ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“உளவியல் பார்வையில் நாலுகெட்டு புதினம்”

சு.பால்மோகன், பதிவு எண்:18123274021001, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் 09 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: 

சு.பால்மோகன், பதிவு எண்:18123274021001, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்

நெறியாளர்:

முனைவர்.இரா.திலகா, தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தாகல்லூரி, அகஸ்தீஸ்வரம்.

 

Abstract:

     Naalukattu novel by M.D.Vasudevan Nair is all about the life story of Appunni. Appunni, in his early age lost his father and was grown up with the sole support of his mother Parukutti. The novel ends with owning the same Naalukattu from which he was drove out like a street dog. In this article, the subconscious thoughts of Appunni his inferiority complex, his hard work towards achieving the goal are to be analysed in psychological aspect.

ஆய்வு சுருக்கம்:

      நாலுகெட்டு புதினம் எம்.டி.வாசுதேவன் நாயரின் படைப்பாகும். அப்புன்னி என்ற சிறுவன் சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து விடுகிறான். தன் தாய் பாருக்குட்டியால் வளர்க்கப்பட்டு உயர்ந்த நிலையை அடைகிறான். தான் எந்த வீட்டிலிருந்து ஒரு தெரு நாயைப் போல் விரட்டப்பட்டானோ அதே வீட்டிற்கு உரிமையாளர் ஆகிறான். இந்த ஆய்வு கட்டுரையானது அப்புன்னியின் சிறுவயது வாழ்க்கை, அவனது உள்ளார்ந்த சிந்தனைகள், தனது வறுமையால் அவனுக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, இலக்கை அடைய அவன் மேற்கொண்ட உழைப்பு ஆகியவற்றை உளவியல் அடிப்படையில் ஆராயும் விதத்தில் இவ்வாய்வு அமைந்துள்ளது.

Key Words:

      Naalukattu, Appunni, Hard work, Psychological aspect, Parukutti

முக்கிய வார்த்தைகள்:

      நாலுகெட்டு, அப்புன்னி, உளவியல், பாரூக்குட்டி,  கடினஉழைப்பு, ஆர்வம்

முன்னுரை:

      எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களால் மலையாளத்தில் எழுதப்பெற்ற நாவல் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தமிழில் குளச்சல் யுசஃப் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலில் அப்புன்னி என்ற கதாப்பாத்திரத்தின் அக,புற நடத்தைகள் தான் நாவலின் கதையோட்டமாக அமைந்துள்ளது. நாலு கெட்டு புதினத்தின் அப்புன்னி என்ற மையப் பாத்திரம் கதையின் உயிர் நாடியாக உள்ளது. நாலு கெட்டு புதினத்தின் கதையையும் கதை மாந்தர்களையும் உளவியல் நோக்கில் ஆராய்வதே ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

உளவியல் விளக்கம்:

உளவியல் என்பது ஆங்கிலத்தில் சைக்காலஜி (Psychology) என்று கூறுவார்கள். இச்சொல் கிரேக்க மொழிச் சொற்களான சைக்கி (Psyche) என்னும் உயிரைக் குறிக்கும் சொல்லிலிருந்தும் லோகஸ் (Logos) என்னும் அறிவியலைக் குறிக்கும் சொல்லிலிருந்தும் தோன்றியதாகும். இது உள்ளம் பற்றிய அறிவியல் என்பதால் உளவியல் என்றனர் “உளவியலை மனவியல் என்றும் அழைப்பர். காரணம் மனிதனின் மனநிலை பற்றிய கல்வி என்பதால் இப்பிரிவினை மனவியல் என்;று அழைத்தனர்” (பியுலா ரெய்னீஸ், உளவியல் கற்றலும் மனித மேம்பாடும் ப.1-1)

      பொதுவாக உளவியல் என்பது விரிந்த பரப்பினை உடையது உடலியக்கச் செயல்களான நடத்தல், நீந்துதல் போன்ற செயல்களும் உள்ள செயல்களான சிந்தித்தல் கற்பனை, பொருள் காணுதல், மனவெழுச்சி, கோபம், மகிழ்ச்சி போன்ற பல்வேறு உள்ளச் செயல்களும் அடங்கும். மனிதனின் புறச்செயல்கள் எவ்வாறு அகச்செயலுடன் தொடர்பு கொண்டுள்ளது என்றும் அண்மை நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை விளக்குவதே உளவியல் ஆகும், “மனிதனுடைய நடத்தையை நிர்ணயிப்பதில் அவனுடைய அடிமனதின் ஆழத்தில் அமைகின்ற நனவிலிமனதின் முக்கியத்துவத்தை இவ்வுளப்பகுப்புக் கோட்பாடு பெரிதும் வலியுறுத்துகின்றது” (மேலது ப.1-9) ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வில் உள்ளம் என்பது அடுக்கு நிலையில் இருப்பதாக வருணிக்கப்படுகிறது. மனித மனதை சிக்மண்ட்ஃபிராய்டு மூன்று நிலைகளில் பிரிக்கிறார். அவை, 1.நனவுடைமனம் 2.உள்மனம் அல்லது நனவிலிமனம் 3.அடிமனம் என்று மனித மனதை மூன்று நிலைகளில் வரையறுத்து கூறுகிறார்.

நாலு கெட்டு புதினத்தில் உளவியல்:

       நாலு கெட்டு புதினத்தில் கதாபாத்திரங்களின் தன்மையிலும், கதையின் போக்கிலும் உளவியல் கூறுகள் அதிக அளவில் அடங்கியுள்ளன. நாலு கெட்டு புதினத்தில் அப்புன்னியின் கதாபாத்திரம் புதினம் முழுவதும் அரங்கேறியுள்ளது. அவன் பிறந்தது முதல் அவன் படித்து வேலைக்கு போனது வரை புதினம் முழுவதும் பயணிக்கிறான். இப்புதினத்தில் வரும் அப்புன்னியின் செயல்பாடுகளை உளவியல் நோக்கில் ஆராய்வோம்.

அப்புன்னியின் கோபம்:

      குழந்தைகளிடம் நனவு மனத்தின் தாக்கத்தால் கோபம், விரக்தி, எரிச்சல் போன்ற மனவெழுச்சி ஏற்படுகிறது. நாலு கெட்டு புதினத்தில் அப்புன்னியின் அப்பா கோத்துண்ணி நாயரை செய்தாலிக்குட்டி சாப்பாட்டில் வி~ம் வைத்து கொன்ற செய்தியை முத்தாச்சி பாட்டி சொல்ல அறிகிறான். அன்று முதல் அவனுடைய மனதில் செய்தாலிக்குட்டியின் மீது பகையை வளர்க்கிறான். அதனால பிள்ளைப் பருவத்திலே சதா காலமும் செய்தாலிக் குட்டியை பழிவாங்க துடிக்கிறான்.

      “ஒரு முறையாவது செய்தாலிக்குட்டியை பார்க்காமல் இருக்க முடியாது. அதற்குப் பிறகு தான் பழிவாங்கல் செய்தாலிக்குட்டியின் கழுத்து கைகளுக்கிடையில் நெறிபடும் போது சொல்வான் நீ தானே, நீ தானே….. என்….“ (நா.கெ.ப-1)

      பழிவாங்குவதைப் பற்றி நினைக்கும் போது அவனுடைய கண்களில் நீர் துளிக்கும், அது போல செய்தாலிக்குட்டியை முதன் முதலாக பார்க்கும் போது அப்புன்;னியின் கோபம் வரலாற்று நினைவுகளோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது,

      “கோயில் முற்றத்தில் கதகளி நடந்த அன்று அதிகாலையில் கண் விழித்த போது கண்ட காட்சிகள் நினைவுக்கு வந்தது. துச்சாதனனின் மார்பிலேறி அமர்ந்த பீமன் வயிற்றைக் கிழித்துக் குடலை வெளியே எடுக்கிறான். அது போல் செய்தாலிடிக்குட்டியின் மார்பில்” (நா.கெ.ப-15) அந்த அளவிற்கு பழிவாங்கும் எண்ணம் சிறு வயதில் அப்புன்னியின் மனதில் தோன்றியது.

      “மனதில் தோன்றும் பகையுணர்வு தன்னம்பிக்கையின்மை, பொறுப்பின்மை, பாலுணர்வு, பொறுப்பின்மை போன்றவற்றிற்கு அடித்தளமாக அமைகிறது.” (அ.மீனாட்சி சுந்தரம் கற்றல் மற்றும் மனவளர்ச்சி உளவியல் ப-256)

அப்புன்னியின் பயம்

      சிறு குழந்தைகளின் பயம் தேவையற்ற மனவெழுச்சியை உண்டு பண்ணுகிறது. ஒருவன் தேவையற்ற பயத்தினால் வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அப்புன்னியின் அம்மா (பாருக்குட்டி) அந்தி மாலை நேரத்தில் கடைக்கு போக சொல்கிறாள். அப்புன்னிக்கு மாலை நேரத்தில் கடைக்கு செல்வதற்கு பயம் ஆனால் அம்மாவிடம் கூறினால் தனக்கு கவுரவம் குறைவு என்று எண்ணி கடைக்கு போக சம்மதிக்கிறான். ஆனால் கடைக்கு போகும் போது தாழைக்குள் பாம்புகள் இருக்கும் என்று எண்ணி தன்னை அறியாமல் ஒரு நிமிடம் தயங்கி நின்றான். பயத்தில் அவன் துள்ளி ஓடினான். கடைக்கு சென்ற பிறகும் அவளுடைய நினைவுகள் எல்லாம் தாழைக்குள்ளே இருக்கும் பாம்பையும்  பற்றி தான். நேரம் இருட்ட இருட்ட உச்சக்கட்ட பயத்திற்கு சென்றான்.

      “தெய்வமே நேரம் இருட்டிடுச்சே கருக்கல் நேரத்தில் தாழைப்புதர்களில் நல்ல பாம்புகள் வந்தடையும்”(நா.கெ ப-11)

என்று மனதிற்குள் பயந்து உழன்றுக் கொண்டிருந்தான். அப்புன்னிக்குள் பயத்தினால் தேவையில்லாத மனவெழுச்சி தோன்றியது. அந்த மனவெழுச்சினால் அவன் அழுதுவிட்டான்.

“எதுவும் நடந்து விடவில்லை தான் இருந்தாலும் அப்புன்னிக்கு அழுகையாக வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அழுது விடுவோமோ என்று பயந்தான்”(மேலது ப -13)

அப்புன்னியின் ஆர்வம்

      ஆர்வம் என்பது ஒரு பொருளின் மேல் தனி மனிதனுக்கு உள்ள ஆர்வத்தைக் குறிக்கின்றது. ஆர்தர். ஜே.ஜோன்ஸ் என்பவர் “ஆர்வம் என்பது விருப்ப உணர்வினை, அதாவது நிஜத்தில் அல்லது கற்பனையில் ஒரு குறிப்பிட்ட பொருள் ஒரு சூழ்நிலையை நடந்த செயலோடு தொடர்புடையது” (அ.மீனாட்சி சுந்தரம் கற்றல் மற்றும் மனத வளர்ச்சி உளவியல் ப-275) என்று கூறியுள்ளார். மேலும் ஸ்ட்ராஸ் என்ற உளவியல் அறிஞர் “பல வகையான Àண்டலின் பொருட்கள் மற்றும் செயல்களிள் ஒட்டு மொத்த விருப்பு வெறுப்;பினைக் குறிப்பதாகும்” (மேலது ப – 275) என்று வரையறுத்துள்ளார்.

      முத்தாச்சி பாட்டி அப்புன்னியிடம் வடக்கு பாட்டு இல்லத்தில் நடைபெறும் சர்ப்ப துள்ளல் விழாவைப்பற்றி விரிவாக கூறினாள். அதைக் கேள்விப்பட்ட அப்புன்னிக்கு அங்கு போக வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.  அந்த ஆர்வ மிகுதியால் முத்தாச்சியிடம் தன்னை அழைத்து செல்ல கூறினான் அவள் மறுத்ததும் தன் தாயிடம் சென்று கேட்கத் துணிந்தான். அம்மா அங்கு போக மறுத்ததும் தன் ஆர்வ மிகுதியால் வீம்பு பிடித்தான் அதோடு அழுது அடம்பிடித்தான். குழந்தைகள் பிள்ளைப் பருவத்தில் தன் ஆசை நிறைவேறுவதற்காக அழுது அடம்பிடிப்;பார்கள். அது போல அப்புன்னியும் அடம்பிடித்தான்.

“அதுக்கெல்லாம் உனக்குக் கொடுப்பினை இல்ல உங்கப்பாவும் அம்மாவும் அதுக்கான புண்ணியம் செய்யல அப்புன்னியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். என் செல்லம் எதுக்காக அங்க போகணும்கிறே கட்டுப்பாட்டை இழந்துவிட்ட அப்புனனி வாய்விட்டழுதான். தன் மகனின் அழுகையை துடைத்து அங்குள்ள எல்லாரையும் போல நீயும் உரிமைப்பட்டவன் தாம்பா போயிட்டு வா”(நா.கெ.ப-38)

பாருக்குட்டியின் மனக்குழப்பம்

      பாருக்குட்டி தன் மகன் அப்புன்னி மீது தன் உயிரையே வைத்திருந்தாள். தன் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் வடக்குபாட்டு இல்லத்திற்கு போகக் கூடாது என்று தீர்மானத்தில் இருந்தாள். ஆனால் தன் மகனுக்காக தன் நிலையில் இருந்து விட்டுக்கொடுத்து அவனுக்கு போய்வர அனுமதி அளித்தாள். ஆனாலும் தன் மனதிற்குள் புலம்பினாள். அந்த புலம்பல் தன்னை அறியாமல் சங்கரன் நாயரிடம் கூறினாள்.

      நாளைக்குக் குடும்பத்தில் துள்ளலுக்குப் போகணும்னு உண்ணாவிரதமிருக்கான். சொன்னா கேட்க மாட்டேங்கறா என்ன பண்றதுன்னே தெரியலை

      “தெய்வமே என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலை--- இப்படி அடம் பிடிச்சா என்ன பண்ண முடியும்! எனக்கோ சொல்றதுக்கும் ஆளில்லை கேட்குறதுக்கும் ஆளில்லை……“(நா.கெ.ப-43)

அப்புன்னியின் உள்ளுணர்ச்சி

      பொதுவாக குழந்தைகளிடம் உள்ளுணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். இப்பருவத்தில் தான் பயம், தாழ்வு மனப்பான்மை,உணர்ச்சிகளை மனதிற்குள் அடக்கி வைத்துக் கொள்ளுதல், கோபம் போன்ற குணங்கள் பிள்ளைகளிடம் நிரம்பி இருக்கும். நாலு கெட்டு புதினத்தில் அப்புன்னி தன் தாயிடம் அடம் பிடித்து துள்ளல் பார்க்க சென்றான். அங்கு பெரிய மாமாவால் வெளியே தள்ளப்பட்டான். அந்த நிகழ்வு அப்புன்னியின் மனதில் ஒரு வித பயத்தை உண்டு பண்ணியது.   

      “g;/é கண்ட சண்டிப் பண்டாரங்களெல்லாம் வந்தேர்ற இடமில்லை என் குடும்பம் இந்தப் பையனுக்கு யாருடி கஞ்சி வெச்சி விளம்பியது இப்போதே கொன்றுவிடுவான் போல் தோன்றியது… சாகப்போகிறோம் … அப்புன்;னியின் பிடரியில் பெரிய பெரிய மாமாவின் கை பதிந்தது. இறங்குடா வெளியே….. இந்த ஊருக்குள்ளே இனி உன்னைப் பாத்தேன்னா, அடிச்சுக் காலை ஒடிச்சுடுவேன் போடா”(நா.கெ.78)

      அப்புன்னி உச்சக்கட்ட பயத்தில் வீட்டை விட்டு ஓடினான். வடக்குபாட்டு இல்லத்தில் இருந்து சொறிநாயைப் போல் விரட்டியடிக்கப்பட்டதை நினைத்து கண்ணீர் விட்டு அழுதான். அதோடு எல்லோரும் பார்த்தார்கள் அவமானப்பட்டுவிட்டேன் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

      “பெண்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளும் பார்த்தார்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி….. அவமானம்…… பணமில்லை என்றாலும் அப்புன்னியின் அப்பா ஆண்மகன் எதிரில் நின்று முகம் கறுக்க கூட யாருக்கும் தைரியம் வராது.. வீரன் கோத்துண்ணி நாயரின் மகன் அவன் இருந்தும் விரட்டிய போது நாயைப் போல் ஓடிவிட்டான்” (மேலது.ப-79)

      அந்த நிகழ்வு தனக்குத்தானே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியதால் வாழத் தகுதியற்றவன் போல உணர்ந்தான், தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தான்.

      “செத்துப் போய் விட்டால் பிறகு அவமானமில்லை யாரும் மிரட்ட மாட்டார்கள். திட்டமாட்டார்கள் வானத்துக்கப்பாலுள்ள சொர்க்கலோகத்தை நோக்கி தெய்வம் கொண்டு செல்லும்……. சொர்க்கத்தில் பழைய நாலுகெட்டு வீடும், பெரியமாமாவும் இருக்க மாட்டார்கள்…”(மேலது ப-80) அப்புன்னி அவமானத்தின் உச்சத்திற்கு சென்று விட்டான் என்பதை அறியமுடிகிறது.

அப்புன்னியின் பொறாமை குணம்

      பொதுவாக குழந்தைகளிடம் பிள்ளைப் பருவத்தில் உள் உணர்வுகள் நிறைந்து இருக்கும் அதன் பயனாக அவர்களிடம் கற்பனைகள்,  கூட்டுணர்வு  பொறாமை, தன்னுனர்வு, கவனம் ஆகிய பண்புகள் நிறைந்து காணப்படுவார்கள். அது போல நாலு கெட்டு புதினத்தில் அப்புன்னியும் பிள்ளைப் பருவத்தில் அடுத்தவர்கள் மீது பொறாமை கொள்கிறான். அப்புன்னி தினமும் காலையிலும் மாலையிலும் வடக்குப்பாட்டு இல்லத்தின் வழியாக பள்ளிக்கு செல்வான். பள்ளியில் அவனோடு வடக்குப்பாட்டு இல்லத்தை சார்ந்த பாஸ்கரனும் கிரு~;ணக்குட்டியும் படிக்கிறார்கள். அவர்கள் இருவரும் மாட்டு வண்டியில் பள்ளிக்கு வருவதை பிள்ளை பருவத்திற்குரிய குணமான பொறாமையோடு பள்ளி சக மாணவர்கள் பார்ப்பார்கள். அதுபோலதான் அப்புன்னியும் அவர்களைப் பார்த்து பொறாமைபடுகிறான்.

      “ஏதோ ஒரு மாப்பிள்ளையின் வண்டியாம், மாதாமாதம் வாடகை கொடுக்க வேண்டும். அவர்கள் வருவதையும் போவதையும் அப்புன்னி பொறாமையுடன் பார்ப்பான். சில நாட்களிலே புரிந்து விட்டது, வகுப்பில் படிக்கும் பலருக்கும் அவர்கள் மீது பொறாமை தான் என்று, பள்ளிக் கூடத்துக்கு நடக்காமல் வருவது அவர்கள் இரண்டு நபர் மட்டும் தான்”(நா.கெ.ப-101)

      பள்ளியில் அப்புன்னியும் பாஸ்கரனும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள் அப்புன்னி பாச மிகுதியால் தானும் வடக்குப்பாட்டு இல்லத்தில் உள்ளவன் தான் என்று எல்லோரிடமும் தன்னுடைய உறவுமுறைகளைப் பற்றி பெருமையாக கூறினான். ஆனால் அதை அறிந்த பாஸ்கரன் கேலியாக சிரித்தான். துள்ளளுக்கு அவன் வந்த போது நடந்த வி~யத்தை வகுப்பு முழுவதும் சொல்லி விட்டான் அப்புன்னி மனவெழுச்சியில் அழுது விட்டான்.

      “எங்க வீட்டுலுள்ளவனா? போன வரும் போன வரும் துள்ளல் பார்க்க வந்த போது என்ன நடந்துச்சுன்னு அவன் கிட்டயே கேட்டுக்க”

      “என்ன நடந்தது என்று துளைத்துத் துளைத்துக் கேட்டப் போது அப்புன்னி அழுதுவிட்டான்”

      எங்க வீட்டுப் படியை அவன் மிதிக்க மாட்டான் பெரிய மாமா விரட்டி அவன் ஓடுன பாதையில் இனி புல்லு கூட முளைக்காது”  (மேலது ப – 104)

என்று சக மாணவர்களிடம் பாஸ்கரன் என்னி நகையாடினான். ஒரு நாள் வகுப்பறையில் துள்ளல் விளையாடுவதற்காக எல்லா மாணவர்களும் 2 ரூபாய் வசூலித்தார்கள். அப்புன்னியால் கொடுக்க முடியவில்லை அதனால் மதியம் வீட்டிற்கு சென்றுவிட்டான். போகும் வழியில் மாளுவையும் அம்மிணியையும் சந்தித்தான் மாளுவிடம் வெறுப்பாக பேசுகிறான். அம்மிணியை பார்த்தவுடன்  பேச்சு இல்லாமல் நிற்கிறான். அவனுடைய மனத்தில் ஒரு வித உணர்வு தோன்றியது.

“அவன் வியப்புடன் பார்ப்பதைக் கண்ட அம்மினி கேட்டாள் என்ன அப்படி பாக்குற என்னைத் தெரியலையா”(மேலது ப.-106) என்று அம்மினி கேட்ட பொழுதில் இருவரின் மனதிலும் ஒரு விதமான உணர்வுகள் தாளம் போட்டன என்பது புலப்படுகிறது. அன்று பள்ளியில் உள்ள கோபத்தை தன் தாயிடம் காட்டினான். புத்தகக் கட்டையை ஒரு மூளையில் வேகமாக எறிந்தான். தன் தாயிடம் கோபமாக கஞ்சியிருக்கா என்று சத்தமாக கத்தினான். அது போன்ற ஒரு மன நிலையில் அப்புன்னி ஒரு நாளும் இருந்ததில்லை என்பது கீழ்க்காணும் கூற்று மூலம் அறியமுடிகிறது.

      “அவனுடைய முகமாற்றம் அம்மாவுக்கு நெருடலாக இருந்தது முன்பு ஒரு போதும் இப்படி முகம் கறுத்து அவன் பேசியதில்லை” (மேலது.ப-107)

சுயநலம்:

      சுயநலம் என்பது பிறர்நலத்தை பற்றி எண்ணிப்பார்க்காமல் தன்னுடைய நலமே முக்கியம் என்ற நோக்கில் தனக்கு சாதகமாக எல்லாச் செயல்களையும் செய்வது சுயநலம் ஆகும். நாலு கட்டு புதினத்தில் பெரிய மாமா அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் தனக்காக மட்டும் வாழ்கிறார் அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் தானே வைத்துக் கொண்டு தன்க்குடும்பத்திற்கு செலவிடுகிறார். பெரியமாமா தன் மகளுக்காக பணம் சேமித்து வைக்கிறார். அதோடு அந்த வீட்டில் மாளுவும்  அவளுடைய அப்பாவும் தங்கியிருப்பது பிடிக்காமல் சாடையாக திட்டுவார்கள், மாளு அங்கே தங்கியிருப்பது அத்தைக்கு பிடிக்கவில்லை சித்தப்பாவையும் பிடிக்காது கால் காசுக்கு வழியில்லாமல் குடும்பச் சொத்தை தின்று தீர்க்கவென்று வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று சாடையக அத்தை திட்டுவாள் மேலும் பெரியமாமா தன் மகளுக்கு என்று தனியாக திருமணத்திற்காக பொருள் சேர்த்தார். ஆனால் அதே வயதில் உள்ள மாளுவிற்கு உடுத்துக்க நல்ல உடையும் நல்ல சாப்பாடு இல்லாத ஒரு வேறுபாடான நிலையை இந்நாவலில் அறியமுடிகிறது.

      “எனக்கு ஒத்தைக்கொரு மகதானே! அவளுக்குன்னு ஒருத்தன் வரும் போது தனியாக ஒரு இடம் வேண்டாமா! தங்குவின் வரவிருக்கும் சம்பந்தக்காரனுகாக அந்த அறை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது” (ப-114)

கனவு

      ஒடுக்கப்பட்ட இச்சைகளை கற்பனை மூலம் வெளிப்படுத்துவது கற்பனையில் இருந்து விடுபட்டு யதார்த்த வாழ்வில் தனி ஆற்றலை ஒருங்கிணைந்த கற்பனையில் கண்டதை அடைய முயற்சித்தல்” (.பியூலா ரெய்னீஸ்,  உளவியல் கற்றவும், மனித மேம்பாடும் 3-21) நம் மனதில் உள்ள கற்பனை, ஆசை அல்லது பயம் போன்ற நிகழ்வுகள் மனித வாழ்வில் கனவாக வரும் கனவும் உளவியல் சார்ந்த உட்கூறாக தான் இன்றும் கையாளப்படுகிறது. அந்த வகையில் நாலுகட்டு புதினத்திலும் கனவு என்ற உத்தி கையாளப்படுகிறது. நான்கைந்து நாட்களாக கடுமையான மழை மக்கள் எல்லாரும் பயந்தார்கள் அனைவரும் அவர்களின் பாதுகாப்பிற்காக மேட்டான பகுதியை நோக்கி சென்றனர் வீடுகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாரூக்குட்டியின் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் வீட்டை விட்டு கிளம்பினார்கள். பாரூவையும் கூப்பிட்டார்கள். ஆனால் பாரூ போகாமல் மழையின் அளவைப் பார்த்தப்படி உயிரோடு இருந்தால் பார்ப்போம் என்று கூறி ஒருவித பயத்துடன் வீட்டிற்குள்ளே படுத்துக்கொண்டாள். அந்தநேரம் வந்த கனவில் பயந்து திடிரென விழித்துக்கொண்டாள் என்பதை இக்கூற்று மூலம் அறியலாம்.

      “ஊர் முழுக்க வெள்ளத்தில் மூழ்கியது அடித்துச் செல்லும் ஒரு மரத்தடியைப் பற்றிப் பிடித்தப்படி அமர்ந்திருந்தாள் பாரூக்குட்டி பிடியை விட்டால் அவ்வளவுதான்…… இரு கைகளும் விரல்களும் மரத்துப் போயிருந்தன………. ஒரு நீர்ச்சுழியில் சிக்கிய மரம் வேகமாகத் திரும்பவும் கைப்பிடி விடுபட்டது ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருந்த பாரூக்குட்டி அய்யோ……. திடுக்கிட்டு விழித்தாள் அப்போது தான் புரிந்தது தான் கண்டது கனவு”  (நா.கெ. ப-166)

வெகுமதிகள்:

      வகுப்பறையில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு வெகுமதிகள் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சி அதிகமாகும் அவர்களைப் பார்த்து பிற மாணவர்களும் அதைப் போல வெகுமதி வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதனால் அவர்களுடைய கற்றல் அதிகரிக்கும் “பரிசுகள் ஊக்குவித்தலின் உடன்பாட்டுக் கூறினை வலியுறுத்திக் மாணவர்களிடம் மனநிறைவையும் மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்ற அக ஊக்கியாகச் செயல்படுகின்றன” (திருமதி.பியூலா ரெய்னீஸ் ப-5-8) நாலுகெட்டு புதினத்தில் அப்புன்னி வகுப்பறையில் நன்றாக படிக்கும் மாணவன் அது மட்டும் இல்லாமல் வகுப்பறையில் நடக்கும் உதவித்தொகைக்கான தேர்வில் முதல் மாணவனாக தேர்வாகிறான். அதற்காக தலைமையாசிரியரிடம் பரிசும் பெறுகிறான். “பரிசு பொருட்கள் தருதல், பாராட்டுகள், மதிப்பெண்கள் வழங்குதல், தகுதிச் சான்றிதழ் வழங்குதல் போன்ற ஊக்கிகளை வகுப்பறையில் செயல்படுத்தலாம்” (பியூலா ரெய்னீஸ் ப -5-8)

      “அவனால் நம்பவே முடியவில்லை அதை வாங்கும் போது கை நடுங்கியது. நாற்பத்தேழு ரூபாய் பதினைந்தணாவுடன் தலைமையாசிரியரின் அறைக்குள்ளிருந்து வெளியே வரும் போது தான் பெரிய மனிதனாகி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது” (நா.கெ.ப – 174)

      பொதுவாக மாணவர்களுக்கு பரிசளிப்பு மனதில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன அது மட்டுமில்லாமல் ஆக்கத்திறனையும் அதிகரிக்க வழிவகைச் செய்கின்றன. அப்புன்னியும் ஆண்டு இறுதித் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறான். அதற்கான பாராட்டு சான்றிதழ்களை பெறும் போது அவன் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறான்.

      “விருது வழங்கும் நிகழ்வை எதிர்பார்த்திருந்தான் ஒலி பெருக்கியில் தனது பெயரைச் சொன்ன போது அவன் மெய்மறந்துவிட்டான். அப்புன்னி உலகம் முழுவதும் எதிரொலிப்பது போல் தோன்றியது. ஆட்களினூடே நடந்து சென்று விருதினைப் பெற்றுக்கொண்டான்” (மே.ப.181)

ஆய்வு முடிவுரை

      நாலுகெட்டு புதினத்தில் அப்புன்னி பிறப்பு முதல் தன்னுடைய வாழ்வின் அடையாளத்தை அடையும் வரை அவனுடைய வாழ்வில் அடையும் போராட்டங்களையும் அதனால் அவன் படும் துயரங்களையும் அதிலிருந்து அவனுடைய தன்னம்பிக்கை மூலம் வாழ்வின் இலட்சியத்தை அடைதல் வரை புதினம் முழுவதையும் உளவியல் தன்மையில் ஆராயப்பட்டுள்ளது என்பது இவ்ஆய்வுக்கட்டுரை மூலம் உறுதியாகிறது.

துணைநூற்பட்டியல்:

1.     நாலுகெட்டு              -     எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில் - குளச்சல் யுசஃப் 2018, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் நாகர்கோவில்

2.கற்றல் மற்றும் மனித வளர்ச்சி           -     பேராசிரியர் முனைவர்.

உளவியல்                             அ.மீனாட்சிசுந்தரம்,  

2009 காவ்யமலை பள்ளிஷர்ஸ்

3.உளவியல் கற்றலும் மனித              திருமதி.பியுலா ரெய்னிஸ்

மேம்பாடும்                           2013,ஸ்ரீகிருஷ்ணாபள்ளிகேஷன்ஸ்

4.ஆளுமை வளர்ச்சி                    -     முனைவர். இரா.ச.அகிர்தா

பஸ்மத் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிர லிட் சென்னை.