ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

புறநானுற்றில் அரசியல் மானுடம் | POLITICAL MANKIND IN PURANANURU

முனைவர் மு.லோகநாயகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தெள்ளார் 604406. (திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - வேலூர்) 16 Feb 2023 Read Full PDF

புறநானுற்றில் அரசியல் மானுடம் (POLITICAL MANKIND IN PURANANURU)

முனைவர் மு.லோகநாயகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தெள்ளார் 604406. (திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - வேலூர்)

ஆய்வுச் சுருக்கம்:

அரசியல் மானுடம் அரசியலில் அநீதிக்கு எதிராகவும் அறநெறியை மையமாகக் கொண்டும் மக்களின் நலனைக் கொண்டும் எவ்வாறு ஆட்சி நடத்தினர் என்பதையும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மன்னனே காரணம் என்பதையும் ஆராய முற்படுகிறது. நோயுற்றவரும் இறந்து தென் திசையில் வாழும் முன்னோர்களுக்கு செய்யும் அரிய சடங்குகளை செய்வதும்ää பாதுகாப்பான இடம் நாடிச் செல்லுமாறு பறையறைந்து எவ்வாறு படை நடத்திச் சென்றனர் என்பதையும் அரசனின் கடமைப் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

Abstract:

          Political anthropology seeks to examine how politics was ruled against the twilight and with the focus on morality and the welfare of the people and the reason when the people lived happily. This article seeks to explore rituals performed for the sick and dying ancestors and how they lead the army to seek a safe place.

கடவுச் சொற்கள்:

பூட்கை - மன ஊக்கம் அவல் - பள்ளம் மிசை - மேடு தானை - படை கடன் - முறைமை புகல் - விருப்பம் சாயல் - மென்மை கேம அச்சு - அச்சு முறிந்தவிடத்து அதற்குப்பதிலாக உதவும் மற்றோர் அச்சு கவிகை - இடக் கவிந்த கை மதியம் - நிலவு நாகம் - தேவலோகம் பாகு - பகுதி மண்டிலம் - நாடு தம - தம்முடையன நோற்றார் - தவம்செய்தார் ஏற்ற - யாசித்த புனல் - தாரை நீர்.

Keywords:

          Kemaachtu – Other axy that helps to replace the broken axy, Mandilam – Country, Tama – Tamduyana, Notar – Dana, Kavigai – Hand crossed, Amanda – Yasithta, Funal – Tarai.

முன்னுரை:

மானுடவியல் என்பது மனித இனம் பற்றிய அறிவியல் கல்வித்துறை ஆகும். இது மனிதகுலத்தைச் சமூகநிலை பண்பாட்டு நிலை உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும் சமகால மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும் ஆராயும் நிலையாகும். அரசியல் மானுடம் அரசியலில் அநீதிக்கு எதிராகவும் அறநெறியை மையமாகக் கொண்டும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அக்கால ஆட்சிமுறை இருந்ததாக அறியமுடிகிறது. இதற்குச் சான்றாக புறநானூறு விளங்குகிறது. சங்க காலத்தில் மன்னர்கள் முழு அதிகாரம் உடையவர்களாகவும் இருந்தனர். பண்டைத் தமிழர்களின் வீரம் உயர்ந்த நாகரிகம் அரசியல் நிர்வாகம் நீதி நாட்டின் செங்கோல் இவைப்போன்ற பிறவற்றையும் அரசியல் மானுடமாக புறநானூற்றில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

அரசியல் மானுடவியல்:

அரசியல் மானுடவியல் என்பது சமூக கலாச்சார மானுடவியலின் ஒரு துணைத்துறையாகும். மேலும் இது பரந்த அளவிலான சமூக மற்றும் கலாச்சார சூழல்களில் அரசியலின் ஒப்பிட்டு களப்பணி சார்ந்த ஆய்வில் அக்கறைக் கொண்டுள்ளது.

சமூக கலாச்சார மானுடவியல் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக மனித சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் முழு வகையுடன் தொடர்புடைய ஒரு ஒப்பிட்டு ஒழுக்கமாக இருந்தால் அரசியல் மானுடவியலின் ஒரு ஒத்திசைவான துணைப் பிரிவின் இருப்பு அரசியல் என்பதன் ஒப்பிட்டளவில் தெளிவான வரையறையை முன் வைக்கிறது.

1940 மற்றும் 1950 களில் அரசியல் மானுடவியலில் கிளாசிக் ஆய்வுகள் நவீன அரசின் நிறுவன வடிவங்கள் இல்லாத சமூகங்களில் ஒழுங்கைப் பேணுதல் மற்றும் சக்தியை ஒழுங்குப்படுத்துதல் ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்தன. இதற்கு நேர்மாறாக அரசியல் மானுடவியலில் மிக சமீபத்திய ஆய்வுகள் சிக்கல்களுடன் தொடர்புடையதாக இருக்கும் குடியுரிமை மற்றும் விலக்கு ஜனநாயகம் மற்றும் தேசியவாதம் சட்டம் மற்றும் வன்முறை அவை அனைத்து சமூக சூழல்களிலும் அதிகாரத்தின் செயல்பாடுகளை அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்யும் ஒரு முழுமையான வேலையுடன் இணைந்து செயல்படுகின்றன.

அரசியல் அறம்:

சங்க காலத்தில் மன்னர்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தாலும் தானும் ஒரு மனிதன் என்ற நிலையினை உணர்ந்து மற்றவர்பால் அன்பு கொண்டு வாழ்ந்துள்ளனர்.

ஒரு நாட்டின் அரசனும் அமைச்சும் சரியாக இருந்தால்தான் நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். எனவே அரசியலுக்கும் அறத்தை வலியுறுத்தினர்

“குடிஓம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்

மடிஓம்பும் ஆற்றல் உடைமைமுடி ஓம்பி

நாற்றம் சுவை கேள்வி நல்லோர் இனம் சேர்தல்

தேற்றானேல் தேறும் அமைச்சு” (ஏலாதி பா.17)

குடிமக்களை காத்தலும் உறுதிப்பாடும் நூலறிவும் வஞ்சனை சோம்பல் ஆகியன தன்னிடம் வராமல் காக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் என்று போதிக்கிறது.

     “ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும்

     பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

     தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்

     பொன் போல் புதல்வர்ப் பெறா அதீரும்

     எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் என

     அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்

     கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்” (புறம் பா.9 வரி 1-7)

ஒருநாட்டின் மீது படையெடுத்துச் செல்வதற்கு முன் அந்நாட்டிலுள்ள பசுக்களும் பசுவின் இயல்பை ஒத்த பார்ப்பனரும் பெண்களும் நோயுற்றவரும் இறந்து தென்திசையில் வாழும் முன்னோர்க்குச் செய்யும் அரிய சடங்குகளை மதித்துச் செய்யும் புதல்வர்களைப் பெறாதாரும் ஆகியோரும் பாதுகாப்பான இடம் நாடிச் செல்க எனப் பறையறைத்து கூறிக் கொண்டே படை நடத்திச் சென்றனர் என்று கூறுவதிலிருந்து மன்னனின் ஆட்சியில் அறம் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

     “நாடாகொன்றோ காடாகொன்றோ

     அவலாகொன்றோ மிசையாகொன்றோ

     எவ்வழி நல்லவர் ஆடவர்

     அவ்வழி நல்லை வாழிய நிலனே! (புறம் பா.187)

அறநெறி தவறாது மன்னனும் கடமைகளைச் செய்யும் மக்களும் உள்ள நாடு நல்ல நாடு புகழுக்குரியதாகும் என்று கூறுவதிலிருந்து சிறந்த அறநெறிகளை வகுத்து வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

     மாசு மறுவற்றவனாகவும் மக்கள் நலத்தை விரும்புபவனாகவும் உறுதியான உள்ளம் உடையோனாகவும் மக்கள் மேல் அன்பு கொண்டு செல்வாக்குடன் வாழ்ந்தால் பகை அரசர்கள் முகவுரை கூறி தம்படைகள் அனைத்தையும் திரட்டி வந்தால் கூட மக்கள் செல்வாக்கு உடைய அரசனை என்ன செய்துவிட முடியும் ஒன்றும் செய்து விட முடியாது

     “மறுமனத்தான் அல்லாத மா நலத்த வேந்தன்

     உறுமனத்தான் ஆகி ஒழுகின் தெறு மனத்தார்

     பாயிரம் கூறிப்படை தொக்கால் என் செய்ப?

     ஆயிரம் காக்கைக்கு ஓரு கல்” (பழமொழிநானூறு பா.250)

என கூட்டமாகக் குழுமி இருக்கும் ஆயிரம் காக்கைகளை விரட்ட ஒரு கல் போதும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்தால் எதிரிகளை விரட்டி விடலாம் என்பதை அறியமுடிகிறது.

அரசனின் ஆளுமை:

ஆளுமை என்பது பல்வேறு அறிஞர்கள் பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

“உள ஆற்றல் தனிமனிதனுடைய உள இயற்பியலின் ஒழுங்கமைவில் பங்கு கொண்டு பண்புகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்துவதே ஆளுமை” (தி.கு.இரவிச்சந்திரன்ää சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல் ப.393).

“ஆளுமை (PநுசுளுழுNயுடுஐவுலு) என்பது உளவியல் சார்ந்தது. இதனை ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத்தொகுப்பு எனக் கருதிக் கொள்ளலாம். பிறிதொரு வகையில் குற்றமுறுவதனால் ஒரு மனிதனின் குணத்தினை உருவாக்கும் இயல்புகள் ஒருவரைப் புகழுக்குரியவராக்கும் அல்லது மக்கள் செல்வாக்குப் பெற்றவராக்கும் இயல்புகள் மக்களால் பாராட்டப்படும் பெருந்தகையோர் என்ற மூன்று பொருண்மைகளை இவை குறிப்பதாகக் கொள்ளலாம்” (நிர்மலா மோகன் சங்கச் சான்றோர் ஆளுமைத்திறன் ப.47).

நாட்டின் ஆட்சி முறைசிறப்பாக இருந்தால்தான் நாடு சிறக்கும். மக்களின் வாழ்வு வளம் பெறும். மக்கள் வாழ்வாங்கு வாழ ஓர் அரசன் யாரிடமும் அன்பு காட்டாது நடுநிலைமையோடு தெளிந்த அறிவினால் ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும். இதனை

“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை” (குறள் 541)

என்று குறிப்பிடுகிறது. எனவே ஓர் அரசன் தன்னுடைய நீதியிலிருந்து வழுவாமல் வாழவேண்டும் என குறள் கூறுவதைக் காணமுடிகிறது.

     “நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

     மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்

     அதனால் யான் உயிர் என்பது அறிகை

     வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே” (புறம் பா.186)

என்று இவ்வுலகுக்கு அரசனின் முறையான ஆட்சியே உயிர் என்பதையும் அரசனது ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது. அரசன் உலகைக் காப்பதில் மன்னின் ஆளுமை வெளிப்படும் என்பது சிறப்புக்குரியதாகும்.

செங்கோல் பிறழாத ஆட்சி:

ஒர் அரசன் தன்னுடைய நீதியிலிருந்து வழுவாமல் வாழவேண்டும். அவ்வாறு இல்லாமல் நீதி தவறின் அரசன் உயிர் துறந்தான் என்பதை

“வளைகே லிழுக்கத் துயிரயொளி கொடுத்தாங்கு

இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்ட” (சிலம்பு அழற்படுகாதை வரி 3-4)

என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது.

     “கடுஞ் சினத்த கொல் களிறும் கதழ்  பரிய கலி மாவும்

     நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுஉடைய புகன் மறவரும் என

     நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட

     அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

     அதனால் நமர் எனக் கோல் கோடாது

     பிறர் எனக்குணம் கொல்லாது

     ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்

     திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்

     வானத்து அன்ன வன்மையும் மூன்றும்” (புறம் பா. 55 வரி 7-15)

கடுமையான சினத்துடன் கொல்லும் யானைகளும் விரைந்து செல்லும் இயல்புடைய செருக்குடைய குதிரைகளும் நெடிய கொடிகளுடன் விளங்கும் உயர்ந்த தேர்களும் மனவலிமை மிகுந்த போரை விரும்பும் மறவரும் என நான்கு வகையாக அமைந்த படைகளால் மாட்சிமைப் பெற்றாலும் வேந்தருடைய வெற்றி என்பது மாண்புடைய அறநெறியை அன்றோ முதலாக உடையது என்று மன்னன் வெற்றி பெறுவது என்பது அவன் செய்த அறநெறியே எனக்கூறுவதைக் காணமுடிகிறது. மேலும்

     “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

     இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

     காவலர்ப் பழிக்கும் இக் கண் அகல்ஞாலம்” (புறம் பா.35 வரி 27-29)

அறநெறி தவறிய அரசனின் நாட்டில் பருவமழை பெய்யாது பசியும் பிணியும் குடிகளை ஊழ் வருத்தும் என்ற கொள்கையை வெள்ளைக்குடி நாகனார் கூறுவதை அறியமுடிகிறது.

அரசனின் கடமை:

அரசனுடைய கடமைகளுள் தலையாயது குடிமக்களை காப்பதாகும்.

“படைக்குடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு” (குறள் 381)

என்று குறள் கூறுகிறது. இத்தகு சிறந்த கடமையை ஆற்றுபவனாக அதியமானின் மகன் பொகுட்டெழினி போற்றப்படுகிறான். இவன் அறிவும் அருளும் நிறைந்தவன் அவனது ஆட்சியில் இருளே இல்லை என்பதை

     “கீழ்மரத்து யாத்த சேம அச்சு அன்ன

இசை விளங்கு கவிகை நெடியோர்! திங்கள்

நாள் நிறை மதியத்து அனையை இருள்

யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே?” (புறம் பா.102)

வண்டி மேடு பள்ளத்தில் செல்லும் போது அச்சு முறிந்தால் சேம வச்சு உதவினாற் போலத் தான் காக்கின்ற நாட்டிற்கு ஒரு துன்பம் வந்தாலும் அத்துன்பத்தை நீக்கி காப்பவன் பொகுட்டெழினி என்று கூறுவதைக் காணமுடிகிறது.

     “நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்

     தமவே ஆயினும் தம்மொடு செல்லா

     வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்

     ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

     பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து” (புறம் பா.367)

உலகில் நிலைபெற்று நிற்கக் கூடியது புகழ் மட்டும் தான். பெரிய பெரிய வேந்தர்களும் புகழ்பட வாழ்ந்து மாண்டு மறைந்தனர். எத்தகைய ஆளுமையுடன் வாழ்ந்தாலும் இன்பம் நுகர்ந்தாலும் கொடை செய்து அருளினாலும் உலகத்தே நிலைத்து வாழ்தல் இன்று. யமன் இறுதிக் காலத்தில் உயிரைப் பறித்துச் செல்லுதல் உண்மையானது பொய்யன்று என்று மன்னனின் அறநெறியைக் காணமுடிகிறது.

முடிவுரை:

அரசியல் மானுடம் சமூக கலாச்சாரத்துடன் தொடர்புடையது ஆகும். அரசியல் மானுடவியலின்  ஒத்திசையான துணைப்பிரிவின் இருப்பு அரசியல் என்று ஒப்பிட்டளவில் வரையறை செய்வதைக் காணமுடிகிறது. புறநானூற்றில் காணப்படும் அரசியல் மானுடம் அறத்தோடு தொடர்புடையதாகவும் ஆளுமைத்திறனை வெளிப்படுத்துவதாகவும் காணப்படுவதை அறியமுடிகிறது. குடிமக்களை காப்பவனாகவும் நூலறிவு உடையவனாகவும் வஞ்சனை சோம்பல் இல்லாதவனாகவும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவதைக் காணமுடிகிறது. அறநெறி தவறாத மன்னனும் கடமைகளை செய்யும் மக்களும் இருந்தால் நாடு புகழ்மிக்கதாக விளங்கும் அறநெறி தவறிய மன்னன் ஆட்சியில் மழைபெய்யாமல் பசியும் பிணியும் மக்களை வருத்தும் என்று அரசியல் மானுடத்தை வலியுறுத்துவது சிறப்புக்குரியதாகும். தான் ஆளும் நாட்டிற்கு ஒரு துன்பம் வந்தாலும் அத்துன்பத்தை நீக்கி காப்பவனே சிறந்த மன்னன் என்பதே அரசியல் மானுடம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

துணைநூற்பட்டியல்:

1.    பக்தவத்சலபாரதி-மானிடவியல் கோட்பாடுகள், வல்லினம் பதிப்பகம், புதுவை மு.ப. 2005.

2.    நல்லி குப்புசாமி செட்டியா -     மானுடத்தின் மகாகவி,  புவனேஸ்வரி பதிப்பகம், சென்னை மூன்றாம் பதிப்பு - 2007.

3.    பிலோ இருதயநாத்         -     காட்டில் கண்ட மர்மம், வானதி பதிப்பகம், சென்னை மு.ப. 1994.

4.    பாலசுப்பிரமணியன்.கு.வெ. -     புறநானூறு (மூலமும் உரையும்),  நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர் சென்னை – 98 மு.ப. 2004.