ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகளில் பெண்ணும் பெண் சார்ந்த மொழியும்

திருமதி வானதி பகீரதன், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப்பல்கலைக் கழகம், இலங்கை 09 Feb 2022 Read Full PDF

திருமதி வானதி பகீரதன், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப்பல்கலைக் கழகம், இலங்கை

Abstract

Woman and feminist language in the poems of Eelamist women warriors

Peyaridaatha nadchathiram is a collection of poems written by the eelamist women warriors. This collection includes seventy poems written by twenty six female militant poetesses. It represents the mental feelings, strengths, and heroic ventures of the women who have joined the battlefield. All the poems in this collection portray the struggles of the poetesses who are directly involved in the struggle.  As a result, their poems talk about various issues that have not been spoken by other poetesses so far. In addition, the use of language, clauses, and images in their poems are completely different from other poetesses.

The women fighters in these poems are not enslaved to anyone. They intend to achieve their goals without losing their sense of self. They express the heroic deeds, the spheres of battlefield, and various new expressions. Thus, these poems are different from the poetic language other poetesses.

Who are eelamist militant poetesses?, What are their poetic expressions?, How do they perceive nature?, How do they express love and motherhood?, How do they express their opposition?, How do the words, cluases, and similes they use differ from the poems of other poetesses are subject to study.

Keywords: Self, annihilation, tragedies of war, female warriors, struggle

ஆய்வுச்  சுருக்கம்

ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு “பெயரிடாத நட்சத்திரம்”. இத் தொகுப்பில் இருபத்தாறு பெண் போராளிக் கவிஞைகளின்  எழுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது போராட்டகளத்தில் இணைந்து கொண்ட பெண்களின் மன உணர்வுகளையும் அவர்களது வலிமையையும் வீரம் செறிந்த துணிகர செயற்பாடுகளையும் பேசுகின்றது. இத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞைகள் யாவரும் நேரடியாகவே போராட்டத்தில் இணைந்து கொண்ட பெண்கள் என்பதால் இவர்களது கவிதைகள் இதுவரை பெண்களால் பேசப்படாத பல்வேறு புலம் சார்ந்த விடயங்களைப் பேசுவதுடன் ஏனைய பெண் கவிஞைகளிலிருந்து வேறுபட்ட விதத்தில் தமது மொழியைக் கையாண்டுள்ளனர். இவர்களது மொழியாடல்கள் முற்றிலும் வேறுபட்ட சொற்களையும் தொடர்களையும் படிமங்களையும் கொண்டவையாகவும் அமைகின்றன.

இப் பெண் போராளிகளின் கவிதைகளில் தாம் எவருக்கும் அடங்கி, அடிமைப்பட்டுப் போகாத, இலக்கை அடைவதையே நோக்காகக் கொண்ட, தமது சுயத்தை இழக்காத தன்மையை அவதானிக்க முடிகின்றது. இவர்கள் தமது வீரம் செறிந்த செயற்பாடுகளையும் போரியல் வாழ்வின் கோலங்களையும் பல்வேறு புதிய அனுபவங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால்  ஏனைய பெண் கவிஞைகளின் கவிதை மொழியிலிருந்து இக் கவிதைகள் வேறுபட்டவையாக அமைகின்றன.

ஈழத்துப் பெண் போராளிக் கவிஞைகளாக அடையாளப்படுத்தப் படுவோர் யாவர்? அவர்களின் கவிதை வெளிப்பாடுகள் யாவை? அவர்கள் இயற்கையை எவ்வாறு நோக்கினர்? காதல், தாய்மை உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் எவ்வாறு அமைந்திருந்தது? அவர்கள் தமது எதிர்ப்புணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்? அவர்கள் கையாண்ட சொற்கள் தொடர்கள், உவமைகள் என்பன ஏனைய பெண் கவிஞைகளது கவிதைகளிலிருந்து எவ்வகையில் வேறுபடுகின்றன? என்பவை ஆய்விற்குரியனவாகும்.

திறவுச் சொற்கள்

சுயம்,  ஆட்டி தகர்த்தல், போரின் அவலம், பெண் போராளிகள்

ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு ஊடறு விடியலின் வெளியீடாக  “பெயரிடாத நட்சத்திரம்” என்ற தலைப்பில் 2011ல் புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்டது. ஈழத்தில் இத் தொகுப்புப் பற்றிய அறிமுகம் பரவலாக்கப் படாமையினால் இப் பெண் போராளிகளின் கவிதைகளையும் இக் கவிதைகள் தரும் அனுபவங்களையும் அறியமுடியாமல் போனது. இக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இத் தொகுப்பு 2017ல் மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இத் தொகுப்பில் இருபத்தாறு பெண் போராளிக் கவிஞைகளின்  எழுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது போராட்டகளத்தில் இணைந்து கொண்ட பெண்களின் மன உணர்வுகளையும் அவர்களது வலிமையையும் வீரம் செறிந்த துணிகர செயற்பாடுகளையும் பேசுகின்றது. இத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞைகள் யாவரும் நேரடியாகவே போராட்டத்தில் இணைந்து கொண்ட பெண்கள் என்பதால் இவர்களது கவிதைகள் இதுவரை பெண்களால் பேசப்படாத பல்வேறு புலம் சார்ந்த விடயங்களைப் பேசுவதுடன் ஏனைய பெண் கவிஞைகளிலிருந்து வேறுபட்ட விதத்தில் தமது மொழியைக் கையாண்டுள்ளனர். இவர்களது மொழியாடல்கள் முற்றிலும் வேறுபட்ட சொற்களையும் தொடர்களையும் படிமங்களையும் கொண்டவையாகவும் அமைகின்றன.

பெண்களின் படைப்புக்கள் தனித்துவம் மிக்கவை. இவை ஆண்களின் மொழியிலிருந்து வேறபட்டவை. பெண்கள் கையாளும் உவமைகள் தொடர்கள் என்பன தாம் சார்ந்த சமூகத்தின் அனுபவத்திற்கு உட்பட்டவையாக அமைகின்றன.

சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனிப்பட்ட பண்பாடுகள் காணப்படுவதைக் காணலாம். இதனால் ஆண்களது பேச்சு நடைக்கும் பெண்களது பேச்சு நடைக்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆண்களின் பேச்சில் அதிகார, ஆதிக்கம் மிக்க பேச்சு மொழியும் பெண்களின் மொழியில் கீழ்படிதலும் வெளிப்படுவதைக் காணலாம். இப் பெண் போராளிகளின் கவிதைகளில் இதைக் காண முடியவில்லை. தாம் எவருக்கும் அடங்கி, அடிமைப்பட்டுப் போகாத, இலக்கை அடைவதையே நோக்காகக் கொண்ட, தமது சுயத்தை இழக்காத தன்மையை அவதானிக்க முடிகின்றது. இவர்கள் தமது வீரம் செறிந்த செயற்பாடுகளையும் போரியல் வாழ்வின் கோலங்களையும் பல்வேறு புதிய அனுபவங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால்  ஏனைய பெண் கவிஞைகளின் கவிதை மொழியிலிருந்து இக் கவிதைகள் வேறுபட்டவையாக அமைகின்றன.

இத் தொகுப்பில் ஈழத்துப் பெண் போராளிக் கவிஞைகளாக இருபத்தாறு பேர் அடையாளப்படுத்தப் படுகின்றனர். பலராலும் அதிகம் அறியப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி, அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் போன்றோரின் மூன்றிற்கும் மேற்பட்ட கவிதைகளும் காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞனமதி, புரட்சிகா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபிமார்க்கட், தயாமதி, சிரஞ்சீவி, கிருபா போன்றோரின் ஒவ்வொரு கவிதைகளும் உள்ளன.  கவிஞை நகுலாவின் “பெயரிடாத நட்சத்திரம்” என்ற தலைப்பே இத் தொகுப்பிற்குப் பெயராக இடப்பட்டுள்ளது. 

சங்க இலக்கியங்களில் பெண்கள் போர்க்களத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டமை பற்றிய குறிப்புக்கள் இல்லை. யுத்தம் நிறைவுற்ற பின் போரில் புண்பட்ட வீரர்களை, கணவனை காவல் செய்யும் செய்திகளே குறிப்பிட்டுள்ளன. புலியை, யானையை விரட்டிய பெண்களின் வீரமும் போருக்குத் தன் கணவன்,  மகன் என ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்த பெண்களின் வீரமும் விதந்து போற்றப்பட்டுள்ளன. இப் பெண்களின் வீரம் மிக்க உணர்வுகளை ஆண் கவிஞர்கள் பாடியுள்ளனர். இத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் அவ்வாறானவை அல்ல. யுத்தகளத்தில் நேரடியாக பங்கு கொண்ட வீரப் பெண்களின் வல்லமையையும் போரிடும் திறமையையும் வீர உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன.

இத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் பாடு பொருள்களை அதன் முன்னுரை இவ்வாறு கூறுகின்றது.

இப்பெண்கள் “ பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட பல கலாசாரத் தடைகளை மீறி போர்க்களம் காணல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளல், உளவு பார்த்தல், பல்வேறுபட்ட நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுதுபார்த்தல், சிக்கலான விடயங்களைத் தீர ஆராய்தல், முடிவுகளை எடுத்தல், இரவுக் காவல்களிலும் பணியில் ஈடுபடுதல், எல்லைக்காவல், தீவிர உடற்பயிற்சி இரகசியங்களைப் பேணுதல், வரைபட வாசிப்பில் தேர்ச்சி எனப் பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறார்கள்……” (பெயரிடாத நட்சத்திரங்கள் : முன்னுரை)

போரியல் வாழ்வு

போரின் போது ஊர்ந்து செல்லல், எல்லைக்காவலிருப்பு, விழித்திருத்தல், ஆட்டித்தகர்தல், பகைவர்களிடமிருந்து தப்புவதற்கு மரங்களில் மறைதல், பதுங்குகுழிகளில் இருத்தல், குனிந்து குனிந்து ஓடுதல், யுத்தப்பயிற்சிகள், கனத்த கருவிகளைச் சுமத்தல், கருவிகளை இயக்குதல், பழுதுபட்ட கலங்களைத் திருத்துதல், கந்தகப்பை சுமத்தல், முதலான போருடன் தொடர்புடைய யுத்தி முறைகள் இவர்களுடைய கவிதைகளினூடாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

“எத்தனை களங்கள் கண்ட

என் கால்கள்

கனத்த கருவியை

தோளில் சுமந்து

தொலை தூரம் எதிரியை

விரட்டிய கரங்கள்……”

(பெயரிடாத நட்சத்திரங்கள் : அம்புலி, பக்கம் 22)

“கந்தகச் சுமையைக் கட்டியணைத்தபடி

உன் தடம் பட்ட மண்ணெடுத்து

முத்தமிட்டு

இலக்கு நோக்கி தொடர்கிறது

என் பயணமும்…….”

(பெயரிடாத நட்சத்திரங்கள்: கலைமகள் பக்கம் 45)

“முன்னே போனவர் நினைவழுத்த

பரபரக்க அலைகளின் நடுவே

எதிரியைத் தேடி அவள்……

எதிரியின் எறிகணை

இடிபோல் விழுந்தும்

மனம் இடியாதிருந்து

இடியனோடுலவி

சீறும் அலைகளின்

சிநேகிதியானவள்…..”

(பெயரிடாத நட்சத்திரங்கள்- கனிமொழி, பக் 62)

ஊர்ந்து போனகதை

ஊர்கலைத்த எதிரிகளை

உளவறிந்த கதை

அலையலையாய் நாம் புகுந்து

‘ஆட்டி’ அடித்த கதை என

ஆயிரம் கரு எமக்கு

கவிதை எழுத

            (பெயரிடாத நட்சத்திரங்கள்- மலைமகள் பக்-95)

“ஏராளம் எண்ணங்களைத் எழுத

எழுந்து வர முடியவில்லை

எல்லையில் என்

துப்பாக்கி எழுந்து நிற்பதால்

எழுந்து வர என்னால் முடியவில்லை

            (பெயரிடாத நட்சத்திரங்கள்- வானதி பக்-25)

“மழையில் நனைந்து

அடுத்த ஆடை மாற்றாது

பொஸிசனில் நின்றதை

பசி மறந்து தூக்கம் மறந்து

எதிரி எல்லையை மீறுவதெனில்

எம் உடல்கள் மேலாகத்தான் என

உறுதியோடு காவலிருந்ததை கூறுவாயா?

(பெயரிடாத நட்சத்திரங்கள்- வானதி பக்-70

“கண்ணுறக்கம் தவிர்த்த நடுநசி

எல்லை வேலியில்

நெருப்பேற்றுகிறது என் இதயம்

ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான

என் காவலிருப்பு…..”

பெயரிடாத நட்சத்திரங்கள்-அம்புலி பக்- 15

“கூவி வந்த எறிகணைக்காய்க்

குனிந்தோம்

அடுத்த செல் வந்து

அதிருமுன்னே விரைந்தோம்

மீண்டும் கையில்

எடுத்த ஆயுதத்துடன்

நடந்தோம்….”

பெயரிடாத நட்சத்திரங்கள் -  புரட்சிகா பக்-73

இவை யாவும் போராளிப் பெண்களின் போரியல் வாழ்வினை துல்லியமாகப் படம் பிடிக்கின்றன.

பெண்மை சார்ந்த உணர்வுகள்

தாய்மை, குழந்தைப்பேறு, பாலூட்டல், கருவறை, தொப்புள்கொடி, ஈன்றெடுத்தல் போன்ற பெண்மையுடன் தொடர்புடைய விடயங்கள் இவர்களது கவிதைகளில் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

கவிஞை அம்புலியின் கவிதைகளில் இவ் உணர்வுகள் அதிகம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். நான் எப்போதும் மரணிக்கவில்லை, வாழ்க்கை ஓர் இனிய பாடலாகட்டும், தேடியடைவாய் போன்ற கவிதைகளில் இதனைக் காணலாம்.

“ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பில்

எனை மறக்கவும்

ஒரு குழந்தையை மென்மையாகத்

தாலாட்டவும்

என்னால் முடியும்

(பெயரிடாத நட்சத்திரங்கள்-அம்புலி பக்-17)

“சிந்தனையின் வேர்விடலுக்காய்

என்னைப் பண்படுத்துக

அன்புப் பாலையே

எனக்கு முதலில் ஊட்டுங்கள்

வாழ்க்கை எனக்கோர்

இனிய பாடலாகட்டும்……”

(பெயரிடாத நட்சத்திரங்கள்-அம்புலி பக்-21)

 

“தணல் பூத்துக் கிடக்கின்றது

எனதுள்ளம்

துன்பத்துக்கும் துயரத்திற்கும் நடுவில்

உன்னை வாரியணைக்க முடியாத

தாயானேன் நான்…..”

பெயரிடாத நட்சத்திரங்கள்-அம்புலி பக்-25

வாழ்வின் நிச்சயமற்ற தன்மைகளும் எந்த நேரத்திலும் இறப்பு நேரிடலாம் என்ற ஆதங்கமும் அருகிருந்த தோழி இறந்தமையை உணரா அவல நிலையையும் இக் கவிதைகள் பேசுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்று உயிருக்குப் போராடும் நிலையிலும் தாம் வாழவேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டவர்களாகவும் தமது மனோதைரியத்தையும் விடுதலை வேட்கையையும் கைவிடாத வீர உணர்வும் தைரியமும் மிக்கவர்களாக தம்மை இனங்காட்டுவதோடு  தமது சுயத்தையும் நம்பிக்கையையும் இழக்காதவர்களாக இப் பெண் போராளிக் கவிஞைகள் மிளிர்ந்துள்ளனர்.  

                                                  “ஏறுநடையாய் வீறுடன் நடந்தேன்

                       விண்ணை முட்டிடும்

                       வேகம் கொண்டேன்

                       ஒரு நொடிப் பொழுதில்

                       நாடியடங்கி

                       கட்டிலே கதியென்று

                       கலங்கித்தவிக்கின்றேன்

                              ……..சாகாத பிணமாக நானிங்கு நிலையானேன்

                                    ஒரு சின்ன ரவையின் தழுவலால்

                                 சலனமின்றிக் கிடக்கின்றேன்…….”

                                                                     (பெயரிடாத நட்சத்திரங்கள்;: அம்புலி, பக் 23)

எனக்காய் இரங்குமாறும் கண்ணீர் வடிக்குமாறும் யாரையும் நான் கேட்கப் போவதில்லை.

பாவப்பட்ட உயிரென்றெனக்குப் பிச்சையளிக்க முன்வராதீர்கள் வீண் கழிவிரக்கத்தில் என்னைப் புரிந்து கொள்ள முயலாதீர்கள் எனது சுயத்தை அறிக என இப் பெண் கவிஞைகள் பாதிப்புற்ற நிலையிலும் தம் சுயத்தை இழக்காதவர்களாகக் குரல் கொடுக்கிறார்கள்.

ஞானமதியின் சமர்ப்பணம் என்ற கவிதையில் இலக்கை அடைவதற்காக புறப்படுதலும்  அவ்விலக்கு அடையப்படும் பொழுது நான் உயிருடன் இருப்பேனா இல்லையா? அதற்காக தன்னுயிர் அரப்பணமாய் இருக்குமா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

இலக்கை நோக்கிய பயணத்தையும் வாழ்வின் நிச்சயம் அற்ற தன்மையையும் கனிமொழியின் கவிதைகளும் புலப்படுத்துகின்றன. இலக்குகள் மீண்டும் புள்ளியாய் மாறினால் சீறும் அலைகளின் கிரேகிதம் தொடரும் ஆயினும் ஓர் நாள் அதிர்வொன்றோடு கிநேகிதம் முடியும் எனக் கூறப்படுகின்றது.

இறப்பு நிச்சயம் என்பதும் தானிறந்தாலும் எதிர்காலத்தில் ஈழவிடுதலைக்கான தமிழீழம் நிச்சயம் உருவாகும் என்ற கற்பனையும் இப்பெண்களின் கவிதைகளில் இழையோடி இருப்பதைக் காணலாம் “சீறும் துப்பாக்கியின் பின்னால் என்னுடன் சின்னபின்னப்பட்டுப் போகலாம்” எனக் கூறும் வானதி “அர்த்தமுள்ள என் மரணத்தின் பின் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில் நீங்கள் நிச்சயம் உலா வருவீர்கள் என உறுதியாய் கூறுகிறார்.

இப்பெண் போராளிகளின் கவிதைகள் போரினால் ஏற்பட்ட அவலங்களையும் இறப்புகளையும் பதிவு வெய்துள்ளன. ஏ9 வீதி பற்றிய கவிதையில் 2004ல் வீதியின் நிலையையும் அதற்கு முந்திய வீதியின் நிலையையும் ஒப்பிட்டுப் பேசப்படுகின்றது. மண் அணை மதுங்குகுழி செல்மழை இறங்கு சிதைந்த கட்டடக் குவியலின் நடுவே அழிந்து போன ஊரின் வாழ்வு சுட்டிக்காட்டப்படுவதுடன் இவ்வீதிக்கான விழுப்புண்பட்டு பாண்டுபோன தோழிகள் பற்றியும் நினைவு கூறப்படுகின்றது.

காந்தாவின் என் மகனுக்காய் என்வால்கலை என்ற கவிதையில் யுத்தத்தால் பல மகளை பறிகொடுத்த தாயின் அவலம் எடுத்துக் காட்டப்படுகின்றது.

இப் போராளிப் பெண் கவிஞைகள் ஆணாதிக்கம், அநீதி, அடக்குமுறை, பெண்கள் மீதான  பாலியல் வன் புணர்வு போன்றவற்றுக்கு எதிராகவும் சிறுவர் துஸ்பிரயோகம் அரச ஒடுக்குமுறை, இராணுவத்தின் கெடுபிடிகள் போன்றவற்றக்கு  எதிராகவும் குரல் கொடுத்துள்ளதோடு ஐ.நா சபையையும் விமர்சித்துள்ளனர்.

ஆதிலட்சுமியின் “அந்தத் தீபாவளியும் என் அழகிய கிராமமும்” என்ற கவிதை இந்திய இராணுவம் பாடசாலைகளில் முகாமிட்டுக் கொண்டு பாடசாலைச் சொத்துக்களை அழித்தமையைக் கூறுகின்றது. “விழி சொரியும் நீர் துடைத்து”  என்ற கவிதை இராணுவத்தினரால் அப்பாவிப் பெண்களும் மாணவிகளும் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது.கிருசாந்தி, ரஞ்சனி, ராகினிபோன்ற பெண்களுக்கு நிகழ்ந்த அவலங்களைக் குறிப்பிடுவதோடு “அரச பயங்கர வாதத்தின் அடிமைகளல்ல நாம்” எனக் குறிப்பிடுகின்றது.

ஆணாதிக்கப் புயலால் அடுப்படியில் அகதியாகி தீயோடு மௌனயுத்தம் நடத்துபவளே புறப்பட்டுவா புதுயுகம் படைப்போம் நாம் துக்கிய துப்பாக்கியின் பின்னால் என் இதயம்நேசிக்கும் தேசவிடுதலை எமக்க எட்டும் போது பெண்ணடிமைக்கு சமாதி கட்டப்படும் என வானதியின் கவிதைகள் மொழிகின்றன.

மலைமகளின் அம்மா என்ற கவிதை தன்தாய் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுவதைக் கண்டு கொதித்தெழும் மகளின் குரலாக ஒலிக்கின்றது.

                                    

                                                         “ஓருவேளை அவள்

                                                         ஒடுக்கப்பபட்ட ஒவ்வொரு முறையும்

                     அடக்கிவைத்த ஆத்திரந்தான்

                                                       பெரும் பொறியாய் எழுகிறதோ….”

                                                                      (பெயரிடாத நட்சத்திரங்கள்;: மலைமகள், பக் 89)

மலைமகளின் அவள் ஒன்றுக்கும் அசையாள் என்ற கவிதை எல்லைக் காவலில் இருக்கும் பெண் வெயிலோ மழையோ எது வந்த பேர்தும் அவள் அசையாது நிற்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறாக இப் பெண் போராளிகளின் கவிதைகள் வித்தியாசமான முற்றிலும் புதிய அனுபவங்களை பாடற் பொருளாகக் கெண்டுள்ளன.

இப் பெண் கவிஞைகள் இயற்கையை அதன் அழகை நோக்கிய விதம் ஏனைய கவிஞர்களின் நோக்கிலிருந்து வேறுபட்டவையாக அமைகின்றன. பனை மரம், கடல், மழை போன்ற இயற்கையின் வர்ணனைகள் போரியல் வாழ்வுடன் தொடர்புபடுத்தி நோக்கப்படுகிறது. பனை மரக் குற்றிகள்பதுங்கு குழிகளில்  தமது உயிரைப் பாதுகாத்தமையும் பகைவரின் இலக்கிலிருந்து தப்பிக்க உதவியமையையும் வேட்டுக்களைத் தாங்கி உயிர் காத்தமையையும்கூறுவதோடு தமது செய்தியை அடுத்து வரும் சந்ததிக்கும் கூறும்படி வேண்டுவதும் நோக்கத்தக்கது.  மழை சுகமானதுதான் அது பங்கருக்குள் புகுந்து தரும் கஸ்டங்களால் அதைப் பிடிப்பதில்லை அது ரசிக்கத்தக்கதல்ல என இப்பெண் கவிஞைகள் குறிப்பிடுகின்றனர்.

இப் பெண்போராளிகள் தம்கவிதைகளில் பயன்படுத்திய சொற்கள், படிமங்கள்,  தொடர்களை நோக்கினால் அவை பெரும்பாலும் அவர்களது துணிச்சல் வாய்ந்த மனங்களையும் அவர்களது நம்பிக்கை , உறுதிப்பாடு, போரியல் வாழ்வு என்பவற்றையும் வெளிப்படுத்துபவையாக அமைகின்றன. குருதிக்குழாய்களில் நெருப்பை நிரப்பியுள்ளேன், ரணமாகும் உயிர், முற்றுகைக்குள் சிக்கிமூச்சுத்திணறிய தமிழ், சூடாக்கப்பட்ட என் சுவாசப்பை, நெருப்பேந்தும் இதயம், இடுகாட்டிலிருந்து இரவல் வாங்கிய அமைதி, மன இடுக்குகள். ஆட்டி தகர்த்தல், கவர் ஆதல். பொசிசனில் நிற்றல், அக்கினிச்சருகு, போன்றவை பிற பெண்கவிஞைகளினால் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத புதிய சொற்கள் எனலாம் இச் சொற்கள், படிமங்களுக்குள் அவர்களது வீரமும் வலிமையும் எடுத்துக்காட்டப்படுகின்றது.

உசாத்துணை நூல்கள்

பெயரிடாத நட்சத்திரங்கள், ஈழப் பெண் போராளிகளின் கவிதைகள், ஊடறு வெளியீடு,  இரண்டாம் பதிப்பு.

துன்னையூரான், பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா, http//www.yarj/com,April 2012.

அபராஜிதன், ஈழப் போராட்டத்தில் பெண்புலிகள் ,http//www.yarj/com,November 15, 2011.