ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நவநவீன புனைவுகளில் சுயவிலகலும் தற்சார்பின்மையும்

முனைவர் செ.ர. கார்த்திக் குமரன்,  உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை 10 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: முனைவர் செ.ர. கார்த்திக் குமரன்,  உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 09.

ஆய்வுச்சுருக்கம்

      சமகாலங்களில் படைக்கப்படும் படைப்புகளானவை தொடர்ந்து மாற்றம்பெற்று வந்துள்ளதுடன், சோதனை ரீதியிலான தன்மையிலும் அமைந்துள்ளன. இதனால் மரபார்ந்த வடிவம், உருவம், உள்ளடக்கம் வரையறைகளை மீறிய படைப்புகள் வெளிவருகின்றன. படைப்பாளர்கள் தான் இயங்கும் சூழல் மற்றும் அனுபவத்திற்கேற்பத்தான் படைப்பு முயற்சிகள் புதுவிதப்போக்கினையும் பெறுவதுண்டு. அந்தவகையில், வடிவத்தில் புதுமையைப் புகுத்திய படைப்பான நகுலனின் ‘நவீனன் டைரி’யும் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே:சில குறிப்புகளும்’ ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்விரு படைப்புகள் வெளிவந்த காலம், படைப்பு(வாசகர்) பெறும் கவனம், எழுத்தாளர்களின் நிலை போன்றவற்றை ஆராய்வதாகவும் இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது.

கருச்சொற்கள் : நவீன இலக்கியம், நாவல், நகுலன், சுந்தர ராமசாமி, நவீனன் டைரி, ஜே.ஜே:சில குறிப்புகள், வாசகர் கவனம், எழுத்தாளர்களின் நிலை.

Abstract : The Works of contemporaries are constantly evolving and experimental. Thus works that transcend the boundaries of traditional form, image, and content and experience in which the creators operate. Thus, Nagulan ‘Naveenan Diary’ and Sundara Ramasamy  ‘J.J:Sila Kurippugal’, which are innovative in form, are taken into consideration. The study also seeks to exmine the period in which the two works were published, the focus on which the work (reader) received, and the status of the authors.

Keynotes : Modern literature, Novel, Nagulan, Sundara Ramasamy, Naveenan Diary, J.J:Sila Kurippugal, Attention the Reader, Status of the Authors.

தொடக்கமாக...

     தமிழ் இலக்கிய வகைமைகளில் புனைகதை வடிவமானது புதுமையானதெனினும் வாய்மொழிக் கதை மரபு தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வந்தவையே. மேலைநாடுகளில் தோற்றம்பெற்ற புனைவுகள் கீழைநாடுகளுக்கு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழ்ச்சூழலில் தோன்றின. குறிப்பாக ஐரோப்பியர்களின் வருகையினால் தமிழின் மரபார்ந்த இலக்கிய வடிவம் மாற்றம்பெற்று உரைநடை என்ற புதிய வடிவம் துலக்கம் பெற்றது. இத்துடன், காலனியக் கல்விமுறை, படித்த நடுத்தரவர்க்கத்தை உருவாக்கி, ஆங்கில மொழி சார்ந்த இலக்கியப் படைப்புகளையும் வாசிக்கச் செய்தன. இதன் விளைவாக தமிழில் புனைகதைகள்  வெளிவரத் தொடங்கின. அந்தவகையில், தமிழில் 1879ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற புதினம் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 1896ஆம் ஆண்டு பி.ஆர்.ராஜமய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரமும்’, 1898ஆம் ஆண்டு அ.மாதவையாயின் ‘பத்மாவதி சரித்திரமும்’ வெளிவந்தன. இவையாவும் மரபார்ந்த செய்யுள் வடிவத்திலிருந்து மீறிய பேச்சு மொழியை உள்ளடக்கியதாக இருந்தது. மரபிற்கும் நவீனத்திற்குமான இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இப்பிரதிகளானவை, பெண்ணடிமைத்தனம், பெண்களின் திறன், இந்து பண்பாட்டின் சாரம், சமூக ஏற்றத்தாழ்வுகள், பெண் கல்வி, மூடநம்பிக்கை எதிர்ப்பு என பலதரப்பட்ட கருத்துக்களை பேசின. இது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன.  இதன் நடையும் எளியமுறையில் அமைந்துள்ளதால், அனைத்து தரப்பு மக்களிடம் சென்றடையவும் ஏதுவாக இருந்தன. இதற்கு பின்பு துப்பறியும் நாவல்களும் வரலாற்று நிகழ்வுகளை அடியொற்றிய படைப்புகளும் வெளிவரத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, தேசியம் சார்ந்த கருத்தாக்கங்களை எடுத்துரைக்கும் விதமாக, இப்படைப்புகள் எழுத்துருவாக்கம் பெற்றன. பின்னாளில் இப்பிரதிகள் ஒவ்வொரு காலச்சூழலுக்கு ஏற்ப கதைக்கருக்களை அமைத்து கொண்டதுடன், தனிமனிதன் சார்ந்த சுயபிரக்ஞையுடன்கூடிய எழுத்துருவை தோற்றுவித்தனர். சமகாலங்களில் இப்படைப்பு முயற்சியானது மாற்றம்பெற்றதுடன், மேற்கத்திய கோட்பாட்டுகளை தங்களுடைய படைப்பினுள் புகுத்தினர். இத்துடன், இருண்மை மற்றும் அநேர்கோட்டுத் தன்மையிலும் சோதனை ரீதியான பிரதிகளை உருவாக்கினர். இத்தகையப் பிரதிகளை வாசிக்கும்போது வாசகர்களிடத்தில் ஒருவித அயர்ச்சியும் புரியாத தன்மையும் ஏற்பட்டு, இப்படைப்புகள் பலரால் நிராகரிக்கப்பட்டன. எனினும் சில குறிப்பிட்ட வாசகர்கள் மட்டுமே இதனை தங்கள் வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தினர். இவையாவும் தொடக்ககாலகட்ட புனைவுகளில் இருந்த உருவ, உள்ளடக்க, உத்திகளுக்கு பொருந்தாமல் புதிய வடிவத்துடன் கூடிய  கருத்துருவாக்களை, தன் மொழியின் வழி எடுத்துரைத்தனர். அந்தவகையில் நகுலன், சுந்தர ராமசாமி, லா.ச.ராமாமிர்தம், கோபிகிருஷ்ணன், எஸ்.சம்பத், ஜி.நாகராஜன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு போன்றவர்களின் நவீன படைப்புகள் தனித்தன்மையுடன் அமையப்பெற்றிருக்கின்றன. இவர்களில் நகுலனின் ‘நவீனன் டைரி’ மற்றும் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற இரு பிரதியின் தன்மை குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமையப்பெறுகிறது.

சுயவிலகலும் தற்சார்பின்மையும்

     1976ஆம் ஆண்டு வெளிவந்த நகுலனின் ‘நவீனன் டைரி’யும் 1981ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே : சில குறிப்புகளும்’ தன் பெயரிலேயே டைரி, (நாட்)குறிப்பு என்ற இரு புதிய வடிவத்தில் புதினத்தின் தலைப்பை அமைத்துள்ளனர். இவ்விரு படைப்புகளின் தொடக்கமே ‘மரணம்’ என்பதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மரணத்திற்கு பிறகான ஒரு மனிதனின் அல்லது படைப்பாளரின் வாழ்வியலை ஆராயும் விதமாக இப்பிரதிகள் அமைந்துள்ளன. இத்துடன், இப்படைப்புகளில் இருக்கும் முதன்மை கதாமாந்தர்களான ‘நவீனன்’ மற்றும் ‘ஜே.ஜே.’ ஆகிய இருவரின் மரணம்தான் நவீன படைப்பாளர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருந்து எழுதத்தூண்டின போலும். தமிழ்ச் சூழலிலும் குறிப்பிட்ட சில இலக்கியப் படைப்பாளர்கள் இறந்த பின்புதான் அவருடைய படைப்புகளின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பிக்கின்றனர். அப்படைப்பாளருக்கு விருதுகள் வழங்கப்படுவதோடு, அவரது படைப்புகள் குறித்த கருத்தரங்களும் நடத்தப்படுகின்றன. இதனைப்போலவே, இவர்களின் படைப்புகளில் உள்ள கதாபாத்திரங்களான நவீனன் மற்றும் ஜோசப் ஜேம்ஸ்ஸின் மரணத்திற்கு பின்புதான் அவர்களுடைய படைப்புகளில் உள்ள கருத்துருவாக்கள் ஆராயப்படுகின்றன. நவீன இலக்கியவாதிகள் தன் மொழியின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் கொண்டுள்ள போதாமையை, விரக்தியை, கோபத்தை, அக்கறையை, சுரண்டலை, அரசியலை பல்வேறு இடங்களில் பல சூழல்களை மையமாகக்கொண்டு இவ்விரு படைப்பாளர்களும் தங்களுடைய படைப்புகளில் காத்திரமாக வெளிப்படுத்தியுள்ளன.

      நவீனன் என்ற பாத்திரத்தை சித்திரித்த நகுலன், தன் உள் மனதிற்குள்ளாகவே உளவியல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளானவர். இதன் காரணமாக, அவர் தன் சுயத்தில் இருந்து விலகிச்சென்று, நவீனனாக (தன் படைப்புகளில்) தனக்கான கருத்தாக்கங்களை எழுத்துருவாக்கினார். இதேபோல, ஜோசப் ஜேம்ஸ் என்ற இலக்கியவாதி தற்சார்பு இன்றி ஏற்கனவே நிறுவப்பட்ட கருத்துகளுக்கு அல்லது படைப்புகளுக்கு எதிரான கழகத்தை உருவாக்கினார். பாலு என்ற கதைசொல்லியின் வாயிலாக ஜே.ஜே. என்னும் படைப்பாளி பற்றிய குறிப்புகளை தன் படைப்பில் சித்திரிக்கிறார் சுந்தர ராமசாமி. நவீனன் தமிழ்ப் படைப்பாளர்களை மதிப்பிடுவது போல, ஜே.ஜே. மலையாள படைப்பாளர்களை தமிழ் எழுத்துகளின் வழி காத்திரமாக மதிப்பிடுகிறார். ஒவ்வொரு படைப்பும் பெறுகின்ற இடம், புகழ், செல்வாக்கு, விருதுகள், அப்படைப்பிற்கான வாசகப்பரப்பு ஆகியவற்றைக் கொண்டு படைப்பாளர்களின் இயங்கியலை புலப்படுத்தியுள்ளார். சமூகம் மற்றும் துறைசார் நிலையில் இப்படைப்புகள் தரமற்று இருப்பதன் காரணமாக, அவர்கள் மீது கொண்ட ஒருவித வெறுப்பினையும் அதன் உண்மைநிலையையும் தோலுரித்துக் காட்டுகிறார்.

      நகுலன் தன் எழுத்துகளில் தனக்குள்ளாகவே இயங்கும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் புற உலகம் சார்ந்த எதார்த்த நிலையினையும் வெளிப்படுத்துகிறார். ஆனால், சுந்தர ராமசாமி தன் கதாபாத்திரத்தின் ஊடாக ஜே.ஜே.யின் அகம் மற்றும் புற நிலையை எடுத்துரைக்கிறார். இவ்விரு பிரதிகளும் (நவீனன் டைரி - 1976, ஜே.ஜே : சில குறிப்புகள் - 1981) வெளிவந்த ஆண்டுகளுக்கிடையே முன்னுக்குப் பின்னான காலஇடைவெளி இருந்தாலும் சுந்தர ராமசாமியின் படைப்பு மட்டுமே அதன் புதிய வடிவம் மற்றும் உருவ, உள்ளடக்கம் குறித்து (பிற) படைப்பாளர்கள் மற்றும் வாசகரிடையே பெருமளவு பேசப்பட்டன. அதற்கு முந்தைய காலகட்டத்தில் வெளிவந்த படைப்பபான நவீனன் டைரி குறித்து பேசப்படவில்லை. இதனை, நகுலன் தன்னுடைய நேர்காணலிலும் பதிவு செய்திருக்கிறார்.

      நூலாசிரியர் : டைரி வடிவில் எழுதக் காரணம் என்ன?

     நகுலன் : நாம சொந்த அனுபவத்த எழுதும்போது டைரி வடிவுல எழுதுனாத்தான் உண்மை இருக்கும். எழுத்துல போலித்தனம் கூடாது. எனவேதான் அவ்வாறு எழுதினேன். அப்பொறம் க.நா.சு.கூட எழுதியிருக்காரு. என்னோட டைரிக்குறிப்ப படிச்சுட்டுதான் சுந்தர ராமசாமி கூட ஜே.ஜே.சில குறிப்புகள்னு ஒரு நாவல் எழுதுன்னாருன்னு. ஆனா, டைரிக்குறிப்புன்னு பேரு வைக்காம சில குறிப்புகள்னு வச்சுருக்காருன்னு. நாம இத சுட்டிக் காட்டுனா தவறாயிரும். ஒரு காலத்துல அவருட்டப் பேசுறதுக்காகவே போயிருக்கேன். ஆனா மனசுக்குள் ஒரு வருத்தம் உண்டு.1 என தன்னுடைய எண்ணவோட்டத்தை பதிவு செய்திருக்கிறார். இத்துடன் தன்னுடைய படைப்புகளை பலருக்கும் கொண்டு செல்லும் அளவிற்கு பதிப்பாளர்கள் விரும்பவில்லை போலும்.  மேலும்,

      நவீனன் டைரி அச்சில் வரவே வராதோ? வரும்... என்றாலும் இந்தச் சூழ்நிலையில் வாழ்வதால் இந்தச் சூழ்நிலையில் இருந்து கொண்டுதான் பரிகாரமும் தேட வேண்டியிருக்கிறது. ஒரு உண்மை என்னவென்றால் அப்படியே நவீனனைப் போன்றவர்கள் தங்கள் புஸ்தகங்களை அச்சில் கொண்டு வந்தாலும், புஸ்தகம் முதல் பதிப்பு விற்பனை முடிவதற்குள் அவர்கள் செத்துவிடுகிறார்கள் என்பதுதான். ... பெரிய செட்டியாரை போய்ப் பார்க்கலாம். மிகவும் நாணயஸ்தர்; ஒழுங்காக விற்பனைக் கணக்கையும் பணத்தையும் அனுப்பிவிடுவார். ... அவர் சொல்வார் என்பது அவனுக்குத் தெரியும். ‘என்ன ஸார், விஷயம் தெரிஞ்ச நீங்கள் எல்லாம் கூட இப்படி ஆரம்பிக்கலாமா? நம்ம நாட்டியாவது டைரியை போடறதாவது. டயரின்னு சொன்னாலே நாள்குறிப்பு எழுதும் டயரிதான் செலவாகும்.’ எனவே அங்கிருந்து நகரவேண்டியதுதான். ... இருந்தாலும் ஒவ்வொரு கதவாகத் தட்டிப் பார்க்க வேண்டியதுதான். ஏதாவது ஒரு கதவாவது திறக்காதா என்ற முட்டாள் தனமான ஆசையால் - ஏனென்றால் எங்கே புத்திசாலித்தனமாக இருப்பது அபாயகரமோ அங்கே முட்டாள்தனமாக இருப்பது புத்திசாலித்தனம் - இல்லையா? இகரமுதல்வி!2  என தன் பிரதியினூடாக, தன் படைப்பின் நிலையை விளக்குகிறார். இப்படிப்பட்ட சூழலில் சுந்தர ராமசாமியின் படைப்பானது, ஐந்து வருடங்கள் அடுத்து வெளிவந்திருப்பினும் அதிக வாசகப்பரப்பையும் பதிப்பையும் பெற்றது எங்ஙனம்? என எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை நகுலன் சொல்வது போல,

       புதிதாகத் தொடங்கியிருக்கும் எழுத்தாளர், பதிப்பாளர் கூட்டங்களை அணுகலாம். அணுகினால் முதலில் மூலதனத்தின் பிரச்சினை. அதைக்கூட சமாளிக்கலாம் என்று அவர்கள் பேச்சின் மூலம் நம்பினாலும்(போட்ட முதலைாவது எடுத்துவிடலாம் என்ற நப்பாசை) அவர்கள் எழுத்தை நிர்ணயிப்பதை கவனிப்பது தான் ஒரு பிரச்னை. இவர்களுக்கெல்லாம் ஒருவனை அவர்கள் கண்டுபிடிப்பதெல்லாம் ஒருவன் ஒருவன் ஆன பின்னர், பிறகு அந்த ஒருவன்போல் வேறு ஒருவனும் எழுத வேண்டும். முதல் ஒருனுக்கு அவன் எழுதின பிறகுதான் அவன் ஒருவன் என்ற போகம் ஏற்படுகையில் என்ன சொல்வது. ... கடைசியாகப் பார்க்கப்போனால் இலக்கியமே இலக்கியத்திற்கு முட்டுக்கட்டையாக வரும் நிலை3 என்கிற வகையில், எழுத்தாளர் ஆவதற்கு முன் பதிப்புத்துறையை அல்லது பதிப்புத்தொழிலைத் தொடங்கினால்தான் அவ்வெழுத்துக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என்பதை மேற்கண்ட வரிகள் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு ஒரு படைப்பு வெளிவரவேண்டுமானால் எழுத்தாளர்களிடையே, பதிப்பாளர்களிடையே நிகழும் பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இதற்கிடையே எழுத்தாளர், தான் மேற்கொண்டு வரும் செயல்களை,

      தோற்றம்தான் இலக்கியம் என்றால், தோற்றங்களில் வெளிப்படும் வேற்றுமைகள்தான் இலக்கியம் என்றால், இலக்கியம் வேண்டியதில்லை. உலகமே மாறி மாறி தோன்றிக்கொண்டுதானே இருக்கிறது. இப்படிப் பேசிக்கொண்டு போவான் ஜே.ஜே.

     ஜே.ஜே.யின் கருத்துப்படி முல்லைக்கல்லும் சரி, அவனுடைய சகபயணிகளும் சரி, நிலப்பிரபுத்துவ எண்ணங்கள் கொண்டவர்கள்தாம். அவர்கள் கடவுள்களையும் மாற்றிக்கொண்டு சுரண்டலின் வெளித்தன்மையையும் மாற்றிக்கொண்டு வந்துவிட்டார்கள். சமூக அந்தஸ்தைப் பெறுவதற்கு அவர்கள் பின்பற்றும் உபாயங்கள் நிலப்பிரபுக்களைவிடக் கேவலமானவை. இவர்களுடைய உண்மையான ஆசைகள் இரண்டுதான். புகழ், பணம். இந்த லட்சியங்களை அடைய அவர்கள் தந்திர வேஷம் போடுகிறார்கள். இதற்கு எவ்வித ஆராய்ச்சியும் தேவையில்லை. அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தாலே போதும். ஆனால் இந்த வேஷம் இங்கு செல்லுபடியாகிறது.4  என்பதாக சுந்தர ராமசாமி ஜே.ஜே.யின் வழி எடுத்துரைக்கிறார்.

      சமூகத்தில் தனக்காக இடத்தைப் பெறுவதற்கு இலக்கியம் ஒரு எடுகோளாக மாற்றியிருப்பதை இது உணர்த்துகிறது. இத்தகைய நெருக்கடி நிலைகளில்தான் தீவிர எழுத்துகளை படைக்கும் படைப்பாளர்களின் படைப்புகள் வெளிவருகின்றன. இத்துடன், இப்படைப்புகளானவை கவனம் பெறாமலயே போய்விடவும் செய்கின்றன. காலமாற்றத்திற்கேற்ப இலக்கிய வடிவங்கள் மாறுபட்டாலும் அதனூடாக எழுத்து/படைப்பு சார்ந்த அரசியலும் தொடர்ந்து தன் பணியை தவறாது செய்துவிடுகின்றன. இவையெல்லாவற்றையும் மீறிதான் நவநவீன படைப்புகள் வெளிவருகின்றன. நவீன இலக்கியத்தின் வளர்ச்சியானது, படைப்புகள் வெளிப்படுத்தும் காத்திரமான கருத்தாக்கங்களில்தான் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றன. இதனை தேர்ந்த நுண்வாசகர்கள் மூலமே சிறந்த மற்றும் தரமான படைப்பை கண்டுணர்ந்து வளர்த்து செல்ல முடியும். அப்படியில்லாமல், அரசியல் மற்றும் இன்னபிறவற்றின் வாயிலாக வெளிவரும் எழுத்துகள் தொடர்ந்து நிலைபெற்றிருப்பதில்லை.

      இதனையே, இப்போது பத்திரிகைகளின் தேவை தொடர் கதைகள். நூலாலைகள் துணி ஆலைகள்  ஆகிவிட்டன. நாளை பத்திரிக்கை முதலாளிகளுக்கு நாடகம் என்ற பண்டம் நினைவுக்கு வரும். உடனடியாக நாடக பாக்டரிகள் திறக்கப்படுகின்றன. அனைத்தும் இலக்கிய முன்னேற்றத்தைக் கருதித்தான். உடனே முல்லைக்கல் ஒரே இரவில் (சுருங்கிய நேரத்தில் எழுதப்படுவது கலைஞனின் படைப்பு வளத்தைக் காட்டக்கூடும் என்ற எண்ணம்) தான் ஒரு நாடகம் எழுதிவிட்டேன் என்பான். உடனே ஒரு சோட்டா விமர்சகன், முல்லைக்கல் இப்சன் ஆகிவிட்டான் என்பான். நம் மொழியில் இப்சன்கள் உண்டு. நாடகங்கள் இல்லை. இரண்டு ஷெல்லிகள், மூன்று கீட்ஸூகள், ஏழு வால்ட் விட்மன்கள் இருக்கிறார்கள். கவிதை இல்லை. பெர்ட்ரண்ட ரஸ்ஸல்களுக்கும் குறைவில்லை. ஆனால் தத்துவ விசாரம் கிடையாது.5 என சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

      ஒரு கலைஞன் தான் படைப்பதை விட அப்படைப்பை வெளியிடுவதில்தான் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால்தான் வடிவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து இவ்விரு படைப்புகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே : சில குறிப்புகள் பேசப்பட்ட அளவிற்கு நகுலனின் நவீனன் டைரி பேசப்படவில்லை. அதற்கு காரணம் நகுலன் எழுத்தை மட்டுமே நம்பி இருந்ததால்தான். டைரியில் குறிப்புகள் எழுத முடியுமே தவிர குறிப்புகளை வைத்துக்கொண்டு புதுவித டைரியை உருவாக்க முடியாது.

நிறைவாக

     நவீன இலக்கியம் மனித மனங்களின் எண்ணங்களையும் அனுபவங்களையும் பேசியதோடு மட்டுமல்லாமல் தனிமனித சுயவிலகல் மற்றும் தற்சார்பின்மையும் கூட ஒரு தேர்ந்த இலக்கியப் படைப்பை உருவாக்க முடியும் என்பதை இவ்விரு பிரதிகள் நிரூபித்துள்ளன. இத்துடன், இன்றைய எழுத்து அரசியலில் ஒரு பிரதி முதன்மைபெறுவதற்கான காரண, காரியங்களை அறியவேண்டிய சூழல் உருவாகியுள்ளதையும் இதன் வாயிலாக உணரமுடிகின்றது. மேலும், சமகாலங்களில் வெளிவருகின்ற படைப்புகள் பெறும் விருதுகளையும்கூட ஆராய வேண்டிய தேவையிருப்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

1. https://kanali.in/nagulan-nerkanal/

2. நகுலன், நவீனன் டைரி, பக்.47-49.

3. மேலது., ப.50.

4. சுந்தர ராமசாமி, ஜே.ஜே : சில குறிப்புகள், பக்.106-107.

5. மேலது., பக்.107-108.