு என்ற பெயரில் சுட்டியுள்ளனர்.

கம்போடியா:

கி. பி. 9ஆம் நூற்றாண்டில் கம்போடியாவை ஆண்ட 2ம் ஜெயவர்மன் என்ற அரசனால் இவ்வழிபாடு கம்போடியாவில் கோலாகலமாக அறிமுகஞ் செய்யப்பட்டதற்குத் தெளிவான சாசன ஆதாரங்கள் உள்ளன. சீதே, க.த.திருநாவுக்கரசு, ச.சிங்காரவேலு, ஹோல், ர்.ர்.நு.டுழழகள போன்ற ஆய்வாளர்கள் இது பற்றிக் கருத்துரைத்துள்ளனர். இலிங்கம், அரசன், அரசவைப் புரோகிதன் ஆகிய மூன்று கூறுகள் தேவராஜ வழிபாட்டில் ஆரம்பத்தில் தொடர்புபடுத்தப்பட்டன.

                  இலிங்க வடிவாகிய சிவன் மூலமாக ஆளும் ஆற்றலை அரசவைப் புரோகிதன் சடங்குகளின் மூலமாகப் பெற்று அதனை நாட்டின் தலைநகரத்திலோ, மலையின் உச்சியிலோ நிறுவப்படுகின்ற ஆலயத்தில் சாந்நித்தியப்படுத்துகிறார். குறித்த இலிங்கம் ஆண்டவனின் பிரதிநிதியாக அரசனை வழிமொழிகிறது. அந்தவகையில் அரசனையும் அவனது ஆளும் திறனையும் தெய்வாம்சப்படுத்தும் அடையாளமாகவும், அங்கீகாரச் சின்னமாகவும் குறித்த தேவராஜ லிங்கம் அமைகிறது.

“Codes thought the object of the cult was a linga obtained from Siva, through the Brahmans. The cult was seen by him as “ the communion between the King and the god.The Linga was supposed to contain the “royal essence” and codes saw the cult as being closely linked to the ritual of installing, upon the accession to the throne of a Khmer King……It was divine King Ship; it was the king who was the great god of ancient Cambodia. (Aeusrivongse, N.,1976:107)

கம்போடியாவில் தேவராஜ வழிபாடு தொடங்கப்பட்டபோது எத்தகைய கிரியைகள் நடைபெற்றன என்கிற விபரங்களை 2ம் உதயாதித்த மன்னனின் “டோக் கக்தோம்” கல்வெட்டு விரிவாகத் தந்துள்ளது. இது தவிரவும் கம்போடியாவில் கிடைத்த நூற்றுக்கணக்கான வடமொழிக் கல்வெட்டுக்கள் தேவராஜ வழிபாடு தொடர்பில் குறிப்புக்களைப் பதிவு செய்துள்ளன. “தேவராஜன்” என்ற வடமொழித் தொடருக்கு ஈடான கெமர் மொழித்தொடர் (கம்போடிய மொழி) “முயயஅசயவநn துயபயவய வுயய சுயயதயய” என்பதாகும். இத்தொடர் கி.பி. 1012க்குரிய கம்போடியக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

(Aeusrivongse, N.,1976:113)

இவ்வண்டத்தின் தலைவனாகிய கடவுள் இம்மன்னன்”

என்பதே இதன் பொருளாகும். இலிங்க வழிபாட்டில் தொடங்கிய தேவராஜ வழிபாடு உருவ வழிபாடாகவும் விரிவு பெற்றது. இலிங்கத்தின் மேற்புறத்தில் குறித்த மன்னரின் உருவம் பொறித்த பொன், வெள்ளிக் கவசங்கள் சாத்தப்பட்டன. காலப்போக்கில் இலிங்கத்திலேயே அரசனுடைய முகமும் பொறிக்கப்பட்டது. (முகலிங்கம்) இந்தோனேசியாவில் கிடைக்கப்பெற்ற சங்குபெட்ராக் கல்வெட்டில் இத்தகைய முகலிங்கம் பற்றிய குறிப்பை அறிய முடிகிறது.

யாவா:

கம்போடியாவைப் போலன்றி சற்று வேறுபட்ட முறைமையில் யாவாவில் தேவராஜ வழிபாடு இனங்காணப்பட்டுள்ளது. யாவாவில் ஒரு இராக்கிரியான் எனப்படும் குறுநில மன்னன் பிற குறுநில மன்னர்களை வென்று தனது பலத்தை நிரூபிக்கும்போது “சண்டி” எனும் சின்னத்தை அமைப்பான். அது யாதேனும் ஒரு தேவதைக்கு அர்ப்பணிக்கப்படும். மன்னனும் அத்தேவதையும் ஒன்றாகவே கருதப்படுவர். குறித்த மன்னன் இறந்த பின்பு அத்தேவதையிலேயே உறைவான் என நம்புவர். அந்தவகையில் கி.பி.772க்குரிய மாதரம் மாவட்ட இராக்கிரியானாக இருந்த சஞ்சயன் என்பவன் அமைத்த “சண்டி” ஆனது சிவலிங்கத்தைத் தாங்கியுள்ளது. அதுவே அவனது ஆதிபத்திய உரிமையின் புறச்சின்னமாகவும், ஆற்றலாகவும் விளங்கியது என னு. பு. ஹோல் குறிப்பிட்டுள்ளமை நோக்கற்பாலது.  (ஹோல்,D.G:1971:25)

யாவாவின் கிறாதீ மாகாணத்தில் உள்ள பிறீதீற்குவான்பிரில் என்ற இடத்தில் கிடைக்கப்பெற்ற கதவுக் கல்வெட்டில் (கி.பி. 716) பு~;கரன் என்ற மன்னன் முனிவர்களையும், மிகச் சிறந்த பிராமணர்களையும், கொண்டு பு~;கரேசக் கடவுளைச் சமைப்பித்தான் எனக் குறிப்பிடுகிறது. இது பு~;கரராட்சன் என்ற மன்னன் அமைத்த தேவராஜ லிங்கத்தைக் குறிப்பதாகும் என னு. D.G. ஹோல் சுட்டுவதும் நோக்கற்பாலது.

தாய்லாந்து:

தாய் மன்னர்களின் முடிசூட்டுவிழாவின்போது “கைலாயத்தின் வாயில்கள் திறக்கட்டும்” என்ற பொருள்படும் மந்திரம் ஓதப்படுவது அரசனில் சிவனின் ஆற்றல் இறங்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பிரதிபலிப்பே எனலாம்.தாய் அரசர்களின் பட்டங்களில் “திவ்விய தேவாவதாரம்” என்பதும் ஒன்றாகும். அது போலவே லோஜின்ஜர் எனப்படும் ஊஞ்சல் திருவிழாவின் போதும் அரசன் சிவனாகவே எழுந்தருளி வரமளிப்பாதாகச் (பரிசளித்தல்) சித்திரித்தலும், அரசனைத் தெய்வமாக்கும் உத்திநிலை வெளிப்பாடேயாகும்.மேலும் இளவரசனின் குடுமிகளையும், சடங்கின்போது இடம்பெறும் கைலாயக் காட்சியிலும் அரசன் சிவனாக வேடம் புனைந்து வீற்றிருத்தலும், இளவரசன் அரசனை வீழ்ந்து வணங்கி எழுதலும் இவ்வகையில் மேலும் கவனத்தையீர்க்கும் நிகழ்ச்சிகளாகும்.(திருநாவுக்கரசு.க.த.:1987)

சம்பா:

தென்வியட்நாம் பகுதியாகிய சம்பா தேசத்திலும் தேவராஜக் கருத்தியல் நன்கு வேரூன்றியிருந்ததனைச் சாசனங்கள் உறுதிசெய்துள்ளன. அந்தவகையில் கி.பி. 875ஆம் ஆண்டுக்குரிய சம்புபத்திரேஸ்வரக் கல்வெட்டு இதற்கு மிக முக்கியமான சான்றாகும். சம்புவர்மன் என்ற மன்னன் பத்திரேஸ்வரர் என்ற சிவன்கோயிலை கட்டுவித்தமை பற்றிக் குறிப்பிடும் இக்கல்வெட்டில்,

“சிவபெருமானே அக்கோயில் இலிங்கத்தை பிருகு முனிவருக்குக் கொடுத்தார். பிருகு அதனை உரோஜனுக்குக் கொடுத்தார். அவனே சம்பாவின் முதல் அரசனாவான்”என்கிற குறிப்பும் இடம்பெற்றுள்ளது. இக்குறிப்பும் சம்பாவிற்கான அரசுரிமையானது சிவன் வழியீட்டப்பட்ட இறைவழி உரிமை என்கிற நிலைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. அதுபோன்றே சம்பாவின் “போ” நகரில் கிடைத்த முகலிங்கத்துடனான கி.பி. 8ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு விசித்திசாகரன் என்ற அரசனை சிவனுடன் தொடர்புபடுத்தி அவனது அரசுரிமையைப் புகழ்கிறது.

இவ்வாறாகத் தென்கிழக்காசிய நாடுகளிலும் அரசவம்சங்களின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கென ஏற்படுத்தப்பட்ட இறைவழியுரிமைக் கோட்பாட்டின் ஏற்பாடாகவே தேவராஜ வழிபாட்டு நடைமுறைகளைக் கருத வேண்டியுள்ளது.   (இராசாராம்இவ:1966:378)

நிறைவாக:

இறைவழியுரிமைக் கோட்பாடானது அரசின் இறைமையைச் சுமூகமாகப் பரவலாக்கம் செய்யவும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையினைப் பேணவும் ஏற்படுத்தப்பட்ட முக்கிய ஏற்;பாடாகத் திகழ்கிறது.இக்கோட்பாட்டின் உருவாக்கத்தில் சில அடிப்படையான நோக்கங்கள் சமூகப் பயன்பாடு கொண்டவையாகும். சிதறிக்கிடக்கின்ற மக்கள் கூட்டத்தினைப் பொது இலட்சியத்துக்காகத் தெய்வத்தின் ஆணையால் ஒன்று திரட்டவும் அரசர்கள் தெய்வநீதிக்கு அஞ்சிக்கொடுங்கோன்மையற்ற நல்லாட்சியை வழங்கவும் இக்கோட்பாடு வழியமைத்துக் கொடுக்கிறது. இறைசித்தம் என்கிற அரூபமான பேராற்றலினைச் சாட்சிப்படுத்திச் சமூக ஒழுங்கையும் நியதிகளையும் பேணிக் கொள்வதற்கு முயன்ற இக்கோட்பாடு தனது செயற்பாட்டு நிலையில் சில பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாமலில்லை. தெய்வநீதிக்கு அஞ்சாத சில கொடுங்கோலர்கள் தமது முறையற்ற ஆட்சியைச் சமூகம் கேள்விக்குள்ளாக்காமலிருக்கத் தம்மைத் தெய்வத்தின் பூவுலகப் பிரதிநிதிகளாக  உரத்துக் கூறிக்கொண்டனர்.இதுவே இக்கோட்பாடிலுள்ள பாதகத்தன்மையாகும்.

இந்து நாகரிக வரலாற்றில் வைதிக இலக்கியங்கள், தர்மசாத்திரங்கள், அர்த்தசாத்திரம் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் என்பவற்றிலும் மௌரியர் சாசனங்களிலும் இறைவழியுரிமைக் கோட்பாட்டின் முக்கிய பரிமாணங்களை அவதானிக்க முடிகிறது. இந்தியாவுக்கு அப்பால் கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பண்பாட்டின் செல்வாக்கிற்குட்;பட்ட தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலும் இதன் தாக்கத்தினை இனங்காண முடிகிறது.

References

Aeusrivongse, N., (1976), The Devaraja Cult and Khmer Kingship at Angkor, https://www.jstor.org/stable/10.3998/mpub.19404.10

Altekar, A.S., (1958), State   and Government in Ancient India, Banaras, Motilal  Banarasidas,

Diskhitar, V.R., (1932), The Mauryan Polity, Delhi, Motilal Banarsidas,

Garner, J.W.,(1928), Political Science and Government, New York, Cincinnati, American Book Co.

Kapur,A.C., (2002), Principles of Political Science, New Delhi,   S.Chand &company Ltd.

 Krishnamohan,T, (2013), Politic Almanac: HOMEhttps://www.politicalmanac.com

Sen, A.K., (1929), Studies in Ancient Indian Political Thought, Calcutta, Chatterjee and Co.

இராசாராம்இவ., (1966), சீனா ஜப்பான் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் வரலாறு(கி.பி.1966வரை), சென்னை, தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம்.

திருநாவுக்கரசு.க.த, (1987), தென்கிழக்கு ஆசியநாடுகளில் தமிழ்ப்பண்பாடு, , சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

பசாம், A.L.,(1963), வியத்தகு இந்தியா, இலங்கை ,அரசகரும மொழித் திணைக்கள வெளியீடு

ஹோல்.D.G., (1971), தென்கிழக்காசிய வரலாறு, இலங்கை, கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.