ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒப்பிட்டாய்வு நோக்கில் சீவகசிந்தாமணி காப்பியமும் நடுகல் கல்வெட்டும்

முனைவர் பிரியாகிருஷ்ணன் 27 Jul 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

இலக்கியங்களில் நாம் படித்திருக்கும் பல கதைகள் நமக்குக்  கற்பனைக்  கதைகளாகவே தோன்றும். ஆனால் அவையனைத்தும் உண்மை நிகழ்ச்சிகளாக இருந்திருக்குமோ என்று வியக்குமளவு சில கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்திருப்பது பழந்தமிழரின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு உதவுகிறது. சீவக சிந்தாமணி காப்பிய காலமும் இக் கட்டுரையில் குறிப்பிடப்படும் கல்வெட்டுக் காலமும் வெவ்வேறானவை. இரண்டிலும் கதை மாந்தர்கள் வெவ்வேறானவர்கள். ஆனால் காப்பியத்திலும் கல்வெட்டிலும் வரும் ஒத்த கதை அமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.  இதனை கருத்தில் கொண்டு  ஒப்பிட்டாய்வு நோக்கில் சீவக சிந்தாமணிக் கதையையும்  நடுகல் கல்வெட்டுச் செய்தியையும் ஆய்வுக்கு உட்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract; 

Many of the stories we read in literature appear to us to be fictional stories. But the discovery of some inscriptional evidences that all of them may have been true events helps in studying the history of Palandamizhar. The period of Sivaka Chintamani's record and the period of the inscription referred to in this article are different. In both the storytellers are different. But the similar narrative structure found in the copy and the inscription amazes us. Taking this into consideration, the aim of this article is to compare and analyze the story of Sivaka Chintamani and the Nadukal inscription.

Key words: Seevagachinthaamani, Epics, Inscription,Tamil, Herostone

திறவுச் சொற்கள்: சீவக சிந்தாமணி, காப்பியங்கள், கல்வெட்டு, தமிழ், நடுகல்

ஆய்வு நோக்கம்:

தினமணி (08/01/2023) நாளிதழில்   ’சீவக சிந்தாமணியும் நடுகல் கல்வெட்டும்’ என்னும் தலைப்பில் இக்கட்டுரை என்னால்  சுருக்கமாக எழுதப்பட்டு வெளிவந்தது. மேலும் சில முக்கிய தகவல்களை இணைத்து இக்கட்டுரை விரிவாக எழுதப்பட்டுள்ளது.

தகடூரும் பாணர் அரசர்களும்:

தகடூர் நாட்டில் முல்லையும், குறிஞ்சியும் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி மற்ற நாடுகளுடன் இணைய வாய்ப்பின்றி போய்விட்டது.  தொல் பழங்காலம் தொட்டு கி பி 10 ஆம் நூற்றாண்டு வரை இனக்குழு அமைப்பே நிலவியது. இனக்குழு மக்களிடையே கால்நடைகளே சொத்தாகக் கருதப்பட்டன. இத்தகைய கால்நடைகளை ஒரு இனக்குழுவிடமிருந்து மற்றொரு இனக்குழு கவர்ந்து செல்வது அக்கால வழக்கமாக இருந்தது. அவ்வாறு கவர்ந்து சென்ற கால்நடைகளை வீரம் கொண்ட மறவர்கள் மீட்டு வருவது அவர்களின் இனக்குழுக்களுக்குப் பெருமையை சேர்ப்பதாக இருந்தது. அப்போது அக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பூசல்களில் வீரமரணம் எய்திய வீரர்களுக்கு நடுகற்கள் எடுக்கப்பட்டன. நடுகற்கள் அந்தந்த இனக்குழுவைச் சார்ந்தவர்களே எடுத்தனர் என்றும் அறிகின்றோம். தகடூர்ப் பகுதியில் இதைப்போன்ற நடுகற்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தகடூரை பல்வேறு குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகியவற்றின் எல்லையில் தகடூர் நாடு அமைந்ததாலும் இப்பகுதியில் காடுகளும் மலைகளும் உள்ளதாலும்  இங்குத் தனியாக ஒரு அரச மரபு உருவாக வாய்ப்பின்றி போய்விட்டது. இதனால் மற்ற பகுதியிலிருந்த சிற்றரசர்கள் அடிக்கடி இப்பகுதியின் மேல் படை எடுத்து வந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் தொடர்ந்து குழப்பங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களுள் பாணர் அல்லது வாணர் என்போர் சங்க காலம் தொடங்கி நாயக்க அரசு தமிழகத்தில் ஏற்படுவதற்கு முன்புவரை சிறுசிறு பகுதியையோ பெரும் பகுதியையோ ஆண்டு வந்துள்ளனர். ’ எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர் ’(அகம்;113), “நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை” (அகம்:325) ஆகிய அகநானூற்றுப் பாடல்கள் பாணர்களைக் குறித்துப் பதிவு செய்கின்றன. பல்லவர், கங்கர் போன்று வாண அரச மரபினர்களின் கல்வெட்டுக்களும் தகடூர் பகுதிகளில் கிடைக்கின்றன. இவர்கள் தங்களை மகாபலிச் சக்கரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்களுடைய கல்வெட்டுகளும்  நடுகல்  கல்வெட்டுகளாகவே கிடைக்கின்றன. மாவலிவாணராயர், கந்தவாணாதியரையர்,    அரிமிறை பருமர்  போன்ற மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டில் வருகின்றன. மாவலி வாணரின் ஆட்சிக்காலம் கி பி 8, 9 ஆம் நூற்றாண்டு என அறிஞர்களால் கருதப்படுகிறது.  நந்தகிரியின் தலைநகரான கோலார் மாவட்டமே பாணரின் தாயகம் என்பர். எனினும்  கர்னூல்   மாவட்டம் வரை இவர்கள் பரவி இருந்தனர். இவர்களின் ஆட்சிப்பகுதி   வாணர்நாடு,  பாணப்பாடி,  பெரும்பாணப்பாடி,  வடுகுழி என்றெல்லாம் அழைக்கப்பட்டது. மேலைக் கங்கருடன்  பகை கொண்டிருந்த பாணர் பல்லவரின் கீழ் நாடாண்டுள்ளனர்.

பாணரின் நடுகல் கல்வெட்டு:

சங்க இலக்கியங்கள் நடுகற்கள் குறித்து விரிவாகப் பேசுகின்றன. சங்க காலந்தொட்டு தமிழகத்தில் நடுகற்கள் வழிபாட்டில் இருந்துள்ளதை தொல்காப்பியம் முதலே அறிகின்றோம். அந்த வகையில்  கி பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த,  தருமபுரியில் கிடைத்த பாணர்களின் நடுகற் சிற்பம் ஒன்று தமிழ் கல்வெட்டுடன் காணப்படுகின்றது. இந்த நடுகல் தருமபுரி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில்  உள்ள வீரனின் உருவம் நின்ற நிலையில் உள்ளது.  அம்புகளால் தைக்கப்பட்டு,வீரன் வில்லுடன் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் வாளும் கொண்டு காணப்படும் இந்த  நடுகல் வீரனின் இரு மருங்கிலும் தமிழில் கல்வெட்டு எழுத்துகள்  காணப்படுகின்றது.  இந்த நடுகல்லில் உள்ள கல்வெட்டின் படி, தகடூர்ப் பகுதியை மாவலிவாணராயர் என்பவர் ஆண்டு வந்தார். நுளம்பன் என்பவன் அவருடைய உறவினன் போல் நடித்து, வஞ்சித்து அவரது நாட்டைக் கைப்பற்றினான். இதனால் இருவருக்கும் போர் நிகழ்ந்தது. அதில் மாவலிவாணராயர் வீரமரணம் அடைகிறார். அவ்வேளையில்  அவர்தம் மனைவி கருவுற்றிருந்தாள். சங்கரக்குட்டியார் என்பவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அத்தேவியைக் காப்பாற்றி அவளுக்கு ஆண்மகவு பிறந்தபின், பெரும்படையொன்றைத் திரட்டித் தன் தலைவனை வஞ்சித்துக் கொன்ற நுளம்பன்மீது போர் தொடுத்தார். அப்போரில் சங்கரக் குட்டியாருடன் உதவிக்குச் சென்ற நாகந்தைச் சிறு குட்டியார் என்ற வீரன் இறந்துபட்டான், அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. அந்த நடுகல்லில் அவனது பீடும் வீரமும் பொறிக்கப்பட்டது.

கல்வெட்டுப்படி:

…ஸ்ரீ அரிமிதைய மாவலி வாணராயர்…..

அவர்க்குத் தாநாகிப் பிள்ளைய்கொண்டுள் புகுந்து

வஞ்சித்து நாடுகொண்டா  னுளம்பன்

அவர் போரிற்றுஞ்சின பின்னைத் தேவிமார் கருப்பிணி

யருளராக அவளைக்காத்திருந் தாண்பிள்ளைப் பெறுவதுந்

தகடூர் புகுந்து நுளம்பன் பலத்தோடே துணிந்து

நாடு பாவிநார் சங்கரகுட்டியார் அவரோடுடன் புகுந்து

தகடூரில் பட்டார் நாகந்தை சிறுகுட்டியார் கல்நடு

என்பது கல்வெட்டு வரிகளாகும்.

சீவக சிந்தாமணி கதை:

திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.  ஏமாங்கத  நாட்டு அரசன்  சச்சந்தன்  தனது மனைவி  விசயை  என்பாளின் மீது கொண்ட காதலால் கட்டியங்காரன் என்னும் அமைச்சனிடம்  ஆட்சிப் பொறுப்பை  ஒப்படைத்துவிட்டுக்  கருவுற்ற தனது மனைவியுடன் காலம் கழிக்கிறான்.  இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்  கொண்ட   கட்டியங்காரனோ தனது சூழ்ச்சியால் மன்னன்  சச்சந்தனை  கொன்று,  ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றுகிறான். இதற்கிடையில் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட சச்சந்தன் தனது மனைவியை மயிற்பொறியில் வைத்து தப்பிக்கச் செய்கிறான். இடுகாட்டில் விசயை ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தைப் பருவம்  முதற்கொண்டு சீவகனைக்  கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வருகிறான்.  உரியப் பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைகொண்டு போரிட்டு தன்நாட்டை கைப்பற்றுகிறான்  சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி என்னும் காப்பியம்.

சீவக சிந்தாமணியும் நடுகல் கல்வெட்டும் :

சீவக சிந்தாமணி காப்பிய காலமும் இக்கல்வெட்டுக் காலமும் வெவ்வேறானவை. சீவக சிந்தாமணியின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.இக்கல்வெட்டின் காலம்  கி பி 8 அல்லது 9 என்று எழுத்தமைதி கொண்டும் அரசனின் ஆட்சிக்காலம் கொண்டும் ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. சீவக சிந்தாமணி காப்பியத்தில் வரும் கதையினை ஒத்ததாக நடுகல் கல்வெட்டுச் செய்திக் காணப்படுகின்றது. இரண்டிலும் கதை மாந்தர்கள் வெவ்வேறானவர்கள். ஆனால் காப்பியத்திலும் கல்வெட்டிலும் வரும் ஒத்த கதை அமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.

முடிவுரை:

இவ்வாறாக இலக்கியமும் கல்வெட்டும் சொல்லும் கதைகள் உண்மைத் தன்மையுடனும் சில கதைகள் ஒரேமாதிரியும்  இருப்பதை அறியமுடிகின்றது. பொதுவாகவே அரசர் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற துரோகங்களை சந்திப்பதும் ,அவருக்கு விசுவாசமாக இருப்பவர்கள் தொடர்ந்து போராடி இளவரசருக்கு உரிய வயது வரும்வரை காத்திருந்து அவருக்கு முடிசூட்டி மகிழ்வது கடைமையாக இருந்திருப்பதை இவ்விரு கதைகளும் நமக்கு தெரிவிக்கின்றன. காப்பியம் கூட கற்பனை என்று கருதினாலும்க்கூட இக்கல்வெட்டுச் செய்தியின் உண்மைத்தன்மை அன்றையக் காலத்தின் நிகழ்வினை நமக்கு பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.