ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கியமும், பருவநிலை மாற்றமும் (Tamil Literature and Climate Change)

ம. ராகவன் முனைவர் பட்ட ஆய்வாளர் அகராதியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 16 Feb 2023 Read Full PDF

தமிழ் இலக்கியமும், பருவநிலை மாற்றமும் (Tamil Literature and Climate Change)

ஆய்வாளர் :     ம. ராகவன் முனைவர் பட்ட ஆய்வாளர் அகராதியியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
நெறியாளர் :    முனைவர் சி. வீரமணி இணைப்பேராசிரியர் அகராதியியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.

நோக்கம்:

          இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம், கடந்த காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் தன்மையும், இன்று வாழும் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, மற்றும் அவசரமும் எதனால் ஏற்பட்டது, என்பதை ஆராய்வதே.  இந்த சூழலியல் கேட்டை தவிர்க்க மனித மனங்களில் மாற்றம் ஏற்பட, சுற்று சூழல் மேன்மை பெற்று மனிதகுலமும் மற்ற உயிரிகளும் மாசற்ற வாழ்வை பெற, நாம் போராடுதல் அவசியமாகும்.

          கடந்த நூற்றாண்டுகளாக விஞ்ஞான வளர்ச்சி மிகவும் ஆச்சரியம் வாய்ந்ததும், பிரமிக்கதக்க வகையில் உயர்ந்து உயரிய இடத்தை பிடித்தது என்பதில் மாற்று கருத்தில்லை.  ஒவ்வொரு கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட நன்மை அதிகம், அதோடு ஒவ்வொன்றுக்கும் மறுபக்கமென்று ஒன்று உள்ளதுபோல் இந்த நூற்றாண்டின் விஞ்ஞான எதிர்மறைத் தாக்கங்கள் எதெல்லாம் ஆக்கத்திற்கு உதவியதோ அதில் ஒரு பகுதியேனும் நற்சூழலியல் அழிவிற்கு வித்திட்டு கொஞ்சம் வளர்ந்து நிற்கிறது.

“விஞ்ஞான வளர்ச்சியைப் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தி நாம் வாழும் பூமியை அபாய சூழலுக்கு தள்ளி வருகிறோம்”;.

          மனித இனம் பேராற்றல் மிக்கது என்பது நவீன விஞ்ஞானம் நமக்கு தந்த நம்பிக்கை. அதைவிடவும் பலமடங்கு பேராற்றல் மிக்கது இயற்கை. அத்தகைய இயற்கையை, மனிதர்களாகிய நாம் சீர்குழைப்பதாலும், இயற்கையை அதன் நிலைக்கேவிடாது மாற்றுருவாக்கம் செய்வதால், சூழலியலுக்கு பெரும் கேடுவிளைவிப்பதோடு, வாழ்வாதாரச் சூழலும்  சுருங்கிப்போகிறது. இந்நிலை மாற மனித மனங்களில் மாற்றம் ஏற்படச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

Purpose

          The purpose of this research paper is to investigate the nature of the people who lived in the past and what caused the crisis and urgency for the people living today. In order to avoid this ecological scourge, it is necessary for us to fight for a change in human minds so that the environment can be superior and mankind and other creatures can have a clean life.

          There is no alternative consideration of the fact that scientific development over the past centuries has been so astonishingly high that every discovery has been beneficial and every discovery has its flip side. Whatever negative scientific influences have helped to create, a part of it has sown the destruction of good physiology and little growth. “Reckless  we live on we are pushed to the dangerous environment. The hope given to us by the modern science is that the human youth is magnificent. Nature is many times more magnificent that that, because we as human beings, manipulate, nature, unsustainable conversion leads to severe ecological damage and shrinking habitual. The purpose of this study to bring about a change in human mind to change this situation.

திறவுச்சொற்கள்: நீர்க்குமிழி, நுண்ணறிவு, நீதிதேவன், நெறிமுறைகள், மரணவேடன்

முன்னுரை

          அறிவில் சிறந்த ஆன்றோர் பெருமக்களே, காலத்தால் மாறாதது, இயற்கையால் வழி நடத்தப்படுவது, படைப்பின் இரகசியங்களை உள்ளடக்கியது எது? என கூர்ந்து கவனித்தால், பல மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்களைக் கொண்டு சுழன்று வருகிறது பூமி.

          நாம் வாழும் இந்த பூமியைத்தவிர, மனிதர்களின் அறிவுகொண்டு, பிரபஞ்சத்தை ஆய்வு செய்து பார்த்து, மற்ற கோள்களில் உயிரிங்கள் இல்லை என்று கூறுகிறார்கள், அறிஞர்களும், விஞ்ஞானிகளும்.

          அப்படிப்பட்ட இந்த பூமியானது, பலகோடி உயிரினங்களை தன்னகத்தே கொண்டு சுழன்று வருகிறது. வெட்டவெளியில். இதில் வாழும் நாம் தினந்தோறும் நம்பிக்கையுடன் எழுகிறோம். காலை விடியும், சூரியன் உதிக்கும், மாலை மறையும் நிலவு தெரியும் என்று.  இந்த நிகழ்வில் ஏதெனும் இன்றுவரை மாற்றம் நிகழ்ந்துள்ளதா இல்லை.  ஆனால் பருவநிலை மாற்றம் ஏன் வந்தது? ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.

          இந்த ஆய்வு, ஒரு கட்டுரையாக, காகிதத்தில் மட்டும் இருப்பதால் நன்மை ஏற்படப்போவதில்லை. கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் மூலமாக வாழும் மனிதர்களின் மனங்களைச் சென்றுச் சேர்ந்து சிறு நிமிடமாவது சிந்திக்க தோன்றினால், நாம் வெற்றி அடைந்துவிட்டோம்.

இலக்கியங்கள் காட்டும் இயற்கை நெறி:

          மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது மூத்தக்குடிகளின் வாழ்வு நெறியை, அவர்களுடைய இயற்கையின் புரிதலை, நமது இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகிறது.

          இன்று நாம் வாழும் ஒவ்வொரு நகரமும் பல லட்ச மரங்களை, விளைநிலங்களை, நீர் ஆதாரங்களை அழித்து அதன்மேல் நிற்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் தனது நோய்க்குத் தேவையான மருந்தை மரங்களிலிருந்து பெறப்படும், இலைகளையோ, காய்களையோ, கனிகளையோ, விதைகளையோ பயன்படுத்தி தனது உயிர்களை காத்திருக்கிறார்கள். மரங்களை வெட்டுவதில்லை.

                                        “மரம் சா மருந்துங் கொளார்”1

          என நற்றிணையில் கனியன் பூங்குன்றனார் கூறிவுள்ளதைக் காணும்போது, ஒரு மரத்தை வெட்டி உயிர் பிழைப்பதாக இருந்தால் அந்த உயிர் தேவையில்லை. உயிரைவிட உயர்ந்தது மரம் என வாழ்ந்த உள்ளம் நமக்குத் தெரிகிறது.

இயற்கை மனிதனுக்கு தந்த வரம் மரம்.

          உலகமக்கள் மரங்களை நேசித்தாலும், நம் மக்கள் நேசித்தலோடு, வணங்கி வாழ்கிறார்கள். முருகன்-கடம்பன் என்றும், சிவன்-கொன்றை மரத்தோன் என்றும், திருமால்-ஆலமத்தில் உதித்தார் என்றும், பலராமன்-பலைக்கொடியோன் என்றும், காளி-வேப்பமரம் என்று வணங்கி பாதுகாத்து வந்துள்ளார்கள்.

நற்றினையில்,

                              “எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

                              குருகார் கழனி”2

என வயல்களை ஒட்டி வளர்ந்திருக்கும் வேங்கைமரக் கடவுளை வணங்கினால் வயல்கள் நன்கு விளையும் என்றும், அவை காக்கப்பெறும் என்று கூறிஉள்ளதை நாம் அறிகிறோம்.  இப்பாடல்கூட மனிதர்கள் வணங்குவதாக உள்ளது.

ஆனால் அகநானூற்றில்,

                              “கடவுள் மரத்த முள்மிடை குடப்பைச்

                              சேவலொடு புணராச் சிறுகரும் பேடை”3

என ஊர்நடுவே இருந்த ஒரு கடவுள் மரத்தின் கிளையில் வாழ்ந்த ஒரு பெண்பறவை அது. கடவுள் மரம் என்பதால் தன் துணையுடன் சேர்வதை தவிர்தது, என்று கூறும் காட்சியில் இருந்து மரங்களை எவ்வாறு போற்றி வளர்த்து இற்கையை காத்து உள்ளார்கள் என நமக்குத் தெரிகிறது.

இவற்றைப்போல்        

                              “நும்மில் சிறந்தது புன்னை

                              அது நும் தங்கையாகும்”4

என்று தாய் தன் மகளிடம் கூறியதால் தலைவனிடம் தலைவி கூறுகிறாள். புன்னையைப் பார்த்து இவள் என் தங்கை ஆகையால் இந்த மரநிழலில் நும்மோடு அளவளாவலை யாம் நாணுகிறோம் என்ற உள்ளத்திலிருந்து நமது மக்கள் இயற்கையை நேசித்த பாங்கு வெளிப்படுகிறது.

          ஆனால் நாம் இன்று வாழந்துவரும் இப்புவியை வெப்பமாக்கிக் கொண்டு, மனித இனம் வாழும் தகுதியை குறைத்துகொண்டே வருகிறோம். குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று, வசிக்கும் இடம் இவைகளை மாசுபடுத்துவதில் மனிதகுலம் போட்டிபோட்டுச் செயல்படுகிறது. நாம் பயன்படுத்தும் வாகனங்கள் தொழிற்சாலைகளால் உமிழும் கார்பன்டைஆக்ஸைடு பூமியை போர்வை போன்று மூடி வெப்பத்தை வெளியேறாமல் தடுத்து பருவநிலை மாற்றத்தை ஏற்படத்துகிறது. பரிணாம வளர்ச்சியின் பிற்பகுதியில் புவியில் தோன்றிய சிற்றினமாகிய மனித இனம் இயற்கையின் மீது வரையறையற்ற ஆதிக்கத்தை செலுத்தியதன் விளைவாக எதிர்வினைகளை சந்திக்க தொடங்கியுள்ளது

          பனிமலைகள் உள்ள வடஇந்தியாவில் பனிமலைகள் உருகி ஆறுகள் உருவாகும். பனிமலைகளே இல்லாத தென்இந்தியாவில் எப்படி ஆறுகள் உருவாகும் என்ற நவீன சமூகம் எழுப்பும் கேள்விக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதில் எழுதி வைத்தவர்கள் நம் தமிழர்கள்.

                              “சூடுடை நனந்தலை சுனைநீர் மல்க”5

குருஞ்சி நிலத்தின் உச்சிப்பகுதிகள் மழைநீரை தேக்கி வைத்துக்கொள்கிறது. பின்னர் அந்த நீர்கசிந்து அங்கு உள்ள சுனைகள் நிறைகின்றன. அனைகளில் உள்ள நீர் சேர்ந்து அருவியாக வீழ்ந்து காட்டாறாக பெருக்கெடுத்து ஒடுகின்றன. இன்று நாம் ஒவ்வொரு மலையாக தகர்த்துவரும் நிலையை காணும்போது கண்ணீர் வடிக்க தோன்றுகிறது.

          கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுவதைப்போல்

                                        “உயிர்பறவையை

                                        வீழ்த்திவருகிறது

                                        அம்பிலிருக்கும்

                                        செத்தபறைவiயின் சிறகு”6

நமது வாழ்வை நாமே அழித்துக்கொண்டு உள்ளோம்.

          “போதிமரத்தை வெட்டி, புத்தருக்கு சிலை செய்வதைப்போல்”

 யோசிக்காமல், வறையறை இல்லாமல் வனத்தை அழித்து வருகிறோம்.

ஆனால் மரங்கள் என்பவை,

                                        “பசியிருட்டை விரட்டும்

                                        பச்சைக் கிரகணங்கள்”7

என கவிக்கோ அவர்கள் கூறுகிறார்.

எவ்வளவு பொருள் இருந்தாலும் பசிபோக்குவது தாவரங்கள்தானே. நாம் இயற்கையை என்னசெய்தாலும் அவை இன்றுவரை நம் அனைவரையும் காத்து வருகின்ற தாயாக உள்ளது. நாம்தான் அவற்றை குழிவெட்டி புதைக்கிறோம்.

          ஆங்கில கவிஞன் பிரான்சிஸ் தாம்ஸன் கூறியது நினைவிற்கு வருகிறது.

                                        “ஒரு சிறு பூவை

                                        நீ அசைத்தால்

                                        ஒரு நட்சத்திரம்

                                        அணைந்து போகலாம்”8

என உயிரியல் வலையில் இங்கு படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஒரு பணியை செய்துகொண்டுள்ளது. அவற்றில் நாம் ஒன்றை அறுத்தால் அனைத்தும் அறுபடும் நிலையை கூறுகிறார்.

முடிவுரை:

          நீங்கள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும், அடுத்த ஏழு தலைமுறைகளின் மீது அது ஏற்படுத்தப்போகும் விளைவைக் கருத்தில் கொள்ளுங்கள்.

          இயற்கையின் ரகசியம் யாது எனில்

          “அதிகமாக கொடுத்து குறைவாக எடுத்துக்கொள்ளும் ஆற்றல் உடையது”

மேலும் இயற்கையானது அதன் வளங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையிலே தனது படைப்பை நிகழ்த்திக் கொண்டுள்ளது. அது விரவல் விதியின் அடிப்படையில் நகர்த்துகிறது. காற்று, நீர், வெப்பம் ஆகிய அனைத்தையும் கடத்துகிறது.

          பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இந்த உலகை காப்பாற்ற, வெள்ளம், புயல், கடும் மழைப்பொழிவு, வெப்பஅலை, வறட்சி, காட்டுத்தீ போன்ற ஆபத்துகளை தடுக்க இவற்றால் ஏற்படும் வருமையின் நெருக்கடியை மனிதகுலம் ஏதிர்கொள்ள அரசும், பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் மரங்களின் பயனை, அதன் தேவையை, அதனுடைய அவசியத்தை தொடர்ந்து இளைஞர்களின் இதயத்தில் விதைத்தது இப்புவியை காக்க உறுதி எடுப்போம்.

அடிக்குறிப்புகள்

1.       கனியன் பூங்குன்றனார், நற்றினை, 226 பாலை.

2.       மதுரை மருதமன் இளநாகனார், நற்றினை, 216 மருதம்

3.       சாகலாகனார் - அகநானூறு, 270 நெய்தல்

4.       நற்றினை – 172, நெய்தல்

5.       நல்வெள்ளியார்- நற்றினை, 7 பாலை

6.       கவிக்கோ அப்துல்ரகுமான், கவிதை ஓர் ஆராதனை, பக்.61.

7.       கவிக்கோ அப்துல்ரகுமான், கவிக்கோ கவிதைகள். நேயர் விருப்பம் - பக்.123

8.       கவிக்கோ அப்துல்ரகுமான், சோதிமிகு நவகவிதை, பக்.54.