ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

முக்கூடற்பள்ளுவின் வாழ்வியல் நெறிகள் (Life norms of Mukudpallu)

​​​​​​​முனைவர். நா. ஹேமமாலதி, தமிழ்த் துறை தலைவர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி - 605 004. 02 May 2023 Read Full PDF

முனைவர். நா. ஹேமமாலதி, தமிழ்த் துறை தலைவர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி - 605 004.

ஆய்வுச் சுருக்கம்:

       சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ளோர்களை மட்டும் படைப்பிலக்கிய நாயகர்களாகத் தொன்று தொட்டுக் காட்டியிருந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து, அடித்தள மாந்தரும் நாயகர்களாக வர இடம் கொடுத்த சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தான் முக்கூடற்பள்ளு. இவ்விலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள் எத்தகையதொரு தன்மைக்கு உட்பட்டுள்ளன என ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக காணும் போது, எண்வகை சுவைகளும் நிரம்பப் பெற்ற இவ்வுலக்கியம் நாடகத் தன்மையில் அமைந்துள்ளது ‘மள்ளர்’ தான் ‘பள்ளர்’ என்று நிறுவும் தன்மையும், ‘புலன்’ என்னும் வனப்பில் கொண்டு வரும் தொல்காப்பியர் தன் படைப்பில் சுட்டிக்காட்டி இருக்கும் சிறப்பும், காணலாம். இவர்களின் வாழ்வியல் நெறிகளாக, பக்திநெறி, பண்பாட்டு நெறி, வழிபாட்டு நெறி, தொழில்நெறி, நம்பிக்கைகள் என தொடர்ந்து செல்லும் நெறிகளை பள்ளர்களின் வாழ்வியலோடு ஆராய்ந்து நிற்கின்றது. மனித தேவையின் அடிப்படையில் சமயங்கள் தோன்றின. அவைதான் மனிதனின் குண நலனையும், செயல் திறனையும் வளர்க்கின்றன. பக்தி நெறியானது மனிதனிடம் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பாக மாறியதும், உழவுத் தொழில் செய்யும் பள்ளர் வாழ்க்கையின் உண்மையினை எடுத்துரைக்காமல், அதிகார வர்க்கத்தினர்க்கு ஆதரவாகப் புலவர் பாடியுள்ளனர் என்றும் காணநேர் கின்றது. இதில் பள்ளனின் பண்பாடு மாறியிருகின்றது என்பதும், வழிபாட்டு நெறியில் நமது பாரம்பரியமான வழிபாட்டு முறையினை அறிந்து கொள்ள முடிகின்றது எனவும், இவர்களது நம்பிக்கை தொன்று தொட்டு தொடர்ந்து வரக்கூடிய வாழ்வில் இன்றியமையாத ஒரு கூறாக திகழ்கின்றது எனவும், நம்பிக்கை நம் வாழ்வில் பெரியதோர் இடத்தினை பிடித்துள்ளது என்பதனையும் நமது விவசாயத் தொழில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு மாற்றும் கண்டுள்ளது என்பதனையும் ஆராய்ந்து கண்டதன் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

Study summary:

       From the history of Tamil Literature, which only featured people from the upper echelon of the society as literary heroes, Mukudpallu is one of the minor literary genses that gave way to the heroes of the foundational mantra, while the aim of this research is to study the nature of the life norms in this literature, this world which is full of various flavours is in the nature of drama. ‘Mallar’ is the establishment of ‘pallar’ and the specialness that Tolkappiyar brings to the forest of ‘pulan’ can be seen in his work. As their life norms, the norms of piety. Cultural norms, Worship norms, professional norms, and beliefs continue to be explored through the life of pallars. Religions arose based on Hui needs. They are the ones that develop human character and performance. When devotionalism becomes an inseparable bond with man, it is seen that the poet’s have sung in support of the ruling class without highlighting the truth of the life of the peasants. In this, the culture of the children has changed and we are able to know our traditional way of Worship in the way of Worship, their faith is an essential element in the life that can be touched and continued, and faith has taken a big place in our lives. It is possible to know that our agricultural industry has changed to such an extent that it cannot be passed on to the next generation.

Keywords:

 முக்கூடற்பள்ளு, வாழ்வியல் நெறி, பள்ளர், பள்ளியர், பண்ணையார், சிற்றிலக்கியம், இலக்கியம்..

Keywords:

Mukudpallu, life style, pallar, palliar, farmar, small literature, literature..

 முன்னுரை:

      தமிழ் இலக்கிய வரலாற்றில், காலம் தோறும் பல்வேறு இலக்கிய வகைகள் தோன்றி வளர்ந்து வந்துள்ளன. அவ்வாறு வளர்ந்த இலக்கிய வகைகளுள் நாயக்கர் கால இலக்கியங்களான சிற்றிலக்கியங்களுக்கென சிறப்பிடம் உண்டு. அத்தகைய சிறப்பிடம் பெற்ற சிற்றிலக்கியத்தினைப் பற்றி, தொல்காப்பியரும்,

                 “ விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”

                                                                    ( தொல். பொருள். செய். நூ. 231)

என்னும் நூற்பாவில் புத்திலக்கிய வகைகளை 'விருந்து' என்னும் வனப்பினுள் கொண்டு வருகிறார். புத்திலக்கிய வகைகளைத் தொல்காப்பியர் விருந்து என்னும் வனப்பில் கொண்டு வருதலுக்கு பொருத்தமாக சிற்றிலக்கியங்கள் புதிய யாப்பும் முறையில் பாடு பொருள்களைக் கொண்டு சிறந்திருக்கின்றன. அவற்றில், சமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளோர்களை மட்டும் படைப்பிலக்கிய நாயகர்களாகத் தொன்று தொட்டுப் பெற்றிருந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து, சமூகத்தின் அடித்தள மாந்தரும் நாயக்கர்களாக வர இடம் கொடுத்த சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தான் முக்கூடற்பள்ளு என்னும் இலக்கியம். இவ்விலக்கியத்தில் பள்ளர்களின் வாழ்வியல் நெறிகள் எத்தகைய தன்மைக்கு உட்பட்டு உள்ளன என ஆய்வதே இவ்வாய்வின் நோக்கம்.

முக்கூடற்பள்ளு:

        நாயக்கர் காலத்தில் தோற்றம் கண்ட பள்ளு, குறவஞ்சி, நொண்டி, சதகம், தூது, உலா, பரணி போன்ற இலக்கிய வகைகளில் எளிமையாகவும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையாகத் திகழ்வது முக்கூடற்பள்ளு. இதன் ஆசிரியர் யார் என தெரியாவிட்டாலும், இப்படைப்பாளர் சிறந்த கல்வி நலம் வாய்ந்த கவிஞர் என்று அறிய முடிகின்றது. எண்வகை சுவைகளும் நிரம்பப்பெற்றது.

                   “நெல்லு வகையை எண்ணினாலும், ப ள்ளு வகையை எண்ண முடியாது”

என்பதற்கேற்ப பல பள்ளு நூல்கள் தமிழில் தோன்றினாலும், அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகச் சொல்லப்படுவது முக்கூடற்பள்ளு. இதில் முக்கூடல் என்பது, திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தன் பொருநையும், சிற்றாறும், மற்றொன்று காட்டாறும் கூடும் இடத்தில் வடபால் அமைந்துள்ள ஓர் ஊர் தான் முக்கூடல். இங்கு வாழும் மருதநில மக்களான பள்ளர்களின் குடித்தரம் கூறும் நூல் தான் இந்நூல். இந்நூலின் சிறப்பு யாதெனில் நாடகத் தன்மையில்அமைந்தது.

                                                            “ பண்ணை மள்ளச்சாதிக் குடும்பன்”

                                                                           ( பொய்கைப்பள்ளு, பா. 27)

                                                              “மள்ளர் குலத்தில் வரினுமிரு பள்ளியர்க் கோர்”

                                                                              ( முக்கூடற்பள்ளு, குடிப் பெருமை, பா. 5)

இவ்வரிகளை நோக்குங்கால் மள்ளர் தான் பள்ளர் என்று குறிப்பிடுகின்றனர். காலத்திற்கு ஏற்ப பின்னோக்கிப் பார்த்தால்,

                                                                  “ குன்றுடைக் குலமள்ளர்குழுஉக்குரல்”

                                             ( கம்பராமாயணம், , பாலகாண்டம் நாட்டுப் படலம், பா 32)

என்பதில், மள்ளர் என்று குறிக்கப்படும் மக்களை மருதநில உழவர்களாகவும், மள்ளர் என்போர் ஓர் இனம் என்றும் கம்பர் குறிப்பிடுவதை காண முடிகிறது. மேலும், எளிய மக்களுக்கான இலக்கிய வகைகளைப் 'புலன்' என்னும் வனப்புள் கொண்டுவரும் தொல்காப்பியரும், அதனை,

                                                              “ சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து

                                                     தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

                                                     புலனென மொழிப் புலனுணர்ந் தோரே”

                                                                                    ( தொல். பொருள். செய் நூ.233)

என்ற நூற்பாவில் குறிப்பிடுகின்றார். சேரி மொழி எனப்படுவது ஆராய்ச்சிக்கு உரியதாக கொள்ளாமல் நேரடியாக உணரக்கூடிய சொற்களைக் கொண்டு படைப்பதாகும்.( முனைவர் கதிர் முருகு, ஐந்தாம் பதிப்பு 2012 ப. 2) என்று பொருள் கொள்ளலாம். பாட்டியல் நூல்களுள் ஒன்றான பன்னிரு பாட்டியலில், உழத்திப் பாட்டு என்னும் இலக்கிய வகையை அறிமுகப்படுத்தும் போது,              

                                                                “ புரவலர் கூறி அவன்வா ழிய வென்று

                                                       அகல் வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள்

                                                        எனவரும் ஈரைந் துழத்திப் பாட்டே”

                                                                                              (பன்னிரு பாட்டியல், 216)

 என்று கூறுகிறது. இதில், பாட்டுடைத் தலைவனை வாழ்த்தி, வயலில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து பத்து பாடல்களாக கூறுவது உழத்திப்பாட்டு என்கிறது. இதில் வரும் உழத்திப் பாட்டுப் பள்ளு இலக்கியத்தை கூறுகிறது என்று பொருள்கொள்ள கூடாது என்கிறது. ஆனால், கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நவநீத பட்டியலில் உ ழர்த்திப் பாட்டினைப் பள்ளு இலக்கியம் என்று கூறுகிறது." (முனைவர் கதிர்முருகு 2012) எனவே, 17 - ஆம் நூற்றாண்டில் இருந்து தோற்றம் பெற்று வளர்ந்து வந்த, உழவு செய்யும் பள்ளர்களின் வாழ்க்கை முறையினை எடுத்துக் கூறுவதால் இவ்வுலக்கியத்திற்கு பள்ளு எனப் பெயர் பெற்றிருக்கலாம். எனவே இத்தகைய பழமையானதோர் இலக்கியத்தின் வாழ்வியல் நெறிகளை அதாவது பக்தி நெறி, பண்பாட்டு நெறி, வழிபாட்டு நெறி,‌ தொழில்நெறி, நம்பிக்கைகள் எனத் தொடர்ந்து செல்லும் நெறிமுறைகளை பள்ளர்களின் வாழ்வியலோடு ஆய்வதாக அமைகின்றது இவ்வாய்வுக் கட்டுரை.

பக்தி நெறி:

            நம் முன்னோர்கள் மிகுந்த,‌ பக்தி நெறியை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். பக்தி என்ற உணர்வின் வழியே இறைவனைக் காணக்கூடிய தன்மையைக் காட்டியவர்கள். திருமுறைகளும், பிரபந்தங்களும் இறைவனுடைய அருளைப் பெற வேண்டி பாடப்பட்டன. இவர்களின் பாடுபொருள் இறைவன் மட்டுமே. அவர்கள் கண்ட அனுபவம் பக்தி. அவர்கள் பக்தி நெறி மூலமாக மக்களை நிலையான மகிழ்ச்சி பெறச் செய்யும் நோக்கம் கொண்டவர்களாக இருந்தனர். மனித சமூகத்தை மேன்மை பெறச் செய்யும் பக்தி நெறியை நமக்கு வகுத்தளித்தனர். அவ்விதம் தில் பார்த்தால், முக்கூடற்பள்ளுவில்,

                                                              “பாமேவு சொற்புரப்பர் பாவலரென் றெட்டெழுத்து

                                                     நாமேவு பத்தர் பத்து நாவலருங் காப்பாமே‌”

                                                                                           ( முக்கூடற்பள்ளு, காப்பு. 3- 4)

 திருமால்பால் அன்பு கொண்ட அடியார்களான பத்து ஆழ்வார்களும், இப்பள்ளுப் பாட்டை இயற்றி முடிக்கத் துணை நிற்பர் என்று பாடத்தொடங்கும் நிலையிலும், நான் எப்பொழுதும் உச்சரிக்கும் மந்திரமான எட்டு எழுத்துக்களை உடைய "ஓம் நமோ நாராயணா" என்பதை உச்சரித்தே இருப்பேன் என்று ஆசிரியர் காப்புச் செய்யுளில் கூறும் இடத்திலும், வடிவழகக் குடும்பனின் மனைவியாக இரு பள்ளியர்களை அறிமுகப்படுத்தும் இடத்திலும், கிராமியச் சிறப்போடு, பண்பாட்டு பெருமையோடு, சேர்த்து பாடி இருப்பதன் வாயிலாக பக்தியின் திறன் வெளிப்படுகின்றது. குடும்பமாகிய பள்ளனும் அவனது மூத்த மனைவியும் திருமாலை வழிபடக்கூடியவர்கள். சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் பாடிய பாடலின் பக்திக்கு ஒப்பாக,

                                                                           “நாராயணா வென்னா நாவென்ன நாவே

                                                                      சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே

                                                                     திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே”

                                         ( சிலம்பு. ஆய்ச்சியர் குரவை, படர்க்கைப் பாவை, பா. 1-3)

இவர்கள் திருமால் மீது பக்தி கொண்டவர்களாக இருந்துள்ளனர். மூத்த பள்ளியை அறிமுகப்படுத்தும் போது,

                                                                    “ நெற்றியி லிடும் மஞ்சணைப் பொட்டும்

                                                           மற்றொரு திருநாமப் பொட்டும்

                                                           நெகிழ்த கருங் கொண்டை..........”

                                                                                         (முக்கூடற்பள்ளு பா. 6)

 நெற்றியில் எண்ணெயும் குங்குமமும் கலந்து செய்யப்பட்ட பொட்டையும், அதனைத் தவிர முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகருக்கு அடிமை என அணியும் குறியீட்டுப் பொட்டினையும் அணிந்து இருப்பாள் என்பதிலிருந்தும், பள்ளனும் அவன் மூத்த மனைவியும் திருமாலை வழிபடக் கூடியவர்களாக இருந்து வந்துள்ளனர் என அறிய முடிகின்றது. இளைய பள்ளியை அறிமுகம் செய்யும்போது,

   “ உள்ளத்தி லூசலிடும் உல்லாசப் பார்வை விழிக்

     கள்ளத்தி னாலிரும்புங் கல்லுங் கரையாதோ”

மருதூரில் வாழ்கின்ற பள்ளனின் இளையப்பள்ளி சிவன் மீது பக்தி உடையவளாக

இருந்தாள் என்பதை,

  “ஆதி மரு தீசருக்கும் ஆட்பட் டழகருக்கும்

   பாதியடி மைப்படுமோ பள்ளிமரு தூரிளையாள்”

                                                                        ( முக்கூடற்பள்ளு பா.9: 1-2)

 உலகில் முதன்முதலாகத் தோன்றிய இறைவனான, மருதூரில் வாழும் சிவபெருமானுக்குக் காலம் தோறும் அடிமை பூண்டு வந்தவள் என்றும், ஆரவாரம் மிக்க அழகுடன் இருப்பார் என்பதையும் மேற்கண்ட இவ்வடிகளின் வாயிலாக அறிமுகப்படுத்துகிறார்."( சு. திருமுருகன் 2016) அவ்வாறு பக்தியின் நெறி மனிதர்கள் அனைவரும் ஒன்று கூடி நல்லதொரு நிலையில் உயர்வு கொண்டு நாகரீகப் பண்பாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாலும், இன்று அதன் நிலைப்பாடு அப்படி இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது. தீய செயல் ஒன்றைச் செய்துவிட்டு சாதி, சமயம் என்று போர்வைக்குள் புகுந்து கொள்ளும் மக்களைத் தானே காண நேர்கின்றது. சமய நிகழ்ச்சிகள் எல்லாம் வணிக நோக்கில் தான் நிகழ்கின்றன. பிறப்பினால் குல உயர்வு தாழ்வுகளையும், சாதிகளையும் நானே படைத்தேன்  என்று கீதையில், கண்ணன் கூறுவதையும் உற்று நோக்கினால் மனிதனின்தேவையின் அடிப்படையில் சமயங்கள் தோன்றின. அவை மனிதனின் குண நலனையும், செயல் திறனையும் வளர்க்கின்றது பக்தி நெறி மனிதனிடம் பிரிக்க முடியாது ஒரு பிணைப்பாக மாறிவிட்டது என்றும் கூறலாம்.

பண்பாட்டு நெறி:

           பழங்காலத்திலிருந்து தமிழர் தம் வாழ்வில் தனி பண்பாட்டுடன் சிறப்புற்று திகழ்ந்துள்ளனர்.

                                                            “பண் பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்”

என்பது தமிழரின் மரபு. நம் முன்னோர்கள் அக்காலத்தில் இருந்து இன்று வரை பண்பாட்டில் மாறாது வாழ்கின்றனர். அது நம் வளர்ச்சிக்கு பண்பாட்டு உணர்வையும், செயல்பாட்டு வேகத்தையும் தரும். நம் பண்பாடு என்பது மாறாதத் தன்மையுடையது. எனவே இது ஒரே காலகட்டத்தில் மனிதனிடம் தோன்றியதல்ல. பல்வேறு காலகட்டங்களில் மாற்றங்களுக்கு உட்பட்டுத்தான் பண்பாடு தோன்றியது. பண்பாடு என்பது மக்களின் அறிவார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் படிநிலைகள். தமிழில் பண்பாடு என்று சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள். மனிதனை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது பண்பாடு. இதன் வாயிலாக தான் மனிதனுடைய செயல்களை அவனைப் பண்புடையவனா? அல்லது பண்பாடற்றவனா? என சுட்டிக்காட்டுகின்றது. எனவே, மனித சமூகத்தின் இயங்கியலை சித்தரித்துக் காட்டுபவைகளில் பள்ளு இலக்கியங்களும் குறிப்பிடத்தக்கையாக இருக்கின்றது. குடும்பம் இன்றைய குடும்ப அமைப்பிற்கு ஏற்றார் போல வாழவில்லை. பள்ளன் ஊரில் உள்ள பல பெண்களுடன் உறவு பாராட்டியுள்ளான். இதனால்

                                                         “அப்பெண்களை யார் மணம் முடிப்பர்”

 என்று மூத்த பள்ளி பலவாராக வருந்தி பண்ணையாரிடம் முறையிடும் இடத்திலும்,

                                                   “ தூக்குணிப் பள்ளன் -- ஏய்க்கிற ஆட்டத்தைத்

                                            துக்குணிக் கேளும் -- முக்காலஞ் சொன்னேன்”

                                       ( முக்கூடற்பள்ளு பா. 56 : 1 -2)

இதில்,

                                                        “துக்குணிப் பள்ளன் மானம் என்பதே

                                                  இல்லாத பள்ளன்”

என்று பள்ளனைச் சாடுகின்ற போதும் பள்ளனின் பண்பாடு மாறி இருக்கின்றது என்றால் பண்ணையாரும் அத்தகைய எண்ணம்கொண்டவராகவே சுட்டிக் காட்டுகின்றார்.

                                                                    “ மூத்த பள்ளி முகம் பார்த்து

                                                           வார்த்தை சொல்வா ராம் --பெரு

                                                            மூச்சிக் கொண் டிளைய பள்ளி

                                                             பேச்சுக் கேட்பா ராம்

                                                             சாத்தி மகள் காத்தி தன்னைப்

                                                              பேத்தி என்பா ராம் -- மெல்லச்

                                                              சன்னையாய்க் களத்தில் வாடி

                                                               பின்னை என்பா ராம்

                                                              வாய்த்த தடிக் கம்பை ஊன்றிச்

                                                                சாய்த்துப் பார்ப்பா ராம்”

                                                                       (முக்கூடற்பள்ளு பா: 54 :1 -10)

 இப்ப பாடல் வரிகளின் வாயிலாக காண நேர்கின்றது. இவர்களின் பண்பாடு போற்றுதலுக்கு உரியனவாக அல்ல என்றே கூறலாம்.

 மேலும்,

                                                                                      “………. நடத்திக் ககொண்டீர்

                                                                         மூப்படி யானும் பேய்ப்பட்டான்

                                                                           அப்பால் அவனுக் கொன்றானால்”

                                                                              (முக்கூடற்பள்ளு. பா.60 :1 -3)

 நீங்கள் சோறு உண்பதற்காகப் பள்ளனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டீர்கள். பழமையான அடிமைத் தொழில் புரியும் பரம்பரையில் வந்த அவன் எங்கோ சென்று விட்டான் என்று வருந்துமிடங்களிலும், அடிமை வாழ்வு வாழும் பள்ளர்களைப் பார்த்து உயர் ஜாதிக்காரர்கள் உண்ணும் நெல்லை விளைவித்துக் கொடுத்தவன் நான் என்பதை மறந்து அருகில் சென்றால் பள்ளன் என்று இழித்துரைத்து "தூர விலகிப் போடா" என்று இழிவுபடுத்துவதாக ஆசிரியர், பள்ளனின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

                                                                                       “ பக்கமே தூரப்போயும்

                                                                           தக்கசோ றென்வே ளாண்மை

                                                                           பள்ளா பள்ளா என்பார் மெய்

                                                                                            கொள்ளா தவர்”

                                                                                     ( முக்கூடற்பள்ளு, பா. 15: 9 -12)

அழகரின் அடிமையாய் இருக்கும் என்னை உயர் சாதியினர் உண்ணும் நெல்லை விளைவித்துக் கொடுத்த என்னை மறந்து அருகில் சென்றால் பள்ளன் என்று இழித்துரைப்பார்கள். உண்ணும் சோறாக அமைவது என்னுடைய வெள்ளாண்மையால் வருவதே என்பதை மறந்தவர்கள்,

                                                            “நாங்கள் சேற்றிலே கால் வைக்காவிட்டால்

                                                          நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியாது”

என்றும் ,

                        “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

 என்கிறது தமிழ் இலக்கியம். இதையேதான்

                        “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்”

எனப் பேரறிஞர் அண்ணாவும் கூறியுள்ளார். வள்ளல் பெருமானோ, பசித்தவர்களையும் நோயால் வருந்தி துன்புற்றவர்களையும் கண்டு மனம் உருகினார்.

                      “ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார்”

இதுவே இன்றைய பண்பாடாக இருக்கும் நம்மிடம் இத்தகையதொரு நிலையை காண்பின் உழவுத் தொழில் செய்யும் பள்ளர் வாழ்க்கையின் உண்மையினை எடுத்துரைக்காமல், அதிகார வர்க்கத்தினருக்கு ஆதரவாகப் புலவர்கள் பாடியுள்ளனர். கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களை இழிவு படுத்துவதாகவே காண முடிகின்றது.

வழிபாட்டு நெறி:

             வழிபாடு என்றால் 'வணக்கம்' என்று செந்தமிழ் அகராதி பொருள் தந்தாலும், தமிழர்களின் வழிபாடு முக்கிய இடத்தை பிடிக்கின்றன என்பதனை இவ்விலக்கியத்தில் காண முடிகின்றது. வழிபடும் இறைவனையும், பேசும் மொழியையும், பிறந்த தாய் நாட்டையும், தாம் வழிபடும் இறைவனோடு தொடர்பு படுத்தி வழிபடுவது நம் மக்களின் மரபு. அவ்வகையில் மருத நில மக்களின் மாண்பினை உழவர்களின் வாழ்க்கையோடும், வழிபாட்டு முறையோடும் ஆராயும் போது, இயற்கை வழிபாடு, மொழி வழிபாடு, தெய்வ

 வழிபாடு, தனிமனித வழிபாடு, திசை வழிபாடு என பலதரப்பட்ட வழிபாடாக இப்பள்ளு இலக்கியத்தில் காண நேர்கின்றது. தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வழிபட்டு வந்தனர். அதனையே தன் வழிபாட்டு நெறியாகவும் தொடர்ந்து  வணங்கி வந்துள்ளனர்.

                                                                     வழிபடு தெய்வம் நிற்புறம் காப்புப்

                                                          பழிதீர் செல்வமொடு வழி வழி சிறந்து

                                                           பொலிமின்..............”

                                                                                                        ( தொல். பொருள். செய். 109)

என புறநிலை வாழ்த்தாக தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றது. இதனால் ஒருவர் வழிபடும் நெறிகள் அவருக்கு காவலாய் அமையும் என்னும் நம்பிக்கை இருக்கின்றது. மனித மனம் மனித ஆற்றலையும் தாண்டி சில வியக்கத்தக்க நிகழ்வுகளை உணரும்போது வழிபாட்டின் முக்கியத்துவத்தினை நினைக்கின்றனர். அவ்வகையில் நோக்கும் போது, முக்கூடற் பள்ளு இலக்கியத்தில் முக்கூடலில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் சிறந்து விளங்கவும், சொல்வளம் பெருகவும், நிறைவான பொருள் வளத்துடன் திருமாலுக்கு உரிய மருத நிலங்கள் வாழ்வதற்கான மருதூரை வாழ்த்தியும், புலவர்களைக் காப்பவனான காவை அம்பலவாணனின் சுற்றத்தார்கள் வளம் பெற்று வாழவும், நாட்டை ஆளும் மன்னனுக்குப் பெருமைகளைத் தரும் தேர் பாகனான திருமாலின் கோயிலில் தினப் பூசைகள் சிறக்கவும் குயிலே கூவக. (பா. 29 ) என்று, வழிபடுவதன் வாயிலாகவும், மாதம் மூன்று முறை மழை பெய்ய வேண்டும் .

                                        “பெருவளம் தருநாடு திங்கள்மும் மாரியும்

                                          பெய்யமழை வேண்டியே கூவாய் குயிலே”

                                                                                    ( முக்கூடற்பள்ளு, பா. 30 :5- 6)

 வேண்டும் போதும், மழை வளம் சிறக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் வாழும் சேரிப் பகுதியில் குலவை என்னும் ஒலியை எழுப்பி தெய்வத்திடம் மழை வர வேண்டி வரம் கேட்கும் போதும்,

                                                                 மாரி பொருட்டால் வரங்குறித்து மள்ளரெல்லாஞ்

                                                               சேரிக் குரவையெழுத் தெய்வ நிலை போற்றினரே”

                                                                                    (முக்கூடற்பள்ளு, பா. 31: 3 - 4)

இவர்களின் வழிபாட்டு நெறி தெரிய வருகின்றது. மேலும் இவ் வழிபாட்டிற்காக, தேங்காயும் கரும்பும் கொண்டு பூலாவுடையார் என்னும் கிராம தெய்வத்திற்கு பொங்கலிட்டு கைத்தொழுது வணங்கவும், குங்குமப்பொட்டோடு சந்தனமும் சேர்த்து, உடையாராயர் என்னும் கிராமத் தெய்வத்திற்கு கூட்டமாக சென்று வழிபடவும், வழிபாடு நடப்பதற்கு முன்பு காப்புக்கட்டி ஏழு ஆட்டுக்கிடாய்களை அய்யனாருக்கு வெட்டிப் பலி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலமாகவும் (பா. 34) புலியூருடையார் என்னும் கிராமக் காவல் தெய்வத்திற்கு செம்மை நிறச் சேவலைப் பலி கொடுத்து வேண்டிக் கொள்வதும், வடத்திசை காவல் தெய்வமான வடக்கு வாய்ச் செல்வி உண்ணுவதற்காக நல்ல சாராயத்தையும், பனைமரப் பாலைச்சீவி வடித்த கள்ளையும், குடம் நிறைய கொடுத்து வழிபட்டும், . முக்கூடலில் வாழும் அழகரை உயர்வாக போற்றிப் பாடுவதற்காக பள்ளர்களே (பா. 33) அனைவரும் வாருங்கள் என்று வழிபாட்டிற்கு மேலும் பலரை அழைக்கும் சிறப்பும், நமக்கு பாரம்பரியமாக வழிபாட்டு முறையினை தெரிந்து கொள்ள முடிகின்றது. மேலும், மூத்த பள்ளியும், இளைய பள்ளியும் குயிலை கூவி அழைத்து குயில் மொழிதல் என்ற வகையில் குயிலை நோக்கிப் பாடுக என்று வேண்டி நிற்பதையும்,

                                                                      “தேவாதி தேவர் திரு முக்கூட லின் பெருமை

                                                            நாவால் வழுத்திவள நாட்டியல்பு கூறிய பின்

                                                             பூவா சனைசேர் புரிகுழலார் பூங்குயிலே

                                                             கூவாயென் றந்தக் குயில் மொழியைக் கொண்டாரே”

                                                                                                       (முக்கூடற்பள்ளு, பா. )

காண நேரும்போது, இவர்களது மொழி வழிபாடு, பாரதிதாசன் கூற்றான

                         “தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே”

என்று தமிழ் மொழிப் பற்றை அறிய தெரிந்து கொள்ள முடிவது போல், இவ்விரு பள்ளியரும் தன் நாட்டு வளம் பாட குயிலை அழைக்கும் இடத்தில் காணமுடிகின்றது. இயற்கையை வழிபடும் இவர்களது வழிபாட்டு முறையை உற்று நோக்கினால்,

                                                           “திங்கள்மும் மாரிஉல கெங்கும் பெய்யவே

                                                 தெய்வத்தைப் போற்றி வந்து கை தொழுங்காண்”

என்னும் இப்பாடல் வரிகள் எடுத்தியம்பும் முறை, முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட இயற்கை வாழ்த்துப் பாடல் போல காணமுடிகின்றது.

தொழில்நெறி:

           நாடோடியாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதனை ஓரிடத்தில் இறுகப் பிடித்து தக்க வைத்துக் கொண்டது தான் உழவுத் தொழில். உழவு என்ற தொழிலை நடுவணாகக் கொண்ட சமூக இயக்கமும், பொருளாதார உற்பத்தியும் அமைகின்றது. உழவுத் தொழில் அதனைச் சார்ந்த சமூக உறவுகள், பொருளின் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் என்ற பொருளியல் களத்திற்கு உழவுத் தொழிலே அடிப்படைத் தொழிலாக அமைகின்றது. முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் உழவர்களின் வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய மாடுகள், மற்றும் ஏர் வகைகள் உழவர்களின் தொழிற்பற்றை விளக்குவதாக உள்ளன. பள்ளர்கள் விவசாயம் என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இவர்கள் எந்த விதமான ஆடம்பரங்களையும் விரும்பாதவர்களாகவே சுட்டிக்காட்டுகின்றார் ஆசிரியர். ஆடம்பர மற்ற வாழ்வு வாழ்ந்தாலும், இவர்கள் சுதந்திரக் காற்றை முழுமையாகவும், உரிமையுடனும் சுவாசிக்கவில்லை .

                                                          “பத்திமற வாத பண்ணைப் பட்சேரிப் பள்ளர்”

என்று ஆசிரியர் பாடியதன் வாயிலாக உணர நேரு கின்றது. பள்ளர்கள் பண்ணையாளுக்கு அடிமைப்பட்டே வாழ்ந்துள்ளனர். இதனை கொத்தடிமை வாழ்வு என்று கூட கூறலாம். உலக உயிர்கள் யாவும் இயக்கமுறச் செய்யும் உன்னதத் தொழிலான இவ்வுழவுத்தொழில், இன்று நகரமயமாக்கல் என்ற பெயரில் உழவுத் தொழில் செய்பவர்களை இழிநிலை உடையவர்களாக எண்ணத் தலைப்பட்டிருக்கின்றது. உடல் உழைப்பின்றி, எளிதாக பணம் சம்பாதிக்க முயல்கின்ற நகரச் சூழலுக்கு இன்றைய மனிதன் தள்ளப்பட்டு இருக்கின்றான். இதன் மூலமாக நாற்று நடுதல், களை பறித்தல், ஏரோட்டல், நீர்ப்பாய்ச்சல் என்ற தொழில்நுட்ப புலப்பாடு நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு மக்கிப்போனது வருத்தம் அடைய செய்கின்றது

நம்பிக்கை:

             ஒன்றின் உண்மையை ஏற்பது நம்பிக்கை. மக்களின் உயர்விற்கும், ஒழுக்கத்திற்கும் நம்பிக்கையே வழிகாட்டுகின்றது. இந்நம்பிக்கை அவரவர் வாழும் சூழல் மற்றும் சமூக நிலைகளைப் பொறுத்தே அமைகின்றது. மனித வாழ்வின் உயிர் நாடியாக விளங்குகிறது. “நம்பிக்கை என்பது ஒரு பொருளின்உண்மையைத் தடையின்றி ஏற்றுக் கொள்வது அல்லது மெய்க்கு இணங்குவது” (நாட்டுப்புற நம்பிக்கைகள், ப.40 ) என்று வரையறுக்கின்றனர். அவ்வகையில்பள்ளர்களின் நம்பிக்கைகளாக, நாள் பார்த்தல், நிமித்தம், சகுனம், விதி - வினைபற்றிய நம்பிக்கை, கனவு, ம ருந்திடுதல் என்ற பல்வேறு வகைகளில் பள்ளுநூல்களில் இடம் பெற்றன. (ஆய்வுக்கு கோவை, ப. 673) அவ்வகையில் மழையை நம்பி மக்கள் வழிபட்டனர். மழை வரும் காலங்களில் மகிழ்ந்து,

                                            “அழகர் கருணை போல்

                                              பொறுநை யாறு பெருகி வாற

                                               புதுமை பாரும் பள்ளீரே”

                                                                                     (முக்கூடற்பள்ளு, பா. 50:14-16)

பாடியதை உணர்த்துகின்றனர். மழை பெய்வதில் இருந்து, வயல் விளைந்து அறுவடையாகி, நெல்லை அளந்து கொட்டும் வரை ஒவ்வொரு நிகழ்விற்கும் சடங்குகள் அதாவது நம்பிக்கையை பார்க்கப்படுகின்றது. ஏர்பூட்டி உழுவதற்கு நல்ல நாள் பார்க்கப்படுகிறது. அந்த நல்ல நாளில் பண்ணையாரின் முன்னிலையில் அனைத்து பள்ளர்களும் ஒன்று கூடி குலவை இட்டு மகிழ்ந்து ஆரவாரத்துடன் முதல் ஏர்பூட்டி உழுகின்றனர். இதனைப் “பொன்னேர் பூட்டுதல்” என்றும் அழைக்கின்றனர். இந்த நம்பிக்கையை எல்லாப் பள்ளு நூல்களுமேகூறுகின்றன.

                                                        “ உழவு மள்ளர் திரண்டு, கூடும் கடிகையில்

                                                நாளேரைப் பூட்டினரே”

                                                                   (திருவேட்டை நல்லூர் அய்யனார் பள் ளு, பா. 126)

விளைச்சல் நன்கு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பான நம்பிக்கையில் இதைச் செய்தனர். ஈசான மூலை என்று குறிப்பிடும் வடகிழக்குத் திசையை வணங்கியும், வயலில் நாற்றிடும்போது நெற்றியில் வைத்து வாழ்த்தி கும்பிடுவதும் நல்லதொரு மகசூலை தரும் என்ற என்ற நம்பிக்கையின் பேரிலேயே செய்தனர். ஆக தமிழர்களின் வாழ்வில் நம்பிக்கை இன்றியமையாத கூறாக திகழ்கின்றது. மக்கள் வாழ்வில் நம்பிக்கை ஒவ்வொரு நிலைகளிலும் படிப்படியாக வளர்ந்தும் வந்துள்ளது. எனவே இன்றைய சமூகத்தில் நம்பிக்கையும், வழிபாடும் பெரியதோர் இடத்தினை பெற்றிருக்கின்றது என்றால் மிகையாகாது. இதேபோல தீய சகுனங்கள் எதிர்ப்படுவதைக் கண்டு அஞ்சுவதாகவும் தெரிகின்றது. ஆனால் இன்றைய நிலையில் இயந்திரங்களைக் கொண்டும் நாம் நாற்று நட்டாலும், அறுவடை செய்தாலும், நெல்லை அளந்து கொட்டினாலும் வாழ்த்துகளோடு கூடிய நம்பிக்கையை நாம் கொண்டிருக்கின்றோம்.

முடிவுரை:

             பண்டைய தமிழர்களிடத்தில் வழிபாட்டு நெறி இருந்தமையைத் தொல்காப்பியத்தில் இருந்து பயின்று வந்துள்ளன என உணரமுடிகின்றது. அதன் வழியாக அவர்கள் கொண்ட பக்தி நெறியும், பண்பாட்டையும், , தொழிலையும் கடவுள் குறித்த உயர்ந்த குறிக்கோளையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. சிவன் மீதும் திருமால் மீதும் பாடப்பெற்ற பக்தியின் பெருமையினை இரு பள்ளியர்களின் அறிமுகத்தின் வாயிலாகவும், பண்பாடு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்திற்கு ஏற்ப இல்லாமல் இருப்பதை உணர்த்தியதும், உழவுத் தொழிலில் உண்ணதத்தையும், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டு பல்வேறு நம்பிக்கைகளுக்கும் உட்பட்டு நல்ல மகசூலை மக்களுக்கு நல்கியதன் சிறப்பினையும் உணர்ந்து கொள்ள நேர்கின்றது. இவற்றையெல்லாம் படித்துப் பார்த்து தெரிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பின்பற்றி நடக்கவும் வேண்டும். அங்கனம் நடந்தால் தமிழும், தமிழினமும், மதிப்புப் பெற்று, தமிழர்களாகிய நம் வாழ்வு செழித்தோங்கும். இவ்வாறு நாம் மேலும் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நம் இலக்கியங்களை சிதைக்காமல் பாதுகாக்கப்பட வேண்டியது நம் ஒவ்வொருவரின் மிக முக்கிய இருக்க வேண்டும்.

துணை நின்ற நூல்கள்:

1. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், பொருளதிகாரம், கழக வெளியீடு,

2010

2. (உ.ஆ.) வித்வான் டாக்டர் M. நாராயண வேலுப்பிள்ளை, வித்வான் டாக்டர் துரை. இராசாராம், இராமசுப்பிரமணியம், வ.த. கம்பராமாயணம், பாலகாண்டம், திருமகள் நிலையம், 55. வெங்கடா நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை- 600 017. மு.ப.1998

3. திருக்குமரன்,சு ஆய்வுக் கோவை, முக்கூடற்பள்ளில் சமயப் பாத்திரங்கள், வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை - 600 008. 2016

4. தொகுப்பாசிரியர் டாக்டர் தொ. பரமசிவன், பாரதிதாசன் பாடல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-600 098. 7 வந்து பதிப்பு, 2006.

5. முனைவர் சுசிலா கோபாலகிருஷ்ணன், ஆங்கில கலைக்களஞ்சியம், நாட்டுப்புற நம்பிக்கைகள். (ப.40)

6. முனைவர் எஸ். ரெய்ச்சல் அபிரஞ்சனி, பள்ளுக்காட்டும் மருத நில வாழ்க்கை, ஆய்வுக் கோவை, 2019.

7. முனைவர் கதிர் முருகு, முக்கூடற்பள்ளு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை -14 2012.

8. வரதராசன்,மு. தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுடில்லி - 110 001, 23 - வது பதிப்பு 2007.

9. வேங்கடசாமி நாட்டார், த.மு. சிலப்பதிகாரம் மூலமும் உரையும், ராமையா பதிப்பகம், சென்னை - 600 014. 5- வது பதிப்பு.