ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வள்ளுவர் பார்வையில் ஊழ்வினையும் ஆள்வினையும் | Destiny and Effort in the view of Valluvar

சி.பாலாஜி, பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,  பாரதியார் பல்கலைக்கழகம், கோவை 16 Nov 2022 Read Full PDF

வள்ளுவர் பார்வையில் ஊழ்வினையும் ஆள்வினையும்.        

Destiny and Effort in the view of Valluvar.

கட்டுரையாளர்: சி.பாலாஜி,  பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,  பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046.              

நெறியாளர்:

முனைவர்.வே.நெடுஞ்செழியன், இணைப்பேராசிரியர் & முதல்வர்,

அரசு கலை&அறிவியல் கல்லூரி, ஜம்புகுளம், சோளிங்கர், இராணிப்பேட்டை மாவட்டம் - 631102.

ஆய்வுச் சுருக்கம் :

       மனிதவாழ்வின் செம்மைக்கு வழிகூற வந்த அறநூல்கள் பலவும் ஊழ்வினைக் கோட்பாட்டினை வலியுறுத்திப் பாடியுள்ளன. அறநூல்களில் தலைநூலாகக் கருதப்பெறும் திருக்குறளும், ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தில் ஊழின் செய்கைகளையும், ஊழின் வலிமையையும் எடுத்துரைத்துள்ளது. எனினும் இடைவிடாத தொடர் முயற்சியால் வலிய ஊழையும் வெற்றி காணலாம் என்பதை ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தில் அந்நூல் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. ஊழிற்கு எதிரான மனித முயற்சியின் ஆற்றலை ‘வள்ளுவம்’  வழிநின்று வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச்சொற்கள்:

     திருவள்ளுவர், திருக்குறள், ஊழ், முயற்சி, வெற்றி.

Abstract:

     Many of the Moral books which have guided the perfection of human life have emphasized the theory of destiny. Thirukkural, the prime book of Moral books, highlighted the functions of destiny and the power of destiny in the section entitled ‘Uuzh’. However the book has clearly highlighted in the section titled ‘Aalvinayudaimai’ that even a strong destiny can be won through continuous efforts. The purpose of this essay is to express the power of human endeavor against destiny through ‘Valluvam’

Key words:

     Thiruvalluvar, Thirukkural, Destiny, Effort, Victory.

முன்னுரை:

      மனிதவாழ்வின் வளத்திற்கான அடிப்படைத் தேவையாகக் கருதப்பெறும் செல்வமும், அதனைத் துய்க்கும் உரிமையும் ‘ஊழின் அடிப்படையியே ஒருவனுக்குக் கிடைக்கும்’ என்ற ‘ஊழைப்’பற்றிய சற்றே மிகையானதொரு கருத்தினைத் திருக்குறள் வெளிப்படுத்தியுள்ள போதிலும், அந்நூலின் பிற்பகுதியில், ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தில் ‘விடாமுயற்சியால் ஊழையும் வெல்லலாம்’ என்பதை எடுத்துக்கூறி, ஊழிற்கு எதிரான நிலையில், மனித முயற்சியின் வலிமையை முன்னிறுத்தவும் அந்நூல் தயங்கவில்லை. திருவள்ளுவர் இயற்றியளித்த திருக்குறளில் இடம்பெற்றுள்ள ‘ஊழ்வினை’ மற்றும் ‘ஆள்வினைக்’ கோட்பாடுகளை ஆய்ந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஊழ்வினைக் கோட்பாடு:

      ‘மனிதர்கள் முற்பிறப்பில் செய்த நற்செயல்கள் நல்லூழாகவும், தீச்செயல்கள் தீயூழாகவும் அமைந்து, தற்போதைய பிறப்பில், அவர்களுடைய வாழ்க்கையில் அதற்கேற்ப பயன்களைத்தரும்’ என்பதே தமிழ் நூல்களில் காணப்பெறும் ‘ஊழ்வினைக் கோட்பாடு’ பற்றிய பொதுவான கருத்து ஆகும். தமிழ் இலக்கியங்களில், பால், தெய்வம், பொறி, ஊழ், ஊழ்வினை,  வினை, பழவினை, விதி, முறை, நியதி எனப் பல்வேறு சொற்களில் ‘ஊழ்’ குறிப்பிடப் பெற்றுள்ளது.

      தமிழ்ச் சமூகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே ‘ஊழ்’ பற்றிய சிந்தனைகள் இருந்து வந்ததைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள,

                  ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்  (களவியல், நூ:2)

என்னும் நூற்பா வெளிப்படுத்துகின்றது. சங்கத்தொகை நூல்களில் ‘ஊழ்’ பற்றிய குறிப்புகள் பரவலாக இடம்பெற்றுள்ளன. சான்றாக,

                  நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

                  செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே  (நற்றிணை 210:5-6)

                  நல்ஆற்றின் உயிர்காத்து நடுக்குஅற, தான்செய்த

                  தொல்வினைப் பயன்துய்ப்ப        (கலித்தொகை118:3)

என்னும் செய்யுளடிகளைச் சுட்டலாம். சங்ககாலத்திற்குப் பின்னெழுந்த சிலப்பதிகாரக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள,

                  ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

                  சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்    (பதிகம்:57-58)

என்னும் அடிகளில், ‘ஊழ்வினை’ முதன்மைக் காரணியாக முன்னிறுத்தப் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. அக்காப்பியத்தில் நிகழ்ந்திடும் பல கதைத் திருப்பங்களுக்கு ‘ஊழே’ முதன்மைக் காரணமாக உரைக்கப்பட்டுள்ளது. என்றாலும் பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில்தான் மனித வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் தீர்மானிக்கின்ற ஆற்றல்மிகு சக்தியாக ‘ஊழ்’ சித்தரிக்கப்பட்டு, ஊழ்வினைக் கோட்பாடும் கட்டமைக்கப் பெற்றுள்ளது. பிற்கால அறநூல்கள் சிலவற்றிலும் ஊழ்வினை குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

      கண்களால் காணவியலாத, நம்பிக்கையின் அடிப்படையிலான இறையியல் கோட்பாட்டைப் போலவே  ஊழ்வினைக் கோட்பாடும்  மக்களால் நம்பிக்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப் படுவதாகும். சமுதாயத்தில் அல்லவை நீக்கி, நல்லவை பெருக்கும் எண்ணத்துடன், மக்களை  நன்னெறியில் ஆற்றுப்படுத்தும் நோக்கில், அறக்கோட்பாட்டைப் போலவே ஊழ்க்கோட்பாடும் அறஇலக்கியங்களில் எடுத்துரைக்கப்பட்டு வலியுறுத்தப்படுகின்றது.

      ஊழ்வினைக் கோட்பாடு என்றழைக்கப்பெறும் விதிக்கோட்பாட்டினை முன்னெடுத்துப் பரப்பியவர்கள் சமணர்கள் என்பதை ‘சமூகவியல் நோக்கில் அறஇலக்கியக் களஞ்சியம்’ என்னும் நூலில், பேரா.முனைவர்.க.ப.அறவாணன் என்பவர்,

‘அகிம்சையை முதன்மையாகப் போற்றிய சமணத்தார் தமிழருக்கு அளித்த வேண்டாக் கொள்கை விதிபற்றிய அதீத நம்பிக்கையாகும். விதி, வினை, கர்மம், தலையெழுத்து ஆகியன ஏறத்தாழ ஒரு பொருளில் பயன்பட்ட சொற்களாகும். அவன் அவன் வாழ்வில் அமைந்த இன்பமும் துன்பமும் அவனவன் முற்பிறப்பு வினைக்குத்தக அமையூம் என்பதே கர்மக்கொள்கையின் சாராம்சம் ஆகும். சைன தத்துவத்தின் அடிப்படை அச்சு இவ்வினைக் கொள்கை எனலாம்’

என்று குறிப்பிட்டிருப்பதின்மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. சமண சமயத்தினர், ‘ஊழ்’எனப்பெறும் விதிக்கோட்பாட்டினை முன்வைத்து மக்கள் சமுதாயத்தை ஒழுங்குபடுத்த நினைத்ததைப் போலவே, பௌத்த சமயத்தினர் ‘அறக்’ கோட்பாட்டினை முன்வைத்து மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்த முயன்றுள்ளனர். இதனை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைக் காப்பியங்களின்வழி நன்கு உணரமுடிகின்றது.

திருக்குறளில் ஊழ்வினை:

      திருக்குறளில் ஊழ்வினை பற்றிய சிந்தனைகள் ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தில் பத்துக் குறள்களில் இடம்பெற்றுள்ளன. மனிதவாழ்வின் சிறப்புக்கும், மேன்மைக்கும் அடிப்படையாக விளங்குகின்ற பொருளின் சேர்க்கையயும், அதனைத் துய்ப்பதும், மாந்தர்களுக்கு ஊழ்வினையின் அடிப்படையிலேயே வாய்க்குமென்னும் கருத்தினைத் திருக்குறள் உறுதிபட உரைத்துள்ளது.                                                                                                                                                                              அதனடிப்படையில், செல்வம் சேர்க்க முயற்சிக்கும் ஒருவனுக்கு,

1) ஆகூழ் - விடாமுயற்சியை உண்டாக்கும்,

  போகூழ் - சோம்பலை உண்டாக்கும்   (குறள்:371)

2) இழவூழ் - பேதைப்படுக்கும்,

  ஆகலூழ் - அறிவகற்றும்   (குறள்: 372)

3) நுண்ணிய நூல்பல கற்றிருந்தாலும்

  ஊழால் பேதைமை உணர்வே மேம்படும்   (குறள்:373)

என்பதை முதல் மூன்று குறள்களில் திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ‘ஊழின் துணையால் மட்டுமே ஒருவன் செல்வம் சேர்க்க இயலும்’ என்னும் கருத்தை ஆகூழ், ஆகலூழ் என்னும் சொற்களால் அவர் நன்கு உணர்த்தியுள்ளார்.

      இவ்வுலகில் செல்வம் பெற்றவர் அனைவரும் அறிவு பெற்றவர்களாகவும், அறிவு பெற்றவர் அனைவரும் செல்வம் பெற்றவர்களாகவும் இருப்பதில்லை. உலகியல் முறைப்படி அறிவும், செல்வமும் ஒன்று சேர்ந்து இருப்பதென்பது அரிதினும் அரிதான ஒன்றாகும். திருவள்ளுவர் செல்வம் தரத்தக்க ஊழ் அறிவைத் தராது என்பதையும், அறிவைத் தரத்தக்க ஊழ் செல்வத்தைத் தாராது என்பதையும்,

                  இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

                  தெள்ளிய ராதலும் வேறு.   (குறள்:374)

என்னும் குறளில் தெளிவாக எடுத்துரைத்து, உலகில் செல்வம் பெறுதலும், அறிவு பெறுதலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேறுவேறான செயல்கள் என்பதை நன்கு உணர்த்தியுள்ளார். செல்வம் சேர்ப்பதற்கு அறிவின்துணை கட்டாயமில்லை என்பதற்கு வாழும் மனிதர்களில் பலரையும் சான்றுகூற இயலும்.

      ஒருவன் செல்வம் செய்யும் நோக்கில் ஒரு தொழிலைத் தகுந்த காலமும், இடமும், கருவிகளையும் கொண்டு செய்ய முனையும்போது, அவையாவும் திட்டமிட்டு நன்முறையில் நடந்துவரும் நிலையில் அவனால் எளிதாகச் செல்வம் சேர்க்க இயலும். மாறாக மேற்சொன்னவற்றில் ஏதேனும் குறைபாடுகளோ, தவறுகளோ ஏற்படுமாயின் அவனது தொழிலில் பின்னடைவு  ஏற்பட்டு, அதனால் அவன் செல்வம் சேர்ப்பதிலும் பின்னடைவு  நேரிடும். இது எத்தொழிலுக்கும் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். ஆனால் திருவள்ளுவரின் ஊழ்க் கோட்பாட்டின்படி, செல்வம் சேர்த்தலில் மேற்சொன்னவற்றைவிட ‘ஊழ்’ முதன்மைப் பங்கு வகிக்கின்றது. செல்வம் சேர்க்க முயலும் ஒருவனுக்கு நல்லூழின் துணையிருந்தால் மேற்சொன்ன காலம் முதலான அத்தனை துணைக்காரணிகளும் நன்முறையில் அமைந்து அவனுக்குச் செல்வத்தைச் சேர்த்தளிக்கும். மாறாக அவன் தீயூழின் பிடியில் இருந்தால் மேற்சொன்ன அத்தனை துணைக்காரணிகளும் தீயனவாகி அவன் செல்வம் சேர்ப்பதில் இடர்ப்பாடு நேரிடும் என்னும் கருத்தினை,

                  நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

                  நல்லவாம் செல்வம் செயற்கு.    (குறள்: 375)

என்னும் திருக்குறளில் திருவள்ளுவர் முன்வைக்கின்றார்.  செல்வம் சேர்ப்பதில் காலம் முதலான துணைக்காரணிகளைவிட ஊழே முதற்காரணியாக விளங்குவதாக அவர் இக்குறளில் தெளிவு படக் கூறியுள்ளார்.

செல்வம் சேர்த்தலில் ஊழ் பெரும்பங்கு வகிப்பதைப்போலவே  சேர்த்த செல்வத்தினை வைத்துப் பாதுகாப்பதிலும், அதனைத் துய்த்து இன்பம் பெறுவதிலும் மனிதர்களுக்கு ஊழின் துணை இன்றியமையாதது என்னும் கருத்தினை,

                  பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

                  சொரியினும் போகா தம.    (குறள்: 376)

                  வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

                  தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.     (குறள்: 377)

என்னும் இரு குறள்களில் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். முயற்சியின் துணையால் பெரும் பொருளைச் சேர்த்த பலர் அப்பொருளைக் கொண்டு, நினைத்தபடி ஆடை, அணிகலன்கள் வாங்கியணிந்து அழகு பார்த்திடவோ, அல்லது பிடித்த உணவு  வகைகளை வாங்கி வந்து உண்டு மகிழவோ இயலாத நிலையில், நோய்வாய்ப்பட்டோ அல்லது குழந்தையின்மை முதலான மனக்கவலைகளுக்கு ஆளாகியோ வருந்திக் கிடக்கின்றனர். அத்தகையோரின் செல்வம் துய்க்க இயலாத நிலைக்கு ஊழைக் காரணம் காட்டுகின்றார் வள்ளுவர். மக்களில் சிலர் நல்லூழின் துணையால் பெரும் பொருளைச் சேர்ததிருந்தாலும், அவற்றைத் துய்ப்பதில் ஊழின் துணையின்மையாலேயே அவர்கள் இத்தகைய இடர்ப்பாடுகளுக்கு ஆளாகிக் கைப்பொருளையும் துய்த்து இன்பம் பெறவியலாத நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

      செல்வம் சேர்க்க இயலாத சிலர் வறுமையால் துன்பப்பட்டு இல்லற வாழ்வை வெறுத்து, துறவு மேற்கொள்ளவூம் முயல்வதுண்டு. துறவியாக நினைத்த சிலருக்கு மனைவி மற்றும் குழந்தைகள்மேல் கொண்ட அன்பின் மிகுதியாலோ அல்லது வேறுபல காரணங்களாலோ அம்முயற்சி கைகூடாமற் போவதுண்டு. ஆனால் அவர்கள் துறவறமெய்த இயலாமைக்கு வள்ளுவர் ஊழைக் காரணமாக்குகின்றார். துறவியாவதற்குரிய ஊழ் இல்லாததனாலேயே அவர்கள் குடும்பம், மனைவி, மக்களின்மீது பற்றுக்கொண்டு அவற்றால் வரும் துன்பங்களைத் துய்த்துக் கொண்டுள்ளனர் என்னும் கருத்தினை,

                  துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

                  ஊட்டா கழியும் எனின்.     (குறள்: 378)

என்னும் குறளில் திருவள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ‘மனித வாழ்வில் பிறருக்கு நன்மை செய்தவர்கள் நன்மை அடைதலும், தீமை செய்தவர்கள் தீமையடைவதும் இயல்பானதேயாகும். ஊழின்துணையாலேயே நன்மை தீமைகள் விளைகின்றன. அப்படியிருக்க, நன்மை விளையும்போது அதனை நீட்டிக்க நினைப்பவர்கள், தீமை விளையும்போது அதனை மட்டும் நீக்க முயல்வதேன்?’ என்னும் வினாவினையும் அவர் அடுத்த குறளில் (குறள்:379) எழுப்பியுள்ளார்.

      மனித வாழ்வின் இயக்கத்தில், குறிப்பாகச் செல்வம் சேர்க்கும் முயற்சியிலும், அதனைப் பாதுகாத்து நுகர்ந்து இன்பமடைவதிலும் ஊழின் பங்கு மகத்தானது என்னும் கருத்தை எடுத்துரைத்த  வள்ளுவர், ஊழைவிட வலிமையான ஒன்று எதுவுமில்லை யென்பதால் அதனைக் கடந்து செல்ல முயல்வது இயலாத ஒன்றாகும் என்பதையும், அதனைக் கடந்துசெல்ல முயன்று வேறொரு வழியை ஆய்ந்தாலும், அப்போதும் ஊழே அங்கு எதிர்ப்பட்டு நிற்கும் என்பதையும்,   

                  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

                  சூழினும் தான்முந் துறும்    (குறள் - 380)

என்னும் குறளில் வெளிப்படுத்தியுள்ளார். மேற்சொன்ன குறள்களின்வழியே ஊழ்க் கோட்பாட்டின் பரிமாணத்தையும், வலிமையையும் தெளிவுபடப்  மொழிந்துள்ள திருவள்ளுவர், அத்தகைய வலிமையான ஊழினையும் ‘விடாமுயற்சியின் துணைக்கொண்டு புறங்காணச் செய்யலாம்’ என்பதை ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தில் எடுத்துரைத்துள்ளார்.

திருக்குறளில் ஆள்வினை:

திருவள்ளுவரின் ஆள்வினை குறித்த சிந்தனைகள் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. ஆள்வினை என்பது விடாமுயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். இஃது ஆளும் வினையெனச் செய்யும் செயலைக் குறிக்கின்றது. முயற்சி செய்தல், அதன்மூலம் சூழலை வென்று வாழ்தல் என்பது மனிதகுலத்திற்கேயுரிய மகத்தான பண்பாகும். இடைவிடா முயற்சியால் அரிய செயல்களும் எளியவாக முடிவடைந்து நன்மை பயக்கும். ஒருவனின் செல்வநிலைக்கும், வறுமைநிலைக்கும் அடிப்படையாக இருப்பது அவனது முயற்சியே எனபதை,

                  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

                  இன்மை புகுத்தி விடும்    (குறள்:616)

என்னும் குறளில் எடுத்துரைக்கும் வள்ளுவர், விடமுயற்சியே மனிதர்கட்குச் செல்வத்தை ஆக்கித் தந்து வாழ்வில் வளமைகூட்ட வல்லது என்பதையும், முயற்சியின்மையோ இருக்கும் செல்வத்தையும் தேய்த்து வறுமையைத் தரக் கூடியது என்பதையும் மேற்கண்ட குறளில் உறுதிப்படுத்தியுள்ளார்.

      மாந்தர்களின் செல்வம் தேடும் முயற்சிக்குத் தடையாக இருப்பனவற்றுள் முதன்மையானது  சோம்பலாகும். சோம்பல், மடி என்றும் அழைக்கப்பெறும். செல்வத்தின் குறியீடாகக் காட்டப்பெறும் திருமகளைப் போலவே சோம்பலுக்குக் குறியீடாக முகடி(மூதேவி)யைச் சுட்டிக்காட்டுவது தொன்மக் கதைகள் சார்ந்த நடைமுறை வழக்கம். இதனை அடிப்படையாகக் கொண்டே, செல்வம் தேடுபவனின் முயற்சியில், தாமரையில் வாசம் செய்யூம் திருமகள் இருப்பதாகவும், செல்வம்தேடும் முயற்சியில்லாமல் சோம்பியிருப்பவனின் சோம்பலில், மாமுகடி எனப்பெறும் மூதேவி இருப்பதாகவும்

                  மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்

                  தாளுளாள் தாமரையி னாள்.       (குறள்: 617)

என்னும் குறளில் வள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். செல்வம் சேர்க்கும் முயற்சிக்குத் தடையாக இருப்பவை உடல் தளர்ச்சி, உள்ளச்சோர்வு இவற்றால் ஏற்படும் சோம்பலாகும். மூதேவி, சோம்பிக்கிடப்பவனின் மடியில் அமர்ந்துகொண்டு அவனைச் செல்வம் தேடுகின்ற முயற்சியில் ஈடுபடாமல் செய்வதாகவும், திருமகள், முயற்சிசெய்பவனின் காலடிகளுக்கு முன்சென்று, செல்வம் இருக்கும் வழியைக் காட்டுவதாகவும், இக்குறளுக்குப் பொருள் காண்பது மிகப் பொருத்தமாக இருக்கும்.

மனிதர்களில் சிலர் விதியைக் காரணம் காட்டி முயற்சி செய்யாமல் இருப்பதுண்டு.  மாந்தர்களுக்கு விதி எனப்பெறும் ஊழ் அமையப்பெறாமை பிறரால் பழிக்கத்தக்கதன்று. ஆனால் ஊழ் அமையப்பெறவில்லை என்பதைக்காரணம் காட்டி முயற்சி செய்யாமல் இருப்பதே பழிப்பதற்கு உரியது என்பதை,

                 

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

                  ஆள்வினை இன்மை பழி.     (குறள்: 618)

என்ற குறளில் திருவள்ளுவர் எடுத்தியம்பியுள்ளார். ‘உலகோர் விதி அமையாமையைப் பழிக்காமல் முயற்சி செய்யாமையையே பழிப்பார்களாதலால் ஊழின் துணையில்லையெனினும் ஒருவன் முயற்சியைக் கைவிடக்கூடாது’ என்பதை  அவர்  தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.

      விடாமுயற்சி என்பது உடலுழைப்பினை அடிப்படையாகக் கொண்டது. எனவே பொறியின்மை என்னும் சொல் உடல்உறுப்புக் குறைபாட்டைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஏனெனில், மாந்தர்களின் இடைவிடாத முயற்சிக்குத் தடையாக இருப்பதில், உடல் உறுப்புக் குறைபாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. என்றாலும் பொறியின்மை என்னும் சொல்லுக்கு ஊழ் அமையப்பெறாமை என்று பொருள் கொள்வதே இக்கட்டுரைக்குச் சிறப்பு சேரப்பதாக அமையும்.

மனிதர்கள் தாங்கள்செய்யும் அனைத்து செயல்களுக்கும் தெய்வத்தின்துணை இருக்கவேண்டும் என நினைப்பர். தெய்வத்தின் துணையிருப்பின் தாங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். தெய்வம் என்னும் சொல் ஊழைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. ஒருவன் செய்யும் செயலுக்கு, ஊழின் துணையில்லாமற் போனாலும் அச்செயலில் அவன் மேற்கொண்ட முயற்சிக்கேற்ப பயன் கிடைக்கும் என்பதை வள்ளுவர்,

                  தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

                  மெய்வருத்தக் கூலி தரும்.   (குறள்: 618)

என்னும் குறளில் எடுத்துரைத்துள்ளார். ஒருவனின் செயலுக்கு ஊழின்துணை இல்லையெனினும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து அதனைச் செய்துவரும்போது, அவன் மிகுதியான முயற்சிசெய்தால் மிகுதியான பயனும், குறைந்த முயற்சி செய்தால் குறைந்த பயனும் அச்செயலின் முடிவில் அவனுக்குக் கிடைக்குமென்பதை இக்குறளில் உறுதிபடத்  தெரிவித்து, ஊழிற்கு எதிரான முயற்சியின் ஆற்றலை அவர்  நன்கு உணர்த்தியுள்ளார்.

      உலகாரின் பழிச்சொல்லிலிருந்து தப்பிக்கவாவது முயற்சிக்க வேண்டும் என்றும், அப்படி முயற்சித்தால் முயற்சியின் அளவிற்கேற்ப பயன்கிட்டும் என்றும் முந்தைய குறள்களில் எடுத்துரைத்த வள்ளுவர், ஓரிருமுறை மட்டுமல்லாமல் இடைவிடாமல் பலகாலும் முயற்சித்தால், பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்கண்டு வெற்றி காணலாம் என்னும் கருத்தினை,

                  ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

                  தாழாது உஞற்று பவர்        (குறள்: 620)

என்னும் குறளில் தெளிவுபட மொழிந்துள்ளார். முயற்சி, சோர்வு,  அறிவுடைமை, பேதைமை, பொருள் தேடல், பெருளைப் பாதுகாத்தல், தேடிச் சேர்த்த பொருளைத் துய்த்தல் ஆகிய அனைத்து நிலைகளிலும் மனித வாழ்வில், ஊழ் பிணைந்து நின்று ஆட்சிசெய்வதால் ஊழ் மிக வலிமையானது என்னும் கருத்தை முன்வைத்து, ‘ஊறிழ் பெருவளி யாவுள?’ என்று வினவியிருந்த வள்ளுவர், அத்தகைய வலிமைபெற்ற ஊழினையும், கிடைக்கவேண்டிய பயனை விலக்குகின்ற வல்லமைகொண்ட ஊழினையும் இடைவிடாத தொடர்முயற்சிகளால் தோல்வியுறச் செய்யலாம் என்பதை மேற்கண்ட குறளில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நிறைவுரை:

அறம்சார் இன்பவாழ்விற்கு அடிப்படையாக விளங்கும் பொருளையும், புகழையும் தரவல்ல அரிய செயல்களைச் செய்துமுடிக்க, விடாது முயற்சிப்பதே மானுட இனத்தின் முதன்மைக் கடமையாகும். வள்ளுவரின் கருத்துப்படி, மனிதவாழ்வின் அனைத்து நிகழ்வு களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு, ஊழ் மிகவும் வலியது எனறாலும், அத்தகைய வலியதான ஊழையும் இடைவிடாத முயற்சியால் புறங்காணச் செய்யலாம் என்பதை  ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் மிகத்தெளிவாக நிறுவியுள்ளார்.

பார்வை நூல்கள்:

1. அறவாணன் க.ப. சமூகவியல் பார்வையில் அறஇலக்கியக் களஞ்சியம், தமிழ்க் கோட்டம். சென்னை -600029, முதற்பதிப்பு-2008.

2. நாராயணசாமி அ. நற்றிணை மூலமும் உரையும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்,  திருநெல்வேலி. முதற்பதிப்பு - 1952.  

3. பரிமேலழகர், திருக்குறள் மூலமும் உரையும், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 49 முதற்பதிப்பு: 2015.

4. புலியூர்க் கேசிகன். கலித்தொகை, சாரதா பதிப்பகம், சென்னை -600014, பத்தாம் பதிப்பு -2016.

5. புலியூர்க் கேசிகன். சிலப்பதிகாரம், பாரி நிலையம், சென்னை - 600001. பன்னிரண்டாம் பதிப்பு -1982

6. புலியூர்க் கேசிகன். தொல்காப்பியம், பாரி நிலையம், சென்னை - 600001. ஏழாம் பதிப்பு -1982