ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கல்லாடம் காட்டும் தலைவன் பிரிவு (Hero Seperation in Kalladam)

பிரியங்கா. தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு - 678104, கேரளா, இந்தியா 27 Jul 2023 Read Full PDF

கல்லாடம் காட்டும் தலைவன் பிரிவு (Hero Seperation in Kalladam)

பிரியங்கா. தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு - 678104, கேரளா, இந்தியா. 

Priyanka.T., Research Scholar, Department of Tamil and Research Centre, Govt. College Chittur, Palakkad - 678104, Kerala, India.

நெறியாளர்: முனைவர் ப. முருகன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு - 678104, கேரளா, இந்தியா.

Dr. P. Murugan, Associate Professor, Department of Tamil and Research Centre, Govt. College Chittur, Palakkad - 678104, Kerala, India.

Abstract

In the history of Tamil literature, we can see the continuation of the Akapporul tradition as formalized by grammarian Tolkappiyar. Generally, Akapporul tradition is considered a way of emotionally expressing the nobility of human relationships. The growth of love in the minds of both men and women can be called Akapporul development. Akam is the state where both souls are united and happy. This pleasure is known to United souls. But invisible to outsiders. In such a blissful akam life, the hero has to separated from the heroine due to many reasons ranging from kalavu to karupu. Akam literatures are reveals the possible seperations between hero and heroine. Separation is painful for both. But since it is said in akam literature that the parting hero consoles the heroine and leaves, it seems that the woman regrets and the man leaves after making peace. seperation has been adopted by poets as an important theme in the subsequent development of Tamil poetry from agam to bhakti. In Bhakti literature, the influence of akapporul is greater and more emphatic than in other genres that emerged in Tamil. Therefore, the purpose of this article is to examine how kalladar has interpreted the seperations of the hero in Saiva literature kalladam.

Key Words: Kalladam, Akapporul tradition, Hero, Heroine, Kalavu, Karpu, Bhakti literature.

ஆய்வுச்சுருக்கம்:

தமிழ் இலக்கிய வரலாற்றில் தொல்காப்பியரின் அகப்பொருள் மரபுத் தொடர்ச்சி தொடர்ந்து இழையோடுவதைக் காண முடிகிறது. பொதுவாக அகப்பொருள் மரபு என்பது மனித உறவுகளின் உன்னதத்தை உணர்வுமபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே கருதப்படுகிறது. ஆண், பெண் என்னும் இருப்பாலரது மனதிலும் அன்பு என்கிற உயிர் பண்பு வளர்ந்து நிற்றலை அகப்பொருள் வளர்ச்சி எனலாம். இருவர் உள்ளமும் ஒன்றுபட்ட நிலையில் உள்ளங்கலந்து மகிழ்வறும் நிலையே அகமாகும். இவ்வின்பம் கலப்புற்ற உள்ளங்களுக்குப் புலப்படுமேயன்றி புறத்தாருக்குப் புலப்படாததாகும். இத்தகைய இன்பம் மிகுந்த அகவாழ்வில் களவொழுக்கம் முதல் கற்பொழுக்கம் வரை பல்வேறு காரணங்களை முன்னிட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். ஒத்த அன்புடைய தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழுக்கூடிய பிரிவை அகமரபுக் கூறாக அகஇலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. பிரிவு என்பது இருவருக்குமே துன்பத்தினைத் தரக்கூடியதே. ஆனால் பிரியும் தலைவன் தலைவியை ஆற்றுப்படுத்திப் பிரிகிறான் என அகநூற்களில் கூற்று கட்டமைக்கப்பட்டிருப்பதன்வழி பெண் வருந்தவும் ஆண் அவளைச் சமாதானம் செய்து பிரிகிறான் என்றும் தெரிகிறது.  அக இலக்கியங்களிலிருந்து பக்தி இலக்கியங்கள் வரையிலான தமிழ்க்கவிதை வளர்ச்சியில் பிரிவு என்னும் அகமரபு முக்கியக் கருப்பொருளாகப் புலவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழில் தோன்றிய பிற இலக்கிய வகைகளைக் காட்டிலும் பக்தி இலக்கியங்களில் தான் அகப்பொருளின் தாக்கம் அதிகமாகவும் அழுத்தமாகவும் காணப்படுகிறது எனலாம். அவ்வகையில் சைவப் பனுவலான கல்லாடத்தில்  தலைமகன் மேற்கொண்ட பிரிவுகளைக் கல்லாடர்  எங்ஙனம் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாக அமைகிறது.

கலைச்சொற்கள்: கல்லாடம், அகப்பொருள் மரபு, தலைவன், தலைவி, களவு, கற்பு, பக்தி இலக்கியம்.

முன்னுரை

பழந்தமிழர்களின் அகவாழ்வினை அகத்திணைச் செய்திகளாகத் தமிழ்ச் சான்றோர்கள் தெள்ளிதின் பதிவு செய்துள்ளனர். தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் இலக்கணத் தரவாகிய தொல்காப்பியத்தில் அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனவும் திணை, கைகோள், களவிற்கும் கற்பிற்கும் உரியோர், கூற்று, பிரிவு எனவும் பெறப்படுகிறது. காப்பியரால் எடுத்துரைக்கப்பட்ட இத்தகு அகத்திணைச் செய்திகள் தான் அகமரபுகளாக இலக்கிய மாற்றம் பெற்றுப் புதுப்பொலிவுடன் இன்றுவரை வளர்ந்து வந்துள்ளது. இவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க அகமரபுக் கூறாக விளங்குவது தலைவன் தலைவியரிடையே நிகழக்கூடிய 'பிரிவு' ஆகும். களவு மற்றும் கற்பு வாழ்க்கையில் பல்வேறு காரணங்களால் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதாக அகப்பொருள் நூல்கள் காட்டுகின்றன. அவ்வரிசையில், ஐந்திலக்கணக்கங்களையும் முதலாவதாக எடுத்தியம்பிய தொல்காப்பியத்தில் தலைமக்களின் பிரிவு வாழ்க்கையானது அங்கை நெல்லியெனச் சுருங்கி குறைந்த நூற்பாக்களில் காணப்படுகிறது. ஆனால் பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய சைவப் பனுவலான கல்லாடத்தில் முப்பத்தி எட்டு செய்யுட்களின் வழி, பல்வேறு வகையான பிரிவுகளும் அவற்றால் நேரும் பிரிவு துயரும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

களவு வாழ்க்கைக்குரிய பிரிவுகள்

களவொழுக்கத்தின் கண் தலைவன் மற்றும் தலைவிக்கு இடையே அன்பினால் காதல் பெருகும் போது இருவரும் பகற்குறி, இரவுக்குறி ஆகிய குறியிடங்களில் சந்திப்பர். இதன் காரணமாக, பகல் மற்றும் இரவு வேளைகளிலே இருவரும் பிறர் அறியாதவாறு ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்கின்ற நிலை உருவாகும். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடித்துக் காணப்படுவதில்லை. மாறாக அவர்கள் இருவரையும் மிகவும் வருத்துகின்ற 'பிரிவு' என்கிற நிகழ்வு தொடங்கி விடுகிறது. களவு வாழ்க்கையில் பிரிவு என்பது காதலர் இடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வள்ளுவர்,

“இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார் பிரிவு"       (குறள்: 1158)

எனச் சுட்டியுள்ளார். அதாவது, உறவற்றவர் ஊரில் வாழ்தல் துன்பம்; காதலரைப் பிரிதல் அதைவிட துன்பம் என்று குறள் பொருள் உணர்த்துகின்றது. இங்ஙனம் தலைமக்களுக்குப் பெரும் துன்பத்தைத் தரக்கூடிய களவின் கண் நிகழும் பிரிவுானது, 'ஒருவழிதணத்தல்' மற்றும் 'வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்' என்று இரு தன்மையில் காணப்படுகிறது. இச்செய்தியை,

“ஒரு வழித்தணத்தல் வரைவிடைவைத்துப்

பொருள்வயின் பிரிதல் என்று இருவகைத்தாகும்

நிறைத்தரு காதல் மறையினிற் பிரிவே"    (நம்பி.அக.நூ.39)

எனும் நம்பியகப் பொருள் நூற்பா முதன் முதலில் வகைப்படுத்திக் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து, அகப்பொருள் மரபை அடியொற்றி எழுந்த கல்லாடத்தில் இவ்விருவகைப் பிரிவுகளும் 'சொல்லாது ஏகல்', 'ஆற்றாமை கூறல்', 'நின் குறை நீயே சென்று உரை என்றல்', 'ஆதரம் கூறல்' போன்ற வெவ்வேறு துறைகளின் வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒருவழித்தணத்தல்

தன் கடமை காரணமாக ஒரே ஊரிலும் ஒரே நாட்டுக்குள்ளும் சில காலம் தலைவன் தலைவியை பிரிந்து இருப்பது 'ஒருவழித்தணத்தல்' எனப்படும். கல்லாடரும் 'சொல்லாது ஏகல்' என்னும் துறையில் அமைந்த செய்யுட் பகுதி வாயிலாக, இப்பிரிவை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். தலைவன் 'ஒருவழித்தணத்தல்' மேற்கொள்ள எண்ணிய பொழுது தோழியை நோக்கி, "யான் எவ்வாறு எடுத்துக் கூறினாலும் தலைவி பிரிவுக்கு உடன்படாள். ஆதலால் நான் இப்பொழுது பிரிந்து சென்று விரைவில் வரைந்து கொள்ள வருவேன் அதுவரை நீ அவளை ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக,” (கல்.பா.45) எனக் கூறித் தலைமகளுக்குச் சொல்லாது பிரிந்து செல்கிறான். இதனை,

“இலது எனின், உளது என்று, உள்ளமொடு விதித்தும்

சொல்லா நிலை பெறும், சூளுறின், மயங்கிச்

செய் குறிக் குணனும் சிந்தையில் திரிவும்,

உழை நின்று அறிந்து, பழங்கண் கவர்ந்தும்

கண் எதிர் வைகி, முகன் கொளின் கலங்கியும்

வழங்குறு கிளவியின், 'திசை' என மாழ்கியும்,

ஒரு திசை நோக்கினும், இருக்கினும், உடைந்தும்,"                                                   (கல்.பா. 45:1-7)

என்னும் அடிகளால் உய்த்துணர முடிகின்றது. சில நேரங்களில் இவ்வாறு பிரிந்து செல்லும் தலைவன், தலைவி கேட்குமாறு மறைமுகமாகவும் தோழியிடம் பிரிவுணர்த்துவான். இதனை முன்னிலைப் புறமொழி எனலாம். இதற்குச் சான்றாக கல்லாடத்தில் ‘தேறாது புலம்பல்’ (கல்.பா.73) என்கிற துறை காணப்படுகிறது.

வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்

திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த தலைவன் அதற்கு வேண்டும் பொருள் ஈட்டுதல் காரணமாத் தலைவியைப் பிரிந்து செல்லுதல் உண்டு. இத்தகைய பிரிவு வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் எனப்படும். கல்லாடத்தில் 'ஆற்றாமை கூறல்' என்னும் துறையில் அமைந்த செய்யுட் பகுதியில் இப்பிரிவானது விளக்கப்பட்டுள்ளது.

தலைவன் சுரத்தின் வழியே சென்று பொருள் தேட நினைக்கின்றான் என்று தோழி சொன்ன அளவில், தலைவி மிக வருந்தினாள். ஆதலால் தோழி தலைவனைப் பார்த்து, தலைவியின் ஆற்றாமையை எடுத்துக் கூறி, "இனி நீ தேடும் பொருள் என்ன பயனைத் தரப்போகிறது?" என்று கூற்று நிகழ்த்துகிறாள்.  இக்கருத்தானது,

“இளமையும், இன்பமும், வளனும், காட்சியும்,

பின்புற, நேடின், முன்பவை அன்றால்,"    (கல்.பா.21:42-43)

என வரும் பாடலடிகளால் வெளிப்படுகின்றது.

பெரும்பாலும் களவு காலத்தில் நிகழும் பிரிவைத் தலைவன் தோழியின் வாயிலாகவே தலைவிக்கு உணர்த்த முற்படுகின்றான். இதற்கு மேலும் ஒரு சான்றாக, ‘நின் குறை நீயே சென்று உரை என்றல்' (கல்.பா.26) என்னும் துறையிலுள்ள செய்யுளையும் குறிப்பிடலாம்.

 செலவழுங்குவித்தல்

பிரிந்து செல்லும் தலைவனைப் பிரியவிடாமல் அவன் செலவினைத் தோழி தடுப்பது 'செலவழுங்குவித்தல்' எனப்படும். தலைவன் பொருள் தேடச் செல்வது தோழிக்கு வருத்தம் தருவதன்று. மாறாக, தலைவியை விடுத்து தனித்துச் செல்வதே அவள் செலவழுங்குவிக்கக் காரணமாக அமைகிறது. வரைவின் நோக்கிற்காகத் தலைவன் பிரிய எண்ணியதைத் தோழி உணரும் போது, தலைவியையும் உடன் அழைத்துச் செல்லுமாறு தலைவனிடம் வேண்டி நிற்பாள். ஆனால் சுரத்தின் கொடுமை கூறி தலைவன் அதற்கு உடன்படான். பாலை நிலத்து வெப்பம் தரும் துன்பத்தைவிட தலைவிக்கு தலைவனபை் பிரிந்து இருத்தலே பெரும் துன்பம் என்பதனை,

“போம் வழி என்னும் கடுஞ் சுரம் மருதம்

மாமை ஊரும் மணி நிறத்து இவட்கே"    (கல்.பா.61:35-36)

என வரும் அடிகளில் கல்லாடர் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகளில் தலைவன் பிரியக் கருத்தியபொழுது தோழி அவனிடம், "நீ தலைவியை உடன் கொண்டு செல்வாயானால், நீ கடந்து செல்லுகின்ற தீ போன்ற வெண்மை மிகுந்த வழியும், குளிர்ச்சி பொருந்திய மருத நிலத்தைப் போன்று விளங்கும்", என்று கூறி செலவழுங்குவிப்பதாகப் பொருள் அமைந்துள்ளது.

“வரைவிடை வைத்துப் பிரியும் தலைவன் திரும்பும் பருவத்தைச் சொல்லாது பிரிதல் மரபாக உள்ளது"                         (அகத்திணை மாந்தர் - ஓர் ஆய்வு, ப.122)

என இராமகிருஷ்ணன் கூறுவதுண்டு. அங்ஙனம் தலைவன் பருவம் குறியாது பிரிந்து செல்லும் நேரங்களில், தலைவிக்கு நேரும் பிரிவு துயரைப் போக்குபவளாகவும் அகப்பொருள் மரபில் தோழி சித்திரிக்கப்படுகிறாள்.

கற்பு வாழ்க்கைக்குரிய பிரிவுகள்:-

தலைமகன் தலைவியை மணந்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் போது அவளை விட்டுப் பிரியும் சூழல்கள் ஏற்படும். கற்பு வாழ்க்கையில் நிகழும் பிரிவுகளை அகப்பொருள் நூல்கள் ஆறு வகையாகப் பாகுபடுத்துகின்றன. தொல்காப்பியர்,

“ஓதல் பகையே தூதுஇவை பிரிவே"      (தொல்.அக.நூ.973)

என்று அகத்திணையியலில் பிரிவுகளை மூன்றாகக்    குறிப்பிட்டுள்ளார். பின்னர் பொருள்வயிற் பிரிவு, காவற் பிரிவு, பரத்தையர் பிரிவு ஆகியவற்றையும் களவியல் மற்றும் கற்பியலில் கூறியுள்ளார்.

ஓதற் பிரிவு:-

தலைவன் கல்வி கற்பதற்காகத் தலைவியை பிரிந்து செல்லும் பிரிவு 'ஓதற்பிரிவு' எனப்படும். இப்பிரிவை,

1) கல்வி நலம் கூறல்

2) கலக்கங்கண்டு உரைத்தல்

3) தேறாது புலம்பல்

என்று மூன்று துறைகளில் கல்லாடச் செய்யுட்கள் விளக்குகின்றன.

'கல்வி நலம் கூறுதல்' என்பது, தலைவியைத் தலைவன் திருமணம் செய்து கொண்ட பின்னர் ஓதற் காரணமாகப் பிரிய எண்ணுகிறான். அப்பொழுது தலைமகளுக்குத் தன் பிரிவை உணர்த்தும் நோக்கில் தோழியிடத்து, "மேரு, திருப்பாற்கடல், ஐந்துதரு, நான்முகன், திருமால், சிவபெருமான், கண்கள், அருள் ஆகியவற்றை ஒத்த புண்ணிய கல்வியினை பெறுவதற்கு நான் சிறிது காலம் தலைவியை விட்டுப் பிரிகிறேன். ஆதலால் நீ அவளை ஆற்றுவிப்பாயாக" (கல்.பா.12:1-24), என்று கல்வியின் நலனைக் கூறிப் பிரிந்து செல்கிறான்.

'கலக்கங்கண்டு உரைத்தல்' என்பது, தலைவன் ஓதல் காரணமாகப் பிரிவதாகக் கூறியதை தோழி தலைவியிடத்தில் தெரியப்படுத்திய போது, தலைவி மிகுந்த துன்பம் கொண்டாள். தலைவியின் இத்தகைய வருத்தத்தைக் கண்ட தோழி, "இனி தலைவனது பிரிவை இவள் எவ்வாறு ஆற்றுவாள்" எனத் தன்னுள்ளே வருந்திக் கூறுவதாகச் செய்யுள் அமைக்கப்பட்டுள்ளது. இச்செய்தி,

“கோறல் என்று அயலினர் குறித்தன குற்றமும்,

நன்று அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு

அவ் அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும்

ஒரு கணம் கூடி, ஒருங்கே

இரு செவி புக்கது ஒத்தன, இவட்கே"          (கல்.பா.78)

என்னும் அடிகளில் வெளிப்படுகின்றது.

கலக்கங்கண்டு உரைத்த தோழிக்கு முன்பு, “அவரின் அவ் வார்த்தைகளால் என் நெஞ்சமும், நிறையும் என் வசமில்லை. மேலும் என் உயிரும் அவர் சொல்லை ஏற்று துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளாது உள்ளது. எனவே இதற்கு காரணம் யாது?" என்று தோழி தேற்றுவதற்குத் தான் தேறாதிருத்தலைத் தலைவி கூறினாள். இதை,

“நனவிடை நவிற்றிக் கனவிடைக் கண்ட

உள் எழு கலக்கத்துடன் மயங்கினமால்,

குறித்த இவ் இடைநிலை ஒன்றே

மறிக் குலத்து உழையின் வழி நோக்கினளே" (கல்.பா.73:19-21)

என வரும் செய்யுட் பகுதியில் காணலாம். இங்கு, தலைவன் பிரிந்துள்ள சூழலில் தலைவி தோழியுடன் தம் நிலைமையைக் கூறுவதாகப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

“பிரிவு என்பது தலைவன் தலைவி இருவருக்குமே துன்பத்தினைத் தரக்கூடியதே. ஆனால் பிரியும் தலைவன் தலைவியை ஆற்றுப்படுத்திப் பிரிகிறான் என்று கூற்றுக் கட்டமைக்கப்பட்டிருப்பதன் வழி பெண் வருந்தவும் அவளைச் சமாதானம் செய்து தலைவன் பிரிகிறான் என்று கூறப்படுவதும் தெரிகிறது"                                     

(தொல்காப்பியத்தில் கூற்றுக்கோட்பாடு, ப.77)

என்ற இரா. ஈஸ்வரியின் கருத்து இங்கு சிந்திக்கத்தக்கது.

பகைவயிற் பிரிவு:-

தன் அரசனுக்குப் பகைவர்களால் இடையூறு நேர்ந்த வழி அதனைப் போக்குவதற்குத் துணை புரியும் நோக்குடன் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு 'பகைவயிற் பிரிவு' எனப்படும். இப்பிரிவின் கண் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று மீண்டு வருவதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும். இதனை,

"வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே"                                                     

(தொல். கற்.நூ.1133)

எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. கல்லாடத்தில், 'பிரிந்தமை கூறல்', 'பருவம் குறித்துல்', 'மறவாமை கூறல்' மற்றும் ‘தேர் வரவு கூறல்', என்னும் துறைகளில் இப்பிரிவிற்கான செய்யுள் இடம்பெறுகிறது.

பிரிந்தமை கூறல்:-

தலைவன் வெய்ய போரை உடைய போர்க்களத்திற்குப் போர்புரியும் நோக்குடன் பிரிந்தான் என்பதைத் தோழி தலைமகளுக்கு உணர்த்துவதாகப் ‘பிரிந்தமை கூறல்' என்னும் துறை கல்லாடத்தில் இடம்பெறுகிறது. இதனை,

“...இன்று

இரு கடல் ஓர் ஊழி மருவியது என்னச்

செருப் படை வேந்தர் முனைமேல் படர்ந்த நம்

காதலர் முனைப் படை கனன்று உடற்று எரியால்,"                                                       (கல்.பா.77:3-6)

“பெரு மதில் பெற்றன அன்றோ

மருவலர் அடைத்த, முன, மறம் கெழு மதிலே"         (கல்.பா.77:28-29)

என்னும் அடிகளால் அறியலாம்.  தலைவன் போர்முனையில் சென்ற பொழுது அவன் ஆயுதத்திலிருந்து வெளிப்பட்ட நெருப்பினால், பகைவரின் அறன்களாகிய கோட்டைகள் அழிக்கப்பெற்றன என்பதை மேற்காணும் தோழியின் கூற்று வாயிலாகத் தலைவி உய்துணருகிறாள்.

பருவம் குறித்தல்:-

பிரிந்து சென்ற தலைவன் தான் திரும்பி வருவதற்குக் குறித்துப் போகிய கார்காலப் பருவம் வந்தது விட்டது என்று எண்ணித் தலைவி வருந்துகிறாள். அவ்வாறு வருந்துகின்றவளுக்கு இது கார்காலம் அல்ல என்று தோழி பருவம் காட்டி வற்புறுத்தி ஆற்றுவிக்கிறாள். இச்செய்தி அகப்பொருள் மரபில் பருவம் குறித்தல் என அழைக்கப்படுகிறது. கல்லாடத்தில்,

“இரு புறம் போற்ற ஒரு தேர் வரத்தினர்க்கு

ஒன்னலர் முற்றி ஒருங்குப படர,

பாசறை சென்ற நாள் நிலம் குழிய

எண்ணி விரல் தேய்ந்த செங் கரம் கூப்புக"                                                             (கல்.பா.98:35-38)

என வரும் பாடலடிகள் பருவம் குறித்தல் என்னும் பொருண்மையில் அமைக்கப்பட்டு, தலைவன் போர்த் தொழில் மேற்கொண்டதையும் பாசறைக்கண் தங்கியிருந்ததையும் வெளிப்படுத்துகின்றது.

பாசறைப் புலம்பல்:-

போர்த் தொழிலைக் காரணமாக கொண்டு பிரிந்து சென்ற தலைமகன் தனது வினையை முடித்து திரும்பி வருவதற்குக் காலமானது நீட்டிக்கப்பட்ட நிலையில் பாசறையில் இருந்து தலைவியை நினைத்தப் புலம்புவான். இதைத் தலைவன் கூற்று வாயிலாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். (பாசறை புலம்பல்- தொல்.அக.நூ.990:19). தொல்காப்பியரின் இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் 'மறவாமை கூறல்' என்னும் துறை ஒன்று கல்லாடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வரவு கூறல்:-

வேந்தற்குற்றுழி பிரிந்து சென்ற தலைவன் அரசருக்குப் படைத்துணை செய்து போர் முடிந்ததும் திரும்பி வந்தான்.  அவ்வாறு வருகின்ற தலைவனின் வரவை, 'தேர்வரவு கூறல்' என்னும் துறையில் கல்லாடர் உணர்த்துவர்.

“வரிவளை முன்கை வரவர இறப்பப்

போன நம் தனி நமர், புள் இயல் மான் தேர்,

கடு விசை துரந்த கான் யாற்று ஒலியின்,

எள்ளினர் உட்க, வள் இனம் மடக்கி, முன்

தோன்றினர், ஆகலின், நீயே, மடமகள்"    (கல்.பா.15:21-25)

எனத் தோழி தலைமகளுக்கு எடுத்துரைக்கின்றாள்.  இப்பகுதியில் தோழியின் கூற்றாக வரக்கூடிய, "குதிரை பூட்டிய நமது தேரின்கண், பகைவர் அஞ்சும்படி தன் மன்னர் அளித்த திரண்டத் திறைப் பொருளையும் கொண்டு, தலைவன் இதோ வந்து தோன்றினார்", என்ற கருத்து தலைவனது வரவையும், தலைவன் வேந்தற்குற்றுழி பிரிந்ததையும் தெள்ளிதின் புலப்படுத்துகின்றது.

இ்வ்வாறு வினைமுடிந்து திரும்பி வந்த தலைவன் படுக்கை அறையில் தலைவியோடு இருந்தான். அப்பொழுது தோழி அவனிடத்தில், “நீர் சென்ற வினை இடத்தில் எங்களை மறந்திறோ" என்று கேட்க, அதற்கு தலைவன் "நான் பாசறை கண் இருந்த இடத்தும் துயின்ற இடத்தும் இவள் என்னுடைய நெஞ்சை விட்டு நீங்கவில்லை" என்று கூறினான் (கல்.பா.80). ஆகையால், தலைவியபை் போர்த்தொழில் செய்வதாகிய தொழிலிடத்தும் தலைவன் மறக்கவில்லை என்பதை இப்பாடல் மூலம் உய்த்துணர முடிகின்றது.

மேற்குறிப்பிட்ட செய்யுட்களை ஒப்பிட்டு நோக்கும் போது பகைவயிற்பிரிவில் தலைவன், தலைவி மற்றும் தோழி ஆகிய மூவருக்குமிடையே கூற்று நிகழ்வதைக் காணமுடிகிறது. இது கல்லாடரின் அகமரபு சார்த்த புலமையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

காவற் பிரிவு:-

நாட்டைப் பாதுகாப்பதற்காக தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது 'காவற் பிரிவு' எனப்படும். இப்பிரிவில் 'காவற் பிரிவு அறிவுறுத்தல்', 'முகிலொடு கூறல்' என்னும் துறைகளில் கல்லாடச் செய்யுள்கள் உள்ளன. சுடர் பொருந்திய வேலையுடைய தலைவன் பூமியை பாதுகாப்பதற்காகப் பிரிகின்றான் என்பதைத் தோழி தலைவியிடம்,

“தரித்தும், அணைத்தும், தான் எனக் கண்டும்,

செய்ததும் அன்றி, திருமனம் பணைத்துக்

காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்"         (கல்.பா.54:7-9)

என்று தெரியப்படுத்துகின்றாள்.

பிரிந்து சென்ற தலைமகன் மேகத்தைப் பார்த்து, "பிரிந்த தான் வருவதற்காக தன் இல்லிலிருந்து தெய்வத்தைப் பரவிக் கொண்டிருக்கும் தலைவிக்கு மேகங்கள் தன் தேருக்கு முன்னே சென்று, தன் வரவைக் கூறாதோ?" (கல்.பா.49) என்று முகிலொடு உரையாடுகிறான். இதனை, 'முகிலொடு கூறல்' என்னும் துறையில் கல்லாடர் பதிவு செய்துள்ளார்.

பொருற்வயிற் பிரிவு:-

தலைவன் தன் இல்லற வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளை ஈட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு 'பொருள் வயிற் பிரிவு' எனப்படும். கல்லாடத்தில் இப்பிரிவானது, 'உள் மகிழ்ந்து உரைத்தது' என்னும் துறையின் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. பிரிந்து சென்ற தலைவன் பெரும் பொருளோடு திரும்பி தன்னில்லம் புகுந்து தலைவியோடு மகிழ்ந்து உரைத்தான். இதனை,

“போயின துணைவினை நோக்கி

ஏகின் எனக்கே அற்புதம் தருமே"        (கல்.பா.55:20-21)

என வரும் அடிகளால் உயிர்த்துணர முடிகின்றது.

“பொருள் வயிற் பிரிவிலிருந்து மீண்ட தலைவன் தான் சென்ற வினையின் சிறப்பை, வழியிடை நிகழ்ந்த சுவையான சம்பவங்களை தனிமையில் தலைவியை நினைத்து இன்புற்ற பங்கினையெல்லாம் தலைவியிடம் கூறுவான்"     (கூற்றுமரபு: தொல்காப்பியமும் ஐங்குறுநூறும்,19)

என முனைவர்.க.விஜயகாந்த் கூறுவது இங்கு ஏற்புடையதாக உள்ளது.

பரத்தையர் பிரிவு:-

தலைவன் பரத்தையிடம் விருப்பம் கொண்டு தலைவியைப் பிரிந்து பரத்தையர் வாழும் பகுதிக்குச் செல்லுதல் 'பரத்தையர் பிரிவு' எனப்படும்.

"கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே"                                                  (தொல். கற்.நூ.1108)

என்ற தொல்காப்பிய நூற்பா வழி தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தை உணர்ந்து கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் மேட்டுக்குடி மக்களிடத்தில் பரத்தமை ஒழுக்கம் பரவலாகக் காணப்பட்டாலும் தொல்காப்பியர் இவ்வொழுக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஆறுதலுக்குரியது. பரத்தமை என்பது சமுதாயக் கட்டமைப்புக்குரிய ஒழுக்கங்களைப் பேணாத போக்கினது என்பதால் அதனை,

"பேணா ஒழுக்கம்"        (தொல். கற்.நூ.1094:14)

எனவும், மனக்கட்டுப்பாட்டில் அடங்காத ஒழுக்கம் என்னும் போக்கில் அதனை,

"அடங்காத ஒழுக்கம்" (தொல். கற்.நூ.1094:6)

எனவும் கடிந்துரைக்கின்றார் காப்பியர். இவர் இங்ஙனம் கூறியிருப்பினும்

“பரத்தையர் பால் தலைவன் செல்வதைக் கூட சங்க இலக்கியம் பரத்தையர் ஒழுக்கம் என்பதாகவே பதிவு செய்கிறது"   (சங்க இலக்கியத்தில் சமூக ஆய்வுகள், ப.26)

என்ற க.அ.ஜோதிராணியின் கூற்றை ஆராயும்போது பின்னாட்களில் தமிழ்ச் சான்றார்களால் பரத்தமையொழுக்கம் ஏற்றக்கொள்ளப்பட்ட நிலையையும் காணமுடிகிறது. கல்லாடரும் இப்பிரிவு சார்ந்து அதிகமான துறைகளைக் இயற்றியுள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

தலைமகன் புலனாட்டு விழாவிற்குப் பரத்தையர் சேரிக்கண் சென்றதை, 'பரத்தையர் பிரிவு கண்டவர் கூறல்' என்னும் துறையில், கல்லாடர் குறிப்பிட்டுள்ளார்.

“முண்டகம் அலர்த்தும் முதிராச் சேவடி

தரித்த உள்ளத் தாமரை ஊரன்

பொன் துணர்த்தாமம் புரிந்து ஒளிர் மணித் தேர்,

வீதி வந்தது…                (கல்.பா.11:24-28)

என வரும் செய்யுட் பகுதி இக்கருத்ததை உணர்த்துகின்றது.

இங்ஙனம் தலைவன் பிற பரத்தையரோடு செய்த புதுப்புனலாட்டை அறிந்த தலைவி, அத் தலைவன் இல்லிற்கு வந்தபோது ஊடல் கொள்கிறாள்.  இது 'புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல்' என்கிற துறையில் காணப்படுகிறது.

“மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை

ஆட்டியும் அணைத்தும், கூட்டியும் குலவியும்,

ஏந்தியும் எடுத்தும், ஒழுக்கியும் ஈர்த்தும்..."  (கல்.பா.56:13-15)

 

“செய்தன எல்லாம் செய்யலர் போல"     (கல்.பா.56:23)

"பெரு நீர் ஊரர், நிறைநீர் விடுத்துச் செறிந்தது

ஏன் எனக் கேண்மின்"     (கல்.பா.56:36-36)

என வரும் அடிகளில், வைகை ஆற்றில் மற்றொரு (பரத்தை) பெண்ணுடன் தலைவன் நீராடிய நிகழ்ச்சி வருணனை செய்யப்பெற்று, "அச்செயல்களை எல்லாம் மறைத்து இப்பொழுது தலைவியை நெருங்கி வருவதற்குக் காரணம் என்ன?" என்று மிகுந்த வெறுப்புடன் தலைவி தோழியிடம் கூறித் தலைவனுக்கு வாயில் மறுப்பதாகப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

கற்பு வாழ்க்கையின் இத்தகு சூழல்களில் தான் தலைவனுக்குத் தலைவியின் ஊடலைத் தணிவிக்கும் வாயில்கள் தேவைப்படுகிறார்கள். கல்லாடத்தில் தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயிலாகப் பாணன் வருகிறான். அதைக் கண்ட தோழி, பாணனிடம், "தலைவி வருந்தும் வண்ணம் தலைவன் பரத்தையரிடத்தில் இன்பம் பெறுதலால் உம்முடைய தலைவன் தகவிலன்" எனத் தலைவனை இயற்பழித்துக் கூறுகின்றாள். இதனை, "தோழி இயற்பழித்து உரைத்தல்" எனும் துறை வாயிலாக,

“...பெருங் கழிப் பழனக்

கூடற்கு இறைவன் - இரு தாள் விடுத்த

பொய்யினர் செய்யும் புல்லன் போல,

பேரா வாய்மை ஊரன்,

தாரொடு மயங்கி, பெருமையும் இலனே"  (கல்.பா.38:20-24)

எனக் கல்லாடர் பதிவு செய்துள்ளார்.

இறுதியில், தலைவன் தன் மகனை துணையாகக் கொண்டு தலைவியின் ஊடலைத் தீர்க்க முற்படுகின்றான். இதை அறிந்ததும் தோழியே தலைவியின் வருத்தத்தைத் தணிக்கிறாள்.

“நின் உளத்து இன்னல் மன் அறக்களைந்து,

பொருத்தம் காண்டி - வண்டு ஆரும்

அருத்தி அம் கோதை மன்னவன் பாலே"   (கல்.பா.52:33-35)

என வரும் பாடலடிகள் இதை புலப்படுத்துகின்றது.

கல்லாடத்தில் மொத்தம் இருபது துறைகள் பரத்தையர் பிரிவில் மட்டுமாகக் காணப்படுகிறது.  இத்தரவு கல்லாடர் காலத்தில் பரத்தமை ஒழுக்கம் எந்த அளவுக்கு மேலோங்கி இருந்தது என்பதையும் இலக்கியங்களில் அவை பெறக்கூடிய இடத்தையும் தெளிவுபடுத்துகிறது.

முடிவுரை

தமிழ் பொருளிலக்கணம் குறிப்பாக தமிழ் அகப்பொருள் மரபு சங்ககால மக்களின் வாழ்வியலை உணர்த்துவதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது எனலாம். அவற்றுள் மிக முக்கிய கூறாக விளங்கும் தலைவன் தலைவியரிடையே நிகழக்கூடிய பிரிவானது அக்கால சமூகச் சூழலையும் அச்சமூகத்தில் ஆண்கள் பெற்றிருந்த சுதந்திரத்தையும் நன்கு பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது. தொல்காப்பியத்திற்கு பின் வந்த சைவப் பனுவலான கல்லாடத்தில் இப்பிரிவு மிகவும் விரிந்த நிலையில் விவரிக்கப்பட்டுள்ளது. களவு மற்றும் கற்பு வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளால் தலைவன் தலைவியை பிரிந்து செல்வதாகக் கல்லாடர் பதிவு செய்கிறார்.  களவெழுக்கத்தின் போது ஒரு வழித்தணத்தல் மற்றும் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல் என இரு பிரிவையும், கற்பொழுக்க காலத்தில் ஓதற் பிரிவு, பகைவயிற் பிரிவு, காவற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு மற்றும் பரத்தையர் பிரிவு என ஐந்து வகையான பிரிவுகளையும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தொல்காப்பியர் குறிப்பிட்ட தூதிற் பிரிவை பற்றி இவர் எங்குமே குறிப்பிடாததும் கவனத்தில் கொள்ளத்தக்கது. முன்னோர்களின் அகப்பொருள் மரபை பின்பற்றிய கல்லாடர் பிரிவு வாழ்க்கையின் போது தலைவன் தலைவிக்கு அடுத்த இடத்தை தோழிக்கு நல்கியுள்ளார். இந்தத் தோழியிடமே தலைவன் களவுக் காலத்திலும் கற்புக் காலத்திலும் பல்வேறு சூழல்களில் தனது பிரிவை உணர்த்திச் செல்கிறான். அவ்வாறு தலைவன் பிரிவுணர்த்தும் போது முன்னிலை மொழியாகவும் முன்னிலை புற மொழியாகவும் கூற்றுக்கள் நிகழ்த்துகின்றான். இந்தக் கூற்றுக்களே ஒத்த அன்புடைய தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் பிரிவுகளை தெள்ளிதின் வெளிகாட்டுகின்றது.

சான்றாதாரங்கள்

[1] இளம்பூரணர், தொல்காப்பியம்- பொருளதிகாரம் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, பதினாறாவது பதிப்பு - 2019.

[2] ஈஸ்வரி, இரா., தொல்காப்பியத்தில் கூற்றுக் கோட்பாடு, காவ்யா பதிப்பகம், முதற்பதிப்பு - 2008.

[3] ஜோதிராணி, க.அ., சங்க இலக்கியத்தில் சமூக ஆய்வுகள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், முதற்பதிப்பு - 2011.

[4] பரிமேலழகர், திருக்குறள் (மூலமும் உரையும்), நேஷ்னல் பப்ளிஷர்ஸ், முதற்பதிப்பு - 2019.

[5] முத்தப்பன், பழ., கல்லாடம் (மூலமும் உரையும்) உமா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - 2018.

[6] விஜயகாந்த், க., கூற்று மரபு: தொல்காப்பியமும் ஐங்குறுநூறும், முரண்களரி படைப்பகம், முதற்பதிப்பு - 2017.

References

[1] Ilampuranar, Tolkappiyam - Porulathikaram urai, Saradha pathippakam, Chennai, Sixteenth Edition - 2019.

[2] Easwari. R, Tholkappiyathil kootrukkotpadu, Kavya Pathippagam, First Edition - 2008.

[3] Jyothirani, K.A., Sanga Ilakkiyathil Samooga Aayvukal, NCBH, First Edition - 2011.

[4] Parimelazhakar, Thirukkural (Moolamum uraiyum), National Publishers, First Edition - 2019.

[5] Muthappan, Pazha., Kalladam (Moolamum Uraiyum) Uma Pathippagam, Chennai, First Edition - 2018.

[6] Vijayakanth, K., Kootru Marabu: Tholkappiyamum Aingurunoorum, Murankalari Pathippagam, First Edition - 2017.