ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தி. ஜானகிராமனின் உயிர்த்தேன் புதினத்தில் கிராம சுயாட்சிச் சிந்தனைகள் (T. Janagraman's novel 'Uyirthen' Thoughts of village autonomy)

இரா. சங்கர், பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக்கல்லூரி (ஆடவர்), கிருட்டிணகிரி 09 Feb 2022 Read Full PDF

                                       

கட்டுரையாளர்:                                                                  நெறியாளர்,

 

இரா. சங்கர்,

பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

அரசினர் கலைக்கல்லூரி (ஆடவர்),

கிருட்டிணகிரி - 635001.

தமிழ்நாடு, இந்தியா,

 

முனைவர் தி. முத்து,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

அரசினர் கலைக்கல்லூரி (ஆடவர்),

கிருட்டிணகிரி - 635001

தமிழ்நாடு, இந்தியா

 

 

 

 

Summary of the study

Village self-government is a system of self-fulfillment of the needs of a working-class village without expecting assistance from the government for all the needs of a village. The village administration during the Chola period can be considered as a model for this system of village autonomy. The ‘Uttiramerur Inscription’ also states that during the Chola period the Kudavolai system used to select members for the village administration and manage the needs of their villages. This article explores and illustrates his views on village autonomy in T. Janagraman's novel 'Uyirthen' and his views on the need for a woman leader in that village autonomy through appropriate internal and external evidence. The article concludes with a summary, conclusion, and footnotes on the sources used.

Keywords

Village autonomy, proper agriculture, working youth, female village head, public agriculture, self-sufficiency, self-confidence.

ஆய்வுச் சுருக்கம்

ஒரு கிராமத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் அரசிடமிருந்து  உதவிகளை எதிர்பார்க்காமல் உழைப்புச் சார்ந்த கிராமத்தின் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்வதுதான் கிராம சுயாட்சி முறையாகும். இந்தக் கிராம சுயாட்சி முறைக்கு முன்னுதாரணமாகச் சோழர் காலத்தில் நடத்தப்பட்ட கிராம ஆட்சியைக் கருதலாம். சோழர்க் காலத்தில் குடவோலை முறை மூலமாகக் கிராம நிர்வாகத்திற்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்து தங்களுடைய கிராமங்களின் தேவைகளை நிர்வகித்து வந்ததாக ‘உத்திரமேரூர் கல்வெட்டு’ தெரிவிக்கிறது. தி.ஜானகிராமனின் ‘உயிர்த்தேன்’ புதினத்தில் அவருடைய கிராம சுயாட்சி சிந்தனைகளையும்,  அந்தக் கிராம சுயாட்சியில் ஒரு பெண் தலைமை ஏற்பது பற்றிய கருத்துக்களையும் தகுந்த அக, புற சான்றாதாரங்களின் மூலம் ஆராய்ந்து இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் முடிவில் தொகுப்புரையும், முடிவுரையும், பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களின் அடிக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.  

திறவுச் சொற்கள்

கிராம சுயாட்சி, முறையான விவசாயம், கூடிச்செயலாற்றுகின்ற இளைஞர்கள், பெண் கிராமத் தலைவர், பொது விவசாயம், தன்னிறைவு, தன்னம்பிக்கை.

முன்னுரை

ஒரு படைப்பாளர் தனது படைப்புகளில் தான் வாழ்ந்த கிராமம், நகரம் பற்றிய அனுபவங்களையும் வெளிப்படுத்தியிருப்பார். தி.ஜானகிராமன் 32 ஆண்டுகள் தஞ்சாவூர் மாவட்டங்களிலுள்ள கீழ்விடயல், அய்யம்பேட்டை, குத்தாலம் ஆகிய கிராமங்களில் வாழ்ந்தவர். தி.ஜானகிராமன் ஒன்பது புதினங்களைப் படைத்துள்ளார். அனைத்துப் புதினங்களிலும் மையக் கருத்துதோடு ஏதேனுமொரு கலைகளை இணைத்துப் படைத்திருப்பார். உயிர்த்தேன்  புதினத்தில் மட்டும் கலைகளுக்குப் பதிலாகத் தன்னுடைய கீழ்விடயல் கிராம வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, ஒரு கிராமம் எவ்வாறு கிராம மக்களின் சுயமுன்னேற்றத்தின் மூலம்  தன்னிறைவு அடைய  முடியும் என்ற கிராம சுயாட்சி சிந்தனைகளை இணைத்துப் படைத்துள்ளார். அதைப் பற்றி ஆராய்வது இவ்வாய்வுக் கட்டுரையின்  நோக்கமாகும்.

தி ஜானகிராமனின் கீழ்விடயல் கிராமம்

‘உயிர்த்தேன்’ புதினம் 1966 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. 1967 ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. 1969 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் தி.ஜானகிராமன் தனது கிராமத்தைப் பற்றி ‘கீழ்விடயல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

தி.ஜானகிராமனுடைய பெற்றோர்களுக்குப் பூர்வீகமான ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழந்தேவங்குடி என்றாலும்  பின்னர் கீழ்விடயல் கிராமத்தில் குடிபெயர்ந்து அவ்வூரில் பயிரிடப் பங்கு வாங்கி இறக்கும்வரை வாழ்ந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குடமுருட்டி ஆற்றங்கரைக்கு அருகில் ஒரு சோலை, மூங்கில் தோப்பு, மா, பலா, வாழை தோட்டங்கள், மதகு, வாய்க்கால், சத்திரம், குடியிருப்புகளின் தெரு  அமைப்புகள், ஊருக்கு வெளியே ஒரு குளம், ஒரு ஆலமரத்தின் நிழலில் பெரிய களம் என்று கீழ்விடயல் கிராமத்தின் வரைபடத்தை நம் கண்முன் நிறுத்துகிறார். மக்கள் பிழைப்பதற்காக வெளியேறும் காலகட்டத்திலும், கீழ்விடயல் கிராம மக்கள் பெரும்பாலும் இடம்பெறாமல், கிராமம் சிதைவடையாமல், கட்டுக்கோப்பாக வாழ்கின்ற அந்த மக்களின் வாழ்க்கையைத் தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின்  ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற இடங்களான கோயில், சத்திரம், பொதுக்கிணறு ஆகியவற்றில் தன் கிராமத்தில்  சிவன் கோயில் பழுதடைந்த நிலையில் இருப்பதற்கு மக்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக இருக்கலாம் அல்லது விவசாய விளை நிலங்களில் முறையான விவசாயம் மேற்கொள்ளாத காரணத்தால் போதுமான பொருளாதாரம் இல்லாததால் இருக்கலாம் என்று வருந்துகிறார். விவசாய நிலங்களில் உணவு பெருக்கத்திற்கு அரசு வழங்கும் கடன் உதவிகளைத் தன் ஊர் மக்கள் பெறமுடியாததற்குக் காரணம் தன்னுடைய ஊரில் பெரிய பணக்காரர்களும், பெரிய மனிதர்களும், கூடிச்செயலாற்றுகின்ற இளைஞர்களும்  இல்லாததால் அந்த உதவிகளைப் பெறத் தவறிவிடுகின்றனர் என்கிறார். எதிர் காலங்களில் பெரிய மனிதர்களும், கூடிச்செயலாற்றுகின்ற இளைஞர்களும்  தோன்றி பழைய மதிப்பீடுகளைக் கடந்து முன்னேற்றம் அடைவார்கள் என்ற கனவு தனக்கு உண்டு என்று குறிப்பிடுகின்றார்.

இந்தக் கட்டுரை வழியாகப் பெரியவர்களும் இளைஞர்களும் தங்களுடைய தனிமனித வளர்ச்சியோடு ஊரின் பொது வளர்ச்சிக்கும் இன்னும் அதிக அக்கறையுடனும்  உறுதியுடனும் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

தன் கிராமத்தை இலட்சிய மாதிரி கிராமமாக மாற்ற என்னென்ன திட்டம் செயல்படுத்தினால் மாறுமென்ற தனது கனவை ஆனந்த விகடன் இதழில் ‘உயிர்த்தேன்’ புதினத்தைத் தொடர்கதையாக எழுதும்பொழுது படைத்துள்ளார். அதாவது கிராம மக்கள் ஒற்றுமையுடனும், காலத்திற்குத் தகுந்த விவசாய முறைகளைக் கையாண்டு விவசாயம் செய்தால் அவர்களுக்குத் தேவையான பொருளாதார வசதி மேம்படும் என்றும் அதனால் அவர்களிடையே போட்டி, பொறாமை, வீண் சண்டைகள் போன்றவை ஏற்படாமல்  தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் கருதுகிறார். அரசுக்குத் தரவேண்டிய விதை நெல்லைத் தருவதற்கு மனது வருவதோடு  ஊரிலும் கோயில், குளங்கள், வாய்க்கால்கள், பாலங்கள் போன்றவற்றை  சீரமைத்துக் கொள்வார்கள் என்று தனது விருப்பத்தைப் புதினமாக வெளிப்படுத்தியுள்ளார்.

உயிர்த்தேன் புதினமும் கிராம சுயாட்சியும்

தி.ஜானகிராமன் தன்னுடைய கீழ்விடயல் கிராமத்தை, கிராமங்கள் இடம்பெருகின்ற அனைத்து புதினங்களிலும் பெயரை மாற்றிப் படைத்தார் என்பதை,  “இது (கீழ்விடயல்) பாடல் பெற்ற ஸ்தலமில்லை, ஆனால், பலகதைகளில் இந்த ஊரின் அழகைப் பெயரைச் சொல்லாமல் பாடியிருக்கிறேன்”1 என்ற கூற்றின் மூலம் அறியலாம்.

உயிர்த்தேன் புதினத்தில் கீழ்விடயல் கிராமத்தின் பெயரை ஆறுகட்டி என்று மாற்றிப் படைத்துள்ளார். கீழ்விடயல் ஊர் அமைப்புபற்றிய வருணனைகளுடன் அவ்வூரில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார். சில பாத்திரப் படைப்புகளை உருவாக்கி,  அக்குறைபாடுகளை அப்பாத்திரங்களின் கிராம சுயாட்சிச் சிந்தனைகள்மூலம் தீர்ப்பதாகத் தி.ஜானகிராமன் தன்னுடைய கருத்தைப் புதினமாகப் படைத்துக் காட்டியுள்ளார்.

கீழ்விடயல் கட்டுரையில், “கோவிலோ, சத்திரமோ, பொதுக்கிணறோ இவை ஒவ்வொன்றும் ஒற்றுமையின் சின்னம். நம்பிக்கை, பக்தி, இவற்றைவிட ஒரு நெருக்கடியில் ஊர் மக்கள் ஒன்று கூடிச் செயலாற்ற இவை பயிற்சிக் கூடங்கள். முக்கியமான பயிற்சிக் கூடமான எங்கள் ஊர் சிவன் கோயில் இடிந்து கிடக்கிறது. ஊர் பொதுவில் பணமில்லையோ என்னவோ, செப்பனிட முடியாமல் திண்டாடுகிறார்கள்”2 என்று குறிப்பிடுகிறார். உயிர்த்தேன் புதினத்தில் சிவன் கோயிலுக்குப் பதிலாகப் பெருமாள் கோயில் என்று படைத்துள்ளார்.

ஆறுகட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட பூவராகவன் என்ற பாத்திரம்  சென்னையில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு போதிய பணம் கையிருப்பு இருக்கும்பொழுது, தன் தந்தையின் கடைசி ஆசையான சொந்த ஊரில் இடிந்த நிலையில்  இருக்கின்ற பெருமாள் கோவிலைப் புதியதாகக் கட்ட வேண்டும் என்ற ஆவலில் சென்னையிலிருந்து ஆறுகட்டிக்கு ஊர் பங்கு வாங்கிக் கொண்டு குடிப் பெயர்வதாகப் படைத்துள்ளதை அறியலாம்.

“சிங்கு! எனக்கு இப்ப குளம்‌, வயல்‌, மரம்‌, புல்லு மண்ணு இதெல்லாம்‌ தான்‌ ஊராப்படுது. எங்க அப்பாவும்‌ அம்மாவும்‌ வளர்ந்த ஊரு இது. நான்‌ பள்ளிகூடத்திலே படிக்கறப்ப தினமும்‌ ராத்திரி சாப்பாடு முடிஞ்சிவுடனே அப்பாவைச் சுத்தி உட்கார்ந்திருப்போம்‌ அக்கா, நான்‌, தங்கை எல்லோரும்‌. ஒரு நாளைக்காவது இந்த ஊரைப்‌ பத்தி சொல்லாம இருக்க மாட்டாங்க அப்பா... கடைசி காலத்திலே ரிடையரானப்புறம்‌ அவருக்கு இங்கு வந்து பெருமா கோயில்லே உட்கார்ந்துக்கணும்‌. கைங்கர்யம்‌ பண்ணணும்‌, பாசுரம்‌ ஓதிக்கிட்டே உசரை விடணும்ணு ஆசை. ரிடையர்‌ ஆறதுக்கு முன்னாலே ஆறு மாசம்‌ லீவு எடுத்துகிட்டாங்க. மறுநாளே கிளம்பணும்னு திட்டம்‌ போட்டிருந்தாங்க. ஊருக்குப்‌ போகப்போகிறோம்கற சந்தோஷத்திலேயே அவருக்கு இருதயம்‌ வெடிச்சுப்‌ போயிட்டாப்போல இருக்கு. மத்தியானம்‌ சாப்பிட்டு வெத்திலைப்‌ பெட்டியை வச்சுக்கிட்டு உட்கார்ந்‌தாங்க திறக்ககூட இல்லை. சடக்குனு கண்ணை மூடிட்டாங்க.... அப்பாவுக்குப் பதிலா நானாவது ஒரு நாளைக்கு எல்லா வேலைகளையும்‌ முடிச்சிட்டு இங்கே வந்து உட்காரணும்னு நெனைச்சுக் கிட்டிருந்தேன்‌‌”3 என்று பூவராகவன் தன் தந்தையின் விருப்பத்திற்காகத் தான் பெருமாள் கோவில் கட்டுவதாகத் தி.ஜானகிராமன் படைத்துள்ளார்.

பூவராகன் கோவில் கட்டுவதற்கு ஆறுகட்டி கிராம மக்கள் ஆதரவு தெரிவித்தாலும், எவ்விதமான ஒத்துழைப்புகளையும் தர முன்வருவதில்லை. இருந்தாலும் கோயில் பணியைத் தானே முன்னின்று கட்டி முடிக்கும்போது, ஊர்மக்கள் இல்லாமல் எவ்வாறு கும்பாபிஷேகம் செய்வது என்று நரசிம்மன், அமருவி உள்ளிட்ட கும்பத்தினருடன் உரையாடும்பொழுது, பூவராகவன் காரியதரிசிகளில் ஒருவரான கணேசப் பிள்ளையின்  மனைவி செங்கம்மா, “நூறு கோவில்‌ கட்டினாலும்‌ இவங்க வரமாட்டாங்‌கம்மா. இப்ப அவங்களா கேட்டாங்க, கோயில்‌ கட்டுங்கன்னு? சுவேதாரண்யம்‌ கேட்டாருன்னா, அவருக்கு இப்படி ஏதாவது பேசிக்கிட்டே இருந்தாத்தான்‌ போது போகும்‌ வாய்‌மென்னுக்கிட்டே இருக்கணுமே, ரூபா ஆயிடும்னா சும்மா இருந்தாங்க! பிடாரி கோயிலுக்கு ஆயிரம்‌ ரூபா கூட ஆகாது புதுப்பிக்க. ஏன்‌ சும்மா இருந்தாங்க? அவங்களுக்கு சாமிகீமின்னெல்லாம்‌ அக்கறையில்லே. அதான்‌ வீட்டிலே சாமி கும்பிடுறாங்களே. பத்தாதா! பொதுவா சமத்து இல்லாத ஊரு. அசட்டுக்கு ஆங்காரம்கற மாதிரிச் சண்டை போட்டுக்கிட்டே. இருக்கும்‌"4 என்று கூறுவதன் மூலம் ஊர் மக்கள் அவருக்கு ஒத்துழைப்பு தராததற்கான காரணம் அறியலாம்.

ஆறுகட்டி கிராம மக்கள் அரசாங்கம் தருகின்ற உதவிகளைப் பெற தயங்குவதையும் ஊர் நிலங்களுக்குரிய முறைநீர் கிடைக்காதது பற்றி அக்கறை இல்லாததையும் செங்கம்மா, “ஆத்து வெள்ளம்‌ கிணத்திலே இருக்கிற தண்ணியையும்‌ அடிச்சிக்கிட்டுப்‌ போறாப்பல, ஏதாவது சர்க்கார்லே செய்ய வந்தாங்கன்னா, பக்கத்து ஊர்க்காரங்க அடிச்சிக்கிட்டுப்‌ போயிடறாங்க. எல்லாம்‌ பணக்காரங்க அங்கே. சர்க்கார்லே ஏதாவது கொடுக்கிறாங்கன்னா எல்லாருமா சேர்ந்து ஒடிப்போய்‌ வாங்கிக்‌ கிட்டு வந்திடறாங்க. அத்தைப்‌ பண்ணிப்‌ பிடறோம்‌, இத்தைப்‌ பண்ணிப்‌பிடறோம்‌'னு பேசி, பாதிச்‌ செலவைச் சர்க்கார் கிட்டவே வாங்கி வெள்ளாமையே நடத்திடறாங்க. அவங்க அதிர்ஷ்டம்‌ நல்லா வெளைஞ்சுக்‌கிட்டும்‌ வருது. அதே பங்குதான்‌, அத்தினி வயக்கடைதான்‌ இங்கியும்‌ இருக்கு. ஆனா அந்த ஊர்‌ வெளச்சல்லே மூணுலே ஒண்ணு தான்‌ தேறும்‌ இங்கே. மூணா வருஷம்‌ தண்ணி சரியா வரலே. வாய்க்கால்‌ தலைப்பிலே போயி அத்தினி தண்ணியும்‌ திருப்பி அவங்க ஊருக்குப் பாச்சிட்டாங்க பக்கத்தூருக்காரங்க, பதினைஞ்சு நாள்‌ நம்ம ஊருபக்கம்‌ ஈரக்‌ காத்து கூட வீசல்லே. இவங்க யாராவது தலைப்புக்குப்‌ போனாங்களா. கேட்டாங்களா, கொண்டாங்களா?"5 என்று கூறுவதன் மூலம் அறியலாம்.

பூவராவகனின் நவீன விவசாயமுறை

     பூவராகவன் அவரது நிலத்தில்  முறையான விவசாய முறைகளைக் கையாண்டு விவசாயம் செய்கிறார் என்பதை, "வந்தவுடனேயே தான்‌... டெமான்ஸ்ட்ரேட்டரைக்‌ கூட்டியாந்து, மண்ணை வேறே சோதனைக்கு அனுப்பிச்சு, மருந்து போட்டு விரையை வேறே மருந்திலே ஊற வைச்சு, கிடைகட்டி. செமத்தியா உரம்‌ போட்‌டு நகத்திருக்காங்க.... இப்ப நம்ப குறுவை மாதிரி இந்த ஜில்லாவேகண்டிருக்காது. பத்துத்‌ தலைமூறை கண்டிருக்காது. ஆளை அடிக்கலாம்‌. அப்படி வளர்ந்திருக்கு கதிரு ஒவ்வொண்ணும்‌. கடம்பங்குடி, நிலங்கள்ளாம்‌ பிச்சை வாங்கணும்‌ இதுகிட்டே”6 என்று கணேச பிள்ளை செங்கம்மாவுக்குக் கூறும் செய்தி வழியாக அறியலாம். இதுபோல நிலத்தின் தரத்திற்கேற்ப நவீன விவசாயம் தனது ஊர் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தி.ஜானகிராமன் அறிவுறுத்துவதை அறியலாம்.

செங்கம்மாவின் பொது விவசாய திட்டம்

 தி. ஜானகிராமன் தனது கிராமத்தின் மேம்பட்ட வளர்ச்சிக்கு நவின விசாய முறையைக் கற்று தரவும் ஊர் பொது விவசாயம் பூவராகவன் மேற்கொள்ள வேண்டும் என்பதை, “இந்த ஊர்‌ ஜனங்க சர்க்கார்லே கொடுக்கிறதைக்‌ கூட, கடனைக்‌ கூட வாங்கறதுக்குக்‌ கூச்சப்படுது. அத்தினி பயம்‌, அத்தினி அவநம்பிக்கை, அதனாலே நமக்கு வாங்கறதோடே எல்லாருக்குமா சேர்ந்து விரை, மருந்து எருவு எல்லாம்‌ நாமே வாங்கி கொடுத்திடறது. இங்கே என்ன செய்நேத்தி செய்தாலும்‌ அதை அவங்களுக்கு சும்மாவே ஒரு வருஷம்‌ செஞ்சிப்பிடறது. ரட்டைப்‌ பங்கா விளையும்‌ அவங்களுக்கும்‌ அப்புறம்‌ தானா ரோசம்‌ வரும்‌. ரோசம்‌ வராதது தானே இப்ப எல்லா முடக்கமாகக்‌ கிடக்கு!”7 என்று செங்கம்மா பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

பொது விவசாய திட்டம் செயல் படுத்துதல்

பூவராகவன் பொன்னுசாமி என்ற  ஒய்வு பெற்ற விவசாய அலுவலரை ஆறுகட்டிற்கு அழைத்து வருகிறார். அவர் பல இடங்களுக்குச்  விதை வாங்கி வருகிறார்‌. விதைகளை எடுத்து ஊறப்‌ போடுகிறார்‌. வீடுவீடாக அளந்து கொடுத்து விட்டு வருகிறார்‌. இரண்டு லாரி எரு மூட்டைக் கொண்டுவந்து இறங்குகிறார். அதை  வீடு வீடாகக்‌ பிரித்துக் கொடுக்கிறார். நாற்றங்காலை மூழ்க அடிக்கிறார்‌. பிறகு வடிய விடுகிறார்‌. களை எடுக்கவும், பூச்சி விரட்டவும்   இயந்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். அந்த ஆண்டில் இப்படி இரண்டு போகம் விளைச்சலை விளைவிக்கின்றார்.

மார்கழி கழிந்து தைப்பிறந்தது. ஆறுகட்டி அமளிப்பட்டது. வழக்கமான பொங்கலாக இல்லை அது. அன்று மாலை நாலு மணிக்கு ஏழெட்டுப்‌ பேராகப் பூவராகன் வீட்டிற்குள்‌ நுழைந்தார்கள்‌. பூவராகன்‌ அவர்களை வரவேற்று, ‘பால்‌ பொங்கித்தா’ என்று கேட்க, ‘இந்த வருஷம்தான்‌ பொங்கிச்சு’ என்று ஆதிமூலம் கூறுவதோடு, ஆதிமூலம் உள்ளிட்ட அனைவரும்  இந்நாள் வரை தங்கள் ஊர் ஊராக இல்லை ஒருவர் மேல் ஒருவர் பொறாமை அவநம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தோம் என்றும் இப்போது எல்லோர் மனமும் மாறிவிட்டது என்று மனம் திறந்து பேசுகிறார்கள். பிறகு இந்த வருடம் ஊர் பொதுவாகப் பூவராகவன் இருக்க வேண்டும் என்று ஊர் மக்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்கள். பூவராகவன் அனைவருக்கும் சேர்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டுத் தன் மனைவியைக் கண் சாடையால் இத்தனை மாற்றத்திற்குக் காரணமான செங்கம்மாவை சமையல் கட்டிலிருந்து வீட்டுக்கூடத்திற்கு அழைத்து வரச் சொல்கின்றார்.

செங்கம்மா கூடத்திற்கு வந்தபிறகு ஊர் மக்களிடம் பூவராகவன், “சாமி பெரியவனா, மனுஷன்‌ பெரியவனா? நிச்சயமா சாமிதான்‌ பெரியவன்‌. ஆனா சாமியோட அம்சம்‌ துளித்துளி மனுஷன்‌ கிட்ட இருக்குன்னு எப்படிக்‌ காமிக்கிறது அவன்‌ உழைச்சு உழைச்சு சாமி கொடுத்தது அத்தனையையும்‌ சரியா உபயோகப்படுத்தினாத்தான்‌ உண்டு. நாம உழைக்க உழைக்கத்‌ தான்‌ சாமி எத்தனை பெரிசுன்னு தெரிஞ்சுக்கவும்‌ முடியும்‌. முடியும்ன்னு எனக்குத்‌ தெரிஞ்சது இவங்களாலேதான்‌. சாமியை அப்பறம்‌ கவனிக்கலாம்‌. ஊரை முதல்லே கவனின்னு இவங்க சொல்லல்லே, நீங்களும்‌ இங்க வந்திருக்கமாட்டீங்க. நானும்‌ இங்க உட்கார்ந்திருக்க மாட்டேன்‌. கோவில்லே போய்‌ மூக்கை பிடிச்சுக்கிட்டோ, பாசுரம்‌ சொல்லிக்கிட்டோ பொழுதைப்‌ போக்கிக்கிட்டிருப்பேன்‌?”8 என்று தனக்கு ஊர்ப்பொது விவசாயம் செய்வதற்கான யோசனை கூறிய செங்கம்மாவை ஊர்த் தலைவராக்க வேண்டும் என்கிறார்.

செங்கம்மா தான் பெண் என்றும் ‘உலகத்திலே இல்லாத சேதியாயிருக்கேன்னு சுத்து வட்டாரத்திலேருந்தெல்லாம்‌ வேடிக்கை பார்க்க வருவாங்க’என்று மறுக்க ‘பொம்பிளையாவது, ஆம்பிளையாவது சமத்தா, கண்டிப்பா, தைரியமா, பிரியமா காரியம்‌ செய்தாகணும்‌ இதைச்‌ செய்யறவங்க யாரா இருந்தா என்ன? நான்‌ போட்ட வார்த்தையை எடுக்கமாட்டேன். சொல்லியாச்சு’ என்று‌ பூவராகன்‌ ஊர் மக்கள் அனுமதியோடு பெண் ஊர் தலைவியாக நிறுத்தப் படுவதாகத் தி.ஜானகிராமன் படைத்துள்ளதை அறியலாம்.

செங்கம்மாவின் கிராம நிர்வாகம்

செங்கம்மா ஊர் பொறுப்பு ஏற்றப் பிறகு எவ்வித அதிகாரத் தோரனையின்றி கடந்த ஆண்டுகளில் மான்ய வருமானமில்லாததால் ஊரை விட்டுச் சென்ற  தச்சன்‌, கருமான்‌, பரிஹாரி ஆகிய மூவருக்கும் ஆள் அனுப்பி வரவழைத்து  வீட்டுக்குப் புதுக்கூரை போட்டு மூன்று குடும்பத்தைக் குடி அமர்த்துகின்றாள். அதேபோலக் குருக்களைக் குடி அமர்த்துகின்றாள். அறுவடை முடிந்தபிறகு  குளம்‌, வாய்க்கால்‌ வெட்ட முடிவெடுக்கின்றாள்‌. பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்‌ முடிந்த பிறகு  பிடாரி கோயிலுக்கும்‌ காப்புக்‌ கட்டித்‌ திருவிழா நடத்தத் திட்டம்‌ போடுகின்றாள்.

செங்கம்மா அதிகம் படிக்காத பெண்ணாக இருந்து ஆறுகட்டிமக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு அவளுடைய இளம் பருவ வாழ்க்கை அனுபவம் தான் என்று தி.ஜானகிராமன் படைத்துள்ளார்.

அவள் பிறந்த ஊரில்  தந்தைக்கு முப்பது ஏக்கர் மானாவாரி நிலம் இருந்தது. தண்ணீர் வசதி இல்லாமல் அவர்களின் உணவுத் தேவையைக்கூட விளைவிக்க முடியாமல் வறுமையில் வாழ்ந்து வந்தார்கள். பெரியப்பாவும் பெரியம்மாவும் வரண்டநிலத்தில் உழைத்து உழைத்து மடிந்தார்கள். தந்தையும் அருகில் உள்ள நகரில் தங்கி வேலை செய்து சம்பாதித்து வருடத்தில் இரண்டு முன்று தடவை மட்டும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார். நடுத்தர வயதில் கணேசப் பிள்ளை  இரண்டாம் தாரமாகச் செங்கம்மாவை பெண் கேட்டபொழுது அவள் தந்தை மறுக்காமல் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார். செங்கம்மாவிற்கு குழந்தைகள் பிறக்காவிட்டாலும் ஊர் மக்கள் அனைவரின் சுகதுக்கங்களில் முதல் ஆளாக உதவிக்குச் செல்கின்றாள். தண்ணீர் வசதியின்றி வரண்ட நிலத்தில் உழைத்துக் கஷ்டபட்ட தன் குடும்பத்தையும், அடிப்படையிலேயே நல்ல  நிலங்களையும் நீர் வளங்களையும் வைத்துக்கொண்டு முறையாக விவசாயம் செய்யாமல் இருக்கின்ற ஆறுகட்டி கிராமம் மக்களையும் கண்டு வருந்துகின்றாள். ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் பூவராகவனுக்கு ஊர் பொது  நிலங்களைப் பொது விவசாயம் செய்ய யோசனை கொடுக்கின்ற பாத்திரமாகத் தி.ஜானகிராமன் படைத்திருப்பதை அறியலாம்.

மக்களின் தன்னம்பிக்கை மேம்பாடு

அரசாங்கத்திடமிருந்து நெல் விளைசலுக்கு விவசாய மான்ய உதவிகளைப் பெற்று நெல் விளைந்த பிறகு அரசு நெல் கொள்முதலுக்கு ஒத்துழைக்காத மக்கள் மனநிலை நல்ல விளைச்சலுக்குப் பிறகு மாறுவதாக, “முன்னெல்லாம்‌ ரெவின்யூ இலாக்காவிலேர்ந்து யாராவது வந்தான்னா கதவைச்‌ சாத்திக்கிட்டு அத்தனை பேரும்‌ கொல்லை வழியாலே அக்கரைக்குப்‌ போயிடுவோம்‌. அதுவும்‌ நெல்லு கொள்முதல்‌ பண்றேன்னு யாராவது வந்தாங்க, ஊரிலே ஒரு ஆம்பிள்ளை சிங்கம்‌ இருக்காது. நானே முதநா கூப்பிட்டு உபதேசம்‌ பண்ணிடுவேன்‌. யப்பா நாளைக்கு ப்ரெக்யூர்மெண்டு ஆபீசர்‌ வரான்‌. முந்திரி கொட்டை மாதிரி பத்து மூட்டைக் கொடுக்கிறேன்னு, முப்பது மூட்டைக் கொடுக்கறேன்னு மாரைத்‌ தட்டிக்கிட்டுப்‌ போய்‌ நிக்காதீங்க. கதவைத்‌ தாப்பாப்‌ போட்டுக்கிட்டு எங்கியாவது போய்‌ இருந்துப்பிட்டு, பொழுது சாஞ்சப்பறம்‌ வாங்க, ஒரு மணி நெல்லை அந்தப்‌ பயலுவ எடுக்கப்படாது, தெரியும்ல?ன்னு உபதேசம்‌ பண்ணு வேன்‌. இப்ப பத்து மூட்டைக்கு இருபது மூட்டையைக்‌ கொடுக்கத்‌ தயார்‌.”9 தி.ஜானகிராமன் அம்பாகடாட்சம்‌ பாத்திரம் வழியாக விளக்குவதை அறியலாம்.

கிராம சுயராஜ்யம்‌

பூவராகவன் கோயில் கட்டும் முயற்சிக்கு முன்னரே ஆறுகட்டி ஊருக்கு நுழைவதற்கு தென்னை மரக் கட்டைகளால் அமைக்கப்பட்ட பாலத்தை மாற்ற வேண்டும் என்று அரசாங்க உதவியைப் பலமுறை நாடுகின்றார். அரசாங்க அதிகாரிகள் அந்த ஆண்டு கிராம வளர்ச்சித் திட்டத்தில் அந்தப் பாலம் வேலை சேர்க்கவில்லை என்றும் அடுத்தமுறை சேர்ப்பதாகக் கூறுகின்றனர். கடைசியில்‌ பூவராகனே, சொந்தமாகத் தொழில் நடத்துகிற ஒரு எஞ்ஜினீயரைக்‌ கூப்பிட்டு வேலையை ஆரம்பித்தார்‌. வேலை ஒரு மாதத்தில்‌ முடிந்து விட்டது. அதிகாரிகள்‌ தவறாக நினைத்துக்‌ கொள்ளப்‌ போகிறார்களே என்று அவர்‌களுக்கும்‌ தெரிவித்துச்‌ செலவையெல்லாம்‌ தானே ஏற்றுக்‌ கொள்வதாகச்‌ சொல்லி எஞ்ஜினீயரையும்‌ ஊருக்கு வரும்படி அழைத்து விட்டும்‌ வந்தார். அவரும்‌ ஒரு நாள்‌ வந்து பாலத்தைப் பார்த்து விட்டு, “இதுதான்‌ உண்மையான கிராம சுயராஜ்யம்‌ என்றும்‌, சர்க்காரை எதிர்பார்க்காமல்‌ தானே செய்து கொள்வது தான்‌ உண்மையான குடிமை என்றும்‌ தன்னைத்‌ தானேதான்‌ உயர்த்திக்கொள்ள முடியுமே தவிர, வெளிக்கைகளை எதிர்‌பார்ப்பது அழகல்ல என்றும்‌ பகவத்‌ கீதையிலிருந்து, ஒரு சுலோகத்தையும்‌ நிமிர்ந்து நின்று சொல்லிவிட்டுத்‌ திரும்பிப்‌ போனார்”10‌ என்று கூறுகிறார். தி.ஜானகிராமன் தன்னுடைய கிராம மக்கள் கிராமத்தின் சில அத்தியாவசிய தேவைகளை அரசாங்கத்திடம் எதிபார்க்காமல் தாங்களே நிறைவேற்றப் பாடுபட்டால் கிராமம் வளர்ச்சியையும் என்று உயிர்த்தேன் புதினத்தைப் படைத்துக் காட்டியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

தொகுப்புரை

  • தி. ஜானகிராமனின் கீழ்விடயல் கிராமம் உயிர்த்தேன் புதினத்தில் ஆறுகட்டி கிராமமாக மாற்றிப் படைத்துள்ளதை அவருடைய ‘கீழ்விடயல்’ என்ற புறச்சான்று கட்டுரையுடன் உயிர்த்தேன் புதினத்தில் ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது.
  • தி.ஜானகிராமன் தன்னுடைய கிராமத்தின் விவாசாய முறைகள், சாலை வசதிகள் (பாலம்), கோயில்கள், ஊர் மக்களின் பிணக்குகள் எவ்வாறு கிராம சுயாட்சி மூலம் மாற வேண்டும் என்று விரும்புவதை  உயிர்த்தேன் புதினத்தின் அகச்சான்று வழி விளக்கப்பட்டுள்ளது.
  • 1966 ஆம் ஆண்டிலே தி. ஜானகிராமன் கிராம சுயாட்சியில் பெண்கள் பங்கு பெற வேண்டும் என்ற சிந்தனை வெளிப்படுத்தியுள்ளதை அகச்சான்று வழி விளக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

தி.ஜானகிராமன் 1966ஆம் ஆண்டிலே ஒரு இலட்சிய மாதிரி கிராமத்தின் அம்சங்களை உயிர்த்தேன் புதினத்தில் ஆறுகட்டி கிராமமாகப் படைத்துக் காட்டிள்ளார் என்பதை அறிய முடிகிறது.

அடிக்குறிப்புகள்

  1. ஜானகிராமன். தி., தி.ஜானகிராமன் படைப்புகள். தொகுதி-2, கட்டுரைகள், கீழ்விடயல், ப.862 . ஐந்திணைப் பதிப்பகம், சென்னை - 5. மறுபதிப்பு - 2008
  2. மேற்படி, ப.862.
  3. ஜானகிராமன். தி., உயிர்த்தேன், பக்.39-40. ஐந்திணைப் பதிப்பகம், சென்னை-5. மறுபதிப்பு - 2008
  4. மேற்படி, ப.132.
  5. மேற்படி, பக்.132-133
  6. மேற்படி, ப.134.
  7. மேற்படி, ப.135.
  8. மேற்படி, ப.183.
  9. மேற்படி, பக்.205-206.
  10. மேற்படி, ப.152.