ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிறார் என்ற சொல்லாடலும் வகைமையும் - ஒரு பார்வை

அ.இந்துமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை. அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி) வேலூர் 10 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: அ.இந்துமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை. அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி) வேலூர் – 6

Abstract

The Physical, Spiritual, And Social Development And Progress Of The Children Of Tomorrows Society With Today’s Society. Is The Foundation Of The Country. Children Who Are The Foundation Of This Country Are referred In different Terms Such As Child, Adolescents, Young. These Terms In Some Places Refers To Minors Of The Same Age But In Many Places It Refers To Children Of Different Ages. The classification of children in United Nations International Children’s Education Fund, Government Of Indian Law, Hospital, Theater, Schools, and literature At Each Level can be known Through This Article. The Purpose Of This Article Is to Highlight The Fact That The development children literature Improves The Age Of Children And Their Understanding Of The Age Of Children.

Key Words

     Children, sirar, children age, Who is Children?

 ஆய்வுச் சுருக்கம்

     இன்றைய சமூகத்தோடு வளரும் நாளைய சமூகமான சிறார்களின் உடல் உள்ள, ஆன்மீக, சமூக, ரீதியான வளர்ச்சியும் முன்னேற்றமுமே நாட்டின்  அடித்தாளமாக அமைகின்றன. இந்த அடித்தளமான சிறார்களே  பல இடங்களில் ‘குழந்தை’ ‘சிறார்’ ‘இளையோர்’ போன்ற சொற்களிலும் பயன்படுத்தபடுகின்றனர். இச்சொற்கள்  சில இடங்களில் ஒத்த வயதுள்ள சிறாரரை குறிப்பதாக அமைந்தாலும் சில இடங்களில் வேறுபட்ட வயது கொண்டோரை குறிப்பதாகவும் அமைந்துள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறார் நிதி மையம், இந்திய அரசின் சட்டம், மருத்துவமனை, திரையரங்கு, பள்ளிகள், இலக்கியங்கள் என ஒவ்வொரு நிலையிலும் சிறார் எப்படி வகைப்படுத்தபடுகின்றனர் என்பதை இக்கட்டுரை வழி அறியலாம். இச்சிறார்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக எழுந்த இலக்கியங்கள் சிறார்களின் வயது நிலையை குறிப்பனவாக அமைந்துள்ளனவா என்பதும் சிறார்களின் வயது குறித்த புரிதலுமே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றன.

திறவுச் சொற்கள்

      சிறார் யார்? சிறார், சிறார் வயது, பள்ளிகளில் வயது,  இந்திய சட்டத்தில் சிறார் வயது

முன்னுரை

      பரிணாம வளர்ச்சியில் மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது மொழியே ஆகும். இம்மொழியே மனித கண்டுப்பிடிப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மொழியை பயன்படுத்தி பேசத் தொடங்கிய மனிதனின் வளர்ச்சி படிநிலையாய், அடுத்த மைல்கல்லாய் இலக்கியங்கள் எழுந்தன. தமிழில் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் என கால வகைப்பாட்டில் இலக்கியங்களை வகைப்படுத்துகிறோம். இவற்றை வடிவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தும்போது சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் என்று வகைப்படுத்தப் படுகிறது. வயதின் அடிப்படையில் வகைப்படுத்தும்போது  மழலை இலக்கியம், சிறார் இலக்கியம், பெரியோர் இலக்கியம் என வகைப்படுத்தலாம். இந்த வயதின் அடிப்படையிலான இலக்கிய வகைப்பாடு என்பது இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய கொடை எனலாம்.

சிறார் – சொல், வயது வரையறை

      “பழமையை பறைசாற்றும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சிறார் மற்றும் குழந்தை எனும் சொற்கள் காண இயலவில்லை. ஆயின் சிறுவன், புதல்வன் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. “ஆய்பெருஞ் சிறப்பில் சிறுவன் பெயர“ (புறத்திணை 24:32) ‘புதல்வர் பயந்த புனிறுதீர் பொழுதின்’ (கற்பியல் 5:27) என்பனவாம் சேய் என்பது சங்க இலக்கியத்தில் குழந்தையைச் சுட்ட வழங்கப்படினும் தொல்காப்பியத்தில் அச்சொல் தொலைவிடம் என்னும் பொருளில் மட்டுமே (அகத்திணை 40:8 புறத்திணை 35:3) இடம் பெற்றுள்ளது. குழவி,மகவு (புறத்திணை 24:25,19, புறத்திணை 319:10-11) என்பன இளமைப் பெயராக மட்டும் அமைய சிறுவன், புதல்வன், மகள் என்பன இளமைப்பெயருடன் உறவுப் பெயராகவும் அமைகின்றன. சங்க இலக்கியத்துள் புதல்வன், மகள், மகன், சிறுவன், குழவி, சேய் என்பன பரவலாக காணப்படுகிறது. குழவி (புறம் 379: 14 -15, பதிற்றுபத்து 6:9,) சிறுவர் (அகம் 66: 1-4, ஐங்கு 85 புறம் 100:10-11) இவற்றுடன் சிறார், சிறான், சிறுமி, மக்கள், மகாஅர் எனும் சொற்களும் இடம் பெற்றுள்ளன. சிறார் (புறம் 32:7-10) சிறுவர், சிறாஅர் என்று நீட்டி விளிக்கப்படுதல் பற்றி (புறம் 291:1) இடம் பெற்றுள்ளன. இங்குக் குழந்தை, புதல்வி என்பன இடம் பெறவில்லை. இளமைப்பெயர், உறவுப்பெயர் எனும் இரண்டிலும் இவை வழங்கப்பட்டுள்ளன.

      சிறார் என்னும் சொல்லானது பசுமை+இலை = பாசிலை என்றாவது போல் சிறுமை+ஆர் = சிறார் என்றாயிற்று எனவும் அறுவர் எழுவர் என்பனபோலச் சிறு+அர் = சிறுவர் என்றாகி அது பின் சிறார் ஆகிறது எனவும் கொள்ளலாம். சிறு என்னும் வேர்ச்சொல்லோடு ‘மை’ எனும் பண்பு விகுதி இணைவால் சிறார்க்குத் தோற்றுவாயாக அமையும். இச்சொல் இளமையுடையது குறைபாடுடையது என்னும் பொருள்படுகிறது.

      சிறுவர் சிறார் எனும்பொழுது வயதில், அறிவில், பட்டறிவில், பழக வழக்கங்களில் குறைவுடையோரை  வளர்ச்சியை, நிறைவை நோக்கி சென்று கொண்டிருப்பவரைக் குறிப்பதாக கொள்வோம். வாழ்வின் தொடக்கப் பருவத்தில் நின்று முழுமையை நோக்கி நடைபோடுவோராய் கருதலாம் என்பர்”1 என்ற கருத்துகளின் வழி சிறார் என்பவர் முழுமை நோக்கி நகர்பவர் என்ற பொருளில் அதாவது வளரக்கூடியவர் என்று பொருள் அமைவதை உணர முடிகிறது.

மருத்துவ மனைகளை பொறுத்தவரை குழந்தைகளுக்கான பிரிவு என்பது 0 -18 வயது வரை உள்ளவர்களுக்கான பிரிவாக உள்ளது. (“The Legal definition of a ‘child’ is age related and refers to an individual that is up to the age of 18 but not including their 18th birthday”2) இருந்த போதும்  0 முதல் 16 வயது வரை உள்ளவர்களையே சிறார் பிரிவிலும் அதற்கு மேற்பட்ட வயதினரை பெரியவர்களுக்கான பிரிவிலுமே அனுமதிக்கப்பட்டு மருத்துவம் அளிக்கப்படுகிறது. தேவை ஏற்படின் 17 முதல் 21 வயது வரை உள்ளவர்களும்  மருத்துவ ஆலோசனையின் படி சிறார் பிரிவிலே மருத்துவ சேவையைத் தொடரவும் வாய்ப்பு உள்ளது.

திரைத்துறையை பொறுத்தவரை CARA (Classification And Rating Administration)  என்ற அமைப்பானது  பதினெழு வயதிற்கு உட்பட்டவர்களை சிறார் என்ற வகையில் அடக்குகிறது. (”G – General Audiences, PG – Parental Guidance Suggested. Some Material May Not Be Suitable For Children. PG – 13  Parents Strongly Cautioned. Some Material May Be Inappropriate For Children Under 13, R – Restricted. Children Under 17 Require Accompanying Parent Or Adult Guardian, NC – 17 No One 17 Under Admitted”3 )

பள்ளிகளை பொறுத்தவரை குழந்தைமை என்பது ஐந்து வயதிற்கு உட்பட்டவர் என்றும் ஐந்து வயது முடிந்தவர்களை 1 ம் வகுப்பில் அனுமதிக்கலாம் என்றும்  அறியலாம். ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி எனவும், ஆறாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலைப்பள்ளி எனவும் ஒன்பது பத்து வகுப்புகளை உயர்நிலைப்பள்ளி எனவும் பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளை மேனிலைப்பள்ளி எனவும் பிரிப்பதிலிருந்து பள்ளி கல்வி என்பது 17 வயதுவரை தொடர்வதை சிறார்களுக்கான வயது வரையறை என அரசு நிர்ணயம் செய்திருப்பதை அறிய முடிகிறது.

    புதிய தமிழ் அகராதியானது ” சிறுமி – இளம்பெண்  சிறுவன் – இளைஞன், மகன்”18 என்றும் பி.வி. நமச்சிவாய முதலியாரின் அகராதி ”சிறுவன்- இளையோன், மகன், சிறுமி – புத்திரி, மகள்”19 என்றும் குறிப்பிடுகிறது இவ்விரண்டு அகராதியிலும் சிறார் என்ற சொல் இடம்பெறவில்லை. தமிழ் – தமிழ் அகர முதலியானது ”சிறார் – சிறுவன்”20 என்று பொருள் தருகிறது  செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ”சிறார் – சிறுவர்”7 என்று பொருள் தருகிறது.  தி நியூ எண்சைளோபிடியா பிரிட்டானிக்கா என்னும் ஆங்கில கலைக்களஞ்சியம் ”பதினான்கு அல்லது பதினைந்து வயது வரை உள்ளவர்களைச் சிறுவர்கள்”8 என்றும்   நியூ ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியானது ”பிறப்பிற்கும் பருவ வயதிற்கும் இடைப்பட்ட வயதினை உடையவர்களைக் குழந்தைகள்”9 என்கிறது. ஆய்வுத் தரவின்படி  சிறார் என்பது இருபாலின பொதுச் சொல்லாக அமையாது ஆண்பாலை குறிக்கும் சிறப்பு சொல்லாகவே வழங்கப்பட்டு வந்துள்ளது.  சிறார் இலக்கியம் புத்தெழுச்சி பெறத்தொடங்கியுள்ள இந்நூற்றாண்டிலே சிறார் என்பது இருபாலின பொதுச்சொல்லாக சிறப்புப் பெயராக வழங்கி வருவதை அறியலாம்.

ஆய்வுத் தரவின்படி எந்த ஒரு அகராதியிலும் சிறார் என்பதற்கு வயது குறிப்பிட்ட வரையறை ஆனது ஒன்றென அமையவில்லை என்பதைக் காண முடிகிறது.  ”ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை உரிமைப்பிரகடனம் ”பதினெட்டு வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே”10 என்று கூறுகின்றது. “1992 டிச 11 அன்று இந்திய அரசு ஐ.நா சபையின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையையும் அதிலுள்ள விதிகளையும் ஏற்றுக்கொள்வதாக ஐ.நா சபைக்கு உறுதியளித்தது. அந்த உடன்படிக்கையின் முதல் விதி 18 வயது நிறைவடையாத அனைவரும் குழந்தைகள் என்பதாகும். எனவே இந்திய நாட்டிலுள்ள 18 வயது நிறைவடையாத அனைவரும் குழந்தைகள் என்பதை இந்திய அரசு தனது சட்டங்களிலும் உறுதி செய்திருக்கிறது.”11 இளஞ்சிறார் நீதி சட்டம் 2015, குழந்தைகளை பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009, குழந்தை திருமண தடை சட்டம் 2006, குழந்தை உழைப்பு சட்டம் 2016, சிகரெட், புகையிலை பொருட்கள் சட்டம் 2003, போன்ற சட்டங்களில் வயது வரைமுறை சட்டத்திற்கு ஏற்ப மாறுபாடு அடைந்த போதும் பெரும்பாலான சட்டங்கள் சிறார்களின் வயதை 18 வயதிற்கு உட்பட்டதாக குறிக்கிறது. இதிலிருந்து சிறார் என்பவர் இந்திய சட்டத்தின் படி   18 வயதிற்கு முற்பட்டவர் என்று குறிப்பது தெளிவாகிறது.

இலக்கிய வகைமையை நோக்கும்பொழுது ”குழந்தை என்னும் சொல் பள்ளி செல்லும் பருவத்துக்கு முந்திய குழந்தைகளுக்கே பொருத்தமாக இருக்கிறது. வயதுக்கேற்ப சிறுவர் இலக்கியத்தை பிரிப்பவர்களும், 5-8 வயதினர் 9-12 அல்லது 9-14 வயதினர் என்று பிரிக்கின்றனர். இவ்விரு பிரிவினரையும் குழந்தைகள் என்று குறிப்பிடுவதை விடச் சிறுவர்கள் என்று குறிப்பிடுவது பொருந்தும்”12 என்ற நா. கடிகாசலம் அவர்களின் கூற்று சிறார் வயதின் பேரெல்லை பதினாறு என்பதையே குறிக்கிறது.

“அறிவியலில் 7 வயது முதல் 18 வயது உடையோரை இளம் வயதினராக சிறுவராகக் குறிக்கின்றனர். இவருள்ளும் 14 வயது வரம்புள் அடங்குவோர் குழந்தைகளாகவும், அதற்கு மேற்பட்டோர் (14 வயது முதல் 18 வயது வரை) இளம் வயதினராகவும் (Young Persons) குறிக்கப்படுகின்றனர். இவற்றினின்றும் வாழ்க்கை பற்றிய தெளிந்த  கண்ணோட்டத்தினைப் பெறாத நிலையில் வாழ்க்கையின் பொறுப்பினை, கடமைமையினை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவதற்கு  முன்பாக அமையும் இப்பருவத்தின் வயதினரை (7 முதல் 18 வயது வரை) சிறார் எனக் கொள்ளலாம். உருவத்தோற்றம் இளைஞர் ஆக அமையினும் பண்படிப்படையில் இவ்விளம் வயதினர் சிறுவராகக் கருதப்படுகின்றனர்.”13 என்ற வெ. தனராசு அவர்களின் ஆய்வின் படி சிறார் என்பவர் 7 வயது முதல் 18 வயது கொண்டவர் என்பது அறிய முடிகிறது.  ”11 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு எழுதப்பெறும் நாடகம் என்று குழந்தை நாடகத்தை வரையறை செய்பவர் பேரா. தி.க. சண்முகம். ஏழு வயது முதல் சேர்த்துக் கொள்ளலாம் என்பார் எழுத்தாளர் அகிலன் ”14  என்பதும் அவரது ஆய்விற்கு துணை சேர்த்து சிறாருக்கான வயதினை ஏழு வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவரை குறிக்கும் என்ற தெளிவை ஏற்படுத்துகிறது.

            ”நாட்டார் குழுவினருள் வயதை அடிப்படையாகக் கொண்டு சுமார் 8 வயது முதல் 14 வயது வரையிலான இருபால் சிறுவர் சிறுமியரே சிறார்கள் எனலாம். சிறார் என்னும் இச்சொல் பால்வேறுபாடு பாராட்டாமல் சிறுவர் சிறுமியரைக் குறிக்கும் பொதுச் சொல்லாகும். சிறார்கள் இந்தச் சமூகத்தின் இணைப்பிரியா அங்கத்தினர்கள். சமூக நிகழ்வுகளிலே அவர்களுக்கு முக்கிய இடமுண்டு. சிறார்களை விவரம் தெரியாதவர்கள் என்றும் அறியாப் பிள்ளைகள் என்றும் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் சமூகத்தின் ஒரு சாரார் நினைத்தாலும் அவர்கள் வளரக்கூடியவர்கள் என்பதை நினைவில் கொள்ள முடியும்  என்கிறார் மரியசூசை. மேலும், அவர் ”சிறார்களை சுமார் 8 வயது முதல் 14 வயது வரை என வைத்துக் கொள்ளலாம்”15 என்கிறார்.

      ”மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரை தாமே புத்தகங்களைப் படிக்க இயலாத நிலையில் உள்ள முதல் வகை குழந்தைகள். இரண்டாவதாக ஆறு வயதிலிருந்து ஒன்பது வயதுவரை உள்ள குழந்தைகள். மூன்றாவதாக பத்திலிருந்து பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட குநழ்நதைகள். பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள்”16 என்று வகைப்படுத்துகிறார் கல்வி கோபால கிருஷ்ணன்.

      ”மழலை பேசும் குழந்தைகளேன்றும், ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றும், எட்டு வயது வரையுள்ள சிறுவர்களுக்கென்றும், அதற்கு மேற்பட்டவர்களுக்கென்றும் வகைப்படுத்திக் கொண்டு படைப்புகள் உருவாயின”17 என்ற நாரா நாச்சியப்பன் அவர்களின் கருத்தும் குறிப்பிடத் தக்கதாக அமைவதை அறிய முடிகிறது.

குழந்தை எழுத்தாளர் பூவண்ணன் ”மூன்று வயது முதல் சுமார் பதினாறு வயது வரையுள்ள குழந்தைகளுக்காகப் படைக்கப்படுவது குழந்தை இலக்கியம்”18 என்பதிலிருந்து சிறார்  வயதை பதினாறு என இவர் கொண்டதை உணர முடிகிறது. ”குழந்தை  நாடகம் என்பது ஒரளவு அறியும் பக்குவம் பெற்ற ஐந்து வயது குழந்தை முதல் பத்து வயதுக் குழந்தை வரை சுவைக்கக் கூடிய நாடகமாகும். இந்நாடகத்தில் மழலையின் இனிமையும் பிஞ்சு உள்ளங்களின் துள்ளலுமே முதன்மை பெறத்தக்கன. இத்தகைய நாடகங்கள் இன்னும் நிறைவாகத் தோன்றவில்லை. பத்து வயதுக்கு மேல் பதிநான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தை நாடகத்தைச் சிறுவர் நாடகம் எனப் பகுக்கலாம். இந்நாடகத்தில் அறிவுச் சுமை குறைவாகவும் போதனை ஒரளவாகவும் இருத்தல் வேண்டும். பதிநான்கு வயதுக்கு மேல் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட வயதினர் படிக்கும் பார்க்கும் நாடகத்தினை இளைஞர் நாடகம் எனக் குறிப்பிடலாம்.”19  என்கிறார் ஆறு. ஆழகப்பன் இத்துடன்   ”3 முதல் 16 வயது வரை உள்ள பிள்ளைகள் படிப்பதற்காக எழுதப்படுபவையே குழந்தை இலக்கியம் மூன்று முதல் எட்டு வயதினருக்கான பிரிவு மழலையர் பிரிவு; ஒன்பது முதல் பதினொரு வயதினருக்கான பிரிவு குழந்தையர் பிரிவு; பன்னிரண்டு முதல் பதினாறு வயதினருக்கான பிரிவு சிறுவர் பிரிவு. இன்ன வயதினருக்கு இன்ன சொற்கட்டு, இன்ன பொருள் என்று அந்த வயதினர் ஏற்றுக் கொள்ளவும் எளிதாகப் புரிந்து கொள்ளவும் கூடிய வகையில் குழந்தை இலக்கியத்தை வயதுக்கேற்ற வகையில் தரம் பிரித்துப் பாடல்களை வகைப்படுத்தியிருக்கிற என்னுடைய இந்த முயற்சி, குழந்தை இலக்கிய வரலாற்றில் முதல் முயற்சி என்ற இடத்தை நிச்சயம் பெறும். இந்த நோக்கில் குழந்தை இலக்கியம் படைக்கப்படுகின்ற ஒரு போக்கும் இனி ஏற்படலாம்”20 என்ற குழந்தை கவிஞர் செல்லகணபதியின் கருத்தும் கவனத்தில் கொள்ளத் தக்கவையாக உள்ளன.

முடிவுரை

     கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் சிறார் என்பதற்கான வயது எல்லையை பொறுத்தவரை ஒவ்வொரு இலக்கிய வகை சார்ந்தும் வயது வேறுபடுவதை அறிய முடிகிறது.  சிறார்களின்  அறிதல், புரிந்து கொள்ளுதல், செயல்படுல் என்ற நிலையானது பாடலில், நாடகத்தில், கட்டுரையில் என்று இலக்கிய வகைமைகளின் அடிப்படையில் சிறார்களின் அடிப்படை வயது மாறுபடுவதை உணர முடிகிறது. எடுத்துக்காட்டாக பாடல்களை பொறுத்தவரை குழந்தைகள் பிறந்தது முதலே தாள லய அமைப்பை எளிமையாக மனதில் கொள்ளுவதை காண முடிகிறது. சொல்லின் பொருள் இன்றியும் தானே.. லாலா…. வாவா.. போன்ற ஒலிக்குறிப்புகளை மழலை ஒலிப்போடு கற்றுக்கொண்டு குழந்தைகள் விருப்பத்துடன் ஒலிப்பதை காண முடிகிறது. நாடகம் அடிப்படை புரிதலைக் கொண்ட கலை இலக்கியமாக அமைவதால் ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளையே இதில் ஈடுப்படுத்த இயலும். எனினும் கொண்டாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சில நாடகங்களை மூன்று வயது முதலே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யவும் இயலும் என்பதையும் அறிய இயலுகிறது. எனவே, நாடகக்கலையை பொறுத்தவரை சிறார்களுக்கான வயது எல்லை என்பது ஏழு வயது முதல் 17 வயது வரை எனத் தெளியலாம். பொதுவில் பார்க்கும்பொழுதும் பள்ளிக்கு செல்லும் ஐந்து வயதிற்கு மேற்பட்டவரையும் பதினெழு வயதிற்கு உட்பட்டவரையும் சிறாராக கொள்ளலாம். ஐந்து வயதிற்கு உட்பட்டவரை குழந்தைகள் என்று கொள்ளலாம் என்று துணியலாம்.

அடிக்குறிப்புகள்

  1. ந.கடிகாசலம் ச. சிவகாமி, சங்க இலக்கியக் கவிதையில் நோக்குச் சிந்தனைப் பின்புல மதிப்பீடு பக் 173 -175
  2. NHS Foudation Trust., Guideline for admission of Children and young people to adult Wards pg 5
  3. National Associatin of Theater oWners. Inc Classification And Rating Rules Washington, D.C.20036 Effictive  as revised July 24,2020
  4. ஆசிரியர் குழு, உமா பதிப்பகம் கோலாலம்பூர்
  5. Tamil Professors & Scholars The Coronation Tamil Dictionary P.V. Namasivaya Mudaliyar 1928
  6. தமிழ் இணையக் கல்விக்கழக தமிழ் – தமிழ் அகரமுதலி
  7. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி – 2004 மூன்றாம் மடலம் இரண்டாம் பாகம் பக் 130.
  8. The New Encyclopaedia Britannica, Vol.4 Pg. 228
  9. New Oxford Advanced Learner’s Dictionary, 7th Edition, pg. 256
  10.  (பிரேமா ரேவதி, ‘குழந்தைகள் சுமங்கலிகள் லாபம்’ , காலச்சுவடு, ஜீன் 2007, பக் 29
  11. (பேரா. ஆண்ரு சேசுராஜ் .ம குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான தகவல் திரட்டு பக் 5)
  12. கடிகாசலம் .நா., (ப.ஆ.) தமிழ் ஆய்வுக் களங்கள் பக் 102
  13. வெ.தனராசு 90களில் சிறுவர் இலக்கியங்கள் ஓர் ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் – 2011
  14.  பேரா. சு.சண்முகசுந்தரம். தமிழ் நாடகச் சரித்திரம் முதல் பதிப்பு 2008 காவ்யா பதிப்பகம்.
  15.  அ.மரியசூசை ச,ச. வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீதியும் கேலியும் போதிவனம் வெளியீடு நவம்பர் 2011 பக் 29
  16. கல்வி கோபால கிருஷ்ணன், எழுதுவது எப்படி? தொகுதி – 1 மகரம்(தொ.ஆ) பக் 387
  17. நாரா. நாச்சியப்பன் எழுதுவது எப்படி? தொகுதி – III  மகரம் (தொ.ஆ) பக் 376
  18. பூவண்ணன், ‘தேசியக் கருத்தரங்கம் முதன்மை உரை’ , சிறுவர் இலக்கியம் பக் 5
  19. திரு. ஆறு. அழகப்பன், நாடகக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும், ஸ்ரீ ராமகிருஷ்ண மின் அச்சகம், சிதம்பரம் முதல் பதிப்பு 1987 பக் 286
  20. குழந்தை கவிஞர் செல்லகணபதி  மணக்கும் பூக்கள் முன்னுரை பக் 23