ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தொல் தமிழர் மந்திர வழிபாட்டுச் சடங்குகள்

ஜா.பீற்றர் ராஜ், பதிவு எண்: 11904, முனைவர் பட்ட ஆய்வாளர், காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை 11 May 2022 Read Full PDF

கட்டுரையாளர்: ஜா.பீற்றர் ராஜ், பதிவு எண்: 11904, முனைவர் பட்ட ஆய்வாளர், காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை

நெறியாளர்: முனைவர்.தா.திருநாவுக்கரசு, காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை, தென்காசி மாவட்டம் - 627859

Abstract

     Abstract In prehistoric times ancient Tamils followed magical rites. From the very old times to the  present day, it is customary of Tamils to pay homage to the deity of their clan. It is also noteworthy that the ancient Tamils performed various rituals for the deities worshiped by their ancestors and practiced magical rites  for the development of their profession and protection from natural calamities. This study is based on magical rites.

Key words: Mantra worship, ancient Tamil, mantra, rituals

ஆய்வு சுருக்கம்

      வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்தில் தொல் தமிழர்கள் மந்திர வழிபாட்டுச் சடங்கு முறைகளை பின்பற்றினர். பழங்காலந் தொட்டு இன்று வரைக்கும் தங்கள் குல தெய்வத்திற்கு வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்த்தி சிறப்பித்து வருவது நடைமுறையாகும். தன்னுடைய முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு பல்வேறு சடங்குகளைச் செய்து தங்கள் தொழில் வளர்ச்சிக்காகவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் மந்திர வழிபாட்டுச் சடங்குகளை தொல் தமிழர்கள் பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மந்திர வழிபாட்டுச் சடங்குகளை ஆராயும் விதத்தில் இவ்வாய்வு அமைந்துள்ளது.

திறவுச் சொற்கள்: மந்திர வழிபாடு, தொல் தமிழர், மந்திரம், சடங்குகள்

முன்னுரை

      மனிதன் தோன்றிய காலத்திலேயே வழிபாடும் தோன்றியது எனலாம். வழிபாடு மிகவும் தொன்மையானது. தொல் பழங்காலம் முதல் இன்று வரை தொடர்ந்து வரும் நடைமுறை வழக்கமாகும். தன்னுடைய முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களை தங்கள் குலதெய்வமாக இன்றளவும் வழிபடுகின்றனர். ஒவ்வொரு வருடமும் திருவிழாக்கள் நடத்தி வழிபாடு செய்கின்றனர். நன்மைகள் வேண்டியும், தங்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதற்காகவும் தங்கள் குலதெய்வங்களுக்கு வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுகின்றது. தங்கள் தெய்வத்திற்கென்று குலக்குறிகளையும் பின்பற்றி தொல் தமிழர்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட்டு சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிபாட்டு சடங்கு முறை

      மனித சமூகம் தொன்மை நிலையில் இருந்து இன்றைய நாகரீக நிலை வரை படிப்படியாக வளர்ச்சிப் பெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க சமூக மாறுதலாகும். இவ்வளர்ச்சிப் பாதையில் அக்காலக் கட்டங்களில் ஏற்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து மீளுவதற்கு மக்கள் மேற்கொண்ட முறைகள் மற்றும் ஆன்மீக முயற்சிகளாக இறை வழிபாட்டு முறைகளும் இவற்றை உறுதிப்படுத்துகின்ற செயல்பாட்டுச் சடங்குகளும் மக்களிடம் தோன்றி வளர்ந்தன என்பது கால மாறுதல்களின் விளைவுகளாகும்.

      மண்ணில் தோன்றி மறைகின்ற அதீத ஆக்கங்களான மழை, காற்று, பூமி அதிர்வு, இயற்கையின் கொடூர மாறுதல்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையின் மீறல்கள், மலைக்க வைக்கின்ற அற்புதங்கள், அதிசய நிகழ்வுகள், கொடூரமான நோய்கள் மற்றும் மனித அழிவுகள், மனித மனங்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் போன்றவை மனித இனத்தை ஆன்மீக நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. இயற்கையின் தாக்கங்களில் இருந்து மனித இனத்தை காத்துக் கொள்ளவும் இவற்றை கட்டுப்படுத்துகின்ற இறையருளை நோக்கி படைக்கப்பட்ட புனிதம் நிறைந்த ஆக்கம் கலந்த நெறிமுறைகளே வழிபாட்டுச் சடங்குகளாகும். இவ்வழிபாட்டுச் சடங்குகள் இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் மாறுபட்டும் வேறுபட்டும் இறையுருவங்களின் தோற்றங்கள் மற்றும் சார்புகளுக்கேற்ப அமைகின்றன என்பது கள ஆய்வுகளில் கண்ட உண்மையாகும். உண்மைகளுக்கு அரண் செய்யும் வகையில் உருவ அமைப்பிலும், பெயர் நிலையிலும் ஒத்த தன்மையுள்ள பல தெங்வங்கள் தமிழகத்தில் வாழ்கின்ற பல்வேறு இனக்குழுமங்களாக வழிபடுகின்றபோது வழிபாட்டு படையல்களும் நிகழ்த்தப்படுகின்ற சடங்கு முறைகளும் மாறுபடுகின்றன. தொன்மைக் காலத்து தமிழக மக்கள் மரபையும் தெய்வ வழிபாட்டு பொதுநிலை மரபையும் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இயற்கை வழிபாடு

      தொன்மைக் கால மனித வாழ்க்கையில் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு இரண்டறக் கலந்து நின்றது. அவன் உணவுப் பிரச்சனையை இயற்கை அளித்ததன் மூலம் தீர்த்துக் கொண்;டான். இயற்கையே மனித வாழ்விற்கான மூலம் எனக் கருதும் அளவிற்கு அதன் பலன் பெருகி நின்றது. இயற்கை பல நிலைகளில் சாதகமாகவும், சில நிலைகளில் இடையூறாகவும் (புயல், வெள்ளம் போன்றவை) இருந்தது. இயற்கையின் சீற்றத்தை தவிர்க்கவும் அதன் மூலம் பயன்களைப் பெறவும் செய்ய வேண்டிய செயல்களிலே அவன் சிந்தனை இருந்தது. காட்டிலே ஏற்படும் காட்டுத் தீ எப்படி ஏற்பட்டது என்ற விளக்கத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெருமழையாகப் பெய்து நீரினால் பெருஞ்சேதம் ஏற்படுவதற்கான காரணம் புரியவில்லை. பூமியில் அதிர்ச்சிக்கு காரணம் விளங்கவில்லை. இவ்வாறு பல இன்னல்களுக்கு காரண காரிய விளக்கம் தெரியவில்லை. இந்நிலையில் மனித இயக்கத்திற்கு உயிர் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதைப் போன்றே இயற்கைப் பொருள்கள் இயக்கத்திற்கும் உயிர் காரணமாகின்றது என்று நம்பினான். மனிதனைப் போன்றே இயற்கைகளையும் திருப்திப்படுத்த முடியும் என்று நம்பினான். சடங்குகளையும் மேற்கொண்டான். காலப்போக்கில் அதனைப் புனித ஆற்றலாகவே கருதி வழிபடத் தொடங்கினான்.

      இயற்கை வழிபாடு என்பது மனித இனத்தின் தொல் சமயத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். இயற்கை வழிபாடு மனித இனத்தவரிடையே சமயம் பற்றிய நம்பிக்கை இயற்கைப் பொருள்களின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு அப்பொருள்களை வழிபட்டதன் மூலமே ஏற்பட்டிருக்கும். சூரியன் உதயமாகிறது, சூரியன் மறைகிறது, இடியும், மின்னலும் மழையைக் கொண்டு வருகின்றன. மரங்கள் பூக்களையும், கனிகளையும் உண்டாக்குகின்றன. இயற்கை நிகழ்வுகள் அதனுள் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளதன் மூலமே அவ்வாறு நிகழ்கிறது என்று நம்பிக்கை கொண்டு தொன்மை மக்கள் இயற்கை பொருள்களை வழிபட்டனர்.

      ‘மக்கள் தன்னை விட அதிக சக்தி வாய்ந்த இயற்கையை வழிபடுவதும் உண்டு. காற்று, ஆறு, நட்சத்திரம், செடி, கொடிகள், மிருகங்கள், மலைகள் போன்றவற்றை தெய்வங்களாக கருதி வணங்கி வருவதாகும். அச்சமே வழிபாட்டிற்கு காரணம் என்ற கொள்கையும், நன்றியறிதலை தெரிவிக்கவே வழிபாடு பிறந்தது என்ற கொள்கையும் இயற்கை வழிபாட்டிற்கு பொருந்தி வருகின்றன” (திருநெல்வேலி நாட்டுப்புறப்பாடல்கள். முனைவர்.சு.சண்முகசுந்தரம், ப.231). இயற்கையை மக்கள் வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

மந்திர வழிபாடு

      தொன்மைச் சமயத்தில் மந்திரம் ஒரு பிரிக்க முடியாத கூறாகும். இது அறிவியல் தோன்றுவதற்கு முந்தைய கலையாகும். இதைக் கண்டறிந்து செயற்படுத்திய பெருமை தொன்மை மக்களையே சாரும். மக்கள் இயற்கையின் முழு பயனைப் பெற சூத்திரங்கள் அல்லது வாய்பாடுகளாகச் சுருக்கி உச்சரிப்பதன் மூலம் அவ்வாற்றலைச் செயல்படுத்தும் நிலையை மேற்கொண்டனர். இன்று தூய மந்திரம் தனிமனிதனின் நலனுக்காகவும் சமுதாயத்திலுள்ள அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகள் கிடைக்கவும், விளைச்சல் பெருகவும், போரில் வெற்றி பெறவும், நோய்களைத் தீர்க்கவும் தூய மந்திரம் பயன் உள்ளதாக காணப்படுகிறது.

குலக்குறி வழிபாடு

      குலக்குறி அல்லது குலம், இனம், சாதி மற்றும் மக்கள் குழுமங்களின் குறியீட்டு அடையாளமாகும். பறவைகள் மற்றும் விலங்குகள் உருவங்களுக்கும், மனித குழுமங்களுக்கும் இடையில் உள்ள அடையாளக் குறிகளாக குலக்குறிகள், தெய்வ வழிபாடுகளின் வளர்ச்சிக்கு மூலகாரணங்களாக விளங்குகின்றன. ‘ஒரு பழங்குடி மக்கள் அல்லது அக்குழுவின் பகுதியினர் ஒரு மிருகம் அல்லது மரம் போன்ற பொருட்களில் இருந்து தங்கள் குலம் தழைத்து வளர்ந்ததாக நம்புவதும், அப்பொருட்களின் பெயர்களை மேற்கொள்வதும் அப்பொருளை சிதைக்கவோ, உண்ணவோ செய்யாமலும் அதை மதித்துப் படையல்கள் இட்டு வழிபடுவதைக் குலக்குறி வழிபாடு என்பர்” (சமூகவியல், இரா.கல்பகம், ப.128). இவ்வழக்கம் பழங்குடி மக்களிடம் உள்ளது என்றும் நாட்டுப்புற மக்களிடம் இல்லை எனவும் கூறுவர்.

முன்னோர் வழிபாடு

      இறந்தோரின் ஆற்றல் வாழ்;வோரின் நலனில் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் கருத்தாக்கத்தால் ஏற்பட்டதே முன்னோர் வழிபாடாகும். இறந்த மூதாதையரின் ஆற்றலும் அனுபவமும் வாழ்வோரைச் செம்மைப்படும் என்ற நம்பிக்கையில் மூதாதையர்களை வழிபடுகின்றனர். இறந்தோரின் ஆசி என்றென்றும் வாழ்வோருக்கு கிடைக்க வேண்டும் என முன்னோர்களை வழிபடுகின்றனர். இறந்தோரின் விருப்பங்களையும் அவருக்கு பிடித்தமானவற்றையும் நிறைவேற்றி அவரை வழிபடுதல் மூலம் தீய ஆற்றல்களிலிருந்து முன்னோர்கள் தப்ப வைப்பார்கள் என்றும், அவர்கள் சினம் கொள்ளாமல் அருள் குணத்துடன் ஆதரிப்பர் என்றும் நம்பி முன்னோருக்கு வழிபாடு செய்கின்றனர்.

      இறந்தவர்களுடைய ஆன்மா ஒரு சில இடங்களிலோ அல்லது பொருட்களிலோ குடியிருப்பதாகவும், அவ்வான்மாக்களுக்கு உயிர் இருப்பதாகவும் அவை மனிதர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியவை என்று நம்பி வழிபடுவதனை முன்னோர் வழிபாடு எனலாம். மாடன் கறுப்பன் போன்று சிறு தெய்வ வழிபாடுகளுக்கு முன்னோர் வழிபாடே காரணம் என்றும் இதன் வளர்ச்சி என்றும் நம்புகின்றனர். நடுகல் வணக்கம் உருவ வழிபாடாக விளங்கி வருவதனை நாட்டுப்புறங்களில் காண முடிகிறது. கன்னிப் பெண்ணாக ஒருத்தி இறந்துவிட்டால் அவள் ஆன்மா சாந்தியடையாது தவிக்கும் என்றும், அவ்வான்மாவுக்குப் படையலிட்டு வழிபட்டால் அமைதியுறும் கன்னிக்கு வழிபாடு நிகழ்த்துவதுண்டு. இதனை ‘கன்னிக்கு வைத்தல்’ என்று இம்மாவட்டத்தார் குறிப்படுவது உண்டு. ‘கன்னி தெய்வத்தை வழிபட்டு வந்தால் பிணியும் பீடையும் விலகும் என்றும், கன்னியை முறையாக வழிபட்டு கூறாவிட்டால் குறைகள் நேரிடலாம் என்றும் நம்புகின்றனர். கன்னியை வழிபடுவதன் தேவையை கோடங்கி பாடல்கள் வலியுறுத்தும்” (திருநெல்வேலி நாட்டுப்புறப்பாடல்கள். முனைவர்.சு.சண்முகசுந்தரம், ப.233).

      இறந்தோரின் ஆற்றல் வாழ்வோரின் நலனில் பெரும் பங்கு வகிப்பது மக்களின் பொதுவான நம்பிக்கை ஆகும். இந்நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிய அச்சம், மரியாதை காரணமாக இருப்போரின் மனதில் உதித்ததே முன்னோர் வழிபாடாகும். இவ்வுலக வாழ்வு இம்மை - மறுமை கொண்டது. பல பிறப்புகளை கொண்டது.  ஒரு பிறவியில் செய்கின்ற பாவங்கள் மறு பிறவியில் அமையும் வாழ்விற்கு காரணமாகின்றது. ஒரு பிறவியில் ஒருவர் பெறும் ஆற்றல் அவர் இறந்த பின்னும் அவருடைய இனத்தவருடன் தொடர்பு பெறுகின்றது என்பன போன்ற நம்பிக்கைகள் முன்னோர் வழிபாட்டிற்கு அடித்தளமாக அமைகின்றன.

ஆவி வழிபாடு

      சமயம் சார்ந்த நம்பிக்கைகள் பண்பாட்டிற்குப் பண்பாடு வேறுபடுகின்றன. காலத்திற்கு காலம் மாற்றம் பெற்று வந்துள்ளன. இம்மாற்றம் முன் வரலாற்றுக் கால மனிதனின் சமய நம்பிக்கையிலிருந்து தொன்மை மக்களிடையே ஆவி நம்பிக்கையாக மாறிப் பின்னர் பேய், பிசாசு, தேவதை நம்பிக்கைகள் என வளர்ந்து இறுதியில் கடவுள் நம்பிக்கையாக மலர்ச்சியடைந்துள்ளது. தொன்மைச் சமயம் தோன்றிய முறையை விளக்கிக் கூறுவது முதன் முதலில் தோன்றிய ஆவி வழிபாடு ஆகும். தொன்மை மக்கள் அவர்களைச் சுற்றிலும் கண்ணுக்கு புலனாகாத ஆவிகள் உள்ளன என்றும் எண்ணற்ற ஆவிகள் அவர்களை செயற்படுத்துகின்றன என உறுதியாக நம்பினர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அவர்களால் இயற்கையின் ஆற்றலை சரிவர புரிந்து கொள்ளாமல் பழங்கால மக்கள் ஆவியை வழிபட்டனர்.

      அடைமழை பெய்யும் போதெல்லாம் ஏற்பட்ட இடி, மின்னல், பெருவெள்ளம் இவற்றிற்கு காரணம் இயற்கையின் சக்தியே என்று நம்பாமல் ஆவியே காரணம் என்று நம்பினர். பழங்கால மக்கள் கனவு நனவு, உறக்கத்தில் இறந்த மூதாதையர்களையும் பல்வேறு செயல்களையும் கண்டனர். கனவில் ஏற்பட்ட அந்நிகழ்ச்சிகள் அவர்களுள் ஒரு பிரம்மையை ஏற்படுத்தி மாயையான அனுபவத்தை உண்டாக்கின. தொன்மை மக்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் பின் ஒரு ஆவி உள்ளது என்றும் ஆவியே மனிதனின் எல்லா செயல்களையும் இயக்க வல்லன என்றும் நம்பத் தலைப்பட்டனர்.

போலிப் பொருள் வழிபாடு

      போலிப் பொருள் வழிபாடுகளில் வழிபாட்டிற்குரிய பொருள்கள் உயிருள்ளவையாகவோ, உயிரற்றவையாகவோ, இயற்கையாகவோ உள்ளன. செதுக்கப்பட்ட சிற்பங்கள் கையில் வரையப்பட்ட சித்திரங்கள் பறவை இனங்களின் இறகுகள் போன்ற பல வகைப்பட்ட பொருள்களுடன் மண்டையோடுகள், கிளிஞ்சல்கள், எலும்புகள் பெரும்பாலான பண்பாட்டில் வழிபாட்டுப் பொருள்களாக உள்ளன. இப்பொருட்கள் மந்திர ஆற்றலை கொண்டுள்ளன என்றும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்ய வல்லன என்றும் நற்பலன்களை ஏற்படுத்த வல்லன என்றும் மக்கள் நம்புகின்றனர். அறிவுக்கு ஒவ்வாத வகையில் இவ்வகைப் பொருட்களை வழிபடுகின்றனர். செம்பு அல்லது இரும்பினால் செய்யப்பட்ட தாலந்துகளைக் கட்டிக் கொள்வதும், மந்திரித்துக் கட்டிக் கொள்ளும் பிற பொருட்களும் நரிப்பல், முடி, யானை தந்தம் போன்ற போலிப் பொருட்களை வழிபடுவதும், தாலந்துகளில் அடைத்துக் கட்டிக் கொள்வதும் தெய்வ வழிபாடுகளின் தொடர்ச்சி ஆகும். இப்பொருட்கள் மந்திர ஆற்றல் கொண்டுள்ளதால் இவற்றை அணிவோருக்கு தீமைகள் அணுகாமல் நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

மழை வழிபாடு

      மழையை வருணக் கடவுளாக கருதி மக்கள் வழிபட்டனர். கடற்கரை மணலில் சுறாவின் கோடு நட்டு தாழை மலர் வைத்து, மதுவருந்தி வருணனை வழிபட்டனர். நாட்டில் கொடுமைகள் மலிந்துவிட்டால் வருணனுக்கு சினம் வந்து மழை பொழிவதை நிறுத்திக் கொள்வான் என்றும் பாவங்களை அழிப்பதாகக் கொடும்பாவி கட்டி எரித்தால் மனமிறங்கி விடுவான் என்று எண்ணி கொடும்பாவியை எரித்து வழிபடுகின்றனர். மேலும் ஊரில் உள்ள பெண்கள் இணைந்து வீடுதோறும் மழைக் கஞ்சியை உப்பில்லாமல் எடுத்து வருணனை வழிபடுவதாக மழைக் கஞ்சி பாடல்கள் கூறுகின்றன. நாட்டில் அரசன் நீதி தவறாதவனாகச் செங்கோல் செலுத்தி வந்தால் அந்த நாட்டில் பருவ மழை தவறாது பெய்யும் என்று மக்கள் நம்பினர் என்பதை

      ‘மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

      இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்

      காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்” (புறநானூறு.பா.85) 

என்ற பாடலின் மூலம் மழை வழிபாடு செய்ததின் மூலமாக மழை வளம் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது.

புனித பொருள் வழிபாடு

      புனிதப் பொருள் வழிபாடு என்பது அந்தந்த சமூக மக்களின் வாழ்வில் நிலைகளைப் பொருத்ததாகும். ‘கல், கிளிஞ்சல், கழுத்தணி, செதுக்கப்பட்ட மரத்துண்டு போன்ற பொருட்கள் அதிக தெய்வ சக்தி அற்றவையாகவும் அவற்றை வைத்திருப்பவர்களுக்கு நன்மை நிகழும் என்று நம்பி வழிபடுவதனைப் புனிதப் பொருள் வழிபாடு எனலாம். இதனை மானா (ஆயயெ) என்றும் மானாயிசம் (ஆயழெளைஅ) என்றும் மானிடவியலார் குறிப்பர். மேலும் மக்கள் மேற்கண்ட தாயத்துக்களை அணிந்தால் நம்மை பிடித்த தீமைகள் விலகி நன்மைகள் வரும் என்று நம்புகின்றனர். சிலுவை மற்றும் கடவுள் உருவம் பொறித்த பிற அணிகள், காப்புக் கயிறு ஆகிய அணிகலன்களை அணிவதாலும் நன்மை பயக்கும் என்று மக்கள் நம்பினர். ‘கழுத்து மற்றும் கை உடலின் பிற பகுதியில் அணியும் பொருளாகவோ மற்றும் கற்பூரத் தட்டாகவோ, தீர்த்தம் தரும் பாத்திரமாகவோ, அரசு, வேம்பு இணைந்த மரங்களாகவோ, இறைவனுக்கென்று விடப்பட்ட விலங்குகளாகவோ (பசு, காளை, ஆடு) இருக்கலாம்” (இலக்கிய மானிடவியல், பக்தவத்சலபாரதி, ப.540). இப்புனிதப் பொருட்கள் காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன், இனத்திற்கு இனம் மாறுபட்டும் வேறுபட்டும் அமையக் கூடியதாகும். இவை நிலையானதல்ல. ஒரு தெய்வத்திற்குரிய புனிதப் பொருள் மற்றொரு தெய்வத்திற்கு ஒவ்வாத பொருளாகக்கூட கருதப்படுவதும் இயல்பாகும். அவ்வகையில் மக்கள் துளசி செடியை வழிபடுவதுண்டு. துளசிச் செடியை வணங்குவதுடன் காதுகளிலும் செருகிக் கொள்ளும் வழக்கமும் உண்டு. துளசியானது திருமாலுக்குப் பிடித்தமானது என்றும் பார்வதியுடனும் கொற்றவையுடனும் துளசியை இணைத்துக் கூறுவதும் உண்டு. வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் துளசி மாடங்களை வழிபடுவதும் உண்டு. திருமால் கோவில்களில் துளசியையே பக்தர்களுக்கும் கொடுக்கின்றனர். இவ்வாறு ‘புனிதம்’ என்பது மக்களின் நம்பிக்கைகளைக் கொண்டும் மரபு வழிபட்ட அனுபவத்தைக் கொண்டும் இயங்குகிறது எனலாம்.

ஆய்வு முடிவுரை

      தொல் பழங்காலம் முதல் இன்று வரை மக்களிடையே வழிபாட்டுச் சடங்கு முறைகள் தொடர்ந்து வரும் முக்கியமான நிகழ்வாகும். முன்னோர்கள் வழிபட்ட குல தெய்வங்களை தங்கள் தெய்வங்களாக வழிபட்டு, தெய்வத்திற்கு படையலிட்டு குலக்குறிகளைப் பின்பற்றி இன்றளவும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வருடம்தோறும் குல தெய்வத்திற்கு திருவிழாக்கள் நடத்தி தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரழிவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. தாங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவதற்காகவும், தெய்வத்தை வழிபட்டு பல்வேறு வழிபாட்டுச் சடங்குகளை நிகழ்த்தி தொல் தமிழர்கள் வழிபட்ட தன்மையை இலக்கியங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

துணைநூற்பட்டியல்

1. தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்    -  க.காந்தி

                                      உலக தமிழாராய்ச்சி நிறுவனம்

                                            தரமணி

                                            சென்னை - 600013

2 . மந்திரமும் சடங்குகளும்                    -  சிவசுப்பிரமணியன்

                                            காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்

                                            கே.பி.சாலை

                                                  நாகர்கோவில் - 629001

3. சங்ககால வாழ்வியல்                       -  ந.சுப்பிரமணியன

                                            நியு செஞ்சுரி புக் ஹவுஸ்

                                                  சென்னை

4. மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள்    -  தே.ஞான சேகரன்

                                                  பார்த்திபன் பதிப்பகம்

                                                   திருச்சி

5. பண்பாட்டு மானிடவியல்                   -  பக்தவத்சல பாரதி

                                             மெய்யப்பன் பதிப்பகம்

                                                   53, புதுத்தெரு,

                                                   சிதம்பரம் - 608001

6. புறநானூறு (மூலமும் உரையும்)  -  கு.வெ.பாலசுப்பிரமணியன்

                                             நியு செஞ்சுரி புக் ஹவுஸ்

                                                   சென்னை - 600098