ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

புதுச்சேரியின் பயாதர் என்னும் தேவதாசிகள் - ஓர் ஆய்வு  |  Bayadere, Devadasis of Puducherry - A Study

முனைவர் பிரியாகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை 16 Nov 2022 Read Full PDF

புதுச்சேரியின் பயாதர் என்னும் தேவதாசிகள் - ஓர் ஆய்வு

(Bayadere, Devadasis of Puducherry - A Study)

முனைவர் பிரியாகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை

ஆய்வுச்சுருக்கம்:

தமிழக தேவதாசிகளைப்  போலவே புதுச்சேரி தேவதாசிகளும் பிரபலமான தேவதாசிகளாக திகழ்ந்தவர்கள். இவர்களுக்கும் தமிழக தேவதாசிகளுக்குண்டான விதிமுறைகள், சடங்குகள், நெறிமுறைகள்  போன்றவை ஒரே மாதிரியானவை. புதுச்சேரி தேவதாசிகளை பிரெஞ்சுக்காரர்கள் நடனமங்கையர் என்னும் பொருளில் பயாதர் என்று அழைத்தனர். இவர்களைக் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்:

தேவரடியார்,தேவதாசி,பயாதர்,புதுச்சேரி தேவதாசிகள்,கணிகைகள்

Abstract:

Puducherry Devadasis are popular Devadasis like Tamil Nadu Devadasis. The norms, rituals, ethics etc. are same between these and Tamilnadu Devdasis. The Puducherry Devadasis were called by the French as Payadars meaning Dancers. The purpose of this article is to examine them.

Key words:

Devathaasi,devaradiyaar,puthucherry devathaasi, kanikaikal, Bayadere

முன்னுரை:

இந்திய அரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கென்று ஒரு சிறப்பு இருப்பது போலவே தாசியர் வரலாற்றிலும் தமிழகத்தினின்றும் மாறுபட்ட ஒரு தனிச்சிறப்பு இருப்பது கவனக்கத்திற்குரியதாகும். புதுச்சேரியில் தேவதாசியர் பற்றிய விபரங்களை பிரெஞ்ச் இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. அது தவிர கல்வெட்டுகள், அயல்நாட்டினரின் பயணக்குறிப்புகள் ,ஆனந்தரங்கபிள்ளை , வீரா நாயக்கர், ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை ,முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை ஆகியோரின் நாட்குறிப்புகள் ஆக்கியவற்றின் மூலமாகவும் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிகின்றது. சோழர் காலத்தில் புதுச்சேரிப் பகுதியில் சிறந்து விளங்கிய மதகடிப்பட்டு குண்டாங்குழி  மகாதேவர் ஆலயம், திருபுவனை மாதேவீஸ்வரம் ,திருஆண்டார் கோயில் -பஞ்ச நாதீஸ்வரர்,திருக்காஞ்சி கங்கை வராக நாதீஸ்வரர் ,வில்லியனூர் திருக்காமேஸ்வரர்,பண்டசோழநல்லார் மல்லிகார்ச்சுனர் ஆலயம் முதலான சோழர்கால கோயில்களில் தேவரடியார்கள் பணிபுரிதுள்ளனர் என்று அக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் வாயிலாக அறிகின்றோம். புதுசேரி தாசியர் பலர் கலை அறிவோடு கல்வியிலும் கவிதையிலும் தேர்ந்திருந்தனர். ஏழு வயதில் நாட்டியம் பயின்றதோடு தேவைக்கேற்ப தமிழ், தெலுங்கு, பிரெஞ்சும் கற்றிருந்தனர். ஐரோப்பியர் இத்தகையப் பெண்களை ஜப்பானின் பரத்தையர் தொழிலில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய கெய்ஷாக்களாகவே கருதி நாடலாயினர். சரி கெய்ஷாக்கள் யார்? அதைப்பற்றி சிறிது காண்போம். கெய்ஷாக்களைப் பற்றிய எனது ஆய்வுக்கட்டுரை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் ஜப்பானிய கெய்ஷாக்களும் தமிழக தேவரடியார்களும் ஓர் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் 2021 ஜனவரியில் வெளிவந்தது.  அதிலிருந்து சில பகுதிகளை இங்கு உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றேன்.

கெய்ஷாக்கள் என்னும் ஜப்பானிய கலைஞர்கள்:

ஜப்பானில்  1589 ஆம் ஆண்டில் (Toyotoni hideyoshi) டொயோட்டோமி ஹிடயோஷி என்ற பெயரில் கியோட்டோவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு அதற்கு அதிக பாதுகாப்புடன் வெளியில் முழுவதும் மறைத்து சுவர்கள் எழுப்பப்பட்டது. இதனை (shimapara) ஷிமாபரா என்று அழைப்பர். இந்த அமைப்பு பணம் படைத்தவர்களின் கேளிக்கை மாளிகையாகவும் சிற்றின்பத்திற்கு ஏற்றத் தலமாகவும் வடிவமைக்கப்பட்டது.  இது இசை, நடனம், குடி, ஆடம்பரமான மற்றும் உயர்தர விலை மாதர்களைக் கொண்டு இயங்கி வந்தது. இங்குள்ள உயர்ந்த நிலை விலைமாதுகளுக்கு ஓரான் என்று பெயர். அதிக பணம் படைத்தவர்களை ஈர்ப்பது இவர்களின் முக்கிய வேலை . கெய்ஷாக்களின் கன்னித்தன்மை சில சமயங்களில் மிசுவேஜ் ("டிஃப்ளோரிங்") என்று அழைக்கப்படும் சடங்கில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது. சில ஆண்கள் இந்த சலுகைக்காக பல்லாயிரக்கணக்கான டாலர்களுக்கு சமமான தொகையைச் செலுத்தினர். சில கெய்ஷாக்கள் மலிவு விலைமாதர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஓரான்ஸ் என்று அழைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் வரை, கெய்ஷாக்களாக இருந்த பெண்களுக்கு கெய்ஷாக்களாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. அவர்கள் உயிர்வாழ அதில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல  பெற்றோர்களால் கெய்ஷா வீடுகளுக்கு பலர் விற்கப்பட்டு அடிமைகளாக மாறினர். இந்த சிறுமிகளில் பலர் ஐந்து வயதில் கெய்ஷா வீடுகளுக்கு விற்கப்பட்டனர். அவர்கள் பயிற்சி தொடங்குவதற்கு போதுமான வயது வரை அவர்கள் வீட்டு ஊழியர்களாகவும், பணிப்பெண்களாகவும் பணியாற்றினர். கெய்ஷா வீடுகள் சிறுமிகளை முதலீடுகளாகக் கருதி, பயிற்சி மற்றும் பராமரிப்புக்காக தங்கள் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததன் மூலம் சிறுமிகளை வெளியேறவிடாமல் தடுத்தன. சிறுமிகள் தங்கள் கடனை அடைக்க  உதவும் வகையில் மிசுவேஜ் வழக்கம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அதிலிருந்து மாறுபட்டு ஒடோரோகி  என்றழைக்கப்பட்ட நடனமாடும் பெண்கள் சிறந்த நடன கலைஞர்களாகவும், இசைக் கலைஞரகளாகவும் விளங்கினர். இவர்கள் மிக விரைவில் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகப் பெருமக்களை வைத்துக் கொண்டனர். இதற்கு முன்பு வரை ஆண் கலைஞர்களைத்தான் கெய்ஷா என்று அழைத்து வந்தனர். அந்த பெயரை இந்த பெண்களும் தங்களுக்குச் சூட்டிக் கொண்டனர். சுமார் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஆண் கெய்ஷாக்களைவிட பெண் கெய்ஷாக்கள் மிகவும் பிரபலமடைந்தனர். அதனால் கிட்டதட்ட அனைத்து கெய்ஷாக்களும் பெண்களே என்னும் நிலைக்கு வரவேண்டியதாகிப் போனது. இந்த சமயத்தில் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கெய்ஷா பெண்களுக்காக அறிவித்தது. அதன்படி கெய்சாவை விலைமாதுகளாக வேலை செய்யக் கூடாது என்னும் சட்டத்தையும் , ஒபியை (சாஷ்) பின்னால் கட்ட வேண்டும் எனவும்  வலியுறுத்தியது. அவர்களின் சிகை அலங்காராம், வெள்ளை அலங்காரம், கிமோனோ ஆகியவை ஓரான்சைவிட மிக எளிமையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதிலிருந்து கெய்ஷாப் பெண்கள்  கலைகளுக்காக மட்டுமே அர்பணிக்கப்பட்டதாக  சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இவைதான் கெய்ஷாக்களைப் பற்றி அடிப்படைச் செய்தி.(முனைவர்.பிரியாகிருஷ்ணன்,தமிழகத் தேவரடியார்களும் கெய்ஷா பெண்களும் ஓர் ஆய்வு,அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ்)

புதுச்சேரி பயாதர் என்னும் தேவதாசிகள்:

இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் திருமணமாகதாவர்களாகவும் தங்களது மனைவியரைப் பிரிந்தும் வந்திருந்தனர். தங்கள் நாட்டில் உள்ளது போல் விபச்சார விடுதிகள் இங்கு இல்லாததால் தாசிகளை அணுகலாயினர். புதுச்சேரி தேவரடியார்களின் சீரழிவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.குப்புசாமி, விஜய வேணுகோபால், முருகேசன், ஆலாலசுந்தரம், கோபாலகிருஷ்ணன், கிளமெண்ட் ஈஸ்வர் ஆகிய அறிஞர்கள் பதிவு செய்துள்ளதுபடி பல்லவர் காலம் தொடங்கி சோழர், நாயக்கர், சிற்றரசர்களான சம்புவரையர் காலத்திலும் புதுச்சேரியின் தேவதாசியர் மரபு பழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

வியாபாரத்தின் பொருட்டு  இப்புதுச்சேரியில் தங்கள்து குடியிருப்புகளை உருவாக்கிக் கொண்ட யவனர்கள் தங்களின்  உயரிய அன்பிற்குரிய அரசர்களுக்கும் செல்வந்தர்களுக்கும்  பரிசுப் பொருள்களாக இளம்பெண்களை அளித்தனர்.இதனால் சங்க காலத்தே யவனர்களுக்கு ஏற்ற சிறந்த துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்த புதுச்சேரியிலும் பரத்தைசேரி இருந்திருக்கும் என்று முடிவுக்கு வரவேண்டியதாகின்றது என்று முருகேசன் குறிப்பிடுகின்றார்.

ஃபிரெஞ்சியரின் ஆவணப்பதிவுகளில் தேவதாசிகள்:

விஜயநகரப் பேரரசர் காலத்தில் வில்லியனூர் திருக்காமேஸ்வரர், புதுச்சேரி, வேதபுரீஸ்வரர், உழவர் கரை அகத்தீஸ்வரர் ஆலயத்திலும் தேவதாசியர் பணியாற்றியமையை பிரெஞ்சுக்காரர்களின் பயணக்குறிப்புகளின் வாயிலாக அறிய முடிகின்றது, அந்தகாலத்தில் பிரெஞ்சியருக்கு முன்பே புதுச்சேரிக்கு வந்த போர்த்துகீசியர் அவர்களை நாட்டியத் தொழில் பயில்வோர் என்ற பொருளில் பெய்லாதோ என்று அழைத்தனர். 17 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆட்சி செய்ய தொடங்கிய பிரெஞ்சியர் அதே சொல்லை தங்கள் உச்சரிப்பில் பயாதெர் என்று அழைத்தனர். பிரெஞ்ச் தேசத்திலிருந்து இந்நாட்டிற்கு வாணிப விஷியமாக வந்த அனைவருமே வில்லியனூர் ,பாகூர்,திருபுவனை,உழவர்கரை,புதுச்சேரி பற்றி எழுதிய நூல்கள் அனைத்திலும் அவ்விடங்களில் நடனமாடிய தேவதாசியர்களைக் குறிக்க நேரும்போதெல்லாம் பையாதர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரி தாசிகள் நாள்தோறும் கோயிலைத் தூய்மை செய்வதும்,பூசைக்கு வேண்டிய  பூ முதலியவற்றைச் சேமிப்பதும் கும்ப ஆரத்தி செய்வதும் ,விளக்கேற்றுவதும் விழாக்காலங்களில் ஆடுவதும் பாடுவதும் செய்தனர் என்றும் பிரெஞ்ச் அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து புலனாகிறது.

விஜயநகரப் பேரரசர் காலத்தில் வில்லியனூர் திருக்காமேஸ்வரர், புதுச்சேரி, வேதபுரீஸ்வரர், உழவர்கரை அகதீஸ்வரர் ஆலயத்திலும் தேவதாசியற் பணியாற்றியமை பிரெஞ்சுகாரர்களின் பயணக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

ஊரில் நடைபெறும் அரசு சார்பிலான வரவேற்பு விழாக்கள், ஊர் பொது நிகழ்ச்சிகள், ஊர் பொது நிகழ்ச்சிகள் முதலான அனைத்து விழாக்களிலும் தேவதாசிகளே சிறப்பிடம் பெற்றிருந்தனர். புதுச்சேரியிலுள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து உழவர்கரை அகதீஸ்வரர ஆலயத்திற்குத் திருவிழாவின் போது உற்சவர் ஊர்வலமாகச் சென்றபோது அவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தேவதாசியர் இசையும் நடனமும் இடம் பெற்றிருந்ததாக பிரான்சுவா மர்த்தேன் நினைவுக் குறிப்பு கூறுகின்றது. 1822 மற்றும் 1824 ஆம் ஆண்டு புள்ளி விவரக்குறிப்பின்படி இக்கோயிலில் பணியாற்றிய தாசிகளின் எண்ணீக்கை 36 என அறியமுடிகின்றது. இவர்களில் சில தாசியர் வெளியூர்களிலிருந்து வந்தும் இறைப்பணி செய்துள்ளனர். தமிழ்நாடு வரலாற்றைக் காண்கையில் கோயில்களில் பணியாற்றிய கணிகையர் குல ஆடல் மகளிர் தம் பெயருக்குப் பின்னால் நாச்சியார்  என்னும் பதத்தைச் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அதனால் அவர்கள் நாச்சியார் என்று அழைக்கப்பட்டனர். சிலர் நக்கன் என்னும் அடைமொழியயைத் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டு தம்மை நக்கன் என்றும் அழைத்து கொண்டமை தஞ்சாவூர் கல்வெட்டால் அறிகின்றோம். வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் பணிபுரிந்த தேவரடியார்களின் பெயர்கள் பெரும்பாலும் அத்தல இறைவியின் பெயராலேயே கோகொலாம்பிகை, கோகிலாம்பாள், குயிலாம்பாள் என இருந்தது என்று குறிப்பேடுகள் வாயிலாக அறியமுடிகின்றது. சிலரோ தேவரடியார் என்னும் சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டனர்.

நாச்சியார் அழகிய பொன்னையார்

கிள்ளிக்குடி சிறிய பழ நாச்சியார்

இத்தளி நக்கன் வீதி விடங்கி

இப்படி பல பெயர்கள் இருந்தும் புதுச்சேரிப் பகுதி ஆலயங்களில் பணிபுரிந்த தேவரடியார்களை அவர்களுக்குச் சிறப்பும்மரியாதையும் வழங்கும் பொருட்டு அம்மா என்ற பெயராலேயே பெருமையுடன் அழைக்கப்பட்டனர்.

புதுச்சேரி தாசிகள் :

சோழர் காலத்தில் புதுச்சேரிப் பகுதியில் சிறந்து விளங்கிய மதகடிப்பட்டு குண்டாங்குழி மகாதேவர் ஆலயம், திருபுவனை மாதேவீஸ்வரம், அதிருஆண்டார் கோயில், பஞ்ச நாதீஸ்வரர்,திருக்காஞ்சி கங்கை வராக நாதீஸ்வரர்,வில்லியனூர் திருகாமேஸ்வரர் ,பண்டசோழநல்லார்,மல்லிகாஅர்ச்சுனர் ஆலயம் முதலான சோழர்கால கோயில்களில் தேவரடியார்கள் பணி புரிந்தமை அக்கோயில் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.சோழர் காலத்தில் முதலாம் இராஜராஜன் தஞ்சையில் பணிபுரிந்த தேவதாசிகளுக்குக் குடியிருப்பு ஒன்றை ஏற்படுத்தி தளிச்சேரி என்று அழைக்கப்பட்ட அக்குடியிருப்பில் தங்க வைத்தது போல பாகூரிலும் தேவதாசியர் தங்குவதற்காக ஒரு  தளிச்சேரி ஏற்படுத்தப்பட்டது.

ஒரு தாசி ஆகும் பெண்ணிற்கான சில விதிமுறைகளாக

1.சடங்கு பூர்வமான திருமணம்

2.அடையாளபடுத்தும் புனித நிகழ்வு’

3.நிகழ்த்துக்கலைகளில் ஈடுபடப் பயிற்சி பெறுதல்

4.அரங்கேற்றம்

5.ஆலயக் கடமைகள் மேற்கொள்ளுதல்

6.ஆசார கெளரவங்கள்

இவை அனைத்தும் ஒரு தாசிப் பெண் செய்ய வேண்டிய கடமைகளாக சதாசிவன் வரையரைப் படுத்துகின்றார்.தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேறியிலும் இத்தகைய சடங்குகளே நடைபெற்றன என்பதற்கு சான்றாக  வில்லியனூர் தேவதாசிகள் குறித்து கல்வெட்டுக்கள் பகிர்கின்றன. புதுச்சேரி தாசிகள் தமது ஏழாவது வயதிலேயே நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்துள்ளனர். இவர்கள் ஏழுவயதில் நடனம் பயிலத் தொடங்கி  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமது ஒன்பதாவது வயதில் நடனக்கலையில் தேர்ச்சி பெற்று அரங்கேற்றம் செய்வர்.நடனக் கற்றப்பின்னர் தமிழ்,தெலுங்கு மொழியைக் கற்றனர்.சிலர் தேவைக்கேற்ப பிரெஞ்ச்  ஆங்கில மொழியையும் கற்று தேர்ந்தனர் என்று அறிகின்றோம்,

தாசியாகும் பெண்ணிற்கும் நிகழ்த்தும் சில சடங்குகள்:

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் தாசியாகும் முறை குறித்து இரகுநாத்மனே தந்து கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கின்றார்.ஒரு பெண் நாட்டியம் பயின்று முடித்தவுடன் நட்டுவனார் மூலம் கோயில் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.வில்லியனூர் பகுதி பிரெஞ்சியரின் ஆளுகைக்குட்பட்டு இருந்ததால்  கோயில் அதிகாரி உரிய விண்ணப்பத்தைப் பிரெஞ்ச் நாட்டாருக்கு அனுப்பு அவர்களின் இசைவினைப் பெற வேண்டும் என்பது விதி.அரசின் இசைவு பெற்ற பின்னரே நடனம் கற்ற பெண் தாசியாகக் கோயிலில் பொட்டுக் கட்டிக் கொள்ளமுடியும். தேவதாசியாதல் என்பது தமிழகத்தைப் போல அனைத்துப் பெண்களுக்கும் உரியாதாக இல்லை.தாசியின் வயிற்றில் பிறந்த பெண்களும் தாசி வாங்கி வளர்த்த பெண்கள் மட்டுமே தாசியாவதற்கு தகுதி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர்.தாசியாவதற்கு முதல் பரிந்துரையை நட்டுவனாரே செய்ய வேண்டும்.இந்த பெண் நாட்டியம் நன்கு பயின்றவள் என்று நட்டுவனார்  உறுதியளித்தப் பின்னரே பெண்கள் தாசியாக மாற முடியும். தாசியாவதற்கு அரசு ஆணை பெற்ற அன்று இரவே தன் நடனத்தை அந்த பெண் ஆடிக் காட்ட வேண்டும்.புதுச்சேரியில்  ஏனைய கோயில்களில் பொட்டுக் கட்டிய பின்னரும் கல்வி ,ஆடல்,பாடல் ,பிற மொழிகள் பயிற்சி பெறாலாம்.ஆனால் வில்லியனூர் கோயிலில் மட்டும் மேற்கண்ட அனைத்துத் திறன்களையும்  பெற்றிருந்தவர் மட்டுமே தாசியாக முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் தேவதாசியர்க்குப் பொட்டு கட்டுதல் என்பது ஒரு பெரிய திருமண நிகழ்வு போல நடத்தப்பட்டது.குறிப்பாக வில்லியனூர் தேவதாசிகளுக்கு  வில்லியனூர் கோயிலில் பொட்டுக் கட்டிக் கொள்வதற்கான அனுமதி கோயிலில் இருந்து வந்தவுடன் பெண்வீட்டார் மகிழ்வுடன் ஒன்றுசேர்ந்து தாசியாக உள்ள பெண்ணை மேளதாளத்துடன் அழைத்துச் சென்று திருக்காமேஸ்வரர் கோயிலைச் சார்ந்த வலம்புரி விநாயகர் கோயிலில் விடுவர்.அங்கு விநாயகரை ,அலங்காரம் நிறைந்த கோலத்துடன் பொட்டுக் கட்டிக் கொள்ளும் பெண் முதல் வணக்கம் செய்வாள். பொட்டுக் கட்டும் சடங்குகளை நட்டுவனார் முன்னின்று நடத்துவார்வலது காலிற்கு நெல்லும் இடது காலிற்கு உப்பும் எனப் பரப்பப்பட்டு அதன்மேல் பொட்டுக் கட்டிக்கொள்ளும் பெண்ணை நிற்கவைத்து அவள் எதிரே திரை இன்று பிடிக்கப்படும். திரையைப் பிடித்துக் கொண்டு நட்டுவனார் தட்டும் தையா தை என்ற தாளத்திற்கு ஏற்ப அந்தப் பெண்  ஒரு நடனம் ஆடுவாள். இறைவன் முன் நடனமாட வேண்டிய பெண் தன் தெய்வீக சேவைக்கு நாட்டும் முதல் கால்கோள் இது என்பர். தான் இனி தெய்வத்திற்கு மட்டுமே சொந்தம் என்ற செயலுக்கு முதல் அச்சாரம் இதுவென்பர்.

வலம்புரி விநாயகர் சன்னதியில் நடத்த வேண்டிய சடங்குகளை முடித்த பின்னர் பொட்டுக் கட்டுதற்குரிய பெண்ணை திருக்காமேஸ்வரர் முன்பு அழைத்துச் செல்வர். அவளுக்கு முன் மங்கலப் பொருட்கள் தட்டுகளில் தாசிப் பெண்ணால் எடுத்துச் செல்லப்படும்.இஃது மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் எடுத்துச் செல்லும் வரிசைத் தட்டுகளைப் போன்று எடுத்துச் செல்லப்படும்.பின்னர் இறைவன்  திருமுன் இவ்வரிசைத் தட்டுகள் வைத்து வணங்கப்படும்.தாலியாகப் பாவிக்கப்படும் பொட்டு என்னும் ஆபரணம் இறைவன் மேல் வைக்கப்பட்டு தீபாரதனை செய்யப்படும். தீபவழிபாடு முடிந்ததும் குருக்கள் மங்கலத் தேங்காய் மீது பொட்டினை எடுத்து வைத்து அனைவரது ஆசிர்வாதத்தையும் கேட்பார்.பின்னர் அந்தப் பொட்டினை தாம்பூலத்தில் வைத்து இறைவனுக்கு அணிவித்து மேளதாளங்க முழங்க இறைவன் முன் சர்வ அலங்காரத்துடன் நிற்கும் பொட்டுக் கட்டும் பெண்ணிற்கு அணிவிப்பார்.

இந்தப் பொட்டு கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் மேளதாளத்துடன் பொட்டுக்கட்டிய பெண்ணை வீட்டிற்கு அழத்துச் செல்வர்.பெண்ணின் இல்லம் அலங்கரிக்கப்பட்டு தேவதாசிகள் அவ்வீட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் உண்டு.கோயிலில் இவ்விதம் பொட்டுக் கட்டப்பட்ட பெண் இறைவனால் திருமணம் செய்து கொள்ளப்பட்டவளாகக் கரிதப்படுவாள்.அவள் இனி பிற ஆடவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.அவள் இறைவனுக்கு மட்டுமே தாசியாக அதாவது அடிமையாக வாழ்க்கைப்பட்டவளாவள்.எக்காரணம் கொண்டு அவளுக்கு இரண்டாவது தாலி கட்டப்படமாட்டாது.ஆனால் இவ்விதம் பொட்டுக்கட்டிய பெண் இல்லறத்தில் ஈடுபட விரும்பினால் தாம் விரும்பிய ஆடவருடன் இணைந்து வாழ்க்கை நடத்தலாம்.அவர்களுடன் சேர்ந்து குழந்தையும் பெற்றுக் கொள்ளலாம்அக்குழந்தை சமூகத்தில் பெர்மதிப்புடன் நடத்தப்படும். . ஆனால் பரம்பரை உரிமை தொடரப்படும்.பெண் குழந்தையாக இருந்தால் மறுபடியும் உரிய பருவத்தில் பொட்டுகட்டப்பட்டு தேவதாசியர் ஆக்கப்படும்.ஆண் குழந்தையாயின் இதர கலைத் தொழிலில் வல்லவராக உருவாக்கப்படுவர்.

கோயிலில் பொட்டுக் கட்டிக் கொண்ட பெண் ,பொட்டுக் கட்டிய அன்றைய தினத்தில் மாலையில் கோயில் ஊஞ்சல்  மண்டபத்தில் நடன அரங்கேற்றம் செய்வாள்.அந்தச் சிறப்புமிக்க நடனத்தை ஊர்மக்கள் அனைவரும் கண்டுகளிப்பதுடன் அன்பளிப்புகளையும் வாரி வழங்குவர்.அன்றைய தினத்தில் அந்தப் பெண்ணிற்கு கோயில் பணி உறுதி செய்யப்படும்.அன்றைய தினத்திலிருந்தே அந்தப்பெண் கோயிலில் நடனமாடவும் இதர தெய்வீகப் பணிகளில் பங்கு கொள்ளவும் உரிமையுடையவள் ஆகிறாள்.கோயில் மானியமும் அவளூக்கு அளிக்கப்படும். சிலனேரங்களில் இந்த நடன அரங்கேற்றத்தின் போது தலைக்கோள் என்னும் பட்டமும் வழங்கப்ப்ட்டு பெருமைப்படுத்தப்படும்.சிலப்பதிக்காரத்தில் த்லைக்கோள் பெற்று தலையரங்கேறி என்று குறிக்கப்படும் வழக்கம் தொடர்ந்து வந்துள்ளமை இதன் மூலம் அறியமுடிகின்றது. ஆனால் ஆந்திராவில் பொட்டுகட்டுதல் என்னும் சடங்கு சூடான கம்பியால் பெண்ணின் நெற்றியில் சூடு வைத்து திலகம் போள் வடுவாக்கி நிரந்தர அடையாளம் வைக்கும் நிகழ்ச்சியே பொட்டுகட்டுதல் நிகழ்ச்சியாகும் .

தேவதாசிக்களுக்கே உரிய கும்ப ஆரத்தி:

இறைவனுக்குச் செய்யப்படும் ஆரத்திகளில் கும்ப ஆரத்தி வெகு சிறப்பானது.இத்தகைய கும்பவிளக்கை குடவிளக்கு என்றும் கூறுவர்.இத்தகைய குடவிளக்குத் தெய்வத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. காலையில் கோயில் குளங்களில் நீராடி புதிய சிகப்பு ஆடைகளை அணிந்து கூந்தலை ஜடைப்பின்னல் இடாமல் அப்படியே வாரி அள்ளிச் செருகிக்கொண்டு கோயிலிருந்து குடவிளக்கினைப் பெற்றுத் திருக்குளத்தில் தூய்மை செய்து எடுத்து வந்து எண்ணெய் அல்லது நெய் நிரப்பித் திரியிட்டுப் பூஜைக்குத் தயார் செய்வர். பின்னர் குடவிளக்கினைத் தாசியே ஏற்றிக் குருக்களிடம் அளிப்பர்.குருக்கள் குடவிளக்கிணை ஏற்றுவதற்கு அனுமதியில்லை.சில சமயங்களில் தேவதாசிகளே கும்ப ஆர்த்தி எடுப்பதும் உண்டு.

சமூகத்திற்கான அக்கறைக் கொண்ட புதுச்சேரி தேவதாசிகள்:

இராஜ்நிவாஸ்  முன்புள்ள தோட்டத்தில் உள்ள நினைவுச்சின்னம்  குறிப்பிட்டுள்ள கல்வெட்டு சுவரஸ்யமானது.இக்கல்வெட்டு முதலில் தமிழிலும் பின்னர் இலத்தின் மொழியிலும் அமைந்துள்ளது.ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன.கி பி 1509-1530 ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்தில் நடந்ததாக ஒரு செய்தி இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. இந்நீருற்று மண்டபத்தில் ஆயி என்னும் பெண்ணிற்கு நினைவுச்சின்னம் எழுப்பப் பிரெஞ்ச் நாட்டு அரசர் மூன்றாம் நெப்போலியன் அனுமதி அளித்த செய்தியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டின் காலம் குறிப்பிடப்படவில்லை. இக்கல்வெட்டினை வெட்டியவர் உக்கிரமூர்த்தி ஆசாரி. இவரே அன்றைய பிரெஞ்ச்க் கவர்னர் லியோ தாங்கியேவினுடைய ஆணையைக் கல்வெட்டில் வெட்டியவர்.இக்கல்வெட்டு வில்லியனூர் சிவன் கோயிலில் உள்ளது. இம்மண்டபத்திற்கான வரைபடம் 1820 இல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.எனவே இவ்விரண்டு கல்வெட்டுகளும் இம்மண்டபம் கட்டப்பட்டப்பொழுது இங்கு வைக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள செய்தியை செவிவழி மரபு செய்தியாக கொள்ள வேண்டும். பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசான கிருஷ்ணதேவராயர்  தென்னகம் முழுவதும் வெற்றிக்கொடி நாட்டினார்.தனது ஆளுமைக்குள்ளான பகுதிகளை பார்வையிட 1520 இல் செஞ்சியில் தங்கியிருந்தார்.அப்போது புதுச்சேரிக்கு அருகே உள்ள ஒழுகரை என்ற ஊரில் ஆதி வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் வாழும் உய்யகொண்ட விஸ்வராய முதலியார் என்பார்க்கு தேகம் முழுவதிலும் உள்ளங்காலிலும் அடர்த்தியான  முடிவளர்ந்துள்ளதாம்.இதை மறைப்பதற்காக அவர் தங்கத்திலான காலணிகலை அணிந்துள்ளாராம் என்று தான் கேள்விப்பட்ட செய்தியை அமைச்சர் அப்பாஜி மன்னரிடம் கூறினாராம்.இதை கேட்ட மன்னர் ஆர்வமுடன் மறுநாளே அவரை நேரில் காணவேண்டுமென்ரு ஒழுகரை நோக்கிப் புறப்பட்டார்.அவரைப் பார்த்து முடித்து திரும்பும்போது அந்தி நேரமாகிப் போனது.மன்னரது பரிவாரங்கள் முத்திரையர்பாளையம் தாண்டி வழுதாவூர் வழியாகப் போய் செஞ்சியை அடைவதற்காகப் போய் கொண்டிருக்க புதுவையின் புகழ்பெற்ற தேவதாசியின் ஆயி உடைய மாளிகையைக் கண்டு காற்றில் கலந்துவந்த நறுமணம் அகல திறந்திருந்த நெடுங்கதவுகள் தீபங்களின் வரிசை ஆகியவற்றைக் கண்டு ஆலயம் எனக் கருதி தொழுதார்.மன்னர் தொழுதாதால் பரிவாரமும் தொழுதது.மன்னரைக் காண கூடியிருந்த மக்கள் வியப்பும் வேதனையும் கொண்டு உண்மையைக்கூற மன்னர் அதிர்ச்சி அடைந்தார்.அவமானம் வேறு பிடுங்கி திங்க கோபம் தலைக்கேற  எனக்கு தவறான அறிகுறியைக் காட்டிய அந்த மாளிகையை இடிக்க ஆணையிட்டார். இதனை அறிந்த  தேவதாசி ஆயி  மன்னரிடம் மிகவும் பணிந்து வேண்ட , இன்று சவரி முத்திரைப்பாளையம் குளம் என்று அழைக்கப்படும் அதே இடத்தில் அவளுடைய பொருட்செலவில் ஒரு கிணரும் குளமும் வெட்டித்தரவும்  ஒத்துக்கொள்ள அந்த நீர்நிலைகள் ஆயி பெயரில் விளங்கவும் அனுமதி வழங்கி ஆணையிட்டார் என்ற செய்தி இக்கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது. இந்த ஏரி புதுச்சேரியின் குடிநீர் தேவையை தீர்த்தது.ஆயி கொடையைப் போற்றும் வகையில் தான் இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த கண்ணம்மா என்னும் தாசி அப்பகுதியில் பெரிய செல்வந்தராக வாழ்ந்தாள்.தான் இறப்பதற்கு முன்னர் அனைத்து உடைமைகளையும் தான் பணிபுரிந்த கோயிலுக்கே எழுதி வைத்தாள் .திருக்காமேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் விழாவும்,கோகிலாம்பாள் தெப்பம் வுடுவிழாவும் தமது செலவிலேயே நடைபெற வேண்டும் என்று கண்ணம்மா எழுது வைத்தாள்.இதற்குரிய ஆவணங்கள் பாரீசு நூலகத்தில் இன்றும் உள்ளது.

புதுச்சேரிப் பகுதியில் தேவதாசிகள் பெரிய பெரிய நீர்நிலைகளை வெட்டி மக்களின் குடிநீர் தாகத்தைத் தணித்ததை ஆயி, ஊசி, வங்காரி, சிங்காரி ஆகியோரின் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

ஊசி என்னும் தேவதாசி ஆயியின் தங்கை என்று கூறப்படுகிறது.அரசரின் கட்டளைக்கிணங்க ஆயி முத்தரையர் பாளையத்தில் குளம் வெட்டியது போன்று தானும் எவ்வகையிலாயினும் பெரியதொரு அறச்செயலைச் செய்ய வேண்டுமென்று எண்ணினாள்.அந்நாளில் முத்தரையர்ப் பாளையத்தை அடுத்த பகுதி வறட்சியாக இருந்தமையால் நீர்ப்பாசனமின்றிப் பயிர்கள்  வாடின.கொள்ளையர்கள் பதுங்கும் காட்டுப்பகுதியாக விளங்கிய இப்பகுதியைச் சீர்திருத்த அரசனிடம் விண்ணப்பத்தாள்.அரசரோ சீர்திருத்தப் பணிக்கு ஆட்களை மட்டும் அனுப்பி வைத்தார்.ஏரிவெட்டுவதற்கான ஏனைய பொருசெலவுகளை ஊசியே ஏற்றுக்கொண்டு சென்சியாற்றின் நீரைத் தேக்கி வைக்க ஒரு பெரிய ஏறியை வெட்டுவித்தாள்.அதனால் அப்பகுதி ஏறிப்பாசனத்தால் பயனடைந்தது.இவ்வாறு அன்று ஊசி வெட்டுவித்த ஏரி ஊசிட்டேரியாகி இன்று

உஸ்டேரி என்று அழைக்கப்படுகிறது.உழவு தழைத்திடப் பெரு உதவி செய்த ஊசியின் தொண்டுக்கு நிகரேதி? தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து விவசாயத்திற்கும் பேருதவி செய்த இந்தாபூர்வ சகோதரிகளின்  தோண்டுள்ளத்தை என்னென்பது.

வங்காரி மற்றும் சிங்காரி:

பல்லவர் காலத்தில் புதுச்சேரிப் பகுதியைச் சேர்ந்த பாகூரில் ஒரு பெரிய ஏரி வெட்டப்பட்டது. தென்பெண்ணை ஆற்றையும் இவ்வேரியையும்  இணைக்கும் கால்வாயை வெட்டியவள் வங்காரி என்றும் அக்கால்வாய்க்குக் கரை அமைத்தவள் சிங்காரி என்றும் இந்த ஏரியைக் காத்தவன் எரமடி என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரு பெண்களும் பாகூர் மூலத்தானமுடையார் ஆலயத்தில் தேவதாசிகளாக (நாட்டியப் பெண்களாக ) பணிபுரிந்து வந்துள்ளனர்.  ஏரியின் மதகு படிக்கட்டுகளில் சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர். ஏரியின் வடக்குக் கரையின் கிழக்கு முகப்பில் எரமடி வீரனின் நினைவாக எரமடி  ஐயனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேவரடியார்கள் பணிபுரிந்தமைக்கு கணப்பொருமக்களும் தேவரடியாரும் என வரும் இக்கோயிலின் கன்னர  தேவன்  கல்வெட்டுத் தொடர் சாட்சியாய் நிற்கின்றது. இந்த தேவதாசிகள் குறித்து வேறு சில கதைகளும் இப்பகுதியில் செவிவழிச் செய்தியாக பேசப்படுகிறது. அவைகளும் கேபதற்கு சுவையானவை.

ரங்கம்மாள் என்னும் தேவதாசி:

தூய்ப்ளேக்ஸ் ஆளுநர் காலத்தில் புதுச்சேரியிலிருந்த ரங்கம்மாள் எவ்விதத்திலோ கெட்டுப்போய் தாசித்தொழில் செய்தவள்.அதனால் திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு வந்து அங்கு நான்கு மாதமிருந்து விட்டு புதுச்சேரிக்கு வந்தாள்.புதுச்சேரி கவர்னர் பெரிய நியாய்ஸ்தர் என்று கேள்விப்பட்டு ஒரு பொய் வழக்கையும் தொடுத்தாள். ரங்கம்மாளின் முனுவை ஏற்று இந்த வழக்கில் குற்றவாளிகளாக நங்கம்மாள் குறிப்பிட்ட திருவேங்கடம் வீராச்செட்டியார் அவரது வேலைக்காரன் ஆகியோரை கவர்னர் விசாரணை செய்தார்.

திருவேங்கடத்தை விசாரித்தபோது அவர் அனைத்தையும் மறுத்தார்.வீராச்செட்டியாரும் தமது குற்றத்தை அவ்விதமே மறுத்து ரசீதில் உள்ள கையெழுத்து தன்னுடையதல்ல என்று வாசித்தார்.ஆயினும் மூவருக்கும் விசாரணைக்காக ஆறுமாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.ஆறுமாதாத்திற்கு பிறகு  அதாவது ஏப்ரல் 1746ல் மறுபடியும் விசாரணை நடத்தும்போது பழையபடியே மூவரும் வராததால் மூவரையும் வேதஒஉரீஸ்வரர் கோயிலில் தீபத்தை நிறுத்திச் சத்தியம் செய்யச் சொன்னார்.பலர் முன்னிலையில் மூவரும் சத்தியம் செய்தனர்.அதனால் மூவரையும் காவலில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.திருவேங்கடம் பிள்ளை சத்தியம் செய்யும்போது ,நான் இவளுடன் மூன்று தரம் போய் 29 பணமும் இரண்டு வேளை படி அரிசியும் கொடுத்தது அறிவேனேயல்லாமல் மற்றபடிக்கு இவள் கையிலே வராகன் வாங்கினதில்லை என்று சொல்லி தீபத்தை அணைத்துச் சீட்டையும் கிழித்துப் போட்டார்.வீராச் செட்டியும் இந்தக் கடன் சீட்டு நான் எழுதியதல்ல இந்தச் சீட்டு வரலாறும் நான் அறியேன் என்று கூறி தீபத்தை அணைத்தார்.

ரங்கம்மாள் தனக்குப் பணம் கிடைக்காததுடன் தண்டனை ஏதும் கிடைக்குமோ என்ற பயத்தாலும் கடன்காரர்களுக்கு பயந்தும் இரண்டு நாளில் ஓடிப்போனாள் என்று ஆனந்தரங்கம்பிள்ளை அவர்களின் நாட்குறிப்பு குறிப்பிடுகின்றது.

முடிவுரை:

புதுச்சேரி தேவதாசிகள் பொருத்தவரை மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் திகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.தனது செல்வத்தை மக்களுக்கு பயன்படும்வகையில் ஏரிகள் அமைத்தும் கோயில்களுக்கு திருப்பணி செய்வதற்கும் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது.சில தேவதாசிகளின் தவறுகளும் அறிய முடிகிறது.ஆக புதுச்சேரி வரலாற்றில் அவர்களுக்கென்று ஒர் இடம் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

துணை நூற்பட்டியல்:

  1. முனைவர் கே. சதாசிவன் , தமிழகத்தில் தேவதாசிகள்,டிச்கவரி புக்பேலஸ்,சென்னை.
  2. எம்.பி இராமன்,ஃபிரெசியர் ஆட்சியில் புதுச்சேரி நாடும் பண்பாடும்(1815-1945),காலாச்சுவடு பதிப்பகம்.சென்னை.
  3. புதுச்சேரி சி.எஸ். முருகேசன் , வரலாற்றில் புதுச்சேரி தாசிகள் தொடர் கட்டுரைகள்,
  4. ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புகள்,  

   5.முனைவர் பிரியாகிருஷ்ணன், தமிழகத் தேவரடியார்களும், ஜப்பானிய கெய்ஷா       பெண்களும்    ஓர் ஆய்வு, அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ், கோட்டை3,வாயில்12.