ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் நிமித்தங்களில் இடக்கண் துடித்தல் (Glimpse of Notional Causes & Beliefs in Kambaramayanam)

க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அகர்சந்த்மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை-600114, தமிழ்நாடு, இந்தியா. | G. Mangaiyarkkarasi, Assistant Professor,Department of Tamil, Agurchand Manmull Jain College, Meenambakkam, Chennai-600114, Tamil Nadu, India. 31 Jan 2024 Read Full PDF

Abstract

Since long it has  been an Ancient belief amongst the People is  that fortune-telling is the act of foretelling  eventual future happenings in advance.   The sight  of the bird, Chirping or Squeaking of the lizard,  Crow’s cry  and Human  eye winking   were all keenly watched for so  many reasons with certain beliefs.  They believed that  winking of the right-eye will  not be  good sign for the womenfolk  and that the winking of their left eye and  shrieking of the left shoulder will beget fortunes. Likewise,  for Menfolk, winking of the right eye will give a positive note and whereas the  shrieking of the Left Shoulder and Left eye winking  may  likely to result in a negative note of  Evil forces.

 

Although much deliberation has been made in  this aspect, only a very few have opined about the aspect Human eye winking.   Ancient Tamil Literature Tholkaapiyam has also made a specific reference  to this under the context of  Notional Causes & Beliefs.  The merits and demerits of  Human Eye winking  has been elaborated in the Epic of  Sangh Literature  Ettu Thogai,  apart from the books like Natrinai, Aingurunooru, Kaliththogai and in  other books like Aindhinai Aimbathu, Thinaiamalai Nootraimbathu,  Silappathikaram and Seevagachinthamani  which have been covered under the Great Five Epics (Aimperumkaappiyangal ) of Tamil Literature  and last but not the least in the books of  Choolamani & Kambaramayan which belongs to Five Small Epics (Ainchiru Kaapiyangal) of Sangh Tamil Literature. 

Keywords : Left Eye Winking, Right Eye Winking, Menfolk, Womenfolk, Merits, Demerits, War Situation, Victory & Defeat.

ஆய்வுச்சுருக்கம்

எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக நிமித்தம் அல்லது சகுனம் பார்த்தல் என்பது பண்டைய காலம் தொட்டு மக்களால் நம்பப்பட்டு வருகிறது. பறவை நிமித்தம், பல்லி ஒலித்தல், காகம் கரைதல், கண்துடித்தல் என்று பலவகையாக நிமித்தங்கள் பார்க்கப்பட்டன. மகளிர்க்கு வலக்கண் துடித்தல் நல்லதல்ல என்றும், இடக்கண்ணும், இடத்தோளும் துடித்தால் நல்லது என்றும் நம்பினர். ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது என்றும், இடக்கண்ணும், இடத்தோளும் துடித்தால் தீமையாகும் என்றும் நம்பினர்.

பழந்தமிழ் இலக்கியங்களில் நிமித்தங்கள் பார்ப்பது குறித்து பலவாகக் கூறப்பட்டிருந்தாலும், கண்துடித்தலைப்பற்றியே சிலகருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கணநூலான தொல்காப்பியமும் நிமித்தங்கள் குறித்துக் கூறியுள்ளது. சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையில் நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை நூல்களும், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களான ஐந்திணை ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது நூல்களும்,  ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரமும் சீவகசிந்தாமணியும், ஐஞ்சிறு  காப்பியமான சூளாமணியிலும்,  கம்பராமாயணத்திலும் கண்கள் துடிப்பதனால் நல்லது, கெட்டது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்: இடக்கண் துடித்தல், வலக்கண் துடித்தல், ஆண்கள், பெண்கள், நல்லது, கெட்டது, போர்க்காலச் சூழல், வெற்றி, தோல்வி.

முன்னுரை  

 மக்கள் வாழ்வில் நிமித்தம் பற்றிய நம்பிக்கைகள் இருப்பதால் அவை நன்மை, தீமை ஆகிய வருநிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சுட்டும்  வண்ணம்  சங்க இலக்கியங்களிலும்,காப்பியங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளன. பழந்தமிழ் மக்கள் உடல் உறுப்பான கண் துடித்தலை வைத்து சகுனம் அல்லது நிமித்தம் பார்த்தனர். பழங்காலத்தில் பெண்களுக்கு இடக்கண்ணும், இடத்தோளும், ஆடவர்களுக்கு வலக்கண்ணும், வலத்தோளும் துடித்தால் நன்மை பயக்கும் என்று  நம்பினர். கண் இமைத்தல் என்பது இயல்பான நிகழ்ச்சியேயாகும். ஆனால் கண்ணிமை துடித்தல் எப்போதாவது நிகழும் நிகழ்ச்சியேயாகும். மரம், உன்னநிலை, பறவை நிமித்தம், பல்லி ஒலித்தல், காக்கை ஒலி, விரிச்சி கேட்டல், என்று பலவாக நிமித்தங்கள் பார்க்கப்பட்டன. இருப்பினும் அவற்றுள் பெண்களுக்கு இடக்கண்ணும், இடத்தோளும், துடித்தால் நன்மை பயக்கும் என்று  நம்பினர் என்பதைக்   கம்பராமாயணத்தில் நிமித்தங்கள்  குறித்துக் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

கண்கள் துடித்தல்:

நிமித்தம் அல்லது சகுனம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாகும். பண்டையத் தமிழ் மக்களிடையே மரபாக சில நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்றுதொட்டு இன்று வரை நம்பப் பட்டு வருகின்றன. அதாவது நிமித்தம் என்பது வாழ்வில் பின் நிகழவிருக்கும் நன்மைத்தீமைகளைச் சில நிகழ்ச்சிகள் மூலம் உணர்த்துவதாகும். மகளிர்க்குக் கண், புருவம், நெற்றி முதலியன இடமாகத் துடித்தால் வரும் நன்மையை உணர்த்தும் நன்னிமித்தங்கள் ஆகும் என்று        இலக்கியங்கள் சுட்டுகின்றன.

நிமித்தங்கள் குறித்து தொல்காப்பியம்: 

தொல்காப்பியத்தில் நிமித்தம் என்ற சொல்லால் சுட்டியுள்ளார்.

                               "தன்னும் அவனும் அவளுஞ்சூட்டி

                                மன்னு நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்

                                நன்மை தீமை அச்சஞ் சார்ந்தலென்று

                               அன்ன பிறவும் அவற்றொடு தொகை”

           (தொல்காப்பியம்- பொருளதிகாரம் நூ 36) 

தொல்காப்பியத்தில் புறத்திணை இறுதி நூற்பாவில்

                         " ........

                         அச்சமும் உவகையும் எச்சமும் இன்றி

                         நாளும்புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

                         காலங்கண்ணிய ஓம்படைக் உளப்பட”

                          .......                                 (தொல்காப்பியம்- புறத்திணையியல்-நூ44) 

நாள் நிமித்தம், புள் நிமித்தம், பிறவற்றின் நிமித்தங்கள் மக்களிடையே வழக்காறுகளில் அமைந்திருந்தன.

நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல் ’புள் நிமித்தம்’ என்று பல இடங்களில் காணப்படுகிறது. நிமித்தம் அல்லது சகுனம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாகும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நூல்களில் நிமித்தம் குறித்து கூறப்பட்டுள்ளது.

மரம், உன்னநிலை, பறவை நிமித்தம், பல்லி ஒலித்தல், காக்கை ஒலி, விரிச்சி கேட்டல், என்று பலவாக நிமித்தங்கள் பார்க்கப்பட்டன.

மாந்தரின் உடலில் ஏற்படும் குறிகள்

மாந்தரின் உடலில் ஏற்படும் குறிகள் கண்டும், பழந்தமிழர் நிமித்தங்களைக் கருதினர். தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்தான்.குறித்துச் சென்றக் காலத்தில் வரவில்லை.காலங்களும் நீண்டன. தலைவியும், தலைவன் வருவேன் என்று குறித்தக் காலமும் வந்து விட்டது ஆனால் தலைவன் வரவில்லை என்பதால் மிகவும் வருந்துகிறாள். தோழி, தலைவியின் மேனி இயல்பைக்கூறி, தலைவன் வெற்றியுடன் செயல் முடித்து விரைந்து வருவதை நின் பெண்ணியல்பால் கண்டனன். கவலைப்படாதே என நிமித்தக்குறிகள் கூறி ஆற்றுவிக்கிறாள். பெண்ணியல், கண்ணினாடல், தோள் இடம் துடித்தல், நுதலொளி சிறத்தல் முதலிய பெண்பாற்குரிய குறிகள்.

நற்றிணையில்  இடக்கண் துடித்தல் :

       நற்றிணையில்  தலைவன் பொருள் வேண்டி தலைவியை விட்டுப் பிரிந்தான். தோழி, தலைவியிடம் கண்கள் துடிப்பதால் நல்ல சகுனம் தலைவன் மீண்டும் விரைவில் வருவான் என்று கூறுகிறாள்.

                                    " இடூஉ ஊங்கண் இனிய படூஉம்

                                      நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்”                                                                                                                                                

(நற்றிணை246)

ஐங்குறுநூறில் இடக்கண் துடித்தல் :

"காதற்கொழுநற்குளவாகும் நன்மை, தீமைகள்  மகளிர் மேனிக்கண் தோன்றும் சில அடையாளங்கள்  (குறிகள்) உணரப்படும் என்பர்" ஔவை துரைசாமிப்பிள்ளை

                          "வேந்து விடு விழுத்தொழி லெய்தியேந்து கோட்

                           டண்ணல் யானை யரசுவிடுத் தினியே

                           எண்ணிய நாளகம் வருதல் பெண்ணியல்

                           காமரு சுடர் நுதல் விளங்கும்

                           தே மொழி யரிவை தெளிந்திசின் யானே"

                                                                                                               ( ஐங்குறுநூறு466)

இடது கண் துடித்தல் பெண்களுக்கு நன்னிமித்தமாகக் கூறப்படும்.

தலைவன் மணம் பேச சான்றோரை அனுப்ப, தலைவியின் சுற்றத்தார் மறுக்க, திருமணம் முடியுமோ என்று தலைவி வருத்தப்பட , தோழி அவளுக்கு நற்குறிகளைச் சொல்லி, தலைவன் விரைந்து வந்து மணந்து கொள்வான் என்கிறாள்.

                                  "நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்

                                   மயிர்வார் முன் கை வளையும் செறூஊம்"                                                                                                                               

(ஐங்குறுநூறு 218:34-35)

கலித்தொகையில்  இடக்கண் துடித்தல்

      பிரிவுத் துன்பத்தில் உழலும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, “இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி” என்று நிமித்தங்கூறி ஆற்றுவிக்கின்றாள்.,

                             "இனை நலமுடைய கானஞ் சென்றோர்

                              புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற்

                              பல்லியும் பாங்கொத் திசைத்தன

                              நல்லெழி லுண்கணு மாடு மாலிடனே"

                                    (கலித்தொகை 11)

எனும் கலித்தொகைப் பாடல் காட்டும்.   

 ஐந்திணை எழுபதில்  இடக்கண் துடித்தல் :

 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்களில் ஒன்று ஐந்திணை எழுபது. வானத்தின் அளவு உயர்ந்தக் குன்றுகள் பொருந்தியுள்ளப் பாலை வழியில் சென்ற நம் தலைவரை, நாம் எண்ணிய மாத்திரத்தில் நம் அழகிய கண்களில் இடக்கண் ஆடுகின்றது.நாம் காணும் கனவுகளும் தலைவனால் விளங்குகின்றன.

                                “பூங்கணிட மாடுங் கனவுந் திருந்தின

வோங்கிய குன்ற மிறந்தாரை யாநினைப்ப

                                 வீங்கிய மென்றோள் கவினிப் பிணிதீரப்

                                 பாங்கத்துப் பல்லி படும்”

(ஐந்திணை எழுபது 41)

என்று இடக்கண் துடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

திணைமாலை நூற்றைம்பதில்  இடக்கண் துடித்தல்

மகளிர்க்கு இடக்கண் துடிப்பதைப் பற்றி பதினெண் கீழ்க்கணக்கு அகப்பொருள் நூல்களில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதும் குறிப்பிடுகிறது.

                             “ உருவவேல் கண்ணாய் ஒருகால் தேர்ச் செல்வன்

                               வெருவ வீந்து உக்கநீர் அத்தம் வருவர்

                               சிறந்து பொருள்  தருவான் சேண் சென்றார் இன்றே

                               இறந்து கண் ஆடும் இடம்”  

                                                                           (திணைமாலை நூற்றைம்பது  80)

பாலை நிலத்தின் வழியாகப் பொருள் தேடும் பொருட்டு சென்ற தலைவன் இன்றே வருவான்   என்று நம்பிக்கைக் கொள்கிறாள்.  இச்செய்தியை அறிவுறுத்தும் முகமாக தலைவிக்கு இடக்கண்  துடிக்கின்றது.  

நந்திக்கலம்பகத்தில் இடக்கண் துடித்தல்

நந்திக்கலம்பகத்தில் ஆண்களுக்கு இடக்கண் துடித்தால் தீமையாகும் என்று கூறப்பட்டுள்ளது. நந்திக்கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வீரம் பற்றிக் கூறும்போது, உன்னுடைய புருவம் துடித்தால் பகை மன்னரின் இடக்கண் துடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

                                   “ உன் புருவம் துடித்தால்  பகை

                                     மன்னரின் இடக்கண் துடிக்கும்”                                                                                                                                     

(நந்திக்கலம்பகம் 15)

சிலம்பில் இடக்கண் துடித்தல்:

சிலம்பில் பெண்களின் இடக்கண் துடித்தல் நன்மையாகும். வலக்கண் துடித்தால் தீமையாகும் என்றச் செய்தி கூறப்பட்டுள்ளது. இந்திரவிழாவின் கடைநாளில், கண்ணகியின் கருங்கண்ணும், மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தே நிறைந்தக் குறிப்பினை மறைத்து நீர் சொரிந்தன.     

                              “ கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

                                உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன

                                எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன”

    (சிலம்பு – இந்திரவிழாவூரெடுத்த காதை 239)

சீவகசிந்தாமணியில் கண் துடித்தல்:

      சிந்தாமணி காலத்திலும் நிமித்தம் பார்க்கும் வழக்கம் இருந்தது.பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நல்லது என்ற நம்பிக்கை கொண்டிருந்ததையும் அறியமுடிகிறது.

சீவகன் தன்னைக் காண வருவான் என்று விசயையின் இடக்கண் துடித்தது என்று திருத்தக்கதேவர் குறிப்பிடுகிறார்.இதன்மூலம்இடக்கண் துடித்ததை   விசையை நல்ல நிமித்தமாகக் கருதினாள் என்பது பெறப்படுகிறது.

                           "எல்லிருட் கனவிற் கண்டேன் “கண்ணிடனோடு மின்னே"

                             பல்லியும் பட்ட பாங்கர் வருங்கொலோ நம்பியென்று”

                                     (சீவகசிந்தாமணி- விமலையார் இலம்பகம் 1909)

பின்னால்  நடக்க இருக்கும் நல்ல நிகழ்வு அல்லது தீய நிகழ்வை முன்கூட்டியே எடுத்துரைப்பதாக சகுனம்  பார்த்தல் அல்லது நிமித்தம் பார்த்தல் என்ற நம்பிக்கை இருந்தது.

       கோவிந்தன் போருக்குச் செல்லும்போது  தனது வலக்கண் துடித்ததால் நம்பிக்கையின்மை ஏற்படுவதாகக் கூறுமிடத்துத் தீயநிமித்தம்  குறித்துக் கூறப்பட்டுள்ளது.

                          "நெறியின் நல்கின புள்ளும் நிமித்தமும் 

                            இறைவன் கண் வலனாடிற் றியைத்தரோ"

                                      ( சீவகசிந்தாமணி.-மண்மகள் இலம்பகம் 2168)   

சீவகனைக் கட்டியங்காரன் சிறை செய்ய  எண்ணிய நிலையில், சீவகன் சுதஞ்சணனை நினைத்தான். இதனால் இடக்கண் துடிக்கப் பெற்ற  சுதஞ்சணன் இடக்கண் ஆடின அளவிலே; உயிர் அனானை நினைந்தான் - (தனக்குத் தீங்குறுமோ என்று நினையாமல்) உயிரனைய சீவகனை எண்ணினான். இதனால் இடக்கண் துடிக்கப் பெற்ற சுதஞ்சணன், சீவகனை சிறையிலிருந்து விடுவித்தான்.

சுதஞ்சணனின் இடக்கண் துடித்ததை,

                   "செயிரிற்றீர்ந்தசெழுந்தாமரைக்  கண்ணிடனாடலு"

                                              ( சீவகசிந்தாமணி-குணமாலையார் இலம்பகம் 1156)  

என்ற பாடல் வரிகளால் சுதஞ்சணனின் இடதுகண் துடித்ததால் துன்பத்தில் இருந்து சீவகனைக் காப்பாற்றினான்.

கட்டியங்காரனுக்குக் கேடு நிகழப்போகிறது என்பதை உணர்த்தும் முகமாகக் காமக்கிழத்தியரின் வலக்கண் துடித்தன என்பதை,

                              " போக மகளிர் வலக்கண்கள்...

                                 துடித்த பொல்லாக் கனாக் கண்டார்"                     

                                                            (சீவகசிந்தாமணி- மண்மகள் இலம்பகம் 2173)

இதன் மூலம் சீவகசிந்தாமணியில் அக்கால மக்கள் இடக்கண்துடித்தால் நன் நிமித்தமாகவும், வலது கண் துடித்தால் தீயநிமித்தமாகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

சூளாமணியில் இடக்கண் துடித்தல்

ஆண் அரிமாவை ஒத்த திவிட்டநம்பியினுடைய,   மேனியில் புத்தொளி தவழ்ந்தது; மகளிர் இடத்தோள் துடித்தன; வாள்கூர்மையாற் பொலிவுற்றன; உளத்தே மகிழ்ச்சி முகிழ்த்தது,

                   "ஆளியே றனையவ னணிபொன் மேனிமே

                          னீளொளி தவழ்ந்தது நெடுங்க ணேழையர்

                          தோளுமங் கிடவயிற் றுடித்த வீரர்கை

                          வாளும்பூ நின்றன மலர்ந்த துள்ளமே"

                                                                           (சூளாமணி-அரசியற் சருக்கம்    1218)

கம்பராமாயணத்தில்  இடக்கண் துடித்தல்

கம்பராமாயணத்தில் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையாகும் என்றும், வலக்கண் துடித்தால் தீமையாகும் என்றும்,ஆண்களுக்கு இடக்கண் துடித்தால் தீமையாகும்  என்றும், வலக்கண் துடித்தால்   நன்மையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

யாகப்பாயாசத்தை சுமித்திரைக்கு வழங்குதல்

யாகத்திலிருந்து பெற்ற பாயாசத்தை தசரதன் தன் மனைவியர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தான். பகைவர்களுக்கு இடப்பறமும், உலகில் வாழும் பகையற்ற நிலைபெற்ற உயிர்களுக்கு வலப்புறமும் துடிக்குமாறு, பகுத்துக் கொடுத்தும்போது சிதறி விழுந்த அமுதத்தையும் சுமித்ராதேவிக்குக் கொடுத்தான்.

                          "ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய

                          மன்னுயிர்தமக்கு தீள் வலமும் துள்ளவே "

                                                                                                   (திருஅவதாரப்படலம் 271)

அக்ககுமரன் போருக்குக் கிளம்புதல்:

இராவணன் மகன் அக்ககுமரன், அனுமனுடன் போரிட வரும் போது, உயர்ந்துள்ள மிகப் பெரிய தேர்களில் பூட்டப்பட்டப் பிடரியை உடைய குதிரைகள் தூங்கி விழுந்தன.அரக்க வீரருடைய இடக்கண்களும், இடத்தோள்களும் துடித்தன. பருத்த மேகங்கள் எல்லாப் பக்கமும் இரத்த நீர்த்துளிகளைச் சொரிந்தன. ஏங்கிய காகங்கள் ஆரவாரித்தன. மேகம் திரளாத வானத்திலே இடிகள் இடித்தன. இவை தீயநிமித்தங்களாகும்.

              "ஓங்கு இருதடந் தேர் பூண்டுளை வயப்புரவி ஒல்கித்

                தூங்கின வீழத்தோளும் கண்களும் இடத்துத் துள்ள"

                                                                ( அக்ககுமரன் வதைப்படலம் 948)

இராவணன் மனையுள் அனுமன் தீக்குறி காணல்:

இராவணன் மாளிகைக்குள் அனுமன் சென்றபோது, பூமியின் இடங்கள் நடுங்கின. பெருமலைகள் குலுங்கின. அரக்க மகளிரின் இடைப்போல அவர்களுடையக் கண்களும், புருவங்களும், தோள்களும் வலப்புறம் துடித்தன. எட்டுத் திசைகளும் நடுங்கின.சந்திரன் விளங்கும் வானத்தில் மின்னல் இல்லாமலே இடி முழக்கங்கள் ஒலித்தன.மங்கலமான பூரண கலசங்கள் வெடித்தன.

                       "நிலம் துடித்தன நெடு வரை துடித்தன

                               நிருதர்தம் குல மாதர்

                        பொலந்  துடிக்கு  அமை மருங்கல்போல் கண்களும்

                                புருவமும் பொன் தோளும்

                        வலம் துடித்தன மாதிரம்  துடித்தன                       

                                தடித்து இன்றி நெடுவானம்"

 (ஊர்தேடுபடலம் 298)

கரன் போருக்குக் கிளம்புதல்

தன்னுடைய மூக்கையும், மார்புக்காம்புகளையும், காதையும், நறுக்கப் பெற்றத் துன்பத்தில் ஆழ்ந்த சூர்ப்பணகை பெரிய நிலத்திலேக் கிடந்து அந்நிலம் அதிர்ச்சியடையுமாறு, தன் துன்ப மிகுதியால் கால்களைஉதறிக் கொண்டுக் கதறியபடி ஒளி மிகுந்ததும், உயிர்களைக் கவருவதில் எமனைப் போன்றதுமான வேலைஉடைய கரண் முதலான மிகக் கொடிய போர் செய்வதில் நிகரற்றவரான அரக்கர்களது அழிவைக் குறிக்கும் துர்நிமித்தமாக எழுந்துநின்று அங்கே, இரத்த மழையைப் பொழியும் கருமேகம் போலுயர்ந்து தோன்றினாள். கருமேகம் இரத்த மழை பொழிவது துர்நிமித்தமாகும்.

               " எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமாய் எழுந்து ஆண்டு

                  உதிர மாரி பெய் கார்  நிற மேகம் ஒத்து உயர்ந்தாள்"                                                                                                   

(சூர்ப்பணகைப்படலம்313)

மூக்கு அறுபட்டு வந்த சூர்ப்பணகையின் பேச்சைக் கேட்டு, இராமனை எதிர்த்துப் போரிடக் கரன்  புறப்பட்டான். அப்போது துர் நிமித்தங்கள் தென்பட்டன.  கரனின் உரையைக் கேட்ட அகம்பன் என்னும் பெயரையுடைய கல்விச் சிறப்பைப் பெற்ற ஒருவன், கரனிடம் வந்தான். " தலைவனே!  நான் ஒன்று கூறுவேன். போரிலே மிகுந்த சினம் உள்ளவராக இருத்தல் நல்லது. எனினும் இப்போது தீமை தரும் குறிகள் (துர்நிமித்தம்) உள்ளன என்று கூறினான். மேகங்கள் முழங்கி இரத்த மழையைப் பொழிந்தன.சூரியனைப் பரிவேடம் வளைத்துக் கொண்டது.காக்கைக் கூட்டங்கள் உனது கொடியின் மேலேப் போரிட்டுக் கீழே விழுந்து,அழுது கொண்டுத் தரையில் புரளுகின்றன.வாள்களின் கூரியப் பகுதிகளில் ஈக்கள் சூழ்ந்து மொய்க்கின்றன.நம் படைவீரர்களின் இடத்தோளும், இடக்கண்களும் துடிக்கின்றன.மிகுந்த வலிமை உடையக் குதிரைகள் தூங்கி விழுகின்றன.நாய்களோடு பல நரிகளின் கூட்டங்கள் கலந்து நின்று ஊழையிடுகின்றன. பெண் யானைகள் எல்லாம் மத நீரைச் சொரிய, பெரிய கன்னங்களையுடைய ஆண்யானைகள் தந்தங்கள் ஒடியப் பெறும்.உலகமும் நடுங்கும். உயர்ந்த வானம் இடிந்து கீழே விழும். பெரிய திசைகள் தீப்பற்றி எரியும். அரக்கர் அனைவரும் தலைமேல்  அணிந்த பூமாலைகள், புலால் நாற்றத்தோடு முடை நாற்றமும் வீசும்.  என்றெல்லாம் கூறிப் போரிடச் செல்லும் முன் இதையெல்லாம் கவனிப்பாயாக என்றான்.

                          " பிடி எலாம் மதம் பெய்திட பெருங் கவுள் வேழம்

                             ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான்

                            இடியும் வீழ்ந்திடும்  எரிந்திடும் பெருந்திசை எவர்க்கும்"

                                                                                                   (கரன் வதைப் படலம் 431)

தாடகையின் துன்பம்:

தாடகையின் நெஞ்சில் இராமபானம் ஊடுருவிச் சென்றதால், அவள் புழுதி மிகுந்த அப்பாலைவனம் முழுவதும் இரத்த வெள்ளம் பெருகும்படி தரையில் வீழ்ந்த, பல பிராணிகளின் தசை சிக்கியுள்ள கோரப் பற்களையும், பிளந்த வாயையும் உடைய தாடகையானவள் பத்துத் தலைகளிலும் மகுடங்களை உடைய இராவணனுக்கு அவன் பின்னே அழிவதை முன்னே அறிவிக்கும் தீயநிமித்தமாக, அந்த நாளில் அறுந்து தரையில் விழுந்த அவனுடைய வெற்றிக் கொடியைப் போலக் கிடந்தாள்.

            "முடியுடை அரக்கற்கு அந்நாள் முந்தி உற்பாதம் ஆக

             படியிடை அற்றுவீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்"

                                                                                           ( தாடகை வதைப் படலம் 395)

இந்திரஜித் போருக்குக் கிளம்புதல் :

இராம, இலட்சுமணருடன் இந்திரஜித் நடத்தியப் போரில் வியப்புற்ற இந்திரஜித், அரக்கரின் அழிவைக் கண்டு ஆரவாரம் செய்கின்ற தேவர்களைப் பார்ப்பான். அங்கே அந்தத்  தேவர்கள் வாரி இறைத்துத் தூர்க்கின்ற பூக்களைப் பார்ப்பான். அபசகுனமாகத் துடிக்கின்ற தனது இடத்தோளைப் பார்ப்பான். கண்ணில் தெரியும் திசைகளிலெல்லாம் விழுந்து கிடக்கும் பிணங்களின் பரப்பைப் பார்ப்பான். இரத்த ஆற்றில் இழுத்துச் செல்லப் படுகின்ற யானைகளின் பிணங்களைப் பார்ப்பான்.

           "தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இடத்தோள் நோக்கும்"

           "பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை நோக்கும்

             ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும்”

                                                                                              (பிரம்மாத்திரப்படலம் 2414)

நல்ல நிமித்தங்கள் :

அனுமன், இராமபிரானைக் கண்டு அறிமுகம் செய்து கொள்கிறான். அதன்பின் இராமன் ,இலட்சுமணனிடம்  "நாம் புறப்படும்போது நல்ல சகுனங்களைப் பெற்றோம். அதனால் இந்தச் சிறந்த அனுமனைப் பெற்றோம். இனி நம்மிடத்து உண்டாகும் துன்பம் இல்லை. மேலும் வில்லையுடையவனே! இவனைப் போன்ற பெருவீரன் குரங்குக் கூட்டத்துக்குத் தலைவனான சுக்கிரீவனின் ஆணையால் குற்றேவலைச் செய்வான் என்றால் அந்தச் சுக்ரீவனின் தன்மை சொல்லத்தக்கதோ என்றான்.

            "நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியைப் பெற்றேம்நம்பால்

             இல்லையே துன்பம்ஆனது இன்பமும் எய்திற்று இன்னும்"

                                                                                                             (அனுமப்படலம் 76)

தீய நிமித்தங்கள் பற்றி இராவணன் மந்திரப்படலத்தில் வீடணன் கூற்று மூலம் கூறப்பட்டுள்ளன.         

                      “வாயினும் பல்லினும் புனல் வறந்து

            உலறினார் நிருதர் வைகும்”

                                            (இராவணன் மந்திரப்படலம் 107)

அரக்கர் வாயிலும், பல்லிலும் நீர் மற்றும் காரணத்தால் நா வறண்டனர். அரண்மனையிலும், இலங்கை நகரத்திலும் தங்கும் பேயைக் காட்டிலும் மிகவும் பெரிய தோற்றமுடைய நரிகளும் நிறைகின்றன. மற்றவற்றையும், நினையின் அரண்மனையிலும், இலங்கை நகரத்திலும் உள்ள மகளிர் கூந்தலும், ஆடவரான நம் மயிர் முடியும் தீயில் கரிந்து தீய நாற்றம் உடையன ஆயின. இவற்றையே அல்லாது ஒரு நல்ல நிமித்தமேனும் பெறுகின்ற வகையும் இல்லை என்று கூறுகிறான்.

இராவணனின் இடக்கண்கள் துடித்தன :

 

இராமனைக் கண்டதும் சினத்தால் உதட்டை மடித்துக் கொண்ட வாயினனான இராவணனுடையக் கண்களினின்றுக் கொழுந்து விட்டு எரியும் தீத் தோன்றிச் சிறு பொறியாய் வெளிப்பட்டது. அப்பொழுது சின ஒலியால்  வன்மையானத் திக்குகள் எங்கும் பேரொலி உண்டாகியது. அவனது உள்ளம் பற்றி எரிந்தது. இடக் கண்ணோடு,திரண்ட இடத்தோள்களும் தீமை தோன்றுவதன் நிமித்தமாகத் துடித்தன.

                  " இடத்த வன் திசை எரிந்தது நெஞ்சம்

                     துடித்த கண்ணினொடு இடத் திரள் தோள்கள்"

                                  (இராவணன் வானரத் தானை காண்படலம் 818)

இராவணன், இராமனுடன் போர் செய்யும் போது, ஒளிவிடும் மணிகள் அழுத்திய வாகுவலயங்கள் சிந்துமாறு இடப்பக்கத்திலுள்ள அழகான பத்துத் தோள்களும் துடித்தன.

                     "வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப மானச்

                       சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன இடத்த பொன் தோள்"

                                                                                    (இராவணன் வதைப்படலம் 3661)

 

அப்போது உலகம் முழுவதும் குருதி மழைப் பெய்தது. உலகமெல்லாம் அதிருமாறு மேகம் இடித்தது. அரிய மலைகள் பொடிப்பொடியாக, இடியானது அம் மலைகள் மீது விழுந்தது. ஒளி மங்கியச் சூரியனை ஊர்க்கோளும் சேர்ந்து கொண்டது. இராவணனின் தாவிப் பாயும் குதிரைகள், தேர்களும் செயலிழந்துத் தூங்கின.அம்புகளை விடும் கொடிய விற்கள் அவற்றை வளைக்கும் போது கயிறுகள் இடையிலே அறுந்தன. அரக்கரின் நாவும், வாயும் உலர்ந்து போயின. அன்று மலர்ந்த மலர்களால் கட்டப் பெற்ற பூமாலை, புலால் நாற்றம் வீசியது.வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகச் சுமந்து நிற்கின்ற இராவணனின்  கொடி மீது, காகமும், கழுகும் மொய்த்துக் கொண்டன. ஓடும் இயல்புள்ளப் போருக்கான குதிரைகளின் கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகின. முகப்படாம்களையுடைய யானைகள், தொழுவில் அடைக்கப் பட்டு கிடந்தனபோல அடங்கியிருந்தன.

                         "எழுது வீணை கொடு ஏந்து பதாகைமேல்

                           கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர்

                           ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா

                           தொழுவில் நின்றன போன்றன சூழி மா"

                                                                                    ( இராவணன் வதைப்படலம் 3664)

 

தேவர்களுக்கு இன்பத்தைத் தரும் இந்தக் கெட்ட சகுனங்கள் இராவணனுக்குத் தோன்றின. அவ்வாறு அவை புலப்பட்டபோதும், என்னை வெல்வதற்கு மனிதன் ஆற்றல் பெற்றவன் ஆவானோ? என்று கூறுகிறான்.

சீதையின் கண்கள் துடித்தன

 

அசோகவனத்தில் இருக்கும் சீதை, தன் கண்கள் துடித்ததைப் பற்றி கூறுகிறாள்.

            “பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல்

             வலம் துடிக்கின் றிலவருவது ஓர்கிலேன்”

(காட்சிப்படலம் 360)

 

தன்னுடைய கண்கள் இப்போது இடப்பக்கமாகத் துடிக்கின்றன என்று திரிசடையிடம் கூறுகிறாள். நல்லது நடக்கும் போது, என்கண்கள் இடப்பக்கம் துடிக்கும். முன்பு இராமன்,  விசுவாமித்திரருடன் மிதிலை நகருக்கு வந்த போது, இடக்கண்கள் துடித்தன.         

           “முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்

            துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்

            இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என  

            நனி துடிக்கின்ற ஆய்ந்து நல்குவாய்”

(காட்சிப்படலம் 361)

 

முன்பு இராமன் நாடு முழுவதையும் பரதனே பெரும்படி அதைத்துறந்து காட்டுக்கு வந்த நாளில், என் கண்ணும், புருவமும் வலப்பக்கம் துடித்தன.

           “மறந்தெனன்இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்

           அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்

           பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்

           துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே

(காட்சிப்படலம் 362)

இராவணன் தண்டகாரணியத்தில் வஞ்சச்செயலைச் செய்ய வந்த போது, எனக்கு வலப்பக்கமே துடித்தன என்கிறாள்.

                  “நஞ்சு    அனையான் வனத்து இழைக்க நண்ணிய

                   வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்

                   எஞ்சல்   ஈண்டுதாம் இடம் துடிக்குமால்

                  அஞ்சல் என்று இரங்குதற்கு அடுப்பது யாது என்றாள்”

 (காட்சிப்படலம் 363)

முடிவுரை

 நிமித்தம் என்பது வாழ்வில் பின் நிகழவிருக்கும் நன்மைத்தீமைகளைச் சில நிகழ்ச்சிகள் மூலம் உணர்த்துவதாகும். நாள் நிமித்தம், புள் நிமித்தம், பிறவற்றின் நிமித்தங்கள் மக்களிடையே வழக்காறுகளில் அமைந்து இருந்தன. மரம், உன்னநிலை, பறவை நிமித்தம், பல்லி ஒலித்தல், காக்கை ஒலி, விரிச்சி கேட்டல், என்று பலவாக நிமித்தங்கள் பார்க்கப்பட்டன.   மகளிர்க்கு கண், புருவம், நெற்றி முதலியன இடமாக துடித்தல் வரும் நன்மையை உணர்த்தும் நன்னிமித்தங்கள் ஆகும் என்று        இலக்கியங்கள் சுட்டுகின்றன. இக்கட்டுரையின் மூலம் மகளிர்க்கு இடக்கண் துடித்தால் நன்மை எற்படும் என்பதையும், வலக்கண் துடித்தால் தீமை ஏற்படும் என்பதையும் அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி 

   தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை, 

   1953.

2. சீவகசிந்தாமணி இரண்டாம் தொகுதி,வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 

   2016.

3. தட்சிணாமூர்த்தி ( உரை.ஆ) ஐங்குறுநூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி

    புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.

4. துரைசாமி,சூளாமணி, சாரதாபதிப்பகம் சென்னை,2002.

5.பாலசுப்பிரமணியன் கு.வை.(உரை.ஆ) நற்றிணை மூலமும்  உரையும்,  நியூ 

    செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை,2004.

6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 

    6, 7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

7. முத்துராம்மூர்த்தி, நந்திக்கலம்பகம்,சாரதா பதிப்பகம்,சென்னை,2003.

8. மாணிக்கம்.அ. விவேகசிந்தாமணி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை,  

    2006.

9. விசுவநாதன்.அ.(உரை.ஆ) கலித்தொகை மூலமும் உரையும், , நியூசெஞ்சுரி

     புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட், சென்னை, 2004.

10. ஸ்ரீசந்திரன்.ஜெ. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதி 1,2,3, தமிழ்

      நிலையம்,சென்னை,2007.

11.ஸ்ரீ.சந்திரன், ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ்       

     நிலையம், சென்னை, 2012.

Bibliography: 

1.Izhampooranaar Urai, Tholkaappiyam –Poruzhathigaram, Tirunelveli South Indian Saiva  

   Siddhantha Book Publications Co, Ltd., Chennai, 1953

2.Seevaga Chinthamani Volume 2, Vardhamanan Publications, Chennai, 2016.

3.Dakshinamurthy (Urai.A) Aingurunooru, Moolamaum Uraiyum, New Century Book House

   (private) Limited, Chennai, 2004.

  4.Duraiswamy, Choolamani, Sarada Printing Press, Chennai, 2002.

5.K.V. Balasubramanian (Urai/A) Natrinai Moolamum Uraiyum, New Century Book House

   (Private) Limited, Chennai, 2004.

6.Poovannan, Kamabramayanam Moolamum Thezhivuraiyum volumes 1,2,3,4,5,6,7,8 –

   Vardhamanan Publications, Chennai, 2011.

  7.Muthurammoorthy, Nandhikalambagam, Sarada Printing Press, Chennai, 2003.

8.A. Manickam Vivekachinthamani, Manivasagar Publications, Chennai, 2006.

9.A. Viswanathan (Urai. A) Kalithogai Moolamaum Uraiyum, New Century Book House

   (Private) Limited, Chennai, 2004.

10.J.Srichandran, Padhinenkeezhkanakku Noolgal Volumes 1,2,3, Thamizh Nilayam,   

     Chennai,  2007.

11.J.Srichandran, Silappathigaram Moolamaum Thezhivuraiyum, Thamizh Nilayam, Chennai,

     2012.