ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசும் சங்க இலக்கியத் தலைவி

திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிரியர், தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. 03 Jun 2023 Read Full PDF

அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசும் சங்க இலக்கியத் தலைவி

திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிரியர், தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

ஆய்வுச் சுருக்கம்  

    செய்திப்பரிமாற்றத்தில் மொழிவழிச் செய்திப்பரிமாற்றமே இன்றியமையாததாக அமைகின்றது.  மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கஅக-புறப்பாடல்களில், ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. அகமாந்தர்களின் உள்ளத்தில் புதையுண்டு கிடக்கின்ற அகவுணர்வுகளுக்கு வடிகாலாக அஃறிணைப்பொருட்கள் விளங்குகின்றன. தலைவி அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசுவதை ‘இயற்கைப் பொருட்களிடத்துப் பேசுதல், அஃறிணை உயிரினங்களிடத்துப் பேசுதல்’ என்று இருவகைப்படுத்திக் காணமுடியும். தலைவன் பிரிந்து செல்லத் தனித்திருக்கும் தலைவி காமத்தின் மிகுதியினால் ஆறு, கடல், மேகம், திங்கள், வாடைக் காற்று, மாலைப்பொழுது ஆகிய இயற்கைப் பொருட்களை விளித்துப் பேசுகின்றாள். இயற்கைப் பொருட்களிடத்துப் பேசுகின்ற போது, தன் துயருக்குக் காரணம் இவைகளே என்று பழிகூறும் தன்மையிலும், தன் துயரத்தை அவற்றின்மேல் ஏற்றிக் கூறும் வகையிலும் தலைவி பேசுகின்றாள்.

அஃறிணை உயிரினங்களை விளித்துத் தலைவி பேசும் எல்லாப் பாடல்களும் தலைவியின் காமமிக்க மனநிலையில் எழுந்த மொழிகளாகவே உள்ளன. தலைவியின் உணர்வுகள் எல்லை மீறியவையாகவும், சொற்கள் நாணம் கடந்தவையாகவும், துயரத்தை அடக்கவியலாது உரைப்பனவாகவும் உள்ளன. கேட்போர் இன்றியும், கேட்போர் இருப்பினும் எதிர்மொழி இல்லாமல் ஒருமுகமாகவே செய்திப்பரிமாற்றம் நிகழும். பெரும்பாலும் துன்ப மனநிலையில் மட்டுமே ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் நிகழும்.

திறவுச் சொற்கள்

நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, சங்க இலக்கியம்,அஃறிணைப் பொருட்கள்,மொழி

முன்னுரை

மனிதன் சமுதாயமாகக் கூடிவாழ்ந்த போது செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும் நிலை உருவாகியது. பேச்சுமொழி தோன்றிய பின் நேருக்குநேர் செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். செய்திகளைப் பரிமாறிக் கொள்வதால் மனிதப்பண்பு நலன்களும், பரிமாறப்படும் செய்தியினுடைய புலப்பாட்டுத்திறனும் வெளிப்படுகின்றன. சங்கஇலக்கியங்கள் பண்டைத்தமிழரின் அகவாழ்வு நிலையினையும் புறவாழ்வு நிலையினையும் அறிவதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. மனிதவாழ்வில் செய்திப்பரிமாற்றம் தமக்குள்ளேயும், இருவருக்கிடையேயும், குழுவினருக்கிடையேயும் நடைபெறுகின்றது. செய்திப்பரிமாற்றத்தில் மொழிவழிச் செய்திப்பரிமாற்றமே இன்றியமையாததாக அமைகின்றது. அவ்மொழிவழிச் செய்திப்பரிமாற்றத்தில் சங்க இலக்கியத் தலைவி, அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசும் தன்மையினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சங்கப்பாடல்களில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்

மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களில் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. சங்கஅக-புறப்பாடல்களில், ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது.

அகப்பாடல்களில் அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசுதல்

மனிதன், தன் மனச்சுமைகளை இறக்கிவைக்க சகமனிதனுடன் பேசுவது மட்டுமின்றி அஃறிணைப் பொருட்களோடும் பேசுகின்றான். அஃறிணைப் பொருட்களுக்குப் பேசும் ஆற்றலோ பேசுவோர் கூறும் செய்தியை உணரும் ஆற்றலோ கிடையாது. எனினும் அப்பொருட்களைப் பேசுவன போலவும், கேட்பன போலவும் கற்பனை செய்து கொண்டு அகவுணர்வுகளைக் கூறும் தன்மையைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. அஃறிணைப் பொருட்களோடு பேசுதல் என்பது ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தில் அடங்கும்.

“அகஉணர்வுகள் மாந்தரைத் தாக்கி, மனவலிமையைக் குறைக்கவல்லன. எனவே, அகமாந்தர்களின் உணர்வுகள் எல்லை கடந்து மிகும் போது, அவர்களின் உணர்வுநிலை வெளிப்பாட்டிற்கு அகப்புலவர்கள் அஃறிணைப்பொருட்களை விளித்துப் பேசுதலை ஒரு மரபாகக் கொண்டு பாடல்கள் யாத்துள்ளனர்”1

அகமாந்தர்களின் உள்ளத்தில் புதையுண்டு கிடக்கின்ற அகவுணர்வுகளுக்கு வடிகாலாக அஃறிணைப்பொருட்கள் விளங்குகின்றன. சங்க அகஇலக்கியங்களில் அஃறிணைப் பொருட்களோடு பேசுகின்ற பாடல்கள் உள்ளன.

தலைவி

தலைவி அகவுணர்வுகளை அஃறிணைப் பொருட்களிடத்து வெளிப்படுத்துகின்றாள். பிறரிடம் கூறஇயலாதவற்றை அஃறிணைப் பொருட்களிடத்துக் கூறி, ஆறுதல்படுகின்றாள். தலைவி அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசுவதை ‘இயற்கைப் பொருட்களிடத்துப் பேசுதல், அஃறிணை உயிரினங்களிடத்துப் பேசுதல்’ என்று இருவகைப்படுத்திக் காணமுடியும்.

இயற்கைப்பொருட்கள் வழித் தன்னுணர்ச்சி வெளிப்பாடு

தலைவன் - தலைவியின் காதலுக்கு இன்பத்தைச் சேர்ப்பதும், துன்பத்தை மிகுதிப்படுத்துவதும் ‘இயற்கைப் பொருட்களே’ ஆகும். அதனாலேயே அகப்பாடல்கள் இயற்கையாகிய முதற்பொருளையும், கருப்பொருளையும் பின்புலங்களாகப் பெற்றுள்ளன. காதலர்களுக்கு இன்பமூட்டும் இயற்கைப்பொருட்கள், பிரிவுவேளைகளில் துன்பத்தையே தருகின்றன. தலைவன் பிரிந்து செல்லத் தனித்திருக்கும் தலைவி காமத்தின் மிகுதியினால் ஆறு, கடல், மேகம், திங்கள், வாடைக் காற்று, மாலைப்பொழுது ஆகிய இயற்கைப் பொருட்களை விளித்துப் பேசுகின்றாள். இயற்கைப் பொருட்களை உரிமையுடையதாகக் கருதித் தன்மன உணர்ச்சிகளைத் தலைவி எடுத்தியம்புகின்றாள்.

ஆறு

பண்டைக்காலம் முதல் தமிழர்களின் வாழ்வோடும் வளமோடும் ஆறுகள் கலந்துவிட்டன. ஆறுஇ ஏரிஇ கடல் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களைப் பாடாத இலக்கியங்களே இல்லை. தலைவனுக்குக் கேட்கும்படியாக ஆற்றை நோக்கித் தலைவிஇ தன்னுடைய மனக்குமுறலை எடுத்துரைப்பதைக் குறுந்தொகை 327-ஆம் பாடல் உணர்த்துகின்றது. இதில், மலைப்பக்கம் செழித்து வளர்ந்த வாழைமரத்தை அடித்துக் கொணர்ந்த ஆற்றை நோக்கித் தலைவனை விட உனது செயல் மிகவும் கொடியது என்று தலைவி தன்நிலையை விளக்குகின்றாள். இங்கு, ஆற்றில் அடித்து வரப்பட்ட வாழைமரத்தின் நிலையே தன்னுடைய நிலையும் என்று தலைவி விளக்குவதை அறியமுடிகிறது. காமம் மிக்க கழிபடர் கிளவியால் வருந்திய தலைவி, தலைவனின் மலையினின்று பாய்ந்து வரும் ஆற்றை நோக்கிப் பேசுவதை அகநானூறு 398-ஆம் பாடலில் காணமுடிகிறது. இதில், தலைவன் தந்த பிரிவுத்துன்பத்தை நினைக்காமல் செல்லும் ஆறே, மலையில் உள்ள மலர்களை எல்லாம் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் ஒடுங்கிச் செல்கின்றாய் என்று தலைவி, ஆற்றோடு பேசித் தலைவனைப் பிரிந்த தன்னுடைய நிலையை உணர்த்துகின்றாள். மனதில் கவலை மிகும் போது தனியே அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசுதல் என்பது மனிதர்களிடையே காணப்படும் இயல்பான ஒரு செயலே ஆகும். தலைவனைப் பிரிந்திருக்க இயலாத தலைவியின் நிலையை வெளிப்படையாகக் கூறுதல் பெண்மைக்கு இழுக்காகும். இதனை உணர்ந்த தலைவி அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசி, பிரிவுத்துன்பத்தை வெளிப்படுத்துவதை இங்கே காணமுடிகிறது.

கடல்

சங்கத்தமிழரின் உள்ளத்து உணர்ச்சிகளையும் வேட்கைகளையும் புலப்படுத்துவதற்கு இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு புலவர்கள் பாடுவர். தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி காமமிகுதியால் கடலை நோக்கி,

“யார் அணங் குற்றனை கடலே!

                  …………………………………………

                        நள்ளென் கங்குலும் கேட்கும்இநின் குரலே?”          (குறுந்.163: 1, 5)

என்று இரங்கிக் கூறுகின்றாள். இப்பாடலில் தலைவனைப் பிரிந்து காமநோயால் துன்புறும் தலைவிஇ தன்னைப்போல் கடலும் துன்புற்றதோ என்று எண்ணிஇ நள்ளிரவில் வந்து மோதும் கடலலைகளைப் பார்த்துக் கடலிடம் பேசுகின்றாள். இதே கருத்து திருக்குறளில் உள்ளது.

“படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

                                     காமநோய் செய்தஎன் கண்”2

இக்குறளில் கடலை விடப் பெரிதான காமநோய்க்குக் காரணமான தலைவியின் கண்களும் காமநோயால் உறங்காமல் துன்புறுகின்றன என்ற கருத்து இடம்பெற்றுள்ளது.

மேகம்

தலைவன் குறித்துச் சென்ற கார்ப்பருவம் கண்டு தலைவி வருந்துகின்றாள். வானம் இடிமுழங்கி மழைபொழியக் கூடும் செயல் தனக்கு இனிய அல்ல என்று மேகத்திடம் கூறித் தலைவி கலங்குகின்றாள். இதனை,

“இனியஅல்லஇ நின் இடிநவில் குரலே”                     (நற்.238: 11)

என்ற பாடலடி உணர்த்துகின்றது. 

இங்கு தன் மனவுணர்வுகளைத் தலைவி மேகத்திடம் பேசுகின்றாள். இங்கே, தலைவனின் நெஞ்சத்தைக் கனியச் செய்யாத மேகத்தின் குரல் தனக்கு இனிமையைச் செய்யவில்லை என்று தலைவி, மேகத்திடம் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தை அறியமுடிகிறது.

திங்கள்

திங்கள் என்பது நிலவினைக் குறிக்கும். திங்களின் தண்மையும் வெண்மையும் அழகாக இருக்கும். உள்ளம் களிகொள்ள நிலவினை ஒப்பிட்டுக் கூறுவது பண்டைய வழக்கமாகும். தலைவியின் மேனியழகை வருணிக்க இளம்பிறையாகிய திங்களைப் பழந்தமிழர்கள் உவமையாகப் பாடியுள்ளனர். பொருள்வயிற் பிரிந்த தலைவனை எண்ணி வருந்திய தலைவி, திங்களை நோக்கித் தலைவன் இருக்குமிடத்தைக் காட்டும்படி வேண்டுகின்றாள்.   

“நற்கவின் இழந்தஎன் தோள்போல் சாஅய்,

 சிறுகுபு சிறுகுபு செரீஇ,”                              (நற்.196: 7-8)

இங்கு, தலைவனைப் பிரிந்ததால் அழகிழந்து காணப்படும் தன்னைப் போல வாட்டமுற்று நாள்தோறும் சிறுகச் சிறுகக் குறைந்து மறைபடுவாய் என்று தலைவி, நிலவிற்குச் சாபமிடுவதாகப் பேசுவதைக் காணமுடிகிறது. இங்ஙனம், அஃறிணைப் பொருட்களிடத்துப் பேசும் தலைவி தன்னுடைய துன்பத்தைப் போல அஃறிணைப் பொருளான நிலவும் துன்பப்படட்டும் என்று சாபமிட்டிருப்பது, துன்பத்தைத் தாங்கவியலாத தலைவியின் மனநிலையைக் காட்டுகின்றது.

வாடைக் காற்று

தலைவன், தலைவி இருவரையும் வருத்தும் பருவம் குளிர்காலமாகும். பனியோடு படரும் வாடைக்காற்றால் உயிரினங்கள் நடுங்குவது இயல்பாகும். தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவி, வாடைக்காற்றை நோக்கிப் பேசுகின்றாள்.

“இரும்புறம் தழூஉம் பெருந்தண் வாடை!

                        நினக்குத் தீதுஅறிந் தன்றோ இலமே;

                                     யாரும்இல் ஒருசிறை இருந்து,

                                     பேரஞர் உறுவியை வருத்தா தீமே!”                 (நற்.193: 4-5, 8-9)

இங்கு, குளிர்ச்சியுடைய வாடையே! உனக்குத் தீதுசெய்ய மனதாரக் கூட நினைக்கவில்லை. தலைவன் பொருளீட்டப் பிரிந்து சென்றார். யாருமில்லாது ஒரு பக்கமிருந்து பெரிய துன்பமுற்றிருக்கும் என்னை வருத்தாதே! என்று தலைவி வாடைக்காற்றிடம் வேண்டுகின்றாள் என்பது புலப்படுகின்றது. பிரிந்திருப்போரின் துன்பத்தை வாடைக்காற்று மேலும் மிகுவிக்கும் என்பதும் தெளிவாகின்றது.

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, ஆற்றாமை மீதூர வாடைக்காற்றே! நீ தலைவன் நாட்டிற்குச் சென்று அங்கும் வீசுவாயாக! என்று வாடைக்காற்றிடம் அறிவுறுத்துகின்றாள். இதனை,

“குன்றுநெகிழ்பு அன்ன, குளிர்கொள் வாடை!

                 கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது

                                    இனையை ஆகிச் செல்மதி;

                                   வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!”      (அகம்.163: 9, 12-14)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. பொருளீட்டும் முனைப்பில் இருக்கும் தலைவன்,  தலைவியை நினைக்க வழிகோலுமாறு வாடைக்காற்றிடம் தலைவி அறிவுறுத்துகின்றாள். இங்கு, தலைவி ஒருமுகமாகத் தன் கருத்தினை வாடைக்காற்றிடம் தூது விடுகின்றாள். இதனால், தலைவி வாடைக்காற்றிடம் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது.

இங்ஙனம், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு வாடைக்காற்று துன்பத்தைத் தருவதால், துன்புறுத்தாதே! என்று அதனிடம் வேண்டுகின்றாள். இல்லையெனில், தன்னைத் துன்புறுத்துவதைப் போன்று தலைவனையும் துன்புறுத்துவாயாக! என்றும் வாடைக் காற்றிடம் தலைவி பேசுகின்றாள். தனக்கு வரும் துன்பம் வேண்டாம் என வேண்டுகின்ற மனப்பாங்கு மனிதர்களுக்கு உரியது. அதேநேரத்தில் துன்பத்திற்குக் காரணமானவர்களும் அதே துன்பத்தைப் பெறட்டும் என்று எண்ணும் மனப்பாங்கும் மனிதர்களுக்கே உரியது. இவ்வாறாக, மனிதர்களுக்கே உரிய இயல்பான மனநிலையுடன் தலைவி, தலைவனிடம் செயலாற்றுவதை வாடைக் காற்றிடம் தலைவி பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தால் உணரமுடிகிறது.

மாலைப் பொழுது

மாலை நேரத்தில் தோன்றும் காம நோய்க்கு அஞ்சித் தலைவி வருந்துவதுண்டு. இதனைப் பொழுது கண்டு புலத்தல் என்று அழைக்கின்றோம். இரக்கத்திற்குரிய பறவைகள் தம் குஞ்சுகளை நினைத்து, இல்லம் திரும்பும் மாலைப் பொழுதிலும் தலைவன் வரவில்லையே? என்று தலைவி மாலைப் பொழுதினைக் கண்டு வருந்துவதைக் குறுந்தொகை 92-ஆம் பாடல் உணர்த்துகின்றது.

“கடும்பகல் வருதி கையறு மாலை!”                       (ஐங்.183: 2)

இவ்வடியில் தலைவனைப் பிரிந்த தலைவி, தன்னுடைய ஆற்றாமையை மாலைப் பொழுதிடம் பேசுவதைக் காணமுடிகிறது.

தலைவி ஒரு பெண் என்பதால், அவள் தன்னுடைய அகவுணர்வு சார்ந்த ஆற்றாமையைச் சகமனிதர்களிடம் எடுத்துரைக்க இயலாது. இந்நிலையில், தலைவி ஆற்றாமையை மிகுவிக்கும் மாலைப்பொழுதிடமே தன்னுடைய நிலையைப் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது. இதனால் சேர்ந்திருப்போருக்கு இன்பம் தரும் மாலைப்பொழுது, பிரிந்திருப்போருக்குத் துன்பத்தைத் தரும் என்பது தெளிவாகின்றது.

இங்ஙனம், இயற்கைப் பொருட்களிடத்துப் பேசுகின்ற போது, தன் துயருக்குக் காரணம் இவைகளே என்று பழிகூறும் தன்மையிலும், தன் துயரத்தை அவற்றின்மேல் ஏற்றிக் கூறும் வகையிலும் தலைவி பேசுகின்றாள். காமமிகுதியினால் ஏற்படும் மனத்துயரைத் தோழியிடமோ செவிலியிடமோ கூறமுடியாத நிலையில், இயற்கைப் பொருட்களிடத்துப் பேசுகின்றாள். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் உள்ளத்தில் ஏற்படும் தவிப்பும், ஆதங்கமுமே இயற்கைப் பொருட்களிடத்துப் பேசுவதற்குக் காரணம் எனலாம்.

அஃறிணை உயிரினங்கள் வழித் தன்னுணர்ச்சி வெளிப்பாடு

தலைவன் மீது கொண்ட அளவுகடந்த காமத்தைத் தலைவி, பிறரிடம் கூறுதல் இயலாது. இந்நிலையில் தலைவி அஃறிணை உயிரினங்களையே தனக்கு உற்ற துணையாகக் கொள்கின்றாள். ஏனெனில், அவைகள் மட்டுமே தலைவியின் காமமிகுதியை ஊரெல்லாம் தெரிவிப்பதில்லை. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உடையவை, அஃறிணை உயிரினங்களாகும். தொல்காப்பியர் மரபியலில், அறுவகை உயிர்ப்பாகுபாட்டினை எடுத்துரைத்துள்ளார். இதனை,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

  இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

   மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

       நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

 ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

          நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”3

என்ற நூற்பா உணர்த்துகின்றது. சங்க இலக்கியத்தில் அஃறிணை உயிரினங்களான நண்டு, தும்பி, வெண்குருகு, சேவல், கிளி ஆகியவற்றை விளித்துக் காமநோயைத் தலைவனிடம் சென்று கூறும்படித் தலைவி வேண்டுகின்றாள். இவ்வாறு அஃறிணை உயிரினங்களைப் பேசுவன போலவும் கேட்பன போலவும் கற்பனை செய்துகொண்டு தலைவி பேசும் இடங்கள், அவளுடைய தன்னுணர்ச்சி வெளிப்பாடாக அமைகின்றன.

நண்டு

தொல்காப்பியர் கூறியுள்ள உயிர்ப்பாகுபாட்டில் நண்டு, தும்பி ஆகியவை நான்கறிவு உடையனவாகும்.

“நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே

 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”4

என்ற நூற்பாவில் நான்கறிவு உடைய அஃறிணை உயிரினமாக நண்டினைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தலைவியின் காமமிகு நிலையைத் தலைவனிடம் கடற்கரைச் சோலை, உப்பங்கழி, புன்னைமரம் ஆகியவை கூறாது. ஏனெனில், அவை இயங்காதவை. இந்நிலையில் தலைவிஇ நண்டே! உன்னையல்லாது எனக்கு வேறுதுணை இல்லை. தலைவனிடம் என் நிலையை நீ தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றாள். இதனை,

“சொல்லல் வேண்டுமால் - அலவ,”               (அகம்.170: 8)

என்ற அடி உணர்த்துகின்றது. இங்கு, தன் காமநோயைத் தலைவனிடம் சென்று கூறும்படி நண்டிடம் தலைவி வேண்டுகின்றாள். காமத்தைப் பெண் வாய்விட்டுக் கூறமுடியாத நிலையில் இங்ஙனம் அஃறிணை உயிரினங்களிடம் கூறி, வடிகால் தேடுகின்றாள். தலைவி தன்னுடைய காமத்தை அஃறிணை உயிரினமான நண்டிடம் தெரிவிக்கும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது.

தும்பி

வண்டினங்களுள் ஒன்று, தும்பி ஆகும். இது நான்கறிவு உடைய அஃறிணை உயிரினம் ஆகும். பொருள்வயிற் பிரிந்த தலைவனிடம் தும்பி ஒன்று தூது சென்று உரைக்காத போது, அதனைத் தலைவி வெறுத்துப் புலம்புகின்றாள். கொடியதன்மை உடைய நின்னிடத்து என் துன்பத்தைக் கூறியதால் எவ்வித பயனும் இல்லை. காமநோயிலே வீழ்ந்து இப்போதே இறப்பேனாக, நீ நீண்டகாலம் வாழந்திருப்பாயாக! என்று ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றாள்.

  “கொடியை; வாழி தும்பி!

       மெய்யே கருமை அன்றியும், செவ்வன்

                                                  அறிவும் கரிதோ அறனிலோய்!

        வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு

                     என்நிலை உரையாய், சென்றுஅவண் வரவே”  

        (நற்.277: 1, 3-4, 11-12)

இப்பாடலடிகளில் கொடியதன்மை உடைய வண்டே! உன் உடம்பு போல உள்ளமும் கருமையாக இருப்பதற்குக் காரணம் கூறுவாயாக! வெம்மைமிகு மலைசூழ்ந்த காட்டுவழியில் சென்றவராகிய தலைவனிடத்து என் நிலையை நீ கூறவில்லை. அவர் இங்கு வருமாறு நீ உரைக்கவும் இல்லை என்று தலைவி, வண்டிடம் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது. இங்கு, தனக்கு துன்பம் செய்த தும்பியின் செயல் அறநெறியற்றது என்று தலைவி வெளிப்படையாகச்  சாடுகின்றாள். இங்ஙனம்,  தலைவனிடம் தம் மனஎண்ணங்களைத் தெரிவிக்கத் தும்பி போன்ற அஃறிணை உயிரினங்களே தலைவிக்குத் தூதாகின்றன. ஆனால், அவைகளும் தூது செல்லாத நிலையில் அவற்றைத் தலைவி கேட்குந போல எண்ணிக் கொண்டு பேசுவது ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாகும்.

வெண்குருகு

வெண்குருகு என்பது நாரையைக் குறிக்கும். பிரிவுத்துயரால் வாடுகின்ற தலைவி, மாலைக்காலம் தரும் துன்பத்தைத் தலைவனிடம் தெரிவிக்கும்படி வெண்குருகிடம் வேண்டுகின்றாள். இதனை,

“கருங்கால் வெண்குருகு!- எனவ கேண்மதி;

…………………… …………  என்குறை

                                            இற்றாங்கு உணர உரைமதி”                            (நற்.54: 4, 7-8)

என்ற அடிகள் தெரிவிக்கின்றன.

இங்கு, அஃறிணை உயிரினமான வெண்குருகினைக் கேட்பாயாக! என்றும்,  தன் நிலையைத் தலைவனிடம் சென்று உரைப்பாயாக! என்றும் காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைவி கூறுகின்றாள் என்பது புலப்படுகின்றது. இவ்வாறு, அஃறிணை உயிரினமான வெண்குருகினைக் கேட்பந போலவும் பேசுவன போலவும் எண்ணித் தலைவி பேசியுள்ளமை ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்திற்குத் தகுந்த சான்றாகும்.

தலைவி காமவுணர்வைத் தாங்கமாட்டாது வெண்குருகிடம்,

“சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!

                 …………………………………………

இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?”                   (நற்.70: 1, 9)

என்கிறாள். இவ்வடிகளில் தலைவனின் பிரிவால் வளையல் நெகிழும் துன்பத்தோடு துன்புறுவதைத் தலைவனிடம் வெண்குருகானது கூற வேண்டும் என்று தலைவி, வெண்குருகிடம் தூது வேண்டுவதைக் காணமுடிகிறது. இங்கு, தலைவி காமம் மிக்க கழிபடர் கிளவியால் வெண்குருகிடம் வேண்டி நிற்கும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது.

சேவல்

அதிகாலையில் மாந்தர்கள் துயில் நீங்கி எழச் சப்தம் எழுப்புவது சேவல் மட்டுமே ஆகும். பொருளீட்டும் வினைமுடித்து வந்த தலைவனுடன் தலைவி துயில் கொண்டிருந்தாள். தலைவனுடன் பாதுகாப்புடன் அமைதியான உறக்கத்திலிருக்கும் போது தன்னை எழுப்பிய சேவலைப் பார்த்து,

“தொகுசெந் நெற்றிக் கணம்கொள் சேவல்!

                        நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும்

                                     பிள்ளை வெருகிற்கு அல்இரை ஆகி,

                        கடுநவைப் படீஇயரோ, நீயே”                        (குறுந்.107: 2-5)

என்று தலைவி சினக்கின்றாள். சேவலைப் பார்த்துஇ நள்ளிரவில் வீட்டு எலியைத் தின்னக் காத்திருக்கும் காட்டுப்பூனைக் குட்டிக்கு சிலநாள் வைத்திருந்து உண்ணும் இரையாகித் துன்புறுவாயாக என்று தலைவி சினத்தலைக் காணமுடிகிறது. தன்னை வருத்திய சேவலும் பிறவற்றால் துன்பமடைய சபிப்பது தலைவியின் காமம் மிக்க நிலையைக் காட்டுகின்றது. இங்ஙனம் தலைவன், தலைவியின் அன்புநிலைக்கு இடையூறாக அமைந்த அஃறிணை உயிரினமான சேவலுக்குக் கூடத் தலைவி சாபமிடுகின்றாள் என்பதால், தலைவனை ஒருகணமும் பிரிய மனமில்லாத பேரன்பு நிலையில் தலைவி இருக்கின்றாள் என்பது புலனாகின்றது.

கிளி

மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்பு வாய்ந்தவை கிளிகள் ஆகும். கிளிகள் மனிதர்களைப் போல ஒலியெழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. உள்ளம் உடைந்த பெண்களின் துன்பம் நீங்கக் கிளி தூதாகப் பயன்படுத்தப்படுகின்றது. சிவந்;த வாயையுடைய கிளியே! தினையை உண்டு நின் குறை முடிந்த பிறகு என் குறை முடிக்க வேண்டும் என்று தலைவி, கிளியைத் தொழுது இரந்து நிற்கின்றாள்.

“கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி!

                                     அம்மலை கிழவோற்கு உரைமதி இம்மலைக்

                                     கானக் குறவர் மடமகள்

                                ஏனல் காவல் ஆயினள் எனவே”                  (நற்.102: 1, 7-9)

இப்பாடலடிகளில், வளைந்த தினைக்கதிர்களைக் கொய்து பசியாறும் சிவந்தவாயை உடைய பசுமையான கிளியே! தலைவரைக் கண்டபோது இம்மலைக் காட்டிலுள்ள தினைப்புனத்திற்குக் கானக்குறவரின் மகள் மீண்டும் வந்து காவல் காத்து நிற்கின்றாள் என்பதை மட்டும் சொல்வாயாக! என்று தலைவி, கிளியிடம் தூது வேண்டுவதைக் காணமுடிகிறது. இங்கு தலைவிஇ கிளியிடம் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் மட்டுமே உள்ளது. கிளியிடம் இருந்து மறுமொழி எதுவும் இல்லை. அஃறிணை உயிரினங்களை விளித்துத் தலைவி பேசும் எல்லாப் பாடல்களும் தலைவியின் காமமிக்க மனநிலையில் எழுந்த மொழிகளாகவே உள்ளன. தலைவியின் உணர்வுகள் எல்லை மீறியவையாகவும், சொற்கள் நாணம் கடந்தவையாகவும், துயரத்தை அடக்கவியலாது உரைப்பனவாகவும் உள்ளன. எனவே, பிறரிடம் கூறமுடியாத காமம் மிக்க கழிபடர் கிளவியினை உரைத்திடத் தலைவியின் அகவுணர்வுகளுக்கு வடிகாலாக, அஃறிணை உயிரினங்கள் பயன்படுகின்றன. தலைவியின் அகவுணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பேச்சுகள் அனைத்தும் மறுமொழியில்லாத ஒருமுகச் செய்திப்பரிமாற்றமே ஆகும்.

தொகுப்புரை

அகமாந்தர்களின் உணர்வுகள் எல்லை கடந்து மிகும் போது அஃறிணைப் பொருட்களை விளித்துப் பேசுகின்றனர். தலைவி, தன்னுடைய காமமிகுதியைப் பலரிடம் பரிமாறுதல் என்பது இயலாத ஒன்று. ஆகவே, தன் துயரங்களை அஃறிணைப் பொருட்களிடத்து ஒருமுகமாகவே வெளிப்படுத்துகின்றாள்.  கேட்போர் இன்றியும், கேட்போர் இருப்பினும் எதிர்மொழி இல்லாமல் ஒருமுகமாகவே செய்திப்பரிமாற்றம் நிகழும் என்பது இக்கட்டுரையில் தெளிவாகின்றது. பெரும்பாலும் துன்ப மனநிலையில் மட்டுமே ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் நிகழும் என்பது சங்கப் பாடல்கள் வழி இக்கட்டுரையில் கண்டறியப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்

1. ஆ.அமிர்தகௌரி, சங்க இலக்கியத்தில் உரையாடல், ப.235

2. குறள், 1175

3. தொல்.பொருள்.மரபு., நூ.27

4. மேலது, நூ.31

துணைநூற் பட்டியல்

1. அறவாணன், க.ப. - அற்றைநாள் காதலும் வீரமும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், முதல் பதிப்பு - 2002.

2. அமிர்த கௌரி, ஆ.-   சங்க இலக்கியத்தில் உரையாடல், கவின்கலை அச்சகம், சென்னை - 41. முதல் பதிப்பு - டிசம்பர், 1989.

3. சண்முகம் பிள்ளை, மு.-  அகப்பொருள் மரபும் திருக்குறளும், சென்னைப் பல்கலைக்கழகம், 1980.

4. சாமி, பி.எல். -  சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. 1976.

5. சிவராஜ், து. -   சங்க இலக்கியத்தில் உளவியல், சிவம் பதிப்பகம், வேலூர். 1994.

6. வரதராசன், மு. - பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, கலைக்கதிர் வெளியீடு, கோயம்புத்தூர். 1955.