ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழில் இணையஅகராதிகளின் வளர்நிலைகள் (Developments of Online Dictionaries in Tamil)

முனைவர் செ.நான்சி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி 27 Jul 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

     தமிழ்-தமிழ், தமிழ்-பிறமொழிகள்,பிறமொழிகள்-தமிழ் என்னும் மூன்று வகைப்பாடுகளில் தமிழ் அகராதிகள் பெருகி வருகின்றன. நாளும் உருவாகி வருகின்ற பல்துறை சார்ந்த அகராதிகளும் கலைக்கலஞ்சியங்களும் அகராதியியலின் பரப்புக்கு உட்பட்டவையே. சொல்வளத்தையும், பொருள் வளத்தையும், பொருள் உணர்த்தும் முறையையும் அகராதியியலின் பின்னணியில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

Research Summary
     Tamil dictionaries are proliferating in three categories: Tamil-Tamil, Tamil-Foreign Languages, and Foreign Languages-Tamil. Multidisciplinary dictionaries and encyclopedias that are being developed every day fall under the scope of lexicography. The purpose of this paper is to examine vocabulary, meaning and meaning in the context of lexicography.

முன்னுரை

     ஒருமொழியின் செழுமை அம்மொழியில் எழுந்துள்ள இலக்கிய, இலக்கண உருவாக்கங்களைப் பொருத்து அமைகிறது. அகராதி உருவாக்கமும் அதனை அடியொற்றியதே ஆகும்.  சமூகவரலாற்றையும் மொழிவரலாற்றையும் அறிய இலக்கியங்களும், மொழியின் ஒழுங்கைஅறிய இலக்கணங்களும் பயன்படுவதைப் போலச் சொற்பொருளை அறிய அகராதிகள் துணைசெய்கின்றன. இத்தகைய அகராதிகள்  உலகையே உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட இணையத்தில் தம் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன. தமிழில் இன்றுபெரும் பயன்பாட்டில் உள்ள இணையஅகராதிகளின் வளர்நிலைகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

அகராதி-விளக்கம்

      மக்கள் பயன்படுத்துகின்ற சொற்களின் தொகுப்பே அகராதி.அகராதி இயற்றும் கலை மிகப் பழமையானது. மொழிகள் எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. அவை மாறிக்கொண்டே வளருகின்றன. அதனால் மக்கள் தங்களுக்குப் புரியாத சொற்களைக் காண்கின்றனர். “இந்தியாவில் முதன்முதல் தோன்றியவை நிகண்டுகள். இவை பெரும்பாலும் மக்களுக்குப் புரியாத சொற்களைத் திரட்டிக் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டன. அவர்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி அவர்கள் காலத்தில் வழக்கொழிந்த சொற்களைத் திரட்டுவதே இவர்களுடைய நோக்கம். இவர்கள் ஒரே பொருளுக்குரிய சொற்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டிக் கொடுத்தனர். பொருளின் அடிப்படையில் திரட்டிக் கொடுப்பதே அகராதியின் ஆதிவேலையாக இருந்தது”1என்னும் முத்துச்சண்முகத்தின் கருத்து அகராதியின் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது.

      “அகராதி,குறிப்புநோக்கீட்டிற்குரிய நூல். இலக்கியம் போலப் பயிலுதற்குரிய நூலன்று. ஆதலின் எளிதில் குறிப்புநோக்கீட்டிற்கு உதவும் வகையில் பெரும்பாலும் அகரநிரலில் சொற்கள் அமைக்கப்பட்டு அகராதி ஆக்கப்படுகிறது”2  என்று அகராதியின் போக்கினை ஜெயதேவன் எடுத்துக்காட்டியுள்ளார்.

அகராதி–சொல்விளக்கம்

      ‘டிக்ஷனரி’  என்னும் சொல் முதன் முதலில் தாமஸ் எலியட் என்பவரால் 1538 இல் மேற்கில் ஆளப்பட்டது. ‘அகராதி’ என்னும் சொல் 1594 இல் முதன்முதலில் இரேவணசித்தரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவும் ஆளப்பெறும் இவ்விருசொற்களும் ஒரே நூற்றாண்டில் அறிமுகமான ஒருமைப்பாடு ஓர்ந்து இன்புறத்தக்கது.

      அகராதித்துறை நூற்பெயர்களுள்ளேயே அகராதி அல்லது அதற்குமாற்றாக ஆளப்பெறும் அகரவரிசை,அகரமுதலி,அகரி போன்ற பெயர்களே அகராதியியலின் ஒருபெரும் கூறாக  விளங்கும் அகரநிரல் வனப்பைச் சுட்டுகின்றன. இச்சிறப்பு டிக்ஷனரி, கோசம் ,நிகண்டு, அபிதானம், நாமமாலை போன்ற பிறபெயர்களில் இல்லை.

      இன்று கணிப்பொறி இணையம் ஆகியவற்றின் காலத்தில் நாம் இருப்பதால் அதற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சியை நம் செம்மொழித் தமிழ் பெறவேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் இணையத்தில் தமிழ் மின் அகராதி என்ற ஒருபகுதியைத் தமிழ் ஆர்வலர்கள், நூலக உரிமையாளர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

இணையஅகராதிஅல்லதுமின் அகராதி

      “இணையஅகராதிஅல்லது மின்அகராதி  என்பது    பொதுவாக    உருவாக்கப்பட்ட ஓர் அகராதியை இணையத்துடன் இணைத்துக் கணினியின் மூலம் தரவுகளைப் பெறுவதாகும். இணையஅகராதிஎன்று கூறும்போது  ஏற்கனவே நம்மால் உருவாக்கப்பெற்ற அகராதியை இணையதளத்துடன் இணைத்துப் பயன்படுத்துவதாகும்”3

இணையஅகராதி  என்பது ஆங்கிலத்தில் on line dictionary  என்று பொருளாகக் கொள்ளலாம். இந்த ஆன்லைனுக்கு இணையாகத் தமிழில் கலைச்சொற்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. அவை உடன்நிகழ் ,தொடரா ,நேர்முகம், நேரடி என்பன. எளிமையும் பயனும் கருதி இணையம் என்ற கலைச்சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

“இணையஅகராதிஅல்லதுமின் அகராதி என்பது பொதுவாக உருவாக்கப்பட்ட ஓர் அகராதியை இணையத்துடன் இணைத்துக் கணினியின் மூலம் தரவுகளைப் பெறுவதாகும்.”4

இணையம், விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகையே நம் வீட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் வாய்ந்தது. உலகையே குவலயக் கிரமமாக மாற்றும் அதிசய சக்திகொண்டது. கனடாவில் வாழும் குயின்ரஸ் துரைசிஸ்கம் தமிழர் தகவல் 2001 ஆம் ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரையில் இணையப் பயன்பாடு பற்றித் ‘தமிழ்நாட்டில் சங்க இலக்கியக் கூட்டம்,புட்டபர்த்தியில் சத்யசாய் பாபாவிழா, விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்கவிளையாட்டு, மெல்பேர்னில் காவடி, மல்லாவியில் கண்ணிவெடி, கண்டகாரில் கண்ணீர் புகை என்று எதை வேண்டுமானாலும் நினைத்தவுடன் இழுத்துப்பிடித்து அதுகுறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்துவிடக் கூடிய அதிசய உலகம் இந்த மென்வலை. நல்லநாள் பார்ப்பதற்குச் சாத்திரியிடம் போனாலென்ன, திருமகளே நாதஸ்வரம் ஒழுங்கு பண்ணும் தேவையாயிருந்தாலென்ன, ஏன், இலங்கையிலிருந்து போயிலையும், கருவாடும் யார் யார் இறக்குமதி செய்கிறார்கள் என்று அறிந்துகொள்ளவும் கூட இந்த மென்வலை உதவிபுரிகிறது என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

தமிழ் இணையக் கல்விக் குழுமம்

      தமிழ் இணையக் கல்விக்குழுமத்தால் தோற்றுவிக்கப்பட்ட  கலைச்சொல் மின் அகராதி .இது ஆய்வாளர்களுக்கும் மொழி அறிஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் சமுதாயவியல் சார்ந்தசொற்களைநாம் தேடிப் பெற்றுகொள்ளலாம்.

      இவை போலவே மருத்துவவியல், கால்நடைமருத்துவவியல், உயிர்தொழில்நுட்பவியல், கலைமற்றும் மானுடவியல், தகவல் தொழில்நுட்பவியல், வேளாண்மைப் பொறியியல், அறிவியல், சட்டவியல், மனையியல், கலைச்சொல் பேரகராதி என்று ஒவ்வொரு துறையும் பகுதிவாரியாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர்.

தொழில் நுட்பம் மின் அகராதி

      தொழில் நுட்பமின் அகராதியில் தமிழ் மின்னியல், மின்னணுவியல் ,கணினியியல் சொல் அகராதி சிறந்த பல கலைச்சொற்களைத் தருகிறது. எந்தெந்ததுறையைச் சார்ந்தவரும் தனது கருத்தை வெளியிடவும், எழுத்தாளர்களும் அவரவர்களுக்குத் தேவையான கலைச்சொல்லினைப் பெறவும் இது உதவுகிறது.

      கணிப்பொறி, மின்னணுவியல், மின்னியல் போன்ற துறைகளின் கலைச்சொற்கள் இம் மின் அகராதியில் அதிகம் இடம்பெற்றுள்ளன. நவீனதமிழ் அருஞ்சொற்பொருள் என்ற பகுதியில் ஆங்கில எழுத்துவரிசைப்படி ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழ்ச் சொல்லை அட்டவணைப்படுத்தியுள்ளனர்.

Accuracy          -  துல்லியம்

Basic Education             -   அடிப்படைக் கல்வி

Cartoons           -  கேலிச் சித்திரம்

Data              - தரவு

தென்னாசிய மின் அகராதி

      இந்திய அரசுக் குழுமத்தால் தோற்றுவிக்கப்பட்ட மொழிகளின் கூட்டு அகராதியே தென்னாசிய மின் அகராதி ஆகும். இதில் தமிழ், அசாமி, பலுசி, பங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒரியா, பாலி, பஞ்சாபி, பெர்சியன், இராசத்தானி, வடமொழி, தெலுங்கு, உருதுமொழி அகராதிகளும், பர்ரோ, மெனோவின் திராவிடவேர்ச்சொல் அகராதி என 26 மொழி அகராதிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் மொழிஅகராதி

தென்னாசியமின் அகராதியில் தமிழ்மொழிஅகராதி முதன்மையிடம் பிடித்துள்ளது. பெப்ரியசு அகராதி, கதிரைவேற் பிள்ளைஅகராதி,ஆல்பின் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகஅகராதி, வின்சுலோ என ஐந்து தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

      சான்றாக, நாம் ஒருசொல்லைக் கொடுத்தால்

Love  -     அன்பு, Enemy   - பகைவர் ,      Gift - கொடை

என்று நாம் கேட்கும் சொல்லுக்குக் கன நேரத்தில் பொருளைத் தேடித் தருகின்றன. இந்த மின் அகராதி ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மதுரம் மின் அகராதி

      சொல்லுறுப்பு என்னும் இலக்கணக் கூற்றுடன் உலாவரும் ஒரேமின் அகராதி  என்ற பெருமை மதுரம் அகராதிக்கு உண்டு.

      இதில் ஒருகலைச்சொல் அல்லது ஒருதமிழ்ச் சொல்லைக் கொடுத்தால் அதனைக் கொண்டு நமக்குத் தேவையான சொற்களைப் பெறலாம். எந்தவகையான சொல்லையும் உள்ளீடாகக் கொடுக்கலாம்.

தமிழ் விக்சனரி

      தமிழுக்குப் பல ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்யும் தமிழ் விக்கிப்பீடியாவின் அகராதிகள் பெயர் ‘தமிழ் விக்சனரி’ஆகும்.

      விக்கிப்பீடியாதளம் உலகு தழுவிய தகவல் தளமாக விளங்குகிறது. வெகுவாக உலகஅளவில் சுமார் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தொகுத்துத் தருகின்றது. 2001ஆம் ஆண்டு ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக விக்சனரிகள் உள்ளன. 172 மொழிகளுக்கான விக்சனரிகள் இதில் செயல்படுகின்றன.

      தமிழ்ச்சொற்களுக்குப் பொருள் தரும்  முயற்சியாக 2004-இல் தொடங்கப்பட்டது. இன்று 19, 18, 257 சொற்களைக் கொண்டு உலாவரும் இணையஅகராதியின் வரிசையில் 10-ஆம் இடத்தில் உள்ளது.

      விக்கிப்பீடியா என்ற தளம் பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இது பன்மொழியில் தகவல்களைத் தரும் தளமாகும். அமெரிக்க இணையத் தொழில் வல்லுநரான சிம்மிவேல்சு, அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் இருவராலும் உருவாக்கப்பட்டது. விக்கிபீடியா பவுண்டேசன் இதனை நடத்தி வருகிறது. உலக அளவில் கல்வி இன்று வணிகமயமானது எண்ணி வருந்திய இவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் அனைவருக்கும் உயர்வான அரியகல்வி என்ற எண்ணத்தின் அடிப்படையில் பிறந்ததே விக்கிமீடியாத் திட்டமாகும்.

      தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்ற வரிசையிலும் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளன.

      ஒருசொல்லுக்குரிய சொற்பிறப்பு, பெயர்ச்சொற்கள் என்ற இரண்டுபெரும் பிரிவில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. சொற்பிறப்பை விவரிப்பதற்குத் தலைப்பும் உள்ளது.

கூகுள் தமிழ்-ஆங்கிலம் மின் அகராதி

      கூகுள் தமிழ் ஆங்கில மின் அகராதி தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. வழக்கமான நிலையிலிருந்து சொற்களுக்கேற்ற பொருளை மட்டும் காட்டாமல் படத்துடன் விளக்கத்தையும் தருகின்றது. தொடக்கநிலையில் தமிழ் கற்பவர்களுக்குச் சிறந்த துணைவனாக இந்த மின் அகராதி செயல்படுகிறது.

      கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல்பதிப்பு(1992) இணையத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் - தமிழ்- ஆங்கிலம் என்ற அமைப்பில் பொருள் தருகின்றது. ஒருசொல்லின் இலக்கணவகை, வழக்குக் குறிப்பு, துறைக் குறிப்பு உள்ளிட்டவற்றின் துணைகொண்டு தேடலாம்.5

தொகுப்புரை

      தற்கால அகராதிகளின் முன்னோடியாக நிகண்டுகள் விளங்கினாலும் அகராதியியலின் கூறுகள் தொல்காப்பியத்திலிருந்து தொடங்கித் தமிழ்ப்பரப்பில் பரவலாகக் காணப்படுகின்றன. சதுரகராதியில் தொடங்கித் தமிழில் அச்சுவடிவில் பலஅகராதிகள் வெளிவந்துள்ளன. தமிழில் இலக்கணமுறைப்படி சொற்களுக்குப் பொருள் தேடுவதற்கு நிகண்டுகள் பயன்படுத்தப்பட்டாலும்  அது பண்டிதற்களால் மட்டுமே பொருள் உணர தக்கவையாக இருந்தது. ஆனால் மொழியைப் பயன்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் புரியும் வகையில் அகராதிகள் ஐரோப்பிய தொடர்பினால் தமிழில் விளைந்தன. அச்சுவடிவில் வெளிவந்த அகராதிகள் குறிப்பிட்ட பயனாளர்க்கு மட்டமே பொருளறிய துணைசெய்வதாக இருக்கின்றன. ஆனால் அறிவியலின் வளர்ச்சியில் உருவான இணையத்திலும் பலஅகராதிகள் இன்று வளம்வர தொடங்கியுள்ளன. இவை பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் கூடுதல் தகவல்களை பெறத் தக்கதாகவும் பிறமொழிகளோடு ஒப்பிடத்தக்கதாகவும் அமைந்திருப்பதால் தமிழில் புதியஅடையாளமாக இவை அறியப்படுகிறது.

 இவற்றால் நேரம் மிச்சமாவதோடு பயனாளரின் தேடுதல் முயற்சியும் எளிமையடைந்துள்ளது என்பது உண்மை.

திறவுச் சொற்கள் ( key ward)

Accuracy          -     துல்லியம் - சரியாக

Cartoons           -     கேலிச் சித்திரம் - கருத்துப்படம் 

துணைநின்ற நூல்கள்

1.     இராதாசெல்லப்பன்  தமிழும் கணினியும்  கவிதை  அமுதம் வெளியீடு திருச்சிராப்பள்ளி– 21.

2.     துரை மணிகண்டன் இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் கௌதம் பதிப்பகம் சென்னை– 50.

3.     முத்துச்சண்முகன் இஇக்காலமொழியியல் இமுல்லைநிலையம் இசென்னை– 17.

4.     வ. ஜெயதேவன்இதமிழ் அகராதியியல் இஅன்பு நூலகமஇ; சென்னை – 17.