ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் மொழியின் சிறப்பு (The specialty of Tamil language)

முனைவர்.அ.ஸ்ரீதேவி, உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 08 Aug 2023 Read Full PDF

Abstract: Even though the times have changed and many continents of the world have been destroyed, the Tamil language is an eternal wealth. Tamil language excels as the mother tongue of all Tamil speakers. Tamil language is said to have an ancient literary tradition of more than 2500 years. The meaning of the word Tamil means sweetness, simplicity and fluidity. Tamil language is one of the best languages spoken not only in India but also in countries like Sri Lanka, Singapore and Malaysia as the official language. Such special features of Tamil language can be found in the article.

ஆய்வுசுருக்கம்: காலம் மாறினாலும், உலகின் பல கண்டங்கள் அழிந்தாலும், தமிழ் மொழி என்றும் அழியாத செல்வம். தமிழ் மொழி பேசுபவர்கள் அனைவருக்கும் தாய் மொழியாக தமிழ் மொழி சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழி 2500 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான இலக்கிய பாரம்பரியம் கொண்டதாக கூறப்படுகிறது. தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை, எளிமை, நீர்மை என்று பொருள். இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் ஆட்சி மொழியாகப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழியின் இத்தகைய சிறப்புகளை கட்டுரையில் காணலாம்.

திறவுச் சொற்கள்: தமிழ், இலக்கணம்,தொன்மையான மொழி,செம்மொழி

முன்னுரை

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி.” தமிழானது உலகில் காலம் பிறக்கும் முன் பிறந்தது. எக்காலத்திலும் நிலையாய் இருப்பது.காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய் வளந்து. கன்னி தமிழாய், செந்தமிழாய், வண்டமிழாய், பைந்தமிழாய், வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற புலவர்களாலும் ,அரசர்களாலும் சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி  தமிழ் மொழியாகும்.

மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் சிறப்புக்களை போற்றிப் பாடியுள்ள புலவர்களுள் பாரதியார், பாவேந்தர், மற்றும் திருவள்ளுவர் ஆகியோர் முக்கியமானவர்களாவார்.

மக்களின் எழிச்சி கவிஞனாக போற்றப்படுகின்ற பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும், “சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என்றும் குறிப்பிடுகின்றார்.

தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழியாகிவிட்டது. இதில் நாம் குறைக் கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகளும் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு.

தமிழ் மொழியின் சிறப்பு

  • செந்தமிழ்
  • பைந்தமிழ்
  • அருந்தமிழ்
  • நறுந்தமிழ்
  • தீந்தமிழ்
  • முத்தமிழ்
  • ஒண்டமிழ்
  • தண்டமிழ்
  • வண்டமிழ்
  • தெளிதமிழ்
  • இன்றமிழ்
  • தென்றமிழ்
  • நற்றமிழ்
  • தெய்வத்தமிழ்
  • மூவாத்தமிழ்
  • கன்னித்தமிழ்

என பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

யாமறிந்த மொழிகளிலே

தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்;

என்று பாடியதும்,

 தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும், தமிழ்மொழி எவ்வளவு சிறப்புவாய்ந்தது என்று ஒப்புநோக்க தக்கது.

தமிழ் மொழியின் தொன்மை:

முத்தி தருபவன் அவனே ; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"

எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.

"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை

எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை

நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்

அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்.

தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து தமிழ் மொழி வளர்ந்து நிற்கின்றது.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எதிர்பாரா விதமாக காதல் மலர்ந்தது. முன்பின் அறியாத நபருடன் கண்டதும் காதல் ஏற்பட தலைவிக்கு ஐயம் ஏற்படுகிறது எங்கு இவன் ஏமாற்றி விடுவானோ என.

இதையறிந்த தலைவன் தமிழ்ச் சுவை பொதிந்த பாடல் மூலம் கவலையை போக்குவதாக புலவர் கூறும் விதத்தை நோக்கலாம்.

“யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும், எம்முறை கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயர்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே……!” என்கிறார் புலவர்.

அதாவது, எனது அன்னையும் உனது அன்னையும் யார் யாரோ; என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்களாவர்; எந்த உறவின் அடிப்படையில் நீயும் நானும் அறிந்துகொண்டோம்; மழை நீரானது செம்மண் நிலத்தில் கலந்து செந்நில நீர் போல ஆகின்றது; அதுபோல நாமும் ஒன்று கலந்து இருந்தோம் என்பதாக கூறி தலைவிக்கு காதல் பயத்தை போக்குவதாக தமிழ் சுவையின் உச்சக்கட்டத்தை உணர்த்துகிறார் புலவர்.

இத்தனை கவி வல்லமை தமிழ் மொழியைத் தவிர, வேறு எந்த மொழிக்குமே கிடையாது. இக்கருத்தில் எவ்வித மிகையுமில்லை; ஐயப்பாடுமில்லை

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு. ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

முடிவுரை

வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது. தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டது போன்று தமிழை நமது வளமாக போற்றி அதன் தனித்தன்மையை காப்போமாக.

பார்வை நூல்கள் :

1. திவாகர நிகண்டு- பதிப்பாசிரியர் மு. சண்முகம் பிள்ளை இ. சுந்தரமூர்த்தி இயக்குநர் பதிப்புத்துறை   சென்னைப் பல்கலைக்கழகம்,  முதல் பதிப்பு 1990.

2. திருமந்திரம்- திருமூலர்,  கவிதா பதிப்பகம், சென்னை.

3. பவணந்தி முனிவர் நன்னூல் - உலக தமிழாராய்ச்சி நிறுவனம் ,1999