ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

'பிள்ளை அழுத கண்ணீர்' எனும் சிறுவர் நாடகமும் அதில் மேலெழும் சூழலியல் அறமும் : ஓர் ஆய்வு

து.கௌரீஸ்வரன், விரிவுரையாளர், நுண்கலைத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, 10 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்:

து.கௌரீஸ்வரன், விரிவுரையாளர், நுண்கலைத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை,

T.Gowrieeswaran, B.A(Hons), M.Phil (Drama and Theatre),PGDE, Lecturer, Department of Fine Arts, Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka.

ஆய்வுச் சுருக்கம் :

நாடக அரங்க ஆற்றுகைகள் பல்வேறு வகைப்பட்டவையாகவும் வித்தியாசங்கள் நிரம்பியவையாகவும் காணப்படும் பின்னணியில் சிறுவர் நாடகங்களும், சிறுவர் அரங்க நடவடிக்கைகளும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. சிறுவர் நாடகம் எனப்படுவது சிறுவர்களைப் பார்வையாளர்களாகக் கருதிச் செய்யப்படும் ஆற்றுகைகளைக் குறிப்பதாக இருக்கின்றது. இச்சிறுவர் நாடகங்களுக்கான எண்ணக்கருவாக்கம் மேலைத்தேய நாடகப்பண்பாட்டின்வழியாக உலகின் ஏனைய நாடக மரபுகளுக்குப் பகிரப்பட்டதாக இருக்கின்றமையினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு மேலைப்புலத்திலிருந்து அறிமுகமாகிய சிறுவர் நாடக அரங்கப் போக்கானது அதனை உள்ளெடுத்துக்கொண்ட உலகின் பல்வேறு நாடகப் பண்பாடுகளின் செல்வாக்கிற்குட்பட்டு புதிய பரிமாணங்களைப் பெற்று வளர்ந்து வருகின்றமையினை ஆய்ந்தறிய முடிகின்றது. இந்த வகையில் ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வரலாற்றில் சிறுவர் நாடகத்திற்கெனத் தனித்துவமான பண்புகள் பல காணப்படுகின்றன. இதில் ஓரம்சமாக சிறுவர் நாடகங்களினூடாக சிறார்களின் உள்ளத்தில் சூழல்நேய மனப்பாங்கினை வலுப்படுத்தி வாழச்செய்யும் நோக்கம் இருந்துள்ளமையினை அடையாளங்காண முடிகின்றது. இந்தப் போக்கினை வெளிப்படுத்தும் ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் நாடகவாக்கங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக சி.ஜெயசங்கர் அவர்களால் ஆக்கப்பட்ட 'பிள்ளை அழுத கண்ணீர்' என்ற சிறுவர் நாடகம் கொள்ளப்படுகின்றது. இந்நாடகத்தின் முக்கியத்துவங் கருதி இலங்கையின் தமிழ்மொழி மூலமான பாடசாலை பாடவிதானத்திலும் இந்நாடகம் கற்றலுக்குரியதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் எவ்வாறு சூழலியல் அறத்தின் வெளிப்பாடு பாடுபொருளாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரண ஆய்வு முறைமையூடாக இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

முதன்மைச் சொற்கள் : உயிர்ப்பல்வகைமை, மகிழ்வூட்டல், அறிவூட்டல், சிறுவருலகம்

அறிமுகம் :

இன்றைய உலகில் மனித குலம் எதிர்கொள்ளும் சவால்களுள் குறிப்பிடத்தக்கதாக சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பால் உருவாகும் இயற்கை அனர்த்தங்களும் அதனால் விளையும் பேரழிவுகளும் காணப்படுகின்றன. பூமி மனிதனுக்கானது, மனிதனே முதன்மையானவன், பூமியின் வளங்கள் அனைத்தும் மனிதனுக்கும் அவனுடைய வணிகத்திற்குமானவையே என்கின்ற ஆணாதிக்க ஏகாதிபத்தியச் சிந்தனைகளினதும் அவற்றின் நடைமுறைப்படுத்தல்களினதும் விளைவாக இன்று இந்தப் பூமி உயிரினங்கள் வாழ முடியாத பேராபத்தை நோக்கிச் செல்கின்றது.

'கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே'1 எனும் அபாயத்தை உணர்த்தும் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆராயும் ஐ.பி.சி.சி என்ற அமைப்பால் ஜெனிவாவில் வெளியிடப்பட்ட Climate Change 2021: the Physical Science Basis என்ற அறிக்கை இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.

இவ்வாறு அனைத்துலக ஆராய்ச்சியாளர்களும் நிபுணர்களும் உலகம் எதிர்கொள்ளும் பருவநிலை, காலநிலை மாற்றங்கள் தொடர்பாகவும் இதற்கு அடிப்படையாகவுள்ள மனித நடவடிக்கைகள் பற்றியும் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியும் அதற்கு எதிர்வினையாற்றியும் வருகின்ற போதிலும்; இத்தகைய ஆபத்துக்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இயற்கைக்கு விரோதமான ஆதிக்க நடவடிக்கைகள் தொடருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

எனினும் உலகம் முழுவதும் கட்டமைக்கப்பட்ட அதிகார பலமின்றி தனிமனிதர்களும், தன்னார்வ அமைப்புக்களும், பழங்குடி இனங்களைச் சேர்ந்தோரும் இயற்கையினை நேசித்து, பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல அது அனைத்து உயிரினங்களுக்கும் உரியது என்ற கருத்துடன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அயராது தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதனைக் காண்கின்றோம். ஏகாதிபத்திய வணிகக் கட்டமைப்பு மிகவலுவாக இயற்கைக்கு விரோதமாக இயக்கம் பெற்று வரும்  நிலையிலும் பூமியின் உயிர்ப்பைப் பாதுகாப்பதில் மேற்படி உலகம் முழுவதும் இயற்கையை நேசித்து வாழும் மனிதர்களின் செயற்பாடுகள் பெருந்தாக்கஞ் செலுத்தி வருவதாக மதிப்பிடப்படுகின்றது. இத்தகைய சூழலியல் போராளிகள் 'மண்ணைக் காக்க, வளத்தைக் காக்க, மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, தம் நிலத்தையும் வளத்தையும் சுரண்டத் துடிக்கும் பெருமுதலாளிகளின் லாபவெறியை, அரசாங்க அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள்.'2

சூழலியலும் கலை இலக்கிய வெளிப்பாடுகளும்

இவ்விதமாக நடைமுறையிலுள்ள ஆதிக்கக் கட்டமைப்பிற்கும் அதன் நடிவடிக்கைகளுக்கும் மாற்றாக இயற்கையினை நேசிக்கும் கருத்தியல்களும், செயற்பாடுகளும், போராட்டங்களும் சூழலியல் எனும் மகுடத்தின் கீழ் முக்கியப்படுத்தப்பட்டு வருகின்றன. சூழலியல் பற்றிய கருத்து விளக்கத்தை பின்வரும் மேற்கோள்கள் வழியாக மேலும் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

' Oikos (வீடு அல்லது வாழ்வதற்கான இடம்), Logos (கற்றல்) என்னும் கிரேக்க சொற்களிலிருந்து தோன்றியது Ecology என்னும் சூழலியல். இதிலிருந்து சூழலியல் எனப்படுவது உயிரினங்களை அவற்றின் வாழிடங்களில் கற்றல் எனலாம். அதாவது சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, உயிருள்ள கூறுகளைக், கற்கும் கற்கையாகும்.' 3

'உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் உறவுகளையும் அவற்றின் சூழலையும் ஆராயும் அறிவியலின் பெயர் சூழலியல் என்று அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழலின் நோக்கம் உயிரினங்கள் பொருத்தமான சுற்றுச்சூழல் நிலைமைகளில் வாழ முடியும் என்பதை உறுதி செய்வதாகும். இது உயிரினங்களுக்கு பொதுவான தேவைப்படும் கூறுகளைக் கையாளும் ஒரு அறிவியல். ஆறுகள் முதல் நிலத்தடி நீர் வரை, கண்டங்கள் முதல் பெருங்கடல்கள் வரை அனைத்து சுற்றுச்சூழல் நிலைகளையும் சூழலியல் ஆய்வு செய்கிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உயிரினங்கள் உயிர்வாழ்வது சாத்தியமாகும். இந்த அமைப்பில், அனைத்து உயிரினங்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டுள்ளன. இந்த உறவு உயிரினங்களிலிருந்து உயிரினங்களுக்கு வேறுபடுகிறது. உயிரினங்களின் இடையிலான இந்த உறவு வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.'4

இவ்விதமாக முக்கியத்துவப்படுத்தப்படும் சூழலியல் சார்ந்த விடயங்களை கலை இலக்கியங்களில் பாடுபொருளாக்கி அவற்றினூடாகப் பரவலாக்கும் முயற்சிகள் உலகந்தழுவி ஆக்கபூர்வமான கலை இலக்கியப் படைப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதனை நாம் அவதானிக்க முடிகின்றது. முனைவர் இரா. செல்வி அவர்களின் பின்வரும் மேற்கோள் இதனைச் சுட்டி நிற்கின்றது.

'புதிய சூழலியல் விழிப்புணர்வு தோன்றியுள்ள சூழலில் உலகெங்கும் உள்ள கலை இலக்கியப் படைப்பாளிகள் தமது படைப்புக்களில் சூழலியல் பேரழிவு குறித்தும் அந்தப்பேரழிவில் இருந்து உலகையும் மனித குலத்தையும் காப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். சூழலியல் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றனர்.'5

இன்றைய கால கட்டத்தில் கலை இலக்கியப் படைப்பாக்கங்களில் சூழலியல் சார்ந்த விடயங்கள் அவசியமாகவும், அவசரமாகவும் பேசப்படுதல் வேண்டும் எனவும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருவதனையும் காண்கின்றோம். ஈழத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் றியாஸ் அகமட் அவர்கள் இதனை 'சூழலியல் குறித்த அறிவும், விழிப்புணர்வும் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. மனிதனை இயற்கையோடு வாழத் தூண்டுகின்ற சூழலியல் இலக்கியங்களிலும், எழுத்துக்களிலும் மிகுதியாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதீத இலாபத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி முறைமையின் காரணமாக இயற்கை சுரண்டலுக்குள்ளாகி அழிவின் விழிம்பில் இருப்பதன் காரணமாக மனிதர்களினதும், மற்றமைகளினதும், மற்றவர்களினதும் இருப்பை நிலைப்படுத்த சூழலியல் குறித்த ஆய்வுகளும், எழுத்துக்களும், இலக்கியங்களும், விமர்சனங்களும் மிகவும் தேவைப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.6என வலியுறுத்துகின்றார்.

இந்த வகையில் நாடக அரங்கத் துறையில் விசேடமாக சிறுவர்களுக்கான அரங்க நடவடிக்கைகளில் சூழலியல் சார்ந்த விடயங்களைக் கவனத்திற்கொள்ளும், பிரதானப்படுத்தும் போக்குகள் இருந்துள்ளதனை ஈழத்துச் சிறுவர் அரங்கு பற்றிய கற்கைகள் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. குறிப்பாக ஈழத்துச் சிறுவர் அரங்க வரலாற்றிலே சூழலியல் சார்ந்து பிரக்ஞையோடு படைப்பாக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையினைக் காண முடிகின்றது. இயற்கையினையும் அதில் வாழும் பல்லுயிர்களையும் அவற்றின் வாழ்வியலையும் சிறுவர் பராயத்திலேயே ஆழமாகப் பதிவாக்கஞ் செய்யும் வகையில் ஈழத்தின் தமிழ் சிறுவர் நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளமையினை நாம் காண முடிகின்றது. உதாரணமாக குழந்தை ம.சண்முகலிங்கம், சி.மௌனகுரு ஆகியோருடைய சிறுவர் நாடகப் படைப்பாக்கங்கள் இயற்கையின் உயிர்ப்பல்வகைமையினை அனுசரித்துச் செல்லும் வகையில் ஆக்கப்பட்டுள்ளமையினைக் காணலாம். இத்தகைய ஈழத்துச் சிறுவர் நாடக ஆக்கங்களுள் சூழலியல் அக்கறையினைப் பிரதானப்படுத்தும் படைப்பாக்கமாக சி.ஜெயசங்கரின் 'பிள்ளை அழுத கண்ணீர்' என்ற சிறுவர் நாடகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாடகப் பனுவலின் இத்தகைய முக்கியத்துவங்கள் கருதியே இலங்கையின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் தமிழ்மொழி மூலமான தரம் ஆறாம் வகுப்பிற்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்தில் இந்நாடகப் பனுவல் கற்கைக்குரியதாக இணைக்கப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

சிறுவர் அரங்கும் அதன் தன்மைகளும்

சிறுவர் அரங்கு என்பது சிறுவர்களைப் பார்வையாளர்களாகக் கருதிச் செய்யப்படும் ஆக்கபூர்வமான கலையாக்கச் செயற்பாடாகும். இதனை ஈழத்தின் முதுபெரும் நாடகச் செயற்பாட்டாளரான குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.

'சிறுவருக்கான அரங்கம் என்பது சிறுவருக்கென அதாவது சிறுவரைப் பார்வையாளர்களாகக் கொண்ட அரங்கினையே குறிக்கிறது. இது ஒரு நியம அரங்காகும். ஒருவரால் அல்லது ஒரு குழுவால் திட்டமிட்டு எழுதப்பட்டதொரு எழுத்துரு இதற்கு அவசியம். சிறுவர் கல்வியில் அக்கறை உள்ளவர்கள் இதற்கான எழுத்துருவை எழுதுவர்';7

சிறுவர்களின் உளமுதிர்விற்கேற்றதாகவும், வேடிக்கை வினோதப் பாங்காகவும், விளையாட்டுத் தன்மைகள் கொண்டதாகவும், பிரச்சாரத்தன்மையற்றதாகவும் சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் இருத்தல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இவை சிறுவர் அரங்கின் இலட்சணங்களாகவும் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைப் பின்வரும் மேற்கோள்கள் வழியாக நாம் மேலும் உறுதிப்படுத்த முடிகின்றது.

'சிறுவரின் வினோத உலகைக் கருத்திற் கொண்டே பண்டைய காலம் முதல் மிருகங்கள், பறவைகள், இராட்சதர்கள் என்பவற்றைப் பாத்திரங்களாக கொண்ட கதைகள் அவர்களுக்காக புனையப்பட்டன.'8

'சிறுவர் அரங்குக்காக எழுதுகின்றவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படையாகப் போதித்தலைக் கைக்கொள்ளக்கூடாது என்பர். நல்ல கருத்துக்கள் படைப்பினுள் தொக்கு நின்று தனது பணியினைச் செய்வதே சிறந்த முறையாகும்'9

'சிறுவர் நாடகத் தயாரிப்புக்கென எழுதப்படும் எழுத்துருவின் கருப்பொருளும் கதையும் உரையாடலும் அவர்களின் உள முதிர்வுக்கும் அனுபவ எல்லைக்கும் உட்பட்டு அமைதல் வேண்டும்', 'பொதுவாக தானே சுயமாகச் சிந்தித்து, இயல்பாகச் செயற்படக்கூடிய பாத்திரங்களிலேயே நடிக்க வேண்டும்'10

'நாடகம் பெருமளவுக்கு விளையாட்டுப் பண்பினைக் கொண்டிருக்க வேண்டும். அதிகம் காத்திரமான முறையில் அமையத் தேவையில்லை. சிறுவர் சுதந்திரமாகவும் மகிழ்வாகவும் பங்குகொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.'11

உலகநாடக அரங்க வரலாற்றில் மேற்குலகில் முகிழ்த்த நவீன சமுதாய உருவாக்கத்துடன் மேற்படி சிறுவர் அரங்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டு வந்துள்ளதனை விளங்கிக் கொள்ள முடிகின்றது. அதாவது நவீன சூழலில் விருத்தியுற்ற நுகர்வுப் பண்பாட்டுப் பின்புலத்தில் மத்தியதர வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறார்களின் உடல் உள ஆளுமை விருத்திக்கான ஒரு குறிப்பிடத்தக்க செயற்பாடாக சிறுவர் அரங்க நடவடிக்கைகள் மேலைத்தேயத்தில் முக்கியத்துவப்படுத்தப்பட்டு வந்துள்ளன.

'மேலை நாடுகளில் சிறுவர்கள் மிக இளம் வயதிலேயே அரங்கத்துக்கும், அரங்க விளையாட்டுக்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்', 'மேலை நாடுகளில் அரங்கு சிறுவர்களின் அழகியல் உணர்வு, இரசனைப்போக்கு, ஆக்கத்திறன், உளவியல் திறமைகள், அவதானம், நிதானம், கற்பனை, பகுத்துப் பார்க்கும் திறன், பொது நலப் போக்கு, தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, பேச்சுப்பயிற்சி, உடல் விருத்தி போன்றவற்றை வளர்க்கும் ஊடகமாகவும் செயற்படுகிறது' 12

இவ்வாறு மேலைத்தேயத்தில் நவீன நுகர்வுப் பண்பாட்டுடன் விருத்தியடைந்த சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் மேலைத்தேயத்தின் காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த உலகின் பிற நாடுகளின் வரலாற்றில் பின்னைக் காலனித்துவச் சூழலில் அறிமுகமாகி வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கில் அது அறிமுகமாகிய நாடுகளினதும், தேசங்களினதும் உள்ளூர் அரங்கப் பண்பாடுகளை உள்வாங்கித் தனித்துவமான சிறுவர் அரங்க மரபுகளாக பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வருகின்றமையினையும் ஆய்ந்தறிய முடிகின்றது. உதாரணமாக ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் அரங்கின் தனித்துவமாக ஈழத்து மரபுவழி அரங்குகளின் ஆடல், பாடல் மரபுகளின் செல்வாக்கு மிகுந்திருப்பதனைக் காணலாம்.

மேற்படி நவீன சிறுவர் அரங்கிற்கான இலட்சணங்களுடன் ஆக்கம் பெற்ற ஒரு படைப்பாக 'பிள்ளை அழுத கண்ணீர்' எனும் சிறுவர் நாடகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

'பிள்ளை அழுத கண்ணீர்' சிறுவர் நாடகப்பனுவலும் கதைச் சுருக்கமும்

'ஒவ்வொருவரும் தம்மை மட்டும் கவனத்தில் கொள்ளுவதே வாழ்க்கையாகி இருக்கிறது. சுயமுன்னேற்றமே வாழ்தலும் வளர்தலுமென நவீன அறிவு முறை போதித்து வருகிறது. பிற உயிர்களையும் சூழலையும் வெற்றி கொண்டு கட்டுப்படுத்தியதே மனித வளர்ச்சி, நாகரிகம் எனக் கற்பிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கிடையே திறந்த போட்டியும், அதில் வெற்றியுமே பொருளாதார வளர்ச்சி என்ற நிலைமை மேலும் கூர்மை பெற்றிருக்கிறது. இத்தகைய வாழ்க்கை நிலைமைகளின் பின்னணியில் மனிதர்கள் மனிதர்களுடனும், ஏனைய உயிர்களுடனும், சற்றுச்சூழலுடனும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையை உருவாக்கும் உலகந்தழுவிய முயற்சிகளில் ஒரு சிறு துரும்பாகப் பிள்ளை அழுத கண்ணீர் சிறுவர் நாடகம் உருவாக்கம் பெற்றிருக்கிறது.', 'குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது பாலுக்குப் பாலகன் சிறுவர் நாடகத்தையும், அன்ரோனியோ கிறம்சியின் மூலக்கதையையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது'13

என்ற ஆசிரியர் குறிப்புக்களுடன் அச்சாக்கம் பெற்றுள்ள இந்நாடகமானது தமிழில் மாத்திரமன்றி ஆங்கில மொழியிலும் எஸ்.எம்.பீலிக்ஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

இந்நாடகத்தில் சிறுமி, சிறுவன், எலித்தம்பி, ஆடக்கா, குளத்தாத்தா, தவளை, கொக்கு, கொத்தனார், மலைமாமா எனும் பாத்திரங்களைப் பிரதானப்படுத்தி கதையாக்கம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

கடுங்கோடை காலம் வீட்டிலே பிள்ளைக்கு வைத்த பாலை எலியார் குடித்து விடுகின்றார். பிள்ளை நித்திரை விட்டு எழுந்ததும் பாலில்லாது அழத்தொடங்குகிறது. இதனைப்பார்த்த எலி தர்மசங்கடமடைந்து பிள்ளைக்கு பால் வேண்டி ஆடு அக்காவிடம் ஓடுகின்றது நடந்தவற்றைச் சொல்கிறது பால் கொஞ்சந் தருமாறு கேட்கிறது. ஆடோ பசும்புல் தின்று கனநாளாகிப் போச்சு புல் தந்தால் பால் தரமுடியும் எனக் கூறுகின்றது. இதைக்கேட்ட எலி புல் எடுப்பதற்காக வயலம்மாவிடம் செல்கிறது நடந்தவற்றைச் சொல்கிறது புல் தருமாறு கேட்கிறது வயலம்மாவோ தண்ணீரின்றித் தாம் தவிப்பதாகவும் தண்ணீர் தந்தால் புல் தரமுடியும் எனவும் கூறுகிறது எலி தண்ணீர் வாங்க குளத்தாத்தாவிடம் ஓடுகின்றது குளத்தாத்தாவிடம் நடந்தவற்றைக் கூறி தண்ணீர் கேட்கிறது அப்போது குளத்தின் கட்டுக்கள் உடைந்துள்ளதால் போதிய தண்ணீரின்றி உள்ளதாக குளத்தாத்தாவும் தவளையும் கொக்கும் எலியாரிடம் கூறுகின்றன. குளத்தைக் கட்டினால் தண்ணீர் தரமுடியும் எனக் கூறுகின்றன இதைக் கேட்ட எலியார் கொத்தனாரிடம் செல்கிறார் நடந்தவற்றையெல்லாம் கூறுகின்றார். குளத்தைக் கட்டித்தருமாறுமாறு கேட்கிறார் கொத்தனாரோ கல்லிருந்தால் கட்டித்தர முடியும் என்று சொல்கிறார் எலியார் கல்லுக் கேட்டு மலைமாமாவிடம் ஓடுகின்றார் மலைமாமாவிடம் விடயங்களை விபரிக்கிறார் மலைமாமா கல்லைக் கொடுக்கின்றார் கொத்தனார் குளத்தைத் திருத்துகிறார். தண்ணீர் கிடைக்கிறது புல் கிடைக்கிறது ஆடக்காவிடம் புல் வழங்கப்படுகின்றது. பால் கிடைக்கிறது அழுத பிள்ளைக்கு பால் வழங்கப்படுகின்றது எல்லோரும் மகிழ்வடைகிறார்கள்.

இவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ள கதையினைச் சிறுவர்கள் தாமாக விளங்கித் தத்தமது கற்பனை மற்றும் புதிதளித்தல் திறன்களூடாக ஆற்றுகை செய்வது சாத்தியமானதாகவே காணப்படுகின்றது. அதாவது சிறுவர்கள் ஆர்வத்துடன் செயலாற்றும் விதத்தில் கதை பின்னப்பட்டு அது நாடக பாடமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனாலேயே 'பிள்ளை அழுத கண்ணீர் பார்வையாளர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்குக் காரணம் அது வெளிப்படுத்திய குழந்தைப்பிள்ளைப் பேச்சு, குழந்தைத்தனம், விளையாட்டியல்பு போன்ற அழகியல் அம்சங்களாகும்'14 என விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்

இந்நாடகத்தினூடாக சூழலியல் அறம் இயல்பாகவே சிறுவர்களது உள்ளத்தில் வேரூன்றும் தன்மை வலுவாகக் காணப்படுகின்றமை விசேட கவனத்திற்குரியதாகவுள்ளது. இதனைப் பின்வரும் விமர்சனக் கூற்று உறுதிப்படுத்துகின்றது. 'அந்நாடகத்தில் நாடகக் கதா பாத்திரங்களாக உலவிய எலி, சிறுமி, ஆடக்கா, வயலம்மா, குளத்தாத்தா, கொக்கு 01, கொக்கு 02, தவளை, காகம், சூரியன், மலைமாமா, மலைமாமி, கொத்தனார் போன்ற பாத்திரங்கள் The Sun as a source of Energy (சூரியனே முதற் சக்தி முதல்) என்று பேசின, சக்தி வட்டத்தையும், சக்திப் பாய்ச்சலையும் கூறின. சூரியன் - புல் - ஆடு - மனிதன் என்று உணவுச் சங்கிலித் தொடர்பையும், போசனை மட்டங்களையும் கூறின, மண்ணரிப்பையும் விளங்கப்படுத்தின'15

இத்துடன் இதில் வரும் விலங்குகள் பறவைகள் அனைத்தும் சிறுவர்களுக்கு நன்கு பரிச்சயமான அவர்கள் வாழும் சூழலிலேயே அன்றாடம் காணக்கிடைக்கின்றவையாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

நாடகத்தின் ஆற்றுகையும் அதன் வரலாறும்

இவ்வாறு ஈழத்துத் தமிழ் சிறுவர் நாடக வரலாற்றில் சூழலியல் பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்நாடகம் ஈழத்தின் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் எங்கிலும் ஆற்றுகை செய்யப்பட்ட ஒரு நாடகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஈழத்தின் வடபகுதி, கிழக்குப்பகுதி, மத்திய மலையகப்பகுதி எனத் தமிழ்ப் பண்பாடுகள் வலுவாகக் காணப்படும் இடங்களிலெல்லாம் இந்நாடகம் அறிமுகமாகி ஆற்றுகை செய்யப்பட்டிருக்கின்றது. இதனைப் பின்வரும் கூற்று தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

'பிள்ளை அழுத கண்ணீர் சிறுவர்களைக் கொண்டு முதன் முதலில் யாழ்ப்பாணம் சென். பொஸ்கோவில் 1995ல் மேடையேற்றப்பட்டது. 1996ல் மட்டக்களப்பில் பெரியவர்களைக் கொண்டு பூவரசு கலை இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்த நாடகப் பட்டறையிலும், 1997ல் சிறுவர்களையும் வளர்ந்த மாணவர்களையும் கொண்டு திருகோணமலையில் பல பாடசாலைகளிலும் மேடையேற்றப்பட்டது. அங்கு பெரும்பாலான மாணவர்களால் கண்டு களிக்கப்பட்டு அவர்களால் பல்வேறு இடங்களிலும் பாடசாலைகளிலும் மரங்களும் நடப்பட்டது. இது அந்த நாடகத்திற்கும், அந்நாடகம் சொல்ல வந்த கருத்திற்கும் கிடைத்த பாரிய வெற்றியே என்று கூறலாம். இதே ஆண்டு பொகவந்தலாவையிலும் பாடசாலை மாணவர்களைக் கொண்டு இந்நாடகம் மீண்டும் அரங்கேற்றப்பட்டது. மட்டக்களப்பில் ஓசானம், வந்தாறுமூலை கனிஷட வித்தியாலயம் உட்படப் பல இடங்களிலும் ஆறு தடவைகளுக்கு மேல் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது'16

இத்துடன் இரண்டாயிரமாம் ஆண்டின் பின்னர் ஈழத்தின் மட்டக்களப்பிலுள்ள பல பாடசாலை மணவர்களிடையே இந்நாடகம் பயிலப்பட்டு பல்வேறு தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

இவ்வாறாக ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வரலாற்றில் குறிப்பாக நவீன சிறுவர் அரங்க வரலாற்றில் பிள்ளை அழுத கண்ணீர் எனும் சிறுவர் நாடகமானது சூழலியல் சிந்தனையினை அடித்தளமாகக் கொண்டு ஆக்கப்பட்ட ஒரு நாடகம் என்பதையும், இந்நாடகம் சிறுவர் நாடகத்திற்கேயுரிய நாடக இலக்கணங்களுடன் ஆக்கப்பட்டுள்ள சிறந்த படைப்பாக்கம் என்பதையும், இந்நாடகமானது ஈழத்தின் தமிழ்ப்பண்பாடுகள் வலுவாகவுள்ள இடங்கள் எங்கும் பரவலாக ஆற்றுகை செய்யப்பட்டு அறிமுகமாகி இன்றைய காலத்தில் தேசிய ரீதியில் பாடசாலை கலைத்திட்டத்தினூடாக அறிமுகமாகியுள்ளது என்பதையும். சூழலியல் அக்கறைகள் மேலெழுந்து வரும் உலகளாவிய பின்புலத்தில் சிறுவரின் உள்ளங்களிலும் நடத்தைகளிலும் சூழலியல் செயற்பாடுகளை வலுவாக்குவதற்கான சிறந்ததோர் படைப்பாக்கமாக இந்நாடகப் பனுவல் காணப்படுகின்றது என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அடிக்குறிப்புக்கள்

  1. https://www.vikatan.com/social-affairs/environment/natural-disasters-will-increase-in-future-new-ipcc-report-warns-about-climate-change
  2. https://www.vikatan.com/government-and-politics/environment/global-witness-report-2020-says-killings-of-environmental-activists-has-increased
  3. http://www.amrithaam.com/2021/01/1.html
  4. https://www.ekoloji.com/ta/ekoloji/ekoloji-nedir/
  5. 05.    செல்வி, இரா., புத்துமண் நாவலில் சூழலியல் பதிவுகள் https://www.tamilauthors.com/04/378.html
  6. http://www.amrithaam.com/2021/01/1.html
  7. சண்முகலிங்கம் குழந்தை,ம.,(1996) கற்கை நெறியாக அரங்கு, நியு செஞ்சுரி புக் கவுஸ் ப-36
  8. மேலது ப-35
  9. மேலது ப-37
  10. கோகிலா மகேந்திரன், .,(1996) கற்கை நெறியாக அரங்கு, நியு செஞ்சுரி புக் கவுஸ் ப43
  11. மேலது ப 44
  12. மேலது ப 40
  13. ஜெயசங்கர்,சி.,(2007) பிள்ளை அழுத கண்ணீர், சிறுவர் நாடகம், மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, மட்டக்களப்பு ப ii
  14. றியாஸ் அகமட், ஏ.எம்.,(2000) பிள்ளை அழுத கண்ணீர் - நாடகம், விஞ்ஞானம் பரப்பலில் புதிய உத்தி! புதிய வரவு!!, சரிநிகர், ஜனவரி 13 - 26, ப 17
  15. மேலது
  16. மேலது