ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இந்திரஜித் மாட்சியும் வீழ்ச்சியும் (Indrajit’s Glory and Downfall /Debacle)

முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல் -II), சென்னை, தமிழ்நாடு,இந்தியா. (Dr. G. Mangaiyarkkarasi, Assistant Professor, Department of Tamil Agurchand Manmull Jain College (Shift - II), Meenambakkam, Chennai, Tamil Nadu, India) 27 Jul 2023 Read Full PDF

Abstract: As a Great Legend, Indrajit possessed many Boons by way of performing Penances of Dvinity. He is supposed to be the only Warrior who has the incredible record of holding Brahmastra, Vaishnavastra and the Paasupathastra from the Divine Triplets. He ascertained the title of Indrajith by defeating Indra, the Lord of other Gods / Devas. He has also been bestowed by Lord Shiva with the Valour of surfing anywhere in a Chariot and to wage war in disguise with his rivals. He had most infinite affection towards his Father Ravana, Uncle Kumbakarna, Younger brother Akkumara & Adhikaya. His statement of Asseveration was that he will take the revenge upon those who had killed his relations in the war.  Indrajith is such a kind of Legend Warrior who by using the Nagapasa and aiming through the Brahamastra made all his rivals to get tilted into the sand in the war field.  In the end, he falls because of Lakshman’s arrow. Despite having the benefits of penancial blessings to his credit, the reason for his ending was that he stood by Adharma along with his Atheist Father.  Ultimately Indrajith died as Dharma will only clinch the victory always.

Key Words:  Indrajith, Ravana, Penances, Blessings, Weapons, Asseveration of Enmity

ஆய்வுச்சுருக்கம்

மாவீரன் இந்திரஜித் தவங்கள் பல செய்து, வரங்கள் பல பெற்றவன். மும்மூர்த்திகளின் பிரம்மாஸ்த்திரம், வைணவ அஸ்த்திரம், பாசுபத  அஸ்த்திரம் ஆகிய மூன்று அஸ்த்திரங்களையும் பெற்ற, ஒரே வீரன் என்ற புகழையும் பெற்றவன். தேவர்களின் தலைவன் இந்திரனையும் வென்று, இந்திரஜித் என்ற பட்டமும் பெற்றவன். சிவபெருமான் அருளினால், எங்கும் உலவும் தேரும், யாரும் அறியாமல் மறைந்திருந்து போர் செய்யும் வல்லமையையும் பெற்றவன். தன் தந்தை இராவணன், சிற்றப்பன் கும்பகர்ணன், தம்பி அக்ககுமரன், அதிகாயன் மேல் எல்லையற்ற அன்பு கொண்டவன். தன் உறவுகளைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பேன் என்று வஞ்சினம் கூறியவன்.  நாக பாசத்தை விடுத்தும், பிரம்மாஸ்திரம் ஏவியும், பலரையும் யுத்த பூமியில் சாய்த்தப் பெருவீரன் இந்திரஜித். இறுதியில், இலட்சுமணனின் கணையால் விழுந்து விடுகிறான். வரபலன்கள் பல இருந்தும், இந்திரஜித் இறந்ததற்குக் காரணம் இராவணனின் அதர்மத்திற்கு பக்க பலமாக நின்று போரிட்டதேக் காரணமாகும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதாலேயே, மாவீரன் இந்திரஜித் இறந்துபட்டான்.

திறவுச்சொற்கள்: இந்திரஜித், இராவணன், தவங்கள், வரங்கள், அஸ்த்திரங்கள், வஞ்சினம்,

முன்னுரை                              

வில்லாளரை எண்ணின் விரலுக்கு முன் நிற்கும் வீரன்.   தான் செய்த தவப்பயனால், வரங்கள் பல பெற்றவன். தன் தந்தையிடம் எல்லையற்ற அன்பு கொண்டவன்.  தந்தை செய்தது தவறு என்றாலும். தந்தை வேண்டுமானால் தன் தவறைத் திருத்திக் கொள்ளலாமே தவிர, அவனுக்கு விரோதமாக தான் ஒன்றும் செயலாகாது, என்றே உறுதி கொண்டவன். தம்பிகள் மேல் அதிக பாசம் கொண்டவன். சிற்றப்பன் மேல் மரியாதை கொண்டவன். குலப் பழியை வெறுப்பவன்.வியூகம் அமைத்துப் போர் செய்தவன். உடல் முழுவதும் அடிபட்டு இரத்தம் ஒழுகும் நிலையில், மன உறுதியுடன் நேரே நின்று, பெருவீரத்துடன் போர் செய்தவன்.இப்படி பல சிறப்புகள் பெற்றிருந்தாலும், பகைவரைக் குறைத்து மதிப்பிடல், ஆணவம், அதுவரை தாம் வெற்றி மட்டுமே பெற்றது ஆதலால், தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற இறுமாப்பு ஆகியவையே வீரத்துடன் போர் புரிந்தாலும், இறுதியில் கை துண்டாகி, தலை வேறு, உடல் வேறாகி பூமியில் கிடந்தான். இராவணனும், மண்டோதரியும் தலையற்ற உடலைக் கண்டு கதறியது அவலமே.  கம்பராமாயணத்தின் வழி இந்திரஜித் மாட்சியும், வீழ்ச்சியும் குறித்து ஆராய்வோம்.

மாவீரன் இந்திரஜித்

இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த மூத்த மகன் இந்திரஜித். மும்மூர்த்திகளின் பிரம்மாஸ்திரம், வைணவ அஸ்திரம், பாசுபத அஸ்திரம் ஆகிய மூன்று ஆயுதங்களையும் வைத்திருந்த ஒரே ஒரு போர் வீரன். இந்திரலோகத்தில் உள்ள தேவர்களையும், அசுரர்களையும், மும்மூர்த்திகளையும் போரில் வென்று, அவர்களது அனைத்து வகையான ஆயுதங்களையும், தன்வசம் வைத்திருந்தான். தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் ’இந்திரனை வென்றவன்’ என்ற பொருள்படும் ’இந்திரஜித்’ என்ற பட்டப் பெயர் பிரம்மாவால் இவனுக்கு வழங்கப்பட்டது.  இந்திரஜித்  பிறந்து, முதன் முதலில் அழுத போது இடியும், மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் ’மேகநாதன்’ என்று பெயரிடப்பட்டான்.

சிவபெருமானிடம் பெற்ற வரம்.

தவ வலிமையால் எங்கும் உலாவும் தேரும், யுத்தத்தில் யாரும் அறியாது ஒழிந்து போர் புரியும் வல்லமையையும் பெற்றான். இவனுக்கு’ இராவணி’ என்ற ஒரு பெயரும் உண்டு. இவன் கையில் கொண்ட வில் பிரம்மன், இந்திரனுக்குக் கொடுக்க, இந்திரனிடமிருந்து, அம்பரா துணியுடன் இவனே கைப்பற்றிக் கொண்டான்.

சிறப்பு

சிவன் அருளால் கொடுத்தத் தேரானது, அழியாது இருக்கும்வரையும், அவன் கையில் வில் இருக்கும் வரையும், போரில் இந்திரஜித்தன் சாக மாட்டான். பகலில் அல்லாமல், இருளிலே சாக மாட்டான். தேரில் கட்டியப் பச்சை நிறம் கொண்ட குதிரைகளும் சாக மாட்டா. அந்தத் தேரில் பல ஒலிகளை உடைய உருளைகளும், பூமியில் முறிந்து ஒழியாது. கல் மழையைப் பெய்யச் செய்யும் ஆற்றல் பெற்றவன். சிவபெருமான் அருளால் சூலாயுதம் பெற்றவன் இந்திரஜித். (இந்திரஜித் வதை படலம் 3105), இராவணனாவது முதன் முதலாக இராமனுடன் போரிடும்போது, முதலில் தோற்று, ’இன்று போய், நாளை வா’ என்று இராமன், இராவணனிடம் கூறினான்.ஆனால் இந்திரஜித் போர்க் களத்தில், இரண்டு முறை இலட்சுமணனைச் சாய்த்து வெற்றி பெற்றவன்.

திட்டமிட்டுப் போரிடுபவன்

இந்திரஜித் போருக்கு வந்த போது, படையைக் கிரவுஞ்ச வியூகமாக வகுத்ததை அறியமுடிகிறது.

                  “சென்று வெங்களத்தை எய்தி சிறையொடு துண்டம் செங்கண்

                   ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின்    ஒப்பப்

                   பின்றல் இல் வெள்ளைத்தானை முறைப்பட பரப்பி பேழ்வாய்

                   அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான்”

                                                                                             (பிரமாத்திரப் படலம் 2394)

இராமனோ, இலட்சுமணனோ  வியூகம் அமைத்துப் போர் செய்யவில்லை. இந்திரஜித் மட்டுமே, பறவை வடிவில் படையை நிறுத்திப் போர் நடத்துகிறான். நிகும்பலை வேள்வியை மேற்கொள்ளும் போது, அரக்கர் படை, சக்கர வியூகமாக காத்து நிற்கிறது. இந்தச் சக்கர வியூகத்தை இலட்சுமணனும், அனுமனும் நொடி பொழுதில் சிதைத்தனர்.

                   “தடந்திரைப் பரவை அன்ன சக்கர வியூகம் புக்குக்

                        கிடந்தது கண்டது உண்டோ  நாண் ஒலி கேட்டிலோமே”

                                                                          (நிகும்பலை யாகப்படலம் 2944)

இந்திரஜிதன், தலைசிறந்த போர் வீரமும், போரியல் புலமையும் வாய்ந்தவன் என்பதை, அவன் வகுத்துக் காட்டிய கிரவுஞ்ச வியூகம், சக்கர வியூகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்திரஜித் குறித்து அனுமன் கணிப்பு

சீதையைத் தேடிச் சென்ற அனுமன், இலங்கையில் ஒவ்வொரு மாளிகையாகக் காண்கிறான். இரவில் உறங்கிக் கொண்டிருந்த இந்திரஜித் தினை, அனுமன் பார்க்கிறான். சிவபெருமானின் மகனான முருகப்பெருமான் ஆறுமுகங்களையும், பன்னிரு கைகளையும் மறைத்து ஒரு முகமும், இரு கரமுமாக தோன்றினான் என்று கருதுமாறு காட்சியளித்தார்.இராம, இலட்சுமணர்கள் இருவரும் பல நாட்கள் இவருடன் போர் புரிய நேரிடும் என்று அனுமன் உணர்ந்தான்.

                    “இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள்

                      உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான்”

                                                                                                                 (ஊர்தேடுபடலம் 235)

அக்க குமரனைக் கொன்ற அனுமனைப் பிடிக்க, இந்திரஜித் வந்தபோது அவனைக் கண்ட அனுமன், இவன் முன் வீரர்கள் சிலரை நான் வென்றேன். என்னும் கொடுஞ்செயல் அல்லவா, இவனை மிக விரைவாக இங்கே வரும்படி செய்தது. இதுவும் வியப்பே. இனி வெற்றி பெறுதல் அல்லது தோற்றல் எனும் இரண்டில் ஒன்றே அடுத்து நடக்கப்போகிறது. அதுவும் இன்றே நடந்து விடும். இங்கே வரும் இவன் இந்திரஜித் என்பவனே என்று நினைத்தான். (பாசப்படலம் 155) இந்திரஜித்தனின் தொடர் தாக்குதலால் அனுமனும், சிறிது நேரம் தளர்ந்து நின்றான். பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து, இராவணன் முன் நிறுத்தினான். நாக பாச படலத்தில் அனுமன் எரிந்த மலை இந்திரஜித்தன் மார்பில் பட்டுப் பொடி பொடியானது (2023) இந்திரஜித்திற்கும், அனுமனுக்கும் இடையேப் போர் நடைபெற்றதைக் கண்ட முனிவர்கள், வில்வித்தையில் சிறந்தவன் இந்த இந்திரஜித்தே என்று அச்சமடைந்தனர். (நாகபாச படலம் 2059)

மாயப்போர்

மாயமாக மறைந்து, எவர் கண்ணிலும் படாமல் போர் செய்வதில் வல்லவன். இந்திரஜித் நாக பாசம் எடுக்க எண்ணி, எவர்கண்ணிலும் படாமல், ஆகாயத்தை அடைந்தார். தனக்கு இருந்த மந்திர பலத்தால், நுண்ணிய வடிவம் கொண்டான். கையில் ஒரு கணையை எடுத்து, மந்திரம் சொல்லி, இலட்சுமணன் மீது விடுத்தான். அதுவும் அவன் தோளைச் சுற்றியது. ஆனால் இலட்சுமணனே, இந்த மாயச் செய்கை இந்திரஜித்துடையது என்பதை அறியாமல், வலிமைக் குன்றி வானத்தைப் பார்த்தான். இந்திரஜித் அம்புகளால், வானர வீரர்கள் ஓரிடத்தில் நிற்காமல் சிதறினர். அவர்கள் நாக பாசத்தால் கட்டுண்டனர்.

                   “ மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடைப்புரள்வர் வானில்

                 தலைகளை எடுத்து நோக்கித் தழல் எழு இழிப்பர் தாவி”

                                                                             (நாகபாசப் படலம் 2136)

பிரம்மாஸ்திரம் தொடுத்தல்

தனக்கு வெற்றி கிடைக்க எண்ணி, ஆகாயத்தில் மறைந்திருந்து பிரம்மாஸ்திரம் தொடுக்கிறான். இலட்சுமணன், அனுமன், சுக்ரீவன், அங்கதன், நீலன், முதலிய வானர வீரர்கள் அனைவரும், ஆயிரம் கோடி கணைகள் தாக்கியதைப் போல, சுய நினைவற்று விழுந்தனர்.

                        “கோடி கோடி நூறாயிரம் சுடர்கொடுங்கணைக் குழாங்கள்

                        மூடிமேனியை முற்றுறச் சுற்றின மூழ்க”

                                                               (பிரமாத்திரப்படலம் 2553)

தன் வீரத்தின் மேல் கொண்ட ஆணவம்

பிரம்மாஸ்திரம் ஏவி இலட்சுமணனைச் சாய்த்த வெற்றியை, இராவணனிடம் கூறுகிறான் இந்திரசித். இராமன் இறக்கவில்லையா? என்ற தந்தையின் கேள்விக்கு ’எனது அம்பைக் கண்ட அச்சத்தால், அனைவரையும் கைவிட்டு ஓடிவிட்டான். அவ்வாறு இல்லையேல் நான்  அவனுடைய தம்பியைக் கொன்று, சிறந்த நண்பர்களையெல்லாம் கொன்று, அவனது படையை அழிக்க அவன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி என்னுடன் போரிட மறந்து நிற்பானோ’ எனக் கூறினான். இதை இராவணனும் ஏற்றுக் கொண்டான்.

இந்திரஜித் கூறிய வஞ்சினம்

1. கும்பகர்ணன் இறந்தப்பிறகு, இந்திரசித், இராம, இலட்சுமணருடன் போரிட வருகிறான். நீங்கள் அம்பினால் அறுத்துத்தள்ளிய கும்பகர்ணன் என்னும் பெயர் பெற்ற ஒருவனாகிய இராவணனுடைய தம்பி அல்லன் நான். அதனால் அவனைப்போல உங்களால் கொல்லப்படமாட்டேன். நான் இராவணன் புதல்வன். ஆனால் அக்கக்குமரன், அதிகாயன் போலன்றி, வீரத்தால் தனித்து நிற்பவன். இறந்துபோன என் தம்பியர்க்கும், சிறிய தந்தையான கும்பகர்ணனுக்கும், உங்கள் இருவருடைய இரத்தமாகிய நீரைக் கொண்டு, நீர்க்கடன்களைச் செய்து முடிப்பேன் என்று இந்திரசித் வஞ்சினம் கூறினான்.

           "எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவிர்

            செம் புணீர்கொடு கடன் கழிப்பேன் என்று தெரிவித்தான்"

                                                                             (பிரமாத்திரப் படலம் 2447)

எடுத்தக் காரியத்தில் தாம் நினைத்தவாறு வெற்றி பெற்றப்பின்பே மற்ற செயல்களைச் செய்வேன் என்று வஞ்சினம் கூறியதை அறியமுடிகிறது.

2. வீரர்களுக்கு உள்ள தனித்தன்மை தன் வீரத்தின் மீது கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கையே. என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலட்சுமணனைச் சாய்க்காவிட்டால், இனிமேல் உயிர்வாழேன் என இந்திரஜித் வஞ்சினம் கூறினான்.

இலட்சுமணன், அதிகாயனைக் கொன்றான் என்பதை அறிந்த இந்திரஜித், மிகுந்த கோபத்துடன், என் தம்பி அதிகாயனைக் கொன்றவனான அந்த இலட்சுமணனின் உடலை அவன் நின்றுள்ள போர்க்களத்திலேயே அழித்தபின் அன்றி, பெருமைப் பொருந்திய இந்த இலங்கை நகருக்கு மீண்டு வரமாட்டேன் என்று வஞ்சினம் கூறினான்.

                 " கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை

                    அந்நின்ற நிலத்து அவன் ஆக்கையை வீட்டி அல்லால்

                    மன்நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன்"                  

                                                                                             (நாகபாசப்படலம் 1952)

இந்திரஜித்lதின் இரண்டு சூளுரைகளும்,  பொருள் பொதிந்த நிலையிலும், ஆற்றலை வெளிப்படுத்தும் பாங்கிலும் அமைந்துள்ளவையாகும்.

மாயவலை

இரண்டாம் நாள் போரின் இறுதியில், இலட்சுமணனிடம் தோற்கும் நிலையில், இந்திரஜித் மறைந்து சென்று இராவணனிடம் நடந்தது கூறி, பெரும் படையுடன் மகோதரனைப் போர்க்களம் அனுப்பி, இலட்சுமணனுடன் போரிடக் கூறி, பிரம்மாஸ்திர பூஜை செய்ய மாயையால் மறைந்தான். இந்திரஜித் வேண்டுகோளின் படி மகோதரன், இந்திரன் வேடம் ஏற்று ஐராவதத்தில் மேல் போர்க்களம் சென்று, வானரரைத் தாக்கிக் குழப்பம் செய்தார். யாவரும் எவ்வாறு இந்திரன் வந்தான் என்று திகைக்கின்றனர்.

                     “அனையன் நின்றனன் அவ்வழி மகோதரன் அறிந்து ஓர்

                       வினையம் எண்ணினன் இந்திரவேடத்தை மேவித்”

                                                              (பிரம்மாத்திரப்படலம் 2548)

எதிரியின் கவனத்தைத் திசைதிருப்பல்

இராமனை வெல்வதன் பொருட்டு, நிகும்பலையில் யாகம் செய்ய வேண்டும். பகைவர்கள் வேள்வியைத் தடுத்து விடாதபடி, சீதையின் வடிவத்தை மாயையால், மாயா சீதையை உருவாக்கி, அவளைப் பலர் முன்னர் வாளால் துண்டித்தான். அயோத்தி சென்று, பரதன் முதலியவரை அழிக்கப் போவதாகவும், புஷ்பக விமானம் ஏறப் புறப்பட்டார்.  அத் திசை நோக்கி போன பின்பு, அவர்கள் செய்வதறியாது துன்பம் அடைவார்கள் என்று, போரின் சூழ்ச்சியாக, எதிரியின் கவனத்தைத் திசை திருப்பச் செய்தான் .

                      “வாளின் எறிந்தனன் மாக்கடல் போலும்

                       நீள்உறு சேனையினேடு நிமிர்த்தான்”

                                                                                (மாயா சீதைப்படலம் 2820)

ஆண்மையும், போர் சூழ்ச்சியும், இந்திரஜித்தின் பெரும் சிறப்பினை விளக்கும்.

குல பழியை வெறுப்பவன்

நிகும்பலை யாகம் வீணானது. தான் போட்டப் படைக்கலங்கள் அனைத்தும் பயனற்றுப் போனதற்குக் காரணம், தன்னுடைய சிற்றப்பன் வீடணனே என்று நினைத்தான். தந்தை செய்தது தவறு என்றாலும். தந்தை வேண்டுமானால் தன் தவறைத் திருத்திக் கொள்ளலாமேத் தவிர, அவனுக்கு விரோதமாக தான் ஒன்றும் செயலாகாது என்றே உறுதி கொண்டான். தன் குலம் முழுவதற்கும் தீங்கு செய்த பகைவர் யாராயினும் சரி, அவர்களோடு சேர்ந்து கொண்டு, தம் குலத்தையே அழிக்க வழி தேடிய சிற்றப்பனை, அவனால் பொறுக்க முடியவில்லை. அண்ணன் தவறை வெறுத்தானாயின், இன்று தானா அண்ணன் தவறு செய்தான். தேவரைச் சிறையில் இட்டபோது பிரிந்திருக்கலாமே? தீராப் பகைவரோடு சேர்ந்து, அவன் குலம் அழிவதற்கு வேண்டிய வழிகள், உபாயங்கள் அனைத்தையும் கூறி, அவன் குலம் வேறொரு செய்தது எவர் அதை கருதியோ என்று கேட்கிறான். தந்தை இறக்கும் பொழுது, தான் இருந்து பார்ப்பதற்கு இல்லை, ஆதலால், என்ன செய்யத் துணிந்தாய் சிறிய தந்தையே என வினவுகின்றான்?.

               “எழுதிஏர் அணிந்த திண்தோள் இராவணன் இராமன் அம்பால்

                புழுதியே பாயலாகப் புரண்டநாள் புரண்டு மேல் வீழ்ந்து

                அழுதியோ நீயும்கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தித்

               தொழுதியோ  செய்யத் துணிந்தனை விசயத்தோளாய்”

                                                                                                   (நிகும்பலையாகப்படலம் 3043)

 இறுதியாகத் தான் மடியினும், தந்தைக்குக் கேடு வராமல் காக்கத், தன் சிற்றப்பனையே ஒழித்து விடலாமா என நினைக்கின்றான். ஆனாலும் அவன் குலப் பலியை வெறுப்பதாயின், அச்செயல் செய்ய அவன் மனம் துணியவில்லை  என்று கூறி முடித்து விட்டான்.

எதிரியின் வீரத்தை வியந்து கூறல்

இலட்சுமணனின் வில்லாற்றலைத் தேர் சக்கர காவலரிடம் இந்திரஜித் ,  வியந்து பாராட்டுகிறான். இந்திரஜித்திற்கும், இலட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில், இலட்சுமணனின் ஆற்றலைக் கண்டு, இங்கு என்னோடு போரிடுகின்றவன் இலட்சுமணன் என்னும் அந்த நரனே ஆவான். அவன் அல்லன் என்றால், நாராயணனை ஒத்தவன். அவனும் அல்லன் என்றால், நாராயணனுக்கு அடுத்த நிலையில் உள்ள சிவபெருமான், பிரம்மன் என்று உவமைக்கூறி நம் நகருக்கு வந்து, கட்டமைந்த வில்லைத் தாங்கிப் போரிடும் வித்தையில், தேர்ந்துள்ள இந்த மனிதனுக்கு சமமானவர், இந்த உலகில் பிறந்து வாழும் மன்னர்களுள் எவர் ஒருவர் இருக்கின்றனர் என்று வியந்து கூறினான்.  

இராவணனிடம், அனுமனின் பெருமையை எடுத்துக் கூறும் இடத்தில், அரி என்ற மும்மூர்த்திகளையும் குறிப்பிட்டு அம் மூர்த்திகளின் ஆற்றல் பெற்றவன் என்று கூறி வியக்கிறான்.

                                      “கிங்கரர் சம்பு மாறி கேடிலா ஐவர் என்று இப்

                                             ………………………………………………………….

                                      சங்கரன் அயன் மால் என்பார் தாம் எனும் தகையது ஆமே” (பாசப்படலம் 992)

 தானம் செய்தல்

இராவணனுக்கு ஆலோசனை வழங்கியும், எந்த பயனும் இல்லாததை உணர்ந்த இந்திரஜித், வானவர் தன்னிடம் அடைக்கலமாகக் கொடுத்தப் போர் கருவிகளைக் கையாளும் வித்தைகளையும், பிறவற்றையும் தேர் மேல் எடுத்துக்கொண்டு விரும்பினவர்களுக்கெல்லாம் ’யாத்திரா தானம்’ செய்து விட்டு தன்னுடன் வீரர்கள் வரவேண்டாம், மன்னனைக் காத்திடுங்கள் என்று கூறி இராவணனைக் கடைக்கண்ணால் நோக்கி, இரு கண்களினின்றும் கண்ணீர் சிந்தப், போர்க்களம் சென்றான்.

இலட்சுமணன் புகழும் வீரமிக்கவன்

 வீர உணர்ச்சியால் தளராத தைரியமுடையவர்கள் ’சூரர்’ என்று கூறத்தக்கவர் என்று தேவர்களும் புகழ்வர். இந்திரஜித் இறக்கும் போதும் அவன் ,  ஆற்றலைக் கண்ட இலட்சுமணன்,  நான் விடுத்த வலிமையான அம்புகள் எல்லாவற்றையும், இந்திரஜித்தன் தன் உடம்பிலிருந்து எடுத்து, என் மீது திரும்பவும் செலுத்துகிறான். கை சிறிதும் தடுமாற்றம் அடையாமல் உள்ளம் உயிர்க் கலக்கமடையாதது போல, தானும் கலங்காது உடலில் நெருங்கிய அம்புகள் கோடி கோடியாக நெருங்கியிருக்கவும், இழப்பு என்ற ஒன்று தன்னிடம் இல்லாதவனாக நிற்கின்றான். வீர ஆற்றல் இவனோடு ஒளிந்து விடும் என்று வியந்து கூறினான்.

இறுதிப் போர் நிகும்பலை யாகம் அழிந்தபோதும், தீய நிமித்தம் என்றாலும், மனம் தளராமல் இந்திரஜித்தன்  போரிடுவதைக் கண்ட தேவர்களே, ”இந்திரஜித்துக்கு உலகில் ஒரு வீரரும்  இணையாகார்கள்’ என்று மகிழ்ந்து பாராட்டும்படி போர் செய்தான்..

தம்பி மேல் கொண்ட பாசம்

தம்பி அக்ககுமரனை, அனுமன் கொன்றான் என்பதைக் கேட்டு, எல்லா உலகமும் நடுங்கும்படி சினம் கொண்டான். சிவபெருமானைப் போல வீறு கொண்டு எழுந்தான். இந்திரஜித் வீரக் கழல்களும், மலைகளும், பேரிகைகளும் இடியும் அஞ்சுமாறு பேரொளி செய்தன. தேவேந்திரனும் நடுங்கினான். மும்மூர்த்திகளும், போரும் உச்சகட்டத்தை அடைந்து விட்டது என்று எண்ணினர். அதிகாயன் இறந்ததை இராவணனே, இந்திரஜித்திற்குக் கூறினான். தம்பி மேல் கொண்ட அதீத அன்பால், பாசத்தால் (ஆயிரம் மறைகளைக் கற்று உணர்ந்த இராவணனை) தந்தை இராவணனிடம் தம்பியைக் கொன்றது அவரோ, கொலை சூழ்க என நீயேக் கொடுத்தாய். அறிவற்றவன் என்று பழித்துப் பேசுகின்றான்.

  தம்பியைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற வேதனையும், இறந்துவிட்டான் என்ற சோகமும், அதற்கு காரணமானவர்களைப் பழித்தீர்க்க வேண்டும் என்ற கோபமும், எல்லாம் தந்தையால் தான் என்ற ஆற்றாமையும் புலப்படுகிறது.

தந்தை மேல் கொண்ட பாசம்

தந்தை மேல் அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டவன்.கயிலாயமலையைத் தூக்கியதைப் பெருமையாக எண்ணுபவன்..அக்க குமரன் இறந்ததனால் சோகமும், கோபமும் கொண்டு தந்தையை ஏசினாலும், அக்குரங்கை நானே சென்று பிடித்துத் தருவேன். இனிமேல் நீ எத்தகைய துன்பமும் அடைந்து வருந்த வேண்டியதில்லை. நீ நீண்ட காலம் வாழ்க என்று இந்திரஜித்தன் கூறினான். நாக பாசத்தால் இலட்சுமணன் உள்ளிட்ட அனைவரையும் மயக்கி வந்த இந்திரஜித், போரில் ஏற்பட்ட கலைப்பால் தனது அரண்மனை சென்று இளைப்பாறுகிறான். கருடன் வரவால் அனைவரும் எழுந்த போது, வானர வீரர்கள் செய்த மகிழ்ச்சி ஆரவாரம், இராவணனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவன் இந்திரஜித் அரண்மனைக்கு வந்தான். இந்திரஜித், தந்தையைக் கண்டு, எழுந்து, அடிவணங்கள் ஆற்றானாய், இரு கைகளாலும் வணங்கிய பிறகு, போரைப் பற்றியத் தனது கருத்தைத் தெரிவிக்கிறான். இன்னும் நான் அப்போர்க்கள மாயையில் இருந்து நீங்கவில்லை. இந்திரன், திருமால், முதலியவர்களோடு போர் செய்யும் பொழுது கூட,

                  “நொந்திலென் இணையது ஒன்றும் நுவன்றிலன் மனிதன் நோன்மை                                   

                    மந்திரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று மன்னே”

                                          (நாகபாசப்படலம்2231)

என்று கூறினான்.

இலட்சுமணனும் அழிந்துவிட்டான். இனி எஞ்சியிக்கும் இராமனை வென்று போரில் வெற்றி காணலாம் என்று சொல்வதற்கு இல்லை. போரின் முடிவிலேயே, அதனை அறிய முடியும் என்று கூறி முடித்தான். போர்க்களத்தில் நடந்ததை ஒற்றர்கள் கூறும் போதும், இந்திரஜித் பேசவில்லை. தான் சிறிதும் எதிர்பாராத முறையில் திடீரென்று நிகழ்ந்த அச்செயலால், இந்திரஜித் பேச்சற்று இருந்தான். சிறந்த வீரன் ஆதலால், அவன் புலம்பவும் இல்லை. தான் பெரிதான மதித்த படைக்கலம் பழுதடைந்தமையால், பகைவர் மேல் கொண்டிருந்த மதிப்பே உயர்ந்தது.

தந்தையிடம் மன்றாடல்

முதலில் தந்தைக்கு துணை நின்றாலும், இராம, இலட்சுமணர்களின் ஆற்றலைக் கண்டு, தன் குலமே அழிந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக, தந்தையிடம் வேண்டுகிறான்.

 நிகும்பலை யாகத்தை இலட்சுமணன் அழித்தபின், இந்திரஜித் வேள்வி தடைப்பட்டதை உணர்ந்த பின்னும்,, தன் தோள் வலிமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு மனிதர்களும், குரங்குகளும் என் அம்புக்கு இரையாகி மடியப்போகிறார்கள் என்று கூறிப் போரிட்டான். அனுமனே, இந்திரஜித்துடன் போரிட்டு, சிறிது தளர்ந்தான்.

நிகும்பலை யாகம் நடைபெறாமல், போரில் படுகாயமுற்ற இந்திரஜித் மாயமாக அரண்மனை வந்து, தந்தை இராவணனைக் கண்டு “தந்தையே, ’நான் ஏதோ பயந்து பேசுகிறேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். சீதையின் மீதுள்ள ஆசையை நீ விட்டு விட்டால், அவர்களது கோபம் குறைந்துவிடும். அவர்கள் திரும்பி தம் இருப்பிடம் போய்விடுவார்கள். உன் குற்றத்தையும் பொறுப்பர். உன் மீதுள்ள பாசத்தினால், அன்பு காரணமாகவேக் கூறுகிறேன்” என்றான்.

                        “ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அச்

                          சீதைபால் விடுதி ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர்”

                                                                          (இந்திரஜித் வதைபடலம் 3062)

இந்திரஜித் கூறியதைக் கேட்ட இராவணன், உன்னை நம்பி பெரும் பகையைத் தேடிக் கொள்ளவில்லை, என்னை நம்பியேத் தேடிக்கொண்டேன். நீ பயந்துவிட்டாய் போலும், என் உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, சீதையை விடமாட்டேன்.  இருபது தோள்களை உடைய நான், இரு தோள்கள் உடைய மனிதனுக்குப் பயந்து சீதையை விடமாட்டேன். அழிவு என்றும் உள்ளது. இன்றைக்கு உள்ளவன், நாளைக்கு இறந்து விடுவான். ஆனால் கீர்த்தி என்று அழியாது. நீ போய் ஓய்வெடு. நானே நாளைப் போர்க்களம் போகிறேன் என்று இராவணன் கூறிய போது, இந்திரஜித் தந்தையைக் கடித்து தானேப் போருக்குப் புறப்படுகிறார்.

நிகும்பலை யாகத்தடை, நாக பாசம் கருடன் வருகையால் பயனற்றதானது. பிரம்மாஸ்திரத்தால் வருந்தியவர், அனுமனால் காப்பாற்றப்பட்டனர். இத்தடைகள் ஏற்பட்ட பின்னரே இந்திரஜித்தன், ’பகைவரை வெல்லுதல் எவருக்கும் கூடாத காரியம் என்பதை அறிந்து, தந்தைக்கும் அறிவித்தார். அப்பொழுது கூட நான் கொண்ட பயத்தால்  கூறவில்லை, உண்மையை ஒப்புக் கொள்வதில் பழியோ, அவமானமோ இல்லை. தன் தந்தை இறந்து படக்கூடாது ,என்ற ஆசை காரணமாகவே, பகைவரை வெல்ல முடியாது என்று எடுத்துக்காட்டி, சீதையை விட்டு விடுமாறு, தந்தையிடம் மன்றாடினான்.

இறுதிப் போர்

இந்திரஜித் இறுதிப்போரில் சாரதியும் இறந்ததால்,  தானேத் தேரோட்டிச் செல்கிறான். இலட்சுமணன் தொடர்ந்த தொடர்க் கணைகளால் தாக்கப்பட்ட இந்திரஜித், உடலில் பாய்ந்த கணைகளைத், திரும்ப எடுத்துப், போர் புரிகின்றான். அவனுடைய வீரத்தைக் கண்டு தேவர்களே புகழ்கிறார்கள். இலட்சுமணன் தேரைத் துண்டாக்குகிறான். இந்திரஜித் மாயையினால் மறைந்து வானில் செல்கிறான். இலட்சுமணன் எல்லாத் திக்குகளிலும் அம்பினைச் செலுத்த, ஆகாயத்தில் இரத்தப் பெருக்குடன் இருந்த இந்திரஜித் கைகளைத் துண்டித்து விடுகிறான்.

மாவீரன் மறைவு

தேரின் பல்வேறு சிறப்புகளை வீடணன் கூறக் கேட்ட இலட்சுமணன், தன் வில்லின் திறமையால் கடையாணிகளைக் கழன்று போகுமாறு செய்து, பின் வைரம் வாய்ந்த மரத்தாலான அச்சையும், சக்கரங்களையும் தனித்தனியாக பிரித்தான். .  வலிமை பொருந்திய இந்திரஜித் கையை, இலட்சுமணன் வெட்டினான். இறந்த இந்திரஜித் கை, பொருந்திய வில்லோடு கிடந்தது.  இலட்சுமணன், “வேதங்களால் அறியப்படுபவனும், வேதம் படித்தவர்களால் வணங்கத்தக்க தெய்வ புருஷன் இராமன் என்பது உண்மையானால், இந்திரஜித்தைக் கொன்றுவிடு”என்று கூறி ஓர் அம்பினை ஏவுகிறார். தலை வேறு, உடல் வேறாக பூமியில் இந்திரஜித் விழுந்தான். இந்திரஜித் தலையைக் கையில் எடுத்துக்கொண்டு அங்கதன் முன்னாள் செல்ல, அனைவரும் பின் சென்று இராமனைச் சந்தித்தனர்.

“மண்டலம் வாழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்மேல்”                                                                           

(இந்திரஜித் வதைப் படலம் 3110)

இராவணன் அவலம்

இந்திரஜித் மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட இராவணன், உடலும், உள்ளமும் சோர்ந்து விழுந்துவிட்டான். “ஐயோ மகனே, உனக்கு முன் பிறந்த நான் உயிரோடு இருக்கிறேனே, நீ இறந்து விட்டாயோ? சிவனும், திருமாலும் பகை நீங்கி நிம்மதி அடைந்து விட்டார்களோ?” என்று கதறினான். பற்களைக் கடித்து, நிலத்தில் அறைகிறான். போர்க்களம் சென்று, போர்க்களத்தில் இந்திரஜித் கையைக் கண்டான். பின் தேடிப் பிடித்துத் தலையற்ற இந்திரஜித் உடலைக் கண்டு, . இராவணன் கண்ணீர் விட்டுக், கதறி அழுதான். தலையற்ற உடலை எடுத்துக்கொண்டு, அரண்மனைக்குச் சென்றான். மண்டோதரி ஆற்றாமையால் பலவாறு புலம்பி அழுதாள். இறந்த உடலை உடன் எரிக்காமல், தையில கொப்பரையில் இட்டு வையுங்கள் என்றார் இராவணன்.

                     “எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி

                      உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார்”

                                                                   (இராவணன் சோகப்படலம் 3164)

மாவீரன் இந்திரஜித் பேராண்மை மிக்கவன். இளமை துடிப்பு. அஞ்சாமை சூழ்ச்சித்திறம், போர் தந்திரம் எல்லாம் இருந்தது எனினும், அறம் இல்லாததால் அவன் இறந்து பட்டான். தன் தந்தைக்காக, இறுதிவரைப் போராடி, மரணத்தைத் தழுவினான். தந்தைக்கு நிகரான தவ வலிமையையும், வீரமும், திடமும் பெற்றவன். பகைவர்களைக் குறைத்து மதித்தல், ஆணவம்,முதலிய தந்தையின் குணங்கள் பலவற்றையும் கொண்டவன். அவனது அகங்காரம், பகைவரது வன்மையைக் குறைத்து நினைத்தது தவறாகும். இத்தவற்றை அவன் விரைவில் உணர்ந்தான். ஆயினும் போக்கிக் கொள்ள வகையில்லாமல் போயிற்று. இந்திரஜித் முதல் சேனைத்தலைவர் வரை, இராம இலட்சுமணர்களைக் குறைத்தே மதித்தனர். இதுவரை வெற்றி மட்டுமே பெற்றவர்கள் ஆதலின், தங்களைப் பற்றி மிகுதியாகவே நினைத்துக் கொண்டனர். இந்திரஜித்தனும் பகைவனைக்  குறைத்தே மதித்தான்.(இராவணன் மந்திரப்படலம்  74)

 முடிவுரை

இராம, இலட்சுமணர்களைப் பற்றி கூறியபோதும், இராவணன் கொண்ட செருக்கிர்க்கும், அவன் இப்பொழுது செய்யும் தவற்றிற்கும் காரணம், அவன் தனது பலத்தின் மீதும், இந்திரஜித் வன்மையின் மீதும் உள்ள நம்பிக்கையே ஆகும். பிறர் மனை நயத்தலாகியப், பெருந்தீங்கை இராவணன் செய்தான்.  அதனால் தானும் அழிந்து, சுற்றமும் அழியக் காரணமானான். ஆனால் இந்திரஜித் முயன்று பெற்ற தவ பயன் இருந்தும், எதிராளியைக் குறைத்து மதிப்பிட்டதும் தவிர, தந்தை மேல் கொண்டிருந்த அளவற்ற அன்பினால், இந்திரஜித் இறந்துபட்டான். தன் தந்தையின் செயல் அறச்செயல் அல்ல என்று தெரிந்தும், தானாகத் திருந்த வேண்டும் என்றே விரும்பினான். சில கருத்துக்களைத் தெரிவித்தும், தந்தை கேட்காததால், தன் உயிரையே விடத் துணிந்தான். மாயம், மும்மூர்த்தி படை, வீரம் இருந்தும், போர்க்களத்தில் இலட்சுமணனால் வீழ்த்தப்பட்டு, தலை வேறு, உடல் வேறு ஆனது. அங்கதன் தலையை எடுத்துக் கொண்டு சென்று, இராமனின் காலடியில் வைத்தான். தலையற்ற உடலைக் கண்ட இராவணன், மண்டோதரி இருவரும் கலங்கிக் கதறினர். இது அவலத்தின் சிகரம். இராவணன் வரங்கள் பல பெற்றிருந்தாலும், சாபங்களும் பல பெற்றிருந்தான். ஆனால் பல வரங்களை மட்டுமே பெற்றவன் இந்திரஜித்.  இதன் மூலம் இந்திரஜித்தனின் மாட்சியையும், வீழ்ச்சியையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

குறிப்புகள்

 

1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், 

   சென்னை,2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, 

    (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம்  

     புதுச்சேரி, சென்னை.

3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்    

    பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம்,

    கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி

    பதிப்பகம், சென்னை,2019.

6.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்‌ஷண்யா

    பதிப்பகம், சென்னை,2019.

7.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி         

   1, 2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

References

  1. Ram – in Multifacet Perspective, Sri.A.S. GnanaSambandan, Charu Publications,

Chennai, 2016,

2. Kamban – Beyond Time and Calculations, Collection of Articles, (Publishers PL.    

    Palaniappan, S.Sethupathi) Kapilan Publishing House, Puducherry,

3.Kamban –A New Search, A.S. Gnanasandharatharasu, TamilSolai Publishers,     

   Pudukkottai, 2012.

4. Ram Katha – Beyond Boundaries, PL. Karuppiach, Vijaya Publishers, Coimbatore,

    2008.

5. Poetic Emperor Kamban – A Glimpse, Tamizh Nesan, Valli Publications, Chennai, .    

    2019.

6. The Eternal World of Vaishnavites shown by Kambar, Amudhan, Lakshanya

     Publications, Chennai, 2019

7. Poovannan, Kambaramayanam Source & Text, Volumes 1,2,3,4,5,6,7,8, Vardhaman

    Publications, Chennai, 2011.