ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒலித் திரிபுகளே மொழித்திரிபு -ழ- ட- ஷ மாற்றம் (Phonemes mutation lead to language mutation - zha- ta- sha changes)

முனைவர் இரா. பசுபதி,தமிழ் இணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை-5 01 Aug 2023 Read Full PDF

ஆய்வு சுருக்கம்:

      தமிழ் மொழியின் முதன்மையான ஒலிகள் சிற்சில திரிபுகளை அடைந்து வேறுவேறு சொல் வடிவங்களாக உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் மாற்றம் பெறுகின்றன. தமிழ் வழக்கிற்குள் மட்டுமின்றி திராவிட மொழிகளிலும் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், இந்தி போன்ற வடமொழிகளிலும் தமிழ் ஒலித் திரிபுகள் வேறுவேறுசொல் வடிவங்களாக வழங்குகின்றன. அவற்றுள் ழகர, டகர, ஷகர ஒலிகள் திரிந்து வேறுவேறு சொல் வடிவங்களாக வழங்குவதை இக்கட்டுரையில் காணலாம். மொழியை குறிக்கும் பாஷா பாடம் என்பதன் ‘அம்’ விகுதி நீக்கப்பட்ட நிலையின் திரிந்த ஒலிப்பே என்பது இக்கட்டுரையின் முடிபு.

Synopsis

               The primary phonemes of the Tamil language lead to a few mutations and change into different word forms in the popular usage and literary usage. In the Tamil language and in Dravidian languages as well as Indian regional languages such as Pali, Prakrit, Sanskrit, Hindi, Tamil phoneme mutations are presented as different  word  forms. This is the central argument and finding of this article.

திறவு சொற்கள்:

வேடம் –வேஷம் : Vedam- Vesham

மேடம்- மேழகம்- மேஷம் :Medam – Mezhaham - Mesham

மாடம்- மாஷஹ :Maadam- maashaha

பாடம்- பாஷா : Paadam- Bhasha

ஒலித் திரிபுகளே மொழித்திரிபு -ழ- ட- ஷ மாற்றம்

           வடமொழி அகர வரிசையில் இடம்பெற்றுள்ள ஷ கரம் தமிழரின் இன்றைய பேச்சு வழக்கிலும் காணமுடிகிறது. பதறு என்ற வினை பதறினாள், பதறுகிறாள், பதறுவாள் என்ற வினைமுற்றாக வழங்குவதையும் பதற்றம் என்ற பெயர் வடிவமாக வழங்குவதையும் நாம் அறிவோம். ஆனால் இன்றைய மக்கள் வழக்கிலும் ஊடகங்களிலும் பதற்றம் பதட்டமாகி பதஷ்டம் என்றே ஒலிக்கப்படுகிறது.

         பிறர் பொருளை கவருகிறவர்களைச் சுட்டும் பொழுது "அவனுக்கு கொஞ்சம் கை நீளம் என்று வழங்குவதும், இதையே 'அவனுக்கு கை பதஷ்டம் அதிகம்" என்று வழங்குவதையும் காணலாம். கடும் சினத்துடன் சிலர் உரையாடும் சூழலில் என்னடா வேஷ்டியை மடிச்சிக் கட்டிக்கிட்டு முஷ்டியை தூக்கிக்கிட்டு வர அடிக்கவரியா? அடிச்சிறுவியா அட்றா பாக்கலாம் என்பன போன்ற உரையாடல்கள் நிகழ்வதை கவனிக்கலாம்    (இவற்றில் ட-ற ஆவதை பிறகு விளக்குவோம்) வேட்டி -வேஷ்டி என்றும் முட்டி-முஷ்டி என்றும் மிக பல காலமாக ஒலிக்கப்படுகிறது.

வேடம் -வேஷம்:

        வேடுவர், வேட்டுவர், வேட்டை போன்ற சொற்களை பழந்தமிழ் இலக்கியங்களிலும் இன்றைய வழக்கிலும் காண்கிறோம். வேட்டையாடும் தொழிலை மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட விலங்கை அல்லது பறவையை அதன் ஒலியெழுப்பிக் கொண்டு அதனை அருகில் வரச்செய்து வேட்டையாடும் நுட்பம் வேடவர்களிடையே காணப்படுகிறது. மேலும் மான் வேட்டையில் பார்வை மானையும் யானையை அகப்படுத்துவதில் கும்கி யானையையும் பயன்படுத்துவதைக் காணலாம்.

        பழங்கால ஓவியங்களின் வளர்ச்சி நிலை பற்றி ஓவியர் மாஸ்டர் சந்துரு ஒரு மேடை பேச்சில் குறிப்பிட்ட செய்தி இங்கு பதியத்தக்கது. பழங்கால ஓவியங்களில் வேடுவர் வேட்டையாடும் காட்சி வரையப்பட்டிருக்கும். வேடர் கலைமானின் கொம்பைத் தலையிலணிந்து கொண்டு வில்லில் அம்பு பூட்டும் காட்சி குகைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் இதுவே சிருங்கி முனிவராக புராணங்களில் இடம் பெற்றிருக்கலாம். காலமாற்றத்தால் அதேக் காட்சி வேடுவர் கலைமானின் கொம்பை அணிந்து துப்பாக்கியை கையில் கொண்டு குறிபார்க்கும் காட்சி வரையப்பட்டிருப்பதை காணமுடிகிறது என்றார். இதில் கலைமானின் கொம்பை அணிந்து மான் போல் ஒலியெழுப்பி வேட்டையாடுவது மானை ஏமாற்றுவது அறமற்றசெயல் என்று தோன்றினாலும் வேடுவர்களின் வயிற்றுப் பசிக்கு, கொன்றால் பாவம்  தின்றால் போச்சி  என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது.

        இங்கு வேடம் தரித்து வேட்டையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை வேஷம் என்றும் வழங்குகின்றனர். அவன் ரொம்ப வேஷக்காரன் குற வேஷம் போடுவான் என்றெல்லாம் வழங்கப்படுவதை காணலாம்.

ழ-ட-ஷ ஆதல்

 புழல் உட்டுளையை (கழகத் தமிழ் கையகராதி ப.273) உடையது. புடலங்காயைக் குறிக்கப் பழந்தமிழில் புழல் என்று வழங்கினர். இது புடல் என்றும் வழங்கப்பட்டது. மேலும் உட்டுளை உடைய துதிக்கையைக் கொண்டுள்ள யானையைப் புழைக்கை, பூட்கை என நிகண்டுகள் (திவ. விலங்குப்.3.4., பிங்.மாப். 1௦2. சூடா..விலங்கின்.4.2.3) பதிவு செய்கின்றன.

ஏழுமலைவாசா என்பது தெலுங்கில் ஏடுகுண்டல வாடா என்று வழங்கப்படுகிறது. ஏழு- ஏடு போன்றவற்றில் ழகரம் டகரமாக திரிவதை காணலாம்.

இதுபோன்றே ஆட்டின் பெயர்கள், மேட இராசியின் பெயர்கள் ஆகியவற்றில் மேழகம் (திவாக. விலங்கு.25. 1,,, பிங். மாப். 169), மேடம். (திவாக. தெய்வப். .65.., பிங். மாப். 17௦., சூடா. தேவப். 72.) என்ற சொல் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ் இடங்களில் ழகரம் டகரமாக ஒலிக்கப்பெருவதை  அறியலாம். ழகரம் டகரமாகி அதுவே பின் ஷகரமாகி மேஷ இராசிப். பெயராக வழங்குவதை காணலாம். விடம் விஷம்,  விடயம் விஷயம் (விடயம் இலங்கை வழக்கில் மிகுதி) போன்றவையும் கவனிக்கத்தக்கன.  

          "நிகண்டுகளில் இராசிப்பெயர்களில் மேடம் என்றே இடம் பெற்றுள்ளது",  மேஷம் என்று வழக்கிலுள்ளது. மேடத்தின் பெயர்களில் ஒன்று வருடை இதிலிருந்தே வருடப்பிறப்பு, புதுவருடம், வருஷம் என்ற வழக்குகள் பெறுக வழங்கின, 'ஆடுதலையாக ....' என்ற நெடுநல்வாடை தொடராலும்  உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

யாண்டு என்று அழைக்கப்பெறும் ஆண்டு. ஆடு என்னும் சொல் ஆண்டு என்றானது, பூடு- பூண்டு என்றாவது போல்., கூடு- கூண்டு என்றாவது போல், ஆடு ஆண்டு என்றானது.

      ;; திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக

      வின்னோர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து’’ (நெடு.16௦-161)

 ‘‘திண்ணிய நிலையினையுடைய கொம்பினை உடைய மேடராசி முதலாக எனை இராசிகளில் சென்று திரியும், மிக்க செலவினை உடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமலின்ற’’ என்பதாக நச்சினார்க்கினியர் உரை வரைவதைக்கொண்டு பேரா. க.பலராமன் விளக்கும் இப்பகுதி இங்கு எண்ணத்தக்கது. ஆட்டின் பெயர்களுள் ஒன்றான வருடையே வருஷமாக ஒழிக்கப்படுகிறது. என்பது இக்கட்டுரையாளரின் கருத்து இதற்கு மேற்பகுதி அரண் செய்கிறது

மாடம்- மாஷஹ : பாடம்- பாஷா:

         "கிளிப்பிள்ளைக்குச் சொல்றமாரி எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்ன, ரொம்ப பாடம் படிக்காத எனக்கெல்லாம்  தெரியும்" என்பன போன்ற உரையாடல்கள் இன்றைய வழக்கிலும் உள்ளன.

உழுந்து என்று அகநானூறு போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது(அகம்.86, குறு.68,384, நற்.89, ஐங்.211, கலி.94). இன்று உளுந்து என்று வழங்கப்படுகிறது.   இந்தியில் ‘ உருத்’ என்று உழுந்தை குறிப்பிடுகின்றனர்.

      இது நிகண்டுகளில் மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாடம் உளுந்தே. (திவா. மரப். 167.) என்பது மர்ரே ஏற்படுத்திய சாந்தி சாதனா வெளியிட்ட பதிப்பில் காணப்படுவதாகும்.

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 199௦ ல் மு. சண்முகம்பிள்ளை. இ.சுந்தரமூர்த்தி ஆகியோர் வெளியிட்ட திவாகரம் ஆராய்ச்சி பதிப்பில் இந்நூற்பா இடம்பெறவில்லை, ஆனால் முதற்பதிப்பாசிரியர் தாண்டவராயர் சேர்த்துப் பதிப்பித்து வெளியிட்டதாகக் குறிப்பிடும் நூற்பாக்களை உடுக்குறியிட்டு காண்பித்துள்ளனர். அவ்வரிசையில் இடம்பெற்ற நூற்பா வருமாறு

*மாட முழுந்தே (திவாகரம் பகுதி-1 ப.243)

மாடம் உழுந்து ( பிங். மரப். 3௦9)

உழுந்து, மாடம் ( சூடா. மரப் 41)

ஆனால் வடமொழியில் "மாஷஹ" என்றொலிக்கப்படுகிறது. உளுந்துவடை "மாஷா பூபம்"  என்று வழங்குகின்றனர் ட- ஷ என்று வழங்குவதற்கு தமிழ் பேச்சிலும் நிகண்டுகளிலும் சான்றுகள் வழங்கவியலும்.

      பாடம் மீண்டும் மீண்டும் படித்துப் பாராயணம் செய்யப்படுவது. அதேபோன்று மொழியும் மீண்டும் மீண்டும் ஒலித்துப்பழகி  மெல்லக் கற்றுத் தேர்ந்து பயன்பாட்டில் வழங்கப்படுகிறது. எனவே பாடம் அம் விகுதி நீக்கப் பெற்ற நிலையில் வடமொழியில் பாஷா ஆகியிருக்க வேண்டும் என்று துணியலாம்.

‘இந்தோ ஆரியமொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டத்தியாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டத்தியாயியென நம்பப்படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா-வென்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி ஸம்ஸ்கிருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்கேயுமே குறிப்பிடவில்லை’ ( முன்னுரையிலிருந்து கு.மீனாட்சி,பாணினியின் அஷ்டாத்தியாயி ,பகுதி-1  1998 உ.த.நி. சென்னை-113).

அவ்விலக்கணத்தின் மொழி பாஷா என்றே குறிப்பிட்டுள்ளார் பாணினி. இது பாடம் என்பதன் திரிபான பாஷா என்று பொதுநிலையில் மொழியைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தாக்ஷி புத்ர,  தாஷி என்பவரின் மகன் (மேலது முன்னுரை ப. 5) என்றெல்லாம் பாணினி பற்றிய அக சான்றுகள் காணப்படுவதாலும் அஷ்டத்தியாயி நடராச வர்ணனைகளை உடைய சிவ சூத்திரங்களை முன் பகுதியாக கொண்டுள்ளதாலும் பாணினி தமிழுக்கே உரிய ழகர ஒலியை டகரமாகவும் ஷகரமாகவும் சொல் அமைப்புக்கேற்ப பொதுமைப்படுத்தி இலக்கண விதிகளை உருவாக்கியுள்ளார் எனக் கருதலாம்.

துணைநூல்கள்

  1. கழகத் தமிழ்க் கையகராதி,கழக வெளியீடு, ம.ப-1996.
  2. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம். தொகுதி ஒன்று,தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மூ.ப. 2௦13.
  3. சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, சாந்தி சாதனா வெளியீடு- 2௦௦4.
  4. திவாகரம்- ஆராய்ச்சிபதிப்பு சென்னைப் பல்கலை வெளியீடு தொகுதி-1 199௦
  5. பலராமன்.க,வானியல் பார்வையில் சங்ககாலம், இருசுடர் நிலையம், 2௦11
  6. மீனாட்சி.கு, பாணினியின் அஷ்டாத்தியாயி,உ.தா.நி. சென்னை-113, 1998