ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

த. சரவணத்தமிழனின் தமிழ்நூலில் இடம்பெற்றுள்ள புதிய இலக்கணக் கூறுகள்

அ. அன்னபூர்ணிமா, இல. சுந்தரம் 15 Aug 2022 Read Full PDF

New grammatical elements in Saravanathamil's ‘Tamiḻnūl’

A. Annapoornimaa, Dr. L. Sundaramb

aResearch Scholar, Dept. of Tamil, SRM Institute of Science and Technology, Kattankulathur, Tamil Nadu, India.

bAssociate Professor, Dept. of English & Foreign Languages, SRM Institute of Science and Technology, Kattankulathur, Tamil Nadu, India.

Abstract

Many works on language and literature were written after Tolkappiyam. Works that correspond to the contemporary period are being written in prose and poetry forms of which “Tamilnool” published in 1972 stands more relatable. Besides, it entails new grammatical elements. “Tamilnool” describes Tamil grammar in a contemporary way by adding features such as Tamil script, Tense, Lengthening, Transcriptions of Grantha letters, punctuations with contemporary examples. This article attempts an introductory level of analysis on grammatical elements such as ezhuthu and sollilakkanam presented in “Tamilnool”.

Keywords

  • Tolkāppiyam, Naṉṉūl, Tamiḻnūl, Toṭar, Niṟuttak Kuṟikaḷ, Niṟuttaṟkuṟiyīṭu, Variyeḻuttu, Aḷapeṭai, Caravaṇattamiḻaṉ, Putiya Ilakkaṇak Kūṟukaḷ.

Reference

  1. Cuppiramaṇiyaṉ Ca.Vē., (2007) Tamiḻ ilakkaṇa nūlkaḷ, citamparam, meyyappaṉ patippakam.
  2. Caravaṇattamiḻaṉ Ta., (1996) Tamiḻnūl (pāvum uraiyum), tiruvārūr, tamiḻaṉ patippakam,
  3. Vēlmayil Ta., (2010) Naṉṉūlum piṉṉaiya ilakkaṇa nūlkaḷum, kāvyā patippakam.
  4. Tiruñāṉacampantam, (2006) Ca., Naṉṉūl kāṇṭikai urai. Tiruvaiyāṟu, katir patippakam.
  5. Iḷavaracu Cōma., (1998). Naṉṉūl, ceṉṉai, maṇivācakar patippakam.
  6. Kumutiṉi Irā., (2021) Makālaṭcumi makaḷir kalai maṟṟum aṟiviyal kallūri, carvatēca tamiḻ āyvitaḻ E- ISSN 2582 - 1113.
  7. Iḷaṅkumaraṉār Irā., (2018) Ilakkaṇa varalāṟu, maṇivācakar patippakam.
  8. Ayyakannu, A., & Lakshmanan, S. (2022). The Genesis and Evolution of Lengthening (Aḷapeṭai) In Traditional Tamil Grammar Books. International Research Journal of Tamil Literary Studies, 1(4), 1-10. https://doi.org/10.34256/vp2211
  9. T, Prabakaran, & L, Sundaram (2022). Guidance to Transcription in Tamil Language with Reference to Tamil Grammar Texts. International Research Journal of Tamil, 4(S-8), 28-47 https://doi.org/10.34256/irjt22s85
  10. Lakshmanan, S. (2021). Punctuation n Tamil Grammar Books - Historical Perspective. International Research Journal of Tamil Literary Studies, 1(2), 14-27. Retrieved from https://www.vahaipublication.com/index.php/irjtls/article/view/8

 

த. சரவணத்தமிழனின் தமிழ்நூலில் இடம்பெற்றுள்ள புதிய இலக்கணக் கூறுகள்

அ. அன்னபூர்ணிமா அ*, இல. சுந்தரம் ஆ

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

இணைப்பேராசிரியர், ஆங்கிலம் (ம) அயல்மொழிகள் துறை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

ஆய்வுச்சுருக்கம்

காலந்தோறும் அவ்வக்கால மாற்றங்களை உள்ளடக்கிப் புதிய புதிய இலக்கண நூல்கள் மரபிலக்கணம் சார்ந்து செய்யுள், உரைநடை வடிவங்களிலும் மொழியியல் சார்ந்தும் தோன்றிவருகின்றன. இவ்வகையில் எழுத்து, சொல்லிலக்கணங்களைக் கூறும் நூலாக 1972 ஆம் ஆண்டு த. சரவணத்தமிழன் என்பவரால் மரபிலக்கணம் சார்ந்து செய்யுள் வடிவில் ‘தமிழ்நூல்’ என்ற இலக்கண நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் இதற்கு முந்தைய இலக்கண நூல்களில் இடம்பெறாத பல புதிய இலக்கணக் கூறுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை அடையாளம் கண்டு வகைதொகைபடுத்தி தொல்காப்பியம், நன்னூல் வரிசையில் சார்ந்தும் வேறுபட்டும் புதுமைகளைப் புகுத்தியும் எவ்விதம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைப்பதாக இக் கட்டுரை அமைகிறது.

முதன்மைச்சொற்கள்: தொல்காப்பியம், நன்னூல், தமிழ்நூல், தொடர், நிறுத்தக் குறிகள், நிறுத்தற்குறியீடு, வரியெழுத்து, அளபெடை, சரவணத்தமிழன், புதிய இலக்கணக் கூறுகள்.

முன்னுரை

தமிழில் பல்வேறு இலக்கண நூல்கள் காலந்தோறும் உருவாகிவருகின்றன. அவை அவ்வக்காலத் தேவைக்கு ஏற்பச் சில மாறுதல்களுடன் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் 1972 வெளிவந்த த. சரவணத்தமிழனின் தமிழ் நூல் குறிப்பிடத்தகுந்த நூலாகவும் பல புதுமைகளை இலக்கணத்திற்குள் சேர்த்த நூலாகவும் திகழ்கிறது. இந்நூலின் உள்ளடக்கம், சிறப்பியல்புகள் குறித்தும் புதிய இலக்கணக் கூறுகள் எவ்விதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, தொல்காப்பியம் நன்னூலைச் சார்ந்தும் வேறுபட்டும் எவ்விதம் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கணக் கூறுகளைப் பின்வந்த இலக்கண நூல்கள் எவ்விதம் எடுத்துச்சென்றுள்ளன, அவற்றின் தற்காலப் பயன்பாடு போன்றவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தமிழ்நூலின் நோக்கம்

பொதுவாகத் தமிழ் இலக்கண நூல்கள் எழுத்து, சொல்லிலக்கணங்களைக் கூறுவதுபோல் இல்லாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு புதுமை நோக்கில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. மற்றைய இலக்கண நூல்களின் தொடர்பாலும், பாடத்திட்டங்குறித்த வகுப்பிலக்கண குறைபாட்டாலும் புதிய இலக்கணம் எழுத வேண்டும் என்ற நிலையில் எழுதப்பட்டது என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எழுத்துகளில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள், செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் சொற்கொலை போன்றவற்றைக் களைவதற்காக எழுதப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இலக்கண நூல் தொடர்பிடையீட்டாலும், பாடத்திட்டங்குறித்த வகுப்பிலக்கண நூல்களின் பிழைபாட்டாலும், எழுத்து சீர்திருத்தம்(எழுத்தியல்), பொருள்தாரா உறுப்புகள் கூறு (உறுப்பியல்), தொகையின் சேனாவரையத் தகைமை (சொல்லியல்), செய்தித்தாள்களின் மொழிக்கொலை (புணரியல்), புதுப்பொதுச்செய்திகள் (பொதுவியல்), தவிரத்தக்கன தழுவத் தக்கன (ஒழிபியல்), தொடர்ப்பாடு (தொடர்பியல்) ஆகியவற்றின் புதுக்கம் நோக்கி எழுந்தது (தமிழ்நூல், ககூ[19].

நூலாசிரியரும், நூற்சிறப்பும்

தஞ்சாவூர் கரந்தைக்கு அருகிலுள்ள காந்தாவனத்தைச் சேர்ந்த இவர் கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று ‘புலவர்’ பட்டம் பெற்றவர். திருவாரூரில் திரு.வி.க.-விற்கு சிலை அமைத்ததோடு. ‘இயற்றமிழ்ப் பயிற்றகம்’ என்னும் மாலைநேரப் புலவர் கல்லூரியை நடத்திவந்துள்ளார். சில ஆண்டுகள் அம்மையப்பன் அரசினர் உயர்நிலை பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். முதுபெரும் பேராசிரியர் திரு. அடிகளாசிரியரின் மாணவரான இவர் தமிழ் மட்டுமின்றி வடமொழியையும் நன்கு கற்றவர்.
Doctor of Philosophy’ ‘டாக்டர்’ (PhD) என்ற சொல்லுக்குப் பாவாணர் முன்மொழிந்த பண்டாரகர் என்ற சொல் பெருவழக்கின்றிப்போன நிலையில். சரவணத்தமிழன் உருவாக்கிய ‘முனைவர் என்னும் சொல் நிலைபெற்று தற்காலப் பயன்பாட்டில் இருந்துவருகிறது. இலங்கையில் ‘கலாநிதி என்ற சொல்லை இதற்கு மாற்றாகப் பயன்படுத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

      தமிழிலக்கணத்தில் தொல்காப்பியத்திற்கும் அதற்குப் பின்வந்த இலக்கண நூலிற்கும் இலக்கண உரையாசிரியர்களே உரைவிளக்கம் தந்துள்ளனர். அவ்வுரை விளக்கங்களே காலங்காலமாகக் கற்கப்பட்டுவந்தன. ஆனால், இதற்கு மாற்றாக இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து இவ்விரு நூலிற்கும் நூலாசிரியர்களான வைத்தியநாத தேசிகரும், சுவாமிநாத தேசிகரும் அவர்கள் இயற்றிய செய்யுள் வடிவிலான இலக்கண நூலிற்கு உரையையும் தாங்களே எழுதியிருந்தனர். நூலாசிரியர்களே உரை எழுதியிருப்பதால் மூலத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து, படிப்பதற்கு எளிமையாகிறது. உரைவேறுபாடுகளின்றி அவ்விளக்கங்களையே நாம் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. இவ்விரு இலக்கண நூலாசிரியர்களைப் போன்றே இவரும் நூற்பாவிற்கான உரைவிளக்கங்களையும் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

சொற்களின் திரிவு முறைகள், மரூஉக்களின் மூலம் காட்டல், நிறுத்தக் குறியிலக்கணத்தை நூற்பாவில் அமைத்தல், தமிழின் தூய்மையைப் போற்றுதல், குலமதக் கட்சி சார்பின்றிப் புலமையைப் பாராட்டுதல் போன்றவற்றை இந்நூலின் சிறப்புக் கூறுகளாகக் குறிப்பிடலாம்.

நூற்பெயர்க்காரணம்

தமிழ் இலக்கண, இலக்கியத்தில் நூற்பெயர் அமைத்தலுக்கென்று தனி உத்திமுறையை வைத்திருந்தனர். அதில் சில நூல்கள் ஆசிரியரின் பெயர்களே நூலின் பெயராகவும் அமைந்திருக்கின்றன. தொல்காப்பியம் - தொல்காப்பியர், முத்துவீரியம் - முத்துவீரிய உபாத்தியாயர், சுவாமிநாதத்ம் - சுவாமிநாத தேசிகர் போன்ற இலக்கண நூல்களைக் குறிப்பிடலாம். இலக்கண நூல்களின் பெயர்கள் அமைவது, அந்நூலில் அமைக்கப்படும் இலக்கணத்தின் அடிப்படையிலும், காலத்தின் அடிப்படையிலும், ஆக்கியோன் பெயர் அடிப்படையிலும் அமையலாம். அதன்படி தமிழ்நூல் நூற்பெயர்க் காரணம் அந்நூலில் சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையாக இருக்கலாம். இருப்பினும் ஆசிரியர் அப்பெயர் அமைத்ததற்கான காரணத்தைக் கூறுமிடத்தில்,

பொத்து + அகம் = பொத்தகம். ‘பொத்து’ என்பது பாதுகாத்தலையும், ‘அகம்’ என்பது உள்ளே என்பதையும் குறிப்பிடுகிறது. தன்னுள் பொத்தி வைப்பது பொத்தகம். காலப்போக்கில் பொத்தகம் என்பது புத்தகமாக மாறிவிட்டது என்கிறார். மேலும், “நூல் எனப்படுவது இலக்கணப் பொத்தகத்தையே என்பது நிறுவப்பட்ட கொள்கை. அதனொடு சார்த்தி ‘தமிழ்நூல்’ எனப் பெயர் தந்தது, தமிழ் நூல்களைப் பயிலுதற்காய கருவிநூல் எனற்கே. அன்றியும் தமிணூல் (வாழ்நன் = வாணன்) எனத் திரித்துக்கூறித் தனிப்பெயர் ஆக்கலுமாம்” (தமிழ் நூல், நூ.1) என்றும் நூலின் பெயர்க்காரணத்தை முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நூல் கட்டமைப்பு

தொல்காப்பியம் முதன்மை நூல் என்பதனாலும், அதற்குப் பின் 13- ஆம் நூற்றாண்டில் உருவான நன்னூல் எழுத்து, சொல்லிலக்கணங்களைச் சிறப்பாக எடுத்துக்கூறுவதாலும் இவ்விரு நூல்களை முதல்நூல், வழிநூல்களாகக் கொண்டே பல நூல்கள் தற்காலத்தில் தமிழிலக்கண நூல்களாக உருவாக்கம்பெற்றுள்ளன. தமிழ்நூலும் தொல்காப்பியத்தையும் நன்னூலையும் முதன்மையான நூல்களாக எடுத்துக்கொண்டு அவற்றுள் இடம்பெற்றிருந்த நூற்பாக்கள் சிலவற்றை அப்படியே எந்தவித மாற்றங்களுமின்றி கையாண்டுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பின்வந்த இலக்கண நூல்கள் மட்டுமின்றி மொழியியல் அடிப்படையில் உருவான தமிழிலக்கண நூல்கள் குறிப்பிடும் இலக்கணக் கூறுகளையும் பயன்பாட்டில் இருந்துவந்த வழக்காறுகளை இலக்கண நூலில் சேர்த்துப் பயன்பாட்டுத் தமிழ் இலக்கண நூலாகவும் கருதும் வகையில் உருவாக்கியுள்ளார்.

மரபைப் போற்றுமிடத்தில் போற்றியும், புதுமையைக் கூறுமிடத்தில் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புகுத்தியும் புதியதொரு மரபிலக்கண நூலாக எழுதியிருக்கிறார். தொல்காப்பியர் ஐந்திலக்கணங்களை மூன்று அதிகாரங்களிலும், நன்னூலார் இரண்டு இலக்கணங்களை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு அதிகாரங்களிலும் விளக்கியுள்ளனர். சரவணத்தமிழன் தமிழ்நூலில் எழுத்தியல் - 43 சொல்லியல் - 99, உறுப்பியல் - 42, புணரியல் - 74, பொதுவியல் - 83, ஒழிபியல் - 39, தொடரியல் - 53 என்னும் ஏழு இயல்களில் 433 நூற்பாவழி எழுத்து, சொல்லிலக்கணங்களை விளக்கியுள்ளார்.

      இந்நூல் நன்னூல் போல எழுத்து, சொல் என்னும் மொழி அமைப்பிற்கே இலக்கணம் வகுக்கிறது. யாப்பு, பொருள் என்பவற்றை அடுத்துத் தொகுக்கும் கருத்து உண்டு என தனது முன்னுரையில் (17) குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பிய நூற்பாக்களை அப்படியே எடுத்தாளுதல்

தொல்காப்பியத்தை முதல் நூலாகக்கொண்டு இயற்றப்பட்ட நூலாதலால் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நூற்பா வரிசைமுறையாக அமைத்து எவற்றை எவ்வாறு கூறவேண்டும் என்பதில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் போன்றவற்றில் தொல்காப்பியர் பயன்படுத்தியதை இந்நூலாசிரியர் ஏழு இயல்களில் ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்.

‘மெல்லின மெய் முன்னே வல்லினம் ஒத்து வரும்’ (தொல்.25, தமி.29), ‘அத்துச் சாரியையின் முதலெழுத்தாகிய அகரம், அகர இறுதிச் சொல்லிற் புணருங்கால் இல்லாது போகும்’ (தொல்.23, தமி.212), ‘செயப்படுபொருளை வினைமுதல் போல எழுவாய் வினையிட்டுக் கூறுவதும் வழக்கின்கண் உரியது’ (தொல்.49, தமி.289), ‘இனம் பிரித்துச்சுட்டாத பண்படையோடு வரும் பெயர்ச்சொல் வழக்கில் இல்லை; செய்யுட்களில் வரும்’ (தொல்.18, தமி.300) ஆகிய நூற்பாக்களை எழுத்தியல், புணரியல், பொதுவியல் ஆகிய இயல்களிலிருந்து அப்படியே எடுத்தாண்டுள்ளார்.

அட்டவணை -1 தொல்காப்பிய நூற்பாக்களை அப்படியே எடுத்தாளுதல்

 

தொல்காப்பியம் நூற்பா எண், இயல்

தமிழ்நூல் நூற்பா எண், இயல்

1.

25, நூன்.

29, எழு.

2.

23, புணரி.

212, புணரி.

3.

49, விளி.

289, பொது.

4.

18, கிளவி.

300, பொது.

 

நன்னூல் நூற்பாக்களை அப்படியே எடுத்தாளுதல்

தொல்காப்பிய நூற்பாவை அப்படியே எடுத்தாண்டது போலவே நன்னூல் நூற்பாக்கள் சிலவற்றையும் தமிழில்நூலில் அப்படியே எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் எடுத்தாண்டுள்ளார்.

‘திணையும் பாலும் வேறுவகைப்பட்ட பல பொருள்கள் கலந்து நின்றவிடத்து அவை சிறப்பினாலும், மிகுதியினாலும், இழிவினாலும் செய்யுளுள் ஒரு முடிபு கொள்ளும்’ (நன்.378, தமி.271), ‘முக்காலத்திலும் ஒரு தன்மையோடு இயலும் பொருள்களை நிகழுங்கால வாய்ப்பாட்டால் கூறுவர்’ (நன்.383, தமி.278), ‘எப்பொருளை எச்சொல்லால் எம்முறையில் சான்றோர் குறித்தனரோ அவ்வாறு குறித்தல் மரபு’ (நன்.388, தமி.280), ‘பெரும்பாலும் உயிர் முதல் மொழி வந்தால் நிலைமொழி இறுதி உகரம் தான் ஏறிநிற்கும் மெய்யைவிட்டு வருமுயிர்ச் சேருமாறு அகலும்’, ‘சிறுபான்மையாக உகரமுன் யாமுதல்வரின் இகரமாய்த் திரியும்’ (நன்.165, தமி.200), ‘உயிரிறுதிச் சொல்லொடு உயிர்முதற்சொல் வந்து புணரும்போது இ ஈ ஐ என்னும் மூன்று எழுத்திறுதி முன் ‘ய்’ யும் பிறவுயிர் முன் ‘வ்’ வும் ‘ஏ’ என்னும் உயிர்முன் ‘ய்’ ‘வ்’ இரண்டும் ஒருமைப்பட்டு நிற்கும் சொற்களில் மட்டும் உடன்படு மெய்யாம் (நன். 162, தமி.198), ‘சால உறுதவ நனிகூர் கழிமிகல்’ (நன். 456, தமி.344), மிகுதற்பொருட்டு வரும் உரிச்சொல், சுவையைக் குறிக்கும் ‘புளி’ ‘பூ’ இவற்றின் முன்வரும் வலி மிகுந்தும் மெலிந்தும் வரும்’ (நன்.175, தமி.214)

அட்டவணை - 2 நன்னூல் நூற்பாக்களை அப்படியே எடுத்தாளுதல்

 

நன்னூல் நூற்பா எண், இயல்

தமிழ்நூல் நூற்பா எண், இயல்

1.

378, பொது.

271, பொது.

2.

383, பொது.

278, பொது.

3.

388, பொது.

280, பொது.

4.

165, பதவி.

200, புணரி.

5.

162, பதவி.

198, புணரி.

6.

456, உரி.

344, ஒழிபி.

7.

175, பதவி.

214, புணரி.

தொல்காப்பியம், நன்னூல் நூற்பாக்களைத் திரித்துத் தமிழ்நூலில் எடுத்தாளுதல்

தொல்காப்பியம், நன்னூலில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களில் சில மாற்றங்களைச் செய்து பின்வரும் புதிய செய்திகளைப் பழைய நூற்பாவிலேயே இடம்பெறச்செய்துள்ளார். தொல்காப்பியத்தில் கூறப்பட்ட சொல்லிறுதி எழுத்தில் ‘ந’, ‘ஞ’, ‘ங’ மூன்றும் சொல்வழக்கிழந்ததால் விடப்பட்டது. ‘இர்’ ‘ஈர்’ முன்னிலைப் பன்மையில் வரும், ‘பல’ ‘சில’ என்னும் சொற்கள் தம்முன்னே தாம் வந்தால் முன் சொல்லின் இறுதி அகரம் நீங்க ‘ல’கர ஒற்றாகவும் (பல்பல, சில்சில) அது திரிந்து ‘ற’கர ஒற்றாகவும் மாறலும் (பற்பல, சிற்சில) இயல்பாய் நிற்பின் இயல்பும் (பலபல, சிலசில) மிகுதலும் (பலப்பல, சிலச்சில) வரும் என்று கூறியுள்ளார்.

அட்டவணை - 3 தமிழ்நூலில் தொல்காப்பியம், நன்னூல் நூற்பாக்களின் திரிபு

 

தொல்காப்பிய நூற்பா எண், இயல்

நன்னூல் நூற்பா எண், இயல்

தமிழ்நூல் நூற்பா எண், இயல்

1.

78 மொழி.

 

26 எழு.

2.

709 வினை.

337 பொது.

96 சொல்.

3.

214 உயிர்.

 

210 புணரி.

தமிழ்நூல் குறிப்பிடும் புதிய இலக்கணக் கூறுகள்

தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியத்திலும் அதற்குப் பின்னர்த் தோன்றிய சுவாமிநாதம் வரையிலான இலக்கண நூல்களில் குறிப்பிடப்பட்ட இலக்கணக் கூறுகளைத் தவிர புதிதாக வழக்கில் உள்ள பல பயன்பாடுகளை உரைநடை வடிவிலான நூலாக அல்லாமல் செய்யுள் வடிவிலான நூற்பாவாக உருவாக்கி பயன்பாட்டில் உள்ள இலக்கணக் கூறுகளை இலக்கணத்தில் சேர்த்துள்ளார். இவ்வகையில், எழுத்துகளின் இனவேறுபாடு, வரியெழுத்து, காலம், இறுதிநிலை சொற்களில் புதியவை, ஊர்ப்பெயர் மருவு, பயன் திரிபு, குழந்தை பிறப்பு, முகவரி, நாட்குறிப்பு, வடமொழி, நிறுத்தக் குறிகள், அளபெடை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

1. எழுத்துகளின் இனவேறுபாடு

இலக்கண ஆசிரியர்கள் எழுத்துகள் பிறக்கும் முறையைக்கொண்டு எழுத்துகளின் இனத்தினைப் பிரித்துவைத்துள்ளனர். தலை, மூக்கு, மிடறு ஆகிய இடங்களில் ஒலி தடைப்பட்டு பிறப்பதாகத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்றினை இனம் என்று குறிப்பிடுவர். ஒலி வேறுபாட்டால் அமையக்கூடிய எழுத்துகளை இனம் பிரித்துவைத்துள்ளனர். ன, ண, ந, ல, ள, ழ ஆகிய எழுத்துகள் ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருப்பதனால் இதனை தனித்துக்காட்ட இனவேறுபாடு தேவைப்படுகிறது. இடையினம், வல்லினம் ஆகியவற்றில் வரக்கூடிய இவ்வெழுத்துகளைத் தனித்தனியாகக் குறிப்பிடும் முறையை இனவேறுபாடு என்னும் பகுதியில் இலக்கணத்தில் புகுத்தி சரவணத்தமிழன் விளக்கியுள்ளார். இதை ஏன் இலக்கண நூலில் புகுத்தி விளக்கமுறக் கூறுகிறேன் என்பதற்கான காரணத்தையும் கூறிச்செல்கிறார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் 1984-ல் வெளியிட்ட கட்டுரைப் பூங்கா -வில் ‘மாணவர்க்கேற்ற இலக்கணத்தமிழ்’ என்னும் கட்டுரையில் எழுத்துகளில் இனவேறுபாட்டினைத் தமிழ்நூலில் அமைத்ததிற்கான காரணத்தை, “இலக்கண நூல்களில் இடம் பெறாமற் போயினும் ஒரோவழி உரையாசிரியர் குறிப்புகன், பாடம் பயிற்றாசிரியர் வாயாடல்கள் இவற்றான் ‘ன - றன்னகரம், ண - டண்ணகரம், ந - தந்நகரம், ர - இடையினம், ற - வல்லினம்’ என்ற செவியாரல் இருப்பினும் ல - ள - ழ விற்கு இன்மை ஏன்? ஒருமுறை கருத்துரை தரும்போது ளகரம் உள்ள சொல்வர, மாணவர் ‘எள்ளகரம்’ என வினவ, யான் ‘பள்ளிக்கு வரும் ளகரம்’ எனப் பகர, மாணவரோ ‘எப்பல்லி - எப்பள்ளி’ எனக் கடாவியதும்தான் யான் விழித்தேன். பின்பே எழுத்துப் பிறப்பு வழி ல - ஒற்றல், ள - வருடல், ழ - சிறப்பு எனப் பெயர்தந்து தமிழ்நூலில் நூற்றியற்றினேன். இஃது எழுத்தில் நிகழ்ந்த நேர்ச்சி.” கட்டுரை பூங்கா, ப.206. என்று விளக்குகிறார்.

      ன, ண, ந, ல, ள, ழ ஆகிய எழுத்துகளை எவ்வாறு வழங்கவேண்டும் என்பதனை இலக்கணத்தில் வரையறுத்து விளக்குகிறார். வல்லினத்திற்கு இனமான மெல்லொலியாதல் பற்றி கூறுகையில் ன - றன்னகரம், ண - டண்ணகரம், ந - தந்நகரம் எனக் கூறலாம். நாக்கின் ஓங்கி உயர் நிலையில் ல ஒற்றுப் பிறத்தலால் ஒற்றல் லகரம் என்றும், ள பிறத்தல் வருடலால் பிறத்தலால் வருடல் ளகரம் என்றும் ழகரத்தை தமிழ் ழகரம் அல்லது சிறப்பு ழகரம் என்று குறிப்பிடலாம். இனவேறுபாட்டால் இடையின ரகரம் என்றும், வல்லின றகரமென்றும் அமைவதாக நூற்பா 24-ல் விளக்குகிறார்.

2. வரியெழுத்து

தமிழிலக்கண நூல்களில் எழுத்திலக்கணத்திற்கு என்று தனி அதிகாரத்தை உருவாக்கி எழுத்துகள் எவை என்றும், முதலெழுத்துகள், சார்பெழுத்துகள், எழுத்துகள் பிறக்கும் கால அளவு போன்றவற்றை எடுத்துரைத்துள்ளனர். எழுத்துகளின் வரிவடிவம் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றம் பெற்றிருக்கிறது. இம்மாற்றம் கடைசியாக 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்தது. அதன்பிறகு தமிழில் வரிவடிவ மாற்றத்திற்குப் பல்வேறு தமிழறிஞர் தத்தம் கருத்துகளை முன்வைத்துள்ளனர். அதில் குறிப்பிடத்தகுந்தவராகச் சரவணத்தமிழனார் இருக்கிறார்.

தமிழ்நூல் எழுத்தியலில் ஏழு நூற்பாக்களில் (37-43) வரியெழுத்து என்ற தலைப்பின்கீழ் தமிழ் எழுத்துகள் அடையவேண்டிய மாற்றங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அதில் குறிப்பிடத் தகுந்ததாகப் பிராமி எழுத்தமைப்பிலிருந்து பின்பற்றுவதாக இருக்கக்கூடிய ‘ஈ’ என்ற ஒரு குறியீட்டை மட்டும் அகற்றி ‘கீ’ முதலிய எழுத்தின்மேல் விசிறியைப்போல, இகரத்தை மேற்சுழித்தும், ஆய்தப் புள்ளி எனப்படும் ஆய்தம் முக்கூட்டாக மூன்று சிறுவட்டச் சுழிகளிட்டும் எழுதப்பெறலாம் என்று கூறுவதைக் குறிப்பிடலாம்.

3. காலம்

செய்யப்படுகின்ற கால நேர எல்லையைச் சுட்டும் காலம் மூன்றாகும். அவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகும். இன்றைய வழக்கில் தமிழ்மொழியில் காலத்தைக் குறிக்க ‘இரு’, ‘கொண்டு’ என்னும் துணைவினைச் சொற்கள் அடைக்கப்பட்டிருக்கும் முறையால் இறப்பு, நிகழ்வு, எதிர்வும் என்னும் தனித்துப் பொதுவிற் சுட்டும் மூன்று காலத்தை ஒன்றொடு ஒன்றைப் பிணைத்தால் (இணைத்தல்) மேலும் காலப்பிரிவுகள் ஒன்பதாக உருவாகும்.

இறப்பு

இறப்பு             - செய்தேன்

இறப்பிறப்பு         - செய்திருந்தேன்

இறப்பு நிகழ்வு      - செய்து கொண்டிருந்தேன்

இறப்பெதிர்வு       - செய்திருப்பேன்

 

நிகழ்வு

நிகழ்வு      - செய்கிறேன்

நிகழ்விறப்பு        - செய்திருக்கிறேன்

நிகழ்நிகழ்வு        - செய்து கொண்டிருக்கிறேன்

நிகழ்வெதிர்வு       - செய்ய இருக்கிறேன்

 

எதிர்வு

எதிர்வு             - செய்வேன்

எதிர்விறப்பு        - செய்திருப்பேன்

எதிர்நிகழ்வு         - செய்துகொண்டிருப்பேன்

எதிர்வெதிர்வு       - செய்ய இருப்பேன்

‘இடு’ என்னும் துணைவினை சில இடத்திற்குப் பொருந்தும் என்றும் இதில் எதிர்வெதிர்வு போல்வன வழக்கில் இல்லை என்றாலும் தெளிவிற்காகக் கூறப்பட்டது என்றும் நூற்பா 56-ல் விளக்கியுள்ளார்.

4. இறுதிநிலை சொற்களில் புதியவை

      சொற்களில் இறுதிநிலை வருவனவற்றை விகுதி என்று கூறுவர். அதில் ‘கள்’ விகுதிபெறும் சொற்கள் பல இருக்கின்றன. தற்காலத் தமிழில் இறுதிநிலைகள் புதியனவாகப் பல உருவாகியுள்ளன என்று ‘ஆளன்’, ‘காரன்’, ‘ஆட்டி’, ‘காரி’, ‘ஆளர்’, ‘காரர்’, ‘ஆளி’ போன்றவற்றைப் பட்டியலிட்டுள்ளார். இவை யாவும் முற்றிலும் புதிய இறுதி நிலைகள் அல்ல. ஆடுஉ, மகடுஉ என்னும் சொல்லடி மாற்றங்களே. திருவாளன், திருவாட்டி பொண்டாட்டி, வைப்பாட்டி போன்ற சொற்கள் சங்க காலம் முதலே தமிழில் இருந்துள்ளதைக் காணமுடிகிறது.

இலக்கணத்தில் புதிய இறுதிநிலைகளாகப் ‘பாற்காரன்’, ‘கடைக்காரன்’, ‘வேலைக்காரி’, ‘கூடைக்காரி’, ‘ஊர்க்காரர்’, ‘வீட்டுகாரர்’ என்பனவும் மதிப்புப்பொருமையில் ‘பணக்காரர்கள்’, ‘கடன்காரர்கள்’ பெயரோடு புணர்ந்துநிற்கும் இறுதிநிலைகள். இதன் காரணம் பொருட்டே புதியனவாகத் தனித்து நூற்பா 182 இயற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

உயர்திணை, அஃறிணையில் வரக்கூடிய பால்களில் ‘ஆளன்’, ‘காரன்’ என்னும் புதிய இறுதிநிலைகள். ‘ஆட்டி’, ‘காரி’ என்பன பெண்பாலுக்கு உரியவனாகவும், ‘ஆளர்’, ‘காரர்’ ‘கள்’ளோடு பலர்பாலுக்கு இறுதியாக இருக்கிறது. இதில் ‘இ’ என்னும் இறுதிநிலை மட்டும் இருதிணையில் ஒருமையை ஏற்றுவருகிறது.

நம்பி, வில்லி       -     ஆண்பால் ஒருமை

தோழி, பாங்கி      -     பெண்பால் ஒருமை

முதலாளி, தொழிலாளி      -      இருபால் ஒருமைப் பொது

ஒடுகாலி, போக்கிலி        -     இழிவொருமை

நண்டுவாய்க்காலி, நாற்காலி -      ஒன்றன்பால்

அட்டவணை - 4 புதிய இறுதிநிலை சொற்கள்

 

பால்

சொல்

எடு.

1.

ஆண்பால்

ஆளன், காரன்

திருவாளன், பாற்காரன்

2.

பெண்பால்

ஆட்டி, காரி

திருவாட்டி, வேலைக்காரி

3.

பலர்பால்

ஆளர், காரர்

திருவாளர், பணக்காரர்

 

5. ஊர்ப்பெயர் மருவு

தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தற்காலத்தில் மருவியும் சுருங்கியும் இருக்கிறது. சில பெயர்கள் மாறுதலுக்கு உட்பட்டு புதிய பெயராக வைத்துள்ளனர். இவ்வாறு ஊர்ப்பெயர்கள் சுருங்கி நின்று மருவும்பொழுது அதில் பெரும்பாலும் இரண்டாம், மூன்றாம், எழுத்தின் மேல் ஐ ஏறப்பெறும். சில பெயர்கள் எவ்வித மாற்றங்களுமின்றி அவ்வாறே வழங்கப்பெறும். பெரும்பாலும் இரண்டிலும் மூன்றிலும் வருவதுண்டு சிறுபான்மை நான்கின் மேலும் வரும்.

கோவன்புத்தூர் - கோவை, நாகப்பட்டினம் - நாகை, தஞ்சாவூர் - தஞ்சை, மன்னார்குடி - மன்னை, சிங்கப்பூர் - சிங்கை, புதுச்சேரி - புதுவை, திருநெல்வேலி - நெல்லை, அதிவீரராமப்பட்டினம்   - அதிரை, குடமூக்கு - குடந்தை, அடியார்க்குமங்கலம் - அடியர்க்கை போன்றவற்றைக் குறிப்பிடலாம். முகவை, மதுரை இயல்பாக அமைந்துள்ளது. திருச்சி (ராப்பள்ளி) போல அரி சிதைவும், உறையூர் - உறந்தை (அறந்துஞ் சுறந்தை) என விரி சிதைவும் வருமென்று குறிப்பிடுகிறார். இது போன்ற ஊர்ப்பெயர்களில் ஏற்படும் மாற்றங்களையும் சிதைவுகளையும் இலக்கணத்தில் நூ. 322-ல் புகுத்தி புதிய இலக்கணக்கூறாக தமிழ்நூலில் அறிமுகம் செய்திருக்கிறார்.

6. பயன் திரிபு

பெயர்களைக் குறிப்பிடும்போது சிலபெயர்கள் திரிபடையும் அவ்வாறு திரிபடையும் சொற்கள் வேறொரு பொருள் கொடுத்துத் தனிச்சொல்லாகவே அமையும் என்பதை பயன்திரிபு என்னும் பகுதியில் குறிப்பிடுகிறார்.

“திரியும் சிலபெயர் பிறிதொரு பொருட்பயன்

தருவ துண்டேல் தனிச்சொல் லாமே”     - தமிழ்நூல் நூ.325

பெயர்களடையும் திரிபினை, செல்வம் - செல்லம், செம்பு - சொம்பு, எள்+நெய்= எண்ணெய், கண்+ஆடி = கண்ணாடி, உருவு - உருவாம் - உருபு (வேற்றுமை உருபு) முடிவு (இறுதி) - முடிபு (தீர்மானமாய் இருத்தல்), எயிறு - (பல்) ஈறு - பற்கதுவுதசை எனத் திரிபு பெயரில் மாற்றுப்பொருளாய் வரும் என்கிறார்.

நாற்றத்தினை ‘நாத்தம்’ என்னும் வழக்குத் திரிபு தீ நாற்றத்தைக் குறிப்பதாய்க் கொள்ளலாமோ எனின், ஆகாது ‘நாற்றம்’ இழிபொருளுறினும் மணம் நன்னாற்றத்தைக் குறித்தலின், என்ற விளக்கத்தினைத் தந்துள்ளார்.

7. குழந்தை பிறப்பு

தமிழர்கள் குழந்தை பிறந்ததைக் குறிப்பிட இத்தாய்க்கும் இத்தந்தைக்குப் பிறந்த குழந்தை என்றே பெயரைக் குறிப்பிட்டு வருகின்றனர். இத்தாயிடத்தில் இத்தந்தைக்குத் தோன்றியது என்று கூறுவதே தக்கதாக இருக்கும். இக்காலம்வரை இதனை இவ்வாறே குறிப்பிட்டு வருகின்றனர்.     கதிரவனுக்குக் குந்தியிடத்துத் தோன்றியவன் கண்ணனாம். இது உடலியல் முறையில் தமிழில் அமையும் அறிவியல் தொடராகக் குறிப்பிடுகின்றார். அதுமட்டமின்றி இக்காலத்திலும் ஈரிடத்தும் குவ்வுருபிட்டே கூறப்பெறினும் குவ்வருபு தன் பொருள் வலியிழந்தே வருவதை வழுவமைதியாகக் கொள்ளலாம். என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணத்தையும் தருகிறார். ஆதிக்கும் பகனுக்கும் பிறந்தவர் திருவள்ளுவர் என்பது முழுப்பொய். கண்ணா! யான் காற்றின் வேந்தர்க்(கு) அஞ்சனை வயிற்றில் வந்தேன் - (கம்பராமாயணம்) என்ற எடுத்துக்காட்டுக்களைக் கூறி விளக்கம் தந்திருக்கிறார்.

8. முகவரி

      முகவரியை எழுதும்போது தற்காலத்தில் வழங்கிவரும் ஆங்கில முறையைக் காட்டிலும் தமிழ்த்தொடர்முறையில் எழுதுவது நலம் என்ற கருத்தினை முன்வைத்து முகவரி எழுதும் முறையை விவரிக்கிறார். அதில் மாநிலத்தை முதலிலும் மாவட்டத்தினை அதற்கு பின்பும் அதன்பின் ஊரினையும் பின் தெருவின் பெயரும் பிறகு பெயரினை அளித்தல் என்ற முறையில் அமைதல் நலமாகும், இம்முறை தமிழ்த்தொடர் முறையில் அமைகிறது. இது இக்கால முறைக்கு மாறாகக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துவது நோக்கமன்று.

பெயர் இயற்றமிழ் பயிற்றகம், தெரு நடவாகனத்தெரு, ஊர் திருவாரூர், மாவட்டம் தஞ்சாவூர் மாநிலம் தமிழ்நாடு என்றிருப்பதை தமிழ்நாட்டுத் தஞ்சை மாவட்டத்தின் திருவாரூரில் உள்ள நடவாகத்தெருவில் அமைந்திருக்கும் இயற்றமிழ்ப் பயிற்றகம் என்று அமைந்தால் அஞ்சலகப் பணிக்கும் பிறவற்றிற்கும் எளிதாக இருக்கும் என்பதே நோக்கம். சப்பான் மொழியில் இம்முறை வழக்கில் இருக்கிறது. இன்னும் மெய்மைக் குறிப்பு (Promissory note) போன்றவற்றில் இம்முறையே கையாளப்படுகிறது.

9. நாட்குறிப்பு

      நாட்குறிப்பு அமைக்கும் முறையிலும் முகவரியில் குறிப்பிட்டுள்ளவாறே ஆங்கிலத் தொடரமைபல்லாமல் தமிழ்த் தொடரமைப்பில் எழுதுவது சிறந்தது. நாளைக் குறித்து எழுதும்போது ஆண்டை முன்னும் அதனையடுத்து திங்களும், அதன்பிறகு பக்கலும் முறையே பின் எழுதுதல் வேண்டும்.

“நாட்குறிக் குங்கால் ஆண்டை முன்னும்

திங்கள் அடுத்துப் பக்கலும் எழுதுக”          - தமிழ்நூல் (339)

என்ற நூற்பாவில் எவ்வாறு தமிழ்த் தொடரமைப்பில் எழுதவேண்டும் என்னும் கருத்தை விவரிக்கிறார். திருவள்ளுவருக்குப் பின் 2001ஆம் ஆண்டை, தைத் திங்கள் முதல்நாளை பொங்கல் விழாவாகக்கொண்டாடுகின்றோம். இதனை, தி. பி 2001-01-01 என்று எழுதுவது சிறந்ததாக அமையும். இதனையே ஆங்கில தொடரமைப்பில் 14-01-1970 என்று எழுதுவதைக்காட்டிலும் 1970-01-14 என்று எழுதுவது சாலச்சிறந்தது. இதனை இலக்கணக்கூறாகத் தமிழிலக்கணத்தில் இவரே முதன்முதலாகக் குறிப்பிடுகிறார்.

10. வடமொழி

தமிழில் வழங்கப்படும் பிறமொழி எழுத்துகளைத் தவிர்த்து தமிழில் உள்ள எழுத்துகளையே பயன்படுத்துவதற்கு தொல்காப்பியம் முதல் தற்காலம்வரை பல்வேறு இலக்கண நூல்கள் வழிவகை செய்துள்ளன. இருப்பினும் அவ்விலக்கண நூல்கள் குறிப்பிடும் வழிமுறைகள் யாவும் பயன்பாட்டில் நிலைத்து இல்லாமல் புதிய புதிய சொற்களின் தோற்றம் காரணமாக உருவாகிக்கொண்டே போகிறது. இதற்கு தமிழ்நூலும் சில வழிமுறைகளை ஒலிபெயர்ப்பு என்னும் பகுதியில் நூ.370-381 வரை உள்ள பன்னிரண்டு நூற்பாக்களில் ஆங்கிலச் சொற்கள் மற்றும் பிறமொழி சொற்களுக்கும் சேர்த்து விவரிக்கிறார்.

தாய்மொழிக்கு ஒத்த ஒலியுடைய அயன்மொழி எழுத்துகளைத் தவிர அயன்மைப் பண்பமைந்து சிறப்பொலியுடைய பிறமொழிப் பெயர்களின் எழுத்துகளைத் தம்மொலிப் படுத்துக் கொளல் வேண்டும் என்னும் மொழியுடையார் கடமையால் தமிழில் மிகுதியாகக் கலந்துள்ள வடமொழி, ஆங்கிலம் என்பனவற்றின் சிறப்பொலிச் சொற்கள் புகுந்துள்ளதைக் காண முடிகிறது. (த.நூ.370). ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ ஆகிய எழுத்துகள் உள்ள சொற்களைப் பின்வருமாறு தமிழ்ப்படுத்தி எழுத வேண்டும் என்று குறிப்பிடுகிறார் (த.நூ.371).

அட்டவணை - 5 வடமொழியைத் தமிழ்ப்படுத்தி எழுதுதல்

வடமொழி

தமிழ்

எடுத்துக்காட்டு

ய, ச

பங்கயம் (பங்கஜம்), அயன் (அஜ), சானகி (ஜானகி), அயந்தா (அஜந்தா)

‘செ’ - செயச்சந்திரன், செயலக்குமி, செபமாலை, செகரம்

‘சியா’ - சியார் (ஜார்), சியார்சு (ஜார்ஜு)

ச, ட

சகீலை (ஷகிலா), உசை (உஷா), துசியந்தன் (துஷ்யந்தன்), இருடி (ரிஷி), புட்கலை (புஷ்கலா), கனிட்கர் (கனிஷ்கர்)

ச, சு

வாசனை (வாஸனை), சரசுவதி (ஸரஸ்வதி), சிரசு (சிரஸ்), சந்தேகம் (ஸந்தேகம்), சந்தோசம்/சந்தோடம் (ஸந்தோஷம்)

ஸ் - சு : மாசுகோ (மாஸ்கோ), ஆசுகார் (ஆஸ்கார்), பரிசு (ப்ரைஸ்), சுகாட்டு (ஸ்காட்டு), சிடாலின் (ஸ்டாலின்)

மயானம் (ஸ்மசானம்)

அ, க

ஹவாய் - அவாய் (த்திட்டு) அனுமன் (ஹனுமான்), அக்கிம் (ஹக்கிம்), மோகம் (மோஹம்), அகங்காரம் (அஹம்காரம்)

யகரம் - ம(கி)யீ (வேங்கடமஹீ), மகேசுவரன், மயேச்சுரன்

க்ஷ

க்க, ட்ச

தக்கணன் [சிலம்பு] (தஷணன்), மீனாட்சி (மீனாக்ஷி), தட்சிணாமூர்த்தி (தக்ஷிணாமூர்த்தி), பக்கணம் (பக்ஷணம்)

இதில் கூறப்பட்டுள்ள ஒலிபெயர்ப்பினைப் போன்று தமிழிலக்கணங்கள் வடமொழியாக்கம், அயல்மொழியாக்கம் என்னும் தலைப்புகளில் பல்வேறு கருத்துகளைக் கூறுகின்றன. தமிழுக்கு ஒத்த ஒலியுடைய அல்லது சிறிது மாறுபட்ட ஒலியுடை எழுத்து ஆங்கிலத்திலோ அல்லது வடமொழியிலோ வந்தால் அதனைத் தமிழுக்குத் தகுந்தவாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

11. நிறுத்தக் குறிகள்

      தமிழில் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதில்தான் நிறைய தவறுகளைச் செய்கிறோம் அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது நிறுத்தக்குறிகளே நாம் பேசும்போது ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறோம் ஆனால் எழுதும்போது எங்குத் நிறுத்தவேண்டும் எங்கு தொடர்ந்து எழுத வேண்டும் எங்கு அழுத்தமாகக் கூறவேண்டும் என்பதனைக் கவனத்தில் கொள்வதில்லை அதனாலே தவறுகள் எழுதும்போது நிகழ்கின்றது. ஒற்று மிகும் இடங்கள் மிகா இடங்கள் தெரிந்திருப்பினும் அவற்றைப் பயன்படுத்தித் தொடர் எழத முடியும். ஆனால் இந்த நிறுத்தக் குறியீடுகள் இல்லாமல் தமிழில் எந்தவொரு தொடரினையும் அமைக்க முடியாது. இந்த நிறுத்தக்குறிகள் பற்றித் தமிழிலக்கண நூல்கள் நிறைய கூறியிருந்தாலும் முதன்முதலாகச் செய்யுள் வடிவில் பயன்படுத்தியவர் த. சரவணத்தமிழன் ஆவார். இவர்தம் தமிழ்நூல் தொடரியல் என்னும் ஏழாவது இயலில் 414வது நூற்பா முதல் 428வது நூற்பா வரை 15 நூற்பாக்களின்வழி நிறுத்தற்குறிகளுக்கான இலக்கணத்தையும் அதன் பயன்பாட்டையும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார். இதில்,

அட்டவணை - 6 நிறுத்தக் குறிகள்

1. முற்றுப் புள்ளி

2. முக்காற் புள்ளி
 (வரலாற்றுக்குறி)

3. அரைப் புள்ளி

4. காற்புள்ளி

5. வினாக்குறி

6. உணர்ச்சிக்குறி

7. இரட்டை மேற்கோட்குறி

8. ஒற்றை மேற்கோட்குறி

9. பிறைக்கோடு

10. அடைப்புக்குறி

11. மேற்படி குறி

12. விடு குறி

13. இடைப்பிற வைப்புக் குறி

14. கை அம்புக்குறி

முதல் நிலையில் 10 வகையான குறியீடுகளையும் பிற குறிகள் என்னும் தலைப்பில் மேலும் 4 குறியீடுகளையும் அவற்றைப் பயன்படுத்தும் இடங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

      நான்கு வகையான புள்ளிகளை உச்சரிப்பு நிலையில் எவ்வாறு நிறுத்திப் பயன்படுத்துவது என்று அவற்றிற்கான ஒலிக்கும் கால அளவை மாத்திரையாகக் கூறியுள்ளார். ‘முற்றுப்புள்ளிக்கு 4 மாத்திரை நிறுத்தியும், முக்காற்புள்ளிக்கு 3 மாத்திரையும், அரைப்புள்ளிக்கு 2 மாத்திரையும், காற்புள்ளிக்கு 1 மாத்திரையும் நிறுத்தி உச்சரிக்கப் பயன்படுத்துக’ என்று வாசித்தலுக்கான கால அளவையும் கூறியுள்ளார். இவ்வாறு தமிழிலக்கண, இலக்கியத்தில் நிறுத்தக்குறிகளின் பங்கை இலக்கணநூல் வழி எடுத்துக்கூறியுள்ளார்.

12. அளபெடை

      இந்நூல் ஒழிபியலில் அளபெடையை ஒன்பது வகையாகப் பிரித்துக்காட்டியுள்ளது. தூரத்தில் இருப்பவர்களைக் கூப்பிடுதல், நடைமுறையில் பாடப்படும் பாட்டு, கிராமத்தில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல், இலக்கண நூல்களில் காணப்படும் பாவகைகள், தொழில் செய்யும்போது பண்டங்களைக் கூவி விற்பனை செய்தல், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடுதல், இறந்த வீடுகளில் பாடப்படும் ஒப்பாரி என அளபெடையைத் தற்காலப் பயன்பாடு சார்ந்து வகைப்படுத்தியுள்ளார்.

அளபெடை என்பது உயிரும் மெய்யும் ஓசை நீண்டு ஒலிக்கும். அளபெடை ஒன்பது வகைப்படும். (நூ.362)

முடிவுரை

தொல்காப்பியர், நன்னூலார் குறிப்பிட்ட இலக்கணக் கூறுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழில் தோன்றியுள்ள புதிய இலக்கணக் கூறுகளைச் சேர்த்தும் வழக்கொழிந்துபோனவற்றை விடுத்தும் இலக்கண நூல் என்ற மரபிலிருந்து சில மாறுதலுக்குள்ளாகி ‘தமிழ்நூல்’ வெளிவந்துள்ளது. இந்நூலில், எழுத்தியல், சொல்லியல், உறுப்பியல், புணரியல், பொதுவியல், ஒழிபியல், தொடரியல் என ஏழு இயல்களாகப் பிரித்து மரபுசார்ந்த செய்திகளைத் தற்காலத்தில் படிப்பவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைத்திருப்பது தனிச்சிறப்பாகும்.

எழுத்தியலில் புதிய இலக்கணக்கூறாகப் பிராமி எழுத்துகளைப் பற்றி கூறியுள்ளார். சொல்லியலில் காலங்களை ஒன்பது வகையாகவும், அளபெடையை ஒன்பதாகவும், நிறுத்தக்குறிகள் ஏழு வகையாகவும் தனித்தனியாகப் பிரித்துக்காட்டியுள்ளார். வடமொழிக்கு இணையான தமிழ்ச்சொல், ஆய்தம் என்பது பிறமொழிகளின் சிறப்பொலி, நிறுத்தக்குறிகளுக்கான பெயர்களை அறிமுகம் செய்தல் மற்றும் பயன்படும் இடங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல் போன்றவற்றை நூற்பாவில் அமைத்துக்கூறியுள்ளார்.

இலக்கணம் மொழிக்கு அடிப்படை. அதனை, காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவகையில் அமைப்பதென்பது சிரமமான ஒன்று. இருந்தபோதிலும், பல்வேறு நூல்கள் தமிழில் உருவாகியுள்ளன. அவை, மரபுசார்ந்த நூலாகவும் மொழியியல்சார்ந்த நூலாகவும் உருவாகியுள்ளன. அவ்வாறான நூல்களில், மரபுசார்ந்த தமிழிலக்கண நூலாகத் த. சரவணத்தமிழன் இயற்றிய ‘தமிழ்நூல்’ சிறந்ததொரு இடத்தினைப்பிடித்துள்ளது. இந்நூல் காலத்திற்குத் தக்கவாறு புதிய செய்திகளை முன்நிறுத்துவதும் அவ்வாறு முன்நிறுத்தப்படும் செய்திகளை எளிதில் புரிந்துகொண்டு பிறருக்கும் எளிய வகையில் புரியவைக்கும்படி அமைத்திருப்பது முக்கியக் காரணமாகும். இந்நூல் தமிழ் ஆய்வுலகில் பெருவழக்குப் பயன்பாட்டு நூலாக எடுத்தாளப்படவில்லை என்பதும் பெருங்குறையே.