ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகப்பொருள் இலக்கண நூல்கள்  எடுத்துரைக்கும் நிலமும் பொழுதும் (TIME AND HABITATION IN AGAPPORUL GRAMMARS )

முனைவர் மூ.பாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 27 Jul 2023 Read Full PDF

அகப்பொருள் இலக்கண நூல்கள்  எடுத்துரைக்கும் நிலமும் பொழுதும் (TIME AND HABITATION IN AGAPPORUL GRAMMARS)          

முனைவர் மூ.பாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024. (Dr.M.Balakrishnan, Assistant professor, Department of Tamil, Centre for Distance and Online Education, Bharathidasan University, Tiruchirappalli -620 024.)

Abstract:                             

        In Tamizh literature Agaporul ilakanam is a unique and distinctive grammar.  The culture and life of people and their relationship with male and female, worldwide is explained in Tamil literature.  In Tamil literature Agaporul ilakanam and Aynthiillakanamum jointly with  agaporul illakkanam is also available.   This literature has explained about the division of lands.  People’s life style and their culture are reflected through the time period and transformation of lands in Agam grammar.   This paper explores about the Agaporul ilakanangal in which time period and space.

Key words:  Tamizh, Agapporul, Aynthilakkanam, Time, Land.

ஆய்வுச் சுருக்கம்:

தமிழ் இலக்கணங்களுள் தனித்துவமான இடத்தைப் பெற்று விளங்குவது அகப்பொருள் இலக்கணமாகும். உலகஅளவில் வாழ்க்கைக்கான இலக்கணத்தைப் படைத்த மொழி தமிழ்மொழியாகும். தமிழ்மொழியில் உள்ள இலக்கண நூல்களில் அகப்பொருளை மட்டும்  கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட அகப்பொருள் இலக்கணங்களும், ஐந்திலக்கலணத்தோடு அகப்பொருள் இலக்கணத்தையும் சேர்த்து எடுத்துரைத்த இலக்கணங்களும் இருக்கின்றன. இவ்விலக்கணங்கள் திணைகளுக்குரிய நிலத்தையும் பொழுதையும் எடுத்தியம்பியுள்ளன. ஒரு திணையின் இயக்கத்தையும் , திணையில் வாழ்கிற மக்களின் வாழ்வியலையும் தீர்மானிப்பதில் முக்கிப் பங்காற்றுபவை நிலமும் பொழுதும் ஆகும். அகப்பொருள் இலக்கண நூல்கள் அன்பின் ஐந்திணைக்கான முதல், கரு, உரி எனும் முப்பொருள்களை எடுத்துரைத்துள்ளன. இச்சிறப்பான முதற்பொருளுள் என்பது நிலமும் பொழுதுமாகும். அகப்பொருள் இலக்கண நூல்களில் தமிழின் முதல் இலக்கணநூலான தொல்காப்பியம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய திணைகளுக்குரிய நிலத்தை மடடுமே சுட்டியுள்ளது.  பாலைக்குரிய நிலத்தைச் சுட்டவில்லை. தொல்காப்பியத்திற்குப் பிறகான தமிழ் அகப்பொருள் சார்ந்த இலக்கணநூல்களில் பாலைக்குரிய நிலத்தை முதன்முதலில் சுட்டியிருப்பது தமிழ்நெறிவிளக்கமே ஆகும். அவிநயம், களவியற்காரிகை ஆகியவற்றில் பாலைநிலம் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை. தொல்காப்பியர் நான்கு வகையான நிலப்பாகுபாடுகளையே உரைத்துள்ளார். ஆனால், எண்ணிக்கையில் பத்துவகை நிலம் எனக் கருதுமாறு உரையாசிரியர்கள் உரைவகுத்துள்ளனர். இதனைப் பின்பற்றி நம்பியகப்பொருள் நிலங்களைப் பத்துவகை எனப் பாகுபடுத்தியுள்ளது. இத்தகைய நிலமும் பொழுதும் குறித்த செய்திகளை அகப்பொருள் இலக்கணங்களை முன்வைத்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. 

திறவுச்சொற்கள் - அகப்பொருள், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், யாமம், வைகறை, விடியல், நண்பகல், மாலை, எற்பாடு.

முன்னுரை

தமிழ் இலக்கணங்களுள் தனித்துவமான இடத்தைப் பெற்று விளங்குவது அகப்பொருள் இலக்கணமாகும். உலகஅளவில் வாழ்க்கைக்கான இலக்கணத்தைப் படைத்த மொழி தமிழ்மொழியாகும். தமிழ்மொழியில் உள்ள இலக்கண நூல்களில் அகப்பொருளை மட்டும்  கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட அகப்பொருள் இலக்கணங்களும், ஐந்திலக்கலணத்தோடு அகப்பொருள் இலக்கணத்தையும் சேர்த்து எடுத்துரைத்த இலக்கணங்களும் இருக்கின்றன. இவ்விலக்கணங்கள் திணைகளுக்குரிய நிலத்தையும் பொழுதையும் எடுத்தியம்பியுள்ளன. ஒரு திணையின் இயக்கத்தையும் , திணையில் வாழ்கிற மக்களின் வாழ்வியலையும் தீர்மானிப்பதில் முக்கிப் பங்காற்றுபவை நிலமும் பொழுதும் ஆகும். இத்தகைய நிலமும் பொழுதும் குறித்த செய்திகளை அகப்பொருள் இலக்கணங்களை முன்வைத்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

அகத்திணைகள்

      அகப்பொருள் சார்ந்த எழுதிணைகளுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்தும் அன்பின் ஐந்திணைகளாகும்.  இத்திணையமைப்புக் குறித்து வரலாற்றறிஞர் இராமச்சந்திர தீட்சிதர் பின்வருமாறு உரைக்கின்றனர். “தமிழ்ச் சமூக அமைப்பு சுற்றுபுறச் சூழலிருந்து முகிழ்த்த தனிச்சிறப்பான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. மானிடவியல் வலியுறுத்தும் மனிதவாழ்வின் ஐந்து படிநிலைக் கட்டங்களையும் வரலாற்றுக்கு முந்திய காலப்பகுதியிலேயே தமிழ்ச்சமூகம் எட்டிவிட்டது தனித்துவம் வாய்ந்ததாகும்”  அன்பின் திணைக்குமான முதல், கரு, உரி எனும் முப்பொருள் பாகுபாடுகளை அகப்பொருள் இலக்கண நூல்கள் விரித்துரைத்துள்ளன. இம்மூன்றும் தனித்தோ, இணைத்தோ பாடல்களில் வைத்துப் பாடப்பெறும். இவற்றுள் உரிப்பொருளே பாட்டின் உயிர்ப்பொருள் எனக் கருதப்படும். முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருள் சிறக்கத் துணையாக வருவன ஆகும். முதற்பொருளுள் முக்கியமானது நிலமும் பொழுதுமாகும்.

நிலம்

      எந்த ஒரு நிகழ்வும் நிகழவேண்டுமெனில் அதற்கு முதற்காரணமாக அமையப்பெறுவது நிலமும், பொழுதும்  ஆகும். நிலமும், பொழுதும் இல்லாமல் எந்த நிகழ்வும் இல்லை. இத்தகைய முக்கியத்துவம் கருதியே அகப்பொருள் இலக்கண நூலார் நிலத்தையும் பொழுதையும் முதற்பொருள் எனக் குறித்தனர். இத்தகைய முதற்பொருளைத், தொல்காப்பியர்,

“முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்

 இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே”                  (அகத்திணையியல், நூற்பா - 4)

 

என எடுத்துரைத்துள்ளார்.

 தொல்காப்பியம்

      ஐந்திணைகளுள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைகளுக்கும் முறையே, ‘காடுறை உலகமும்,மைவரை உலகமும், தீம்புனல் உலகமும, பெருமணல் உலகமும் எனத் தொல்காப்பியர் வகுத்துள்ளார். (தொல்.அகத். நூ:5) பண்டைத் தமிழரின் வாழ்வு இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதை இந்நிலப்பாகுபாடுகள் உறுதிசெய்கின்றன.

 இறையனார் களவியல்

      இறையனார் களவியல் ஐந்திணைகளுக்குரிய முதற்ப்பொருளை எடுத்துரைக்கவில்லை. ஆனால் உரையாசிரியரான நக்கீரர் இறையனார் களவியலின் உரையில் முதல், கரு, உரிப்பொருளை எடுத்துரைத்துள்ளார்

தமிழ்நெறிவிளக்கம்

      தமிழ் அகப்பொருள் சார்ந்த இலக்கணநூல்களில் பாலைக்குரிய நிலத்தை முதன்முதலில் எடுத்துரைத்திருப்பது தமிழ்நெறிவிளக்கமே ஆகும்.

“பொருப்பே வெம்பரல் புறவொடு பழனம்

 பரப்பமை வாரி குறிஞ்சி முதற் பாகு”               ( நூற்பா -3)

என்ற நூற்பாவின்வழி குறிஞ்சிக்கு மலைச்;சாரலும் (பொருப்பு) பாலைக்கு வெம்மையான பகுதியும் (வெம்பரலத்தமும்), முல்லைக்குக் காடு சார்ந்த பகுதியும் (புறவும்), மருதத்திற்கு வயல்வெளியும் (பழனம்) நெய்தலுக்குக் கடலும் (வாரி) நிலப்பகுதிகளாகும் என்று தமிழ்நெறிவிளக்கம் உரைத்துள்ளது.

      தொல்காப்பியம் பாலை நிலத்துக்குத் தனியே நிலப்பாகுபாடு செய்யவில்லை. ஆனால், தமிழ்நெறிவிளக்கம் பாலை நிலத்துக்கு ‘வெம்பரலத்தம்’ (வெம்மையான பரற்கற்கள் நிறைந்த பகுதி) என்று நிலப்பாகுபாடு செய்துள்ளது. இது அகப்பொருள் இலக்கணக்கூறுகளுள்  ஏற்பட்ட வளர்நிலை மாற்றமாகும். “சிலப்பதிகாரம் 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தின் படைப்பு என்பதில் ஐயமில்லை” என்ற கே.கே.பிள்ளையின் கூற்றுப்படி கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு  சிலப்பதிகாரக் காப்பியம் இயற்றப்பட்டதாகக் கொள்ளலாம். இக்காப்பியம்,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

 பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”  (சிலம்பு.காடுகாண் காதை - 64-66)

 

என்று முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பில் மாறுபட்டுத் திரியும்போது அது பாலை எனும் வருத்தும் நிலையை அடையும் என உரைத்துள்ளது. இதனை அடியொற்றி தமிழ்நெறிவிளக்கம் பின்னைய கி.பி 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 10ஆம் நூற்றாண்டுக்குள் இயற்றப்பட்டுள்ளதாகக் கருதப்படும் தமிழ்நெறிவிளக்கம் பாலைக்குரிய நிலத்தை ‘வெம்பரல்’ எனப் பாகுபாடு செய்துள்ளது.  நிலப்பாகுபாட்டு அமைப்பில் ஏற்பட்ட வளர்நிலை மாற்றமாகும். தமிழ்நெறிவிளக்கம் போன்றே பாலைக்குரிய நிலம் ‘வெம்பரல்’ என வீரசோழியம் (நூற்பா-91) எடுத்துரைத்துள்ளது. அவிநயம், களவியற்காரிகை ஆகியவற்றில் பாலைநிலம் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை.

நம்பியகப்பொருள்

      ஐந்து வகையாகச் சுட்டப்பட்ட ஐந்திணைக்குரிய நிலங்களைப் பத்துவகைகளாக விரித்துரைத்துள்ளது நம்பியகப்பொருள். இதனை,

“வரையே சுரமே புறவே பழனந்

 திரையே யவையவை சேர்தருமிடனே

      எனவீ ரைவகைத் திணையியல் நிலமே ” (நூற்பா - 9)

 

என்ற நூற்பாவின்வழி அறியலாம். குறிஞ்சிக்கு வரையும் வரை சார்ந்த இடமும், பாலைக்கு நெடுவழியும் அதன் சார் நிலமும், முல்லைக்குப் புறவும் புறவு சார்ந்த இடமும்,  மருதத்திற்குப் பழனமும் பழனஞ் சார்ந்த இடமும், நெய்தலுக்குக் கடலும் கடல் சார்ந்த இடமும் உரியன என எடுத்துரைத்துள்ளது நம்பியகப்பொருள்.

 

      தொல்காப்பியர் நான்கு வகையான நிலப்பாகுபாடுகளையே உரைத்துள்ளார். ஆனால், எண்ணிக்கையில் பத்துவகை நிலம் எனக் கருதுமாறு தொல்காப்பிய உரையாசிரியர்கள் உரைவகுத்துள்ளனர். இதனைப் பின்பற்றி நம்பியகப்பொருள் நிலங்களைப் பத்துவகை எனப் பாகுபடுத்தியுள்ளது. தொன்னூல்விளக்கம், முத்;துவீரியம் ஆகியன ஐந்து நிலங்களையே உரைத்துள்ளன. நம்பியகப்பொருளைப் பின்பற்றி இலக்கணவிளக்கமும், சுவாமிநாதமும் பத்துவகை நிலச்சூழல்களை எடுத்துரைத்துள்ளன.

 பொழுது

      முதற்பொருளில் நிலத்தோடு சேர்ந்து அமைவது பொழுதாகும். அகவிலக்கணங்கள் ஓர் ஆண்டின் கூறுகளைப் ‘பெரும்பொழுது’  என்றும், ஒரு நாளின் கூறுகளைச் ‘சிறுபொழுது’  என்றும் பாகுபாடு செய்துள்ளன.

 

தொல்காப்பியம்

      கார்காலம்  கூதிர், முன்பனி, பின்பனி  இளவேனில், முதுவேனில்  எனப் பெரும்பொழுதுகளையும், மாலை  யாமம்  வைகறை, விடியல்  எற்பாடு  நண்பகல்      எனச் சிறுபொழுதுகளையும் எடுத்தியம்பியுள்ளது தொல்காப்பியம். இவற்றைத் தொல்காப்பிய அகத்திணையியலில் இடம்பெற்றுள்ள ஆறு முதல் பன்னிரெண்டு வரை உள்ள நூற்பாக்கள் வரையறை செய்துள்ளன.

“காரும் மாலையும் முல்லை”  (அகத்திணையியல், நூற்பா-6)

“குறிஞ்சிகூதிர் யாமம் என்மனார் புலவர்”(அகத்திணையியல், நூற்பா-7)

“பனிஎதிர்பருவமும் உரித்தென மொழிப”   (அகத்திணையியல், நூற்பா-8)

“வைகறை விடியல் மருதம் ” (அகத்திணையியல், நூற்பா-9)

“எற்பாடு

 நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும் ”(அகத்திணையியல், நூற்பா-10)

“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

 முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (அகத்திணையியல், நூற்பா-11)

“பின்பனி தானும் உரித்தென மொழிப”      (அகத்திணையியல், நூற்பா-12)

இவையாவும் முதற்பொருளை எடுத்துரைக்க வந்த தொல்காப்பிய நூற்பாக்களாகும்.

 

 இறையனார் களவியலும் தமிழ்நெறிவிளக்கமும்

      இறையனார் களவியலில் பொழுது குறித்த செய்திகள் இல்லை. உரையில் மட்டும இதற்கான விளக்கம் காணப்படுகிறது. தமிழ்நெறிவிளக்கம் தொல்காப்பியத்தை அடியொற்றி ஆறு பெரும்பொழுது, ஆறு சிறுபொழுது என உரைத்துள்ளது (நூற்பா - 45). வீரசோழியமும் இவற்றைப் பின்பற்றியுள்ளது (நூற்பாக்கள் -90,91). அவிநயம், களவியற்காரிகை ஆகியவற்றில் பொழுது குறித்த செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.      தொல்காப்பியத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட இலக்கண நூல்கள் நிலச் சூழல்களுக்கு (கருப்பொருள், உரிப்பொருள்) அதிக முக்கியத்தும் காட்டவில்லை. கூற்றுச் செயல்பாடுகளுக்கே விரிவான நூற்பாக்கள் வகுத்துள்ளன.

நம்பியகப்பொருள்     

      நம்பியகப்பொருள் பெரும்பொழுதினை ‘இருமூன்று திறத்தது’ என்று ஆறாகப் பாகுபடுத்தி உள்ளது ( நூற்பா-11). ஆனால் சிறுபொழுதாக ஐந்திணை மட்டுமே (நூற்பா -12) உரைத்துள்ளது, இது பொருள்நிலையில் ஏற்பட்ட வளர்சிதை மாற்றமாகும். இதனை,

“மாலை யாமம் வைகறை எற்பாடு

 காலை வெங்கதிர் காயுநண் பகலெனக்

 கைவகைச் சிறுபொழு தைவகைத் தாகும்”      ( நூற்பா -12)

என்ற நூற்பா வழி அறியலாம்.

விடியல் என்பதை நம்பியகப்பொருள் ஒரு பொழுதாகக் கருதவில்லை. வைகறைக்கும் விடியலுக்கும் உள்ள நுண்ணிய வேறுபாடு நாற்கவிராசநம்பியின் கருத்துக்கும் பொருத்தமாகத் தோன்றியிராதலால் அவர் விடியலை நாளின் கூறு எனக் கருதாமல் தவிர்த்திருக்கலாம்.  அகப்பொருள் மரபினை விளக்க எழுந்த நூல்களுள் இந்நூல் மட்டுமே, சிறுபொழுதுகளை ஐவகையாக உரைத்துள்ளது. மற்ற அக இலக்கண நூல்கள் அறுவகைப்படுத்தியுள்ளன.

முடிவுரை

  1. அகப்பொருள் இலக்கண நூல்கள் அன்பின் ஐந்திணைக்கான முதல், கரு, உரி எனும் முப்பொருள்களை எடுத்துரைத்துள்ளன. முதற்பொருள்களுள் முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருள் சிறக்கக் காரணமாக அமைகின்றன.  இச்சிறப்பான முதற்பொருளுள் என்பது நிலமும் பொழுதுமாகும்.
  2. அகப்பொருள் இலக்கண நூல்களில் தமிழின் முதல் இலக்கணநூலான தொல்காப்பியம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய திணைகளுக்குரிய நிலத்தை மடடுமே சுட்டியுள்ளது.  பாலைக்குரிய நிலத்தைச் சுட்டவில்லை. தொல்காப்பியத்திற்குப் பிறகான தமிழ் அகப்பொருள் சார்ந்த இலக்கணநூல்களில் பாலைக்குரிய நிலத்தை முதன்முதலில் சுட்டியிருப்பது தமிழ்நெறிவிளக்கமே ஆகும்.அவிநயம், களவியற்காரிகை ஆகியவற்றில் பாலைநிலம் குறித்த செய்திகள் இடம்பெறவில்லை.
  3. தொல்காப்பியர் நான்கு வகையான நிலப்பாகுபாடுகளையே உரைத்துள்ளார். ஆனால்; எண்ணிக்கையில் பத்துவகை நிலம் எனக் கருதுமாறு உரையாசிரியர்கள் உரைவகுத்துள்;ளனர். இதனைப் பின்பற்றி நம்பியகப்பொருள் நிலங்களைப் பத்துவகை எனப் பாகுபடுத்தியுள்ளது.
  4. தொல்காப்பியத்திலிருந்து மாறுபட்டு நம்பியகப்பொருள் பெரும்பொழுதினை ‘இருமூன்று திறத்தது’ என்று ஆறாகப் பாகுபடுத்தி உள்ளது ஆனால் சிறுபொழுதாக ஐந்திணை மட்டுமே உரைத்துள்ளது, விடியல் என்பதை நம்பியகப்பொருள் ஒரு பொழுதாகக் கருதவில்லை. வைகறைக்கும் விடியலுக்கும் உள்ள நுண்ணிய வேறுபாடு நாற்கவிராசநம்பியின் கருத்துக்கும் பொருத்தமாகத் தோன்றியிராதலால் அவர் விடியலை நாளின் கூறு எனக் கருதாமல் தவிர்த்திருக்கலாம்.  அகப்பொருள் மரபினை விளக்க எழுந்த நூல்களுள் இந்நூல் மட்டுமே, சிறுபொழுதுகளை ஐவகையாக உரைத்துள்ளது. மற்ற அக இலக்கண நூல்கள் அறுவகைப்படுத்தியுள்ளன.

துணை நூற்பட்டியல்

1..  அறவாணன். க.ப (ப.ஆ) : அவிநயம், ஜைன இளைஞர் மன்றம்,   சென்னை - ஏப்ரல்-1975.

2.. இராமானுச ஐயங்கார் (உ.ஆ): மாறனகப்பொருள் , செந்தமிழ்ப் பிரசுரம் ,  மதுரைத் தமிழ்ச் சங்கம்,  மதுரை - 1932

3. இளங்குமரன். இரா (ப.ஆ): களவியற் காரிகை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை.  1973.

4. இளம்பூரணர்(உ.ஆ): தொல்காப்பியம் – பொருள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை. மறுபதிப்பு - 2001.

5..கோபாலயர். தி.வே (ப.ஆ) : இலக்கணவிளக்கம்,  தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, தஞ்சாவூர்- 1992.

 6. கோவிந்தராச முதலியார் .கா ர (உ.ஆ)     : அகப்பொருள் விளக்கம்  , திருநெல்வேலி தென்னிந்திய சைவ    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை -  2003

7. கோவிந்தராச முதலியார் .கா.ர (உ.ஆ)    வீரசோழியம் ,  திருநெல்வேலி தென்னிந்திய சைவ      சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,   சென்னை -1970.

 8.  சண்முகம் .செ.வை (ப.ஆ): சுவாமிநாதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்- 1975.

9.. சாமிநாததையர் .உ.வே  (ப.ஆ)  : தமிழ்நெறி விளக்கம், டாக்டர்உ.வே.சாமிநாதையர்நூல்நிலைய வெளியீடு, சென்னை. மூன்றாம் பதிப்பு – 1994.

10.  சுந்தரமூர;த்தி .கு (ப.ஆ): முத்துவீரியம், கழக வெளியீடு, சென்னை - 1972.

11.. நக்கீரனார்(உ.ஆ)   : இறையனார் களவியல், திருநெல்வேலி தென்னிந்திய ,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை - 1976.

12. நாகராசன் .ப.வெ (ப.ஆ): அறுவகை இலக்கணம், தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர் - 1991.

13. வீரமாமுனிவர்: தொன்னூல் விளக்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. இரண்டாம் பதிப்பு -1891.

14. இளங்குமரன். இரா: இலக்கண வரலாறு, மணிவாசகர்பதிப்பகம், சென்னை - 1988.

15. தமிழ்நாட்டு வரலாற்று      : தமிழ்நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர்காலம், ஆசிரியர்குழு, (இரண்டாம் பகுதி) (கி.பி 900 -     1300) தமிழ் வளர்சித்துறை வெளியீடு

1998.

16. V.R.R. Diskshithar  Studies in Tamil Literature and History,  University of Madras,    Chennai – 1936.