ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் போர் அறம் (War Virtues upheld in Kambaramayanam)

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 07 Jan 2023 Read Full PDF

கம்பராமாயணத்தில் போர் அறம் (War Virtues upheld in Kambaramayanam)

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை.

ஆய்வுச் சுருக்கம்

புற ஒழுக்கமான போர் செய்வதிலும், வெற்றி பெறுவது தான் நோக்கம் என்றாலும், அதிலும் அறம் பின்பற்றப்பட்டது. கம்பராமாயணத்தில் கதையின் நாயகன் இராமன், இலட்சுமணன், அனுமன் ஆகியோரும், எதிர்நிலைத் தலைவனான இராவணன், கும்பகர்ணனும் சில இடங்களில் போர் அறத்தை மேற்கொண்டதைக் கம்பராமாயணத்தின் மூலம் அறிய முடிகிறது. ஆயுதம் இல்லாத நிலையிலும்,, தளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போது நீ வெற்றி பெற்றால் இனி உன்னிடம் போர் புரிய மாட்டேன் என்று கொடுத்த வாக்கினை காப்பாற்றுதலும், போர் அறம் பின்பற்றப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எதிரிக்குப் பயந்து, போரில் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பது வலியுறுத்தப்படுகிறது. போர் செய்ய துவங்கும் முன் தூது அனுப்பும் போர் அறமும், தூதர்களையும், ஒற்றர்களையும் கொல்லக்கூடாது என்ற போர் அறமும் கடைபிடிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. எதிரிகளைச் சோர்வடையச் செய்து அவனைக் கொல்வது, எதிரியைக் கோபப்படுத்தி அதன் மூலமாக அவனை வெல்வது போன்ற போர் உத்திகளும் பின்பற்றப்பட்டதை கம்பராமாயணத்தின் வழி அறிய முடிகிறது. வாலியைத் தான் மறைந்திருந்துத் தாக்கிக் கொன்றதையும், போர் அறம் துறந்ததையும், அதை இராமனே ஒப்புக்கொள்வதையும், கம்பராமாயணத்தின் வழி அறிய முடிகிறது.

திறவுச்சொற்கள் : போர் அறம், புறங்கொடாமை, தூதர், ஒற்றர், வாக்குறுதியை மதித்தல், போர் உத்தி.

Abstract

 Victory being the ultimate aim in any battlefield, external discipline of virtues were upheld by the Warriors in our ancient history and Puranas. Through Kambaramayana, we became aware that how these virtues have been meticulously handled by the Great war Heroes namely Rama, the Hero of Ramayana, his Legendary Warrior Brother Lakshmana, and Jai Hanuman, the true disciple of Lord Rama apart from Opponent warriors like Raavana and Kumbakarna during the course of the War several times. Even in the state of being unarmed, and in dire state of weakness in the midst of the War, the commitment of not using any kind of power or weapon against the enemy which is a special kind of virtue that has been very well established during the battles of yester years.  It is emphasized that one should not flee from the enemy and turn his back on the battle. It is also known that the virtue of sending Messengers before the battle for its avoidance and the attitude of not killing Messengers and Spies has also come into light through Ramayana and other epics. It is also known through Kambaramayana that several strategies of war such as attacking and killing   the enemy when he becomes tiresome together with provocation of his anger are mostly adhered tactics to gain victory in the war.  In the same way in Kambaramayana it has also been very well established about the repentance of Rama who himself has confessed openly that he has renounced the virtue of War by killing Vaali hiding behind a tree which has made a permanent dent on his character.:

Keywords: War Virtue, Unpredictability, Messenger, Spy, Honouring the Promise, War Strategy

முன்னுரை

சங்க இலக்கியத்தில் தமிழ் வேந்தர்களின் அகவாழ்வும், புறவாழ்வும் புலவர்கள் போற்றும் பெருவாழ்வாக இருந்ததை அறிந்து கொள்ளமுடிகிறது. அவர்கள் அகவாழ்வை மட்டுமன்றி, புறவாழ்வையும் போற்றி மேற்கொண்டனர். அன்பு நெறிப்பட்ட அகத்திணை வாழ்வை, தம் வாழ்க்கையில் வாழ்ந்து திளைத்தனால், தமிழ் வேந்தர்கள் போர் மேற்கொண்டபோதும், போர் நடைபெறப் போவதை அறிவித்தும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறித்திய பின்பே, போர் மேற்கொண்டனர். நடைபெற்றது போராயினும் அதிலும், தாம் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், போர் அறத்தை மேற்கொண்டனர்.கம்பராமாயணத்தில் போர் அறம் குறித்து ஆராய்வோம்.

போர் அறம்

படைக்கலன்களை இழந்து நிற்கும் பகைவனைக் கொல்லக்கூடாது என்பது போர் மரபு. அனைத்தையும் இழந்து நிராயுதனான நிலையில் நிற்கின்றான் இராவணன். அவ்விதம் ஆயுதம் இன்றி நிற்கும் நிலையில் இருக்கும் அவனை கொல்லுதல் தவறானது என்பது இராமன் போற்றும் போர் அறம். இராமனுக்கும், இராவணனுக்கும் இறுதிப் போர் நடக்கிறது. இதுவரை அனுமன் தோளிலிருந்து போர் புரிந்த இராமனுக்கு, இந்திரன் அனுப்பிய தேரும், தேரோட்டி மாதலியும் கிடைத்திருக்கிறார்கள். அதில் ஏறி இராமன் போர் செய்ய, இருவருக்கும் மிக பயங்கரமான, உக்கிரமான போர் நடைபெறுகிறது .இராமன் தன் அம்புகளை ஏவி இராவணனை முற்றிலுமாக அம்பு மாரியால் மூடி விடுகிறார். இராவணனின் ஒவ்வொரு மயிர்க் காலிலும், இராமனின் அம்பு துளைத்து இருக்கிறது. உயிர்ப்பு என்ற   ஒன்று இல்லாமல் போகும் நிலைக்கு, இராவணன் தள்ளப்படுகிறான். இராவணனுடைய மனதில் வன்மமும், சினமும் இன்னமும் ஆடாமல் நிற்கின்றன.  ஆனால் உடல் சோர்ந்து போய், தன் நிலைகுலைந்து வருந்திநிற்கிறான்.

                     "மயிரின் கால் தொறும் வார் கணை மாரி புக்கு

                       உயிரும் தீர உருவின ஓடலும்

                   செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து

                   அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான்"

                                                                                                (இராவணன் வதைப்படலம் 3810)

 இவ்வாறு தன் அம்பு மாரியால், நிலை குலைந்து நிற்கும் இராவணனை, இராமன் பார்க்கின்றான். இராவணன் கைகளில் இருந்து படைக்கலன்கள் எல்லாம் நழுவி விழுகின்றன. அவனுடைய பரந்த உடம்பு, ஒரு நிலையில் தள்ளாடுகிறது.  இறுதியில், இராவணன் மூர்ச்சையாகித், தேர்த் தட்டில் விழுந்து விடுகிறான். இந்த நிலைமையைக் கண்ட இராமன் உடனடியாகப் போர் செய்வதை நிறுத்தி விடுகின்றான். (போர் செய்யாமல் இருப்பதும் அரசியல் அறம் என்றே கம்பர் கூறுகிறார்).

படைக்கலன்களை, இழந்து நிற்கும் பகைவனைக் கொல்லக் கூடாது என்ற போர் அறத்தை போற்றுகின்றான் இராமன். எனவே, ’இன்று போய் நாளை ஏராளமான படைக்கலங்களுடன் வா’ என்று சொல்லி இராவணனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து அனுப்புகிறான்.

                        "ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

                          பூளை ஆயின கண்டனை, இன்று போய் போர்க்கு

                          நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின்

                         வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்"

                                                                                             (முதல் போர் புரிப்படலம் 1212)

இராமன்  மேற்கொண்ட போர்அறம்

இராமன், கும்பகர்ணனிடம் உன் படை கருவிகளோடு எதிர்த்துப் போரிட பெரும் துணை நிற்கும் படையையும் இழந்தனை. இப்போது என் எதிரே நீ ஒருவனாய் தனித்து நிற்கிறாய். நீதிமானாகிய வீடணனுடன் பிறந்தவன் நீ. உன் உயிரைக் கொல்லாமல் உன்னை விடுகின்றேன். இப்போது திரும்பிச் செல்கிறாயா ?அல்லது என்னுடன் போரிட வருகின்றாயா? உனக்கு பொருத்தமானதை நன்றாக ஆராய்ந்து தெளிவாகச் சொல் என்றான்.

                      "ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை

                           எதிர் ஒரு தனி நின்றாய்

                   நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்

                           நின் உயிர் நினக்கு ஈவென்

                   போதியோ பின்றை வருதியோ அன்று எனின்

.                                   போர் புரிந்து இப்போதே

                   சாதியோ உனக்கு உறுவது செல்லுதி

                              சமைவுறத் தெரிந்து அம்மா"

                                                                                        (கும்பகர்ணன் வதைப் படலம் 1536)

கையில் படைக்கலன் ஏதுமின்றி இருந்தவனிடம், போர் செய்து அவனைக் கொன்று விடாமல் இராமன் போர்அறம் காத்தான் என்பதை அறியமுடிகிறது.

இராமன் போற்றும் வில்லறம்.

தேவர்களை உய்விப்பது செய்து முடிக்க வேண்டிய கடமையாயினும், அதற்காக அறமற்ற செயலை செய்யேன், ஆயுதம் இழந்து மூர்ச்சையாகி விழுந்தவனைக் கொல்லேன் என்பது இராமன் போற்றும் வில்லறம்.

இந்திரஜித்திற்கும்,,இலட்சுமணனுக்கும் போர் நடைபெறுகிறது. இருவரும் செய்யும் நீண்ட போரில்,, ஒருவர் மற்றொருவரை, வீழ்த்த இயலவில்லை. கண்ணிமைக்கும் நேரத்திற்குள், இந்திரஜித் மாயமாக ஆகாயத்தில் மறைந்து விடுகிறார். அவனை இலட்சுமணனால் காணவோ, உணரவோ முடியவில்லை. அவன் இந்த சமயத்தில் தப்பிப் போய்விட்டான் என்றால், நம்முடைய படைகள் முற்றிலுமாக அழிந்து போகும். எனவே இவன் மீது பிரம்மாஸ்திரம் ஏவ போகிறேன் என்ற போது, இராமன் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அறத்தினை மீறல் கூடாது. அறவழி அன்று, மற்றொரு வழியில் செல்வது தகாது என்று  தான் கொண்ட கொள்கையை வலியுறுத்தி, இந்திரஜித் மீது பிரம்மாஸ்திரம் ஏவக்கூடாது என்கிறான்.

                    “ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய்

                  ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இவ்உலகம்

                 மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகலது என்றான்

                சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடைத் தம்பி”

                                                                           (பிரம்மாத்திரப் படலம் 2462)

அதேக் கணையை, வானில் மறைந்து நின்று இந்திரஜித், இலட்சுமணன் மேல் ஏவி, அவனை வீழ்த்துகிறான். அனுமன், மருத்துவமலையைக் கொண்டு வந்ததால், இலட்சுமணன் உயிர்ப் பிழைத்தான்.

நிகும்பலையில், இந்திரஜித் யாகம் செய்கிறான். இதை அறிந்த வீடணன் இராம, இலட்சுமணரிடம் கூற, அந்த யாகம் முடிந்து போனால், பின்னர் இந்திரஜித்தை, யாராலும் வெல்ல முடியாது என்று கூறிய நிலையிலும், போர் அறங்களை மீறக்கூடாது என்றே இராமன் கூறினான். முன்பு தான் சொன்ன பிரம்மாஸ்திரம் ஏவாதே என்று கூறியதையே, மீண்டும் வலியுறுத்துகிறான். இந்திரஜித் பிரம்மாஸ்திரம் ஏவினால், அதை விலக்குவதற்காக, நீயும் அந்த அம்பை ஏவலாம் என்று, முன்னர் கூறிய நிபந்தனையைச், சற்றேத் தளர்த்துகிறான். ஆனால் நீயாக முன்வந்து இதை ஏவாதே என்கிறான். இந்திரஜித்துவைக் கொல்வது என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது தான் என்றாலும், இவ்வறம் போற்றுவது, அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இராமபிரான் நம்பினான்

               “தம்பியைத் தழுவி ஐய தாமரைத் தவிசின் மேலோன்

                வெம்படை தொடுக்கும் ஆயின் விலக்குமது அன்றி வீர

               அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த காலை

               உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான்”

                                                                                      (நிகும்பலை யாகப்படலம் 2877)

இவ்வாறு இராமன் போர்அறம் மேற்கொண்டதை அறியமுடிகிறது.

இலட்சுமணன் மேற்கொண்ட போர்அறம்

அதிகாயன் வதைப் படலத்தில், இலட்சுமணன் ஏவிய நூறு அம்புகள் தனது கவசத்தைக் கிழித்துக்கொண்டு உட்புகுந்தவுடன், தளர்ச்சி தலைக் காட்ட, அதிலிருந்து மீளும் அளவும், தனது வில்லைத் தேரின் மீது ஊன்றிக் கொண்டு அதிகாயன் இளைப்பாறினான். அச்சமயத்தில் அந்தக் களத்தில் இருந்த அவனுடைய சேனைகள் யாவற்றையும், இலட்சுமணன் தன் அம்புகளால் துண்டு துண்டாகி, கோடிக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுவிட்டான். ஆனால் அதிகாயனின் தளர்ச்சி நீங்கும் வரை, இலட்சுமணன் அவன் மீது அம்பு எய்தலை நிறுத்தினான்.

                      "நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் குழைவு தோன்றத்

                        தேறல் ஆம் துணையும் தெய்வச்சிலை நெடுந் தேரின் ஊன்றி

                   ஆறினான் அதுகாலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம்

                   கூறுகூறாக்கி அம்பால் கோடியின் மேலும் கொன்றான்"

                                                                                        (அதிகாயன் வதைப்படலம் 1862)

கையில் ஆயுதங்கள் இருந்தபோதிலும், நேராக எதிர்த்துபோர் செய்யும் வல்லமையின்றி, உடல் தளர்ச்சியுடன் இருந்தவனைக் கொல்லக்கூடாது. தளர்ச்சி நீங்கும் வரைக் காத்திருந்து, அவன் உடல்நிலை தேறி வந்தப்பிறகே, போர் செய்ய விருப்பம் கொண்டு இலட்சுமணன் காத்திருந்ததை அறியமுடிகிறது.

இலட்சுமணன் 'இது ஓர் புள்போர்' என்று கூறி அப்பால் அகன்றான்;

போர்க்களத்தில் சீற்றத்துடன் நீலனும், மாலியும், நரசிம்மனும், இரணியனும் போன்று தோன்றிப் பொருதனர். நீலன், மலை ஒன்றை வீசி, மாலியின், வில்லை இரு கூறாக்கினான். மாலி வாளைக் கையில்கொண்டு, நீலனுடன் அடர்ந்தான். அப்போது சற்றுத் தொலைவிலிருந்த குமுதன் மலையைக்கொண்டு, மாலியின் தேரைத் தூளாக்கினான். அப்போது, இலட்சுமணன் தான் எய்த அம்பினால், மாலியின் கையைத் துண்டித்தான். தோளும், வாளும் தொலைந்த மாலி, வீரம் தொலையாது, இலட்சுமணனோடு போர் புரியத் தொடங்கினான். அப்போது இலட்சுமணன், மாலியை நோக்கி, 'என் போலியர் வலியிழந்தாரொடு புன்போர் புரியார்' என்று புகன்றான். அப்பால் அகன்றான். வன்தோளும், வலிய வாளும் இழந்தவனோடு போரிடலாமா? என நினைத்தான்.

                                 "மின்போல் மிளிர்வாளொடு தோள்விழவும்

                               தன்போர் தவிராதவனை, சலியா,

                               என்போலியர் போர் எனின், நன்று; இது ஓர்

                                புன்போர்' என, நின்று அயல் போயினனால் "

                                                                                   (படைத்தலைவர் வதைப்படலம் 2326)

வானரவீரர்கள், இலக்குவனை நோக்கி, 'யார் வீரதை இன்ன செய்தார்கள்?' யார் தம் வீரத்தன்மையால் இத்தகைய செயல்களைச் செய்தார்கள்? என்று புகழ்ந்து கூறி வியந்தனர்.

இவ்வாறு இலட்சுமணன் போர்அறம் மேற்கொண்டதை அறியமுடிகிறது.

அனுமன் மேற்கொண்ட போர்அறம்

1. அசோகவனத்தை அனுமன் அழித்ததும், முதலில் இராவணனால் அனுப்பப்பட்ட கிங்கரர் அழிந்தனர். அடுத்து இராவணன், சம்புமாலியைப் போர்க்களத்துக்கு அனுப்பினான். அனுமன் போர்க்களத்தில் காற்றாடியாகச் சுழன்றான். அனுமன் அரக்கர்களின் மனதில் ஒரு கணம் தோன்றினான். மறுகணம் அவர்களது கண்களில் தெரிந்தான். தேர்ப்படையினைத் தன் ஒரு கையால் எடுத்துத் தரையில் அறைந்து தேய்த்தான். தன் மற்றொரு கையால், யானைப் படையை வாரி வீசி, உயிர் நீங்க அழித்தான். உருத்திரன் போல் சிறந்து, படை அனைத்தையும் அழித்தான். சம்புமாலி மட்டும் போர்க்களத்தில் தனியனாய்க் கிடந்தான். காலன் போல் சினந்தான். இறந்துபட்ட அரக்கர் சொரிந்த குருதிக் களத்தில் கிளர்ந்த சேற்றில், அவ்வரக்கனது தேர் சிக்கியது. அரக்கன் தவித்தான். தனித்து நின்றே போர் புரிந்து, அரக்கர் படையினரை அழித்த அனுமன், பெரும்படையோடு வந்து துணைவர் அனைவரும் தொலைய நின்ற சம்பு மாலிபால் கருணை கொண்டான்.இரக்கமுற்று சொன்னான் "அரக்கனே, உன்னிடம் உள்ள படைக்கலன்களில்  தேர் ஒன்று தான் எஞ்சியுள்ளது. உன்னுடன் வந்தவர்களில் ஒருவரைக் கூட, காக்கும் வலிமை உன் பால் இல்லை. இப்போது தனி ஒருவனாய் நிற்கின்றாய். என்னுடன் போர் புரிந்தால் சாவாய். அது உறுதி எளியவர் உயிரைக்கோடல் நீதி அன்று .நீ போவாயாக" என்று சொன்னான்.

                     "ஏதி ஒன்றல் தேரும் அஃதால்,எளியோர் உயிர் கோடல்

                      நீதி அன்றால் உடன் வந்தாரைக் காக்கும் நிலை இல்லாய்

...                  சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய்

                     போதி என்றான் பூத்த மரம்போல் புண்ணால் பொலிகின்றான்"

                                                                                           (சம்புமாலி வதைப்படலம் 857)

கையில் ஆயுதம் இல்லாமல், இருந்த சம்புமாலியை, அனுமன் கொன்று விடாமல், சென்றுவிடு, என்று கூறிப் போர் அறம் காத்தான் என்பதை அறியமுடிகிறது.

2.   அனுமன், இராவணனிடம், (முதல் போர் புரி படலம்) ’என் தோள் வன்மையால் நான் ஓங்கி உன்னைக் குத்தவும், நீ சாகாமல் இருந்தாயானால், பின்னர் நீ என்னை உன் வரிசையான கைகளால், வன்மையுடன் குத்துவாயாக, நீ குத்தவும் நான் இறவாது இருப்பேன் என்றாலும், பின்பு உன்னை எதிர்த்துப் போர் செய்ய மாட்டேன்’ என்றான். அனுமனின் கைக்குத்து பட்டவுடன், இராவணனின் களங்கத்தின் தன்மையுடன் மை தொகுதியான அழகைக் கொண்டு விளங்குகின்ற வைரம் போல உறுதியான பரந்த மார்பிலே, திக்குகளில் உள்ள சினம் கொண்ட திக்கு யானைகளின் வெற்றி பொருந்திய கொடிய கொம்புகள் புகுந்த முடிந்தனவாகி, அந்த மார்பில் தங்கி இருந்தவை, அவ்ராவணனின் புகழ் நீங்கியது என்னுமாறு, முதுகின் வழியே சிந்தின. இராவணன் தன் கண்களில் நின்று தீப்பொறி பறக்க நின்று, உள்ளே உலவும் நெடிய காற்று பெருவண்மை கொண்டு, உலக உயிர்கள் ஒதுங்கி வருந்தும்படி மோதுதலால் தள்ளாடிய மேரு மலை போலத் தளர்ந்தான். அனுமனிடம், இராவணன், ’நான்முகனே என் எதிரில் நின்று நீ தளர்ச்சி அடைவாயாக’ என்ற சாபம் தந்தாலும், சிறிதும் தளராதவன் நான். வலி என்பதை உன்னால் இப்போது அறிந்தேன். வெற்றியை உடையவனே, இதனால் நீ என்னை வென்றவன் ஆனாய் என்றான்.

                        “வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய்

                         அலி என்பவர் புறம் நின்றவர் உலகேழினும் அடைத்தாய்

                         சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன்

                        மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய்”

                                                                        (முதற்போர்புரிபடலம் 1138)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

எனினும் வலியவனான அனுமான் மேல், இராவணன் தனது கையால் குத்தித் தள்ளியபோது, தளர்ந்த வெள்ளி மலையான கயிலை மலையைப் போலத் தளர்ச்சி அடைந்தான்.

கும்பகர்ணன்  மேற்கொண்ட போர்அறம்

நீலன் என்னும் வானர வீரன், கும்பகர்ணனது  தேரின் எதிரே ஓடிச்சென்று தன் கைகளை உயர்த்திக் குத்தினான். கால்களால் பலமுறை உதைத்தான். கைகள் சலித்துப் போக, கால்களும் நிற்க முடியாமல் நிலைத் தடுமாறத், தன் எண்ணம் நிறைவேறப் பெறாமல், நெய் தன்னிடம் பெய்யப் பெற்ற நெருப்பைப் போலக் கோபம் கொண்டு, மனம் எரிகின்ற நீலனை, அவன் உயிர் இளைத்துத் துடிக்கும்படி, தனது இடக்கையால் அடித்தான் கும்பகர்ணன். ஆனால் இவன் ஆயுதம் இல்லாது வெறும் கையோடு இருக்கிறான் என்று எண்ணி, வலியவனான அந்த கும்பகர்ணன், தனது மூன்று பிரிவுகள் பெற்ற சூலத்தை நீலன் மீது எறியவில்லை.

                   "கைத்தலம் சலித்துக் காலும் குலைந்து தன் கருத்து முற்றான்

                 நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை

                 எய்த்து உயிர் பதைப்பஅன்னான் ஏற்றினான் இடது கையால்

                 மெய்த்தலைச் சூலம் ஓச்சான் வெறுங்கையான் என்று வெள்கி"

                                                                                             (கும்பகர்ணன் வதைப்படலம் 1398)

ஆயுதமின்றியோ, தளர்ச்சியுடன் இருப்பவனையோ,  கொல்லக்கூடாது. அதுவே போர்அறம் என்பதை இராமன், இலட்சுமணன், அனுமன்  மட்டுமல்ல அரக்கரான கும்பகர்ணனும்  அத்தகைய போர்அறத்தை மேற்கொண்டான் என்பதை அறியமுடிகிறது.

தூடணன் சொன்ன போர்அறம்

இருவர் பொருது நிற்கும் போர்க்களத்தில் எதிரியின் போர் ஆற்றலைக் கண்டு, உயிருக்குப் பயந்து புறமுதுகிட்டு ஓடக்கூடாது. போர்க்களத்தில் பூணவேண்டியது அஞ்சாமை என்ற கவசமே என போர்அறம் பேசி, வீரர்களை ஒருங்கிணைத்து, வீரத்துடன், நம்பிக்கையுடன் போர் செய்யச் செய்து தம் மன்னனுக்கு வெற்றி பெறச் செய்யவேண்டியது போர் அறமாகும்.

சீதையைக் கவர முற்பட்ட சூர்ப்பணகையின் மூக்கை, இலட்சுமணன் தடிந்தான். அவள் ஓடினாள். தன்னைக் காவல் புரியுமாறு இராவணனால் நியமிக்கப்பட்ட கரனிடமும், தூடணனிடமும், திரிசிரனிடமும் ஓடித் தன் குறையைக் கூறினாள்.. மூவரும் பெரும் படையுடன் புறப்பட்டனர். இராமன், சீதையைக் காத்திடுக என்று இலட்சுமணனிடம் கூறித், தான் ஒருவனாகவே போருக்குப் புறப்பட்டான்,  தூடணன், இராமனுடன் போரிட்டான். படைத்தலைவர் பதினால்வரும், கரனின் தம்பி திரிசிராவும் முன்னரே இராமனால், போரில் மாண்டனர். அவர்கள் மாண்டது கண்ட அரக்கர் சேனை சிதறி ஓடிற்று. ஓடும் வீரர்களைக் கண்டு, தூடணன் சொன்னது "ஓடாதீர்கள். என்று கூக்குரல் கொடுத்து நிறுத்தினான். தப்பிக்க எண்ணும் அரக்கர்களுக்கு, ஊக்க உரைகளை வீரம் வெளிப்பட விளம்பினான்.

ஆண்மையுடன் வீரர்களாகப் போர் புரியுங்கள். கைவளை அணிந்த உங்கள் வீட்டுப் பெண்கள் புறங் கொடுத்து ஓடுபவரை மதியார் என்று! "போர் வீரர்களே! பயம் பழிப்பைத் தரவல்லது; பயத்தை மனத்தில் கொண்டு ஒரு பிழைப்பைப் பிழைத்திருக்கும் கேவலமான ஆடவரைப் பெண்களும் மதியாது நிற்பர். அவ் ஆண்களைக் கண்டாலே பெண்கள் கூச்சப்படர். அதை நினையுங்கள்,. உயிர் அச்சம் கவசமல்ல, வீரமே கவசம்; உயிர் வாழ, அஞ்சாமையேக் கவசமாகும்.

                  "வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாமும்

                  கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூசார்.

                  நிச்சயம் எனும் கவசம் தான் நிலை நிற்பது அன்றி

                 அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அருந் துணை ஆமோ? "

                                                                                                              (கரன் வதைப் படலம் 501)

போர்க்களத்தில் பூண வேண்டியது அஞ்சாமை என்ற கவசமே

 "இராக்கதர்களே! முன்பு தேவர் தலைவனான இந்திரனோடும். முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளோடும் போரிட்டோமே, அப்பொழுதெல்லாம் நம்மவர் அஞ்சி ஓடியதில்லையே! உங்களுக்கு எதிராக முன்பெல்லாம் அஞ்சிப் புறமுதுகிட்ட தேவர்களிடமிருந்து இந்த முறையை, எம் முறை கற்றீர்கள்?                                                (கரன் வதைப் படலம் 502)

'இத்துணை வீரர்கள் இந்தப் பக்கம் இருக்கின்றீர்கள். அங்கே தனி ஒரு மானிடன். அந்தத் தனி மானிடனிடம் அஞ்சி ஓடி ஒளிக்க முற்பட்ட நீங்கள் ஆண்மையாளர்களா? வீரம் இழந்த நீங்கள் எவ்வாறு உங்கள் இல்லம் சென்று உரிமை மகளிரிடம் இன்பம் துய்ப்பீர்கள்? சினத்தால் சிவந்த உங்கள் கண்கள் அச்சத்தால் வெளுத்து விட்டன. புறமுதுகிட்டு ஊர் புகல் உற்றீர்!

(கரன் வதைப் படலம் 503)                      

உங்கள் மனைவியர் மார்பை எவ்வாறு இந்த வெட்கத்துடன்  அணைவீர்கள்?

உங்கள் கண்கள் இயல்பாகச் செம்பு போல் சிவந்தவை. ஆனால் நீங்கள் கொண்ட அச்சத்தால் அவை பால்போல் வெளுத்துவிட்டன. உங்கள் மனைவியரைக் கண்டதும் எந்த விழுப் புண்ணைக் காட்டிப் பெருமை கொள்வீர்கள்? விழுப்புண் காட்டாது இங்கு அஞ்சிக் காடுகளில் நுழைந்து ஓடும்போது, உங்கள் முதுகில் படும் செடி, கொடியும், மரக்கிளையும் உண்டாக்கும் புண்களையா காட்டுவீர்கள்?

(கரன் வதைப் படலம் 504)                      

நம் தலைவன், இராவணனின் தங்கைக்கு உற்றது என்ன? அவளது அறுபட்ட மூக்கோடும் ஏற்பட்ட பின்னடைவுடன்,, உங்களது முதுகோடும் ஏற்பட்ட பழியையும் உண்டாக்கி விட்டீர்கள். பகைவனாக உள்ள ஆடவன் ஒருவனது போராண்மை பெரிதா? தேவர்களின் எதிரில் பின்னிடாத நீங்கள் இம் மானுடனிடம் பின்னிடலாமா?

(கரன் வதைப் படலம் 505,506 )                      

இவ்வளவு அச்சம் கொண்ட நீங்கள், இனி வீர வாழ்க்கையை விடுத்துவிட்டு வாணிகம் செய்யப் போங்கள். அல்லது நிலத்தை உழும் வேளாண்மைத் தொழிலை ஏற்கப் போங்கள். இவ்வாறு பலவாறு தூடணன் ஏசிய வீரமும், ஏளனமும் கலந்த சொற்களைக் கேட்ட அரக்கர்கள் போர்க்களம் திரும்பினர். 

தூடணன் ஐந்து வகைகளில் வீரமொழி வழங்க, சிந்தி,சிதறியப் படைகள் அவனுடன் ஒன்று திரண்டன. ’ஊக்கம் யாரையும் ஒன்றுபடுத்தும்’ என்பது உண்மை. தூடண வீரன் அக்கடமையைப் புரிந்தான்.

போர்க்களத்திலும் அளித்த வாக்கைக் காப்பாற்றுதல்

1.அனுமனைக் கும்பகருணன் தன்னுடன் போரிட அழைக்க, அவன்  மறுத்து விட்டான். அனுமன் இராம நாமம் கூறியபடி கும்பகருணன் நெற்றியில் படும் வண்ணம் ஒரு பெருங்குன்றை எடுத்து வீசினான். கும்பகருணன் அம்மலையைத் தலைக்கு மேலேயேத் தாங்கி, அதை அனுமன் மார்பு நோக்கி வீசினான்.

அனுமன் மாபெரும் மலையைத் தூக்கி, அரக்கனை நோக்கி: "கும்பகருணா! இம் மலையை உன்மேல் எறிவேன். உன் வலி அழியும். அவ்வலி அழியாவண்ணம் இம்மலையை ஒழித்தால், உன் வலிமை பெரிது என ஒப்புக் கொள்வேன். பெரும் புகழ் பெறுவாய். அதன் பின் உன்னுடன் போர் செய்யேன் என்றான்.

                    "எறிகுவென் இதனை நின்மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்

                      மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை

                     அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்

                     பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் "

                                                                    (கும்பகர்ணன் வதைப் படலம் 1412)

 கும்பகருணன் உரக்கச் சிரித்து எதிர் சூளுரைச் சொன்னான். "இம் மலையை எதிர் ஏற்பேன். அப்போது யான் சிறிது சோர்வுற்றாலும், உனக்குத் தோற்றவனாவேன். உன்னை வலியன் என ஒப்புக் 'கொள்வேன்' என்றான் (1413,1414,1415))

அனுமன் மலையை எறிந்தான். கும்பகருணன் அதனைத் தோள் மேல் ஏற்றான். 'இவன் வல்லமை சொல்லும் தரமன்று; இவனது தோள்களைப் பிளக்க வல்லது ஏதேனும் இருந்தால், அது இராமபாணமே' என்று கூறி, அப்பால் சென்றான் அனுமான். பின்னர் கும்பகருணனின் சூலத்தை அனுமன் முறிக்க, அரக்கன் வானரர் வீரனைப் போருக்கு அழைக்க, இவன் மறுத்தான் என்பதையும் பார்க்கலாம்.

அனுமன், கும்பகர்ணனிடம் முன்பே இனி உன்னுடன் போரிடமாட்டேன் என்று கூறியதால், மறுபடியும் கும்பகர்ணன் போருக்கு அழைத்த போதும், முன்பு இனி உன்னை எதிர்த்து போரிட மாட்டேன் என்று கூறிப் போரை முடித்துக் கொண்ட பிறகு, உன்னுடன் போரிடுவது பிழையாகும் என்று கூறிவிட்டு, அனுமான் அங்கிருந்து அகன்று போனான்.

                    " என்னோடு பொருதியேல் இன்னும் யான் அமர்

                      சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லவும்

                     முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய

                     பின் இலை பழுது எனப் பெயர்ந்து போயினான் "  

                                                                                                   (கும்பகர்ணன் வதைபடலம்1475)

ஒருவர் மற்றொருவர்க்கு ஒரு வாக்குக் கொடுத்தால், அதை உறுதியாகக் காப்பாற்ற வேண்டும். அனுமனும் தான் தந்த வாக்குறுதியைப் போர்க்களத்திலும் காப்பாற்றினான்.

இராமன் கூறும் போர் உத்தி;

1.இந்திரஜித் மெலிவடையும் சமயம் பார்த்து, உன் வலிமையான வில்லில் இருந்து, அவன் மார்பை நோக்கி அம்பு எய்வாய். அதன் மூலமாக அவனைக் கொல்லும் செயலை ஆற்றுவாய். பகைவன் வலிமை இழக்கும்போது, அவன் சோர்வடையும் போது, அவனைக் கொல்வது போர்அறம். வீணாக பல வகையானப் போர் செய்து விதவிதமான கருவிகள், வெவ்வேறு வகையான போர், நெறி, தனித்தனியான அம்புகள், ஆயுதங்கள் இவற்றையெல்லாம் நீ பயன்படுத்த தேவையே இல்லை. இந்திரஜித் வல்லவன். அவன் தனக்குக் கைவந்த அந்த மாயப்போர் முறையில் இறங்கும்போது, அவற்றைத் தகுந்த முறையில் தடுத்து விடு. அவன் ஏவ, ஏவ அவன், விதவிதமான போர்களைச் செய்யச் செய்ய, அவற்றை மிகச் சரியான விதத்தில் தடுப்பதிலேயேக் கவனமாக இரு. இதை நீ தொடர்ச்சியாகச் செய்து வந்தாலே போதும். நீயாக வேறு எதுவும் வழிந்து இழுத்து போட்டுக் கொண்டு செய்யத் தேவையில்லை. இந்த வகையிலேயே அவனைச் சோர்வடைய வைத்து, அவனை நலிவடைய வைத்து, அவனே, களைத்து ஓய்ந்து போகும்போது, அவனைக் கொன்றுவிடு என்று நல்ல அறிவுரை கூறினான்.

                  “பதைத்து அவன் வெம்மை ஆடிப் பல் பெரும் பகழி மாரி

                   விதைத்தவன் விதையா நின்று விலக்கினை மெலிவு மிக்கால்

                உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தைக்  கழிய ஓட்டி

                வதைத் தொழில் புரிதி சாபநூல் நெறி மறப்பிலாதாய்”

                                                                                     (நிகும்பலை யாகப் படலம் 2880)

2. இந்திரஜித்தை சினமுறச் செய் என்கிறான். "பதைத்து அவன் வெம்மைஆடி, பல் பெரும் பகழி மாரி....விதைத்தவன் விதையா நின்று விலக்கினை"

’ வெம்மையாடுதல்’ என்பது எல்லையில்லா சினம் கொண்டு வெகுண்டு நிற்பதைக் குறிக்கும். தான் உணர்ச்சிவசப்படாமல், இறுதிவரை பொறுமைக் காத்து, பகைவனை உணர்ச்சிவசப்படச் செய்வது என்பது போரில் வெற்றி பெற நல்லதோர் வழி. இந்த வழியில் இந்திரஜித்துவை வெம்மையாட வைத்து, அதனால் அவன் வெளிவரும்போது,  நீ அவனைக் கொல் என்பது இராமன் தம்பிக்குச் சொல்லிக் கொடுக்கும் போர் தந்திரம். பகைவனை வெம்மையாட வைக்கும் வழியும் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. அவன் கொடுக்கும் அடிகளுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டே இரு என்பது தான் அது. பல் பெரும் பகலில் மாறி விதையான் இன்று விலக்கு என்பதுதான் அந்த அறிவுரை. இவ்வாறு செய்து கொண்டிருந்தால், அவன்  மிகுந்த சினம், முற்றும் வகையில் வெளிவரும்போது, அவன் மார்பை நோக்கி, உன் அம்பினைச் செலுத்து என்கிறான். இந்திரஜித், உன் மீது அம்பு தொடுப்பதற்கு முன்னே, நீ அம்பினைத் தொடுத்துப் போர்த் துறைகள் தோறும் தடுப்பதற்குரிய அப்பகைவனது படைக்கலன்களைத் தடுப்பாயாக. பகைவனின் மனக் கருத்தினைக் குறிப்பால் உணர்ந்து, அளவில்லாத வேகத்துடன் காற்றைப் போன்று, அவன் வடிப்பனவற்றைக் கூர்ந்து நோக்கி, அவன்மீது எதிர் அம்புகளைச் செலுத்துவாயாக என்கிறான்.

                   “தொடுப்பதன் முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள் தோறும்

                    தடுப்பன தடுத்தி எண்ணம் குறிப்பினால் உணர்ந்து தக்க

                    கடுப்பினும் அளவு இலாத கதியினும் கணைகள் காற்றின்

                   விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரைவு இலாதாய்”

                                                                                          (நிகும்பலை யாகப் படலம் 2881)

      இராமன் இந்தப் போர் யுத்திகளை கம்பன் தானே வலியுறுத்தவும் செய்கிறான் என்பதனை, ’முதல் உபாயம் யாவும் இயம்பி’ என்று இராமன் தம்பிக்கு சொன்னவை எல்லாம், ’போர் உபாயம்’ என்று கூறுகிறார்.

வில்லறம் துறந்த வீரன்;

வாலியின் மரணத்திற்குப் பின், சுக்ரீவன், இலட்சுமணனால் முடி சூட்டப்பட்டு இராமனின் ஆணையை ஏற்று கிட்கிந்தை செல்கிறான். அப்போது குரங்கு கூட்டங்களும், ரிஷ்ய முக மலையிலிருந்து, கிட்கிந்தைக்குச் செல்கிறது. சுக்ரீவன், இராமனையும் தங்களுடன் வந்து, அரண்மனையில் வசிக்கும் படி வேண்ட, அவன் மறுத்து விடுகின்றான்.

இல்லறம் பேணுதல் என்பது, மனைவியைப் பிரியாது காத்து, அவளுடனே உறைதலாகும். அந்த அறத்தைப் பேணாமல், மனைவியை வேறொருவன் வஞ்சனையால் கவர்ந்து செல்ல, நான் இடம் கொடுத்து விட்டேன். இப்படி இல்லறம் பிறழ்ந்தவனாக ஆகிவிட்டேன். இப்போது வாலியை மறைந்திருந்து அம்பை எய்து கொன்றதன் மூலம், வில்லறமும், துறந்தவனாகி விட்டேன். நான் இழைத்த இந்த தீமைகளின் தாக்கம், தீர வேண்டும் என்பதற்காக, நான் ரிஷிய முக மலைப்பகுதியில் இருந்து, நல்ல அறமாகிய தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்கிறான்.

               “இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும் போரின்

                வில்லறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லாச்

                சில்லறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு

                நல்லறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும்”

                                                                                                          (அரசியற் படலம் 429)

வாலியைத், தான் மறைந்திருந்து தாக்கிக் கொன்றதைப், போர் அறத்தை துறந்ததையும், அதை இராமனே ஒப்புக் கொள்கிறான் என்பதையும் அறியமுடிகிறது.

தூது அனுப்புதலே போர் அறம்.

இராமன், இராவணனுடன் போர் செய்யத் தொடங்கும் முன், அவன் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்துவதற்கு( இராவணனுக்கு திருந்துவதற்கு)  வாய்ப்பளிக்கின்றான். எனவே இராவணன்பால் தூதுவன் ஒருவனை அனுப்பி, சீதையை என்னிடம் திருப்பி அனுப்பு என்று, அத்தூது மூலம் கேட்கப் போகிறேன். அப்படி விட்டுவிட அவன் ஒப்புக்கொண்டால், போரைத் தொடங்காமல் நிறுத்தி, போரைத் தவிர்த்து, அவனை மன்னித்து, அவனுக்கும், அவன் சேனைக்கும் அழிவின்றி விட்டு விடுவேன். இவ்விதம் அவனுக்கு ஒரு இறுதி வாய்ப்பு அளித்துப், போரையும் அதனால் விளையும் அழிவையும் தடுக்கலாம் என்பது என் எண்ணம். அப்படி இதற்கு சம்மதிக்காமல் அவன் போர் செய்யும் வழியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்றால், அதற்கு அப்புறம் தான் போரைத் தொடங்குவேன். ஏனென்றால் இது தான் போர் அறம். இதுதான் நான் கொண்ட எண்ணம் என்று இராமன் சொல்கிறான்.

               "தூதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் தூண்டி

                மாதினை விடுதியோ? என்று உணர்த்தவே மறுக்கும் ஆகின்

.              காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே

            நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலையம்அன்னான்"

                                                                                                       (அங்கதன் தூதுப்படலம் 916)

போர் துவக்கும்முன், தூது அனுப்பி வைக்கும் போர் அறத்தை, இராமன் மேற்கொண்டதை அறியமுடிகிறது.

அங்கதன் புறமுதுகிட்டு ஓடக்கூடாது பேராண்மை தோன்ற வீரவுரைப் பேசுதல்;

இந்திரஜித்தன், இலக்குவனால் மாண்டபின், இராவணன் ஏழு தீவுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், மூல பல இராக்கதர் படையைக் கொணர்வித்தான்.

இம் மூல படை வீரர்கள் அறத்தையே உண்பவர்கள்: அருளைக் குடிப்பவர்கள். கொடுமையை ஆபரணமாக அணிபவர்கள். பாபத்தை மணத்து கொண்டவர்கள். இருண்ட உள்ளத்தினர், சிவந்த செம்பட்டை மயிரினர். எமனும் கொண்டாடும் கொலையாளியர்.

      இம் மாபெரும் கடும் படையைக் கண்டு, வானரர்கள் அஞ்சி ஓடினர். பதறிச் சிதறி ஓடினர். எங்கு திரும்பினும் மூலபல அரக்கரே, வானரர் கண்ணில் பட்டனர். வானரர்களின் கண்களில் இராம - இலட்சுமணர் தம் வீரமும் மறைந்தன. அவர்கள் இலங்கையில் வடகரையை அடைந்தனர்.

அஞ்சி ஓடிய வானரர் செயலை, இராமன் அறிந்தான், இராமன், அங்கதனை அனுப்பி, அவர்களை அழைத்து வரச் சொன்னான். அங்கதன் நாலாப் பக்கங்களிலும், சிதறி ஓடிய வானரரை அழைத்து, அவர்கள் ஓடிய காரணம் யாது எனக் கேட்டான்.

வானரர்கள், "ஒவ்வொரு மூல பலப் படை வீரனும், ஓர் இந்திரஜித்தை ஒத்தவன். இவ் வீரர்கள் திரிமூர்த்திகளும் அஞ்சத் தக்கவர்கள். அவ்வாறு இருக்க மானிடராகிய இராமனும், இலட்சுமணனுமா இவர்களை வெல்வர்? குரங்குச் சேனை எழுபது வெள்ளத்தினர்; ஆயிரம் வெள்ளத்திற்கும் மேற்பட்ட இராக்கதரை வெல்லமுடியுமா? இவர்களில் சிலர் ஓராயிரம் தலைகளும், ஈராயிரம் கைகளும் உடையவர்களாய் உள்ளனர். எங்கள் மனம் எப்படித் தளராமல் இருக்கும்.

                கனியும் காய்களும் உணவு உள; முழை உள; கரக்க;

               மனிதர் ஆளின் என், இராக்கதர் ஆளின் என், வையம்?

                                                                                        (மூலபல வதைப்படலம் 3280)

கிட்கிந்தை மலையில் எங்களுக்கு உணவாகக் காய்கள் உள்ளன; கனிகள் உள்ளன. ஒளியக் குகைகள் உள்ளன. பூமியை இராம, இலட்சுமணர் ஆண்டால் என்ன? இராக்கதன் இராவணன் ஆண்டால் என்ன? எங்களுக்கு இரு திறத்தார் ஆட்சியும் ஒன்றே. அவ்வாறு இருக்க, ஒரு திறத்து இராம - இலட்சுமணர்க்காக உயிரைத் தர வேண்டுமா? என்றனர்.

அங்கதன், அவர்களிடம் எப்படியிருப்பினும் இறப்பதே ஆனாலும் பயந்து நீங்கிய தன்மை நேர்மையாகாது.இஃது இப்பிறப்பில் பழி தரும். மறு பிறப்பில் நரகில் வீழ்த்தும். இதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆகவே திரும்பிச் செல்வோம். ஐயனே இன்னும் சொல்ல வேண்டுவது ஒன்று உள்ளது. அது மேகத்தை ஒத்த இராமனின் கண் முன்பு எவ்வாறு விழித்து நிற்போம், என்பதே

பகைவரை எதிர்த்தலும், பின்வாங்குதலும். பின் வாங்காது போரிட்டு இறத்தலும், எதிர்த்தவர்களைக் கொல்லுதலும், வீர வாழ்வினை மேற்கொண்டவர்களுக்குப் பொருந்துவதே. அஃது ஒரு புறம் இருக்கட்டும் அல்லாமலும் என் மனம் ஒன்று கூறுவதற்கு விரும்புகிறது. என் சொல்லைக் கேட்டு நின்றதால் நீங்களும் அக்கருத்தையுடையவராவீர். ஐயனே நீ சிறிதும் அஞ்சவேண்டாம், நாம் அனைவரும் ஒன்றாகப் போய் நின்று, ஒரு செயலும் புரிவதற்கு வல்லமை உடையவர் அல்லோம். சக்கரப்படையை உடைய திருமாலின் அம்சமான இராமனே பகைவரை எதிர்த்துக் கொன்று போரைக் கடந்தால் வெற்றி கொள்வோம். அல்லாவிடில் அவனுடனே உயிர் விடுவோம், என்று சொல்லி இராமனை விட்டு ஓடிப் போதல் சிறந்தன்று என்று அறிவுறுத்தினான் அங்கதன்.

                       “ஒன்றுநீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று

                         நின்றும் ஒன்றும் இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து

                        கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல்

                        பொன்றுதும் அவனொடு என்றான் போதலே அழகிற்று என்றான்”

                                                                                              (மூலபல வதைப் படலம் 3293)

போரின்போது, எதிர்ப் படைவீரர் தம் திறத்தைக் கண்டு, பயந்து ஓடியதும் தலைவர்கள் வீரவுரைப் பேசி பயந்து ஓடியவர்களை ஒருங்கிணைத்ததும், இரு பக்கங்களிலும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

 தூதர்களைக் கொல்லக்கூடாது;

வீடணன், இராமனைச்  சார்ந்த பின்னர், சுகன், சாரன் எனும் இரு அரக்கர் குரங்கு வடிவுடன், அவர்களது படையில் உளவறியப் புகுந்து விட்டனர். இது கண்ட வீடணன், இதனைக் குரங்கு படையினருக்கு உரைக்க, அவர்கள் அவ் இரு அரக்கர்களையும், மாணைக் கொடியைக் கொண்டு கட்டி, இராமன் முன் நிறுத்தினர்.இராமன் அவர்களை  விடுவித்து, தேவியை விடுத்தால் இராவணன் ஆவி உண்டு எனும் செய்தியை, அரக்க தலைவனிடம் கூறும் படி அவர்களை அனுப்பினான்.

              "தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர் தம்மை

                நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடுதிர் என்றான் "

                                                                          (ஒற்றுக் கேள்விப் படலம் 713).

      அதிகாயன் தன்னுடன் போர் புரிய வருமாறு, மயிடன் என்னும் அரக்கன் மூலமாகச் சொல்லி அனுப்புகிறான். மயிடன், இராமனைப் பார்க்கப் போன இடத்தில், வானரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்க, இராமன் அவர்களைத் தடுத்து, தூது வந்தவனைத் தாக்காதீர்கள் என்று கூறி அவனைக் காத்தார்.

      தூதர்களைக் கொல்லக்கூடாது என்ற அறத்தை வீடணன்கூறும்போது, அதை ஏற்றுக் கொண்ட இராவணனும், போர்அறம் காத்தான். சீதையைக் கண்டு கணையாழியைக் கொடுத்து, சூடாமணியைப் பெற்றுக் கொண்டபின், அனுமன் அசோகவனத்தை அழித்து, இந்திரஜித்தால் கைது செய்யப்பட்டு, இராவணன் முன் நிறுத்தப்பட்டு, இராவணனின் கேள்விகளுக்கு அனுமன் பதில் அளித்தபோது, கோபம் அடைந்த இராவணன் தூதனாக வந்தவன் என்று அனுமன் உரைத்ததைக் கேட்டப் பிறகும், அனுமனைக் கொல்ல ஆணையிட்டபோது, தூதனைக் கொல்லக் கூடாது என்று வீடணன் கூறியதைக் கேட்டு, அனுமனைக் கொல்லாமல் விட்டு விட்டான்.

 தூதாக வந்தவர்களைக் கொல்லக்கூடாது என்ற போர்அறத்தை இராமனும், வீடணன் சொல்படி நடந்து இராவணனும் காத்ததை அறியமுடிகிறது.

முடிவுரை

போர் செய்யத் துவங்கும்  முன்பு தூது அனுப்புதலும், தூதர்களையும், ஒற்றர்களையும் கொல்லக்கூடாது. ஆயுதம் இன்று இருப்பவனையும், தளர்ச்சியாக இருப்பவனையும், தனித்து நின்று சண்டையிட உடல் தகுதி இல்லாதவனையும் கொல்லக்கூடாது. இனி உன்னோடு போர் செய்ய மாட்டேன் என்று கூறிய வாக்குறுதியை காப்பாற்றுதல், நேருக்கு நேர் நின்று சண்டையிட பயந்து புறமு துகிட்டு ஓடக்கூடாது, அவ்வாறு ஓடுபவர்களைத் துரத்திச் சென்று கொல்லக்கூடாது என்பன போன்ற போர் அறம் பின்பற்றப்பட்டுள்ளதைக் கம்பராமாயணத்தின் வழி அறிய முடிகிறது.

        

துணை நூற்பட்டியல்

1.  இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், 

     சென்னை,2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, 

    (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம்  

    புதுச்சேரி, சென்னை.

3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்    

    பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம்,

    கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளிபதிப்பகம்,   

    சென்னை,2019.

6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5,   

    6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

7.செல்வம்.கோ,கம்பன் புதையல்,   சாரு பதிப்பகம், சென்னை 2016.