ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கியங்களில் மருத்துவர் (Thoughts on Physician Medicine in Tamil Literary Movements)

முனைவர். சி.சாந்தி, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, திரவியம்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தேனி. 10 Aug 2023 Read Full PDF

Abstract: Many of the Sangam literary  Poets have Excelled in medicine.There are texts with medical name. There has been a practice of suturing the torn part of the body.There is also the habit of giving medicine to suit the disease.

Key Words: Sangailakkiyam, Tamilmedicine

முன்னுரை

              தமிழக நிலப்பரப்பும் பண்பாடும் மிகப்பழமையானது. தமிழர்க்கு இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் தந்ததோடல்லாமல் எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தவர்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஆடற்கலை என்று பல கலைகளையும் உலகிற்கு சொல்லிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். அவற்றில் ஒன்றுதான் மருத்துவக்கலை.இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் தாவரங்களின மருத்துவ குணங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சங்க இலக்கியங்களில் பாடல்கள் பாடிய புலவர்கள் பலர் மருத்துவத்துறையில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். புலவருடைய பெயர்கள் அவர்கள் மருத்துவர்களாக இருந்திருக்கலாம் என்பதனை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளது.  சான்றாக கடுகு பெருந்தேவனார், காபட்டனார், வெள்ளெருக்கிலையார், காரியாசன்,  முக்கல் ஆசான், மதுரைக் காளாசான் ,சல்லியக்குமரன், மருத்துவன் தாமோதரனார், மருத்துவர் நல்லச்சுதனார் ஆகிய புலவர்களின்  பெயர்களில் இருந்து அவர்கள் மருத்துவர்கள் என்று அரிய முடிகிறது. நம் இலக்கியங்கள் காலத்திற்கு ஏற்ற உணவும் உடையும் மேற்கொள்ள வழிகாட்டின.

உணவே மருந்து

                              உயிர் நிலைபெற்று வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது.மனித வாழ்விற்குத் தேவையான உணவு,உடை,இருப்பிடம் என்பனவற்றுள் உணவே முதலிடம் பெறுகிறது. இன்று மாறிவரும் உணவுப்பழக்கமும் கால நேரம் இல்லாமல் உணவு உண்பதும் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து ஆயுளைக் குறைக்கின்றது.

“மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபா டில்லை உயிர்க்கு” குறள்.945

என்பது வள்ளுவரின் வாக்கு. பகவத்கீதை ‘ஒரு யாமம் கழிந்த உணவை உண்ணாதே’ என்கிறது. அதாவது அவ்வப்பொழுது சமைக்கும் உணவை மட்டுமே உண்ண வேண்டும். நாம் எந்த வகையான உணவை உண்கின்றோமோ அதற்கேற்றவாறு நமது மனநிலை மாறுகின்றது என்று கீதை கூறுகிறது. உணவும் ஒரு மனிதனுடைய செயல்பாடும் சரியாக இருந்தால் நோய் ஏற்படாது என்று எண்ணினர்.  நன்கு பசிக்க வேண்டும், பசித்த பின்பு புசிக்க வேண்டும்,  உண்ட உணவு நன்கு செரிக்க வேண்டும், அப்படி இருந்தால் உடலுக்கு மருந்தே தேவையில்லை.  உணவு உண்ணும் முறைகளிலும் ஒரு வகைப்பாடு உள்ளது.

ஒருபோது உண்பான் யோகி

இருவேளை உண்பான் போகி

முப்போதும் உண்பான் ரோகி

நாற்போது உண்பான் பாவி

எனபதால் உணவுக் கட்டுப்பாடு மனிதனுக்கு அவசியம் என்பதை உணரமுடிகிறது.

சத்தான உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு சத்து வீணாகாமல் சமைப்பதும், சுத்தமாகச் சமைப்பதும் அவசியமாகும். தமிழ் நூலாகிய அபிதான சிந்தாமணி சரியாகச் சமைக்கப்படாத உணவினால் ஏற்படும் நோய்களைப் பட்டியலிடுகிறது.

“அஸ்தீதம்  -         கஞ்சி சுற்றிக்கொண்ட அன்னம் 

(இதை உண்போர்க்கு ரோகம் உண்டாகும்)

          பிச்சளம்    -         அவிந்த அன்னம்

                                        (இதைப் புசிப்போர்க்கு சூன்மாதி ரோகம் உண்டாகும்)

          அசுசி                    -         புழு, மயிர் சேர்ந்த அன்னம்

                                        (இதைப் புசிப்போர்க்கு வாய்நீர் ஒழுகல் உண்டாகும்)

          குவதிகம்   -         நருக்கருசி பட்ட அன்னம்

                                        (இதைப் புசிப்போருக்கு அஜீரணம்,ரோகம் உண்டாகும்)

          சுஷ்மிதம்   -         சிறிது வெந்தும் வேகாத அன்னம்

                                        (இதைப் புசிப்போருக்கு இரத்த பீடனம் உண்டாகும்)

          தக்தம்                  -         காந்தின அன்னம்

(இதைப் புசிப்போருக்கு இந்திரிய நாசம் உண்டாகும்)

          விரூபம்      -         விறைத்த அன்னம்

(இதைப் புசிப்போருக்கு ஆயுள்ஹீணம் உண்டாகும்)

          அதர்த்துஜம்        -         பழையசாதம்

(இதைப் புசிப்போருக்கு அதிநித்திரை,சீதாதிரோகம் உண்டாகும்)” (அபி.சிந். பக்230)

என்று கூறுகிறது.  அறிவியல் வளர்ச்சி  மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்விற்காகவும் பல கண்டபிடிப்பகளைத் தந்திருந்தாலும், மறுபுறம் சோம்பலும், உடல் உழைப்பின்மையும்,  உடல் எடையைப் பெருக்கி  இன்று  பல உடல் நோய்களுக்கு காரணமாகிவிட்டது.

மருந்தும், மருத்துவமும், மருத்துவனும்

              நம் இலக்கியங்கள் நோய் நீக்கும் மருத்துவருக்கு அறிவுரைகளை வழங்குகின்றது.

“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது தொடா அது

மருந்தாய்ந்து கொடுத்து அறவோன் போல்” (நற் 136)

என்று நற்றிணையும்,

“திரிந்திய யாக்கையுள்  மருத்துவன் ஊட்டிய

மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்ப” (கலி.17)

என்று கலித்தொகையும் மருத்துவம் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகின்றது. நோய் தீர்க்கும் மருந்து அறிந்த ஒருவன் அதனை மறைத்தல் பெரும்பாவம் என்பது தமிழரின் கொள்கையாக இருந்திருக்கின்றது.

“வருந்திய செல்லல் தீர்த்த திறனறியொருவன்

மருந் தறைகொடலிற் கொடிதே”- கலி

என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.எனவே நோய்க்கு மருந்தளித்துக் காத்தல் சிறந்த அறமாகப் போற்றப்படுகிறது. ஆற்றுப்படை நூல்கள் பசிப் பிணியை நீக்கும் மருத்துவர் என்று கூறுகின்றது.

         வள்ளுவர் ஒப்புரவாளனை மருத்துவகுணம் மிகுந்த மரத்திற்குச்சமம் என்கிறார். ஏனெனில் ஒரு மரத்தினுடைய வேர், பட்டை, இலை, பூ, காய், கனி அத்தனையும் பிறருக்கு பயன்படுகின்றது. அதுபோல ஒப்புரவாளன் அனைவருக்கும் பயன்படுகிறான்.

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்” குறள் -

என்று கூறுகின்றார். உடல் முழுவதும் புண் பெற்ற மறவனின் உடல் மனிதர்களால் வெட்டப்பட்ட மரம்போல் இருந்ததாக புநறானூற்றுப் புலவர் பாடுகின்றார்.

“மருந்து கொள மரத்தின் வாழ்வடு மயங்கி” (புறம்180)

நோய் கண்டவன் தனது நாவினை கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவர் நோயாளியின் விருப்பத்தை அறிந்து அவனுக்கு எது நல்லது என ஆய்ந்து மருந்து கொடுக்க வேண்டும். நோயாளி விரும்பியதை அவனுக்கு கொடுக்காது அவன் எதை உண்ண வேண்டும் என்று ஆய்ந்து உணவு கொடுத்ததாக சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்றது. அதனை அறம் என்று நற்றிணையின் 13 ஆவது பாடல் குறிப்பிடுகின்றது.

                                 தமிழர்கள் துன்பம் தரக்கூடிய எதனையும்  நோய் என்றே கூறினர். நோயானது மனிதனை சிந்திக்க விடாமல் தனிமைப்படுத்தி விடுவதனால் தமிழர்கள் அதனை நோய் என்றனர். பசியையும் நீர் வேட்கையையும் நோய் என்றனர் தமிழர்கள். ஏனெனில் உடலில் இவற்றின் தேவை கிடைக்காத பொழுது உடலில் உள்ள உறுப்புகள் நோய்வாய்ப்பட்ட தாக கருதப்பட்டது. புறநானூற்றில் கோவூர்கிழார் ‘பசியையும் நீர் வேட்கை’ யையும் இரு மருந்து என்று குறிப்பிடுகின்றார். அக இலக்கியங்கள் காதலை நோய் என்றேக் கூறுகின்றது. காதலியின் பார்வையே காதலனுக்கு நோய் தரவல்லது என்கிறார் வள்ளுவர். நோயின் துன்பத்தையும் அதனை தீர்க்கும் மருந்து இரண்டனையும்  ஒருசேரப் பெற்ற காதலியை வர்ணிக்கும் விதமாக

இருநோக்கு இவளுண்கண் உளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

என்று பாராட்டுகின்றார் வள்ளுவர். இதனால் வள்ளுவர் காலத்தில் நோய்கள் இருந்ததையும் அந்த நோயைத் தீர்க்கும் மருந்து களையும் மனிதர்கள் அறிந்திருந்தனர் என்பதையும் தெரிந்துகொள்ள  முடிகின்றது.

                           நோய் வராமலேயே வாழும் முறைகளையும் நம் இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. நோயுற்றவரின் நோய்த்தன்மை, வயது, நோயைத் தீர்க்கக் கூடிய மருந்தின் அளவு, நோய் உண்டான கால அளவு ஆகியவற்றை நன்கு நுணுகி ஆராய்ந்து சொல்லும் துணிவு செந்தமிழ் மொழிக்கு உண்டு.

 “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”         (குறள் 948)

 என்ற வள்ளுவரின் கூற்றை நிறைவு செய்தவை தமிழ் இலக்கியங்கள். தற்கால நவீன மருத்துவத்தின் அடித்தளமும் உயிரோட்டமும் ஆகவும் இருப்பது நம் தமிழ் இலக்கியங்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

         சங்ககாலத்தில் போர்கள் அடிக்கடி நடைபெற்றன. புண்பட்ட வீரர்கள் பலருக்கு மருத்துவர்கள் அந்த காலத்தில் பணிவிடை செய்து இருக்கின்றனர். தைத்தல் என்பதும் வழக்கிலிருந்து இருந்துள்ளது. சிரல் பெயர்ந்தார் போல நெடுவேள் ஊசி கொண்டு மார்பில் ஏற்றப்பட்டதை  பதிற்றுப்பத்து  குறிப்பிடுகின்றது. மணிமேகலையில் மாடுமுட்டியதால் குடல் வெளிவரப்பெற்ற ஒருவனை  பௌத்த சமயத்தார் தம் இருப்பிடத்தில் வைத்து குடலை உள்பகுதியில் வைத்து தைத்ததுக் மருத்துவம் செய்து காப்பாற்றியதாகக் குறிப்பிடுகிறது. சமயம் சார்ந்தோறும் மருத்தவம் செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

                               சமணரும் பௌத்தரும் கிமு மூன்றாம் நூற்றாண்டளவில்தமிழகத்திற்கு வந்தனர். அவர்கள் உணவு, கல்வி, மருந்துவம், அடைக்கலம் அளித்தல், அன்பு பேனல் என்பவற்றை தம் அடிப்படையாக போற்றிக் காத்து வந்தனர். சமண பௌத்த சான்றோர்கள் சிறந்த கல்வியில் சிறந்தவர்களாக மருத்துவத்தில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். அதனால் மருத்துவ முறைகள் தமிழகத்தில் அன்றே பரவி இருந்தது என்பதில் ஐயமில்லை. பதினெண்-கீழ்க்கணக்கு-நூல்கள் ஆகிய ஏலாதி சிறுபஞ்சமூலம் திரிகடுகம் ஆகியவை மருத்துவ மூலிகைகள் அடிப்படையில் பெயர் பெற்று விளங்குவதைக் காணமுடிகின்றது. சுக்கு மிளகு திப்பிலி என்னும் மூன்றும் சேர்த்து செய்யப்படும் மருந்து சூரணமாகவும் கூறப்பட்டது.  சிறுபஞ்சமூலம் என்பது கண்டங்கத்திரி வேர், சிறுமல்லி வேர், சிறுவழுதுணை வேர் முதலிய ஐந்து வேர்களால் செய்யப்பட்ட மருந்தாகும். ஏலாதி ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு பொருள்கள் செய்யப்பட்டது. எனவே இப்பொருட்களால் செய்யப்பட்ட மருந்துகள் அக்காலத்தில் மக்கள் மத்தியில் பெருவழக்காக இருந்ததை அறிந்து கொள்ள முடிகின்றது.

                           அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய சம்பந்தர் விடம் தீண்டியவருக்கும்,  கொல்லி மழவன் மகளுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயையும் தீர்த்துள்ளார். கண்ணப்ப நாயனார் இறைவன் கண்ணில் செங்குருதி வழிவதைக் கண்டு பதறி ஓடி பச்சிலை  பிழிந்து கண்ணில் வார்த்தார் என திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இன்றும் ஒருவர் உடம்பில் ஏதேனும் ஓர் இடத்தில் தசை சிதைவடைந்தால் உடலின் இன்னோர் இடத்தில் இருந்து தசை எடுத்து ஒட்ட வைக்கின்றனர்.

                          சோழர் காலம் மருத்துவக் கல்விக்கு சிறப்பானதாக குறிப்பிடப்படுகிறது. ராஜராஜ சோழனுடைய காலத்தில் தஞ்சை பகுதிகளில் சித்தமருத்துவ சாலைகள் எங்கும் நிறுவப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. மருத்துவக் கூடங்களை நாடு முழுவதும் அமைத்திருந்தனர். முதல் ராஜேந்திர சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு காலத்தில் இலவச மருத்துவக் கூடம் ஒன்று இருந்ததாக வரலாறு கூறுகின்றது. 

                                     உறுதியான உடம்பில் தான் ஆன்மா செவ்வனே உறையும் என்பது நம் பெரியவர்கள் கொள்கையாகும். எனவே உடம்பினை செம்மையாக பாதுகாப்பதைப் பற்றி வற்புறுத்தி உள்ளனர். தமிழ் நாட்டு மருத்துவம் பச்சை இலைகளையும், வேர்களையும் அடிப்படையாகக் கொண்டது. இதனை பதிணென் சித்தர்களைத் தந்த தமிழகமே அறியும். சித்தர்கள் பெயரால் பல மருத்துவ நூல்கள் உள்ளன. மூலிகை மருந்துகளை அதற்கு நிவர்த்தி செய்யும் நோயினுடைய அடிப்படையிலேயே பெயரிடப்பட்டுள்ளது. உதாரணமாக வாதமடக்கி, வண்டு கொல்லி, கிரந்திநாயகம், பொன்னாங்கண்ணி, முடக்கத்தான், கீழாநெல்லி என்பவை இதற்குச் சான்றாகும். மஞ்சள் காமாலைக்கு தமிழ்நாட்டு கீழாநெல்லியை கைகண்ட மருந்தாக இன்றும் கருதப்படுகிறது. சித்த மருத்துவம் தமிழர்களுக்கே உரிய அரும் பெரும் செல்வமாகும் .சித்த மருத்துவத்தில் சூரணம், லேகியம், செந்தூரம் என்ற பல மருந்துகள் உண்டு .இம்மருந்துகளை  தமிழ்நாட்டுக்கு வெப்ப நிலைக்கு ஏற்றவாறு

பயன்படுத்தியிருந்தனர். 

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தனே” (திரு.மந். 1.தந்)

தேகம் விழுந்ததோ சித்த எல்லாம் ஆடலாம் தேகம் இருந்த கால் சேரலாம் பூரணம் இருந்த கால் செயல் எல்லாம் பார்க்கலாம் தேகம் இருந்தால் சேரலாம் முந்தியே என்றும் திருமுறை திருமூலர் கூறுவதை அறியமுடிகிறது.

முடிவுரை

                    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழர்களின் பட்டறிவால் உருவான பழமொழியாகும்.

                   நோய்களில் தோன்றும் முறைகளைப் பற்றியும் நோய்களை தீர்க்கும் முறைகளைப் பற்றியும் தமிழர்கள் பல காலத்திற்கு முன்பே நன்கு உணர்ந்திருந்தனர், என்பதற்கு தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சான்று பகர்கின்றன.

                    மருத்துவமும் மருத்துவ முறைகளும் காலத்திற்கேற்ற வகையில் அமைந்துள்ள.

                    மருத்துவன் வாணிபநோக்கில் செயல்படவில்லை. மருத்துவத்தை தங்கள் கடமையாக நினைத்துள்ளனர்.

                    நல்ல உணவுப்பழக்கம், சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் நோய்வராமல் தடுக்கும் முறையாக இருந்துள்ளது.

                    பல மருத்துவ சாலைகளும்  இருந்துள்ளன.

                    போரில் காயம்பட்டவர்களின் உடலில் தைக்கும்முறையும் இருந்துள்ளது.

தமிழர் மருத்துவத் துறையிலும்  சிறந்தவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

 

துணைநூற் பட்டியல்.

1.சுப.அண்ணாமலை(உ.ஆ), திருமந்திரம், இந்தியப்பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், சென்னை,600 018.பதிப்பு 2020.

2.அம்மன் சத்தியநாதன்,  மதங்களும் மகத்துவங்களும், மயிலவன் பதிப்பகம், சென்னை. 600004.பதிப்பு.1994.

3.க.அருணாலசம், ஆறு ஆதாரங்களும் ஆரோக்கியமும், தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், மதுரை.01.பதிப்பு 1990.

4.இளங்குமரன் (உரை.ஆ)   புறநானூறு, கோவிலூர் மடாலயம்,கோவிலூர்.                 பதிப்பு.2003.

5.குருகோவிந்த்(உரை.ஆ)  ஸ்ரீமத் பகவத்கீதா, கோபால் சேவா டிரஸ்ட்,ஈரோடு,            பதிப்பு 1999.

6.த.கோவேந்தன்(தொகு.ஆ)  சித்தர் பாடல்கள், பூம்புகார் பிரசுரம்,சென்னை.               பதிப்பு. 1979.

7.கு.வெ.பாலசுப்பிரமணியன் (உரை.ஆ)  நற்றிணை, நியு செஞ்சுரி புக்ஹவுஸ்(பி)லிட், சென்னை. பதிப்பு 2004.

8.பரிமேலழகர் (உரை.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்,        திருநெல்வேலி, பதிப்பு 1974.

9. .வெ.பாலகிருஷ்ணன்(உரை.ஆ) நற்றிணை, நியு செஞ்சுரி புக்ஹவுஸ்(பி)லிட், சென்னை. பதிப்பு 2004.

10. வெ.பாலகிருஷ்ணன்(உரை.ஆ)   கலித்தொகை, நியு செஞ்சுரி புக்ஹவுஸ்(பி)லிட், சென்னை. பதிப்பு 2004.