ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஜவ்வாதுமலை பழங்குடி மக்களின் கார்த்திகை விளக்கீடு

முனைவர் ரே.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை 10 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்: முனைவர் ரே.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை -9.

Abstract

The present paper is mainly discussed about karthikai worship cult  of Malaiyali Tribe at javvadu Hill. Javadhu Hill is widely located on Thiruppathur, Thiruvannamalai and Velor district. Malaiyaali Tribes has been living in Javvadu Hill from the mesolithic period to till date. They have rich cultural and worship cult. karthikai worship cult is celebrate on November or December month in every year. Sangam literature also referred this cult.

Key words

Tribal Studies, Tribal Culture, Karthikai lighting, Tamil literature, worship cult, love songs

ஆய்வுச் சுருக்கம்

      திருப்பத்தூர், திருவண்ணாமலை, மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்தப் பகுதியாக ஜவ்வாது மலை இருந்து வருகின்றது. இம்மலைப் பகுதியில் வாழும் மலையாளிப் பழங்குடி மக்களின் கார்த்திகை விளக்கீட்டிற்காக வீடு பூசுதல், ஓவியம் தீட்டுதல், மணியாட்டுதல், மாவுவிளக்கு மற்றும் சோற்று விளக்கு ஏற்றுதல் ஆகியவை குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.

திறவுச் சொற்கள்

      கார்த்திகை விளக்கீடு, அகநானூறு, மலைபடுகடாம், சூடாமணி நிகண்டு, வீடு பூசுதல், செம்மண், மாவு விளக்கு, சோற்று விளக்கு, பட்டி, கதண்டு, காதல் பாடல்.

முன்னுரை

      கார்த்திகை விளக்கீடு தொன்மையான மரபாக தமிழ்நாட்டில் கொண்டாடப் படுகின்றது.தொல்காப்பியம் மற்றும்சங்க இலக்கியங்களில் இவ்விளக்கீடு குறித்தப் பதிவுகள் காணப்படுகின்றன. அகநானூற்றில்  தொழில் நிமித்தமாக வெளியூர் சென்ற கணவன் கார்த்திகை விளக்கீட்டிற்கு வரவேண்டும் என்று மனைவி சொல்லும் பதிவு இடம்பெறுகிறது.

      குறு முயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து

      அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்

      அறுகு விளக்குறுத்து மாலை தூக்கி   - (அகம் -141)

      இதேபோல் அகநானூறு 185 வது பாடல் நற்றிணை 58, 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விளக்கு பற்றிசிறப்பிக்கப்படுகின்றன. மலைபடுகடாம் என்னும் சங்க இலக்கிய நூல் நிலத்தில் பூத்திருந்த முசுண்டை பூக்கள் கார்த்திகை விண்மீன் கூட்டம் போல் ஒளி நிறைந்ததாய் மலர்ந்திருந்தன என்று உவமை கூறுகின்றது.

      அகலிரு விசும்பின் ஆஅல்போல

      வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை   (மலைபடுகடாம் - 10)

      மேற்கண்ட பாடலில் குறிக்கப்பட்டுள்ள 'ஆஅல்' என்னும் சொல் கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் நாள் 'மீன் கூட்டத்தை' குறிப்பதாகும்.அழல் எனும் சொல்லும் கார்த்திகை என்பதை குறிக்கின்றது. சமய இலக்கியக் காலத்தில் திருஞானசம்பந்தர் இரண்டாம் திருமுறையில் கார்த்திகை விளக்கீடு குறித்து 'மட்டிட்ட புன்னைங்கானல்' எனத் தொடங்கும் பதிகம் வழி விளக்கியுள்ளார். இறைவன் சோதி வடிவில் இருப்பதாக திருமூலர் தம் திருமந்திரத்தில் விளக்கியுள்ளமையினை அறியலாம்.

      சூடாமணி நிகண்டில் கார்த்திகை மாதம் பற்றி 'தெறுகால், தேள், விருச்சகம்' என்று சொல்லப்பட்டிருக்கின்றது.அவ்வாறே கார்த்திகை நாளை "அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன்" ஆகிய சொற்கள் இந்நிகண்டில் இடம்பெற்றுள்ளன. எனவே சங்க காலத்திலிருந்தே தொல்  தமிழர்களிடம் கார்த்திகை விளக்கீடு வழிபாடாக இருந்திருக்கின்றது. இன்றளவும் தமிழகத்தில் கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்தும் மரபு இருந்து வருகின்றன. அந்தவகையில் ஜவ்வாதுமலை பழங்குடி மக்களிடம் அவர்களுக்குரிய தனித்துவமான கார்த்திகை விளக்கீடு குறித்து இவ்வாய்வு  விளக்குகின்றது.

1. வீடு பூசுதல்

      ஜவ்வாது மலை மலையும் மலை சார்ந்த இடமாகும்.இங்கு வாழும் மக்கள் மலையாளிப் பழங்குடி என்னும் மக்களினமாகும்.இவர்களின் வீடு மஞ்சம் புல் அல்லது வைக்கோல் தாள்களைக் கொண்டு வேயப்பட்டதாகும்.செம்மண்ணுடன் களிமண்ணைக் கலந்து நன்றாகப் பிசைந்துச் சுவர் எழுப்பப் படுகின்றது.சுவரின் மேற்பகுதியில் செம்மண் உடன் மாட்டுசாணத்தைக் கலந்து மெழுகுகின்றனர்.இத்தகைய வீட்டிற்குக் கார்த்திகை தீபத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே தங்களின் வீட்டு சுவருக்குச் சுண்ணாம்புப் பூசுகின்றனர்.அவ்வாறே வீட்டின் உள்பகுதியில் மாட்டு சாணம் கொண்டு தரைப் பகுதியை மெழுகுகின்றனர்.இத்தகைய தொல்வடிவம் ஜவ்வாது மலை பழங்குடிகளிடம் நவீனமயமாதல் மற்றும் உலகமயமாதல்தாக்கத்தினால் மாற்றம் எய்து வருகின்றது.அரசின் நலத் திட்டங்களில் ஒன்றான கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தினால் தொல் வடிவ வீடு அமைப்புகள் குறைந்து வருகின்றன.ஆனாலும் தற்காலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்து வருகின்றனர்.

2. ஓவியம் தீட்டுதல்

      சுண்ணாம்புப் பூசிய வீடுகளின் சுவர்களின் மேல் செம்மண்ணைக் கரைத்துக் கம்மஞ் சக்கையால் ஓவியம் தீட்டுகின்றனர்.சுவர்களின் மேல் புள்ளி வைத்து விளக்குகளை ஓவியமாக வரைந்து வைக்கும் வழக்கம்காணப்படுகின்றன.வீட்டின் உள்பகுதியில் உள்ள தரையிலும் செம்மண்ணால் கோலமிட்டு அழகுப் படுத்தி வருகின்றனர். தங்களின் நடுவீடு பகுதியில் உள்ள சுவரில் இறந்துபோன முன்னோர்களுக்குச் சதுரங்க வடிவில் கோலமிட்டு அதனுள் அவரை தளைகளின் சாயத்தைப் பூசிப் பச்சை நிறமாக மாற்றி;  அதன்மேல் சந்தன பொட்டிட்டு வழிபடுகின்றனர்.

3. மணி ஆட்டுதல்

      கார்த்திகை விளக்கு வழிபாட்டிற்காக வீடு பூசிய நாளிலிருந்து இரவு நேரங்களில் மணி ஆட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.இந்நிகழ்வு கார்த்திகை விளக்கீட்டுக்கு மறுநாள் வரை நிகழ்கின்றன.ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியின மக்கள் ஆநிரைகளோடு தொடர்பு உடையவர்கள்.பிற இனக்குழு மக்கள் இம்மலைப் பகுதியில் உள்ள ஆநிரைகளைக் கவரும் தருணத்தில் ஆநிரைபோர் ஏற்பட்டுள்ளது.அப்போது வீரமரணமடைந்த ஒருவருக்கு நடுகல் எடுத்துள்ளனர்.இந்நடுகல் நெல்லிவாசல் கிராமத்தில் இடம்பெற்றிருக்கின்றது.இன்றளவும் இம்மலைப் பகுதியில்  நாட்டு மாடுகள் மட்டுமேகாணப்படுகின்றன.அம்மாடு இனங்கள் பருகூர் இனத்தைச் சேர்ந்ததாகும்.இம்மாடுகள் மலைக்காடுகளில் மேய்ந்து வருகின்றன.மாடுகளை கண்காணிப்பதற்கும் அழகு படுத்துவதற்கும் மணிகளைக் கட்டுகின்றனர்.காளை மாடுகளுக்கு வெண்கலம் மணியும் பசு மாடுகளுக்குத் தகரத்தாலான மணியும் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் தகரத்தால் ஆன மணிகளைத் தங்களின் இடுப்புகளில் கட்டிக்கொண்டு தெருவாரியாக வீடு வீடாகச் சென்று மணி ஆட்டி வருகின்ற வழக்கம் இருக்கிறது. அக்கிராமத்தில் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்டு இருக்கும் குடும்பத்தினர் முன்னொரு காலத்தில் பூசணிக்காய் சோறு பொங்கி அதனை உருண்டை பிடித்துத் தந்துள்ளனர். அக்குடும்பத்தார்கள்  இன்றளவும் தெருவாரியாக வீடு வீடாகச் சென்று மணியாட்டி வரும் இளைஞர்களுக்குப் பூசணிக்காய் சோறுடன் பசுநெய், வெல்லம் கலந்து உபசரிக்கும் மரபு இருந்து வருகின்றது. அத்தகைய உணவை உண்ட இளைஞர்கள் உணவு கொடுத்த வீட்டில் சுமார் ஐந்து நிமிடங்கள் மணி ஆட்டுகின்றனர்.இவர்களின் முதன்மையானசெல்வமாகக் கருதுகின்ற மாடுகள் பல்கிப் பெருகும் என்னும் நம்பிக்கையில் மணி ஆட்டப்படுகின்றது.

4. கார்த்திகை விளக்குகள்

கார்த்திகை  விளக்குகள் இரண்டு வகைப்படும்.

 1) மாவு விளக்கு

 2) சோற்று விளக்கு

4.1 மாவிளக்கு

      கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் விளக்கு மாவு விளக்கு எனப்படும்.இம்மலைப் பகுதியில் வீடு பூசுவது முடிந்த பிறகு அரிசிக் குற்றி மாவாக்கி அவற்றில் விளக்கு ஏற்றும் வழக்கம் இருந்து வருகிறது.இம்மக்களுக்கு உரிய மலை நிலத்தில் தீபத்தன்று மாவிளக்குக் காட்டப்படுகிறது.அதனைத் தொடர்ந்துத் தங்களின் நிலத்தில் உள்ள மாடுகளை அடைக்கும் படிக்கும் விளக்குக் காட்டுகின்றனர். அப்போது

      மாவு விளக்கைப்  பார்த்துக்கோ நாளைக்குச்

      சோற்று விளக்கைப்பார்த்துக்கோ

      என்று தங்களின் மலை நிலத்தைப் பார்த்துக் கூறுகின்றனர்.அதனைத் தொடர்ந்து பட்டியில் இருக்கும் மாடுகளைப் பார்த்து

      தண்ணீரைக் கண்டால் குடிச்சுக்கோ

      புல்லைக்கண்டால் மேய்ந்துகோ

      கார்த்திகை விளக்கைப் பார்த்துக்கோ

      மாவு விளக்கைப் பார்த்துக்கோ

      நாளைக்குச் சோற்று விளக்கைப் பார்த்துக்கோ

      என்று இவ்வாறு கூறி மரத்தால் செய்த அகல் விளக்கில் மாவு விளக்கை ஏற்றி வைக்கும் மரபு காணப்படுகின்றன.

4.1.1. பட்டி முன்பு மர விளக்கு அமைத்தல்       

      மாடுகளை அடைப்பதற்கு மூங்கில் தப்பைகளைக் கொண்டு படல் உருவாக்கப்படுகிறது.படல்கள் பலவற்றைக் கொண்டு மரக் கொம்புகளின் துணையால் பட்டி அமைக்கப்படுகின்றன.அதனுள் மாடுகள் அடைக்கப்படுகின்றன. இம்மக்களின் முதன்மையான செல்வமாக மாடுகள் இருப்பதால் அம்மாடுகளுக்குக்  கார்த்திகைத்விளக்கீடன்றுவலிமையான மரத்தினால் கூம்பு வடிவில், மரத்தால் செய்த மரவிளக்கை நடுகின்றனர். மரவிளக்குக் கூம்பு வடிவில் உள்ளதால் காற்று மற்றும் மழையின் போது அனைவதில்லை.இத்தகைய விளக்குத் திருநாளை அண்ணாமலையார் காத்தில் என்று இம்மலைமக்கள் அழைக்கின்றனர்.(கார்த்திகை- காத்தில்)

4.2. சோற்று விளக்கு

      நாட்டு கார்த்திகை அன்று ஏற்றப்படும் விளக்கு சோற்று விளக்காகும்.தீபத்திருநாளின் மறுநாள் நாட்டு காத்தில் என்று மலைமக்கள் அழைக்கின்றனர். இறந்துபோன தம் முன்னோர்களுக்கு வீடுகளில் சந்தனத்தால் போட்டுவைத்து;  கோழி அறுக்கின்றனர். அதன் கறியை சமைத்துப் படைக்கின்றனர்.தொடர்ந்து சோறு பொங்கி அவற்றில் விளக்குச் செய்து வீடுகளில் ஏற்றுகின்றனர். மாவு விளக்கு  எவ்வாறு காண்பிக்கப்பட்டதோ  அவ்வாறுச் சோற்று

விளக்கும் காட்டப்படுகிறது.

 

      "சோற்று விளக்கைப் பார்த்துக்கோ

      கார்த்திகை விளக்கை பார்த்துக்கோ

      தண்ணீரைக் கண்டால் குடித்துக்கோ

      புல்லைக் கண்டால் மேய்ந்துக்கோ "

      என்று மாடுகளைப் பார்த்துச் சோற்று விளக்கினைக்  காண்பித்து மரவிளக்கில் வைக்கின்றனர்.

4.2.1. சோறு எடுத்துச் செல்லுதல்

நாட்டு கார்த்திகையன்று வெளியூரில் கட்டிக் கொடுக்கப்பட்ட தன்  மகளுக்கு,  முன்னோர்களுக்குப் படைத்த உணவுப்பொருள்களையும் மற்றும் கிழங்குடன் தேனையும் எடுத்துச்சென்று கொடுத்து வருகின்றனர்.

4.2.2. கதண்டு அறுத்தல்

      கதண்டு என்பது செங்குளவிகளின் பெரியதொரு கூடு ஆகும்.இது தேன்கூட்டின் அமைப்பை ஒத்ததாகும்.மலைமக்கள் இதனை 'கதண்டு' என்று அழைக்கின்றனர்.புதர் நிறைந்த பகுதியில் கதண்டுக்கூடு கட்டியிருக்கும். இக்கூண்டில் இருக்கும் குளவிகள் கடிக்காதவாறு ஆமணக்கு இலை கொண்டு பூச்சிகளின் நுழையும் பகுதியை  மறைத்து அவற்றிற்குப் பூசை செய்கின்றனர். பிறகு கூட்டுக் கூட்டை அறுத்து; பறை ஒலி,கொம்பு இசை ஆகிய இசை களுடன் ஓஓஓ.....குலீலீலீ என்ற ஓசை எழுப்பியவாறு மிக ஆரவாரத்துடன் ஊருக்குள் தூக்கி வருகின்றனர். ஊரில் குலதெய்வத்தின் அருகில் உள்ள மரக்கிளையில் கதண்டுக்vகூட்டைக் கட்டித் தொங்கவிடுகின்றனர் தொங்கவிடப்படுகிறது. அவ்வாறு கதண்டு ஊரில் தம் குலதெய்வத்திற்கு படைத்தால் மாடுகள் இன விருத்தியாகும் மழை வளம் பெருகும் மக்கள் இன்பமுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்குறித்த நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது .

5. காதல் பாடல்   

      வீடு பூசும் நாளையிலிருந்து கார்த்திகை விளக்கீடு மறுநாள் வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவு நேரங்களில் காதல் பாடல் பாடும் வழக்கம் காணப்படுகின்றது. இப்பாடல்கள் காதல்  உணர்வை தூண்டுவதுடன்  முறை மாமன் மகள் அல்லது மாமன் மகன், அத்தை மகள் அல்லது மகன்  முதலானவர்களிடம் காதலை வலுப்படுத்தும் இடமாக அமைகின்றது.  அந்த காலத்தில் கார்த்திகை  மாதத்தில் வீடு பூசும் நாளிலிருந்து ஊர் மந்தையில் ஆண் பெண் என இருபாலரும் கூடுவார்களாம். ஆண்களெல்லாம் பள்ளமான பகுதியில் நின்று கொண்டும் பெண்கள் எல்லாம் மேடான பகுதியில் நின்று கொண்டும் மாமன் மச்சான் முறை உள்ளவர்கள் இட்டுக்கட்டி காதல் பாடல் பாடும் வழக்கம் இருந்துள்ளது. அம்மரபு பிறரால் மாற்றப்பட்டு இருக்கின்றது.அதாவது எங்க ஊரில் சோழர் காலத்துச் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலைக் கட்டுவதற்காக திருவண்ணாமலையிலிருந்து வந்த ஸ்தபதி ஒருவர் தங்கியிருக்கிறார்..அப்போது கார்த்திகை மாதமாக இருந்ததனால் கீழூர் கிராமப் பெண்கள் ஸ்தபதி மேல் பாடல் ஒன்றினை இட்டுக்கட்டி பாடி உள்ளனர்.அப்பாடல் அவருக்கு அவமானமாக இருந்ததாக கருதி ஊர் மன்றத்தில் முறையிட்டு, இது மாதிரியான பாடல்களைப் படக்கூடாது. திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் மீதும் அவன் பிள்ளைகள் விநாயகர் முருகர் மற்றும் மனைவி உண்ணாமலை அம்மன் ஆகியோரின் பெயரில் பாடல் பாட வேண்டும் என்று கூறி அப்பாடல்களை கற்றும் தந்திருக்கிறார். அப்பாடல்களைத்தான் தற்போது இங்குள்ள மக்கள் பாடி வருகின்றனர்.சடங்கிற்காக சில பாடல்களை மட்டும் இறுதியாகப் பாடுகின்றனர்.இக்காலத்து பெண்கள் இப்பாடலை பாடுவதற்கு வருவதில்லை".கடந்த பத்து ஆண்டுகளாக கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் வழிபாடு வந்துள்ளதால் சிவன் மேல் பாடும் கார்த்திகை பாடல்கள் மட்டும் பாடப்படுகிறது. காதல் சார்ந்தப் பாடல்களைத்  தவிர்த்து வருகின்றனர்.

முடிவுரை

      ஜவ்வாது மலை பகுதி பெருங்கற்காலத்தில் இருந்து தற்போது வரை பல வரலாற்றுக் களமாக இருந்து வருகிறது.இங்கு வாழும் பழங்குடி மக்களுக்கே உரித்தான பண்பாட்டு கூறுகள் பல காணப்படுகின்றன. கார்த்திகை விளக்கீடு வழிபாட்டு கூறுகள் உலகமயமாதல் மற்றும் நவீனமயமாதலால் தொல் மரபுகள் சில அழிவுற்ற போதிலும் அப்பழங்குடி மக்களுக்கே உரித்தான மண்சார்ந்த,மரபுசார்ந்தச் சடங்குகளுடன் இவ்விழா கொண்டாடப்படுதை அறிய முடிகிறன.

அடிக்குறிப்பு

1. அகநானூறு மூலமும் உரையும் ந.மு .வேங்கடசாமி நாட்டார் ,சாரதா பதிப்பகம், சென்னை-40.

2. பத்துப்பாட்டு, முனைவர் ச.வே.சுப்பிரமணியன் உரை, கோவிலூர் மடாலயம் பதிப்பகம், காரைக்குடி,  2003.

3. சூடாமணி நிகண்டு, மூலமும் உரையும் ஆறுமுக நாவலர்,திருமகள் விலாச அச்சுக்கூடம், 1938.

தகவலாளர்கள்

1. மொட்டைய வேந்தன், வயது- 70, கீழூர் புதூர் நாடு.

2 ரேணுகோபால், வயது- 60 ,கீழூர் ,புதூர் நாடு.

3. மோட்டா காளி, வயது -68, மேலூர், புதூர் நாடு.