ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் பாலில் இடும் பிரை உவமை குறித்தப் பதிவுகள் (Impressions of Milk Fermentation in Kambaramayana)

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 24 Mar 2023 Read Full PDF

Abstract

The grammar for any Illustration literally lies in pairing unknown and some times even unimaginative things with comparison to the most familiar things around us. Even for our regular and customized things also under many circumstances, in order to provide with a detailed explanation, illustrations are the most favoured ones for literary writers.  The moment a tiny drop of curd fermentation happens to get mixed in a Pitcher of milk, the whole quantity of milk becomes a curd due to its transformation. Standing in the Covent both Sri Ram and Sita got transformed their Hearts to each other at their first sight itself.  The intensity of love sickness which made an entry through the eyes of Sita got its spread over every where like a fermented curd which transforms the whole quantity of milk.  During the course of Nigumbala Yagna, Lakshman killed the enemies by his predominant quality of Bravery which was equated with the fermentation of Curd over the whole milk. Bhaktha Prahlad was also emphasizing about Divine wisdom through the dissolving property of milk becoming curd due to fermentation. Likewise, at the sight of disfigured Soorpanka in Lanka who got her nose and ears cut off because of a tussle with Lakshman in Panchavati, all the Srilankan lady demons were running here and there by uttering stuttered words out of their stumbled status like the milk which suddenly becomes curd on fermentation. These are all characteristic descriptions compared with the transformative nature of the whole product that results in a radical change even when it is not differentiated into a particle. It is considered as a tool to reveal the knowledge and depth of experience of the Laureate who is creating an Epic.

Keywords:  Milk, Fermentation, Mixing, Curd, Simile, Characterstics and Merits.

ஆய்வுச்சுருக்கம்

அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குதல் என்பது உவமைக்குச் சொல்லப்படும் இலக்கணம். பற்பல சமயங்களில் அறிந்ததையே நன்கு விளக்குவதற்குக்கூட உவமை பயன்படுத்தப்படுகின்றன. குடத்துப் பாலில் சேர்ந்த துளி பிரை, அக்கணமே பால் முழுவதும் சேர்ந்து நிறைய பாலையும், சிறிய துளி மோர் தனதாக்கி, தயிராகிறது.கன்னி மாடத்திலே நின்றிருந்த சீதையும், இராமனும் ஒருவரை ஒருவர் பார்த்து, இதயம் மாறி குடியேறினர். சீதையின் கண்களின் வழியே புகுந்த காதல் நோயானது, பாலில் கலந்த பிரை போல முழுவதும் பரவியது.இலட்சுமணன், நிகும்பலை யாகத்தில் பகைவரை பாலில் விழுந்த பிரையென உட்புகுந்து வெட்டி வீழ்த்தினான்.பிரகலாதன் இறை ஞானத்தைப் பற்றிக் கூறும்போது பால் தயிராவதைப் போன்றது என்கிறான்.இலட்சுமணனால் மூக்கறுபட்டு வந்த சூர்ப்பணகையைக் கண்ட பெண்கள், பிரை ஊற்றப்பட்ட பாலைப் போல நிலைத்தடுமாறிய சொற்களைச் சொன்னபடி, ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். ஒரு சிறுதுளியாகி கட்புலனுக்கு வேறுபட்டுப் புலப்படாத போதும், பெருமாற்றம் விளைவிக்கும் முழு மாற்றம் தரும் இயல்பு பற்றி இத்தகு பண்பு விளக்கமாக இவ்வுவமை வருகிறது.இது காப்பியத்தைப் படைப்பவரின் அறிவுத்திறத்தையும், அனுபவத்தின் ஆழத்தையும் வெளியிடுவதற்குக் கருவியாகவேக் கொள்ளப்படுகிறது.

முக்கியச் சொற்கள்: பால், பிரை, கலத்தல், தயிர்,உவமை, தன்மைகள்,சிறப்புகள்.

முன்னுரை

கம்பர் தம் காப்பியத்தில் பல அரிய உவமைகளைக் கையாண்டுள்ளார்.உவமைகளைப் பாடாத பாடல்களே இல்லை என்று கூறுமளவிற்கு, அரிய உவமைகளை இடத்திற்குத் தகுந்தாற்போல மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். தெரிந்த உவமைகளைத் தெரியாத விபரத்தை விளக்கும்போது எளிமையாக விளங்க வைப்பதற்காகவே பயன்படுத்தியுள்ளார். அவற்றுள் பாலில் இடும் பிரை என்ற உவமையைக் கம்பராமாயணத்தில் கம்பர் எவ்விதம் கையாண்டுள்ளார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

உவமையணி

தொல்காப்பியரைப்போல், உவமையணியைப் பற்றி, எந்த அணிநூலாசிரியரும், தத்தம் நூல்களில் விரிவாகப் பேசவில்லை.. முப்பதுக்கும் மேற்பட்ட இந்நூற்பாக்களுள், தொல்காப்பியர். 1. உவமைகள் பிறக்கும் முறை, 2. பொருளாலும், தொடராலும் உவமைகள் அமையும் முறை, 3. உவமைகளைக் கற்றுணரும் முறை ஆகிய மூன்று அடிப்படைகளைப் பேசுகின்றார்.

1.உவமைகள் பிறக்கும் முறை

சிறப்பு,நலன், காதல், வலி, கிழக்கிடுபொருள் ஆகிய ஐந்தினை நிலைக்களன்களாகக் கொண்டு, வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையில் உவமைகள் பிறக்கும் என்பர். இதனை.

                          “சிறப்பே நலனே காதல் வலியொடு

                           அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப”                                                                                                                                                   

(உவமயியல்-4)

 

                         “கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்”                                                                                                                                              

(உவமயியல்-5)

எனவும்.

                        “வினைபயன் மெய்யுரு என்ற நான்கே

                         வகைபெற வந்த உவமத் தோற்றம்”                                                                                                                                                 

(உவமயியல்-1)

எனவும் வரும் நூற்பாக்களால் அறியலாம்.

2.உவமைகள் பெரும்பாலும் தொடராலும் அமையும் முறை

ஒரு பொருளைப் பிறிதொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுங்கால் அவ்விரண்டும் பொதுத்தன்மையில் ஒத்திருக்கவேண்டும் எனவும்; முதல், சினை என உவமைகள் அமையுங்கால், மரபுநிலை பிறழாமல் முதலொடு முதலும், சினையொடு சினையும், முதலொடு சினையும் சினையொடு முதலும் பொருந்தி உவமையாக வேண்டும் எனவும், அளவிற் சிறிய பொருள், அளவிற் பெரிய பொருளோடும், அளவிற் பெரியபொருள், அளவிற் சிறிய பொருளோடும் உவமையாகி வரும் எனவும், அவ்வாறு வரினும் இரண்டன் பொதுவொப்புமை கருதி மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தொல்காப்பியர்     கூறுவர். இக்கருத்துக்களை,

                       “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”                                                                                                                       

(உவமயியல் 8)

எனவும்,

                           “முதலும் சினையும் என் று ஆயிரு பொருட்கும்

                            நுதலிய மரபின் உரியவை உரிய”

                                                                                                                      (உவமயியல் 6)

எனவும்,

                          “பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்

                           குறிப்பின் வரூஉம் நெறிப்பா டுடைய”

                                                                                                                    (உவமயியல் 10)

எனவும் வரும் நூற்பாக்கள் தெரிவிக்கும்.

மேலும், உவமை, எண்வகை மெய்ப்பாடுகளை உணர்த்தும் வகையில் அமையுமெனவும்'". இன்பமும், துன்பமும் பற்றியே அதிக உவமைகள் அமையுமெனவும்  கருத்துரைப்பர். அடுத்து ,உவமையும் பொருளும் அமையுங்கால் வரும் உவமவுருபுகளைச் சுட்டும் தொல்காப்பியர், வினை, பயன், மெய் ,உரு என்னும் நால்வகை உவமங்கட்கும் பொருந்தக்கூடிய உருபுகளை எவ்வெட்டாக வகைப்படுத்தி. இவ்விவ் வுருபுகளே இவ்விவ் வுவமங்கட்கு வரும் என்பர்.  உவமவுருபுகளை, உவமங்கட்குப் பயன் படுத்தவேண்டிய நெறியைத் தொல்காப்பியரே, அவர் உரைத்தாங்குப் பின்பற்றவில்லை என்று சான்றுகளுடன் விளக்குவர்.ஆய்வாளர்.

உவமை, அடையொடு அமையுமானால், பொருளும் அவ்வாறே அடையுடன் வருதல் வேண்டும் என்பது தொல்காப்பியர் கொள்கை  உவமையும், பொருளும் இணைந்துவரும் தொடர்நிலைக்கண் நிரனிறைப் பட்டுவருபவற்றையும், தொல்காப்பியர் குறிப்பிடுவர். உரையிற் கோடலென்னும் உத்தியால், பேராசிரியர்.

             “களிறுங் கந்தும் போல நளிகடல்

              கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே”

என்று நிரனிறைக்கு மாறுபட்டுவரும் எதிர் எடுத்துக்காட்டுவர்.

3.உவமைகளை உணரும் முறை

தொல்காப்பியர் சுட்டும் குறிப்பிடத்தக்க பிறிதொன்று, உவமையைப் பொருளறிந்து கற்றுணரும் முறை பற்றியதாகும்.

வழக்கிலாயினும், செய்யுளிலாயினும், உவமைகள் இடம்பெறும் பொழுது, இன்ன இன்ன காரணத்தால் இதற்கு இது.

எல்லாவிடங்களிலும், எவரும் விளக்கங்கொடுத்து உரைப்பதில்லை. அவ்வாறு காரணத்துடன் அமையும் உவமைகளைச் சுட்டிக் கூறிய உவமமென்றும், காரணம் இல்லாது அமையும் உவமைகளைச் சுட்டிக்கூறா. உவமமென்றும் தொல்காப்பியர் உரைப்பர்.

                 “சுட்டிக் கூறா உலம மாயிற்

                  பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தனர் கொளலே”

                                                                                                                    (உவமயியல் 7)

என்பது நூற்பாவாகும். உவமங்களுள் சுட்டிக்கூறிய உவமங்களினும். சுட்டிக் கூறா உவமங்களே மிகுதியாகும். இச்சுட்டிக்கூறா உவமங்களை, இருபொருள்கட்கும் இடையில் அமைந்த பொதுத்தன்மையைப் பொருத்திப் பார்த்தே விளங்கிக்கொள்ளவேண்டும் என்பர்.

அடுத்து, உவமையில் பொருளறியுங்கால் உவமானத்திற்குள்ள அடையையே, உவமேயத்திற்கும் உரியதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று உரைப்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

                         “உவமப் பொருளின் உற்றது உணரும்

                          தெளிமருங்கு உளவே திறத்திய லான”

                                                                                                                      (உவமயியல் 11)

என்னும் இந்நூற்பாவிற்கு விளக்கஞ் சொல்லும் பேராசிரியர்.

                  “உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க்கு

                   அச்சாணி யன்னார் உடைத்து”

                                                                                                         (வினைத்திட்பம் 667)

என்பதனுள், அவன் செய்கை வன்மை கூறாராயினும், அச்சாணியென்று உவமப் பொருள், தானே அச்செய்கை வன்மை கூறிற்று என்று நுண்ணிதின் உரைத்துக்காட்டுவர்.(கம்பச் சித்திரம்-முனைவர். அரசேந்திரன்)

பாலில் இடும் பிரை- வேதிவினை

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுடன், மற்றொரு பொருள் சேரும்போது, வேதிவினை நடக்கிறது. அதேப்போல பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை ஊற்றும் போது பாலில் வேதிவினை தான் நடக்கிறது. பாலில் புரதச்சத்து அதிகம். இந்த புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடு தான் நடக்கிறது. ஏற்கனவே உறைந்த தயிரில் 'லாக்டோ பேசிலஸ் அசிடோபில்லஸ்' ('Lacto Bacillus Acidophilus') என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும் போது, பாலில் உள்ள ’லாக்டோஸ்’ எனும் சர்க்கரை பொருளை இந்த பாக்டீரியா, நொதிக்கச் செய்கிறது. இதன் மூலம் ’லாக்டிக் அமிலம்’ உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர் மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின் புரத பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் இருக்கின்றன. இதன் காரணமாக புரத பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு, கெட்டியாகி உறைந்து விடுகின்றன. லாக்டோ பேஸிலஸ் பாக்டீரியா செயல்படுவதற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதன் காரணமாகத்தான் பால் காய்ச்சப்பட்ட பிறகு, தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும், சற்று வெப்பப்படுத்தி உறை  ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.

ஆயர் வாழ்வு மட்டுமன்றி வாழ்வியல் நடைமுறையின் தினசரிக்காக பசி என்ற நிலையிலும், இது பொதுமையும், பயிற்சியும் பெற்றிருக்கலாம். ஒரு சிறு துளியாகி கட்புலனுக்கு வேறுபட்டுப் புலப்படாத போதும், பெருமாற்றம் விளைவிக்கும், முழு மாற்றம் தரும் இயல்பு பற்றி இத்தகு பண்பு விளக்கமாக இவ்வுவமை வருகிறது.

பாலில் இடும் பிரை

1.சீதை, கன்னி மாடத்தில் நின்றிருந்த போது, வீதியில் நடந்த வந்துகொண்டிருந்த இராமனைக் கண்டாள். அதே நேரத்தில் இராமனும், சீதையைக் கண்டான்.ஒருவர் மனதிலே ஒருவர் மாறிக் குடியேறினர்.இராமன் சென்ற பிறகு, சீதைக்குக் காதல் மயக்கம் மிகுதியானபோது, உள்ளமும், உடம்பும், நூழிலையை ஒத்த தனது நுண்ணிடையைப் போலத் தளரப் பெறுபவளான சீதையினது, உள்ளே செல்வதற்கு வழியாக அமைந்த நீண்ட கண்களின் வழியே புகுந்த காதல் நோயானது, பாலில் கலந்த பிரைபோல முழுவதும் பரவியது.

                     "மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன்

                      நூல் உறு மருங்குல்போல் நுடங்குவாள் நெடுங்

                      கால் உறு கண்வழிப் புகுந்த காதல்நோய்

                      பால் உறுபிரை எனப் பரந்தது எங்குமே"

                                                                                                

                                                                                        (மிதிலைக் காட்சிப் படலம் 525)

சீதையின் பார்வை கண் வழியாகப் புகுந்த காதல், பாலிற் பெய்த பிரை போல் பாவையின் உடலெங்கும் பரந்தது..தூய உள்ளத்தில் தோய்ந்த காதல், பாலில் பெய்த பிரையை ஒத்தது. குடப்பாலில் சேர்ந்த துளிபு பிரை, அக்கணமே பால் முழுவதும் பரவுதல் போன்று, சீதையின் மனதில் புகுந்தமையால், ஐம்புலன்களிலும் பரவி பரந்து நிரம்பிற்று. பிரை சேர்ந்த பின்னர் பாலின் தன்மை திரிந்து வேறாதல் போல, கன்னியின் தூய சிந்தனையும், காதலால் திரிந்து போயிற்று.  என்ற சிறந்த உவமையால் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

      2.இலங்கா தேவி, இலங்கையில் புகும் அனுமனைத் தடுத்து போரிட்டாள். அனுமன், அவளை ஒரு அறைவிட, கீழே விழுந்து, எழுந்த இலங்கைமாதேவி அவனிடம் , இந்த இலங்கை நகரை நான் எவ்வளவு காலம் காப்பேன் என்று பிரம்மனை வினவியபோது, மிக்க வலிமை பெற்ற ஒரு குரங்கு, தன் கையினால் அடித்து உன்னை வருத்தும். அன்றே நீ இலங்கையை விட்டு வந்து, என்னைக் காண்பாய். அதன் பின்பு இலங்கை அழிவது உறுதி என்று பிரம்மன் உரைத்ததைக் கூறி, இலங்கைக்குள் செல்ல அனுமதி அளித்தாள்.உன்னால் எதுவும் முடியாததில்லை என்று கூறி அனுப்பியதைக் கேட்டு மகிழ்ந்து, அனுமன் வாய்மையே வெல்லும் என்பதை நினைத்தான். இராமனின் திருவடிகளை மனதில் வணங்கி, இழிந்தவர் வாழும் இலங்கையின் பொன் மதிலைத் தாவிச் சிறந்த பாலில் சிறிதளவு மோர் சிந்தினதைப் போல நகருக்குள் புகுந்தான்.

                   “வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளையும் அஃது என்று

                    ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அப்

                    பூரியர் இலங்கை மூதூர்ப் பொன்மதில் தாவிப் புக்கான்

                    சீரிய பாலின் வேலைச்சிறு பிரை தெறித்தது அன்னான்”

                                                                                                           (ஊர்தேடுபடலம் 190)

"சீரிய பாலின் வேலைச் சிறு பிரை தெறித்தது அன்னான்" என காட்டுவதில் வரவிருக்கின்ற பெருமாற்றங்கள் முன் சுட்டப்படுகின்றன.

3.இலக்குவன், இந்திரஜித்துடன் போர் புரிய, நிகும்பலை யாகத்தை அழிக்கச் சென்றபோது, தனி ஒருவனாக நின்று, அரக்கர் படையில் உள்ளேப் புகுந்து, பெரும் ஊழிக் காற்றினைப் போல, அணு அணுவாகச் சிதைத்தான். நால் வகைப் படைகளும் வீழ்ந்துபட்டன..விடம் சிறிதாக இருப்பினும், அதனை ஏற்ற உடலில் பரவி அழிப்பதைப் போல, நூல் சிறிதாக இருப்பினும் அந்த நூல் வலைப்பட்ட மீனினம் முற்றும் அகப்பட்டு அழிவதைப் போல, உடலினுள் புகுந்த நோய் உள்ளிருந்தே அழிப்பது போல, பரவி அழித்தான். மிகுதியான பாலில் ஒரு துளி பிரை விழுவதால் பாலின் தன்மை மாறி விடுகிறது. அதுபோலப் பகைவர் படை பெரிதாக இருந்தாலும், அதன் உள்ளே புகுந்த இலட்சுமணனால், அப்படை கலக்கமுற்று அதன் தன்மை திரிந்தது.

பாலில் ஊற்றிய பிரை இலட்சுமணன் அம்பினால் அடிபட்ட அரக்கர்கள் தம்முடைய மலை போன்ற உடம்பிலே உள்ள உயிர் நிலையான இடத்திலே இலட்சுமணன்  ஏவிய அம்பு பாய்ந்து, அந்த உயிரைத் தன் உணவாக உண்டு கொண்டிருக்க, அந்நிலை அடைந்த அரக்கர் இந்த அம்புகளைப் பிடுங்கினால் இறந்து போவோம் என்று எண்ணி, பிரை ஊற்றிய பாலை போலத், தமது உள்ளம் கலங்கி வேறுபட, பிறரிடம் சொல்லாத உரைகளைக் கொண்ட மவுன விரதம் பூண்ட சான்றோர்களைப் போல, எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டு வருந்துபவர் ஆயினர்.

                "வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி

.                 இரை உண்டு துயிலச் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார்

                 பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதும் பிறர் முன் சொல்லா

                 உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார்"                                                                                                                       

   (நாகபாசப்படலம் 2111)

4.நிகும்பலை யாகத்தை இலட்சுமணன் அழித்தான்.இலட்சுமணன், இந்திரஜித்துடன் போரிட்டான். இலட்சுமணன் காற்று எனவும், விடம் எனவும், ஆடை நெய்வோர் நூல் எனவும், உடலாகிய பாரத்தைப் பிணித்துள்ள நோய் எனவும், பாலிற் பொருந்திய பிரை எனவும் பலமுறை உட்புகுந்து வேலேந்திய பகை வீரரை வெட்டி வீழ்த்தினான்.

       

                  “கால் எனக் கடி எனக் கலிங்கக் கம்மியர்

                   நூல் என உடற் பொறை தொடர்ந்த நோய் எனப்

                   பால் உறு பிரை எனக் கலந்து பல்முறை

                  வேல்உறு சேனையைத் துணிந்து வீழ்த்தினான்”

                                                                                    (நிகும்பலை யாகப்படலம் 2926)

சிவபெருமான் தேவர்களுக்கு, இராம லட்சுமணர்களின் திறம் குறித்து கூறும் இடத்தில், இந்த இலட்சுமணன், உயிர்கள் தோறும் பொருந்தியிருப்பவன். ஒப்பற்றவன், என்று போற்றிக் கூறப்படும் ஐயுறப்படாத இறை நிலையையுடையவன். இந்த இராமன், இவ்வுலகங்கள் எல்லாவற்றிலும் பால் தயிராவதற்குரிய பிரைமோர் என்று சொல்லும் படி நீக்கமறக் கலந்திருக்கக் கூடிய தலைவன் ஆவான். இன்னது இது என்று சொல்லமுடியாத முழு முதற்பொருள் இத்தகையது என்று உணர்வீராக. இதுவே மேலான பரம்பொருள் என்று கூறினார்.

             "உயிர்தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும்

              அயிராநிலை உடையான் இவன் அவன் இவ் உலகு அனைத்தும்

              தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன்

              பயிராதது ஓர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால்

                                                                                     (நிகும்பலை யாகப் படலம் 3016)

5.பிரகலாதன் ஐம்பூதங்களாலும் இந்த இறைவன் மறைந்திருக்கிறான் என்று கூறுகிறான். இறை ஞானத்தை உணருதல் என்பது பால் தயிராகத் திரிவதை போன்றது. உலகாயதக் கல்வியால் இறைஞானத்தைப் பெய்யும் போது, கல்வியானது இறைமயமாகி சாதாரணக் கல்வியைப், பயனுள்ள இனிய கனிபோலும் உயர்வுகளைத் தருகின்ற ஞானக் கல்வியாக மாறும் என்று தந்தைக்கு அறிவுரை கூறினான்.

                        "உரை யுளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல்

                         விரை உள அலங்கலாய் வேத வேள்வியின்

.                        கரை உளது யாரும் கற்கும் கல்வியின்

                         பிரை உளது என்பது மைந்தன் பேசினான்"

                                                                                        (இரணியன் வதைப் படலம் 186)

6.இராவணன் இறந்த பிறகு மண்டோதரி புலம்பும் போது, மூன்றரை கோடி ஆயுளுக்கும், பெரிய அறிஞர்களுக்கும் சொல்லால் முடிவு செய்து அளந்து சொல்ல முடியாத பெரிய வலிமையுள்ள தோள் ஆற்றலுக்கும், அழிவே கிடையாது என எண்ணியிருந்தேன். ஆனால் தவப்பயனின் பெருமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் நான், அலைகளை மூடிவிட்டு அளப்பதற்கு அரிதான வரம் எனும் பாற்கடலைச், சீதை எனும் பிரையை இட்டு விதி கடைசியில் அழிப்பதை அறியவில்லையே என்று புலம்புகிறாள்.

                "திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும்

                        பாற்கடலைச் சீதை என்னும்

                பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ

                          தவப் பயனின் பெருமை பார்ப்பேன் "

                                                                                     (இராவணன் வதைப் படலம் 3883)

      7. சூர்ப்பணகை, இலட்சுமணனால் மூக்கு அறுபட்டு கரன் இறந்ததால், இராவணனிடம் கூற ஊளைவிட்டுக்கொண்டே இலங்கை வந்தாள். அவளது கோலத்தைக் கண்ட மக்கள் செயலற்ற,  எல்லையற்ற செல்வத்தைப் பெற்ற இலங்கை நகரில் வாழும் கரிய கண்களை உடைய அரக்க மகளிர் சூர்ப்பணகையின் அவல நிலையைப் பார்த்துத் துன்புற்று வரிசையாக வளையல்களை அணிந்த வெண்மையான கைகளைத் நெறித்துக்கொண்டு பிரை ஊற்றப்பட்ட பாலைப் போல, நிலை தடுமாறிய சொற்களைச் சொன்ன படி ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓடி வந்தனர்

 

                      "கரை அறு திரு நகர்க் கருங் கண் நங்கைமார்

                       நிரை வளைத் தளிர்க் கரம் நெரித்து நோக்கினர்

                       பிரை உறு பால் என நிலையின் பின்றிய

                       உரையினர் ஒருவர்முன் ஒருவர் ஓடினார்"

                                                                           (சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம் 586)

 

முடிவுரை

சிறுதுளிப் பிரைமோர் பெரிதளவுப் பாலையேத் தன்னியல்பாக மாற்றிவிடும். இராமனைக் கண்டு காதல் நோயுற்ற சீதையின் நிலை ,அரக்கசேனைக்குள், இலட்சுமணன் புகுந்து எங்கும் கலந்து செய்யும் போருக்கும், இலங்கை நகருக்குள் அனுமன் புகுந்து நகரமொடுக் கலந்து  ஒற்றறிதற்கும் பாலில் பிரை கலந்தது உவமையாகின்றன. இலட்சுமணனால் உறுப்பறுபட்டு வரும் சூர்ப்பணகையைக் கண்ட இலங்கை நகர மாந்தர் பிரையுறு பாலென நிலையில் ஊன்றிய உரையினராயுள்ளனர்.67 பிரகலாதன்  இறைவன் ஐம்பூதங்களிலும் மறைந்திருக்கிறான்  இறை ஞானத்தை உணருதல் என்பது பால் தயிராகத் திரிவதை போன்றது என்கிறான். சான்றோர்கள் தங்கள்மீது பழிச்சொல் ஏதேனும்வரின் பிரையுண்ட பாலின் உள்ளம் பிறிதுற்றுக் கலங்குவர் என்னுமிடத்தும் இவ்வுவமையைக் கம்பர் கையாண்டுள்ளதை அறியமுடிகிறது.

 

துணைநூற்பட்டியல்

1. அரசேந்திரன்.கு., கம்பச் சித்திரம்,சாளரம், சென்னை, 2012.      

2. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், 

     சென்னை,2016.

3. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, 

    (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம்  

    புதுச்சேரி, சென்னை.

4.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்    

    பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

5. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம்,

    கோயம்புத்தூர், 2008.

6. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளிபதிப்பகம்,  

    சென்னை,2019.

7.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5,   

    6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

8. செல்வம்.கோ,கம்பன் புதையல்,   சாரு பதிப்பகம், சென்னை 2016.