ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆத்மனின் பரிதவித்தல்: திருவாசகம் - நீத்தல் விண்ணப்பத்தினை முன்னிறுத்திய நோக்கு

திரு.சி.ரமணராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை, இந்துக்கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். 27 Feb 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

பரிதவித்தல் என்பது ஓர் ஆன்மா தன்னைச் சிறுமை செய்யும் செயல்களாகும். அவ்வான்மா தனது எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை மனிதப்பண்பிலும் தாழ்ந்ததாக - இழிவானதாகக் காட்டிக் கொள்ளும் மனவுணர்வுச் செயற்பாங்கு இதுவாகும். இச்செயற்பாங்கின் குறிக்கோள், ஆன்மா இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல் - அர்ப்பணித்தலே. இவ்வுணர்வுகள் மற்றும் மனப்போக்குகளானவை அருளியல் நோக்கில் வெளிப்படுவன. பக்தி இலக்கியங்களில் உணர்வுகள் சார்ந்த எண்ணங்களையும் நடத்தையியல் சார்ந்த வெளிப்படுத்துகைகளையும் பலவாறு இனங்கண்டறியலாம். சைவபக்தி இலக்கிய மரபில் முதன்மை பெறுகின்ற சைவத்திருமுறைகளில் திருவாசகம், திருக்கோவையார் என்பன மாணிக்கவாசகரது இலக்கியப் படைப்புகளாகும். நீத்தல் விண்ணப்பம் என்பது திருவாசகத்தின் ஒரு பதிகமாகும். இதனைப் பிரபஞ்ச வைராக்கியம் என்பர். ஒரு ஆத்மனின் பிரபஞ்ச விடுதலைக்கான வேண்டுதல் இப்பதிகத்தில் பிரதிபலிக்கிறது. இத்தகைய வேண்டுதலில் மாணிக்கவாசகரின் மனப்போக்கினை இனங்காணலாம். இப்பின்னணியே இந்த ஆய்வு நிகழ்த்தப்படுவதற்கான சூழலை உருவாக்கியது. மாணிக்கவாசகரது பிரபஞ்ச பற்றறுத்தலுக்கான விண்ணப்பத்தில் தற்சிறுமை கொள்ளும் மனப்போக்கு வெளிப்பட்டு நிற்கின்றது. இத்தகைய மனவியல்பினையும் அவ்வுணர்வு எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனையும்  வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் பிரதான இலக்காகும். மாணிக்கவாசகரின் மூல நூல்களிலிருந்து தரவுகள் பெறப்பட்டு அவை உய்த்தறிவு முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தொகுத்தறிவு முறை மற்றும் விவரண ஆய்வுமுறையியல்களின் அடிப்படையில் ஆய்வுசார் முடிவுகள் பெறப்பட்டிருக்கின்றன. ஆய்வுச் செல்நெறியின் தேவைக்கேற்ப உள்ளடக்கப்பகுப்பாய்வு முறையும் பயன்படுத்தப்படுகிறது. இறைவன் முன்னிலையில் வெளிப்படுகின்ற ஆத்மனின் மனப்போக்குகளை பக்தி இலக்கியங்களில் கண்டறிவதற்கு இவ்வகை ஆய்வுகள் பயனுடையதாக அமையும் எனும் உளத்தூண்டுதலின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்படுகின்றது.

திறவுச்சொற்கள்: மாணிக்கவாசகர், திருவாசகம், நீத்தல் விண்ணப்பம், தற்சிறுமை, ஆத்மன்

அறிமுகம்          

புராதன இனக்குழுமச் சமுதாயமொன்றின் பண்பாட்டுக் கூறுகளை தம்முள் அடக்கிய பக்தி இலக்கியங்கள், பக்திசார் பின்னணியில் இறைவனை முன்னிலைப்படுத்தி எழுந்த படைப்புக்களாகும். ஆத்மனுக்கும் இறைவனுக்குமான நெருங்கிய உறவின் பிரதிபலிப்புகளை பக்தி இலக்கியங்களில் பரக்கக் காணலாம். ஆத்மனின் மனப்போக்குகள் இறைவன் முன்னிலையில் பலவாறு வெளிப்படுகின்றன. இந்நிலையில் வெளிப்படுகின்ற ஆத்மனின் உளஇன்பநிலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடமுடியாதது. இத்தகைய மனவுணர்வினால் வெளிப்படுகின்ற கருத்தியல் வெளிப்பாடுகளும் அதன் பிரதிபலிப்புகளான செயற்பாடுகளும் பக்தியின் உளவியலில் தனித்த கூறுகளாகும். மாணிக்கவாசகர் எனும் ஆத்மனின் இலௌகிகப் பற்றறுத்தலுக்கான வேண்டுகை அல்லது விண்ணப்பத்தினை நீத்தல் விண்ணப்பத்தில் காணலாம். இப்பதிகம் முழுமையும் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டுமெனும் வேண்டுகையும் வெளிப்படுகின்றது.

 மனித வாழ்வியலில் இறுக்கமான கட்டங்கள் வெவ்வேறு காரணிகளால் உருவாகின்றன. இவ்வேளை அவரவர் ஆளுமைகள், உடல்நிலை, மனம், ஆற்றல், வைராக்கியம், உறவினர்களின் ஆறுதல் முதலானவற்றைப் பொறுத்தே அச்சூழலில் இருந்து விடுபட இயலும். இறுக்கமான சூழ்நிலையில் உருவாகும் உணர்வுகள் மற்றும் நடத்தைகள் வெவ்வேறான விளைவுளைத் தோற்றுவிக்கின்றன. மன உந்துதல்களும் மனப்போக்குகளும் மேற்படி சூழலிலுருவாகும் உணர்வுகளுக்கும் நடத்தைகளுக்கும் காரணமாக அமைகின்றன. மனப் போக்குகளானவை மன உந்துதல்களிலிலிருந்து மாறுபட்டவை. ஆயினும் இரண்டும் சமநேரத்தில் தனித்து இயங்கக் கூடியவை. மனதிலெழுகின்ற பல்வகையான உந்துதல்களினால் மனப்போக்குகள் உருவாகலாம். அதேவேளை அத்தகைய உந்துதல்களின் செயற்பாடுகள் மனப்போக்கின் விளைவுகளாகவும் அமைந்துவிடுகின்றன. மாணிக்கவாசகரிடத்தே காணப்பட்ட மன உந்துதல்களே தற்சிறுமை செய்துகொள்ளக் காரணமாக அமைந்தது.

மனப்போக்குகள், மன உணர்வு சம்பந்தமானவையாகவும் ஒரு மனிதனின் நடத்தையை உணர்வுகளின் மூலம் கட்டுப்படுத்த வல்லனவாகவும் இருக்கையில் மன உந்துதல்கள் அந்நடத்தைக்குத் தேவையான சக்தியை, உணர்வுகளை அளிப்பனவாக அமைகின்றன. மன உந்துதல்கள் உடலைச்சார்ந்தவையாக இருக்கையில் மனப்போக்குகள் உளம் சார்ந்தவையாகவே பெரும்பாலும் அமைகின்றன.1 உந்துதல்கள் பசி, தாகம், பாலுணர்வு போன்ற உடல் தேவைகளின் விளைவில் அல்லது அவற்றைச் சரிசெய்ய ஏற்பட்ட அவசியத்தில் தோன்றும்போது, மனப்போக்குகள் கோபம், வெறுப்பு, அன்பு, பாசம், நட்பு போன்ற உள வாழ்க்கையின் தேவைகளின் விளைவில் அல்லது அவற்றைச் சரிசெய்ய அவசியமானவையாய்த் தோன்றுவன. மனிதனின் உடல் தேவைகளை நிறைவேற்றுவதைப் போன்றே உளத்தேவைகளையும் திருப்திப்படுத்த வேண்டும். இவ்விரு தேவைகளும் நிறைவேற்றப்படாதவரை மனிதன் தன்தேவையை உணருவதில்லை.

தற்சிறுமை - எண்ணக்கரு விளக்கம்.

தற்சிறுமை என்பது ஒருவர் தன்னளவில் தன்னைச் சிறுமைப்படுத்துதல் ஆகும். தனது நற்குண நற்செய்கைகளை மனிதப்பண்பிலும் இழிவானதாகக் காட்டிநிற்கும் மனவுணர்வுச் செயற்பாட்டினை தற்சிறுமை எனச்சுட்டலாம். தற்சிறுமை செய்தல் என்பது தன்னை உணர்தலின் வழிப்பிறந்த அகத்துணர்வுச் செயற்பாங்கு ஆகையால் இதனைக் கோட்பாட்டியல் நிலையில் நோக்குவதனைக் காட்டிலும் எண்ணப் பாங்கினடிப்படையில் நோக்குவது பொருத்தப்பாடுடையதாக அமையும். தற்சிறுமை எனும் சொல்லினை கழிவிரக்கம், பச்சாத்தாபம் எனவும் சுட்டுவர்.

 தன்னைச் சிறுமை செய்தல், இகழ்வாகக் கருதிக் கொள்ளுதல், இழித்தும் பழித்தும் கூறுதல் என்ற வகையில் கழிவிரக்கம் எனும் சொல்லினைச் சுருக்கமாக வரையறை செய்யலாம். கழிவிரக்கம் என்பது, கடந்து போனதை எண்ணி ஒருவன் தன்மேல் கொள்ளும் மிகையான வருத்தம் அல்லது அனுதாபம்.2 சென்றதை நினைந்து வருந்தும் செயல் அல்லது இரக்கம், தன்மீதான வெறுப்பினடிப்படையில் எழுகின்ற மனவருத்தம்;, குற்றத்திற்கு வருந்துதல், வருத்தப்படுதல் என்றும் பொருள்கோடலாம். ஆகவே, தற்புகழ்ச்சியின் எதிர்ப்பதமே தற்சிறுமை ஆகும். தற்பெருமையுரைத்தல் ‘தற்புகழ்ச்சி’ எனின், ஒருவர் தம்மை இழித்துரைப்பதனை ‘தற்சிறுமை’ என்று கூறலாம்.  

               ‘ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்

       நண்ணாரும் உட்கு மென்பீடு3

என்கிறார் வள்ளுவர். சிறுமையுந் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின் தற்புகழ்தல் அன்றாயிற்று என்பார் பரிமேலழகர்.4 தற்சிறுமையே கழிவிரக்கமாகின்றது. தற்பெருமையினைத் தன்னளவிலும் பிறர்வகையானும் பேசும் இலக்கியங்கள் பலவுண்டு. காதல், வீரம், கொடையளிப்புகள் முதலான பண்புடைமையாற் தற்பெருமை வெளிப்படும். தற்சிறுமை அருளியல் நிலையில் மட்டுமே வெளிப்படுவது. இம்மரபினைப் பக்தி  இலக்கியங்களில் பரக்கக்காணலாம்.

 சைவசமய மரபில் மிகவுயரிய இடத்தைப் பெற்றிருக்கின்ற சமயப்பெரியவர்கள் பலரும் தம்மையும் தமது செயல்களையும் சிறுமைப்படுத்தியமைக்கான மனவுணர்வுகள் - மனப்போக்குகள் உருவாகுவதற்கான அடிப்படைகளைத் தோற்றுவித்தது எது? இந்தக் கேள்விக்கான அடிப்படைக் கூறுகளை அருளியல் நிலையிலேயே தேடவேண்டும்.

               சிறுமைப்படுத்துவதனுடைய இறுதி இலக்கு ஆன்மா இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல் அல்லது தன்னை முழுமையாக அர்ப்பணித்தலே. வைணவமரபில் இதனை ‘பூரண சரணாகதி’ என்பர். பக்தியில் திளைத்தலாகிய சரணாகதி தத்துவத்தின் பிரதிபலிப்பே ஒருவர் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொள்ளுதற்கு அடிப்படையாகின்றது. மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பம் என்னும் பிரபஞ்சவைராக்கியப் பகுதி முழுமையும் சரணாகதி தத்துவத்தின் வெளிப்பாடேயாகும். இறைவன் மீதான தமது களங்கமற்ற அன்பினை வெளிப்படுத்தவும், தமது தவறுகளைக் குறிப்பிட்டுக் குறையிரக்கவும் இறைவன் முன்னிலையில் தம்மைச் சிறுமை செய்வது வழக்கம். ஆணவ முனைப்பின்மை, தன்னிலையடக்கம், தன்னை உணர்தல், கழிவிரக்கம் முதலானவற்றின் அடிப்படையில் இவ்வாறான செயற்பாடுகள் நிகழும்.  ‘நாயிற்கடை யாய்க் கிடந்த அடியேன்5, ‘அங்காடிநாய் போல் அலைந்தனையே6, ‘நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன்7, ‘நாயினும் கடைப் பட்டேனை8, ‘பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாயன்றே9 என்பன இவற்றுக்கான சில சான்றுகளாகும். இவ்வாறு அடியவர்கள், அருளியல் நோக்கு நிலையில் தம்மை மிகக் கீழான இயல்புடைமையில் சுட்டித்திருப்பது எம் கவனத்தைப் பெறுகின்றது.

               ஒருவர் தன்னை இகழ்ந்து பேசுவதற்குப் பலகாரணங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அந்தத் தனியன்களின் வாழும் சூழல், உளநிலை, வழிபடுதன்மை, பக்திமேலீர்ப்பு என்பவற்றினைப் பொறுத்து அமையும். நாவுக்கரசர், பட்டினத்தடிகள், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், அபிராமிப்பட்டர், அருணகிரிநாதர் முதலானோர் பாடல்களில் இவ்வியல்புகளைப் பரக்கக் காணலாம். இத்தகைய எண்ணங்கள் மற்றும் அதன் வழியுருவாகும் நடத்தைகளானவை,

  • தன்னை உணர்தலின் வழியுருவாதல்
  • தமது ஆற்றாமையை - இயலாமையைப் பலவாறாக வெளிப்படுத்துதல்
  • கடந்தகால தன்செய்கைகளின் மீது வெறுப்புக்கொண்டுரைத்தல்
  • வாழ்வியல் அர்த்தங்களின் புரிந்துணர்தலில் வெளிவருதல்
  • அனைத்திற்கும் முதல்வன் இறைவனே என்ற மனவுணர்வில் ஊற்றுக்கொள்ளுதல்
  • வாழ்வியலின் சலிப்பினால் தோன்றுதல். (உலகப் பற்றுக்களில் இருந்து விடுவித்தல்)

எனும் காரணிகளின் அடிப்படையில் வெளிப்படுகின்றன. மாணிக்கவாசகரது திருவாசகத்தில் தற்சிறுமைப்படுத்தல்களை அதிகம் காணலாமாயினும் நீத்தல் விண்ணப்பத்தில் இதன் அதிகரித்த போக்கினைக் கண்டுகொள்ள முடிகின்றது. பெரும்பாலும் நெஞ்சொடு புலம்பலாகவே இவ்வியல்பின் வெளிப்பாடுகள் அமைந்திருக்கின்றமை குறிப்பிடற்குரியது.

நீத்தல் விண்ணப்பம்

               மாணிக்கவாசகர் சைவசமய குரவரருள் நான்காமவராக வைத்தெண்ணப்படுபவர். அரசியலதிகாரச் சிறப்புகளுடன் அவரது வாழ்வியல் கட்டமைந்திருந்தாலும் அனைத்தையும் ஆன்மிக நிலையில் புறத்தொதுக்கியவர். திருப்பெருந்துறை உறையும் சிவனருளினால் ஆட்கொள்ளப்பட்டவர். சிவபுராணம் முதற்கொண்டு அச்சோப்பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பதிகங்களைக் கொண்ட திருவாசகம் மற்றும் திருக்கோவையார் என்பன இவரது பக்தி இலக்கியப் படைப்புகளாகும். பன்னிரு திருமுறைகளுள் இவை எட்டாம் திருமுறையாக உள்ளன.

திருவாசகத்திலுள்ள பதிகங்களுள் நீத்தல் விண்ணப்பமும் ஒன்றாகும். பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம் செய்தவர் நாவுக்கரசர். இந்நிலை அவரது கடந்த காலத்தை எண்ணி வருந்தியமையால் - பச்சாத்தாபத்தினால் உருவானது. மாணிக்கவாசகரின் விண்ணப்பமானது மேற்படி நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நீத்தல் என்பது துறத்தல், நீங்குதல், விடுபடுதல் எனும் பொருள் நிலையில் எடுத்தாளப்படுகிறது. அகநிலைஞான அனுபவமுடைய ஆத்மன் உலகப் பற்றுக்களைத் துறப்பதற்கான வேண்டுகையாக இந்த விண்ணப்பம் அமைகிறது. மாணிக்கவாசகர் அகநிலைஞான அனுபவமுடைய ஆத்மன். இவர், பேரறிவுடையதும், நித்தியமானதுமான இறைவனிடத்துச் செய்த விண்ணப்பம் உலகியல் பற்றுக்களைத் துறப்பதற்கானது. அதிலிருந்து விடுபட்டு நித்திய இன்பத்தில் திளைப்பதற்கானது.

               அவனருளாலே அவன் தாள் வணங்கி என்றுரைத்ததன் வழி அவனது அருளினைப் பெறுவதும் உலகியல் பற்றுக்களிலிருந்து விடுபடுவதற்குமான விண்ணப்பமே இந்தப் பிரபஞ்ச வைராக்கியப் பகுதியாகும். கட்டளைக் கலித்துறை யாப்பில் திருவுத்தர கோசமங்கையில் இவ்விண்ணப்பம் செய்யப்பட்டது. 51 பதிகங்களையுடைய திருவாசகத்தில் ஆறாவது பதிகமாக இடம்பெறுகின்ற இப்பதிகம் 50 பாடல்களால் அந்தாதிப்பதிக அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடையவனேனை எனத் தொடங்கி ஈற்றில் கடையவனே என நிறைவுறுவதாகவு; இப்பதிகமுள்ளது. பாடலின் தொடக்கத்திலும் முடிவிலும் கடைப்பட்டவனாக - இழிந்த இயல்பினனாக, மாணிக்கவாசகர் தன்னை சுட்டித்துப்பாடிய பதிகம் இதுவாகும்.

மாணிக்கவாசகரின் தற்சிறுமை

 ஜீவாத்மாவுக்குச் சிவஞானம் கிட்டாமைக்குக் காரணம் உலகியல் பற்றுக்களுடன் பொருந்தி இருத்தலாகும். சிவஞானம் பெறுதலே ஆத்மனின் உயரிலக்கு. இதற்கு உலகியல் பற்றுக்களில் இருந்து விலகுதல், நீங்குதல் அல்லது உலகப் பற்றுக்களைத் துறத்தல் வேண்டும். ஏலவே கூறியபடி அவனருளினால் அவனைப் பற்றிப்பிடிப்பதே இதற்குச் சிறந்த சாதனமாகும். வைராக்கிய உணர்வு இருந்தாலே உலகப்பற்றினை நீக்கவும் சிவன் மீது பற்று வைக்கவும் இயலும். இந்தப் பின்னணியிலேயே ‘நீத்தல் விண்ணப்பம்’ எனும் பதிகத்தினை அணுகுதல் வேண்டும். இதனாலேயே இதனைப் பிரபஞ்ச வைராக்கியம் எனச் சுட்டினர் போலும்.

               இறைவனின் இருப்பு, இயல்புகள், கருணைத்திறன், அட்டவீரச் செயல்கள், இவை தொடர்பான தொன்மங்கள், ஆத்மனின் இயல்பு மற்றும் இலக்குகள், வாழ்வியல் அறங்கள், உலகியற் பற்றறுத்தலின் இன்றியமையாமை என இன்னோரன்ன பல விடயங்கள் இப்திகத்திலுண்டு. ஆயினும் ஒரு ஆத்மனின் உலகியற் பற்றறுத்தலுக்கான விண்ணப்பத்தில் தன்னை இழிவு செய்யும் அல்லது சிறுமைப்படுத்தும் மனப்போக்கினைக் கண்டறிய இக்கட்டுரை எத்தனம் செய்கிறது.

 மாணிக்கவாசகர் தன்னை சிறுமைப்படுத்திக் காட்டுமிடங்கள் பலவாகும். இவரது பெரும்பாலான பாடல்களில் இக்கருத்தியல்கள் விரவிக்காணப்படுகின்றன.

  • சிவன் தன்னை ஆட்கொண்டருள வேண்டும் என அவரின் பெருமையுரைத்தல்
  • பகுத்தறிவற்ற உயிரினங்கள், ஜடப்பொருட்களுடன் ஒப்பிடுதல்
  • இயலாமையைக் வெளிப்படுத்துதல்
  • நிலையாமையைக் கூறுதல்
  • இழிந்தவன் என்றுரைத்தல்
  • மனித வாழ்வியலில் உயர்ந்த எண்ணம், குறிக்கோள், நெறிமுறைகள் இல்லையே என்று  குறிப்பிடுதல்

என மாணிக்கவாசகர், தன்னை சிறுமைப்படுத்தும் முறைமையினைப் பகுத்து நோக்கலாம்.

சிவன், தன்னை ஆட்கொண்டருள வேண்டும் என அவரின் பெருமையுரைப்பதில் தனது அறியாமையை எடுத்துரைத்தல், சிவனின் பெருமைகளைக் கூறுதல் என்ற அடிப்படையில் தம்மை இகழ்ந்து கொள்கிறார். இங்கு தன் மீதான வெறுப்பும் உலகியல் மீதான வெறுப்பும் ஒருங்கே வெளிப்படுகின்றது. அதற்குக் காரணம், உலகியல் இன்பத்தையும் அதற்குரித்தான பொருள்களையும் புறத்தொதுக்க வேண்டுமெனும் முனைப்பே. இதனால் தன்செய்கைகளையும் அறியாமையையும் எண்ணித் துன்புறுகின்றார்.   

தன்னை இழிநிலைப்படுத்தும் கருத்துக்களை வெளிப்படுத்தும் இடங்களில் பொருத்தமான பழமொழிகளைக் கையாண்டுள்ளார். தமது மனவியல் சார்ந்த எண்ணங்களை சாதாரண மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளக் கூடியவாறு விளக்கிய உத்திகளுள் பழமொழிக் கையாளுகையும் ஒன்றாகும். ஐவரால் அலைக்கழிக்கப்பட்டமை, குறிக்கோளிலாது இருந்து காலம் வீணாக்கியமை, தன் இயலாமை, இறையருளைப் பெறமுயற்சித்தல், அதன்வழி உலகமாந்தர் உய்வதற்கான வழிகளைக் காட்ட முற்படுதல் ஆகியன இதன் மூலம் வெளிப்படுகின்றன.

                                “இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்து நினைப்பிரிந்த

                              விரிதலையேனை..”10

எனும் பாடலில் இவர்; கையாண்ட பழமொழிகளில் கழவிரக்கக் சிந்தனைகள் இழையோடியுள்ளன. ஐவராகிய புலன்களே இவ்வுலக வாழ்வின் துன்பங்களுக்குக் காரணமென்பதனை பல்வேறு இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார். வஞ்சனை செய்யும் புலன்களை இவற்றைக் கட்டப்படுத்தி அடக்கியாள வல்லமை அற்றதனாலேயே உலகப்பற்றுக்களிடையே கிடந்து அழுந்துபவனாயினேன், என்று பெரும்பாலான பாடல்களில் ஐம்புலன் நுகர்ச்சிகளை கோடிகாட்டிக் கருத்துரைத்துள்ளமை கவனிக்கற்காலது.

 இறைவனைப் பலவாறு விழித்து, அவரது இயல்புகள், திருவருட்செயல்கள், தோற்றப் பொலிவுகள், தொன்மங்கள் என்பவற்றினை எடுத்துக்கூறி அறியாமையினால் அகப்பட்டிருந்த என்னை ஆட்கொண்டருளுவாய் என வேண்டிக் கொள்ளும் தன்மையினைப் பதிகந்தோறும் கண்டுணர முடிகிறது. இவ்வேண்டுதலினூடாக இறைவனின் பெருங்கருணைத்திறன் கூறப்பட்டு, என்னை விட்டிடுதி கண்டாய், விடுதி கண்டாய் என விண்ணப்பம் செய்திருப்பது குறிப்பிடற்குரியது. இறைவனிடத்தான முறையீடாகவே இதனைக் கருதமுடிகிறது. உலக வாழ்க்கையில் அமிழ்ந்து அழுந்துகின்ற என்னைக் கைவிடாது அதிலிருந்து மீளுவதற்குத் துணையாக அமைதல் வேண்டும் என்பதே அவரது வேண்டுகையாகும். தன்னியல்பினைக் கூறுதல், இறைவனின் குணங்களைக் குறிப்பிடுதல், இறைவனுறையும் தலங்களை விழித்தல் என்னும் தன்மையில் மேற்படி வேண்டுதல்களின் ஒழுங்கினை அவதானிக்கலாம்.

 என்னைக் கைவிடா தொழிதல் வேண்டுமென இறைவனின் பெருமையுரைத்து விண்ணப்பம் செய்திருப்பினும், அவரின் பழிப்புரைகளையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.11 நஞ்சுண் மழைதரு கண்டன், குணமிலி, மானிடன், தேய்மதியன், பழைதருமாபரன் என்பன இறைவன் மீதான பழிப்புரைச் சொற்களாக மாணிக்கவாசகர் முன்வைப்பனவாகும். இப்பழிப்புரைக்கான காரணம் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும், அவ்வாறன்றி என்னை கைவிடின் நினது பழிப்புரைகளை அறைவன் என்பதே. 

உலகப்பிறவிகள் அஃறிணை, உயர்திணை, எனும் பாகுபாட்டிற்குரியன. அஃறிணை பிறவிகளானவை எதனையும் சிந்தித்துப் பகுத்துணரும் வல்லமை அற்றவை. இவை மனிதப் பிறவியிலும் கீழ்ப்பட்டனவாகக் கருதப்படுவன. மக்களாகப் பிறந்த அனைவரும் உயர்திணைக்கு உரியவர்களாவர். எதனையும் பகுத்தாராயும் அறிவு மனிதனுக்கு இயல்பாக உள்ளது. ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களினால் அகப்பட்டு எண்ணம் எதுவுமின்றி மாறுபட்ட குணவியல்புகளால் அறிய வேண்டியனவற்றை அறியவும் உணரவும் முடியாதவனாய் இருக்கும் நிலையில் மனிதன் தன்னைத் தாழ்த்திக் கொள்வதுண்டு. தமது செயலின் இழிநிலையை வெளிப்படுத்து வதற்காக கீழான பிறவிகளுடன் ஒப்பிட்டுரைக்கும் மனவுணர்வு மாந்தரிடையே இயல்பாகவே எழுவதுண்டு. பக்தி நிலையிலும் இது சாத்தியமாகக் கூடும் என்பதனை பக்தியியலாளர்களின் கருத்துக்களால் அறியவியலும்.  இதற்கு மாணிக்கவாசகரும் விதிவிலக்கல்ல.

               மனமானது மாறுபட்ட எண்ணங்களைத் தரக்கூடியது. மனித எண்ணங்களே அவனது வாழ்வினைத் தீர்மானிக்கின்றன. ‘எண்ணினால் நல்லவண்ணம் வாழலாம்12 என்பது சம்பந்தரது ஞானவுபதேசம். இன்பம் - துன்பம் என்ற இருவகையான மனவுணர்வு இவற்றின் விளைவுகளாகும். பெரும்பாலும் அலைபாயும் இயல்புடைய மனதினைக் கொண்டு செய்யும் செயல்களால் இன்பத்தை நுகருவதனையே இலக்காகக் கொள்ளும் நிலையில் அவையே பெருந்துன்பங்களாகவும் மாறுவதுண்டு. இத்தகைய துன்பங்களை இன்பமாக மாற்றும் வல்லமையும் மனதுக்கு உண்டு. ஆகவே மனமே அனைத்துக்கும் அடிப்படையாகும். இதனாலேயே மனதினை விலங்குக்கு ஒப்பிடுவர். மணிவாசகரும், ‘விலங்கு மனத்தால் விமலா உனக்கு13 என்கிறார். விலங்கு மனம் என்பதனை பசுஞானம் எனக்கொள்ளினும் பொருந்தும். ஆகவே, பசுஞானம் மலங்களின் தொடர்பால் நிகழ்வது. இது அறியாமையைத் தோற்றுவிக்கும். அறிய வேண்டுவனவற்றைப் புறுத்தொதுக்கும்.

அறியாமையாற் செய்த செயல்களுக்கு வருந்தும் மனநிலையினை மாணிக்கவாசகரது பாடல்களில் பரக்கக்காணலாம். தனது குற்றத்தின் பொருட்டு மனம்மிக உருகி வருந்துகின்றார். இதனை, ‘என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை14 என வருங்கருத்தாலறியலாம். ‘யானுன் அருளறியாமையின்15 அறியாச் சிறியேன்16 ‘ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன்17 என தன் அறியாமை இயல்பினை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவ்வாறு வருந்திய நிலையில் இறைவனின் அருளினைப் பெறலாமென்பது அவரது மெய்ப்பாடு. உளவியல் நிலையிலும் இது பொருந்திவரக் கூடியதே.  இதனாலேயே கீழான பிறவிகளுடன் ஒப்பிட்டுத் தம்மைத் தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்குக்கு அருளியலாளர் ஆளாகினார்.

     மாணிக்கவாசகர் தன்னை தாழ்த்திக் கொள்ளும் முறைமைகளில் இயலாமையை வெளிப்படுத்துவதும் ஒன்றாகும். இயலுமை என்பதன் எதிர்ப்பதமே இயலாமையாகும். ஆற்றல் இல்லாமையை இச்சொல் குறித்து நிற்கிறது. பல்வேறிடங்களிலும் ‘ஆற்றலில்லாதவன்’ என்ற பண்புடைமையில் மாணிக்கவாசகர் தன்னியல்பினை கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

 பாடிற்றிலேன் - நினது புகழ்ச்சிகளைப் பாடினேனல்லன்

 பணியேன் - நின்னைப் பணிந்து வணங்கினேனல்லன்

தேடிற்;றிலேன் - சிவன் எவ்விடத்தவர்? எவர் அவ்விறைவனைக் கண்டனர்? என்ற நிலையில்     நின்னைத் யான் அலறித் தேடினேனுமல்லன்

ஓடிற்றிலேன் -  தேடி ஓடினேனுமல்லன்

கிடந்து உள் உருகேன் - நினது பிரிவின் வேதனையினால் செயலற்றுக் கிடந்து உள்ளம் உருகப் பெற்றிலேன்

பசு ஊன் வீடிற்றிலேன் - தசைகளால் போர்க்கப்பட்ட உடம்பினை நீங்கப் பெற்றிலேன் 18

என்றும் ‘களிவந்த சிந்தையொடு உன்கழல் கண்டுங் கலந்தருள வெளிவந்திலேன்19 ‘குதுகுதுப்பின்றி நின்றென் குறிப்பே செய்து நின் குறிப்பில் விதுவிதுப்பேனை20 ‘உன் கழல் கண்டும் கலந்தருள வெளிவந்திலேன்21 என்றும் தன் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார். பாடுதல், பணிதல், அலறுதல், தேடுதல், ஓடுதல், உருகுதல் என்னும் இச்செயல்களெல்லாம் உடைய அடிகள் இவை ஒன்றுஞ் செய்திலேன் என எதிர்மறைமுகத்தாற் கூறியது எதனால் எனின் இறையருட்பேறு உடன் கிடைக்கப் பெறாமையே.

 கருத்து விளக்க யுக்தியில் உவமையும் ஒன்று. பொதுவாக உவமைப் பிரயோகத்தில் உவமானத்துக்கான பொருளைத் தெரிவதில் செல்வாக்குச் செலுத்தும் இருவிடயங்களை அறியக் கூடியதாக உள்ளது. ஒன்று, யாருக்கு விடயம் சொல்லப்படவேண்டியதாக உள்ளதோ அவருக்கு எளிமையாக விளங்கத்தக்க வகையிலான உவமையைப் பிரயோகிப்பது குறித்த படைப்பாளியின் அக்கறை சார்ந்தது. மற்றையது, பொருளை படைப்பின் கவித்துவ – கலைத்துவ வெற்றிக்காக தன்னாற்றல் காட்டி, உவமையாகப் பிரயோகிக்கும் படைப்பாளியின் ஈடுபாடு சார்ந்தது என இரு விடயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அனைவருக்கும் விளங்குவதான உவமையைக் கையாள்வதற்கு இயற்கையையும், உலகியலையும் கூர்மையாக அவதானிக்கும் அறிவு இன்றியமையாததாகும். எங்கும் எப்பொழுதும் நடைபெறவல்ல வற்றை உவமானமாகக் கூறினாலேயே சாதாரணரும் அவ்வுவமானங்கள் வாயிலாக, படைப்பாளி சொல்ல விழைந்த கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும்.22 மாணிக்கரசரும் தன் இயலாமையை உவமானங்க;டாகச் சாதராண மக்களும் அறிந்துணரக் கூடியவாறு  வெளிப்படுத்தியுள்ளார்.

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறுவேன்23 ‘செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற் பன்னாள் விழுகின்ற வென்னை24, ‘இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விரிதலையேன்25 ‘கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலரியேன்26 ‘கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன் 27,‘ஆனைவெம் போரிற் குறுந்தூறெனப் புலனால் அலைப்புண்டேன்28‘எறும்பு இடை நங்கூழ் என புலனால் அரிப்புண்டலந்த வெறுந்தமியேன்29,‘பெருநீரறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப்பிரிந்த வெருநீர்மையேன்30,‘மத்துறு தண்டயிரிற் புலன்றீக்கது வக்கலங்கி வித்துறுவேன்31, ‘அடற்கரிபோல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை32 ‘பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ வெதும் புறுவேன்’33 ‘வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந்தேன்34, முழுத்தயில் வேற்கண்ணியரென்று மூரித்தழன் முழுகும் விழுதலையேன்35 ‘உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய் விழைதருவேன்36 ‘விரையார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை37 என பொருத்தமான உவமைகளைக் கையாண்டு தனது இயல்புகளையும் அதிலிருந்து விடுபடவியலாத் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்படி உவமைக;டாக தன்னியல்பினை பலவாறு சிறுமை செய்துள்ளார். ஐம்புலன் நுகர்ச்சியே உலகப்பற்றுக்களுக்கு அடிப்படை என்பதனை இறைவன் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளார். உடலின்பமாகிய சிற்றின்பமே உலகப் பற்றறுத்தலுக்கு முழுவதும் தடையாக இருப்பதனை உணர்ந்தே தான் எடுத்தாண்ட உவமைகளின் வழி அதனைப் பலவாறு குறித்துக்காட்டினாரெனலாம். காம மோகத்தின் உச்சத்தினால் அல்லலுறும் ஆத்மனாக தன்னியல்பினை முன்னிறுத்தியிருப்பதானது உலக மாந்தர்க்கான அறவுரைப்போதனையே எனலாம்.           

               ஆன்மாக்கள், மெய்ப்பொருளை நினையாமல், அறியாமல் அல்லது அறிவதற்கு முயலாமல் இருப்பதற்குக் காரணம் உலகியல் பற்றுக்களே. உலகியற் பற்றுக்கள் பாசங்களால் தோன்றுவன.  பசுக்களைக் கட்டிய பாசங்கள் மூன்றுண்டு38  என்பார் திருமூலர். ஆணவம், கன்மம், மாயை என்பன அவையாகும். உலகியல் துன்பங்கள் யாவற்றுக்கும் இவையே அடிப்படையாகையால் இவற்றிலிருந்து விடுபடுதலே ஆன்மாக்களின் இலக்காகும். இறைவனே மும்மலப் பற்றறுப்பவனாகையால் அவன் துணையுடனேயே இவ்விலக்கினை அடைய முடியும். ‘பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே39 என்றும், ‘பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத்தெனை யாண்ட40 என்றும், ‘பாசமானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் ஆசைதீர்த்து அடியாரிடைக் கூட்டிய அற்புதம் அறியேனே41 என்றும் மாணிக்கவாசகரே இதனை குறிப்பிடுவார்.

இவ்வுண்மை புலப்படவே இறைவன் முன்னிலையில் பற்றறுத்து எனை ஆண்டருள்க என்ற விண்ணப்பத்தினை முன்வைத்தார். உலகப்பற்றறுத்தாலே இறைவனைப் பற்றிக்கொள்ளவியலும். ஆனால், உலகப் பற்றினை நீக்க முடியாத ஆத்மனாகக் கருதியனடிப்டையில் தன்னை இழிவாகப் பேசியுள்ளார். பதிகத்தின் தொடக்கத்தில் கடையவனேனை எனத்தொடங்கி, கடையவனே என ஈற்றிலும் நிறைவுசெய்திருக்கின்றார். கடை என்பது இழிவு எனும் பொருள் பயப்பது. ஆகவே இழிவானவன் எனும் பொருள்படவே தன்னைக் கடையவனே42 எனக் குறித்தார். மேலும், கள்ளேன்43, பொய்யவன், சிறியேன்44, வினையேன்45, ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேன், கடுந்தகையேன்46, தமியேன்47, வெற்றடியேன்48, அடியேன்49, புலனால ரிப் புண்டலந்த வெறுந்தமியேன்50, அறியாச் சிறியேன்51, வினைத்துணையேன்52, பழுதுசெய்வேன்53, ஊன் கழியா விதி அடியேன்54 என்று கொடிய வன்சொற்களால் தன்னையே இகழ்ந்துள்ள இடங்கள் பலவாகும்.

மாணிக்கவாசகரிடம் இயற்கை ஈடுபாடு அதிகம் இருந்தது. இறைவனின் ஆற்றல், அருள்மாட்சி, மறக்கருணை என்பன குறித்துப்பாடிய மாணிக்கவாசகர்; இயற்கை வனப்பினையும் உளமுருகிப் பாடியுள்ளார். இயற்கை எழில்நிறைந்த இடங்களில் இறைவனுக்கான திருக்கோயில்கள் அமையப்பெற்றிருக்கின்றன. மாணிக்கவாசகர், தலங்களை குறிப்பாக உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை வர்ணித்துப் பாடுகின்ற போது தனது உயர்ந்த எண்ணம், இலக்கு, மற்றும் நடத்தை மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் குறித்தும் கருத்துப் பகர்கின்றார். இறைவன் திருவடிக்குத் தொண்டு செய்ய முடியவில்லையே எனும் இயலாமையினால் வருந்தி தன்னை இகழ்ந்து கொள்ளுமிடங்களில் இதுவும் ஒன்றாகும்.

நிறைவுரை

 மாணிக்கவாசகரின் பதிகங்கள் யாவும் தன்னுணர்வின் வெளிப்பாடுகளாகத் திகழ்வதுடன், இறை – ஆன்ம உறைவினை விசாலிப்புச் செய்யும் சிறப்புக்குமுரியன. குறிப்பாக திருவாசகத்திலுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றும் உள கிளர்ச்சி கொண்டவை. இங்கு, உலகப் பற்றறுக்க விழைந்த ஆத்மனின் உளப்போக்கினை வெளிப்படுத்தும் சான்றுகளாக நீத்தல் விண்ணப்பத்திலுள்ள பாடல்களை இனங்கண்டு கொள்ள முடிகின்றது. இந்த ஆய்வின், மூலமான இப்பதிகத்தில் காணப்படுகின்ற தற்சிறுமைக் கருத்துக்கள் உய்த்தறி முறையில் அணுகப்பட்ட நிலையில் பின்வரும் முடிவுகள் தொகுத்தறி முறையினூடாகப் பெறப்படுகின்றன.

இறைவனின் இயல்புகள், திருவருட்செயல்கள், தொன்ம வரலாறுகள், எல்லையற்ற ஆற்றல் என்பன பாடல்கள் முழுமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பற்றுக்களை அறுத்தலை இலக்காகக் கொண்ட ஆத்மனின் வேண்டுதலாக இப்பதிகம் உள்ளது. இறைவனை முன்னிலைப்படுத்திய இத்தகைய வேண்டுதல்களில் அவ்வாத்மனின் தற்சிறுமைப்படுத்தும் மனப்போக்கினை பலவாறு இனங்காண முடிகிறது. இழிந்த சொற்கையாளுகை, உவமைகள், பழமொழிகள், நிலையாமைக் கருத்துக்கள், இயலாமை, எண்ணங்கள் ஈடேறாமை, பகுத்தறிவற்ற உயிரினங்களுடன் ஒப்பிட்டுரைத்தல் என்றவாறாக உலகப் பற்றினைத் துறக்க முற்பட்ட ஆத்மனாக மாணிக்கவாசகர் தன்னைச் சிறுமை செய்துள்ளார். ஆயினும் அதிகளவான உவமைக் கையாளுகை மூலமாகவே அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுவமைகளில் அவரது எண்ணங்களும்; நடத்தைகளும் வெளிப்படுகின்றன. அறியாமையினால் ஏற்படும் மயக்கம் அடைய வேண்டிய இலக்கினை தடுத்துவிடு கின்றது. ஐம்புலன்களின் நுகர்ச்சியே உலகப் பற்றறுத்தலுக்குத் தடைகளாகும். மலங்கப் புலன்களைந்தும் வஞ்சனையைச் செய்யும் இயல்புடையன. இத்தன்மை பல்வேறிடங் களிலும் அழுத்திப் பேசப்பட்டுள்ளது. சுருங்கக் கூறின் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டுமெனும் வேண்டுகையும் இச்சிறுமைப்படுத்தும் மனப் போக்கினூடாக வெளிப்பட்டிருப்பதனை இனங்கண்டுகொள்ள முடிகின்றது.

அடிக்குறிப்புகள்

1.            பரமே~;,செ., 2007, சமூக உளவியல், ப.177.

2.            கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.275

3.            குறள். 1088.

4.            திருக்குறள் பரிமேலழகர் உரை, ப.410 – 411.

5.            திருவாசகம், சிவபுராணம், வரி,60.

6.            பட்டினத்தார் பாடல்,பா.எ, 

7.            சுந்தரர் தேவாரம், 7:1:2. 

8.            நாவுக்கரசர் தேவாரம், 4:76:6.

9.            மேலது, 6:95:8.

10.          நீத்தல் விண்ணப்பம், பா.எ. 9.

11.          மேலது, பா.எ.46.

12.          சம்பந்தர் தேவாரம், 3:24:1.

13.          திருவாசகம், சிவபுராணம், வரி,56

14.          நீத்தல் விண்ணப்பம், பா.எ. 50.

15.          மேலது, பா.எ. 6.

16.          மேலது, பா.எ. 37.

17.          மேலது, பா.எ. 43.

18.             “பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித் தாய்க்குப்பச்சூன்

    வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந் தாங்கலறித்

    தேடிற்றி லேன்சிவ னெவ்விடத் தானெவர் கண்டனரென்

    றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேனின் றுழைத்தனனே” (நீத்தல் விண்ணப்பம், பா.எ. 45)

19.          மேலது, பா.எ. 15.

20.          மேலது, பா.எ. 34.

21.          மேலது, பா.எ. 15.

22.          பிரசாந்தன்.ஸ்ரீ, பக். 30-31

23.          நீததல் விண்ணப்பம், பா.எ. 3.

24.          மேலது, பா.எ. 5. 

25.          மேலது, பா.எ. 9. 

26.          மேலது, பா.எ. 13.

27.          மேலது, பா.எ. 20.

28.          மேலது, பா.எ. 21.

29.          மேலது, பா.எ. 25.

30.          மேலது, பா.எ. 26.

31.          மேலது, பா.எ. 30.

32.          மேலது, பா.எ. 32.

33.          மேலது, பா.எ. 36.

34.          மேலது, பா.எ. 40.

35.          மேலது, பா.எ. 44.

36.          மேலது, பா.எ. 45.

37.          மேலது, பா.எ. 34.

38.          திருமநடதழரம், பா.எ. 2367. 

39.          சிவபுராணம், வரி, 64.

40.          திருவாசகம், குயிற்பத்து, பா.எ. 9.

41.          திருவாசகம், ஆசைப்பத்து, பா.எ. 2.

42.          நீத்தல் விண்ணப்பம், பா.எ. 1,50.

43.          மேலது, பா.எ. 2.

44.          மேலது, பா.எ. 7.

45.          மேலது, பா.எ. 8,11,21,35.

46.          மேலது, பா.எ. 12.

47.          மேலது, பா.எ. 17,38.

48.          மேலது, பா.எ. 23.

49.          மேலது, பா.எ. 23,27,28,42.

50.          மேலது, பா.எ. 25.

51.          மேலது, பா.எ. 37,43.

52.          மேலது, பா.எ. 39.

53.          மேலது, பா.எ. 44.

54.          மேலது, பா.எ. 42.

 

உசாத்துணை

  1. அருளம்பலவனார், சு.,1967, திருவாசக ஆராய்ச்சியுரை, முதலாம் பாகம், யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா புத்தகசாலை.
  1. கந்தசாமி, சோ.ந., 2007, பன்னிரு திருமுறை, சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகம்.
  1. சுப்பிரமணியபிள்ளை, கா, (உ.ஆ.), 1997, திருவாசகம், சென்னை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
  1. நடராசன், பி.ரா., 2007, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும், சென்னை, உமா பதிப்பகம்.
  1. நடராசன், பி.ரா., 2004, திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், 1,2,3 திருமுறைகள், வரலாற்று முறையில் மூலமும் உரையும், (மூன்று பாகங்கள்), சென்னை, உமா பதிப்பகம்.
  1. நடராசன், பி.ரா., 2004, திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், 4,5,6 திருமுறைகள், வரலாற்று முறையில் மூலமும் உரையும், (மூன்று பாகங்கள்), சென்னை, உமா பதிப்பகம்.
  1. பரமே~;,செ., 2007, சமூக உளவியல், சென்னை, சாந்தா பப்ளி~ர்ஸ்.
  1. திருக்குறள் பரிமேலழகர் உரை, சென்னை, கழகப்பதிப்பு, திருநெல்வேலி தென்னிந்தி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.
  1. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், 2017, (பதினெட்டாம் பதிப்பு), திருவாசகம், திருச்சி, ஸ்ரீராமகிரு~;ண தபோவனம்.