ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் சிலம்பாட்டம்

மா.ஜெ.சசிக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி. 15 Aug 2022 Read Full PDF

கட்டுரையாளர்: மா.ஜெ.சசிக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.

நெறியாளர் : முனைவர் பெ.மஹேஸ்வரி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.

 

Abstract

Ancient Tamil culture had sixty four kinds’ of arts. Among that a lot of arts survive yet. Henceforth every art attain many barriers and restrictions at different stages and periods. Particularly British ruled with iron hand to destroy those arts. Only a few arts reform after many people’s sacrifices and destructions. ‘Silambam’ is one among them.

During colonial period the British excited on seeing aboriginals culture, tradition, health, wealth and braveness. Valor and clever words of Tamil peoples frightened and defeated British in the beginning. Silambam is the root cause for colonial catastrophe. Therefore the British promulgated new law and order to ban silambam practice and executing during festival times. This easy portrays such rigorous actions.

Silambam reforms after many sacrifices, death of warriors, destruction of dynasty and revolution. Since silambam trained hidden art subsequently dusk time. After many restriction and struggle silambam attains a secured and modern sport with government recognition. Even cinema helps in growth of silambam. Government reservation is available for silambam sports person in education.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் சிலம்பாட்டம்

      கிறித்துவமதத்தைப் பரப்பிடும் நோக்கில் இங்கே வந்த பல கிறித்துவப் பாதிரியார்கள் நம்மவர்களின் பண்பாடுகளைக் கண்டு வியந்து போயினர். அவற்றில் சிலம்பமும் ஒன்று எனலாம்.

விளையாட்டு என்றாலே சிலம்பம்   

சீகன்பாகு மற்றும் பேப்ரிசியஸ் எனும் மேலைநாட்டுக் கிறித்துவப்பாதிரியார்கள் ஆங்கில விவிலிய நூலின் புதிய பழைய ஏற்பாடுகளை (New and Old Testaments) முறையே கி.பி, 1715 மற்றும் கி.பி. 1782 ல் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தனர் .அவர்கள் தமிழகத்தில் நீலக்கடல் அலைகள் பண்பாடும் தரங்கம்பாடியில் மொழிபெயர்ப்புச் செய்தனர். அம்மொழிபெயர்ப்பில் ‘Beating in the air Play’ என்ற ஆங்கிலச் செற்களுக்கு மொழிபெயர்ப்பாகச் ‘சிலம்பம்’ என்ற ஒரேசொல்லைப் பயன்படுத்தினர். மேற்கூறிய இரு மொழிபெயர்ப்புகளையும் இங்கே காணலாம்.

ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணேன்

  1. கொரிந்தியார் 1:26)

அப்னேர் யோவாபை நோக்கி; வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.

  1. சாமுவேல் 2;14)

எனவே, அக்காலங்களில் தமிழ்மக்கள் சிலம்பவிளையாட்டு முறைகளின் உச்சநிலையை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தனர் என்பதையும், ஆகாயத்தில் சிலம்பம் பண்ணாதபடி எதிரியின் உடலில் குறிப்பிட்ட பகுதியில் சிலம்பம் செய்தல்தான் திறமை என்பதையும் ஐரோப்பியப் பாதிரியார்கள் ஆராய்ந்து அறிந்த பின்பே இவ்வசனங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம். இதிலிருந்து, கிறித்தவர்கள் தமிழகம் வந்த காலங்களில் விளையாட்டு என்றாலே சிலம்பாட்டத்தைத் தான் குறித்தது என்ற பொருண்மையைப் பாதிரியார்கள் நமக்கு உரைக்கின்றனர் எனலாம்.

பஞ்ச பாண்டியர்களைப் பற்றிய நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் மூலம் அவர்கள் சிலம்பம் படித்துத் தேறினர் என்ற செய்திகள் கிடைக்கின்றன. சான்றாக, பஞ்ச பாண்டியர்களில் ஒருவனான வள்ளியூரை ஆண்டுவந்த மன்னன் குலசேகரப் பாண்டியனும், பலவேசம் என்ற வீரனும் சிலம்பம் படித்துத் தேறிய செய்திகள் ‘ஐவர் ராசாக்கள் கதையில்’ தரப்பட்டுள்ளன. (சாக்சர் அ.நா.பெருமாள், தமிழில் கதைப்பாடல், பக் – 139)

சிலம்பம் படித்துத் தேறிய இக்குலசேகர பாண்டியனின் வீரத்தை,

 “கண்டகண்ட திசைகள் எல்லாம்

காவிரி பரந்தாற் போல்

விசிறிக் குமுறி யெங்கும்

வேலை பரந்தாற் போல்

பல சக்கரத்துடனே

பாண்டி மன்னன் குலசேகரன்

எனும் வரிகள்மூலம் அறியலாம். (ஐவர் ராசாக்கள் கதை, நா. வானமாமலை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பக் – 75)

      இந்த நாட்டுப்புறக் கதைப்பாடல் மூலம் 16-ம் நூற்றாண்டில் சிலம்பம் முறையாகப் பள்ளிகளில் போதிக்கப்பட்டது என்பதை உணரலாம்.

ஆங்கிலேயர் வருகையால் சிலம்பத்தின் வீழ்ச்சி

      கி.பி. 1785 – ல் ஆங்கிலேயர், திருநெல்வேலிச் சீமையில் வரிவசூலிக்கும் உரிமையை ஆர்க்காட்டு நவாப்பிடம் இருந்து பெற்றனர். அதுமுதல் தென்மாவட்டங்கள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினுள் வந்தன. சிலம்பத்தில் மாவீரர்களான கட்டபொம்மன், ஊமைத்துரை, மதுரைப்பாண்டி, பூலித்தேவன் போன்றவர்கள் ஆங்கிலேயரின் இராணுவ வலிமையால் அடக்கப்பட்டுத் தூக்கில் இடப்பட்டனர். இவர்களையெல்லாம் தூக்கிலிட்டதுடன் திருப்தி அடையாமல், மீண்டும் கிளர்ச்சி ஏற்படாதவாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆங்கிலேயர் தொடங்கினர். நெல்லைச் சீமையில் பிரம்மதேசம், கங்கைகொண்டான், சங்கர நயினார் கோவில், ஆழ்வார் திருநகரி, களக்காடு பகுதிகளில் மொத்தம் இருபத்தெட்டு கோட்டங்கள் இடித்து நொறுக்கப்பட்டன,’ என்று மதுரை மாவட்டப்பதிவுச் செய்திகள் கூறுகின்றன.  (Madurai District Records Vol.1140 (p. 36,96)

எனவே, ஆங்கிலேயரின் அடக்குமுறைக் காலத்தில் தமிழகத்தில் சிலம்பத்தையும் மக்களையும் பிரிக்க முடியாதபடி நகமும் சதையும் போல மக்களின் வாழ்க்கை இருந்தது எனலாம். எனவே, இந்நிலையை முறியடிக்க நினைத்து ஆங்கிலேயர் இவ்வாறு செய்தனர் என்பதை அறியலாம்.

சிலம்ப ஆயுதங்கள் கைப்பற்றப் படுதல்

தென்பாண்டிச் சீமையின் இத்தகைய தீவிரமான எதிர்ப்பால், நெல்லை விசயத்தில் ஆங்கிலேயர், மிகுந்த எச்சரிக்கையுடனே நடந்து கொண்டனர். கோட்டைகளை இடித்ததோடு அல்லாமல், நெல்லையில் வீடுவீடாகப் புகுந்து ஆயுதங்களைக் கைப்பற்றினர்” 16.1.1802 தேதி முதல் 31.3.1802 ம் தேதிக்குள் கைப்பற்றிய சிலம்ப ஆயுதங்களின் அட்டவணை பின்வருமாறு:

  • ஈட்டி          -     29,702
  • வாள்          -      3,598
  • குத்துவாள்     -      2,375
  • கம்புகள்      -        112

என்று மதுரை மாவட்டச் செய்திகள் தகவல் தருகின்றன.  (Madurai District Vol. 1178 (A) 1139,1140)

      எனவே, பல தலைமுறைகளாகக் காப்பாற்றப்பட்ட சிலம்ப ஆயுதங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன என்பதாலும், பல சிலம்பவீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதாலும் சிலம்பத்தின் வளர்ச்சி தொய்வடைய வாய்ப்புகள் இருந்தன என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் அவற்றையும் கடந்து, நமது முன்னோர்கள் சிலம்பக்கலையை வளர்க்க அரும்பாடுபட்டனர் என்பது உண்மையே எனலாம்.

திருவிழாக்களில் சிலம்பத்திற்குத் தடைகள்

      திருவிழாக்களில் சிலம்பப் பயிற்சிகள் செய்வதும் போட்டிகள் நடைபெறுவதும் சாதாரண நிகழ்வுகளாக இருந்ததை ஆங்கிலேயரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, இதன்மூலம் ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் குந்தகம் வந்துவிடுமோ என்று பயந்தனர். இதனால் இவற்றுக்குத் தடைவிதிக்க முடிவு எடுத்தனர். இதனால் சிலம்பவீரர்கள் பவனிவரும் நாளான திருவிழா நாட்களில் சிலம்பப்பள்ளி உலாவருதல் தடை செய்யப்பட்டன.” என்றும் கூறுகின்றார்.  (டாக்டர் எ.எம் – கமால் எழுதிய மாவீரர் மருதுபாண்டியர், பக் – 186 – 187)

            எனவே, ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் நமது நாட்டிலிருந்து பல வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன என்ற உண்மையைப் போன்றே, பல ஆரோக்கியமான செயல்கள் நசுக்கப்பட்டன என்ற உண்மையும் நாம் அறியவேண்டிய செய்தியாகும். அதற்குச் சான்றாக இந்தச் சிலம்பாட்டக் கலை நசுக்கப்பட்டதைக் கூறலாம்.

வீரர்கள் கைது செய்யப்படுதல்

       ‘ஆங்கிலேயர் சில காலகட்டங்களில் நம் சிலம்பவீரர்களின் அசாத்தியமான திறமையைக் கண்டு வியந்து பாராட்டினாலும், இத்தகைய வீரர்களின் உருவாக்கத்தினால் தங்களது ஆட்சிக்கு இடையூறு வரும் எனக் கருதியதால், அக்காலத்தில் சிலம்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த வீரர்களை, ‘குற்றப் பரம்பரையினர்’ எனவும் ‘குற்றவாளி மரபினர்’ எனவும் பிரகடனப்படுத்தி, அவர்களைப் போலீசார் மூலமாகக் கண்காணித்தும் வந்தனர்,” என்று சிலம்ப ஆசான் அருணாசலம் கூறுகின்றார். (தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும், பக் – 67, 68)

      இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் சிலம்பவீரர்கள் பயிற்சி செய்வதற்கும், புதிய சிலம்பக் கூடங்கள் உருவாக்கத்திற்கும் பெறும் இடையூறாக இருந்தது என்று சொல்லலாம்.

அதனால் தானோ என்னவோ, இது போன்ற சம்பவங்களைக் கண்டு கொதிப்புற்ற பாரதியாரும் தமது மறவன் பாட்டில்’

மண்வெட்டிக் கூலிதிண்ண லாச்சேஎங்கள்

வாள்வலியும் தோள்வலியும் போச்சே!

.........................

போர்செய்த காலமெல்லாம் பண்டு

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்

                (மகாகவி பாரதியார் கவிதைகள், மறவன்பாட்டு, பக் – 209 – 210)

என்று வருந்திப் பாடினார். இதன்மூலம் அவரின் வேதனைக்குரல் சிலம்பக் கலைஞர்களின் நெஞ்சை உலுக்குவதாகிறது.

மறைமுகமாகப் பயிற்சி எடுத்தவீரர்கள்

                 ‘ஆங்கிலேய ஆட்சியில் நமது தமிழகத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகளில் ‘சிலம்பம் விளையாடக் கூடாது என்ற சட்டமும் ஒன்று’ என்கிறார் பழனியைச் சேர்ந்த சிலம்பஆசான் பெரியசாமி. (சிலம்பஆசான் பெரியசாமி, சாமி தியேட்டர் பின்புறம், பழநி. – நேர்காணலில் பெற்ற தகவல்)

       “ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தற்காப்புக் கலையைப் பயிற்சிசெய்யவோ, பிறருக்குக் கற்றுக்கொடுக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அன்றைய சிலம்பாட்ட ஆர்வலர்கள் காடுகளிலும் வயல்களிலும் கரும்புகளைக் கொண்டு பயிற்சி செய்தனர். இதன்மூலம் நமது முன்னோர்கள் சிலம்பப் பயிற்சியின் மீதுள்ள தொடர்பை விடாமல் பாதுகாத்துக் கொண்டனர். பயிற்சி செய்வதை ஆங்கிலேயர்கள் காணும்போது அவ்வீரர்கள் கரும்பை உண்பது போல நடித்தனர்”, என்ற சோகமான வரலாறும் உண்டு. (சிலம்ப அடிப்படைச் செய்திகள், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகம், சென்னை. பக் – 2)

அந்தப் பழக்கமே வழிவழியாக இன்றைக்கும் பல இடங்களில் இரவு நேரங்களில் சிலம்பாட்டம் பயிற்சி செய்யப்படுகிறது. பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்றும் இரவு நேரங்களில் மட்டுமே சிலம்பாட்டப் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது என்பதை உணரலாம்.

20 – ஆம் நூற்றாண்டில் சிலம்பம்

               16 ம் நூற்றாண்டுக்கு முன், மன்னர்களால் செண்டு வெளிகளிலும் சிலம்பக்கூடங்களிலும் வளர்க்கப்பட்ட சிலம்பம் 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் ஆசிரியர்களிடம் தனிப்பட்ட முறையில் பொருள் கொடுத்துப் பயிலவேண்டிய நிலைக்கு உள்ளானது. அபூர்வமான சில ரகசியங்களை அறிந்திருந்த ஆசான்கள் தமக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுத்து வந்தனர். அப்படியே கற்றுக் கொடுத்தாலும் உண்மைப்பொருள் உரைக்காமல் சீடர்களிடம் மறைத்து உரைத்ததால், ஆட்டங்களின் பெயர்களும் மறைந்தன. (தென்பாண்டித் தமிழரின் சிலம்ப அடிமுறைகளும் வரலாறும், பக் – 69)

               இவ்வாறு சிலம்பக்கலையை மறைத்துவைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. மாணவன் எப்பொழுதுமே தன்னை நாடியே இருக்கவேண்டும் என்ற பிற்போக்குத் தனமான சிந்தனையே, இதற்குக் காரணமாகும். இதைத் தவிர, மாணவர்கள் தன்னை மிஞ்சிவிடக் கூடாது என்ற பயஉணர்வும் இதற்குக்காரணமாகும் என்று கூறலாம். இவ்வாறு ஒவ்வொரு ஆசானும் மறைத்துவைத்த கலைகளின் எண்ணிக்கை கணக்கில. அக்கலைகள் யாவும் மண்ணோடு மண்ணாக மட்கிப் போயின என்பதே உண்மை  எனலாம்.

வரைமுறைப் படுத்தப்பட்ட சிலம்பம்

               திருநெல்வேலி மாவட்டம், இடையான்குடியில் உள்ள கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேனிலைப் பள்ளியின் துணைமுதல்வர் திரு எ.ஜி. ஜேசுதாஸின் வழிகாட்டுதலின் படி, திரு ஜெ.டேவிட் மேனுவல் ராஜ் மற்றும் ஜெ.செல்லையா மாணிக்க ராஜ் ஆகியோர் இணைந்து ஜூன் 1, 1943 –ல் சிலம்பப் போட்டிகளுக்கான விதிகளை முதன்முதலில் வடிவமைத்தனர். அன்றுமுதல் சிலம்பாட்டப் போட்டிகளுக்கென்று பல விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வரைமுறை செய்யப்பட்டன. இவ்வரைமுறைகளே எல்லாச் சிலம்பப் பயிற்சிப்பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன. (சிலம்பம் அடிப்படைச் செய்திகள், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகம், பக் – 8)

               இவ்வாறு வரைமுறைப் படுத்தப்பட்ட சிலம்பாட்ட விளையாட்டுக்கள் பல்கலைக்கழகங்களின் பட்டப் படிப்பாகவும் இன்று பயிற்றுவிக்கப்படுகின்றன. சில பல்கலைக் கழகங்களில் பட்டையச் சான்றிதழ் படிப்பாகவும், ஆராய்ச்சிப் படிப்பாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

தற்காலத்தில்…….நவீனப்படுத்தப்பட்ட சிலம்ப விளையாட்டு

               சிலம்பப் பயிற்சியானது காலம் செல்லச் செல்லப் பலவித மாற்றங்களைப் பெற்றது. காலடிப் பயிற்சிகளிலும் கம்பு சுழற்றுவதிலும் பலவித நூதனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தப்பட்டன. இக்கலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி பெற்றது, என்கிறார் சிலம்ப ஆசான் காத்தசாமி, (சிலம்ப ஆசான் காத்தசாமி, மானூர், பழநிவட்டம் – நேர்காணலில் கிடைத்த தகவல்)

               சிலம்ப விளையாட்டினால் ஏற்படும் நன்மைகளும் உடல்திறன்களும், இக்கலையின்பால் பலரையும் ஈர்த்தது.

உடலினை உறுதிசெய்

போர்த்தொழில் பழகு

ரெளத்திரம் பழகு

        (புதிய ஆத்திச்சூடி, மகாகவி பாரதி, வரிகள் – 6,74,96)

என்று புதிய ஆத்திச்சூடியில் மகாகவி பாரதியார் சொன்ன கருத்தினைப் போல் புதுமையை விரும்புவோரும், உடலினை உறுதி செய்ய விரும்புவோரும் இச்சிலம்பக் கலையினைப் பயில ஆசைகொண்டனர் என்று கூறினால் அது மிகையன்று.

சிலம்ப விளையாட்டின் விரிவாக்கம்

      நாளும் புதுப்புதுப் பொலிவு பலகலைகளில் சேர்வதைப் போலவே, சிலம்பத்திலும் புதுப்பொலிவு பெற்றது என்பது உண்மையே.

“தற்போது சிலம்பக் கலையானது

1.தற்காப்புக் கலையாகவும்

2.கேளிக்கைக் கலையாகவும்

3.போட்டிக் கலையாகவும்,

விரிந்து வளர்ந்துள்ளது போற்றப்பட்டது” என்கிறார் பேராசிரியர் ஜே.டேவிட் மேனியல் ராஜ். (பேரா.ஜே.டேவிட் மேனியல் ராஜ், சிலம்பம் அடிமுறையும் வரலாறும்,  பக் – 28)

எனவே,  தனது தேவைக்கேற்ப ஆரம்பத்தில் கேளிக்கைக்காவும், பின்பு தற்காப்பிற்காகவும், பின்பு ஆர்வத்தின் மிகுதியால் போட்டிக்காகவும் என்று, பலரும் பலவிதமாக இக்கலையைக் கற்க முனைகின்றனர் எனலாம்.

சிலம்பத்தை வளர்த்த திருவிழாக்கள்

      இந்துக்களின் பல கோவில் திருவிழாக்களிலும், கிறித்தவர்களின் சில பண்டிகைகளிலும், கல்யாணம் முதலிய வைபவங்களிலும், முகமதியார் சிறப்புப் பண்டிகைகளான முகரம், ரம்சான் போன்ற பண்டிகைகளிலும் மற்றும் சடங்கு, தேர்த் திருவிழாக்கள், இறப்பு ஊர்வலங்களிலும் சிலம்பப்போட்டிகள் நடத்துவதும் சிலம்பம் கற்ற இளங்காளையர்களை அரங்கேற்றம் செய்வதும் அலங்காரச் சிலம்பம் செய்துகாட்டிப் பார்வையாளர்களை மகிழ்விப்பதும் தமிழரின் மரபாகிவிட்டது என்கிறார் பேராசிரியர் ஜே.டேவிட் மேனியல் ராஜ், (பேரா,ஜே.டேவிட் மேனியல் ராஜ், சிலம்பம் அடிமுறைகளும்  வரலாறும், பக் – 73)

ஊர்களில் நடக்கும் திருவிழாக்களில் இத்தகைய வீரக்கலைகளைக் காணத்துடிக்கும் மக்கள் ஏராளம் என்பதும் இன்றளவும் நமது பண்பாட்டில் இக்கலைகள் வரவேற்கப்படுகின்றன என்பதும் உண்மையே என்பதற்குப் பல்வேறு  ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களே சாட்சிகள் எனலாம்.

திரைப்படங்களில் சிலம்பாட்டம்

            ஊடகங்கள் மக்களை எளிதில் சென்றடையும் ஓர் உன்னதக்கருவி என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, ஊடகத்தின் வாயிலாக ஒரு செய்தியை எளிதில் பரப்பிட இயலும். அவ்வகையில், திரைப்படங்கள் மூலமாக மக்களைச் சென்றடைந்த ஏராளமான கலைகளில் சிலம்பமும் ஒன்று என்றால் அது மிகையன்று. தமிழ்த் திரையுலகில் சிலம்பாட்டப் போட்டிகள் காட்சிகளாக இடம்பெற்ற ஒருசில திரைப்படப் பெயர்கள் வருமாறு…

  • அன்னமிட்ட கை
  • ஆசை
  • ரிக்‌ஷாக்காரன்
  • ராஜாத்தி
  • பட்டிக்காடா, பட்டணமா ?
  • விவசாயி
  • முகராசி
  • சந்திரோதயம்
  • பெரிய இட்த்துப்பெண்
  • தாய்க்குப்பின் தாரம்
  • மாட்டுக்கார வேலன்
  • கற்பகம்
  • தாயைக் காத்த தனையன்
  • சங்கிலித்தேவன்
  • பெரிய மருது
  • சாமி போட்ட முடிச்சு
  • ராக்காயி கோயில்
  • கரகாட்டக்காரன்
  • எங்க ஊருப் பாட்டுக்காரன்
  • எங்க ஊருக்காவல் காரன்
  • நாட்டாமை
  • அம்மையப்பா
  • திருமதி பழனிச்சாமி
  • தெற்குத்தெரு மச்சான்
  • முத்துக்காளை
  • வீரத்தாலாட்டு
  • பாஞ்சாலக்குறிச்சி
  • திருநெல்வேலி
  • ராமகிருஷ்ணா
  • விருமாண்டி
  • பட்டாஸ்

இன்னும் பல

சிலம்பாட்டக் கழகங்கள்

ஊக்கப்படுத்துதல் ஒரு கலையை உயர்வாக்கும் நற்பண்பு எனலாம். அவ்வகையில் சிலம்பாட்டக் கலையை ஊக்குவிக்கவும், கலையைப் பரப்பவும், கலையின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் பல்வேறு அமைப்புகள் முயற்சிஎடுக்க ஆரம்பித்தன. சிலம்பாட்டப் போட்டிகள் வைக்கப்பட்டு , விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளும் ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காகப் பல்வேறு சிலம்பாட்டக் கழகங்கள் தொடங்கப்பட்டுக் கலையைப் பரப்பி வருகின்றன. 

உதாரணமாக,  பழநிவட்டாரப் பகுதிகளில்

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் – பழநி கிளை

அமச்சூர் சிலம்பாட்டக் கழகம் – பழநி கிளை

பகத்சிங் சிலம்பம் மற்று களரிப் பள்ளி - மடத்துக்குளம்

சேவகன் சிலம்பாட்ட அறக்கட்டளை - பழநி

சோமசுந்தரம் சிலம்பாட்டப் பயிற்சிப் பள்ளி - பழநி

நெட்டையத்தேவர் சிலம்பக் கூடம் - மொல்லம்பட்டி

மாருதி சிலம்பாட்டப் பயிற்சிப் பள்ளி – கொழுமம்

உயிர்க்கலை சிலம்பம் மற்றும் களரிப் பயிற்சிப் பள்ளி – பழநி கிளை

போன்ற சிலம்பாட்டப் பயிற்சிப் பள்ளிகள் அரசாங்கத்தில் பதிவு செய்து கலையைக் கற்றுக் கொடுக்கின்றன. இவைதவிர, பல ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறைகளாக சிலம்பாட்டம் சொல்லிக் கொடுக்கும் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட சிலம்பாட்டப் பள்ளிகள் செயல்படுகின்றன.

கலைக்கு முன்னுரிமை

விளையாட்டுத் துறையில் சேர்த்தப்பட்ட பிறகு, இக்கலையிலும் சாதனை படைத்த வீரர்களுக்கு கல்வி, காவல்துறை, இராணுவம், மற்றும் பலதரப்பட்ட இட ஒதுக்கீடுகளில் முன்னுரிமை கிடைக்கின்றன.   இவ்வாறு இடஒதுக்கீடுகள் செய்வதன் மூலம் இந்தச் சிலம்பாட்டக் கலை இன்றைய அளவில் விரும்பப்படுகிறது.

      இவ்வாறு சிலம்பம் பல படிநிலைகளைக் கடந்து இன்றைய காலத்தில் கேளிக்கைச் சிலம்பமாகவும், தற்காப்புச் சிலம்பமாகவும், போட்டிமுறைச் சிலம்பமாகவும் வளர்ந்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பவனி வந்துகொண்டிருக்கிறது.

பார்வை நூல்கள்..

  • பேரா,ஜே.டேவிட் மேனியல் ராஜ், சிலம்பம் அடிமுறைகளும்  வரலாறும்
  • சிலம்பம் அடிப்படைச் செய்திகள், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகம்
  • தென்பாண்டித் தமிழரின் சிலம்ப அடிமுறைகளும் வரலாறும்
  • டாக்டர் எ.எம் – கமால் எழுதிய மாவீரர் மருதுபாண்டியர்
  • Madurai District Vol.  1178 (A)  1139, 1140
  • சாக்சர் அ.நா.பெருமாள், தமிழில் கதைப்பாடல்
  • ஐவர் ராசாக்கள் கதை, நா. வானமாமலை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்