ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மட்டக்களப்பு மக்களின் மகப்பேற்று நம்பிக்கையுடன் தொடர்புடைய பெண் தெய்வ வழிபாடுகள் - ஓர் ஆய்வு.

திருமதி மேகலா சிவகுமாரன், விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் 10 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: திருமதி மேகலா சிவகுமாரன், விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் .

ஆய்வுச் சுருக்கம்

இலங்கையின் இந்து சமய வழிபாட்டு மரபில் தனித்துவமான செல்நெறிகளைக் கொண்டதாக மட்டக்களப்பு தேசம் திகழ்கின்றது. ஆகமம் சார்ந்த, ஆகமம் சாராத நெறிமுறைகளுக்குட்பட்டவையாக இத்தேச வழிபாட்டு முறைகள் அமைகின்ற போதிலும் ஆகமம் சாராத பத்தாசி வழிபாடுகளே பிரசித்தமானவை. இவை இத்தேசத்துக்கே உரித்தான தனித்துவத்தினை நல்குபவை. இவ்வழிபாட்டு மரபில் பெண்தெய்வ வழிபாடுகளே முதன்மையானவை. பண்டைய தாய்வழி சமூக அமைப்பின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் இவ்வழிபாடுகள் அமைகின்றன. பன்னெடுங்காலமாக இத்தாய்த்தெய்வ வழிபாடுகள் பதிந்து, முதிர்ந்து மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்துள்ளன. இங்கு முதன்மை பெறும் தாய்த்தெய்வங்கள் தன்னாட்சியும், அதிகாரமும், சுதந்திரமும் மிக்கவை. இத்தேச மக்களின் வாழ்வியலின் அனைத்துக் கூறுகளிலும் பெண் தெய்வ வழிபாட்டு மரபுகள் இழையோடுகின்றன. அதன் நிமித்தம் பெண்களின் தாய்மை தன்மையை வளப்படுத்துவதிலும் பேணி வழிப்படுத்துவதிலும் இத்தெய்வங்களின் தொன்மங்களும் வழிபாடுகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்தவகையில் மகப்பேற்றுடன் தொடர்புடைய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் அவற்றின் உளவியல் புலத்தினையும் ஆராய விளைவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனித இயலுமைக்கு அப்பாற்பட்ட அதீத ஆற்றலை தெய்வ நம்பிக்கையில் கட்டமைப்பதும், பிரச்சினைகளுக்கு தீர்வாக தெய்வத்திடம் தஞ்சம் புகுவதும் மனித இயல்பாகின்றது. அந்தவகையில் மகப்பேற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மந்திரச்சடங்குகள் ஆற்றுப்படுத்துகின்றன என்பதன் அடிப்படையில் இச்சடங்குகள் ஏற்புடையனவா? மறுதலிக்கக் கூடியவையா? என்ற வினாக்கள் ஆய்வுப் பிரச்சினையாக அமைகின்றன. மட்டக்களப்பில் நிகழ்த்தப்படுகின்ற பெண்தெய்வங்களுடன் தொடர்புடைய சடங்குகள் தாய்மை நிலையை நிர்ணயிப்பது முதல் மகப்பேறு வரையான உடல் கூற்றியல் விடயங்களுடன் பல்வேறுவகையில் தொடர்புறுவதாகவே அமைந்துள்ளன. மேலும் இச்சடங்குகள் வழிபடும் மக்களின் உடல், உள சிகிச்சைகளுடன் இயக்கம் பெறுவதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள் - கழிப்புச் சடங்கு, பத்தாசி, மகப்பேறு, மீவியல்

அறிமுகம்

மக்கள் பன்னெடுங்காலமாக நாட்டார் மரபுகளுக்கும் சமயச் செயற்பாடுகளுக்கும் உளவியல் முறைகளைக் கையாளுகின்றனர். வழிபாடுகளோடும் மரபுகளோடும் மக்கள் கொள்கின்ற ஊடாட்டங்களின்  நிலையில் உளவியல் கவனத்திற்குரியதாகின்றது. மக்களின் மன உணர்வுகளின் பிரதிபலிப்புகள் தான் சமய நம்பிக்கைகளாக கட்டமைக்கப்படுகின்றன. பண்டைய மக்கள் அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையை மீறியுள்ள ஆற்றலை கையகப்படுத்திக் கட்டுப்படுத்தும் அல்லது மேலாதிக்கம் செலுத்தும் வழிமுறையை; மேற்கொண்டனர். கையகப்படுத்;திய ஆற்றலை சில சூத்திரங்கள் அல்லது வாய்ப்பாடுகளாக சுருக்கி உச்சரிப்பதன் மூலம் அவ்வாற்றலை செயல்படுத்;தினர். அதற்கு சடங்குகளையும் வழிபாடுகளையும் மேற்கொண்டனர். இவ்வனைத்துச் செயல்களின் வெளிப்பாடாக அமைவதை மந்திரம் என்கின்றனர்.(பக்தவக்சல்பாரதி.,1990:518) மட்டக்களப்பு தேசத்தவரின் வழிபாடுகளில் பிரதானமாக அமைவது மந்திரபூர்வமான சடங்குகளே.

மட்டக்களப்பு தேசத்தில் ஆகமம்சாரா வழிபாடுகளை நெறிப்படுத்துபவையாக பத்தாசிகளும் (பத்ததி), சடங்குப் பாடல்களும் அமைந்துள்ளன. இவ்வழிபாட்டிற்குரிய சடங்கு விதிமுறைகளையும், மந்திரங்களையும், பாவனைகளையும் கூறுகின்ற ஆவணமே பத்தாசியாகும். அவை எத்தெய்வத்திற்குரிய சடங்கு விதிமுறைகளைக் குறிப்பிடுகின்றனவோ அத்தெய்வத்தின் பெயராலும், தொடர்புடைய விடயத்தின் பெயராலும் அழைக்கப்படுகின்றன. கும்பப்பத்தாசி, அடைக்கலப்பத்தாசி, மாரியம்மன் பத்தாசி, பேச்சியம்மன் பத்தாசி, கடலாச்சியம்மன் பத்தாசி, பெரியதம்பிரான் பத்தாசி என அவை அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இப்பத்தாசிகளும் மந்திர ஏடுகளும் வாய்மொழி மரபாகவும், கையெழுத்துப் பிரதியாகவுமே  குருசிஷ்ய முறையில் கையளிக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு தேசத்தில் வழிபடப்படுகின்ற பெண்; தெய்வங்கள் அமைதி நிலை, அகோர நிலை எனும் இரட்டை நிலைத் தன்மையுடையவை. வழிபடப்படும் தெய்வங்கள், அத்தெய்வங்களின் ஆற்றல்கள், அவற்றினால் விளைவிக்கப்படும் பயங்கரங்கள், அத்தெய்வங்களின் சமூக எதிர்பார்ப்புக்கள், சமூகம் அத்தெய்வங்களிடம் எதிர்பார்ப்பவை என்பவற்றின் அடிப்படையில் ஆகமம்சாரா வழிபாடுகள் கொள்ளல் கொடுத்தல்கள் சடங்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வு முறையியல்

மகப்பேற்று சடங்குகளில் இழையோடுகின்ற உளவியல் அம்சங்களை மையப்படுத்திய இவ்வாய்வில், களஆய்வு மற்றும் பதிவேடுகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை ஒழுங்குபடுத்த பகுப்பாய்வு முறையியலும், ஆய்வில் கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கு விபரண ஆய்வு முறையியலும் கையாளப்பட்டுள்ளன.

மகப்பேற்றுச் சடங்குகள்

மட்டக்களப்பில் சடங்குகள் நிகழ்த்தப்படும் களங்களாக கோயில்களே விளங்குகின்றன. வருடந்தோறும் சமூகங்களை ஒன்றிணைக்கும் விழாவாகவே இச்சடங்குகள் அமைந்துவிடுகின்றன. இப்பிரதேச சடங்குகளில் தாய்மை நிலையுடன் தொடர்புடைய பல வழிபாடுகள் ஆலயங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை ஆலயங்களுக்கு அப்பால் தெய்வசக்திகளுக்கு படையலிட்டு கழிக்கும் கழிப்புச் சடங்குகளும் இடம்பெறுகின்றன. அந்தவகையில் மகப்பேற்றுடன் தொடர்புடைய சடங்குகளை

1.ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் சடங்குகள்

2. மீவியல் இடங்களில் மேற்கொள்ளப்படும் கழிப்புச் சடங்குகள் என அவை நிகழ்த்தப்படுகின்ற தளத்தினை அடிப்படையாகக் கொண்டு இருவகைப்படுத்தலாம்.

கழிப்புச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் களமானது மீவியல் இடங்களாகவே அமைகிறது. மீவியல் களமானது தாய்மை நிலையுடன் பல்வேறு விதங்களில் தாக்கம் செலுத்துவதாக மட்டக்களப்பு மக்களால் நம்பப்படுகின்றது. மீவியல் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் liminality எனும் சொல்லிருந்து பெறப்பட்டதாகும். இது இலத்தீன் மொழியிலுள்ள “limen” எனும் சொல்லிருந்து பெறப்பட்டது. இச்சொல்லானது வாயிற்படி, நுழைவாயில், தோரணவாயில், தொடக்கம், முகப்பு எனப் பொருள்கொள்ளப்படுகின்றது. (பக்தவக்சலபாரதி.,1990:205) சமயஞ்சார் சடங்குகளில் இந்த மீவியல் கருத்தாக்கத்தை அதிகம் அடையாளப்படுத்தியவர் Victor Turner ஆவார். “மீவியல் களம்” என்ற எண்ணக்கருவில் காலம், இடம், பங்குபற்றுவோர் பற்றி தெளிவாக வரையறுக்க முடியாது. தெளிவாக வரையறுக்க முடியாத நிலையே மீவியலாகும். ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறும் நிலைமாற்றத்தோடு தொடர்புடைய அனைத்து இடங்கள் மற்றும் நிகழ்வுகளை “liminality” என்ற கருத்தாக்கம் குறிக்கும்

ஒரு கிராமத்தில் இயல்பும், மீவியல்பும் சங்கிலித் தொடர்போல் அமையும். கிராமத்தில் மக்கள் வாழும், சுதந்திரமாகச் சுற்றித்திரியுமிடம் குடியிருப்பு. இதனையொட்டி அமையும் காடு, ஏரிக்கரை, ஆற்றங்கரை, சுடுகாடு, பாழுங்கிணறு, ஊருக்குவெளியே சீற்றமிகு சக்திகள் உறைந்துள்ள இடங்கள் மீவியல் இடங்களாகும். இவ்விடங்களுக்கு குழந்தைகள், சிறுமியர், கர்ப்பிணி பெண்கள் சென்றால் ஆபத்து ஏற்படும் என்று கருதுகின்றனர். அத்தோடு நிச்சயிக்கப்படமுடியாத பொழுதுகளான நடுநிசியும், நடுப்பகலும் மீவியல் நேரங்களாக கொள்ளப்படுகின்றன. (பக்தவக்சலபாரதி.,1990:ப206) மீவியல் மனிதர்களாக பருவமடையாத அதேவேளை பருவமடையும் வயதை அண்மித்த சிறுமியர், பருவமடைந்த திருமணமாகாத இருபாலரும், கருவுற்ற பெண்களும் கொள்ளப்படுகின்றனர்.

மீவியல் மனிதர்களாக மானிடவியல் அடையாளப்படுத்துபவர்கள் தாய்மை நிலையுடன் தொடர்புறுபவர்களே. இவர்கள் மீவியல் நேரங்களில் மீவியல் இடங்களுக்கு சென்றால் தாய்மை நிலைக்கு பாதிப்பு ஏற்படுவதாக கருதப்படுவதோடு அவற்றிலிருந்து விடுவிப்பதற்கான சடங்குகளும் ஆற்றப்படுகின்றன.

சடங்குகளை முன்னெடுப்பவர்:

மட்டக்களப்பு தேசத்தில் பத்தாசிகள் குருகுல முறையிலே காலாகாலமாகப் போதிக்கப்பட்டு வருகின்றன. சடங்கு முறைகளைக் கற்றவர் பூசாரி, கட்டாடி, கப்புகன், குருக்கள் எனப்பலவாறு அழைக்கப்படுகின்றனர். சடங்கு மந்திரங்களைக் கற்று, அப்பியாசத்தில் கைதேர்ந்தவர்களே மந்திரவாதிகளாவர். இவர்கள் தமது குருமூலமாக ஒரு தெய்வத்தை தியானம் செய்து அத்தெய்வத்தின் “வாலாயம்” பெற்றவர்கள். அத்தோடு மந்திரங்களோடு குருக்கள் கோடாலி, அடுக்கு நிலை போதம், குரூபதேசம், ஆசாரமுறைகள், சோதிடம், வைத்தியம் என்பவற்றையும் கற்றுத் தெளிந்தவர்கள். கற்றலோடு கைபாதத்தினையும் அனுபரீதியாக செய்யும் திறனும் பெற்றவர்கள். வாலை சித்தியானவருக்கே அப்பியாசம் பலிதமாகும். அவரே சிறந்த பூசாரியாகத் துலங்குவார். அத்தோடு இம்மந்திரங்களை பொருத்தமற்றவர்களுக்கு கையளிக்கலாகாது என்பதும் வலியுறுத்தப்படுகின்றது. இதற்கு

“மந்திரமும் வாகடமும்…..

சுந்தரமாம் புகழ்குலத் தோனாலும்

துட்டருக் கிம்மூன்றும் கொடுப்பாராகில்

அந்தரத்தில் எழுநரகில் அழுந்திப் பின்னும்…” வாக்கு சான்றாக அமைகிறது. (பவளகாந்தன்.மு,2003:29)

சடங்குகள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுப்படுத்துவதில் பூசாரியின் வித்துவத்துவமே செல்வாக்குச் செலுத்துகின்றது. பல மைல்கள் கடந்தும் இம்மாந்திரீக சிகிச்சைக்காக மக்களை இழுத்துவரும் சக்தி இவ்வித்துவத்திற்கு உண்டு. மகப்பேறு வேண்டி ஆலயம் நாடி வருகின்ற பக்தர்களின் வேண்டுதல்கள் ஆலயச் சடங்குகளோடு இடம்பெறுவதாக அமையும் மாறாக துர்தேவதைகளின் பார்வையினால் மகப்பேற்று பிரச்சினைகள் எதிர்கொள்ளுமிடத்து கழிப்புச் சடங்குகளை பூசாரியார் முன்னெடுப்பார். இதனை மைபார்த்தல் மூலமாகவோ அல்லது தேவாதிகளை ஆட்டுவித்தல் மூலமாகவோ எங்கு, எவ்விடத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் எவ்வாறான கழிப்புகளை செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து குறிப்பிட்ட களத்தில்(மீவியல் களமாகவே அமையும்) சம்பந்தப்பட்ட ஒருசிலர் கலந்து கொள்ளும் சடங்காக மேற்கொள்வார். இம்மந்திரக் கிரியைகள் பலிதமாதலே இவருக்கு சிறப்பினை ஈட்டுவதாய் அமையும்.

கன்னிமாருடன் தொடர்புடைய சடங்குகள்:

தாய்மை நிலையை அடைவதற்கு முதன்நிலையாக அமைகின்ற பூப்படைதலை அண்மிக்கும் நிலையும் கருவுறுதலுடன் தொடர்புடைய ஆரம்ப கட்டமாகவே அமைகின்றது. இப்பருவத்தை நெருங்கும் சிறுமியரோடு தொடர்புடைய சடங்காக அமைவது கன்னிமார் வைத்தலெனப்படுகிறது. கன்னிமார் எழுவரை கும்பத்திலும், மடைகளிலும் வழிபடுதலுக்கு மேலாக சிறுமியரை கன்னிமாராக நினைத்து வழிபட்டு, அமுதளிப்பது மட்டகளப்பு சடங்குகளின் சிறப்பாகும். இச்சடங்கில் ஏழுகன்னியர் வருடந்தோறும் பங்கெடுப்பர். இதில் கன்னியராக உருவகிக்கப்படும் எழுவரும் ஒருநாள் முழுவதும் ஆலயத்திலேயே தங்கவைக்கப்பட்டு அவர்களை கன்னித்தெய்வங்களாகப் பாவனை செய்து சேவகம் செய்வர். அன்றைய நாள் அம்மன் சடங்குகளில் பங்கெடுக்கச் செய்து, அவர்களுக்கு முன் தேங்காய் வெட்டி, சக்கரையமுது படைத்து, அர்ச்சணை செய்து படைக்கப்பட்ட அமுதினை அவர்களை உண்ணச்செய்வர். அவர்களை கன்னித்தெய்வங்களாகவே பாவனை செய்வதால் அவர்களின் திருப்தி கேட்டு அறியப்படுவதோடு வயதான மூதாட்டி அவர்களிடம் சக்கரையமுதில் மடிப்பிச்சை பெற்று ஏனையோருக்கு அதனை பிரசாதமாக ஊட்டுவார். கன்னியர்களின் திருப்தியைக் கேட்டு உறுதி செய்த பின்னரே அவர்கள் வழியனுப்பி வைக்கப்படுவர். அதன் பின்னரே ஆலயத்தில் ஏனைய சடங்குகள் முன்னெடுக்கப்படும். இத்தகைய சடங்குகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு எதிர்காலத்தில் திருமணத்தடைகள், தோசங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையின் நிமிர்த்தமே இவை மேற்கொள்ளப்படுகின்றன. கன்னிமார் வழிபாடு மாரியம்மன் கோயில்களில் பிரதானமாகவும் ஏனைய அம்மன் கோயில்களில் மரபு சார்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. இச்சடங்கு ஆலயச் சடங்காக அமைய பிறிதொரு சடங்கும் கன்னிமாருடன் தொடர்புடையதாய் விளங்குகின்றது.

பருவமடையும் வயதை அண்மிக்கும் சிறுமியரை மீவியல் இடங்களில், மீவியல் நேரங்களில் தனியே செல்ல அனுமதிக்காமை கிராமிய மரபு. இம்மரபிற்கு மாறாக மீவியல் இடங்களில் பிரவேசித்த சிறுமியருக்கு கன்னிமார் பார்வை ஏற்பட்டு அச்சிறுவர்களின் இயல்பு நிலை மாற்றமடைகின்ற போது அதற்கான சடங்குகள் பூசாரிகளை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பின் பல இடங்களிலும் இக்கன்னிமாருக்கான கழிப்புகள் இடம்பெறுகின்றன. இக்கழிப்பின் போது ஏழு கன்னியருக்குமான வெட்டு மந்திரமாக “ஓம் செப்பு கன்னி செந்தாமரைக்கன்னி அக்கினிக் கன்னி அம்மானைக்கன்னி ஆலாத்தி கன்னி வில்லைகன்னி மொக்காட்டு கன்னி கன்னிமார் ஆணை உச்சாடு உச்சாடு………..அம்மா மருளி அம்மை மருளி ஐயும் கிலியும் சௌவும் தடையற முறியவே சுவாஹா” (சர்வேஸ்வரன்.,ஆரையம்பதி வடபத்திரகாளி கோயில்:மந்திரஏடு) என்பது அமைகின்றது. இது “கன்னிமார் வெட்டாக” மந்திர ஏடுகளில் குறிப்பிடப்படுகின்றது. இதில் நம்பிக்கை பூண்ட மக்கள் சிறுமியரை இச்சக்தியின் பார்வையிலிருந்து தவிர்க்க முற்படுகின்றனர்.

பருவமடைதலுடன் தொடர்புடைய வழிபாட்டுச் சடங்குகள்:

தாய்மையடைதலை நிர்ணயிக்கின்ற முதன்நிலையாக பூப்படைதல் அமைகிறது. பருவமடையும் வயதானது சிறுமியின் உடல்வாகைப் பொறுத்து பத்து முதல் பதினாறு வயதிற்கு இடைப்பட்டதாய் அமைகிறது. பூப்படைந்தவுடன் மேற்கொள்ளப்படுகின்ற சடங்குகளும், உணவுப்பழக்கவழக்கங்களும் சிறுமியின் உடல், உள ஆரோக்கியத்துடன் நேரடியாகவே தொடர்புறுகின்றன. பூப்படைதல் மட்டக்களப்பில் சாமர்த்தியமடைதல், பெரியபிள்ளையாதல் என்றே அழைக்கப்படுகின்றது. அவ்வேளை முன்னெடுக்கப்படுகின்ற சடங்குகளுக்கூடாக அச்சிறுமியானவள் உளரீதியாக முன்னிருந்த பிள்ளைப்பருவ மனநிலையிலிருந்து புதிய மங்கை பருவ மனநிலைக்கு அழைத்துவரப்படுகின்றாள்.

பூப்படைதலைத் தொடர்ந்து வரும் மறுசாமர்த்தியத்திலிருந்து மாதவிடாயின் முறையான சுழற்சி இடம்பெறகிறது. பூப்படைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம் மாதவிடாயகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். இது 28 நாட்களாக அமைவது ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகக் கொள்ளப்படுகின்றது. மாதவிடாய் சுழற்சி தாய்மை நிலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். இத்தொடர்ச்சியின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு மற்றும் மாதவிடாய் முறையாக ஏற்பாடமை எனும் இரண்டு விடயங்களும் மட்டக்களப்பு வழிபாடுகளில் மாந்திரீக மருத்துவத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றது.

மாதவிடாய் என்பது கருவுற்பத்திக்காக காத்திருந்த கருமுட்டையின் வெளியேற்றமாக அமைகிறது. ஓமோன்களின் மாற்றங்களால் மாதவிடாய் ஏற்படுதல் தாமதமடைவதாக மருத்துவக் காரணங்கள் சொல்லப்படுகின்ற போதும் மட்டக்களப்பு பிரதேசத்தில் இதற்கான காரணங்கள் சில பெண் சக்திகளினதும், துர்சக்திகளினதும் பார்வையாலும் ஏவல்களாலும் ஏற்படுவதாகக் கருதப்பட்டு அச்சக்திகளை கழிப்புக் கொடுத்து வெட்டி நீக்குவதோடு, “துவாலை இறைக்க” எனும் மந்திரம் மூலம் மாதவிடாயை வருவிப்பதற்கான மாந்திரீக சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இச்சிகிச்சையின் போது  “ஓம் மாயா மருளி மந்திர பிடாரி சங்கு புத்திரி இன்னாள் இன்னானுக்கு இறை இறை உடை உடை ஐயும் கிலியும் சிவாய நம” (சர்வேஸ்வரன்.,ஆரையம்பதி வடபத்திரகாளி கோயில்:மந்திரஏடு) எனும் மந்திரத்தை உபயோகித்து கோழிமுட்டையில் இசங்கு முள் மூன்று குத்தி, தகட்டில் அட்சரம் கீறி இரண்டுக்கும் உருக்கொடுத்து புதைக்கின்றனர். இங்கு கோழிமுட்டை என்பது கருமுட்டையின் உருவகமாகவே கொள்ளப்பட்டு அதனை குத்தி வெளியேற்றல் என்கின்ற பாவனையையும், அதற்காக வரையப்படுகின்ற அட்சரத்தின் கோடுகளும் கருமுட்டையை கட்டங்களுக்குள்ளிருந்து வெளியேற்றுவதைப் பிரதிபலிப்பதாவே அமைகிறது. மாதவிடாய் மற்றும் பிரசவ உதிரப்போக்கானது ‘துவாலை’ எனும் சொல்லாடலினாலே இம்மக்களால் குறிப்பிடப்படுகின்றது. இதனால் இதற்கான மந்திரமும் துவாலை இறைக்க எனும் பெயரால் கையாளப்படுகின்றது.

மாதவிடாய்க் காலங்களில் ஏற்படுகின்ற அதிக உதிரப்போக்கும் உடல், உள ரீதியாகப் பெண்களைப் பாதிக்கின்ற பிறிதொரு விடயமாக அமைகின்றது. அவ்வாறு ஏற்படுகின்ற அதிக உதிரபோக்கினை கட்டுப்படுத்த ‘துவாலை மறிக்க’ எனும் மந்திரம் கையாளப்படுகின்றது.

“ஓம் றிங்க சிறிங்க சங்க சிங்க அய்யும் கிலியும் சவ்வும் கிலியும்

ஓம் அகார இகார உகார ஆதிபரமேஸ்வரி ஆணை ……………..

அடை அடை உந்தியில் உதித்த செந்தாமரை அம்மையாணை

வறுகி வறுகி உதிரக் கடலை மூடு மூடு வாய்க்காலை வெட்டி வரம்பை அடைத்தாற் போல் உதிரம் வற்றித் தணியவே சுவாஹா”  (சர்வேஸ்வரன்., ஆரையம்பதி வடபத்திரகாளி கோயில்:மந்திரஏடு)என்று அதற்கான மந்திரம் அமைகிறது. இவ்வாறு தாய்மை நிலையை தீர்மானிக்கும் குறிகாட்டியான மாதவிடாயுடன் தொடர்புடைய மந்திர கிரியைகள் அமைந்துள்ளன. இவ்வாறு மட்டக்களப்பு வழிபாட்டு முறைகளில் துவாலை இறைத்தல், துவாலை மறித்தல் என்பவற்றுடன் மந்திர கட்டுக்கள் தொடர்பான செயன்முறைகளும், துர்சக்திகளின் பார்வைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அட்சரங்களில் குறியீடுகளாக வரையப்படுகின்ற சூலத்தினுடைய(கீழ்நோக்கிய நிலையில்) அமைப்பை கருப்பையின் குறியீடாகக் கொள்வர்.

கர்ப்பிணி நிலையும் அதனுடன் தொடர்புடைய வழிபாடுகளும்

கர்ப்பிணிக்கும் அவரது குடுபத்தினருக்குமான தொடர்பினை வலுவாக்குவதில் பெண்தெய்வ சக்திகள் தொடர்பான தொன்மங்களும் நம்பிக்கைகளும் ஆகமம் சாரா வழிபாட்டுமரபில் பாரிய பங்களிப்பினை நல்கின்றன. இல்லற வாழ்வின் நிறைவை வழங்குவதாக அமைவது குழந்தைப்பேறு. குழந்தைப்பேற்றை நல்கும் தெய்வ வணக்கங்கள் மனிதனின் ஆரம்பகாலம் முதலாக இடம்பெற்றுவருகின்றன. எனினும் இதற்கான வழிபாடுகள், வழிபடப்படும் தெய்வங்கள் என்பன அவரவர் வாழும் பிரதேசம், சமூகம் சார்ந்தவையாய் அமைகின்றன.

ஆகமமரபில் கர்ப்பரக்ஷகாம்பிகை கருத்தரிப்பதில் உள்ள சிக்கல்களை நீக்கி, கர்ப்பம் தரிக்கச் செய்து கர்ப்ப நிறைவு காலம் வரை காப்பவராக கொள்ளப்படுகின்றாள். ஆகமம் சாரா வழிபாட்டில் இவ்விடத்தினை மக்களது சமூகம் சார்ந்து வௌ;வேறு தெய்வங்கள் ஏற்கின்றனர். தமிழ்நாட்டிலே இதற்கான முக்கிய இடத்தினை பேச்சியம்மன் வகிக்கிறாள். பேச்சி என்பது வாக் எனும் பொருள்பட பேச்சு என்பதிலிருந்து வந்தது எனக் கருதுவதுமுண்டு. கர்ப்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள், சுகப்பிரசவத்திற்கு வழிவகுப்பவள் எனும் நோக்கில் வழிபாடாற்றப்படுகின்றாள்.

கர்ப்பத்தினை ரட்சித்து காப்பவளாக மட்டக்களப்பு மக்களால் உணர்வுபூர்வமாக வணங்கப்படுபவள் புன்னைச்சோலை காளி கோயிலிலுள்ள பிரித்தியங்கிரி அம்மனாவாள். பிரத்தியங்கரா தெய்வத்தினுடைய தொன்மம் நரசிங்க அவதாரத்துடன் தொடர்புடையதாய் அமைய, இவ்வாலயத்தில் கர்ப்பத்திற்கு தடையான கட்டுக்கள் அனைத்தையும் தகர்த்து குழந்தை வரம் அருள்பவளாக திகழ்கிறாள்.  புன்னைச்சோலைக்காளி மட்டக்களப்பு தேச மக்களனைவரையும் வரங்களால் வாரி அணைத்துக்கொண்டவள். இவ்வாலயத்தின் பிரசித்திக்கு முக்கிய காரணமாக அமைவது குழந்தை வரமளித்தலேயாகும். இவ்வரத்தினை அங்கு பரிவாரத்தெய்வமாக வீற்றிருக்கும் பிரித்தியங்கிரியே அருள்கிறாள். இவ்வாலய வருடாந்த சடங்கின் போது பிரித்தியங்கிரியாக உருவேறி ஆடும் தேவாதி அங்கு குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் பக்தர்களை தானாகவே அழைத்து மருந்தாக பத்திரம், பழம் முதலியவற்றை வழங்கி எத்தனையாவது மேலாண்டில் குழந்தை வரங்கிடைக்கும் என்று வாக்கு கூறி அனுப்புவார். இவ்வாக்கினைப் பெற குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் ஆலயவளாகத்தில் காத்துக்கிடப்பர். அம்மனின் அருள் வாக்கினைப் பெற்றவர், வாக்குப் பெற்ற நாளிலிருந்து சடங்கு முடியும்வரை ஆலயத்திலேயே தங்கி விரதமிருந்து தீமிதித்துச் செல்வர். தெய்வ வாக்கின்படி(கட்டு சொல்லுதல்) குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து சடங்கில் கலந்து கொள்வர். தேவாதி அக்குழந்தைகளை தூக்கியாடுவர். இந்நிகழ்வு பக்தியினையும் பரவசத்தினையும் ஊட்டுவதோடு அம்மனின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாய் அமைகின்றது. இவ்வாலயச் சடங்கில் பரிவாரத் தெய்வமான பிரித்தியங்கிரிக்கு முன்னாலே அதிக நேரம் சடங்கு நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தியங்கிரி அம்மன் ஆகமமரபில் திருஷ்டி நீக்குபவளாக, செத்தல் மிளகாய் யாகம்(நிகும்பலாயாகம்) செய்து வழிபடும் தெய்வமாக அமைய, ஆகமம்சாரா வழிபாட்டில் பலி ஏற்பவளாக திகழ்கிறாள். இதனால் கோழிப்பலியும் இவ்வாலயத்தில் வழங்கப்படுகிறது. இது உயர்ப்பலியின் குறியீடாக பூவில் இரத்தங்காட்டுதலாகவே வழங்கப்படுகின்றது.

“ஓம் சக்தி ஆதி சக்தி சிவானந்த வல்லி சீக்கிரம் வா வா

ஓம் சிறிங்க லிங்க சிவாய பிரித்தியங்கரா காளியம்மா

பூசை பலி கொள்ளவே சுவாஹா” (சர்வேஸ்வரன்., ஆரையம்பதி வடபத்திரகாளி கோயில்:மந்திரஏடு) என பூசை பலி கொள்பவளாக சித்திரிக்ப்படுகிறாள். பயங்கரமான தோற்றங்கொண்டவளாகவும் தன்னை வேண்டுபவர்களின் வரங்களை தாமதமின்றி வழங்குபவளாகவும் திகழ்கிறாள். பரவசமூட்டும் சடங்காகவும் பக்கதர்களையும் தெய்வத்தையும் உணர்வு பூர்வமாக ஒன்றிணைக்கும் சடங்காகவும் இவ்வாலயச் சடங்;கு நடைபெறுகின்றது. இவ்வாலயத்திற்கான பிரதான வருமானம் குழந்தை வரம்பெற்ற பக்தர்கள் வழங்கும் நேர்த்தி செலுத்துதலாலே கிடைக்கின்றமையும் குறிப்பிடற்குரியது. மட்டக்களப்பின் நகரை அண்மித்துள்ள இவ்வாலயத்திற்கு மட்டக்களப்பின் மூலைமுடுக்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். மட்டக்களப்பு தேசத்தின் தாய்த்தெய்வ வழிபாட்டின் செழுமையை பிரதிபலிக்கும் சடங்காக இன்றுவரை இவ்வாலயச் சடங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்பிரதேசத்தில் வேறு சில ஆலயங்களிலும் பரிவாரத்தெய்வமாக பிரித்தியங்கிரி வணங்கப்படுகிறாள். இவளை அதர்வண பத்திரகாளி எனும் நாமங்கொண்டும் பூசிக்கின்றனர். ஆனால் குழந்தைப் பேறருளும் தெய்வமாக புன்னைச்சோலை காளி கோயிலிலே வணங்கப்படுகின்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பரிவாரத் தெய்வமாக வணங்கப்படுகின்றவளும், ஆகம நெறிமுறைக்குள் உள்வாங்கப்படாததுமான கர்ப்பிணிகளையும், பருவ வயதினரையும் தாக்குகின்றதுமான ஒரு பெண் சக்தியாக அறியப்படுபவள் காடேறியாவாள். இப்பிரதேச காளி கோயில்களில் பரிவாரத் தெய்வமாக தனக்கென தனிப்பந்தலுடன் காடேறி வழிபடப்படுகின்றாள். இவளுடைய இணையனாக கம்பளி வைரவன் கருதப்படுகிறார். ஏறாவூர் பத்திரகாளி கோயிலில் இவளுக்கு சிலை அமைத்து வழிபாடாற்றுகின்றனர். உக்கிரமான தெய்வமாக ஆலயத்தில் இடம்பெறும் இவள் ஊர் எல்லையில் துன்புறுத்தும் ஆக்ரோசமான சிறு தெய்வமாகவும் (துர்சக்கியாக) பார்க்கப்படுகின்றாள்.

காடேறி என்பது காடுூஏறி என பிரித்து பொருள்கொள்ளப்படுகின்றது. அதாவது காட்டுக்குச் சென்று குடியேறியவர். கள்ளிமரத்தில் ஏறியிருப்பவர் எனக் கொள்ளப்படுகிறாள். அவள் ஊரில் எல்லைப்புறங்களில், காடுகளில், பாழுங்கிணற்றில் உறைபவளாக கற்பிக்கப்படுகிறாள். மீவியல் களத்தில் ஆக்ரோசமாக அலைந்துகொண்டிருக்கும் ஒரு சக்தியின் குறியீடாகவே காடேறி அமையப்பெற்றுள்ளாள்.

இலங்கையில் மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகப் பகுதிகளிலும் இந்தியாவில் தமிழகத்திலும் காடேறிக்கு படைக்கப்படும் படையல்களாக கறுத்த பேட்டுக் கோழி, முட்டை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை என்பவை அமைகின்றன. மேலும் கறுப்புச் சேலை, கறுப்பு நிறத்திலான காதணிகள், கழுத்தணிகள் முதலானவையும் இடம்பெறுகின்றன. இங்கு பேட்டுக்கோழியும் முட்டையும் கர்ப்பிணி மற்றும் கரு என்பவற்றின் குறியீடாகவே அமைகிறது. தாய்மைத் தன்மையில் பல்வேறு தளங்களில் தொடர்புறுத்தப்படும் இச்சக்தி, கருவுற்ற பெண்களை தாக்குவதாக கொள்ளப்படுபவள். மட்டக்களப்பில் தொடர்ச்சியாக கருச்சிதைவுக்குட்படும் பெண்ணை காடேறி தாக்கியதாக கருதி மேற்கூறிய படையல்களையும்;, பலியையும் கொடுத்து பூசாரிகள் மீவியல் இடங்களில் கழிப்புச் சடங்குகளை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் பெண்களே காடேறிக்கான சடங்குகளை மேற்கொள்ள இலங்கையில் ஆண் பூசாரிகளே நடாத்துகின்றனர்.

ஆலயத்தில் பரிவார சத்தியாக உள்வாங்கப்பட்ட காடேறியும், எல்லைகளில் பலி கொள்ளும் காடேறியும் ஒருவரே என்பதும், அவள் காடேறிய நிலையில் பலி கொள்வாள் என்பதும் இம்மக்களின் நிலைப்பாடு. ஆலயச்சடங்கில் அவளுக்கு கும்பம் வைத்து, மடை வைத்து சடங்குகளை மேற்கொள்கின்றனர். மட்டக்களப்பில் பெரும்பாலும் காளி கோயில்களில் இவளுக்கு பரிவாரப் பந்தல்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஏறாவூர் காளிகோயில், புன்னைச்சோலை காளிகோயில், ஆரையம்பதி வடபத்திரகாளி கோயில் போன்றவற்றைக் குறிப்பிடலாம். வடபத்திர காளி கோயில்களில் தீக்குளியின் நான்கு மூலைகளுக்கும் வீரகம்பம் எனும் கள்ளி செடி நடப்படுகின்றது. காடுகளில் கள்ளி மரத்தில் ஏறியிருப்பவள் காடேறி என்பதால் காடேறிக்கு மடை வைத்தே கள்ளிச் செடி வெட்டிவரப்படுகின்றது. இவ்வாறு ஆலய வழிபாட்டோடு இணைந்த வகையில் வழிபடு சக்தியாகவும் ஆராதிக்கப்படுகிறாள்.

மருத்துவிச்சியும் மகப்பேற்றுச் சடங்குகளும்

பண்டைக்காலங்களில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் என்பது வீடுகளிலே இடம்பெற்றது. இதனால் மகப்பேறுடன் தொடர்புடைய மருத்துவிச்சி முறைமையும்; அவ்வவ் பிரதேச மக்களின் வழிபாட்டு பாரம்பரியங்களோடு பிணைப்புற்றிருந்தது. தமிழர் பண்பாட்டில் வாட்டு கங்காணி, குடும்பநல உத்தியோகத்தர் பதவிகள் அறிமுகமாகும் வரை ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவிச்சிகளே மருத்துவர்களுக்கான இடத்தினை வகித்தனர்.

மருத்துவிச்சி முறைமை என்பது ஒரு வகையான வைத்திய முறை என்பதனையும் கடந்து, உறவு முறையாக அமைகிறது. கர்ப்ப பாலத்தில் தாய் சேய்க்கான பயத்தைப் போக்கி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமையோடு இருப்பதற்கு வழிசெய்கிறது. மருத்துவிச்சிமாரை பொறுத்தவரை அனுபவமும், தீர்க்கதரிசன பார்வையும், மனவலிமையும், கர்ப்பிணியை ஆற்றுப்படுத்தும் விதமும், பிரசவ வலியால் துடிக்கும் பெண்களை கையாளும் விதமும் முக்கியமானது. கர்ப்பிணி பெண்ணுக்கு வலியெடுத்ததும் ஊரிலுள்ள மருத்துவிச்சி அழைத்துவரப்படுவாள்.  தனது அனுபவத்தாலும் தன்னம்பிக்கையாலும், உடல் உள பலத்தாலும் சுகப்பிரசவங்களைப் பெற்றுத்தருபவள். இத்தகைய மருத்துவிச்சி முறைமையிலும் வழிபாட்டு மரபுகள் கலந்துள்ளன. மருத்துவிச்சி கர்ப்பிணித் தாயின் அடிவயிற்றில் ஆமணக்கு எண்ணெய் தடவுதல் ஒரு மருத்துவமுறையாகும். மட்டக்களப்பு பகுதிகளில் மந்திரம் கூறி சுழுக்கு பார்த்தல் இடம்பெறுவது போல் பிரசவவலி ஏற்பட்ட பெண்ணுக்குக்கு மருத்துவிச்சிமார் மந்திரம் கூறியே எண்ணெய் தடவியுள்ளனர். அத்தோடு தண்ணீரும் ஓதிக்கொடுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக

“ஓம் தெட்சண பஞ்சாட்சரி ஆதி மூர்த்தி அலங்கார மோகினி

இருட்டறையிலிருக்கின்ற இந்திர மோகினி வயிற்றில் கெற்பம்

தரித்து ஒரு படி கடந்து இருபடி கடந்து முற்படி கடந்து

நாற்படி கடந்து ஐம்படி கடந்து அறுபடி கடந்து ஆறாம்படிக்குள்ளே

ஆத்தனைத் தொழுது வாறாள் மோகினி வயிற்றில்

மறிபட்ட மாவும் பிள்ளையும் வழுகி விழவே சுவாஹா” (சர்வேஸ்வரன்., ஆரையம்பதி வடபத்திரகாளி கோயில்:மந்திரஏடு) எனும் மந்திரம் உச்சரித்து தண்ணீர் ஓதிக்கொடுக்கப்பட்டது. இன்னும் சிக்கலாகி பிரசவம் தாமதிக்கும் போது பூசாரியை அழைத்து கடப்பில் தேங்காய் வெட்டுதலும் இடம்பெற்றது. அத்தோடு பத்திரகாளிக்கும் அனுமருக்கும் மடை வைத்து தண்ணீர் ஓதிச் சொரிவர். இவ்வாறு மருத்துவிச்சியுடனும் மந்திர வழிபாட்டு முறைகள் பிணைப்புற்று விளங்கியுள்ளன.

வழிபாடுகளுடன் வழக்காறுகளும் ஒன்றியிருந்தமையை மருத்துவிச்சி முறைமையில் காணமுடிகின்றது. பிரசவமானதும் பிரசவித்த தாய் அணியும் சேலைக்கு மாத்துச் சேலை என்று பெயர். இம்மாத்தினை ஊர்க்குடிமகனிடமிருந்து பெற்று அணிவர். இன்றும் இவ்வழக்கினை மட்டக்களப்பின் சில கிராமங்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழமையாக மேற்கொண்டுவருகின்றனர். மருத்துவிச்சியானவள் பிறந்த குழந்தை ஆணாக இருந்தால் உலக்கையையும், பெண்ணாக இருந்தால் விளக்குமாற்றையும் கூரைக்கு மேல் எறிவாள். இவ்வாறான பல வழமைகளும் இடத்திற்கிடம் சில மாறுபாடுகளுடன் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் வடபகுதியில் மருத்துவிச்சியால் மேற்கொள்ளப்படும் கொத்திப் பேய்க்கு கழித்தல் எனும் சடங்கு மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற சடங்குகளுடன் தொடர்புறும் வகையில் பிரசவகாலச் சடங்காகவே இடம்பெறுகின்றது. அப்பகுதி மக்களின் பிரசவத்திற்குரிய தெய்வமாக கொத்தி வணங்கப்பட்டு வருகிறாள். இக்கொத்தி கொற்றவையின் ஒரு சக்தியாகவே கருதப்படுகிறாள்;. இவள் கொத்தியாத்தை, காடுகொள்சூரி, தொல்குடிகுமாரி, கொத்திப் பேய் என அழைக்கப்பட்டு வருகின்றாள். (அனந்தராஜ்,ந.,2002:27)

கொத்தியை வழிபடுகின்ற வடபகுதி மக்கள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்தப் போக்கு ஏற்படாமலும், குறைப்பிரசவம் ஏற்படாமலும் காப்பாற்றுபவள் என்ற நம்பிக்கையுடன் சடங்குகளை மேற்கொள்கின்றார்கள். கொத்தி பிரசவத்தின் போது கூட இருந்து காப்பவளாயினும் பின்னர் குழந்தை மீது ஆசை கொண்டு குழந்தையை தூக்கிச் செல்லக்கூடியவளாகவும் கருதப்படுகிறாள். இதனால் பிரசவம் பார்த்த மருத்துவிச்சிக்கு பிரசவம் பார்ப்பதுடன் கொத்திக்கு கழிப்பு செய்யும் கடமையும் இப்பிரதேசங்களில் வழக்கிலுள்ளது.

மருத்துவிச்சி பிரசவம் பார்த்த ஐந்தாம் நாள் கொத்திக்கு கழிப்புக் கொடுப்பாள். கழிப்பின் போது பிரசவவறையின் மூலைமுடுக்கெல்லாம் தீச்சூளையைக் கொண்டு சென்று மேல்வரும் பாடலைப்பாடுவாள்

“செத்தைக்க பத்தைக்க நில்லாதே

எங்கள் பிள்ளையை எங்கும் எடுக்காதே

கொத்தியாத்தே நில்லாமல் ஓடு

ஊரை விட்டோடு கொத்தியாத்தே” (அனந்தராஜ்,ந.,2002:28)

என்று பாடிமுடித்ததும் அவ்வெளிச்சத்துடன்; பிரசவத்தில் பயன்படுத்திய பாய், சேலை மற்றும் படைத்த உணவுளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள். அவ்வூரின் எல்லையில் உள்ள பாழடைந்த இடத்தில் கொண்டுவந்த பொருட்களை வைத்து விட்டு சூளையும் நிலத்தில் தேய்த்து அணைப்பாள். அணைக்காவிட்டால் வெளிச்சத்தில் கொத்தி திரும்ப வந்துவிடும் என்பது ஐதீகம். இவ்வழக்கம் மருத்துவிச்சியினால் மேற்கொள்ளப்படும் சடங்காகவே அமைகின்றது. மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்வியல் இழையோட்டங்களை உணர்வுபூர்வமாக இச்சடங்குகள்  பிரதிபலிக்கின்றன.

மகப்பேற்று மருத்துவரின் பகிபாகத்தைப் பெற்றிருந்த மருத்துவிச்சியின் இடத்தினை தெய்வங்களும் பெற்றிருக்கின்றன. சிவன் பிரசவம் பார்த்து தாயுமானவரானமை பௌராணிக மரபு. மட்டக்களப்பு அம்மன் கோயில்களில் உள்ள குத்துக் கிழவி மருத்துவராகவே வணங்கப்படுகிறாள். குத்துக்கிழவியின் தொன்மமானது சனாதன முனிவர்களுக்கு பார்வதிதேவி கொடுத்த வாரத்திற்கமைய சிவனை அவர்களுக்கு தானமாகக் கொடுத்து விட்டு, மீண்டும் சிவனை மீட்கும் வரை கிழவியாக குடிசையொன்றில் வாழ்ந்து மருந்துகளை வழங்கி வந்ததாகவும் அவ்வழியாக வந்த சனாதன முனிவர்களுக்கு நீரைக்கொடுத்து சிவனை மீளப் பெற்றுக் கொண்டதாக அமைகிறது. பார்வதி தேவி மருந்துகளை அரைத்து வைத்தியம் பார்த்த அவ்வடிவமே இப்பிரதேச மக்களின் ஆகமம்சாரா வழிபாட்டில் குத்துக்கிழவியாக வணங்கப்படுகின்றது.

ஆலயச்சடங்கின் போது கலையாடும் தேவாதி அழகிய கிழவியாக மஞ்சள் பூசி, வளையல்கள் அணிந்து, தன்னை அலங்காரமிட்டுக் கொண்டே வருவார். குத்துக்கிழவியானவள் மருந்துகளை வரவழைத்து சேலையை மறைப்பாக பிடித்து அம்மியில் மருந்துகளை அரைக்க வைத்து பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெறும். நாட்டு வைத்தியர்களும் மருந்துகளை வெளிப்படையாக கையாளுவதில்லை. அதுபோன்ற சாயலிலே சங்கேதமாக மருந்து அரைக்கச் செய்து பக்தர்களுக்கு வழங்குவார். உடுக்கடித்து இவருக்கான பாடல்களை பூசாரியார் பாடுவார். அப்பாடல்களில் ஒன்று

“தீராத நோய் பிணியை குத்துக்கிழவி அம்மா

தீர்த்து விட வேணுமம்மா குத்துக்கிழவி அம்மா…….” (சர்வேஸ்வரன்,கி.,சடங்குப்பாடல்கள்;:கையெழுத்துப்பிரதி) என்றமைகிறது. மட்டக்களப்பபு தேசத்தில் ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஆரையம்பதி, பாண்டிருப்பு முதலான பகுதிகளில் குத்துக்கிழவி வழிபாட்டினைக் காணமுடிகின்றது. மட்டக்களப்பு வழிபாட்டு மரபிலே மருத்துவிச்சியாக அவதரித்த தெய்வமாகவே குத்துக்கிழவி கொள்ளப்படுகிறாள்.

தாய்மை நிலை என்பதுடன் ஒருவகையில் தொடர்புறுவதாக பெண்களுக்கு ஏற்படும் காமம்சார் நோய்களும் அமைகின்றன. சங்கப்பாடல்களில் பசலை நோய் பற்றிப் பேசப்படுகின்றது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டு களவின்பம் நுகர்வர். பின் வரவு தடைப்படுமிடத்து தலைவனைக் காணாத தலைவி உணவும், துயிலுமின்றி வருந்துவதால் மேனி மாறுபடுகின்றது. இதனைக் கண்ணுற்ற தலைவின் தாயார் முது பெண்டிரின் கூற்றுக்கியைய முருகனுக்கு வெறியயர்ந்து காரணத்தை அறிவார்.(குறுந்தொகை:263;;) இது பெண்களுக்கான நோயாகக் காட்டப்படுகின்றது. இதற்கு வழிபாடு மூலம் காரணம் அறிய முற்பட்டமையையும் சங்கப்பாடல்களில் காணலாம்.

பசலை நோயிலிருந்து மாறுபட்டதாய் அமையும் ஒருவகை உளநோயானது ஹிஸ்டீரியா எனப்படுகிறது. இந்நோய் வளர்இளம் பெண்களை அதிகம் பாதிப்பதாய் அமைவதோடு சிலவேளைகளில் திருமணமான பெண்களுக்கும் கூட பாதிப்பினை ஏற்படுத்துவதாயும் அமைகிறது. அதேவேளை இது ஆண்களுக்கு விதிவிலக்கானதுமல்ல. இதற்கு மருத்துவர்கள் ஹிப்னாசிஸ் முறையில் தீர்வும் கண்டனர். சிக்மண்ட் ஃபிராய்ட் இதற்கு உளப்பகுப்பு சிகிச்சையை நடைமுறைப்படுத்தினார். இவ்வுளநோய் போன்றதான பாதிப்பினை மோகினி எனும் சக்தியுடன் தொடர்புறுத்துகின்றனர். மட்டக்களப்பின் பல பாகங்களிலும் மோகினிக்கான கழிப்பு இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

மோகினி என்கின்ற சக்தியின் தோற்றம் பற்றிய ஐதீகமானது மந்தாரமலையை கடையும் போது அசுரர்களை அமுதம் பருகவிடாமல் மயக்குவதற்கு விஷ்ணு மோகினியாக வடிவெடுத்ததாக அமைகிறது. மட்டக்களப்பு மரபுசார் வழிபாட்டிலே மோகினி என்கின்ற பெண் தேவதை நதி மற்றும் குளக்கரைகளிலுள்ள வாசமுள்ள மரங்களில் உறைபவளாகக் கொள்ளப்படுகின்றாள். அவ்விடங்களில் பருவ வயதினர் செல்லும் போது அவர்களில் பார்வையாவதாகக் கருதப்படுகின்றது. சில வேளைகளில் எதிரிகள் இச்சக்தியை மாந்திரீகம் மூலம் ஏவிவிடுவதாகவும் கூறப்படுகின்றது. மோகினியின் ஏவல் அல்லது பார்வை ஏற்படுமிடத்து அவர்களது சுயநிலை மறந்து பிறர் தன்னைக் கவருவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவர். இவை  பாலியல் சார்ந்த விடயங்களாகவும் அமையும். இந்நோயினால் தாக்கப்பட்டவருக்கான கழிப்பு முறையினை மைபார்த்து பூசாரி அறிந்து கொள்வார். மையில் வெளிப்படுத்தப்பட்ட இடத்தில் கழிப்பிற்கான ஏற்பாடுகள் இடம்பெறும். இக்களம் மயானமாகவும் அமையும்.

நிறைவாக

கர்ப்பகால வாழ்வியல் சடங்குகள் தாய், சேய் மகிழ்விற்கும், ஆரோக்கியத்திற்கும் வழிசெய்கின்றன. இவை உளரீதியான வலிமைக்கும் இயல்பாக இட்டுச் செல்கின்றன. வாழ்வியல் சடங்குகளைப் போன்று வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளும் மகிழ்வு, ஆரோக்கியம் என்பவற்றோடு உடல் உள வலுவினையையும், பாதுகாப்பினையும், கரிசணையையும் வழங்குவதாக அமைகின்றன. அதாவது ஆகமம் சாரா வழிபாட்டில் ஆலயங்களில் இடம்பெறுகின்ற சடங்குகள் பக்தர்களுக்கும், தெய்வத்திற்குமான இடைவெளியினைக் குறைத்து அவர்களை நேரடியாக தெய்வங்களுடன் தொடர்புபடுத்தும் பாங்கில் அமைவதால் அவர்களது குறைகள் வேண்டுதல்களாக முன்வைக்கப்படுமிடத்து தேவாதிகள் கொடுக்கின்ற வாக்கானது அவர்களின் மனதில் தமக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையினை விதைக்கின்ற ஆற்றுப்படுத்தலாக அமைகின்றது. மகிழ்வான மனநிலையும், அக்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற விரதங்களும் அவர்களுக்கு சிகிச்சைகளாகவே அமைந்துவிடுகின்றன.

உக்கிர தெய்வங்களை, தேவதைகளை வேண்டுகின்ற விடத்து அவர்களிடம் மனதில் ஏற்பட்டிருந்த மறை எண்ணங்கள் அகற்றப்பட்டு தைரியம் விதைக்கப்படுகின்றது. இதுவும் உளவியல் ரீதியாக வலிமையான தாய்மார்களை உருவாக்குகின்றது. பிரித்தியங்கிரி அகோரமான தோற்றமுடைய பெண் தெய்வம். பெண்ணின் தாய்மையானது எத்துன்பத்திலும் தன் குழந்தைகளுக்கு பாதுகாப்புணர்வை வழங்குவது. எனவே தாயான பிரித்தியங்கிரியிடம் சரணடைந்த பக்தர்களான குழந்தைகளை தாய்மை காக்கிறது. அத்தோடு பெண் தெய்வங்கள் உக்கிர நிலையில் உடனே செயற்படுபவர்களாக திகழ்பவர்கள் எனவே தன் பக்தர்களின் வேண்டுதல்களை பரிசீலனையின்றி உடனே நல்கும் ஆற்றல் உள்ளவர்களாக துலங்க காணலாம்.

மீவியல் நேரங்களில் கர்ப்பிணி பெண்களை தாக்குகின்ற துர்சக்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள காடேறியின் தொன்மம் இயல்பாக சமூகம் கர்ப்பிணி பெண்கள் மீது கொள்ள வேண்டிய அக்கறையாகவே வெளிப்படுகின்றது. அதேபோன்று தாய்மை நிலையை நோக்கி நகர்கின்ற சிறுமியர்களி;ன் பருவநிலைமாற்ற காலங்களில் பார்வையாகின்ற கன்னிமார் தெய்வங்களின் நம்பிக்கையும் சிறுமியர் மீது சமூகம் கொள்ள வேண்டிய கரிசணையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. மீவியல் இடங்கள் சிறுமியருக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற இடங்களாக அமையக் கூடியவை என்பதால் அவ்விடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதற்கான வழிமுறையாகவும் இந்நம்பிக்கைகள் அமைந்துள்ளன.

மீவியல் இடங்கள் பாதுகாப்பற்ற பகுதி என்பதோடு நிலைமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களாகவும் அமைகின்றன. கழிப்பு சடங்குகள் எல்லாம் மீவியல் இடங்களிலே நிகழ்த்தப்படுகின்றன. ஒதுக்குப்புறமான ஆற்றங்கரை, வனங்கள், சுடுகாடு, பாழடைந்த இடங்களும் நண்பகல், நள்ளிரவு, அந்தி, சந்தி வேளைகளும் இம்மாற்றத்திற்குக் காரணமாகிறது. காலம், வெளி ஆகிய இரண்டும் மனதின் புலப்பதிவுகளிலும், அக அனுபவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது எனலாம். இந்நிலைமாற்றமே சிகிச்சையாக அமைந்துவிடுகிறது.

மோகினி போன்ற துர்சக்திகளின் பார்வையின் போது கழிப்பில் இடம்பெறுகின்ற பொருட்கள், மந்திர உச்சாடனங்கள், உடுக்கை ஒலிகள் என்பன பாதிக்கப்பட்டவர்களை லயப்படுத்தி பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து விடுத்து நிலைமாற்றத்தை ஏற்படுத்துகின்றது. எனவே அவர்களுக்கு மீவியல் களங்களில் வைத்து மேற்கொள்ளப்படும் சடங்கானது மாந்திரீக உளச்சிகிச்சையாகவே அமைகிறதெனலாம். எனவே மட்டக்களப்பு தேசத்தில் மகப்பேற்றுடன் தொடர்புடையதாக இடம்பெறுகின்ற சடங்குகள் பக்தி பரவசத்தோடு உடல், உள மருத்துவப் பொறிமுறைகளுடனும் இயைந்ததாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை நூல்கள்.

1. அனந்தராஜ்,ந., (2002), வடபுல நாட்டார் வழக்கு, வல்வட்டித்துறை, ப.27.

2. கணபதிப்பிள்ளை,சி., (1971),மகமாரித்தேவி திவிய கரணி, விவேகானந்த அச்சகம், யாழ்ப்பாணம், ப.113.

3. சர்வேஸ்வரன்,கி.,(2021) மந்திரஏடுகள் -கையெழுத்துப்பிரதி,ஆரையம்பதி வடபத்திரகாளியம்மன் ஆலயம்.

4. மௌனகுரு,சி.,(பதி), (2003), மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப்பண்பாடு, 2ஆம் உலக இந்துமாநாடு -மட்டக்களப்பு பிரதேசக்கிளை.

5. ஜெயசங்கர்.சி,கௌரீஸ்வரன்.து, சமகாலத்தில் மருத்துவிச்சி முறையினை மீளக் கொண்டு வருதலும் அதன் முக்கியத்துவமும்.(www.aaraiyampathy.com)