ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பெண்ணியச் சிக்கல்கள் பேசும் ஹைக்கூக் கவிதைகள் (Haiku Poems on Feminist Issues)

முனைவர் சா. சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) கோயம்புத்தூர்-641 105. 27 Jul 2023 Read Full PDF

 

                                   

ஆய்வுச்சுருக்கம்: மனித இனத்தின் தோற்றத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் பெண்கள். அத்தகைய பெண்ணினத்தை இன்றைய சமுதாயம் இன்றளவும் புறக்கணித்துக் கொண்டே வருகின்றது. பெண்கள் தங்களை இச்சமுதாயத்தில் நிலைநிறுத்திக் கொள்ளவும், பெண்ணினத்தை அடையாளப்படுத்திக் கொள்ளவும் வேண்டி பிறப்பு முதல் இறப்பு வரை போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். சமுதாயத்தில் பெண்ணினத்திற்கு எதிராக நிகழும்வன்கொடுமைகளையும்,சிக்கல்களையும்பற்றி பெண்ணியச் சிந்தனையாளர்களும், பெண்ணிய எழுத்தாளர்களும் தங்கள் கருத்துக்களை வலியுறுத்திக் கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. இன்றைய சூழலில் பெண்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களைக் ஹைக்கூ கவிதைகளின் வழி எழுத்தாளர்கள் எவ்விதம் பதிவு செய்துள்ளனர் என ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract :     Wom are responsible for the origin of the human race. Today's society continues to ignore such women. Women are struggling from birth to death to establish themselves in this society and to identify womanhood. It can be seen that feminist thinkers and feminist writers are emphasizing their views on the atrocities and problems against women in the society. The purpose of this article is to study how the writers have recorded the problems faced by women in today's environment through haiku poems.

திறவுச்சொற்கள்: கவிதைகள், ஹைக்கூக் கவிதைகள், சிக்கல்கள், பெண்ணியச் சிக்கல்கள்.

Keywords : Poems, Haikoo Poems, Issues, Feminist Issues

பெண்ணியம்:

      பெண்ணியம் என்பது பெண்களுக்கு சமத்துவம் கேட்டுப் போராடிய மேற்கத்தியக்  கோட்பாடாகும். இதனை ஆங்கிலத்தில் ‘குநஅinளைஅ’ என்பர். சமூகத்தில் பெண்களுக்கெதிராக நிகழும் சிக்கல்களைப்பற்றி பெண்களே பேசுவது ‘பெண்ணியம்’ எனலாம். “பெண் என்ற பொருளைத் தரும் ஃபெமினா((femina)) என்ற இலத்தீன் வேர்ச்சொல் ‘இசம்’ என்னும் அடைச்சொல்லும் சேர்ந்து ‘பெமினிசம்’((feminism)) என்றழைக்கப்பட்டது. ‘Feminism’ என்ற பிரெஞ்சுச் சொல்லில் இருந்து ஃபெமினி என்னும் ஆங்கிலச்சொல் பிறந்து ‘ஸ்மினிசம்’ என்ற சொல் கி.பி. 1880 - இல் பெண்களின் அரசியல் உரிமைகள் பற்றித் தட்டிக் கேட்கவே முதலில் பயன்படுத்தப் பெற்றது” (பெண்ணியம் பேச, ப.15) என்று இளமதி ஜானகிராமன் குறிப்பிட்டுள்ளார்.

      சமூகத்தில் அன்றாடம் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து, “பெண்ணியம் என்பது முதலில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைக் குறித்தது. கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், சொத்துரிமை, வாக்களிக்கும் உரிமை, நாடாளுமன்றத்திற்குச் செல்லும் உரிமை, பிறப்புக் கட்டுப்பாடு செய்யும் உரிமை, மணவிலக்கு உரிமை முதலியவற்றிற்காகப் பெண்ணியவாதிகள் போராடினர். குடும்ப அமைப்பினால் பெண்கள் சுரண்டப்படுதல், தொழிலிலும், சமூகத்திலும், நாட்டின் கலாசாரத்திலும் பெண்கள் தொடர்ந்து இரண்டாம் நிலையாகவே மதிக்கப்படுதல், பெண்கள் உற்பத்தியிலும், இனமறு உற்பத்தியிலும் ஈடுபடுவதால் ஏற்படும் இரட்டைச்சுமை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை உள்ளடக்கியதாக இன்றைய பெண்ணியம் அமைந்திருக்கிறது” (அபர்ணாமகந்தா, மார்க்சியமும் பெண்ணிலைவாதமும், பக்.12,13) எனும் கூற்றானது பெண்ணியச்சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.

      பெண்களை மதிப்பதிலும், பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதிலும் பல்வேறு பாரபட்சங்கள் நிலவிவருகின்றது. இதனை சமுதாயத்திற்கு அடையாளப்படுத்துவதில் ஹைக்கூ எழுத்தாளர்கள் சிறப்பிடம் பெறுகின்றனர்.

பெண்சிசுக் கொலை:

      நம் சமூகத்தின் தீராசாபக்கேடு என்று ‘பெண்சிசுக் கொலை’யைக் கூறலாம். கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கூறுவது சட்டப்படிக் குற்றம் என்று சட்டம் வலியுறுத்தி வந்தாலும், அவ்வப்போது ஏதாவது ஒரு இடத்தில் பெண்சிசுக்கொலையும், கருவிலேயே பெண் குழந்தையை இனம் கண்டு அழிப்பதும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

      வீட்டினில் வளர்க்கும் பசு பெண் கன்று ஈன்றால் மகிழும் மனித சமுதாயம், குடும்பத்தில் தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால் அதை இழிவாகவும், குடும்பத்தின் பாரமாகவும் கருதுவதைக் காணமுடிகின்றது.

      குழந்தைப் பருவத்தில் பால் குடியை மறக்க வைப்பதற்காக, கசப்பான மருந்தைக் கொடுப்பதற்கு மனமின்றி, தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மருந்து கொடுக்கும் தாயின் மனநிலையை,

                         “ப்ரியமில்லாமல் தாய்

                        கசப்பு கொடுத்தாள்                                                           பால்குடிமறக்கும்குழந்தை”

                     (கம்பம்மாயவன், மின்மினியின்வெளிச்சத்தில்,   ப.29-5)

           என விவரிக்கும் கவிதை ஒருபுறமிருக்க, அதே பெண் குழந்தை பிறந்தபோது, அதன் தாயிற்கே தெரியாமல் கள்ளிப்பால் கொடுத்துக் குழந்தையைக் கொல்லும் சமூக அவலத்தைக் கீழ்க்காணும் கவிதை எடுத்துரைக்கிறது.

“தாய் தராத பாலை                                                           

கள்ளிச்செடி தருகிறது                                                      

பெண் குழந்தைக்கு” (கவி பாரியன்பன், கிளைக்குத் திரும்பும் இலைகள், ப.40-2)

      கள்ளிப்பாலுடன் மட்டும் நில்லாது, பெண் குழந்தைகளைத் தலையணையால் அமுக்கிக்கொள்ளுதல், தண்ணீர்த் தொட்டியில் அமுக்குதல், தரையோடு தரையாக சேர்த்து அடித்துக் கொள்ளுதல், தெருவோரக் குப்பைத் தொட்டிகளில் வீசிச்செல்லுதல் போன்ற பல்வேறு வழிகளிலும் குழந்தைகளைக் கொல்லும் நிகழ்வுகளை நாளேடுகளில் வெளிவரும் செய்திகள் வழி அறியமுடிகின்றது. 

பெண் உடல் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:

      பெண்ணானவள் வளர்கின்ற போதும், பருவமடைந்து, மணமுடித்து, குழந்தை பெற்றெடுத்த பின்னரும் எனப் பலநிலைகளிலும் பாதிக்கப்படுகின்றாள். இதற்குக் காரணம் ஆணாதிக்கச் சமுதாயம் எனலாம்.

      ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணின் உடல் என்பது ஆணுக்கு எப்போதும் கவர்ச்சி மிக்கதும், சுகம் தருவதுமான ஒரு பொருள் என்கிற புரிதல் உற்பத்தியில் ஆணிடம் மட்டுமல்லாமல், பெண்ணிடத்திலும் நிரம்பியுள்ளது. தனக்குச் சொந்தமில்லாத பெண்ணைக்கூட காமக்கண்ணோடு பார்க்கும் அவலத்தை, “பெண்களைக் காணுமிடமெல்லாம் ஆண்கள் உற்றுப் பார்த்தலைச் (அயடந பயணந) சாதாரணமாகக் காணலாம். கசாப்புக் கடைக்காரன் தான் வாங்கப் போகும் ஆட்டையோ, மாட்டையோ பார்ப்பது போன்ற பார்வை, இத்தகைய மேய்ச்சற்பார்வை ஆணின் ஆதிக்கத்தையும், அவர்கட்குப் பெண் மேலுள்ள அவாவையும் காட்டுகிறது. ஆண் தன் பாலுணர்வுத் தாக்கத்தைத் தீர்க்கும் ஒரு பொருளாகவே பெண்ணைப் பார்க்கிறான்” (பெண்ணடிமை தீர, ப.90) என்ற செ.கணேசலிங்கம் கூற்றிற்குச் சான்றாக,

“சல்லடையாய்ப் புடவை                                                   

எட்டிப் பார்க்கும் வறுமை                                                          

முந்தும் காமக் கண்கள்” (கன்னிக்கோவில் இராஜா, ஆழாக்கு, ப.26-1)

           அமையும் இக்கவிதை,  வறுமை நிலையில் மானத்தை மறைக்க அணிந்திருக்கும் ஆடைகளில் ஏற்பட்டுள்ள கிழிசல்களிலும்  ஊடுருவும் ஆண்களின் வக்கிரப் பார்வையைத் தோலுரித்துக்காட்டுகிறது.

வரதட்சணைக்கொடுமை:

            நம்முடைய சமூக அமைப்பானது குடும்ப வாழ்க்கையை முன்னிறுத்தியே வைக்கப்படுகிறது. குடும்ப அமைப்பு என்பது ஆண், பெண் கூடி வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது. ஆண், பெண் என்ற பந்தத்தை இணைப்பது ‘திருமணம்’ ஆகும். திருமணத்தின் முதல் தடைக்கல்லாக அமைவது ‘வரதட்சணை’ எனலாம்.

      திருமண வாழ்வின் நிலை குறித்து சு.வேங்கடராமன் கூறுகையில், “திருமண வாழ்வு என்பது அன்பால் இருமனங்கள் ஒன்றி அன்புப் பயிர் வளர்க்கும் இல்லறமாகும். தனிமனிதன் என்ற நிலை மாறி குடும்பம் உருவாகி, வளர்ந்து, சமூகத்தின் ஓர் அங்கமாக முழுமலர்ச்சி பெறுவது. ஆண், பெண் இருவரையும் உருவாக்குவது திருமண வாழ்வின் அடிப்படையாகும்” (எண்பதுகளில் தமிழ்ப் புனைகதைகளில் பெண்ணியம், ப.1) என்று குறிப்பிட்டுள்ளார்.

      வரதட்சணை பெற்று நடக்கும் திருமணத்தைப் பற்றிக் ஹைக்கூ எழுத்தாளர்கள்,

“வரதட்சணைக் கூத்து                                                        

பணத்தோடு இலவசமாய்                                                          

பெண்ணும்” (அ.இஷாக், முன் அறிவிப்பு, ப.14-2)

     எனும் இக்கவிதையில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுப்பது மாறி, வரதட்சணையின் இலவச இணைப்பாய் பெண் செல்வதாக திருமணம் அமைவதை எழுத்தாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதிர்கன்னிகள்:

      திருமண வயது வந்தும் திருமணம் நிகழாமல் வாழும் பெண்களை இச்சமூகம் ‘முதிர்கன்னிகள்;’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு முழுமுதற்காரணம் வறுமையும், வரதட்சணைக் கொடுமையும் ஆகும்.

      குடும்பத்தின் வறுமை காரணமாக தன் பெண்ணின் திருமணம் நடைபெறாமல் போன தாயின் மனவருத்தத்தை பின்வரும் ஹைக்கூ கவிதை

“ஏறியது இறங்கவேயில்லை                                            விலைவாசியும்                                                                

மகளின் வயதும்”  (ஸ்ரீரங்கபுரம் துளசி, எலிக்குஞ்சும் படிநெல்லும், ப.27-3)

 வரிகளும்,

 “தங்கம் இல்லை                                                                   

தலையில் வெள்ளி                                                     

முதிர்கன்னிகள்” (ஆர். அஸ்லம்பாஷா, மனசுப்பூக்கள், ப.47-1)   

        என்ற கவிதையில் இன்றைய திருமணத்தில் ‘தங்கம்’ முதன்மை வகிப்பதும், மாப்பிள்ளை வீட்டார் கேட்கும்; தங்கத்தைத் தரமுடியாமல் போனதால் பெண்ணின் தலைமுடி நரைத்துப் போய் ‘வெள்ளி’ தோன்றிவிட்டதாக ஆதங்கப்படுகிறார் கவிஞர்.

தாய்மையின்மை நிலை:

      ஆண், பெண் திருமண பந்தத்தின் இன்றியமையமையாகப் ‘பிள்ளைப்பேறு’ திகழ்கிறது. ஒரு பெண்ணானவள் திருமணத்திற்குப்பின் பிள்ளைப்பேறடைவதை ‘தாய்மை’ நிலை என்றும், தாய்மை நிலையில் தான் பெண் முழுமையடைகிறாள் என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. தாய்மைப் பேறில்லாப்பெண் இச்சமூகத்தில் பெரிதும் புறக்கணிக்கப்படுகிறாள். அதனால் அவள் அடையும் மனவேதனை மிக அதிகம். அவளை இச்சமூகம் ‘மலடி’ என்னும் வார்த்தையால் சுடுகிறது. ஒரு பெண் பிள்ளையை சுமந்து பெற்றெடுக்காவிடில் அவள் பெண் என்று அங்கீகரிக்கப்படமாட்டாள் என்பதைத் தமிழ்க் களஞ்சியம் “ஒரு பெண் பிள்ளையைப் பெற்றெடுத்தால் மட்டுமே முழுமையான பெண். இல்லையேல் அவள் முழுமையான பெண்ணுக்குரிய இலக்கணத்திலிருந்து விலக்குப் பெற்றவள்” (புதுவை ஆய்வுகள், ப.102) என்று விளக்கம் அளிக்கின்றது.

      பிள்ளைப்பேறு அடையாத பெண்ணின் இயல்பினைப் பற்றி,

“பிள்ளைப்பேறு இல்லை                                                        

மாதந்தோறும் அழுகிறது                                                         

கருப்பை” (தமிழ்மதி, மழைப்பாட்டு, ப.46-4)

       எனும் கவிதை வரிகளும், பூ பூக்காத செடிகளில் வண்ணத்துப்பூச்சி வந்தமர்வதை, ஏன் உன்னில் இன்னும் பூ மலரவில்லை என்று விசாரிப்பதாக உவமைப்படுத்தும் கவிதையில்,

            “பூவில்லாச் செடி                                                           இலை மேலமர்ந்து                                                              விசாரிக்கும் பட்டாம்பூச்சி” (நாணற்காடன், பிரியும் நேரத்தில், ப.45-4)       எனும் வரிகளின் வழி ‘குழந்தைப்பேறு அடையாத’ தாயின் மனவருத்தத்தையும், பெண்ணைச் செடியாகவும், உறவினர்களை பட்டாம்பூச்சியாகவும் உவமித்துக் கூறித் தாயின் மனவருத்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவுரை:

      காலந்தோறும்பெண்களுக்குசமூகத்தால் பல இன்னல்கள் நடைபெற்றுக்கொண்டே வருகின்றது. இதனை நாம் கண்டும் காணாமலும் இருந்து வருகிறோம். பெண்களுக்கு அவ்வப்போது நடக்கும் அநீதிகளுக்கு சட்டம் பல்வேறு தண்டனைகளை வழங்கி வரினும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. ஒரு வயதுப் பெண் குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையினை ஹைக்கூ கவிஞர்கள் தங்களது படைப்புகள் மூலம் உலகிற்கு அறிவுறுத்த முனைவதை இலக்கிய உலகிற்கு எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

அடிக்குறிப்பு நூல்கள்:

1.இளமதி ஜானகிராமன், பெண்ணியம் பேச, குறிஞ்சி பதிப்பகம், புதுச்சேரி, மு.ப – 2002

2. அபர்ணாமகந்தா, மார்க்சியமும் பெண்ணிலைவாதமும், பொன்னிநிறுவனம் , சென்னை ,இ. ப-1990

3. மாயவன் , கம்பம்.,  மின்மினியின் வெளிச்சத்தில், அன்புநிலை பதிப்பகம் ,   அம்மையப்பட்டு , வந்தவாசி -604 408,மு ப 2004

4. பாரியன்பன், கவி.,கிளைக்குத் திரும்பும் இலைகள், அகநி வெளியீடு ,3,பாடசாலை வீதி,  அம்மையப்பட்டு , வந்தவாசி -604 408

5. கணேசலிங்கம், செ., பெண்ணடிமைத்தீர, குமரன் பப்ளிகேஷன் வடபழனி, சென்னை, ஐ. ப -2001

6.வேங்கடராமன்,சு.,எண்பதுகளில்தமிழ்ப்புனைகதைகளில்பெண்ணியம்,உலகத்

   தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை மு.ப 1993

7.அ.இஷாக், முன்னறிவிப்பு, கவின் நூல் பயணம், 36,தோப்பு தெரு , அம்மையப்பட்டு , வந்தவாசி மு.ப 2006

8. தமிழ்மதி, மழைப்பாட்டு, மழைப் பதிப்பகம், வடக்கு வயலூர், க.நெல்வாய்( அஞ்சல்), காஞ்சிபுரம் ,மு.ப 2011

9,நாணற்காடன், பிரியும் நேரத்தில், கவின் நூல் பயணம், 36,தோப்பு தெரு , அம்மையப்பட்டு , வந்தவாசி மு.ப 2006

10.ஸ்ரீரங்கபுரம் துளசி, எலிக்குஞ்சும் படிநெல்லும், அகநி வெளியீடு ,3,பாடசாலை   வீதி,  அம்மையப்பட்டு , வந்தவாசி -604 408

11.ஆர்.அஸ்லம்பாஷா, மனசுப்பூக்கள், மின்னல் கலைக்கூடம், 117,எல்டாம்ஸ் சாலை , சென்னை, மு ப 2010.