ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் தூது( Emissary or Messenger in Kambaramayan)

முனைவர்.க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,  மீனம்பாக்கம், சென்னை. 09 Feb 2022 Read Full PDF

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,  மீனம்பாக்கம், சென்னை.

Abstract:

The one who extends unflinching support to initiate the conversation, sharing of views and other communiqués between any two individual is termed as an Emissary or a Messenger. In the Past decades there has been a practice of sending these Messengers amongst the Lovers. This kind of Legacy was also in vogue between the Kings during ancient days and this concept has also been quoted  in the Literature of Tholkaapiyam. As per the Great Tamil Saint Thiruvalluvar, the qualities of the Messenger / Emissary should be in such a way that the content or the subject matter which  has to be conveyed should be categorized with correct compilation of befitting words.  And by all means the Listener is to be so pleased with the Messenger’s expression of  words with Solace & Sweetness ensuring the absence of unpleasant words in the whole context. This kind of special communiqué only will be able to make the Sender to enjoy the fruits of  benefits out of the vital role played by the Emissary.

Keywords:  Envoy / Message, Beau, Sweetheart, Emissary, King,  High-end products, Neuter products.

ஆய்வுச்சுருக்கம்:

இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குச்  செய்திகளை அல்லது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு உறுதுணையாய்  இருப்பவரைத் 'தூதர்' என்று வழங்குவர். காதலர்களுக்கிடையே தூது  அனுப்பும் வழக்கம் உண்டு. அரசர்களுக்கிடையே தூது அனுப்பும் மரபும் உண்டு.தொல்காப்பியமும் தூது குறித்து கூறுகிறது. திருவள்ளுவர் தூதனின்  பண்புகளைக் குறித்து கூறும் போது, தூது செல்பவர்கள் தாம் சொல்லவேண்டியவற்றைக் காரண வகையால் தொகுத்துக் கூறவேண்டும். கொடிய சொற்களை நீக்கி, இனிய சொற்களால், கேட்பவர் மனம் மகிழும் படி சொல்லவேண்டும். இவ்வாறு கூறித் தூது அனுப்புவோருக்கு நன்மை ஏற்படுத்துபவனே தூதன் என்கிறார்.

 திறவுச் சொற்கள்: தூது, தலைவன், தலைவி, தூதன், அரசன், உயர்திணைப் பொருட்கள், அஃறிணைப் பொருட்கள்.

முன்னுரை:

ஒருவர் தமது கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே ‘தூது’ ஆகும். ஒருவர் தம்முடைய கருத்தை காதலர்,    நண்பர், பகைவர் ஆகியோரின் யாரேனும் ஒருவருக்கு மற்றொருவர் வாயிலாகக் கூறி விடுப்பதே தூதாகும். கம்பராமாயணத்தில் தூது குறித்து ஆராய்வோம்.

 தூதின் பிரிவுகள்:

தூதை அகத்தூது, புறத்தூது என்று இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.

அகத்தூது:

தலைவி, தலைவனிடத்துத்  தூது     அனுப்புதலும், தலைவன்,  தலைவியிடத்துத் தூது அனுப்புதலும் ‘அகத்தூது’ ஆகும்.

புறத்தூது:

அரசர்கள் பகைவரிடத்து தூது அனுப்புதலும், புலவர்கள் வள்ளல்களிடத்தே தூது அனுப்புதலும் ‘புறத்தூது’ ஆகும்.

தூது வேண்டுதல்:

தூது அனுப்புவோர், தூது பெறுவோரிடம் சென்று தூதுப் பொருள் (தம்துன்பநிலைகளை, அல்லது தம் செய்திகளைக் கூறிவிட்டு) மாலை வாங்கிவரவேண்டும். அல்லது தூதுசொல்லி வரவேண்டும் எனத் தூது அனுப்புவோர் வேண்டுவதாகும்.

காமம் மிக்க கழிபடர் கிழவி:

"காமம் மிக்க கழிபடர் கிளவி' என்ற தொல்காப்பிய அடியில் தோன்றிய இலக்கியம் தூது. உயர்திணையே அன்றி,அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் தலைவன், தலைவி இடையே உண்டு. இது பெரும்பாலும் பிரிவுத் துன்பம் மிகுந்த நிலையில் ஏற்படும். தலைவன் பிரிந்தவிடத்து பிரிவுத்துன்பம் அதிகமான நிலையில் தன் காதல்   மிகுதியையு,ம் ஆற்றாமையையும், அஃறிணைப் பொருள்களிடத்தும் கூறி தூது செல்லுமாறு தலைவி வேண்டுதல் ‘காமம்மிக்க கழிபடர்கிழவி’ எனக் கூறுகின்றனர்.

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகத் தூது செல்வதைக் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியத்தில்,    தலைவன் தலைவியிடையே மூன்று காரணங்களுக்காகப் பிரிவு ஏற்படும் என்பதை,

                                   "ஓதல் பகையே தூதிவைப் பிரிவே”

                                             (தொல்காப்பியம்- அகத்திணையியல் நூ25)    

கல்விக்காகச் செல்லுதல், போரிடுவதற்காகச் செல்லுதல், தூதிற்காகச்  செல்   லுதல் என்கிறார்.இங்கு தூது செல்லுதல் என்பது சுட்டப்படுகிறது. இது பிற்காலத்தில்  தூது என்ற இலக்கியவகை தோன்றுவதற்குரிய இலக்கியமூலம் ஆகும்.

  "அவற்றுள்

   ஓதலும் தூதும்  உயர்ந்தோர் மேன"

(தொல்காப்பியம்- அகத்திணையியல் நூ26)

ஓதல், பகை, தூது ஆகிய மூன்றும் அந்தணர்களுக்கும், அரசர்க்கும்  உரியதாகும் என்கிறார்.

தூதுப் பிரிவுக்குரிய கால எல்லை:

                               "வேந்துறு தொழிலே யாண்டினது அகமே"

(தொல்காப்பியம்- கற்பியல் நூ 48)

அரசனுக்காகப் பகைவயிற் பிரிவு,தூதுப்பிரிவு போன்றன ஓர் ஆண்டிற்கு உட்படும்   என்பது   தூதுக்குரிய  கால எல்லையாகத் தொல்காப்பியர் கூறுகிறார்.

 பகைக் கொண்ட இருவரை அப்பகை நீங்கி ஒன்று கூட்டப் பிரிதலாகும். இது ‘சந்து செய்தல்’ என்றும் பொருள்படும். இதனால் பழந்தமிழ் அரசர்கள் போர் வெற்றியை புகழ் வெற்றி எனக் கருதாமல், போர் உண்டாகாமல் எவ்வளவு தடுக்க முடியுமோ, அவ்வளவு தடுத்து நாட்டில் அமைதி நிலவச் செய்தனர் என்பது தெரிகிறது.

 தூதுப் பிரிவு:

                               "வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய

                                 ஏனோர் மருங்கினும் எய்துஇடன் உடைத்தே”

                                                                                      (அகத்திணையியல் நூ32)

வேந்தனுக்குரிய பிரிவாகிய தூதுப் பிரிவு, வேந்தனைநீங்கிய  வணிகர், வேளாளர்க்கும் ஆகுமிடம் உடைத்து.

தொல்காப்பியர் கூறும் தூது செல்பவர்கள்:

தூது செல்பவர்களைத் தொல்காப்பியர்

                               "தோழி, தாயே,  பார்ப்பான்,  பாங்கன்,

                                 பாணன், பாடினி, இளையர், விருந்தினர்,

                             கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர்,

                                  யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப"

                                                   (தொல்காப்பியம்- கற்பியல் நூ 52)

கற்பு காலத்தில் தோழி, தாயே, பார்ப்பான்,   பாங்கன், பாணன், பாடினி, இளைஞர், விருந்தினர், கூத்தர், விறலியர். அறிவர், கண்டோர் இவர்களை தூது செல்வதற்குரிய வாயில்கள்  என்று கூறுவார்.

அஃறிணைப் பொருட்களைத் தூது அனுப்புதல்:

                                       "ஞாயிறு, திங்கள், அறிவே, நாணே,

                                         கடலே, கானல், விலங்கே, மரனே,

                                         புலம்புறு பொழுதே, புள்ளே, நெஞ்சே,

                                         அவையல பிறவும் நுதலிய நெறியால்,

                                         சொல்லுந போலவும் கேட்குந போலவும்

                                         சொல்லியாங்கு  அமையும் என்மனார் புலவர்"

                                                                            (செய்யுளியல் நூ 198)

ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், சோலை,விலங்குகள், மரங்கள், பொழுது, பறவைகள், நெஞ்சு, இவையும், இவை போன்றன பிறவும் அவை பேசுவன போலவும், கேட்குன போலவும் செய்யுளில் அமைதல்  இயல்பாகும் என்று அறிவுடையோர் கூறுவர்.                                                                             

சங்க இலக்கியங்களில் அகத்தூது:    

தலைவனது பிரிவாற்றாது தலைவி வருந்தினாள். தனது வேட்கை மிகுதியால் பிரிவாற்றாது கேளாதனவற்றைக் கேட்பனவாக விளித்து தலைவனிடம் சென்று, தன் துன்ப மிகுதியை எடுத்துக் கூறுமாறு வண்டிடம் கூறுகிறாள்.                              

                                  "கானலும் கழறாது கழியும்  கூறாது

                                    தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

                                    ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே"

                  (அகநானூறு 170)

 வண்டே! கரிய சுழியில் மலர்ந்த ,கண் போலும் நெய்தல் பூவின் நறுமணம் கமழ்கின்ற இதழினது மணத்தை அமிழ்து  என விரும்பிச் சென்று குளிர்ந்த தேனை உண்ட வண்டினங்கள், களைப்பு மிகுந்தமையால் பறக்க இயலாது அவ்விடத்தை தளர்ச்சியுற்று கிடந்தமைக்கு இடமான துறையை உடையவன் நம் தலைவன். அவனுக்கு, பிரிவால் நான் அடைந்த துன்ப மிகுதியினைக் கடற்கரை சோலையும் சென்று இடித்துக் கூறாது. உப்பங்கழியும் கூறாது. வண்டுகள் ஒலிக்கும் மணம் கமழும் மலரினை உடைய புன்னையும் போய் சொல்லாது. இவ்விடத்தே உன்னையன்றி வேறொரு தூதினை யான் பெற்றிலேன்.

தாழையின் தாழ்ந்த கிளையின் மேல் விருப்பத்தையுடைய பெடையோடு துன்பத்துடன் வருந்தியிருக்கும் சிறிய கடற்காக்கை பரதவர் மீன் வேட்டைக்கு செல்லாத சுறா மீன் திரிகின்ற கடற்பரப்பின் கண் வெண்மையான இறால் மீனை பிடித்து உண்பதாகக் கனா காணும் அத்தகைய இருள் செறிந்த நடு இரவின் கண் வந்தது, பலநாளும் உன்னுடைய மிக்க துன்பத்தை நீக்கியவள் உன் பிரிவால் தான் அடைந்த துன்பக் கடலை கடக்க வல்லவளோ  என்று அத் தலைவன்பாற் சென்று நீயே கூறுதல் வேண்டும் என்று வண்டிடம் தூது செல்லுமாறு தலைவி வேண்டுகிறாள்.

சங்க இலக்கியங்களில்  புறத்தூது:

அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் பகை ஏற்பட்டு போர் நிகழக்கூடிய சூழல் ஏற்பட்டபோது,ஔவையார் தூது சென்று போரைத் தடுத்தார்.

தொண்டைமான் படைக்கலங்கள் அழகுற விளங்கின என்றும்,  பொலிவு மாறாமல் இருந்தன என்பதை போரில் ஈடுபடாதவன் என்றும் கூறப்பட்டன. அதியமானின் படைக்கலன்கள் பொலிவிழந்து கொல்லன் பட்டறையுள் கிடந்தன என்பதற்கு போர்கள் பல கண்டவன்  என்றும் கூறப்பட்டுள்ளது.                                        

                                           "இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி

                                             கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து

                                             கடியுடை வியல் நகரவ்வே  அவ்வே,

                                             பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து”

                                                                           (புறநானூறு 95)

 என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.

 கம்பராமாயணத்தில் தூது:

அகத்திணை, புறத்திணை என்னும் இரண்டிலும் தூதுப் பொருண்மை இடம்பெறும்.கம்பன்    காப்பியப் பண்பை அடியொற்றி அனுமன் செய்கின்ற தூதை அகத்தூதாகவும், அங்கதன் செல்கின்ற தூதைப் புறத்தூதாகவும் அமைக்கின்றார். சுந்தரக்காண்டத்தில் உருகாட்டுப்படலத்தில் அனுமன், சீதையிடம் சென்று தான் இராமனிடம் சென்று கூறுவேன் என்று உரைக்கின்றான்.

 அங்கதன்   தூது:  

இராமன், அங்கதனை இராவணனிடம் தூதாக அனுப்புகிறான்.இலங்கையினுள் சென்று அனுமன் திரும்பி   வந்தான். அனுமனேயன்றி இலங்கையினுள் தூதனாகச் சென்று திரும்ப வல்லவன் அங்கதனே. அவன் பகைவர்களாகிய அரக்கர் வீரச் செயலை மிகுதியாகக் காட்டினும் தான் யாதொரு துன்பமும்இன்றி மீள்வதற்கு வலிமையுடையவன்  ஆவான் என்று அங்கதனின் திறமையைப், பெருமையாக இராமன்   கூறினான்.

இராமன் அங்கதனிடம் கூறல்:

இராமன் அங்கதனை அழைத்து அவனிடம்" நீ இராவணனிடம் சென்று சீதையைச் சிறையினின்று விட்டுத் தன் உயிரைப் பெற்று வாழ்வது நல்லது இல்லையெனில், உனது பத்துத் தலைகளையும்,இராமன் தன் அம்புகளால் துண்டம்துண்டமாக அனைத்தும் தள்ளுமாறு போர்க்களத்தைஅடைதல் உனக்கு நன்மையை அளிப்பதோ    இந்த இரண்டனுள் ஒன்றைத் துணிந்து சொல்வாயாக என்று இராவணனிடம் கூறுவாயாக என்றதை,

                     "என் அவற்குரைப்பது என்ன ஏந்திழை  யாளை  விட்டுத்

                         தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனில் தலைகள் பத்தும்”

                                                                  (அங்கதன் தூதுப் படலம் 925)

என்ற பாடலடி   மூலம் அறியமுடிகிறது.

மேலும் சீதையை விட்டிட எண்ணமில்லை என்றால் சேமமாக ஊருக்குள் பதுங்கி ஒடுங்கி வாழ்வது அறத்தின் வழிப்பட்ட  செயலுமன்று.சிறந்த வீரர்க்கு தகுதியுடையதுமாகாது. ஆண்மையும்ஆகாது. போர்வீரர் மேற் கொள்வதற்குரிய போர்ந்துறைகளுள் ஒன்றுமாகாது.எம் மார்பிலே பொருந்துமாறு தம் அம்புகளைத் தொடுத்து எதிரே வந்து நிற்க வல்லமை யுடையவன் என்றால், தன் ஊருக்குள் மறைந்திராது வெளியே வந்து    போர் செய்யுமாறு சொல்வாய் என்றும் சொன்னான்.

                          "நிறத்து உறவாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின்

                             புறத்து உற எதிரே வந்து போர் தரப்புகல்தி என்றான்"

                                                                           (அங்கதன் தூதுப் படலம் 926)

இராவணனிடம் சென்றான் அங்கதன். அவனைக் கண்டதும் இராவணன் அங்கதனிடம் “நீ யார்? வந்த காரணம் என்ன” என்றான்.இராமன் கட்டளையிட்டுள்ள சொல்லைச் சொல்லும் பொருட்டாக வந்தேன் என்று கூறினான். தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தும் முகமாக,  இராவணனை தன் வாலில் கட்டித் தூக்கிய வாலியின் மைந்தன் ‘அங்கதன்’ என்னுடையப் பெயர் என்றான்.உடனே இராவணன் நீ என் நண்பனுடைய மகன் நானே உனக்கு குரங்கின தலைவனாகும் பதவியைத் தருவேன்.      காலம் தாழ்த்தாது பெற்றுக் கொள் என்றபோது, அதற்கு அங்கதன் வாயில் வருபவைகளைஎல்லாம் கூறிஎன்னை உன் வசம் செய்து கொள்ள எண்ணுவாயானால், ஒருவனுக்குத் தூதனாக வந்து அதைநெகிழவிட்டு, மாற்றான் தந்த அரசப்பதவியை ஏற்று அரசுஆளுதல் அரசியல் அறிஞரால் ஆராய்ந்து விலக்கத்தக்கதன்றோ நீ வானரத் தலைமை தர அதை நானா கொள்வேன், கொள்ளேன்ஒருவேளை அங்ஙனம்கொள்வேனாயின் நாயானதுதரச் சிங்கமானது பெற்றுக் கொள்கின்ற சிறந்த விலங்குத்தன்மைக்கு ஒப்பாகும் என்று கூறியதை,

                       "நீ தரக் கொள்வேன் யானே இதற்கு இனி நிகர் வேறுஎண்ணின்

                         நாய்தரக் கொள்ளும் சீயம் நல்அரசு என்று நக்கான்"

                                                                       (அங்கதன் தூதுப் படலம் 943)

 என்ற பாடலடி மூலம்  அறியமுடிகிறது.

இராவணனிடம் சீதையை விடுக அவ்வாறு அவளை சிறைவிடுக்க  விரும்பவில்லைஎனில் போர்க்களத்தில் எதிர்த்து நின்று தன் இனிய உயிரை விட்டிடுக எனச் சொல்வாயாக என்று இராமன்  சொல்லியனுப்பினான் என்றான் அங்கதன்.இவற்றை இராவணனிடம் சொல்லி அவன் மனக்கருத்தை அறிந்து கொண்டு வா என்றான் இராமன்.

“சீதையை இராமனிடம் கொண்டு வந்து விட்டு விட்டு, அவனை வணங்கி நல்வாழ்வைப் பெறுவாயாக அல்லது உறவினருடன் இறக்க விரும்புவாயானால் என் பின் வருவாயாக அரண்மனை வாயிலிலிருந்து   வெளிப்பட்டு வருவாயாக” என்றும் அங்கதன் உரைத்தான்.

 முன்பு மிக்க வல்லமையுடன் போர் செய்த நீ, மறைந்து புகுந்து கொண்டு,பகைவர் வந்து போருக்கு அழைக்கவும்,உன் ஊருக்குள்ளே அடங்கிக் கிடக்கிறாய் என்றால், உனக்கு இதனால் இகழ்ச்சி உண்டாகும் என்றும்,கூறியதை,

                           "போரில் பட்டு வீழப் பொருத நீ்ஒளித்துப் புக்கு உன்

                               ஊரிலே பட்டாய் என்றால் பழி என வுளையச் சொன்னான்"

                                                                                                              (அங்கதன் தூதுப்படலம் 952)

என்ற பாடலடி மூலம்  அறியமுடிகிறது.

இதனால் கோபம் கொண்ட இராவணன், ”இத்தூதனைப் பிடியுங்கள்” என்று கட்டளையிட, நான்கு வீரர்கள் பிடித்தனர். அந்த வீரர்களை  எடுத்துக் கொண்டு தலைகளை அறுத்தான். அவர்களிடம் இருந்து இராமன் இருக்குமிடம் வந்து இராவணனின் கருத்தை ஒவ்வொன்றாக முழுவதும் சொல்லி என்ன பயன்? “இந்த இராவணன் தலை எல்லாம் அறுபட்ட போதல்லாமல் தம் மனதில் கொண்ட காதல் நீங்கப் பெறான்” என்று இராவணனின் எண்ணத்தை அங்கதன் இராமனிடம் தெரிவித்தான் என்பதை,

                        "உற்ற போது அவன் உள்ளக் கருத்தெலாம்

                          கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும்”

                                                                                                                                         

                                                 (அங்கதன் தூதுப்படலம்   957)

 என்ற பாடலடி மூலம்  அறியமுடிகிறது.

இதுவே கம்பராமாயணத்தில் அங்கதன் தூதாகும். இது புறத்தூதாகக் கருதப்படுகிறது.

 அனுமன் தூது:

இராமன், சீதையைத் தேடிக் கண்டிபிடிக்கவே அனுமனை அனுப்பினார்.அவ்வாறு அனுப்பும்போது, சீதையின் அங்க அடையாளங்களை அடி முதல் முடி வரை     கூறி சீதை தானா என்பதைஉறுதி செய்தபின், இராமன் கூறிய அடையாளங்களாக, அயோத்தியிலிருந்து காடு செல்ல இருந்தபோது”,சீதையிடம் நீ அயோத்தியிலேயே இரு என்ற போது, மரவுரி தரித்து  என்மீது கோபத்தோடு உயிர் நீங்கியது போன்ற உடலோடு என் அருகில் சீதை நின்றதை அடையாளமாகக் கூறு, அயோத்திநகரின்  கோட்டை வாசலைக் கடக்கும் முன்பே சீதை காடு எங்கே இருக்கிறது” என்று கேட்டதையும், சுமந்திரனிடம்,” என் தங்கைகளிடம் பறவைகளைப் பத்திரமாகப் பார்க்கச் சொல்லுங்கள் என    கூறியதையும்,என் பேர் பொரித்த மோதிரத்தை அடையாளமாக அவளுக்குக் காட்டு என்றும் கூறித்     தந்தான் என்று அனுமன் சீதையிடம் கூறினான்.

இராமன் அனுப்பிய தூதன் தான் இந்த அனுமன் என்பதைஅறிந்து, உணர்ந்து, நம்பிய சீதை அனுமனிடம், இன்னும் பத்து மாதங்களுக்குள் இராமன் வந்து தன்னை சிறை மீட்கவில்லை என்றால் தான் உயிர்த்துறப்பதாகக் கூறுகிறாள்.இராமனிடம் சென்று திருமணத்தன்று இப்பிறவியில் உன்னையன்றி இரண்டாவதாக ஒரு பெண்ணை என் மனதிலும்      தொடமாட்டேன் என்று கூறிய வார்த்தையை  இராமனின் செவியில் ரகசியமாகச் சொல் என்றும், அடுத்தப் பிறவியிலும் நானே அவருக்கு மனைவியாக வேண்டும் என்றும், சித்திரக்கூட மலையில் ஒருகாகம் எனது மார்பைக் குத்தியபோது  புல்லைக்கொண்டுஇராமன் பிரம்மாத்திரமாக ஏவியதையும், பயந்தகாகம் சிவலோகம், பிரம்மலோகம் சென்ற பின்பும் தன்னைக் காக்கயாரும் இல்லாமல்இராமனிடமே வந்துஅடைக்கலம் வேண்ட, அவர் மன்னித்ததையும்கூறு.அயோத்தியில் தாம் வளர்த்தச் செல்லக்கிளிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இராமனைக் கேட்டபோது, அவர் ‘கைகேயி’ பெயரைவைக்கச் சொன்னதைக் கூறு.என்று பலவாறு சொல்லி,தன் சேலையில் மறைத்து வைத்திருந்த சூளாமணியைஎடுத்து  இராமனுக்கு அடையாளம் காட்டுமாறு கூறினாள் என்பதை,

                       "சூடையின்மணி கண் மணி ஒப்பது தொல் நாள்

                          ஆடையின் கண் இருந்தது பேர் அடையாளம்”

                                                                                       (சூளாமணிப்படலம் 692)

என்ற பாடலடி மூலம்  அறியமுடிகிறது.

இந்திரஜித்தின் நாகபாசமாகிய பிரம்மாத்திரத்தினால் கட்டுண்டு, இராவணனை முதன் முதலில் பார்த்தபோது,இராவணன் அனுமனிடம் நீ யார் என்று கேட்டபோது " நான் ஒப்பற்ற வில் வீரனுடைய தூதன்” என்றே கூறினான் என்பதை,

                         "அல்லி அம் கமலமே அனைய செங்கண் ஓர்

                           வில்லிதன் தூதன் யான் இலங்கை மேயினான்”

                                                                                               (பிணி வீட்டுப்படலம் 1118)

என்ற பாடலடி மூலம்  அறியமுடிகிறது.

முடிவுரை:

               இராமன் கூறிய அடையாளங்களைத் தெரிந்துகொண்டு சீதையைக் கண்டு உணர்ந்து தெரிந்து, தெளிந்து கொண்டு செய்திகளைக் கூறியும், இராமன் கொடுத்தனுப்பிய மோதிரத்தைக் கொடுத்தும், சீதை சொல்லியனுப்பிய செய்திகளையும், சூளாமணியும் இராமனிடம் கொண்டு வந்து சேர்ப்பித்ததும் அனுமன் ஒரு தூதரைப் போலவே செயல்பட்டான். என்  பதையும். இராவணன் அவையில் நீ யார் என்று இராவணன் கேட்டபோது ‘தூதன்’ என்றே அனுமன் உரைத்ததையும் கொண்டு இராமனுக்கும், சீதைக்கும் இடையே அனுமன் ஒரு அகத்தூதனாகவே செயல்பட்டான் என்பதை அறியமுடிகிறது. (இராவணன் அனுமனைக் கொல்வது என்று முடிவு செய்தபோது,வீடணன் " தூதனாய் வந்தவனைக் கொல்வது குலத்திற்கே பழியைத் தேடித் தரும்" என்று சொன்னான்.)அங்கதன் புறத்தூதனாக செயல்பட்டான் என்பதும் தெரியவருகிறது.

துணை நூற்பட்டியல்:

1. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி        

     தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை,     

     1953

2.  செயபால். இரா.(உரை.ஆ). அகநானூறு மூலமும் உரையும், நியூ   செஞ்சுரி  

      புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2004.

3.  பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) புறநானூறு மூலமும்

     உரையும்,   நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட்   

     சென்னை, 2004

4. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4,

       5, 6, 7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.