ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க இலக்கியம் மற்றும் விவிலியத்தில் போரியல்-ஓர் ஒப்பீடு | Militarism Comparison with Sangam Literature and the Bible

மு.சக்கரவர்த்தி, முனைவர் பட்ட ஆய்வளார், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை 16 Nov 2022 Read Full PDF

சங்க இலக்கியம் மற்றும் விவிலியத்தில் போரியல்-ஓர் ஒப்பீடு

(Militarism Comparison with Sangam Literature and the Bible)

கட்டுரையாளர்:மு.சக்கரவர்த்தி, முனைவர் பட்ட ஆய்வளார், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை-625001

நெறியாளர்; முனைவர்.பூ.பூங்கோதை, உதவிப்பேராசிரியர், (தமிழ்த்துறை), செந்தமிழ்க் கல்லூரி, மதுரை-625001

ஆய்வுச்சுருக்கம்

உலகம் உண்டான காலம் முதல் உயிர்கள் அனைத்திடமும் போரும் போரியல் உணர்வுகளும் மறையாது நிற்கும் தன்மையின. அமைதி வழியாக பெறுமவற்றை பெற முயற்சிக்கும் நிலை ஒருபுறம் நிற்க, போரின் வழி நாடிப் பெறுவதும் இயற்கையாகிவிட்டது.

இயங்கும் உயிரினங்களிடையே தடையின்றி இருந்துவரும் வாழ்க்கைப் போராட்டங்கள் அவற்றினைடேயே உள்ள அடிப்படை உணர்வான போர்ப்பண்பின் விளைவுகளாகும். கற்காலம் முதல் தற்காலம் வரை நாடுகளுக்கிடையிலான போர்கள், மக்களுக்கிடையிலான பூசல்கள் எத்தனையோ நடந்துள்ளன. மனித இனத்தினிடையே போர் உணர்வு மேலோங்கி நிற்பதை வரலாற்று நிகழ்வுகள் பறைசாற்றிய வண்ணம் உள்ளன.  “போர்க்குணம் என்பது மனித மனத்தின் பண்புகளுள் ஒன்று. வலிமைக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப இந்தப் பண்பு பல்வேறு வடிவில் வெளிப்படுகிறது” என்ற கூற்று இதற்குச் சான்றாக அமைகிறது.

வரலாற்றில் சிறப்புற்று விளங்குவர்களது பேரும், புகழும், உடல் வலிமை, பொருள்வளம் ஆகியவற்றால் வந்துவிடாது. மனத்திட்பம், மதிநுட்பம், நிர்வாகத்திறன், நற்பண்பு மற்றும் இடனறிந்து செயல்படல் ஆகியவற்றால் வருவதாகும். தமிழர்களின் போரியலில் மேற்கூறிய நற்பண்புகள் நிரம்பக் காணப்படுகின்றன. வாழ்வியலுக்கான போராட்டமாக இருந்து வரும் இப்போரியல் பற்றி சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அவற்றின்வழி தமிழர்களின் போரியலைப்பற்றித் தெளிவாக நாம் அறியலாம். கிருத்துவர்களின் வேத நூலான விவிலியமானது, யூதர்கள், எகிப்தியர்கள், சீரியர்கள், பாபிலோனியர்கள் எனப் பல இனத்தவர்களின் போரியலை விளக்கும் நூலாக உள்ளது. இவற்றுள் யூதர்களின் போரியலை, தமிழர்களின் போரியலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract

Ever since the creation of the world, war and Militarism feeling have been incessant in all living beings. It has become natural to seek the means of war, let alone the pursuit of peace.

        The continuous struggle for life among living creatures is the result of their inherent instinctive instinct of war. From the Stone Age to modern times, there have been many wars between nations and conflicts between people. Historical events bear witness to the predominance of the war spirit among mankind. “Militarism is one of the characteristics of the human mind. This characteristic is manifested in various forms according to strength and opportunity” is proof of this.
        The names, fame, physical strength and material wealth of those who excel in history do not come. It comes from prudence, tact, management and altruism. The above mentioned virtues are found in the Militarism of Tamils. Sangam literature proclaims about Militarism which has been a struggle for survival. Through them we can clearly know about the Militarism of Tamils. The Bible, the Christian scriptures, which explains the Militarism of many nations, including the Jews, Egyptians, Syrians, and Babylonians. The purpose of this article is to compare the Militarism of the Jews with Tamils.

 

திறவுச்சொற்கள்

சங்க இலக்கியங்கள், தமிழர்கள், யூதர்கள், இஸ்ரவேல், போர்ப்படைகள், போர்க்கருவிகள், போர் வீரர்கள், போர் பண்புகள்.

Key words
Sangam Literatures, Tamils, Jews, Israel, Armies, Weapons of War, Warriors, Combat characteristics.

 

முன்னுரை

       ஒரு நாட்டின் உறுதியும், புகழும் அந்நாட்டின் போர்ப்படைகளைச் சார்ந்தே அமையும். சங்க காலத்தில் மன்னர்கள் படைவைத்துப் போர்செய்தனர். தமிழர்தம் வீரத்தை சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுவதைப்போல, விவிலியம், யூதர்களின் வீரத்தை எடுத்துக்காட்டும் கருவூலமாக உள்ளது. சங்க கால இலக்கியங்களில் காணப்படும் தமிழர்களின் போர்ப் பருவங்கள், போர் மாண்புகள், போர்ப்படைகள், போர்க்கருவிகள் ஆகியவற்றை யூதர்களின் வாழ்வோடு ஒப்பீடு செய்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். விவிலியத்தில் பல இனமக்களின் வாழ்க்கை முறைகள் காணப்பட்டாலும், யூதர்களின் வாழ்வியல் மட்டுமே இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளது.

போர்க்காரணங்கள்

      பொதுவாக நாடு பிடிக்கும் வேட்கையே போருக்கு முக்கிய காரணமாகும். தனது எல்லையை விரிவாக்க நினைக்கும் மன்னர்கள், தனது படைபலத்தை வெளிப்படுத்தி எதிரியின் படையை வீழ்த்தி அவர்களது நாட்டை வசமாக்குவர். இது தவிர, பெண்ணுக்காகவும், தனமானத்திற்காகவும், அரசுரிமைக்காகவும், பொருளாசைக்காகவும், புகழுக்காகவும், தற்காப்புக்காவும், தலைமையுணர்வுக்காகவும் போர்கள் நடைபெற்றுள்ளன.

எல்லைக்காக்கப் போர்

      பாண்டிய மன்னனான கானப்பேரெயில் கடந்த உக்கிரபெருவழுதி, குறுநில மன்னனான வேங்கை மார்பனது அரணைக் கைப்பற்றுகிறான். இதனைப்பாடிய ஐயூர் மூலங்கிழார்,

கருங்கைக் கொல்லன் சேந்தீ மாட்டிய

இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன

வேங்கை மார்பின் இரங்க வைகலும்

ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே

 வேங்கை மார்பன் என்னும் அரசன் ஆண்ட கானப்பேர் என்ற ஊரின் அரிய அரண்களை எல்லாம் அழித்து, பாண்டிய மன்னன் உக்கிரபெருவெழுதி வென்றான். அவனது எல்லையை தன்வசமாக்கினான். வேங்கை மார்பனின் எல்லையாகிய கானப்பேரைக் கடந்ததால் கானப்பேரெயில் கடந்த உக்கிர பெருவழுதி என்று பேர்பெற்றான். மேற்கண்ட புறநானூற்றுப்பாடலில் சொல்லப்படும் போர், எல்லைக்காக்க நடந்தது என்பது புலப்படுகிறது.

விவிலியத்திலும் எல்லைக்காகப் போர் நடந்த குறிப்பு காணப்படுகிறது.

இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்

காரரை நோக்கி; கீலேயாத்திலுள்ள

ராமோத் நம்முடையதென்று அறியீர்

களா? நாம் அதைச் சீரியா ராஜாவின்

கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல்

சும்மாயிருப்பானேன் என்று சொல்லி

மேற்கூறிய வசனத்தின்மூலம் இஸ்ரவேலை ஆண்ட ராஜா தன் நாட்டின் எல்லையான ராமோத், சீரிய மன்னன் வசம் இருப்பதை அறிவித்து, அதனை மீட்க வேண்டும் என்று கூறுவதைப் பார்க்க முடிகிறது.

போர்ப்பருவங்கள்

      கூதிர், வேனில் என்றிரு பாசறை

     காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும் (தொல்காப்பிய நூற்பா 1022)

என்ற தொல்காப்பிய நூற்பாவின் படி ஆண்டுக்கு இரு முறை வேந்தர்கள் பாசறை அமைந்துப் போர் புரிந்து வந்துள்ளனர். போரின் காரணமாக வறுமை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உழவு முடிந்து அறுவடை நிறைவுக்குப்பின் போர் புரிந்துள்ளனர். கூதிர் பருவம் முதல் வேனிற் பருவம் இடையிலானக் காலகட்டத்தைப் போர் செய்வதற்கு ஏற்ற காலமாகத் தமிழர்கள் தேர்வு செய்துள்ளனர்.

விவிலியத்தில் போர் செய்வதற்கான காலங்கள் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஆனால் குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு, 2 சாமுவேல் புத்தகத்தில், மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை மன்னர்கள் போருக்கு புறப்படுவார்கள் என்பது இதன்மூலம் அறிய முடிகிறது.

மேலும் பழைய ஏற்பாடு, யோசுவா என்ற புத்தகத்தில்,

இஸ்ரவேல் புத்திரர் கில்காலில்

பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதி

னாலாம் தேதி அந்தி நேரத்திலே எரிகோ

வின் சமனான வெளிகளிலே பஸ்காவை

ஆசரித்தார்கள்

மேற்கூறிய வசனத்தின்படி இஸ்ரவேலர்கள் முதல் மாதத்தின் பதினாலாம் தேதி, பஸ்கா பண்டிகைக் கொண்டாடியதை அறிய முடிகிறது. அதே மாதத்தில் அவர்கள் பாளயமிறங்கியிருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாளயம் இறங்குவது என்பது போருக்குப் போவதைக் குறிப்பது.  இஸ்ரவேலர்களின் முதல் மாதம் ஆபிப் என்பதாகும். இது நமது ஆங்கில மாத வரிசையில் மார்ச் முதல் ஏப்ரல் இடையிலான காலத்தைக் குறிக்கிறது. இது தமிழர்கள் பகுத்த பருவமாகிய இளவேனில் பருவத்தைக் குறிப்பிடுகிறது. மேற்கூறிய தகவல்களின்படி, யூதர்களின் போர்ப்பருவம் என்பது இளவேனில் காலம் என்பதை உறுதிசெய்ய முடிகிறது. தொல்காப்பியம் கூறும் நம் தமிழர்களின் போர்ப்பருவம் கூதிர், வேனில் என்பதனோடு யூதர்களின் போர்ப்பருவமும் ஒத்தே காணப்படுவது சிறப்பு.

மானம் கெடின் உயிர்விடுதல்

      தமிழர்தம் பண்பாட்டில் தன்மானம் பெரிது. அது நீங்கின் உயிர்வாழ்வது அரிது. இதனைத்தான் வள்ளுவர், திருக்குறளில்,

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

என்றார். இதற்கு விளக்கம் அளித்த மணக்குடவர், ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர் என்கிறார்.

இக்குறளுக்கு ஒத்தக்காட்சி புறநானூற்றில் விளக்கப்பட்டுள்ளது. சோழன் செங்கணானுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் நடந்தது. அப்போரில் சிறைபட்ட சேரமான், சிறைக் காவலர்களிடம் தாகம் தீர்க்க தண்ணீர் கொண்டுவருமாறு கூறுகிறான். அவனை அவமதிக்கும் வகையில், காலம் தாழ்த்தி காவலன் தண்ணீர் கொண்டு வருகிறான். இதனை ஏற்க மறுத்த சேரமான், குழந்தை இறந்தாலும், இறந்து பிண்டமாகப் பிறந்தாலும் அது வீரம் உடையது என்று வாளால் வெட்டி ஈமக்கடன் செய்வது எங்கள் மாண்பு. ஆனால் நானோ நாயைப்போல சங்கிலியால் கட்டி இங்கு அழைத்து வரப்பட்டேன். மேலும் நெஞ்சில் உரம் இல்லாமல் தண்ணீர் கேட்டு உண்ணும் நிலைக்கு ஆளானேன். என்று கூறுகிறான். இதனை,

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளின் தப்பார்

தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் உலகத் தானே

என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது. தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் கொண்டுவந்த தண்ணீரை ஏற்காத சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் உயிரை நீத்தான். இதிலிருந்து தன்மானத்தை அவன் உயர்வாக எண்ணியது திண்ணம்.

விவிலியத்தில் பழைய ஏற்பாடு, 1 சாமுவேல் என்ற புத்தகத்தில், இஸ்ரவேலின் மன்னனாகிய சவுல் என்பவன், பெலிஸ்தரோடு போர் செய்கிறான். போரில் தோல்வி அடையும் நேரத்தில், அந்நாட்டு படைகள் தன்னை வந்து கொல்வதை இழுக்கு எனக் கருதி, தனது ஆயுததாரியை (பாதுகாவலனை) நோக்கி தன்னைக் கொல்லுமாறு கூறுகிறான். ஆனால் அவன் அவ்வாறு செய்ய மறுக்கவே, தனது பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்து சவுல் உயிரை விடுகிறான்.

சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்

தது. வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கி

னார்கள். அப்பொழுது சவுல் வில்வீரரால்

மிகவும் காயப்பட்டு,

தன் ஆயததாரியை நோக்கி; அந்த

விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து,

என்னைக் குத்திப்பபோட்டு, என்னை அவ

மானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்ட

யத்தை உருவி, என்னைக் குத்திப்போடு

என்றான். அவனுடைய ஆயுத்தாரி மிக

வும் பயப்பட்டதினால் அப்படிச் செய்ய

மாட்டேன் என்றான். அப்பொழுது சவுல்

பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்

தான்

மேற்கூறிய வசனங்களில் சொல்லப்பட்ட விருத்தசேதனம் என்பது யூதர்களில் ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் செய்யும் சடங்காகும். பிறந்து எட்டாம் நாளில் பிறப்புறுப்பின் நுனித்தோலை நறுக்கிவிடுவர். இதுவே விருத்தசேதனமாகும். விருத்தசேதனம் இல்லாதவர்கள் என்றால் மற்ற இனத்தார் என்ற சொல் தன்னுடன் போர் செய்த பெலிஸ்தரை இந்த இடத்தில் குறித்து நின்றது.

படைகள்

நாட்டை ஆளும் மன்னனது வலிமை அவனது படையால் அறியப்படும். திருவள்ளுவர் படைமாட்சி எனும் அதிகாரத்தில்,

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையு ளெல்லாந் தலை

என்று கூறியுள்ளார். இதற்கு விளக்களித்த மு.வரதராசன், எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும் என்று கூறுவதிலிருந்து படையின் மாட்சி விளங்கும். பழந்தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் நான்கு வகைப் படைகளைவைத்து எதிரிகளை வென்று வாகை சூடி வந்தனர். இதனை புறநானூற்றுப்பாடல் ஒன்று விளக்குகிறது.

கடுஞ் சினத்த கொல்களிறும்

கதழ் பரிய கலி மாவும்

நெடுங்கொடிய நிமிர் தேரும்

நெஞ்சுடைய புகல் மறவரும்

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார் பாடிய இப்பாடலில் மூவேந்தர்கள் யானை, குதிரை, தேர் மற்றும் காலாட் படைகளை வைத்துப் போர் செய்ததை அறியலாம்.

விவிலியத்தில் மூன்று வகைப் படைகள் குறிக்கப்படுவதைக் காணலாம். குதிரை, தேர் மற்றும் காலாட்படைகளை மட்டுமே மன்னர்கள் போருக்குப் பயன்படுத்தப்படுத்தியுள்ளனர். பழைய ஏற்பாடு, உபாகமம் என்ற புத்தகத்தில்,

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக

யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில்

குதிரைகளையும், இரதங்களையும், உன்

னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும்

கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக

என்ற வசனம் விளக்குகிறது. மோசே என்பவன் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் ஆலோசனைகளில் இக்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

யானைப்படையை இஸ்ரவேல் நாட்டு மன்னர்கள் பயன்படுத்தவில்லை. ஏனெனில் யானைகள் இஸ்ரவேல் நாட்டில் இல்லை. யானைத்தந்தங்கள் தமிழகத்திலிருந்துதான் இஸ்ரவேல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனை, இஸ்ரவேலை ஆண்ட சாலமனுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சந்தனமரம், தந்தம், பொன், வெள்ளி, வாலில்ல குரங்கு ஆகியன தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன என்று ஆ. இராமகிருட்டிணன் கூறியுள்ளார். 

 

போர்க்கருவிகள்

தமிழர்கள் போர்க்கருவிகளாக வாள், வில், அம்பு, வேல், கேடயம் ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இக்குறிப்புகள் பின்வரும் சங்க இலக்கியப்பாடல்களின் வழி அறியமுடிகிறது.

ஒளிறுவாள் அருஞ்சம் முருக்கிக் (புறநானூறு)

இப்பாடல் வரியில் வாள் எனும் போர்க்கருவியும்

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் (திருமுருகாற்றுப்படை)

என்பதில் வேல் எனும் போர்க்கருவியும்

கொடுவில் எயினக் குறும்பில் சேம்பின் (பெரும்பாணாற்றுப்படை)

என்பதில் வில்லும் அம்பும்

பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து (முல்லைப்பாட்டு)

என்ற பாடல் வரியில் கேடகம் (கிடுகு) பயன்படுத்தியதாக அறியமுடிகிறது.

விவிலியத்தில் யூதர்கள் கேடகம், ஈட்டி, வில், கல்லெறி கவண்கள், பட்டயம் (வாள்) போன்ற கருவிகளைப் போருக்குப் பயன்படுத்தி வந்ததை அறியமுடிகிறது. பழைய ஏற்பாடு, 2 நாளாகமம் என்ற புத்தகத்திலும், நியாயாதிபதிகள் என்ற புத்தகத்திலும்,

இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்

லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளை

யும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்

களையும், வில்லுகளையும், கல்லெறிகிற

கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்19

பென்மீன் கோத்திரத்தையல்லா

மல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற

மனுஷர் நாலு லட்சம்பேர் என்று

தொகையிடப்பட்டது. இவர்களெல்

லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்

போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

முடிவுரை

மனித இனத்தின் முக்கிய பண்புகளுள் போர்க்குணமும் ஒன்று. போர்க் குணம் மனித இனத்தி்ற்கு உகந்தது அல்ல என்பர் சிலர். ஆனால் மனிதன் தான் சார்ந்துள்ள இனத்தையும், மக்களையும் காப்பாற்ற கையாளக்கூடிய முக்கிய பண்பு, இது என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையில் இரு இனத்தவரின் போரியல் பண்புகளை ஒப்புநோக்கினோம். இவ்விரு இனத்தவர் மட்டுமின்றி, உலகின் பல இன மக்களிடமும் இப்போரியல் பண்புகளில் நிலவும் ஒப்புமை உற்றுநோக்கத்தக்கது.

 

துணை நூற்பட்டியல்,

  1. ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உரையாசிரியர்) 2008, செவ்விலக்கிய கருவூலம், அமிழ்தம் பதிப்பகம், சென்னை-600017.
  2. மு.சண்முகம் பிள்ளை (பதிப்பாசிரியர்) 2003, தொல்காப்பியம்-பொருளதிகாரம், முல்லை நிலையம், சென்னை-600018.
  3. மு.தண்டபாணி தேசிகர் (பதிப்பாசிரியர்) 1990, திருக்குறள் உரைக்களஞ்சியம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-625011.
  4. ஆ.இராமகிருட்டிணன் 2005, தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-625001.
  5. அ.மாணிக்கனார் (உரையாசிரியர்) 2000, பத்துப்பாட்டு மூலமும், உரையும், சென்னை வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-600017.
  6. சிவராஜ பிள்ளை கெ.என். 1987, போரியல் அன்றும் இன்றும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை-600005.

மேற்கண்ட ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட தமிழ் விவிலியத்தின் பதிப்பகத்தார் பற்றிய குறிப்புகள். The Bible Society of India, 206 “LOGOS” Mahatma Gandhi Road, Bangalore-560001