ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அறப்பளீஸ்வரர் சதகத்தில் தனிமனித ஒழுக்கம் (Morals of Individual in Arapalliswarar Sathak)

முனைவர் தே.தேன்மொழி, உதவிப்பேராசிரியர், வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம், சென்னை. 07 Jan 2023 Read Full PDF

அறப்பளீஸ்வரர் சதகத்தில் தனிமனித ஒழுக்கம் (Morals of Individual in Arapalliswarar Sathak)

முனைவர் தே.தேன்மொழி, உதவிப்பேராசிரியர், வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம், சென்னை.

Abstract

Tamil literature made the  greatest work to purify individual’ characteristics. The human culture and moral lives were once in the elevated and upgraded position. In contrast, it is now lost its status because of present conditions of the society.  The time has been changing the society. It impacted the human world. The present society has no time to turn to look at their walked path. It is essential to sustain, develop and keep the human culture in purified manners. Tamil literature alone can do it.  Moreover, it would point out the correct sequences of virtues. It would make the human being as if the moral human being. It would deviate him from animal behaviours. This way would lead the human to next levels. The sole aim of my article is to point out essential things and sustain the pure virtue in the life of individual through Tamil literature.

Keywords : Tamil literature, behaviour, culture

ஆய்வுச் சுருக்கம்

தமிழ் இலக்கியம் தனிமனிதனைத் தூய்மைப்படுத்தும் ஆக்கப் பணிகளைச் செய்து வருகிறது. மனிதப் பண்புகளும் நற்பண்புகளும் மதிப்பிழந்து வேகமான வாழ்க்கைச் சூழலால் இன்றைய சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மனித இயல்பைத் திரும்பிப் பார்க்கக் கூட காலத்தால் அழியாத நிகழ்வுகளால்தான் இன்றைய சமூகம் இயங்குகிறது. இதை மேம்படுத்த தமிழ் இலக்கியத்தின் பங்கு இன்றியமையாதது. நல்ல ஒழுக்கங்களைச் சுட்டிக் காட்டுவதுடன், மனிதர்கள் மனிதனாக வாழக்கூடிய வழிகளையும் விளக்குகிறது.

திறவுச் சொற்கள் : தமிழ் இலக்கியம், நடத்தை, பண்பாடு.

முன்னுரை

      தமிழ் இலக்கியங்கள் தனிமனிதனை   சுத்திகரிக்கும் ஆக்கப்பணியை செய்து வருகிறது. மனிதப் பண்புகளும் வாழ்வியல் அறங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கும் வேகம் நிறைந்த வாழ்க்கைச் சூழல் இன்றைய சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மனிதப் பண்புகளைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமற்ற நிகழ்வுகளால் மட்டுமே நகா்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம். இதனை நெறிப்படுத்த மேம்பாடடையச் செய்ய தமிழ் இலக்கியங்களின் பங்கு இன்றியமையாததாகும். மேலும் நல்ல நெறிகளைச் சுட்டிக்காட்டி, மனிதர்கள் மனிதர்களாக, உயர்ந்தவர்களாக வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுகிறது.

சதக இலக்கியம்

      சதகம் என்பதுஅகம், புறம் என்னும் இரண்டு பொருள்களுள் யாதாயினும் ஒன்று பற்றிப் பாடப்படும் நூறு செய்யுட்களை உடைய நூலாகும்.

. நீதி கூறும் இலக்கியத்தில், சதகங்கள் மக்கள் செல்வாக்குப் பெற்றவை. கலைக்களஞ்சியம் போன்றவை இல்லாத அக்காலத்தில் கற்பவர்க்குத் தேவையான பல குறிப்புகளையும் இவ் விலக்கியங்களில் புலவர்கள் தந்திருக்கிறார்கள். திருமாலின் அவதாரங்களைக் குறித்தும், புராணங்கள் குறித்தும் அறங்கள் முப்பத்திரண்டு என்னென்ன என்பது பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு பலவற்றைக் கூறுவதற்குச் சதகச் செய்யுட்கள் பயன் பட்டன என்பதை அறிய முடிகிறது.

அறப்பளீசுர சதகம்

       96,   வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் வகையைச் சார்ந்தது. இதனை இயற்றியவர் அம்பலவாணக்  கவிராயர் என்பவர்    ஆவார்.இவர் சீர்காழி அருணாசலக் கவிராயரின் மகனாவார். இது தவிர இந்நூலாசிரியர் குறித்த செய்திகள்    ஏதும் அறிய இயலவில்லை. கொல்லிமலை  இறைவன் அறப்பளீச்சுர சதகம், கொல்லி மலையில் அமைந்துள்ள அறப்பள்ளி ஈசுவரன் மேல் பாடப்பெற்றதாகும். இந்நூல் எழுந்த காலம்18ஆம்  நூற்றாண்டு   ஆகும். 
         இந்நூல் 100 பாடல்களைக் கொண்ட சிறந்த ஒரு நீதி இலக்கியமாகும்.
ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும். சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும். ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும். நல்ல அரசும், அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும். உடன் பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழ வேண்டும். பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்வழியில் அமைய வேண்டும். நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்கள் பாடல்களாக இந்நூலில் காணப்படுகின்றன.

           அறப்பளீசுர சதகத்தின் ஆசிரியரான அம்பல வாணக் கவிராயர் என்பவர்,  சோழநாட்டில் தில்லையாடி என்னும் ஊரில் வேளாளர் குலத்தில்  சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் பிறந்து, சீகாழியில் தங்கியிருந்த - இராம நாடகம்
பாடிய சிறப்புப்      பெற்ற அருணாசலக் கவிராயரின் மூத்த புதல்வர். இச்சதகம் சதுரகிரி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுரரை முன்னிலைப் படுத்திப் பாடப்பட்ட நூலாகும். சதுரகிரி கொல்லி மலையைச் சார்ந்தது என்பர். அறப்பளி என்பது ஒரு சிவத்தலம். அறப்பள்ளி என்பது கோயிலின் பெயராகும். மதவேள் என்னும் வேளாண் செல்வர் ஒருவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி இச்சதகத்தை இயற்றினார் என்பது அவரைக் குறித்து ஆங்காங்கு வரும் சொற்றொடர்களால் அறியலாம்.

பாடுபொருள்

      இச்சதகத்தின்கண் உள்ள நூறு செய்யுட்களும் சிறந்த பொருள்களை மிக எளிதாய்ப் புகட்டுகின்றன. குடும்பத்துக்கு வேண்டப்படும் சகோதரர் ஒற்றுமை, பெரியோரிடத்து நடக்கும் முறை முதலியன இளம் பருவத்திலேயே ஒவ்வொருவரும் அறிய வேண்டியவையாகும் அரசர், வேளாளர், வைசியர் (வணிகர்) மறையோர் சிறப்புகள், இல்லறம், நன்மக்கட்பேறு, நன்மாணாக்கர் இயல்பு, நல்வினை செய்தோர் ஆகியன பற்றி  எடுத்துரைக்கிறது. செய்யத்தக்கவை, செயற்கு அருஞ்செயல் அவரவரிடத்து நடக்கும் முறை, பகை கொளத் தகாதவர், பொருள் செயல்வகை பற்றியும் விவரிக்கிறது.

      உதவியின்றிக் கெடுவன இவையென்பது, குறைவுற்றும் குணம் கெடாமை, குணத்தை விட்டுக் குற்றத்தைக் கவர்தல், ஊழின் வலிமை, ஒளியின் உயர்வு, கற்பு மேம்பாடு, நற்சார்பு, பிறவிக் குணம் மாறாமை பற்றியும் பேசுகின்றது. வறுமையின் கொடுமை, கோபத்தின் கொடுமை, யாக்கை நிலையாமை பற்றியும் தருமம் பற்றியும் எடுத்துரைக்கின்றது. திருமங்கை இருப்பிடம், மூதேவி இருப்பிடத்தையும் சுட்டுகிறது. மேலும் மருத்துவக் குறிப்பும், மழைநாள் குறிப்பும் சோதிடக் குறிப்பும் கூட இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

குடும்பம்

      குடும்பத்துக்கு வேண்டிய சகோதரர் ஒற்றுமை, பெரியோரிடத்து நடக்கும் முறை முதலியன இளம் பருவத்திலேயே ஒவ்வொருவரும் பயில வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கூடப் பிறந்தவர் அடையும் துயர் தமது துயர், அவர்கள் கொள்சுகம் தம் சுகமெனக் கொண்டும், அவர் புகழும் பழியும், தமக்குற்ற புகழும் பழியும் போலக் கொண்டும் வாழ வேண்டும் என்ற சகோதரர் ஒற்றுமையை,

     கூடப் பிறந்தவர்க்  கெய்துதுயர் தமது துயர்
     கொள்சுகந் பஞ்சம் மெனக்
     கொண்டுகாந் தேடுபொரு ளவர்தேடு பொருளவர்
     கொள்கோதில புகழ்தம் புகழெனத்
     தேடுற்ற வவர்நிந்தை தன்னிந்தை தந்தவந்
     தீதிலவர் தவமா மெனச்
     சீவனொன் றுடல்வே றிவர்க்கென்ன வைந்தலைச்
     சீரற்ற மணிவாய் தொறும்
     கூடும் லிரையெடுத்தோருடனி றைத்திடுங்
     கொள்கைப் பிரிவின்றியே
     கூடி வாழ் பவர் தம்மை யேசகோ தரரெனக்
     கூறுவது வேகம் மாம்"           (அறப்பளீசுவரர் சதகம்,பா-4)

குடும்பத்தில் எப்படிப் பொருள் சேர்க்க வேண்டும், எப்படிச் செலவழிக்க வேண்டும்,குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்பதை,

     புண்ணிய வசத்தினால் செல்வமது வரவேண்டும்
     பொருளை ரட்சிக்க வேண்டும்
     புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
     போதவும் வளர்க்க வேண்டும்
     உண்ண வேண்டும் பின்பு நல்ல வஸ்த்ராபரணம்
     உடலில் தரிக்க வேண்டும்
     உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்குதவி
     ஓங்கு புகழ் தேட வேண்டும்
     மண்ணில் வெகு தர்மங்கள் செய்ய வேண்டும்

                                 (அறப்பளீசுவரர் சதகம்,பா-7)
என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

      தம் குலம் விளங்கப் பெரியோர்கள் செய்து வரும் தான தருமங்களை அவன் செய்து வரவேண்டும். தானங்கள் செய்தும், தந்தை, தாய், குருமொழி மாறாது வழிபாடு செய்தும் வரவேண்டும். இங்கித (இணக்கமான) குணங்களும், வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் (நல்லொழுக்கம்) இவையெல்லாம் உடையவனே புதல்வன் என்று சொல்லத் தகுந்தவன். இவனை ஈன்றவனே நல்ல புண்ணியம் செய்தவன் என்பதை,

     "தங்குலம் விளங்கிடப்  பெரியோர்கள் செய்துவரும்
     தருமங்கள் செய்து வரும்
     தன்மமிகு தானங்கள் செய்தலுங்
  கனயோக
     சாதகனெனப் படுத்தும்
     மங்குதல் லிலாததன் றைந்தைதாய்
  குரு மொழி
     மாறாது வழிபாடு செயலும்
     வழிவழி வருந்த மாதுதேவ சாபத்தின்
     மார்க்கமுந்
  தீர்க்கா யுளும்
     இங்கிலாந்து குணங்களும் வித்தையும் பத்தியு
     மீகையுஞ் சன்மார்க் கமு
     மிகையில்லை முடையவன் புதல்வனா மவனையே"

                                      (அறப்பளீசுவரர் சதகம்,பா-3).
என்ற பாடலடிகள் மூலம் வெளிப்படுகிறது. 

நல் மாணாக்கர் இயல்பு

      கல்வி கற்றுத்தரும் ஆசிரியர், மனம் புண்படும்படி திட்டினாலும்(வைதல்), கோபத்தை வெளிப்படுத்தினாலும் மனம் கோணாமல் நாணாமல், எனக்கு தாய், தந்தை , உடல்,பொருள், ஆவி அனைத்தும் தாங்கள் தான் எனப் பணிந்து கனிவோடு இரவு பகல் பாராமல் தேவையான உதவிகளைச் செய்து அவரது பாதங்களில் தஞ்சம் அடைந்து உபதேசங்களைப்  பெற விரும்புபவன் நல்ல மாணாக்கன் என்பதை,

     வைதாலும் ஓர் கொடுமை செய்தாலுமோ சீறி
     மாறாதிகழ்ந்தாலுமோ
     மனது சற்றாகிலும் கோணாது நாணாது
     மாதா பிதா எனக்குப்
     பொய்யாமல் நீயென்று கனிவொடும் பணிவிடை
     புரிந்து பொருள் உடல் ஆவியும்
     புனித உன் தனதெனத் தத்தம் செய்து இரவு பகல்
     போற்றி மலரடியில் வீழ்ந்து
     மெய்யாகவே பரவி உபதேசம் அது பெற
     விரும்புவோர்   நற்சீடராம்       (அறப்பளீசுவரர் சதகம்,பா-6)

என்ற பாடலடிகள் மூலம் உணரமுடிகிறது. மேலும் செய்ந்நன்றி மறவாமல் தீமையை மறத்தல், கோடி கோடியாம் செல்வம் வரினும் பிறர் மனைவி மீது விருப்பம் கொள்ளாமல் இருத்தல், கையில் கண்டெடுத்தப் பொருளைப் பொருளுக்குச் சொந்தமானவரிடம் கொண்டு சேர்த்தல், ஒருவர் செய்யும் தருமம் கெடாமல் காத்தலும், கோடி பொருள் கிடைத்தாலும் வீதியில் பொய்யுரைக்காமல் இருத்தல், பூமியில் தலை போகும் நிலை வந்தாலும் பொய் சொல்லாமல் வாழ்தல் போன்ற ஒழுக்க நெறிகளை,

      செய்ந்நன்றி மறவாத பேர்களும் ஒருவர் செய்
     தீமையை மறந்த பேரும்
     திரவியம் தர வரினும் ஒருவர் மனையாட்டி மேற்
     சித்தம் வையாத பேரும்
     கைகண்டெடுத்த பொருள் கொண்டு போய்ப் பொருளாளர்
     கையிற் கொடுத்த பேரும்
     காசினியில் ஒருவர் செய் தருமங் கெடாதபடி
     காத்தருள் செய்கின்ற பேரும்
     பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கு அழிவு
     புகலாத நிலை கொள்பேரும்
     புவிமீது தலை போகும் என்னினும் கனவிலும்
     பொய்மை உரையாத பேரும்            (அறப்பளீசுவரர் சதகம்,பா-16)
என்ற பாடலடிகள் மூலம் வெளிப்படுத்துகிறது.

இல்லறம்

      நல்லறமாக இல்லறத்தை நடத்துபவன் தந்தை, தாய், குருவை, இட்ட தெய்வங்களை, சன்மார்க்கம் (நல்லொழுக்கம்) உள்ள மனைவியை, தவறாத சுற்றத்தை, ஏவாத (குறிப்பறிந்து நடக்கும்) மக்களை, தனை நம்பி வருவோர்களைச் சிந்தை மகிழ்விக்க வேண்டும் என்பதை,

     தென்புலத்தோர் வறிஞரைத்
     தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
     தேனுவைப் பூசுரர் தமைச்
     சந்ததஞ் செய்கடனை என்றுமிவை பிழையாது
     தான் புரிந்திடல் இல்லறம்        (அறப்பளீசுவரர் சதகம்,பா-95)

என்ற வரிகள் உணர்த்துகின்றது.

முடிவுரை

      ஒரு மனிதன் என்பவன் சமூகத்தின் அங்கம். அவனது  செயல்கள் அவனுக்கு மட்டுமாய் இருப்பதில்லை. அவனுடைய ஒழுக்கமும், ஒழுக்கக் கேடும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு உறுப்பில் ஏற்படும் புற்று நோய் ஒரு உடலையே அழிப்பது போல, ஒரு தனி மனிதனிடம் இருக்கும் ஒழுக்கக் கேடு சமூகத்தையே அழித்து விடும் ஆற்றல் படைத்தது. எனவே தான் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு இத்தகைய இலக்கியங்கள் வழி ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

துணை நின்ற நூல்கள்

1)    சதுரகிரி அறப்பளீசுர சதகம், அம்பலவாணக் கவிராயர், பி. இரத்தின
     நாயகர் ஸன்ஸ்,திருமகள் விலாச அச்சியந்திர சாலை, சென்னை-1934.

2)    மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம், 2007.

3)    தமிழ்ச் சதக இலக்கியம்’, சு. சிவகாமி.

4)   தமிழ் இணையக் கல்விக் கழகம், ww.tamilvulu.org…

5)   முனைவர் ஜம்புலிங்கம்-அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம் : பதிப்பாசிரியர் மணி.மாறன்