ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இலக்கியம் - நிலவெளி - மாந்தர்கள்

பா.சிவன்பாண்டி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை 07 Jan 2023 Read Full PDF

இலக்கியம் - நிலவெளி - மாந்தர்கள்

கட்டுரையாளர்: பா.சிவன்பாண்டி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை - 625 001

P.Sivanpandi, Ph.D.Research Scholar, Tamil Research Centre, Senthamil College, Madurai-625 001.

நெறியாளர்: முனைவர் அ.நந்தினி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்க் கல்லூரி மதுரை - 625 001

 

Abstract

Human life is structured in relation to the land in which they live. People's culture, tradition, lifestyle etc. are all formed according to the nature of the land. Literature - the cultural product of human society, is no exception. The land is the foundation and background of literary creation. This can be understood through the 'Thinai' (geographical landscapes like Kurinji, Mullai, Marudham, Neithal & Paalai) or mode mentioned in the Sangam literature. In this way, Vela Ramamoorthy, a contemporary writer, has written novels in which the themes revolve around the ‘Maravar’ people who live in the Kamudhi region of Ramanathapuram district. 

 

Keywords:

Land and People, Paalai Thinai People, Thinai - Geographical Landscape, Culture, Sons of the soil

 

ஆய்வுச்சுருக்கம்

      மனித வாழ்வியல் அவர்கள் வாழும் நிலத்தோடு தொடர்புடையதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் முதலியன யாவும் நிலவெளியின் தன்மைக்கு ஏற்ப உருப்பெறுகின்றன. மனித சமூகத்தின் பண்பாட்டு உற்பத்திப் பொருளான இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் இலக்கிய உருவாக்கத்தின் அடித்தளமாக, பின்னணியாக இந்நிலவெளியே இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் திணைக்கோட்பாடுவழி இதனைப் புரிந்துகொள்ளலாம். அவ்வகையில் சமகாலப் படைப்பாளரான வேல ராமமூர்த்தியின் புதினங்கள் கட்டமைக்கும் மாந்தர்கள் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரப் பகுதிகளில் வாழும் மறவர் இனமக்களாக உள்ளனர்.

திறவுச்சொற்கள்: நிலவெளி, மாந்தர், திணைக்கோட்பாடு, பண்பாடு, மண்ணின்  மைந்தர்கள்

முன்னுரை

கதை சொல்லுதலும் கதை கேட்டலும் மனித சமூகத்தின் ஆதிக்குணம் மட்டுமல்ல, ஆதிக் கலைவடிவமும் கூட. மொழியே தோன்றாத காலத்தில் கூட மனிதன் தம் அனுபவங்களை சைகைகளாலும் இடுகுறி மொழிகளாலும் கதைகளாகப் பகிர்ந்து கொண்டிருக்கக் கூடும். ஆதி மனிதன் தம் வாழ்நிலையை (நிலம் - வெளி), தம் வாழ்வைக் காரண காரியங்களோடு விளக்க முயற்சித்தான். அதற்கு அவனது அதீத கற்பனைத் திறன் கைகொடுத்தது. தர்க்கத்திற்கு எதிரான இந்தக் கற்பனைத் திறன்தான் ‘கதை சொல்லுதலுக்கான’ மூல ஊற்றாக அமைந்தது. இதன் தொடர்ச்சியே இன்று புனைகதையாக (சிறுகதை, புதினம்) பரிணமித்திருக்கிறது.

      புனைகதைகளில் ஒரு வகைமையான புதின இலக்கியத்தில் பழமரபான கதை சொல்மரபும், கற்பனைத் திறனும் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன. குறிப்பாக நவீன உலகில் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி, நவீனத் தகவல் தொடர்பியல் வளர்ச்சி உள்ளிட்ட நவீன வளர்ச்சிகளால் மனித சமூகம் எதிர்கொள்ளும் சமூக, அரசியல், கலாச்சார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அல்லது அவற்றின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கு ‘புதின இலக்கிய வடிவம்’ பல வாய்ப்புகளை உள்ளடக்கிய கலைச் சாதனமாகப் பயனளிக்கிறது. அவ்கையில் இக்கட்டுரை இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ள நிலவெளியையும், மனிதர்களையும் அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் அமைகின்றது.

நிலவெளி - மாந்தர் - இலக்கியப்பதிவு

      இவ்வுலகம் ஐம்பூதங்களின் மயக்கத்தால் உருவானது என்று தமிழில் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியம் கீழ்க்காணுமாறு விளக்குகின்றது.  

      “நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்

               கலந்த மயக்கம் உலகம்”

                                                                         (தொல்காப்பியம், மரபியல், நூற்பா எண்:91)

      நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்து உருவானதே உலகம் என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நிலத்தோடு இணைந்த மற்ற நான்கையும் இணைத்து ‘நிலவெளி’ என்று வரையறுக்கலாம். ஒரே பூமிதான் என்றாலும் நிலவெளியை ஒற்றைத் தன்மை உடையது என்று கருதவியலாது. இப்புவியின் நிலவெளி மாறுபட்ட பல குணங்களைக் கொண்டுள்ளது. மனிதர்களே வாழத் தகுதியற்ற ‘அண்டார்டிகா’ எனும் குளிர் துருவப் பகுதிகூட இப்புவியில்தான் உள்ளது.

      நிலவெளியின் மாறுபட்ட குணங்களுக்கு ஏற்ப அங்கு வாழும் உயிரினங்களின் குணங்களும் (பண்புகள்) மாறுபடுகின்றன. உதாரணமாகக் கடல்சார் நிலப்பரப்பில் மட்டுமே வாழும் சில உயிரினங்கள் உண்டு. அதுபோல பாலை நிலப்பரப்பில் மட்டுமே வாழும் சில உயிரினங்கள் உண்டு. உயிரினங்களில் பரிணாம முதிர்ச்சியடைந்த மனிதனின் இயல்புகளும் பண்புகளும்கூட நிலவெளியின் இயல்பிற்கு ஏற்ப மாறுபடுகின்றன. மனிதர்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் முதலியன யாவும் நிலவெளியின் தன்மைக்கு ஏற்ப உருப்பெறுகின்றன. மனித சமூகத்தின் பண்பாட்டு உற்பத்திப் பொருளான இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘உலக இலக்கியம்’ என்று பேசப்பட்டாலும் அதற்குள்ளோடியிருப்பதுகூட ஒரு பிரதேசக் குணம்தான். ரஷ்ய இலக்கியம், அமெரிக்க இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், லத்தின் அமெரிக்க இலக்கியம், ஆப்பிரிக்க இலக்கியம் ஆகிய இலக்கியம் என்கிற வகைப்பாடுகள் உலக இலக்கியப் போக்குகளில் வேரூன்றி உள்ளன. இந்த வகைப்பாடு ஒரு மொழிக்குள்ளான வட்டார இலக்கியங்கள் வரை நீளுகின்றன.

ஓர் இலக்கிய உருவாக்கத்தின் அடித்தளமாக, பின்னணியாக ‘நிலவெளி’ திகழ்கிறது. “ஒர் இன மக்களின் பண்பையும் கலாச்சாரத்தையும் நிச்சயிப்பதில் நிலவியலின் செல்வாக்கு, இனவியலாளரோ, இலக்கியத் திறனாய்வாளரோ புறக்கணிக்க முடியாததோர் அறிவியல் துறை ஆகும். இத்துறை கிரேப்னர் (புசயடிநெச) காலம் முதல் ‘ஆந்த்ரோபோ-ஜியாக்ரஃபி’ (மானிடநிலவியல்) என்று வழங்கியது. நம் காலத்தில் ‘ஹ்யூமன் ஜியாக்ரஃபி’ (இதற்கும் மானிட நிலவியல் என்றே பொருள்) என்று அழைக்கப்படுகிறது. மானிடக் கலாச்சாரத்திற்கும் இயற்கையின் சூழலுக்கும் இடையிலான உறவு இத்துறையின் பொருள். சான்றாக, துருவப் பிரதேசங்களின் குளிர்ந்த இருண்ட குளிர்காலங்கள் ஊக்கமாகச் செயல்படும் தன்மை, விழிப்பு, திறனாய்வு போன்ற ஈடுபாடுகளுக்குப் பகையானவை என்று சொல்லப்படுகிறது. கடுமையான தட்பநிலையுடன் இணைந்த நிலவியலின் ஒரே மாதிரித் தன்மை அளிக்கும் மனச்சோர்வு, செயலில் ஈடுபடும் தைரியத்தை உறிஞ்சி, அறிவு வளத்தை முடக்குகின்ற சகிப்புத்தன்மையையும் அதை ஏற்கும் மனநிலையையும் சுமத்துகிறது. ஒப்புநோக்கில், ஒரே நாட்டின் இரண்டு அடுத்தடுத்த மாவட்டங்களின் சிறிய நிலஅமைப்பு வேறுபாடுகள்கூட கலைநோக்குகளில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக டஸ்கனியிலிருந்தும் உம்பரியாவிலிருந்தும் வருகின்ற ஓவியர்களின் கலை வேறுபாட்டைச் சொல்லலாம்” (க.பூரணச்சந்திரன், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், பக்., 1-2) என்கிறார் தனிநாயக அடிகள்.

      ஒரு நிலவெளியின் தன்மை மற்றும் சூழலுக்குத் தக்கவாறு அறிவு மற்றும் கலைச் செயல்பாடு வேறுபடும் பாங்கினை இதன்வழி அறியமுடிகிறது. இலக்கியம் படைப்பதற்கான வழிமுறைகள் குறித்துக் குறிப்பிடும் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு இலக்கியத்திற்கும் நிலவெளிக்குமான நெருக்கமான உறவினைப் பறைசாற்றுகிறது. “திணை என்பதைச் சூழல் புனைவு என்றெல்லாம் அழைக்கலாம். இறுதிச் சூழல் புனைவு திணைப் பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. திணைக் கோட்பாடு செய்யுள் ஆக்கத்திற்குரியதாக அமைந்துள்ளது. இயற்கைச் சூழலில் தோன்றிய தமிழிலக்கிய நில அடிப்படைக் கூறுகளுடனும் திணை இலக்கியம் என நிலவழிப்பட்ட இலக்கியமாகத் தோன்றி வளர்ந்தது.

நிலப்பகுதிகளில் நிலைத்துத் தங்கி வாழத் தலைப்பட்ட மனிதன் ஆங்காங்கே இயற்கைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு தமது வாழ்வை அமைத்துக் கொண்டான். அவரவர் வாழ்ந்த நிலத்தியல்பு, அவரவர் பயன்படுத்திய உற்பத்திக் கருவிகள் ஆகியவற்றின் நிலைமைக்கேற்ப அவரவர் வாழ்வியல் நிலைகளும் வேறுபட்டன”(எஸ்.ஸ்ரீகுமார், தமிழில் திணைக் கோட்பாடு, பக்., 2-3). இத்தகைய வேறுபாட்டினை ஐந்து நிலங்கள் (திணைகள்) அடிப்படையில் அமைந்த சங்க இலக்கியங்களில் காணலாம். இவ்விலக்கியங்கள் நிலம், பொழுது எனப்படும் முதற்பொருள் மற்றும் இயற்கையினைப் பின்னணியாகக் கொண்டு மனித வாழ்க்கையினைப் புனைந்துரைத்தன. இவ்விலக்கியங்கள் முறையே மலை, காடு, நன்னீர்ப்பரப்பு, உவர்நீர்ப்பரப்பு மற்றும் வறன்நிலம் ஆகியவற்றிற்கே உரிய இலக்கியங்களாகத் தோன்றி வளர்ந்தன. “தமிழ் மண்ணுக்கேற்ப விளைந்த இந்நிலப்பண்பாட்டின் எல்லா அடையாளங்களையும் தமிழ்க்கவிதை கொண்டுள்ளது” (க.பூரணச்சந்திரன், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், ப.3) எனச் சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு குறித்துக் குறிப்பிடுகிறார் தனிநாயக அடிகள்.

      இத்தகையவொரு திணைப்பண்பு (நிலவெளிப் பண்பு) தமிழ் இலக்கிய வரலாறு நெடுவும் தற்காலம் வரைத் தொடர்ந்து வருகிறது என அறுதியிட்டுக் கூறவியலும். தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு இலக்கியங்களைப் பிசகின்றிப் படைப்பதற்கான கோட்பாட்டு அடித்தளத்தை வழங்குகின்றதென ஒருசாரார் குறிப்பிடுவர். மற்றொரு சாரார் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியங்களைப் புரிந்து கொள்ள இயலும் என்பர். இருசாராரின் கருத்தையும் புறந்தள்ளவியலாது. ஏனெனில் ‘திணைக் கோட்பாடு’ படைப்பாளர் மற்றும் திறனாய்வாளர் ஆகிய இருசாராருக்கும் படைப்பிலக்கியம் தொடர்பாகப் பலனளிக்கக்கூடிய முறையியல் ஆகும்.

      திணைக் கோட்பாட்டின் கூறுகளாக விளங்கக் கூடியவை முப்பொருள்கள். இவற்றில் “முதற்பொருள் என்பது நிலம் - காலம் என்ற இரண்டினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அது இயற்கைச் சார்பினை முன்னிறுத்துகிறது. கருப்பொருள் என்பது விலங்கு, புள் போன்ற இயற்கைப் பொருட்களும், யாழ், பறை போன்ற செயற்கைப் பொருட்களும் கலந்திருப்பதால் அது இயற்கையும் செயற்கையும் கலந்த ஒன்றாக உள்ளது. உரிப்பொருள் குறித்த சூழலில் தோன்றும் மானிட உணர்ச்சிகள் (குறிப்பாக, நிலைப்படுத்தப்பட்ட உணர்வுகள் Conditioned responses) என்பதால் செயற்கை ஆகிறது.  

முதற்பொருள் -     இயற்கை சார்ந்தது

கருப்பொருள் -     இயற்கை,  செயற்கை

உரிப்பொருள் -     செயற்கையானது

என அமைவது இயற்கையிலிருந்து கலாச்சாரத்திற்கு (செயற்கைச் சூழலுக்கு) Nature > Nurture  இயக்கத்தைக் காட்டுவதாக அமைகிறது.

முதல் - கரு - உரி என்னும் திணைப்பொருட்களில் இயற்கையும் கலாச்சாரமும் திணை என்பதில் ஒன்றிணைகின்றன. எதிர்நிலையில் நிறுத்தியும் பார்க்கப்படுகின்றன”(க.பூரணச்சந்திரன், சான்றோர் தமிழ், பக்., 77-78) என்று திணைக் கோட்பாட்டின் சாரத்தை எடுத்துரைக்கிறார் க.பூரணச்சந்திரன். இவ்விடம் முன்வைக்கப்படும் கருத்தாக்கமானது அகத்திணைக்கு உரியதாகும். அகத்திணை என்பது இயற்கையும் செயற்கையும் கலந்த மயக்கமாக இருக்கிறது. அகத்திணையின் மறுதலையாக புறநிலையாக அமைவது புறத்திணையாகும். அகத்திணையைப் போல் அன்றி புறத்திணை முழுக்க செயற்கைக் கூறுகள் மேலோங்கி இருக்கின்றன. ஏனெனில் புறத்திணை முழுக்க செல்வத்தைக் கைப்பற்றுதல், செல்வத்தை மீட்டல், மண்ணைக் கைப்பற்றுதல், மண்ணை மீட்டல், போர் நிகழ்த்தல் முதலிய நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கிறது.

      சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் அகம் X புறம் என தெளிவான வரையறைகளோடு இலக்கியங்களை (செய்யுள்களை) தொகுத்துள்ளனர். சங்க இலக்கியக் கூறுகளைப் பிற்கால இலக்கியப் போக்குகளில் இனங்காண இயலும் என்றாலும் அவற்றில் அகமும் புறமும் இணைத்துப் பனுவலாக்கப்பட்டன. காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் முதலியவை இதற்குத் தக்க சான்றுகளாகும்.

      தமிழில் புதினம் எனும் இலக்கிய வகைமை மேலை நாட்டு இறக்குமதிதான் என்றாலும் தமிழ்ப் புதினத்தின் களம் தமிழ் நிலப்பரப்புதான். தமிழ்ப்புதினத்தின் மாந்தர்கள் தமிழ் நிலப்பரப்பினர்தான். அவ்வகையில் சங்க இலக்கியம் தொடங்கி, காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம் முதலிய மரபிலக்கிய வகைமைகளின் வளமான கூறுகளை ‘தமிழ்ப் புதினங்களில்’ இனங்காண இயலும். எனவே திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்ப் புதினங்களை நோக்கும்போது, தமிழ்ப் புதினங்கள் முன்னிலைப்படுத்தும் நிலவெளி மற்றும் மாந்தர்கள் குறித்து ஆய்ந்தறியவியலும். வேல ராமமூர்த்தியின் புதினங்களில் இதற்கென ஏகபோக வாய்ப்புகள் நிறைந்துள்ளன.

வேல ராமமூர்த்தியின் புதினங்கள் யாவும் அவர் பிறந்து வாழ்கிற கமுதி வட்டார மண் (நிலவெளி) சார்ந்தவை. அவர் புதினங்களில் இடம்பெறும் மாந்தர்கள் யாவரும் அம்மண்ணின் மைந்தர்கள். “சூழலியல் அடிப்படையிலேயே சற்று வெக்கை மிகுந்த பகுதியான தென்பகுதி மக்களிடையே காணப்பட்ட மூர்க்கத்தனத்தையும், சூடேறிய ரத்தத்தின் வாசனையையும் உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்த எழுத்தாளர் என்ற மகுடம் தமிழிலக்கிய வரலாற்றில் வேல ராமமூர்த்திக்கு மட்டுமே உண்டு” (https://www.nakkheeran.in/special-articles/special-article/classic-writter-vela-ramoorthy). வேல ராமமூர்த்தியின் புதினங்களின் அடித்தளமாக  நிலவெளியும், ஆன்மாவாக மாந்தர்களும்; திகழ்கின்றனர்.

முடிவுரை

      தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலை வரையறுத்துக் கூறுபவை. மேலும்; அக்காலத்திலேயே உலகத் தோற்றம், அகம், புறம் என்ற அரிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன. அவ்வகையில் இலக்கியங்களின் அடிப்படையாக நிலவெளியும், மாந்தர்களும் அமைவதையும், அவ்வடிப்படையிலேயே அங்குள்ள மக்களின் பண்பாடுகளும், வாழ்வியல் முறைகளும் தீர்மானிக்கப்படுவதையும் இனங்காண வழிகள் உள்ளன

துணைநின்ற நூல்கள்:

1.     இளம்பூரணர்(உ.ஆ.), 2008(ஆறாம் பதிப்பு), தொல்காப்பியம்-பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை-05.

2.     க.பூரணச்சந்திரன், 2014(முதற்பதிப்பு-செப்டம்பர்), நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98.

3.     க.பூரணச்சந்திரன், 2018(முதற்பதிப்பு-டிசம்பர்), சான்றோர் தமிழ், பிறழ் வெளியீடு, மதுரை-19.

4.     எஸ்.ஸ்ரீகுமார், 2012(முதற்பதிப்பு-ஏப்ரல்), தமிழில் திணைக் கோட்பாடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98.

5.(https://www.nakkheeran.in/special-articles/special-article/classic-writter - vela-ramoorthy).