ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் சூளுரை அல்லது வஞ்சினம் | Solemn Asseveration of Outrage & Challenging Attitude in Kambaramayanam

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 16 Nov 2022 Read Full PDF

கம்பராமாயணத்தில் சூளுரை அல்லது வஞ்சினம்

 (Solemn Asseveration of Outrage & Challenging Attitude in Kambaramayanam)

Dr. G. Mangaiyarkkarasi, Assistant Professor, Department of Tamil, A. M. Jain College (Shift-II), Meenambakkam, Chennai, Tamil Nadu, India

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை.

The attitude of any King who is unaware of his own inner strength and is paving the way for any mishappening can be termed as solemn asseveration of outrage with challenging attitude This attitude was found useful in getting the things done as per one’s will without affecting the confidence level of that particular individual. This type of challenging attitude accompanied with solemn outrage has been very well expressed or shown in Literary tamil epics such as Tholkaappiyam, Purapporuzh Venbamaalai apart from Puranaanooru of Ettuthogai in Sangh Literature and in Silappadhikaram, Manimekalai, Seevagachinthamani of Five Great Epics (Aimperunkaappiyangal) during the course of waging Battles and Wars. Not only the Ruling Kings and the Soldiers but even Ladies who were deprived off their direct access to these kind of things, the Victory achieved through their Challenging attitudes were very well known in those days. In Kambaramayanam, inclusive of Ram, Sita & Lakshman, Ravanan has also expressed their Avenging trends through their wordly utterances.

Key Words: Outrage, Challenge, War, Victory, King, Soldier.

ஆய்வுச் சுருக்கம்:

நான் இன்னது செய்யவில்லை எனில் இவ்வாறு நடக்கட்டும் என்று கூறுவது வஞ்சினம்

அல்லது சூளுரைத்தலாகும். நினைத்ததை, நினைத்தபடியே செய்து முடிப்பதற்கும், உள்ளத்தின்

உறுதி குறையாமல் இருப்பதற்கும் வஞ்சினம் பயன்பட்டது. சூளுரைத்தல் என்பது,

தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கண நூல்களிலும், சங்க

இலக்கியத்தில் எட்டுத்தொகையில் புறநானூற்றிலும், ஐம்பெருங்காப்பியங்களில்

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணியிலும் வஞ்சினம் கூறுவது காணப்படுகிறது.

வேந்தர்கள், வீரர்கள், மட்டுமல்லது போரில் நேரடியாக பெண்களால் பங்கு பெற

இயலாவிட்டாலும், பிற ஆண்கள் மூலமாக, தான் உரைத்த சூளுரையில் வெற்றி பெற்றதை

அறிய முடிகிறது. கம்பராமாயணத்தில் இராமன், இலட்சுமணன், சீதை ,அனுமன், இராவணன்,

உள்ளிட்ட பலரும் வஞ்சினம் கூறியுள்ளனர்.

திறவுச் சொற்கள்: வஞ்சினம், சூளுரை, போர், வெற்றி, வேந்தர், வீரர்.

 

முன்னுரை:

வெஞ்சினத்தின் வெளிப்பாடே 'வஞ்சினம்' ஆகும். இன்னது செய்யத்தவிர்ந்தால் இவ்வாறு நடக்கட்டும் என்று கூறுவது 'வஞ்சினம்' ஆகும்.வஞ்சினத்தை 'நெடுமொழி, உறுதி கூறுவது, சபதம் செய்வது, சத்தியம் செய்வது, சொன்னபடி நடப்பதாகச் சொல்வது இவையாவும் சூளுரைப்பதுவேயாகும்.  சங்க கால வேந்தரும், வீரரும் போருக்குச் செல்லும் முன் வஞ்சினம் உரைத்தனர். தாம் எண்ணியதை எண்ணியாங்கு எய்துதற்கும், உள்ளத்துறுதி குலையாமல் இருப்பதற்கும் வஞ்சினம் பயன்பட்டது.

சூளுரைத்தல் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கண நூல்களிலும், சங்க இலக்கியத்திலும், காப்பியங்களிலும், கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன.கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தில் வஞ்சினம் குறித்து ஆராய்வோம்.

கம்பராமாயணத்தில் வஞ்சினம்:

கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில் பலரும் வஞ்சினம் கூறியுள்ளனர். கதையின் நாயகன் இராமன், நாயகி சீதை, இலட்சுமணன், எதிர்நிலைத் தலைவன் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை,அனுமன்,இந்திரசித், அதிகாயன், அக்ககுமரன், மகரக்கண்ணன், மகரக்கண்ணன் தாய், கைகேயி, வன்னி, மாபெரும்புக்கன், தூமிராட்சன், பரதன் எனப் பலரும் வஞ்சினம் உரைத்துள்ளனர்.

இராமன் கூறிய வஞ்சினம்: 

 1. அறம் வலுவாத நெருங்கினரான முனிவர்களின் பெருமையை மறந்த அந்த அரக்கர்களின் வலிமையை அழிக்காமல் இருப்பதைவிட, நான் இறந்து போவதே மேல் என்று இராமன் சூளுரைக்கின்றான். நான் பிறந்ததன் பயனே உங்களுக்கு நன்மை செய்வதை விட, வேறு எந்த பேறு என்னை சேரப்போகிறது என்று இராமன் கூறுகிறான்.

                       "அறம் தவா நெறி அந்தணனர் தன்மையை

                        மறந்த புல்லர் வலி தொலையேன் எனின்

                        இறந்து போகினும் நன்று, இது அல்லது

                       பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?"                                                                                                   

(அகத்தியப்படலம்134)

2. சீதை அணிந்திருந்த ஆபரணங்களைச் சுக்ரீவன், இராமனிடம் காட்டியபோது, நன்றாகப் பார்த்து அவை தேவியின் ஆபரணங்களே என்று தெரிந்து, நெகிழ்ந்து, உருகி மூர்ச்சித்து சாய்ந்தான். சுக்ரீவன் உன் மனைவி எங்கிருந்தாலும் நான் தேடிக் கொண்டு வந்து தருவேன் என்று ஆறுதல் அளித்தான். அதற்கு இராமன் நீ கூறிய ஆறுதலால், என் துன்பம் சிறிது தணிந்தது. என் தந்தையாரின் கட்டளையை ஏற்று, முடி சூடாது காட்டுக்கு வந்தேன். என் மனைவியைப் பகைவன் கவர்ந்து கொண்டான். எனக்குப் பழி வந்து சேர்ந்தது. இந்நிலையில் நான் பிழைத்திருப்பதுசரியா?.என் மானத்தைக் காக்க நான் இறப்பதே சரி, என்றாலும், உன் மனைவியைக் கவர்ந்தவனைக் கொன்று, அவளை உனக்கு மீட்டுக்கொடுத்து மீண்டும் உனக்கு ஆட்சியை நல்குவேன் என்ற எனது சொற்களைக் காப்பாற்றியன்றி இறக்கமாட்டேன் என்று இராமன் சூளுரைத்தான்.

                   "ஐய நீ ஆற்றலின், ஆற்றினேன் அலது

                    உய்வெனே? எனக்கு இதின்  உறுதி வேறு உண்டோ?

                    வையகத்து இப்பழி தீர மாய்வது

                   செய்வென் நின்குறை முடித்தன்றிச் செய்கலேன் ";

                                                                                            (கலன்காண்படலம் 219)

வாலி, சுக்ரீவன் மனைவியைக் கவர்ந்து கொண்டான் என்று அனுமன் சொன்னதும், இராமன் வாலியைக் கொன்று ருமையை மீட்பதாக சூளுரைத்தான்.

3. கும்பகர்ணனும், சுக்ரீவனும் போரிடும் போது சுக்ரீவன் மயங்கிவிழ, கும்பகர்ணன் அவனைத் தூக்கிக்கொண்டு இலங்கை செல்ல முயன்றான். அப்போது இராமன் கும்பகர்ணனைத் தடுத்தபோது, ’போர்க்கருவியால் போரிடும் திறமை பெற்றவனே, தேவர்கள் முன்னிலையில் உள்ளம் கலங்கிய சுக்ரீவனை நான் பிடித்துள்ள பிடியை நாணுடன் கூடிய உனது வில்லாற்றலால் விடுதலை செய்வாயானால், சீதையும் சிறையில் இருந்து விடுதலை பெற்றவள் ஆவாள்’ என்று கூறினான். இவ்வாறு கும்பகர்ணன் கூறியதைக் கேட்ட இராமன் புன்னகை புரிந்து, “நான் பெற்றுள்ள இனிய துணைவரான சுக்ரீவனைத் தூக்கிச் செல்லும் உனது தோள் எனும் குன்றை அறுத்து வீழ்த்தாவிடின், உனக்கு நான் தோற்றுப்  பின்வாங்கியவன் ஆவேன் அதன் பிறகு வில்லைத் தொடமாட்டேன்” என்று வஞ்சினம் உரைத்தான்.

                     "என்றலும் முறுவலித்து இராமன் யானுடை

                      இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்.

                     குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்

                     பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான்"

                                                          (கும்பகர்ணன் வதைப் படலம் 1498)

    இவ்வாறு  இராமன்  வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.                                                                                                                                                                                                                                                                                                   சீதை கூறிய வஞ்சினம்:

1. வில்லை முறித்தவனை சீதை மணக்க வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டு விட்டது. ஆனால் அவள் மனமோ ஏற்கனவே ஒருவரை வரித்து விட்டது. மனம் ஒருவனுக்கு, மாலை மற்றொருவனுக்கு என்ற இன்னல்தரும் ஐயம் ஏற்பட்டு விடுகிறது. நீலமாலை சொன்ன குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது, மனம் கவர்ந்தவனும், மாலையை ஏற்றுக் கொள்ளப் போகிறவரும் ஒருவனே என்று தான் எண்ணுகிறேன், அப்படி இல்லாவிட்டால் நான் இறந்து போவேன் என்று தன் உள்ளத்தில் உறுதி கொள்கிறாள்.

2. காப்பியத்தில் சீதையே, தன் கற்பை நிலை நிறுத்தி நான் கற்புடையவள் என்று சூளுரைக்கிறாள். அனுமன் செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் முகமாக சீதை அவனை வாழ்த்துகிறாள். ’துணை என யாரும் இல்லாமல் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் என் இன்னல் தீர்த்தவனே, நான் மாசு இல்லாத மனத்தவள் ஆயின், நீ பல்லாண்டு வாழ்வாய்’ என்கிறாள். பல யுகங்களை ஒருநாள் என்று கணக்கிட்டு சொல்லும் ஆண்டுகள் எல்லாம் நீ வாழ்வாய் என சீதை அனுமனை வாழ்த்துகிறாள்.

                   " ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும்

                     ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் "

                                                                           (உருகாட்டு படலம்559)

3. அனுமனின் வாலில் அரக்கர்கள் தீ வைத்து விடுகிறார்கள். இந்தச் செய்தி சீதையை எட்டுகிறது. அந்த தீயின் சூட்டை அனுமன் உணராமல் இருக்க செய்வாய் என்று அக்னி தேவனை சீதை வேண்டுகிறாள். கட்டளை இடுகிறாள். நான் கற்புடையவள் என்பது உண்மையாயின் தீயே அவனைச் சுடாதே என சீதை கட்டளையிடுகிறாள்

           "நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில்

            தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனைச் சுடல்  என்றாள்"

                                                                         (பிணிவீட்டுப்படலம்1171)

4. இராவணனை மாய்த்த இராமன், சீதையை அழைத்து வா என்று கூறி வீடணனை அனுப்புகிறான். அவ்விதம் அழைத்து வரப்பட்ட சீதையை ஏற்க இராமன் மறுக்கிறான். கொடிய வார்த்தைகள் சொல்லி ஏசுகின்றான். ஒழுக்கம் கெட்டவள் என்று பழி சுமத்துகின்றான். இறுதியாக, நீ உயிர் வாழ்வதைவிட, இறத்தலே மேல் என்றும் இராமன் சீதையைப் பார்த்து சொல்லிவிடுகின்றான். இறத்தல் என்பது இயலாது என்றால் தக்க இடமோ, வேறெங்காவது பார்த்துக் கொண்டு போய்விடு என்கிறான். இராமன் சொன்ன அந்தக் கொடிய வார்த்தைகளைப் பொறுக்க மாட்டாமல் சீதை, உயிர்த் துறக்க முற்படுகிறாள். உயிர் விடுவதே மேல், என்று தீர்மானித்த சீதை அதற்குரிய வழியாக தீக்குளிப்பதைத் தேர்ந்தெடுத்து தீக்குழி ஒன்றை தயார் செய்யும்படி இலட்சுமணனிடம் கூறுகிறாள். சீதையின் வார்த்தைகளைக் கேட்ட இலட்சுமணன் கலக்கமடைந்து, இதைச் செய்வதா, வேண்டாமா என்று அண்ணனை தொழ, இராமனும் கண் ஜாடை மூலம் ஒப்புதல் வழங்க ,இலட்சுமணன் அக்கினிக்குண்டம் தயார் செய்ய, அதில் சீதை பாய்ந்து விட முடிவு செய்கிறாள். பாய்வதற்கு முன்னால் மனத்தினாலும், வாக்கினாலும் நான் குற்றம் உடையவளானால் அக்கினி தேவனே என்னைச் சுட்டெரித்து விடு என்று சூளுரைக்கிறாள்.

                   " கனத்தினால் கடந்த பூண்முலைய கைவளை,

                     மனத்தினால், வாக்கினால் மறு உற்றேன் எனின்

                     சினத்தினால் சுடுதியால், தீச் செல்வா என்றாள்

                     புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்"

                                                                                         (மீட்சிப்படலம்3976)

இவ்வாறு    சீதை வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

இலட்சுமணன் கூறிய வஞ்சினம்:  

1.இராமனுக்கு வனவாசம் என்று கைகேயி கூறியதை அறிந்த இலட்சுமணன், அண்ணனுக்கு மகுடம் கவிப்பேன். அதைத் தடுப்பவர் எவராக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும் அவரை அழிப்பேன் என்று சினத்தோடு சூளுரைக்கின்றான்.

                     " செய்யக் கருதி தடை செய்குநர் தேவரேனும்

                       துய்யைச் சுடு வெங் கனலின் சுடுவான் துணிந்தேன்"

                                                                                  (நகர்நீங்கு படலம் 415)

2. இலட்சுமணன், இராமனிடம் இந்திரஜித் நாக பாசம் கொண்டு பிணித்ததால் அறிய போரில் நான் தோற்றுப் போனேன் என்று நினைத்துக் கொண்டு, உலகம் பழிச்சொல் சொல்லும். போரில் உயிர்த் துறந்து பெருமையுற்ற மனிதரில் ஒருவனாக எண்ணப்படாமல், இழிந்தவன் என்று இகழப்படுவேன். உன் கண் முன்பாக நான் இந்திரஜித் தலையை என் அம் பினால் அறுத்து தள்ளினால்தான், என்னுடைய அடிமைத் தொண்டும் புகழ்பெற்றதாகும். என் அம்பு இந்திரஜித் தலையைத் துண்டாக்கவில்லை என்றால், உனக்காக நான் மேற்கொண்டுள்ள அடிமைத் தொண்டின் பயன் என்னை விட்டு அகழ்வதாக என்று வஞ்சினம் கூறினான். (மனிதரில் கடைபட்டவனாக நான் ஆவேன். எமனுக்கு விருந்தாக நான் ஆவேன். இருவரும் பலவித படைக்கலங்கள் எய்து கடும் போர் புரிந்தனர். சூளுரைகள் பரிமாறிக் கொண்டனர்)

            " பொன்னுடை வனைகழல் பொலம் பொன் தோளினாய்.

              என்னும் அடிமையும் இசையிற்று ஆம் அரோ"                                                                                                   

(பிரமாத்திரப்படலம் 2423)

                 " முடிய ஒன்று உணர்த்துவென் உனக்கு நான் முயல்

                  அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய்"

                                                                    (பிரம்மாத்திரப்படலம் 2424)

          இவ்வாறு  இலட்சுமணன் வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது

பரதன் கூறிய வஞ்சினம்:

இராமன் காடு சென்றதை அறிந்த பரதன், நான் போய் அண்ணனைக் கண்டு அரசாள்வதற்கு மீண்டும் அயோத்தி வா என்று அழைத்த போது அவன் மறுத்துவிட்டால் என்ன செய்வாய் என்று நீங்கள் கேட்டால், அதற்கும் பதில் வைத்திருக்கிறேன். அப்படி வரமாட்டேன் என்று அடம்பிடித்தால் அவனுடனேயே அந்த காட்டில் இருந்து அவனைப் போலவே நானும் தவம் செய்வேன். பரதன் இத்தோடு நிறுத்தி விடவில்லை, அதற்கு மேலும் என்னோடு மாற்று செய்தி ஏதேனும் பேசுவீர்கள் என்றால் அந்த நொடியிலேயே என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று ஒரு சூளுரையும் சொல்கிறான்.

                   "அன்று எனின் அவனொடும் அரிய கானிடை

                   நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென்

                   ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென்

                   என்றனன் என்றபோது இருந்த பேர் அவை"     

                 (ஆறுசெல்படலம் 2261)

இவ்வாறு பரதன் வஞ்சினம் கூறியதை அறியமுடிகிறது.

அனுமன்  கூறிய வஞ்சினம்:

அசோகவனத்தில் இன்னும் ஒரு திங்கள் மட்டுமே இருப்பேன் பின்னர் உயிர் சுமந்து இருக்க மாட்டேன் என்று தன் நிலையை சீதை புலப்படுத்தினாள். அப்போது அனுமன் இன்னும் ஒரு திங்கள் வரை நீ துன்பத்தில் இருக்க விடுவேனோ யான் இராமபிரானைப் போய் பார்ப்பதற்குரிய நேரம் மட்டுமே தேவை. இராமபிரான் நான் செய்தி சொன்ன பின்பு ஒரு கணமேனும் ஆற்றியிருப்பாரோ என பதில் உரைத்தான். மேலும் ஒரு படி செல்கிறான் .அனுமன் உன்னைக் குறிப்பிட்ட நாளில் இராமன் மீட்காவிட்டால், அவனே இராவணன் ஆவான். பழியையும். பாவத்தையும் சுமப்பவன் ஆவான்.  இந்த இராவணனே இராமன் ஆகி விடுவான் என்கிறான் அனுமன்.

                     "குராவரும் குழவி இக் குறித்த நாளி னே

                      விராவரும் நெடுஞ்சிறைமீட்கிலான் எனின்

                      பராவரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு

                     இராவணன் அவன், இவன் இராமன் என்றனன்"                                                                                                                               

(சூளாமணிப்படலம் 678)

இவ்வாறு   அனுமன் வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

இராவணன் கூறிய வஞ்சினம்:

1.கும்பகர்ணன் இறந்த செய்தியைக் கேட்டு இராவணன் எல்லையில்லாத் துயரம் அடைந்தான்.எல்லாத் திசைகளிலும் போரிட்டு வென்றவனாகிய இராவணன், அப்போது உற்றவர்கள் ஆறுதல் கூற ஓரளவு தணிந்து," இப்போதே, இந்த மனிதர்களின் ஈரமான இரத்தத்தால், இறந்துபோன என் தம்பி கும்பகர்ணனுக்கு மூன்று முறை கையால் நீர் இறைப்பதாகிய தர்ப்பணத்தைச் செய்வேன்" என்று கோபித்துக் கூறி, கனல் கக்கும் கண்களையுடையவனாய், அங்கிருந்து அகன்று சென்றான்.

                   "இக்கணத்து மானிடவர் ஈரக் குருதியால்

                   முக்கைப் புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா"

                                                                                 ( மாயா சனகப்படலம் 1664)

தம்பியின் இறப்புக்குக் காரணமானவர்களை அழித்தப் பின்பே, அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்வேன் என்று வஞ்சினம்  கூறினான் என்பதை அறியமுடிகிறது.

2. இறுதி நாள் போருக்கு இராவணன் கிளம்பும் முன் மிக்க அமைதியோடு பூசனை முறையால் செய்துவிட்டு புறப்பட்டான். அப்போது தன் வஞ்சினமாக, "நான் பகைவரை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினால், சீதை தன் மலர் போன்ற கையால் வயிற்றில் அடித்துக்கொண்டு கலக்கத்தை மேற்கொண்ட நெடிய துன்பக்கடலில் மூழ்குதல், அப்படி அது நடக்காவிட்டால், மயன் மகளான மண்டோதரி அத் தொழிலினை அடைதல் ஆகிய இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இன்று நான் செய்வேன் "என்று வஞ்சினம் கூறினான்.

                " மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு

                  கொன்று அலத்தலைக் கொடு நெடுந் துயரிடைக் குளித்தல்

                  அன்று இது என்றிடின் மயன் மகள் அத் தொழில் உறுதல்

                  இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான்"

                                                           ( இராவணன் தேர் ஏறு படலம் 3607)

இவ்வாறு இராவணன்   வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

கும்பகருணன் கூறிய வஞ்சினம்:

அனுமன் மாபெரும் மலையைத் தூக்கி, அரக்கனை நோக்கி:"கும்பகருணா! இம் மலையை உன்மேல் எறிவேன். உன் வலி அழியும். அவ்வலி அழியாவண்ணம் இம்மலையை ஒழித்தால் உன் வலிமை பெரிது என ஒப்புக் கொள்வேன். பெரும் புகழ் பெறுவாய். அதன் பின் உன்னுடன் போர் செய்யேன் என்றான். கும்பகருணன் உரக்கச் சிரித்து எதிர் சூளுரை சொன்னான். "இம் மலையை எதிர் ஏற்பேன். அப்போது யான் சிறிது சோர்வுற்றாலும் உனக்குத் தோற்றவனாவேன். உன்னை வலியன் என ஒப்புக் 'கொள்வேன்' என்றான் (7471, 7472, 7473, 7474)

   "மாற்றம் அஃ து உரைப்பக் கேளா மலை முழை திறந்தது என்னக்

     கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை

     ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்

     தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன்                                       

                                                                                                         சொன்னான் "  

                                                                 (கும்பகர்ணன் வதைப்படலம் 1413)

இவ்வாறு கும்பகருணன் வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

சூர்ப்பணகை கூறிய வஞ்சினம்:

சூர்ப்பணகை, இராமபிரானைப் பார்த்தவுடனேயே அவன் அழகில் மயங்கி, அவனுடன் சேர விரும்பினாள். அழகிய தோற்றத்தில் இராமனிடம் சென்று  பேசியும் அவன் மறுத்ததால், இராமனைக் கூடும் வழியை யோசித்தபடியே சூர்ப்பணகை, அந்த இடத்தில் நிற்காமல் நீங்குகிறாள். இன்று நான் இவன் உடலை தழுவா விட்டால் என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று சூளுரை சொன்ன வண்ணம் அருகே  இருந்த சோலை ஒன்றைக் கண்டு அதற்குள் போகிறாள்.

         " நின்றிலள் அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள்

           இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா

           பொன் திணி சரளச் சோலை பளிக்கறைப் பொதும்பர் புக்காள்

           சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே "   

                                                                                    (சூர்ப்பணகைப் படலம்288)

இவ்வாறு சூர்ப்பணகை   வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

இந்திரஜித் கூறிய வஞ்சினம்:

1. கும்பகர்ணன் இறந்தப்பிறகு இந்திரசித், இராம இலட்சுமணருடன் போரிட வருகிறான். நீங்கள் அம்பினால் அறுத்துத்தள்ளிய கும்பகர்ணன் என்னும் பெயர் பெற்ற ஒருவனாகிய இராவணனுடைய தம்பி அல்லன் நான். அதனால் அவனைப்போல உங்களால் கொல்லப்படமாட்டேன். நான் இராவணன் புதல்வன். ஆனால் அக்கக்குமரன், அதிகாயன் போலன்றி, வீரத்தால் தனித்து நிற்பவன். இறந்துபோன என் தம்பியர்க்கும், சிறிய தந்தையான கும்பகர்ணனுக்கும் உங்கள் இருவருடைய இரத்தமாகிய நீரைக் கொண்டு நீர்க்கடன்களை செய்து முடிப்பேன் என்று இந்திரசித் வஞ்சினம் கூறினான்.

           "எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவிர்

            செம் புணீர்கொடு கடன் கழிப்பேன் என்று தெரிவித்தான்"

                                                                             (பிரமாத்திரப் படலம் 2447)

எடுத்தக் காரியத்தில் தாம் நினைத்தவாறு வெற்றி பெற்றப்பின்பே மற்ற செயல்களைச் செய்வேன் என்று வஞ்சினம் கூறியதை அறியமுடிகிறது.

2.வீரர்களுக்கு உள்ள தனித்தன்மை தன் வீரத்தின் மீது கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கையே. என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலட்சுமணனைச் சாய்க்காவிட்டால், இனிமேல் உயிர்வாழேன் என இந்திரஜித் வஞ்சினம் கூறினான்.

இலட்சுமணன், அதிகாயனைக் கொன்றான் என்பதை அறிந்த இந்திரஜித், மிகுந்த கோபத்துடன் என் தம்பி அதிகாயனைக் கொன்றவனான அந்த இலட்சுமணனின் உடலை அவன் நின்றுள்ள போர்க்களத்திலேயே அழித்தபின் அன்றி, பெருமை பொருந்திய இந்த இலங்கை நகருக்கு மீண்டு வரமாட்டேன் என்று வஞ்சினம் கூறினான்.

                 " கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை

                    அந்நின்ற நிலத்து அவன் ஆக்கையை வீட்டி அல்லால்

                    மன்நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன்"                  

                                                                                             (நாகபாசப்படலம் 1952)

எவராலும் பொறுக்க முடியாத உயிரைப் பெற்ற என் தம்பியைக் கொன்ற இலட்சுமணன் என்னும் மானிடனது ஊற்றெனச் சுரக்கும் இரத்த வெள்ளத்தை நிலமகள் பருகாவிட்டால், என்னை எதிர்த்துப் போரில் தோற்றவனான இந்திரனுக்கு எனது பெரிய வீரம் நான்கு முறைதோற்கக் கடவது என்று இந்திரஜித் கூறினான். கொடுந்தன்மை கொண்ட பெரிய குரங்குப் படையைத் தனித்தனியே துண்டுபட்டு முறியும்படி அழித்து, அந்த இலட்சுமணனையும் கொல்லாது விடுவேனாகில், என் முன் தன் உடம்பைக் காட்ட அஞ்சி, எனது கட்டளையினைக் கடக்காத சிவந்த விழிகளை உடைய திருமால் முதலாக உள்ள தேவர் அனைவரும், என்னைக் கண்டு எள்ளி நகைக்கட்டும் என்றான் இந்திரஜித். அரவத்தின் உருவத்தில் அமைந்த கொடிய அம்பையும், பாசுபதம் என்னும் அம்பையும் தேய்தலைக் கொண்ட பிறை மதியினை அணிந்த முடியினான சிவபெருமான் அருளிய தெய்வத்தன்மை பொருந்திய வாளாயுதத்தையும் பாதுகாத்துத் திரிந்தேன். அத்தகைய எனக்கு அவை இன்று இலட்சுமணனை எதிர்க்கும் போரில் உதவாமல் போனால், சோம்பலை மேற்கொண்டு திரிவேன். இனிமேல் உணவிலும் ஆசை வைத்து வாழ மாட்டேன் என்றான் இந்திரஜித். அமுதமே போன்ற என் தம்பியின் அரிய உயிரைக் கவர்ந்த இலட்சுமணனை எமனுக்கு விருந்தாகப் படைக்காவிட்டால், என்னுடன் போரிடும் தேவர் கூட்டத்தார் சிரிக்குமாறு வில்லையும் வீணாகச் சுமந்து வாழ்ந்து, இந்த உலகத்துக்கும் வெறும் பாரமாக இருந்தேன் என்றால் நான் மாவீரனான அந்த இராவணன் மகன் அல்லன் என்கிறான் இந்திரஜித்.

 இவ்வாறு இந்திரத்  வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

 அதிகாயன்  கூறிய வஞ்சினம்:

அதிகாயன், இராவணனிடம் உன் தம்பி கும்பகர்ணன் உயிருக்கு இறுதி செய்து அளித்த இராமனுக்குத் தம்பியான இலட்சுமணனின் உயிருக்கு இறுதி செய்து, பின்பு ,அந்த இராமனை நடுங்கும்படி செய்யவல்ல ஒப்பற்ற கொடுந் துன்பத்தைச் செய்யாமல் போவேனாயின், அதன் பிறகு நான் சிறந்த தலைவனாகிய உனக்கு ஒரு நல்ல மகனாகத் திகழுவேனோ? என்று வஞ்சினம் கூறுகிறான்.

                           "உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்

                            தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்

                            கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல்

                            நம்பிக்கு ஓர் நன் மகனோ இனி நான்"

                                                                         (அதிகாயன் வதைப் படலம் 1679)

 நெருங்கிப் போரிடும் அக் கிளர்ச்சி பெற்ற வானரப்படை முழுவதையும் அழித்து, இதுவரை உயர்வு பெற்ற அவ்வானரங்களின் தலையை வெட்டி பூமியில் போட்டு, இரண்டு வில் வீரர்களான இராமலட்சுமணரைக் கட்டி இழுத்து உன் முன்பாகக் கொண்டு வருவேன். இந்த எனது ஆற்றலை நீ பார்ப்பாயாக என்று கூறினான்.

இவ்வாறு  அதிகாயன்  வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

அக்ககுமரன் கூறிய வஞ்சினம்:

அனுமனைப் பிடித்து வர தானே செல்வதாக அக்க குமரன் இராவணனிடம் அனுமதி பெற்று போர்க்களம் வந்தான். எதிரே நின்ற அனுமனைக் கண்டு எள்ளி நகைத்தான். அவருடைய தேர் சாரதி ,”ஐயனே நான் சொல்வதைக் கேட்பாயாக, உலகில் நடக்கும் செயல்கள் இப்படிப்பட்டவை என்று உறுதியாகக் கூற முடியுமா? உருவு கண்டு குரங்கு என்று எள்ளாமை வேண்டும் நம் அரசனான இராவணனோடு எதிர்த்து வெற்றி பெற்ற வாலி ஒரு குரங்கு தான் என்றால், அதற்கு மேல் சொல்ல வேண்டியது ஏதேனும் உண்டோ நான் சொன்னதை மனதில் பதித்துக் கொண்டு போரிட செல்க” என்று அவன் உணருமாறு உரைத்தான். சாரதி கூறியதைக் கேட்ட அக்க குமரன் ’இந்த இடத்தில் புகுந்து இவ்வளவு அழிவு செய்த இக்குரங்கை அழித்த பிறகும் எஞ்சி நிற்கும் என் கோபத்தால் தொடர்ந்து சென்று மூன்று உலகங்களிலும் நுணுகி தேடி சிறிய இடத்தையும் விடாமல் ஆராய்ந்து வெளியில் உள்ள குரங்குகளையும், கர்ப்பத்தில் உள்ள குரங்குகளையும் அளிப்பேன்’ என்று வஞ்சினம் கூறினான்

              " விடம் திரண்டனைய மெய்யான் அவ் உரை விளம்பக்கேளா

                 இடம்புகுந்து இனையசெய்த இதனொடு சீற்றம் எஞ்சேன்

                தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென்ஒழிவுறாமல்

                கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான்"

                                                                      (அக்ககுமாரன் வதைப் படலம் 955)

இவ்வாறு  அக்ககுமரன்  வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

மகரக்கண்ணன் கூறிய வஞ்சினம் :

மகரக்கண்ணன் கரணின் மகன். போர்க்களத்தில் “இராமனிடம் என்னுடைய தந்தையின் இனிய உயிரைப் பருகியவன்  என்பதால், அந்த முற்காலம் தொட்டு  உண்டாகிய முழுமையானப் பகை, மும்மூர்த்திகளிடம் ஏற்படாமல் உன்னிடம் ஏற்பட்டது. உன்னைக் காணாமையால் அடங்கிய அப்பகை, இன்று உன்னைக் கண்டதால் நிமிர்ந்து நின்றது” என்று கூறினான்.  இடி இடித்ததைப் போல வில்லினது நாணை ஒலிக்கச் செய்து, உன்னுடன் ஏற்பட்ட போரினைச் செய்து முடித்து, என்னிடம் ஏற்பட்ட சினத்தைத் தீர்த்து அமைதி அடைவேன் என்று வஞ்சினம் கூறினான்

       "உரும் இடித்தென்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடுஏய்ந்த

        செரு முடித்து என்கண் நின்ற சினம் முடித்து அமைவென்    என்னா

        கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம்

        பெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல் பகழி பெய்தான்"

                                                               (மகரக்கண்ணன் வதைப் படலம்2362)

      இவ்வாறு மகரக்கண்ணன் வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

மகரக்கண்ணன் தாய் உரைத்த வஞ்சினம்:

கரணை வதைத்தவன் இராமன். அவன் மகன் மகரக்கண்ணன் என் அன்னை அழுத கண்ணை உடையவளாய் , கடப்பதற்கு முடியாத துன்பக்கடலில்  மூழ்கி இருக்கிறாள். அவளுடைய கணவனைக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றவனது வலிய தலையாகிய பாத்திரத்தில் அல்லாமல் ' இறந்தவனுக்குச் செய்யவேண்டிய நீர்க்கடன்களைச் செய்து முடிக்க மாட்டேன்' என்றாள். அதனால் பெருமை பொருந்திய திருமாங்கல்யத்தையும் நீக்கப் பொறாள். பிணங்களை உணவாக அளிப்பதால் பருந்துகளுக்கு இன்பம் செய்கின்ற வேலினை உடையவனே. இனிய அருளுடன் நான் போருக்குச் செல்லுமாறு ஆணையிடுக என்று இராவணனிடம் வேண்டினான்.

                 "கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்

                  பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றாள்"

                                                            (மகரக்கண்ணன் வதைப்படலம் 2349)

 

இவ்வாறு மகரக்கண்ணனின் தாய் வஞ்சினம் உரைத்திருக்கிறாள் என்பதை, மகரக்கண்ணன் வாய்மொழியாக அறிந்து கொள்ளமுடிகிறது.

கைகேயி கூறிய வஞ்சினம்:

இராமனுக்கு வன வாசமும், பரதனுக்கு நாடும் வேண்டும் என்பதை வரமாகக் கேட்டுப் பெற்றுக்கொள் என்று மந்தரை கூறிய ஆலோசனையைக் கேட்ட கைகேயி "நல்ல உபாயத்தைச் சொன்னாய், பரதனுக்குப் பெருமை மிகுந்த முடியைச் சூட்டுதல், இராமனை அடர்ந்த காட்டுக்கு ஓட்டுதல் ஆகிய இவ்விரண்டு செயல்களும் நடக்காவிட்டால் அரசன் எதிரிலேயே நான் என் உயிரை விட்டு இறந்து போய் விடுவேன் இனி நீ செல்வாயாக என்றாள்.

                    "நன்று சொல்லினை நம்பியை நளிர் முடி சூட்டல்

                     துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் இவ் இரண்டும்

                     அன்றதுஆம் எனில் அரசன் முன் ஆர் உயிர் துறந்து

                     பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள்"

                                                                  (மந்தரை சூழ்ச்சிப் படலம் 177)

இவ்வாறு  கைகேயி  வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

வன்னி கூறிய வஞ்சினம்:  

புட்கரத் தீவின் மன்னன் வன்னி,  இராவணனிடம் நீ இங்கேயே இருப்பாயாக, நாங்கள் சென்று அந்த மனிதனின் சிறிய உடலின் கண் உள்ள இரத்தத்தைப் பருகி வெற்றி பெற்றுத் திரும்புவோம். அங்ஙனம் செய்யாமல் நாணம் கொண்டு புறமுதுகிடுவோமானால், வலிமையற்ற அற்பச் செயலினை உடைய குலத்தில் பிறந்தவராவோம்  என சூளுரைத்துச் சென்றார்.

                        "வென்று மீளுதும் வெள்குதுமெல் மிடல் இல்லாப்

                         புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் "

                                                                      (படைக்காட்சிப் படலம்3237)

 

இவ்வாறு வன்னி வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

மாபெரும்புக்கன், தூமிராட்சன் கூறிய வஞ்சினம்:

இந்திரஜித்துடன் போர்க்களம் சென்ற மாபெரும்புக்கன், தூமிராட்சன் இருவரும் போர்க்களத்தில் இருந்து புறங்காட்டி ஓடி வந்தார்கள். மறுநாள் போரிடப் புறப்படும் போது, இராவணனிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தபோது, ஒற்றர்கள் வந்து உண்மையைக் கூற, இராவணன் இவர்கள் மூக்கை அறுக்க ஆணையிட, மாலி இராவணனை சமாதானப்படுத்த மாபெரும்புக்கன், தூமிராட்சன் இருவரும் இராவணனிடம் உன் மகனான இந்திரஜித் தளர்ச்சி அடைந்து விலகிப் போனான். அங்கிருந்து மாயை உண்டாக்கி நீங்கிப் போய் இந்த நகரத்தை அடைந்தான். பகைவரை அழிக்கவல்ல எமது வல்லமையை உணர்ந்தவனே, இன்று பகல் பொழுதில் அல்லது நாளைய பொழுதில் எங்கள் உயிரை விடுவோமே அல்லாமல் மூன்றாம் பகல் என் வாழ்வில் ஏற்பட்டுக் கழிய இடம் தாரம் எங்களைப் போருக்கு  அனுப்பியவனாய் விடை கொடுத்தப் பின்னர் கொடிய போரிலே இறந்தனர் எனும் செய்தி ஒன்று, பகைவர்களைக் கொன்றனர் எனும் செய்தி ஒன்று இவ்விரண்டில் ஒன்றினைக் கேட்பாய். போரிலே தோற்கடிக்கப்பட்டனர் என்பதை கேட்க மாட்டாய் என்று, அவ்விருவரும் சபதம் செய்து மகிழ்ந்தனர்.

                         "விட்டனை எம்மை விடுத்து இனி வெம்போர்

                          பட்டனர் ஒன்று படுத்தனர் அல்லால்

                         கெட்டனர் என்பது கேளலை என்னா

                          ஒட்டினர் ஆவி முடிக்க உவந்தார்"

                                                (படைத் தலைவர் வதைப் படலம்  2262)

இவ்வாறு மாபெரும்புக்கன், தூமிராட்சன் வஞ்சினம் கூறியதை அறியமுடிகிறது.

பரதனின் சபதம்:

வஞ்சினத்தில் இன்னது செய்யத் தவறினால் இப்படி ஆவேன் என்று கூறுவது போல், நான் இன்னது செய்திருந்தால் இவ்வாறு ஆவேன் என்று கூறுவது வஞ்சினம் ( சபதம்) தான்.

பரதன் இயல்பாக மாசற்ற தான் தன் மனதின் ஒரு குற்றமும் உடையவன் அல்லன். இவன் நேர்மை நிறைந்தவன் என்பதை ஆராய்ந்து அறியும் மனத்தவளான கோசலை, ஐயனே  கைகேயி செய்த வஞ்சகத்தை நீ முன்னமே அறியவில்லை போலும் என்று கூறிய போது, கோசலையின் திருவடியில் விழுந்து கிடக்கும் பரதன் அவள் கூறிய சொல்லைக் கேட்டவுடன் பிறரால் கூண்டினில் பிடிக்கப்பட்ட சிங்கத்தைப் போல குமுறி விம்மி அழுதான். நாள்தோறும் சான்றோர் போற்றும் சிறந்த தர்ம தேவதைகள் நடுக்க தனது நாவினாலே சபதமாக அமையும் உறுதி மொழிகளை உரைக்கத் தொடங்கினான். கைகேயியின் வஞ்சகச் செயலை என் நெஞ்சகம் முன்னரே அறிந்திருந்தால், பிறர் செய்த அறச்செயல் அழிந்து போகும்படி முயற்சி செய்பவன்- இரக்கம் இல்லாத இதயம்  உடையவன் -பிறர் மனைவியரை அடைய அவன் வீட்டு வாயிலிலேக் காத்து நின்றவன்- அடுத்தவர் மீது கடுஞ்சினம் கொண்டவன்- பாவத்தை மேற்கொண்டு நிலைபெற்ற உயிர்களைக் கொலை செய்து வாழ்ந்தவன்- முற்றும் துறந்த துறவியற்கு துன்பம் தந்தவன் ஆகியோர் செல்லும் நரகத்தை நான் இப்போதே சேர்வேனாக என்றும், பெற்ற தாய் பசியுற்று உயிர் சோர்ந்து வருந்த, தனியாக தனது பெரிய பாழான வயிற்றுக்கு உணவு அளித்து வளர்க்கும் பாவி- தலைவன் போர்க்களத்தில் இறக்கும்படி அவனைக் கைவிட்டு ஓடிய கோழை ஆகியோர் செல்லும் தீ எரிகின்ற நரகத்தை நான் இப்போதே சேர்வேனாக என்றும், திருவடியில் சரணடைந்தவர்களைப் பாதுகாத்தால் தனக்கு தீமை வரும் என்று பயந்து, அவரை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கும் பேதை, எப்போதும் அறத்தை மறந்தவன் ஆகியோர் செல்லும் மீள முடியாத நரகத்தை நான் இப்போதே சேர்வேனாக. அந்தணர் வீடுகளைத் தீயிட்டு எரித்தவன்- சிறுவரைக் கொன்றவன்- வழக்கு மன்றத்தில் பொய் சொன்னவன்- தெய்வங்களைப் பழித்தவன் ஆகியோர் செல்லும் கொடிய துன்பம் நிறைந்த நரகத்தை நான் இப்போதே சேர்வேனாக, பால்க்குடிக்காமல் கன்று இறக்கும்படி, தாய்ப் பசுவின் பாலை முற்றிலுமாகக் கறந்து குடித்தவன்- பொது மன்றங்களில் பிறரது பொருளை அவர் அறியாமல் கவர்ந்தவன்- பிறர் செய்த நன்றியைப் போற்ற மறந்து, அவரைத் தூற்றும் நாவை உடையவன் ஆகியோர் செல்லும் நரகத்தை நான் இப்போதே சேர்வேனாக, ,கன்னிப் பெண்ணைக் கற்பழிக்க எண்ணியவன்- குரு பத்தினியைத் தவறான கருத்தோடு பார்த்தவன் -கள் குடித்தவன்- சான்றோர் இகழும் திருட்டு வழியில் பொன்னைச் சேர்த்தவன் என்று கூறப்பட்ட இவர்கள் அடையும் நரகத்தை நானும் அடைவேனாக, பகைவரை வெட்டி வீழ்த்தும் வைர வாளைப் பெரிய கையினால் தூக்கிக்கொண்டு போருக்குச் சென்று அங்கே போரிட அஞ்சி, நோய்க்கு இடமாகி முடைநாற்றம் உடைய உடலைப் பாதுகாக்க விரும்பி முத்துப் போன்ற சிறிய பற்களை உடைய இளமகளிரின் கண் எதிரே வென்று அடக்க வேண்டிய அப்பகைவரை என் தலை தாழ்ந்து வணங்குவதாக என்று பலவாறு கூறினார்.

வஞ்சினத்தில் இன்னது செய்யத் தவறினால் இப்படி ஆவேன் என்று கூறுவது போல், நான் இன்னது செய்திருந்தால் இவ்வாறு ஆவேன் என்று கூறுவது வஞ்சினம் ( சபதம் தான்) தான் எந்தத் தவறும் செய்யவில்லை, எதுவும் தனக்குத் தெரியாது என்றபோது, தான் தூயவன் என்பதை நிரூபிக்க நான் இதைத் தெரிந்திருந்து, அதற்கு உடன்பாட்டுடன் இருந்திருந்தேனானால் நான் இவ்வாறு ஆவேன் என்று கூறுவதும் தான். இதையே பரதனும் செய்தான் என்பதை அறியமுடிகிறது.

எத்தனையோ பல சூளுரைகளை உரைத்து பின் பரதன் தாயே இதைக் கேட்பாயாக, என்னை ஈன்ற கைகேயியே தன் சூழ்ச்சியால் பெற்ற அரசை நான் விரும்பினால் இன்னும் உள்ள எல்லா நரகங்களும் எனக்கு உரியன ஆகுக என்று கூறி கோசலையின் மலர்ப் போன்ற திருவடிகளில் தாழ்ந்து வணங்கினான்.

                      "எனைப் பலசூள் உரைத்து என்னை ஈன்றவள்

                       வினைத் திறந்து அரசினை விரும்பின் அன்னை தேள்

                      அனைத்துள நரகு எனக்கு ஆக என்று அவள்

                      பனிக் கமலம் பணிந்து இறைஞ்சினான்"

                                                                             (பள்ளிபடைப் படலம் 889)

இவ்வாறு பரதன்   வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது

முடிவுரை:

தான் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பதற்கும், உள்ளத்து உறுதி குலையாமல் இருப்பதற்கும் வஞ்சினம் பயன்பட்டது. சில கட்டுப்பாடுகளைத் தங்களுக்குத் தாங்களே விதித்துக்கொண்டு, செயல்படுவதன் மூலமாக, நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்ள இயலும். சினத்தின் சீற்றம் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு உட்பட்டது. காலம் கழிய கழிய, சினமும் குறையக்கூடும்.   சினம் தணியுமேயானால், சினத்தின் அடிப்படையாக நிகழ இருந்த செயலின் வேகமும் குறையக்கூடும். எனவே எண்ணிய செயலை இடையீடின்றி வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கும், உள்ளத்தின் உறுதி குன்றாமல் இருப்பதற்கும், சினத்தை நீட்டித்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்கு வஞ்சினம் தேவைப்படுகிறது. கம்பராமாயணத்தில், இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன், இராவணன். கும்பகர்ணன், இந்திரசித், அதிகாயன், அக்ககுமரன், மகரக்கண்ணன், மகரக்கண்ணன் தாய்,கைகேயி, சூர்ப்பணகை, வன்னி, மாபெரும்புக்கன்,தூமிராட்சன், பரதன் ஆகியோர் கூறிய வஞ்சினத்தை இக்கட்டுரையின் வழி நாம் ஆராய்ந்து, அறிந்து கொள்ளமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், 

   சென்னை,2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, 

    (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம்  

     புதுச்சேரி, சென்னை.

3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்    

    பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம்,

    கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி

    பதிப்பகம், சென்னை,2019.

6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5,   

   6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.