ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க இலக்கியத்தில் மலைகள் (Hills in Sangha literature)

முனைவர் ம.பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனிதசிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 2 27 Jul 2023 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:   

மலைகள் நாட்டின் பாதுகாப்பு அரண்கள்.மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தையும் நல்கும் இயற்கையின் கொடை.அருவிகளும்,தேனடைகளும்,உழாமல் மலைகளில் தானே  விளைந்த பொருட்களையும்,மலைகளை ஆண்ட அரசர்களையும், அரசர்களின் சிறப்புகளையும்,புலவர்களை ஆதரித்த அரசர்களையும்,அரசர்களின் கொடைச் சிறப்பினையும்,மலைகள் மெல்ல அருகி வரும் சூழலில் தொன்மைச் சிறப்பு வாய்ந்த சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள மலைகளை மனக்கண் முன் நிறுத்தும் வகையில் ஆராய்வதே கட்டுரையின் கருதுகோளாக அமைகின்றது.

Abstract:          
The mountains are the defense bulwarks of the country. It is the gift of nature that gives everything necessary for the people's life. The hypothesis of the article is to examine the merits, the kings who supported the lands, the merits of the kings, and the mountains in the Sangha literature, which are special in ancient times, in a context where the mountains are slowly approaching.
Key words: Sangam literature, mountains, society, gift, poets, kings
திறவுச் சொற்கள்: சங்க இலக்கியம், மலைகள், சமூகம்,கொடை, புலவர்கள்,அரசர்கள்
முன்னுரை:

                  மலைகளும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர்ப் பெற்றன.மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன. மலைகளிலும் மலைகளின் மேலுள்ள மலைச் சாரல்களிலும் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.. குறிஞ்சி நிலத்தில் இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி,சிறுகுடி என்று பெயர். மலையும் மலைச் சார்ந்தப் பகுதியும் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்பட்டது.இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் இறவுளர்(இருளர்), குறவர்,கானவர் என்று அழைக்கப்பட்டனர். பொதிகைமலை, அயிரைமலை, முதிரமலை, பறம்புமலை, கொல்லிமலை, பாழிமலை, பாயல்மலை, தோன்றிமலை, வேங்கடமலை, முள்ளூர்மலை, கொண்கானம்மலை, இமயமலை, குடமலை, நவிரமலை, தோட்டிமலை என்று பல்வேறு மலைகள் உள்ளன. அம்மலைகள் பற்றியும்,அம்மலைகளின் வளங்கள் பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிடும் செய்திகளை ஆராயும் போக்கில் கட்டுரை அமைகின்றது.

  பறம்பு மலை:

                    பறம்பு என்ற சொல்லிற்கு மலை என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுகின்றது.  “ மலை அளிதோ தானே பாரியது பறம்பே”(புறம்-109)1என்ற தொடரும் இதற்குச் சான்றாக அமைகின்றது.பாரி அரசாட்சி செய்த மலை பறம்பு மலை. இம்மலையில் முந்நூறு ஊர்கள் உள்ளன. ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்”;(புறம் -114)2 என்று கபிலர் பாடிய பறம்புமலை 2450 அடி உயரமுடையது என்று ஆராய்ச்சி குறிப்பு ஒன்று செப்புகின்றது.அறை,பொறை முதலானவற்றைக் கொண்டது. சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் என்றும்,தற்காலத்தில் பிரான்மலை என்றும் அழைக்கப்படுகின்றது. இது கபிலரால் பாடப்பட்ட மலை. இவர் பாரி உள்ளவரை அவைக்களப் புலவராக இருக்கும் பேறு பெற்றவர்.பலமுறை முடியுடை வேந்தர் முற்றுகையிட்டாலும் வளம் குறையாத மலை பறம்புமலை. அம்மலையில் உள்ள கிளிகள் மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் விளைந்த நெற்கதிர்களைக் கொத்திக் கொண்டு வந்து களஞ்சியத்தில் சேர்த்ததால் உணவு பஞ்சம் இல்லாத மலையாகக் காட்சியளிக்கிறது.

பாரியின் பறம்பு மலையில் காலையில் இருந்து மாலை வரை பறவைக்கூட்டம் முதிர்ந்த கதிர்களைக் கொண்டு வருவதை ஒளவையாரும்,கபிலரும்

                                    “பாரிபறம்பின் ……

                                           நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி

                                      முடங்குபுறச் செந்நெல் தரீஇயர்”; (அகம்-303)3

                                     ------நெல்லின் விளைகதிர் கொண்டு(அகம்-78)4

என்று சுட்டிக்காட்டுகின்றனர்.பாரியின் மலையில் இனிய நீர் ஊறும் சுனைகள் மிகுந்திருப்பதை

                                     “பாரிபறம்பின்பனிச்சுனை”(புறம்-370)5

                                     “பாரிபறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்” (புறம்-176)6          

                                    “பாரிபறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்

                                       தைஇத் திங்கள் தண்ணிய தரினும்”(குறுந்தொகை-196)7

என்று கபிலர், புறத்திணை நன்னாகனார், மிளைக்கந்தன் ஆகிய புலவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

                                “குறத்தி மாட்டிய வறல்கடைக் கொள்ளி

                           சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு”(புறம்-108)8

                               உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே (புறம்-109)9

             என்ற  தொடர்களிலிருந்து பறம்பின்   வளங்களை அறிந்து கொள்ள இயலுகின்றது. புறம்பு மலையைத்  தலைமையிடமாகக்  கொண்ட நாடு பறம்பு நாடு.  இந்நாடு பறம்பு நாடு,பாரிநாடு,பறநாடு எனவும் வழங்கப்படுகின்றது.வேளிர்குலத் தலைவனாக விளங்கிய வேள்பாரி இந்நாட்டினை ஆண்டான். இந்நாடு பிற்காலத்தில் பாண்டிநாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.முல்லைக்குத் தேர்க் கொடுத்தப் பாரியை நினைவூட்டும் வகையில்  கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை  வழக்கில் இருப்பதாக முனைவர் கோ.ஜெயக்குமார் தன் ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

கொல்லிமலை:

            ஊரின் பெயரால் ஒருவரை பெயரிட்டு அழைப்பது போல மன்னனை நாட்டின்    பெயரால் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.குட்டநாட்டில் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டு ஆட்சியைத் தொடங்கியவன் குட்டுவன் என்றும் பொறைநாட்டில் தொடங்கியவன் பொறையன் என்றும் அழைக்கப்பட்டான்.குட்டுவன் என்னும் பெயர் சேரமன்னர்களைக் குறிக்கின்றது. சேரல்,குட்டுவன், கோதை,பொறை,பொறையன் போன்றவை சேரமன்னர்களைக் குறிக்கும் பெயர்கள் ஆகும்.

       சேரனது அகன்ற காட்டில் அமைந்திருப்பது கொல்லிமலை.கொல்லிமலையைப் பொறையன், குட்டுவன்  என்னும் சேரமன்னர்கள் ஆட்சி செய்தனர். இம்மலைத் தேனடைகள் மிகுந்தும்,பலாப் பழங்கள் நிரம்பியும் காட்சியளிக்கின்றது.குவளை மலர் பூத்துக் கிடக்கும் சுனை ஒன்று உள்ளது. சுனையில் பூத்த நீலமலர் தலைவியின் கண்கள் போல் காட்சியளிக்கின்றது. கொல்லி மலையின் மேற்கில் இருந்த குகை வளைவுக் கற்களில் கொல்லிப்பாவை வரையப்பட்டுள்ளது.தெய்வம் விரும்பி உறையும் மலையாகக் கொல்லிமலை விளங்குகின்றது.

 கொல்லிமலைப் பற்றிய குறிப்புகள்  கீழ்வரும் பாடல்களில் காணக்கிடக்கின்றன.

                     “----------சூர்புகழ் நனந்தலை

                                       மாஇருங் கொல்லி உச்சித் தாஅய்த்”;(அகம்-303)10

                                      “அகல்இருங் கானத்துக் கொல்லி போல”(அகம்-338)11

                                      “செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி

                                  நிலைபெறு கடவுள் ஆக்கிய

                     பலர்புகழ் பாவை அன்னநின் நலனே”(அகம்-209)12

                                     “பல்பழப் பலவின் பயம்கெழு கொல்லி”(அகம்-208)13

                                     “பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லி

                                 கருங்கண் தெய்வம்”(குறுந்தொகை -89)14

                                      “குட்டுவன் குடவரைச் சுனைய” (நற்றி-105)15

நவிரமலை:

                நன்னன் ஆட்சி செய்த மலை நவிரமலை.வள்ளலாகிய நன்னனிடம் பரிசுப் பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன் வழியில் கண்ட தன்னையொத்த வறுமை நிலையில் இருந்த கூத்தருக்கு நன்னனது நாட்டின் இயல்பையும்,மலைவளத்தையும் சொல்லும் மலைபடுகடாமில் நவிரமலையைப் பற்றி பெருங்கௌசிகனார் நவில்கின்றார்.

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்

 பேரிசை நவிர மேஎ யுறையும்” (மலைபடு 81-84)16

“கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென” (மலைப-579)17

என்று  இயம்புகின்றார்.

இன்று நவிரமலை பர்வதமலை,திரிசூலமலை என அழைக்கப்படுகிறது.சவ்வாது மலையில் உள்ள புதூர் நாட்டில் நவிரமலை என்னும் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.(தினமணி நாளிதழ் 28,சனவரி2018)18

 நன்றா மலை:

            பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்தின் பாட்டுடைத்தலைவன் செல்வக் கடுங்;கோ வாழியாதன். பல போர்களில் வெற்றிக் கண்டவன்.இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்த சிறப்பிற்குரியவன்.இம்மன்னனது கொடைப் புகழை கபிலர்  பத்துப் பாடல்களில் பாடியுள்ளார். .கபிலர் புகழ்ந்து பாடிய பாடல்களைக் கேட்டு நன்றா என்னும் மலையின் மீது ஏறி  நின்று தன் கண்ணிலும் புலவர் கண்ணிலும் தெரிந்த ஊர்களையெல்லாம் புலவர்க்குக் கொடையாக வழங்கினான். மேலும் சிறுபுறம் என்று நூறாயிரம் காணம் செல்வமும் வழங்கினான் என்ற செய்தியினைப் பதிற்றுப்பத்தின் ஏழாம் பதிகம் பதிவு செய்துள்ளது.

 முதிரமலை:

                    கடையேழு வள்ளல்களில் ஒருவன் குமணன்.இவன் முதிரமலையை ஆண்ட குறுநில மன்னன்.இம்முதிரமலை பழனிமலைத் தொடர்களில் உள்ளது.குமணனுடைய ஆட்சி நலத்தாலும் தோளாற்றலாலும் நாட்டின் செல்வநிலை உயர்ந்தது.இன்றைய முதுமலை என்ற பெயரே சங்ககாலத்தில் முதிரமலை என்று அழைக்கலாயிற்று.

 “அதிரா யாணர் முதிரத்துக் கிழவ

      இவண் வளங்கு சிறப்பின்  இயல் தேர் குமண” (புறம்-158)19

      “பழந்தூங்கு முதிரத்துக் கிழவோன்

                  திருந்துவேல் குமணன் நல்கிய வளனே”(புறம்-163)20

என்னும் புறப்பாடல்களில் முதிரமலையின் வளமும் குமணின் கொடைச்சிறப்பும் கூறப்பட்டுள்ளது.

 இமயமலை:

             அந்தி வந்ததும் அந்தணர்  தம் கடமையாகத் முத்தீ வளர்க்கும்  இடங்களுள் ஒன்றாக இமயம் இருந்துள்ளது.சிவன்  திரிபுரம் எரித்தப்பொழுது இமயம் அவனுக்கு வில்லாயிற்று.செல்வ வளம் நிரம்பிய  இமயத்தில் இருந்து வழிந்த கங்கை ஆறு வானர மகளிர் இருப்புக் கொள்ளும் இடமாக அமைந்திருந்தது.சேரலாதன்  கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்ததைக் கண்முன் நிறுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                    “சேரலாதன்……

                   முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து”(அகம்-127)21

சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் இமயத்தை அரசாண்ட வானவனை வீழ்த்தி  இமயத்தில் வில் கொடி நாட்டி வஞ்சி நகருக்குப் பெருமை சேர்த்ததை மாறோக்கத்து நப்பசலையார்

                  “வரையளந் தறியாப்பொன்படு நெடுங்கோட்டு

                  இமையம் கூட்டியஏம விற்பொறி

                             பொன்படு நெடுங்கோடு கொண்டது(புறம்-39)22 என்கிறார்.

                  “வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த

                  இயல்தேர்க் குட்டுவன்” (சிறுபாணா-48)23

என்று ஆற்றுப்படையும் பகர்கின்றது.இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான் என்பதையும் (பதிற்றுப்பத்து-பதிகம் 2)24 இமயமலைப்பகுதியில் ஆட்சி செய்த அரசர்கள் குமரிமுனை வரை கைப்பற்றக் கனவு கண்டவிடத்து .இமயவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைக்கொள்ளச் செய்தான் என்பதையும்(பதிற்றுப்பத்து- 2-ஆம் பத்து பாடல்-11)25 பதிகம் வழி அறியமுடிகின்றது.

     “ கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும்”(புறம் -34)26

     “வடதிசை இமயமும் தென்திசை ஆய்குடியும்

       உலகைச் சமநிலை கொள்ளச் செய்யும்”(புறம் - 132)27

                      “பொன்னுடை நெடுங்கோட்டு இமயம்

                             பொன் வேழம் பரிசாகத் தருக” (புறம்-369)28

  நற்றிணை 369, கலித்தொகை 38,92,105, குறுந்தொகை 158 ,அகம் 265, பரிபாடல் திரட்டு 1,புறம்-2,பரிபாடல் 8 ஆகிய பாடல்களில் இமயமலைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன.

குடமலை:

பண்டைக் காலத்தில் மாங்காடு என்னும் பெயர் கொண்ட ஊர்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்று  குடமலை.இந்த ஊரைச்சேர்ந்தவன் மாங்காட்டு மறையோன்.சிலம்பில் கோவலன் ,கண்ணகி,கவுந்தி ஆகியோருக்கு மதுரை செல்லும் முப்பெரும் வழிகளைக் காட்டியவன்.

குடமலை மாங்காட்டு உள்ளேன்”(சிலம்பு –   காடுகாண்காதை -10-106) 29

என்று மாங்காட்டு மறையவன் தன்னைக் கூறுகின்றான்

மாங்காடு பனிபொழியும் மலையடுக்கத்தில் இருந்ததையும்,அதில் இட்டாறு என்னும் அருவிக் கொட்டியதையும்,ஆண்குரங்கு குட்டியை வைத்திருக்க ,பெண்குரங்கு  பலாப்பழத்தைப் பிளக்கும்போது குளிரால் வாடித் துன்புறுவதையும், மாங்காட்டிலிலுள்ள மகளிர் தம் கூந்தலில் மலர்களைக் கொத்தோடு சூடிக்கொள்வார்கள் என்பதிலிருந்தும் பனிமூட்டம் மிக்கதாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி; இருந்ததை விற்றூற்று மூதெயினார்

                              “நண்ணிக் கொடியோர் குறுகும் நெடி இருங்குன்றத்து

                                        இட்டாறு இரங்கும்விட்டொளிர் அருவி

                                   ………..

                              அந்தீங் கிளவி தந்தை காப்பே(அகம்-288) 30 என்கிறார்.

வடக்கில் காவிரி  தோன்றும் பகுதி முதல்  தெற்கில் சந்தனம் மணக்கும் பொதியமலை வரை உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதையும் உள்ளடக்கியது குடகுமலை.இக்குடகு மலையில் தான் காவிரி உருவாவதை

                  “மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்துபொன் கொழிக்கும்”

                                                                                                                         (பட்டின-6-7)31

                  “குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி”(மலைபடு-327)32

பாலைநிலத்து வேட்டுவர் விழாக் கொண்டாடும் போது சாலினி மீது தெய்வம் ஏறி  கண்ணகியை

இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி”(சிலம்பு -11-53)33

“குடமலை வென்வேலான் குன்றில் மறைந்தாள்” (சிலம்பு-12-1-47)34

என்னும் தொடர்களிலிருந்து குடமலை  பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது.

தோட்டிமலை:

யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட பெயர் தோட்டி.தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டிமலை எனப்பட்டது. சங்ககால சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை தோட்டி மலையை வென்று தனதாக்கி கொண்டதைப் பதிற்றுப்பத்து

                        “ஆரெயில் தோட்டி வெளவினை” (8ஆம் பத்து –பாடல் 71)35

எனச் சுட்டுகிறது.

தோட்டி மலைக்கு நளிமலை என்று மற்றொரு பெயரும் உண்டு. தமிழ்நாட்டிலேயே பெரிய மலையாகவும்,குளிர்ச்சிப் பொருந்தியதாகவும் இருப்பதால் நளிமலை எனப் பெயர்ப் பெற்றது.

                                 “நளியென் கிளவி செறிவும் ஆகும்” (தொல்-உரி-323)36

                                              என்கிறது தொல்காப்பியம்.

கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய நள்ளி இம்மலையின் அரசனாக இருந்ததை

                                “நளிமலை நாடன் நள்ளி” எனச் சிறுபாணாற்றுப்படையும் 

                                “இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி

                                  அம்மலை காக்கும் அணி நெடுங் குன்றின்

                                   பளிங்கு வகுத்து அன்ன தீம் நீர்

                                  நளிமலை நாடன் நள்ளி”(புறம்-150) 37என்று புறப்பாடலும் சுட்டுகின்றது.

எருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான் என்று ஒரு பெண் குறிப்பிடுவதாகப் பரிபாடலும் (8-86)எடுத்துரைக்கின்றது.

பொதியமலை:

         பொதிய மலையை ஆய்,திதியன் ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டனர் என்பதை

                        “கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்(குறு-84)38

                             “பொதியில் செல்வன் பொலந்தேர்த் திதியன்”(அகநா-25)39

  என்னும் பாடல்கள்   உணர்த்துகின்றன. 

பொதியமலையில் சந்தன மரங்கள் மிகுந்திருந்ததை

 “மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சந்தனம் போல்” (குறு-376)40

என்பதின் வழி அறிய முடிகின்றது.

 நிறைவுரை:

சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள மலைகள், அம்மலைகளை ஆட்சி செய்த அரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள்  ஆகியோரின் கொடைச்சிறப்பின்  பெருமைகளையும், மலைகள் இயற்கை அரணாகவும், மக்களின் வாழ்வியல் வளமாகத் திகழ்வதையும், புலவர்கள் புரவலர்களின் சிறப்பினையும்,உணர்த்திக் கட்டுரை நிறைவுறுகின்றது.

சான்றெண் விளக்கம்: புறநானூறு

1.புறநானூறு-109

2.புறநானூறு-114

3. அகநானூறு -303

4.அகநானூறு -78

5. புறநானூறு-370

6. புறநானூறு-176

7.குறுந்தொகை-196

8. புறநானூறு-108

9. . புறநானூறு-109

10. அகநானூறு-303

11. அகநானூறு-338

12. அகநானூறு-209

13. அகநானூறு-208

14.குறுந்தொகை-89

15.நற்றிணை-105

16.மலைபடுகடாம் 81-84

17.மலைபடுகடாம்    579

18.தினமணி நாளிதழ் 28,சனவரி2018

19.புறநானூறு-158

20.புறநானூறு -163

21.அகநானூறு-127

22.புறநானூறு -39

23.சிறுபாணாற்றுப்படை-48

24.பதிற்றுப்பத்து-பதிகம் 2

25.பதிற்றுப்பத்து 2-ஆம் பத்து பாடல்-11

26.புறநானூறு -34

27.புறநானூறு -132

28.புறநானூறு -369

29.சிலப்பதிகாரம் காடுகாண்காதை -10-106

30.அகநானுறு -288

31.பட்டினப்பாலை 6-7

32.மலைபடுகடாம்- 327

33.சிலப்பதிகாரம் 11-53

34. சிலப்பதிகாரம் 12-1-47

35.8ஆம் பத்து-பாடல் 71

36.தொல்காப்பியம் - உரியியல் -323

37.புறநானூறு -150

38.குறுந்தொகை-84

39.அகநானூறு -25

40.குறுந்தொகை -376

துணைநூல் பட்டியல்:

1.செல்வம் வே.தி

தமிழக வரலாறும் பண்பாடும்

மணிவாசகர்     பதிப்பகம்,

சென்னை-2002(மறுபதிப்பு)

2. கவிஞர்முருகு சுந்தரம் -தமிழகத்தில் குறிஞ்சி நிலம்

3. கவிஞர் பரமகுரு, திருக்கொடுக்குன்றம் வரலாறு, பழனியப்பா பிரதர்ஸ், நவம்பர்-2020.