ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க இலக்கியத்தில் முல்லை நிலத்தோற்றம் (APPEARANCE OF MULLAI LAND IN SANGAM LITERATURE)

கட்டுரையாளர்: பெ.அடைக்காத்தாள் எம்.ஏ., இளமுனைவர் பட்ட ஆய்வாளர், கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி - 622407 | ​​​​​​​நெறியாளர்: முனைவர் வே. அ. பழனியப்பன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி - 622403 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

            முல்லை காடும் காடு சார்ந்த பகுதியையும் தனக்குரியதாகக் கொண்டது. தொல்காப்பியர் "மாயோன் மேய காடுறை உலகமும்" (தொல். பொருள். 5) என்னும் சூத்திரத்தின் வழியாக முல்லை நிலத்திற்கு உரிய கடவுளையும் நிலத்தையும் அறிமுகம் செய்கிறார். முல்லை நிலம் வன்புலம் மென்புலம் என்னும் இரண்டு பண்புகளையும் கொண்டதாக விளங்குகிறது. குறிஞ்சியுடன்  சேர்ந்த முல்லை நிலம் வன்புலமாகவும் மருதத்துடன் சேர்ந்த முல்லை நிலம் மென்புலமாகவும் விளங்குகிறது. மிகுதியான மழைப்பொழிவில்லாத முல்லை நிலம்  மேய்ச்சல் நிலங்களைக் கொண்டிருப்பதால் கால்நடை வளர்ப்பு முல்லைநிலத் தொழிலாக விளங்குகிறது. சிறந்த பண்பாட்டு மரபுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாகவும் முல்லை நிலம் விளங்குகிறது. முல்லை நிலத்தில் கொன்றை குருந்து  காயா பிடவம் முதலான தாவரங்கள் வளர்கின்றன. மான் முயல் காடை கெளதாரி முதலான விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன.

குறிப்புச் சொற்கள்: முல்லை நிலம், வன்புலம், மென்புலம், கொன்றை, குருந்து, கற்பு, ஏறு தழுவுதல்

ABSTRACT

                 Mullai thinai forest also has a forest area of ​​its own.  Tolkappiyar introduces the God and the land belonging to Mullai through the sutra "Mayon meya kadurai world" (Tol. Para. 5).  Mullai land is understood to have two characteristics, hard land and soft land.  Mullai land with Kurinji is hard field and Mullai land with Marutham is soft field.  Livestock rearing is a major land occupation of Mullai as the rain-free Mullai land has abundant pastures.  Mullai land is also known to have rich cultural traditions.  In the Mullai land, plants such as kondrai kurundu kaya pitavam etc. grow.  Animals and birds like deer, rabbit, quail, and cow  live there.

key words : Mullainilam, Vanbulam, Menbulam, Kondrai , Kurundhu, Karbu, Eruthazhuvudhal.

முன்னுரை

   முல்லை நிலம் காடும் காடு சார்ந்த பகுதியைத் தனக்குரிய இடமாகக் கொண்டது. குறிஞ்சி நிலத்தின் தாழ்நிலப் பகுதிகளும் காடுகளும் முல்லை நிலம் என்னும் வரையறையைப் பெறுகின்றன. அளவில் குறைந்த உயரம் உடைய மலைகள் குன்றுகள் மேய்ச்சல் நிலங்கள் முதலியவற்றைக் கொண்டு முல்லை நிலம் விளங்குகிறது. சமதளமான பகுதி குறைவு என்பதாலும் மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதி என்பதாலும் நீர் தேங்கி நிற்காமல் முல்லை நிலத்தை விட்டு வெளியேறுகிறது. எனவே கோடைக் காலத்தில் குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் வறட்சியைச் சந்திக்கின்றன. முல்லை நிலம் தனக்கெனத் தனித்த அடையாளங்கள் பலவற்றை கொண்டு விளங்குகிறது. முல்லைத் திணையை நிலவியல் நோக்கில் எடுத்துக் கூறுவது இக் கட்டுரையின் நோக்கமாகும்.

முல்லையின் முதற்பொருளும் ஒழுக்கமும்

           முல்லை நிலம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதியை முதல் பொருளாகப் பெற்று விளங்குகிறது.  கார்காலம் பெரும் பொழுதாகவும் மாலைக்காலம்  சிறு பொழுதாகவும் அமைந்திருக்கிறது. தலைவன் பொருள் தேடிப் பிரிந்து சென்று மீண்டு வரும் காலமாகக் கார்காலமும் அவனுடைய வரவுக்காகத் தலைவி காத்திருக்கும் குறைந்த அளவுடைய மாலைக் காலம் சிறு பொழுதாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. தலைவன் வரவுக்காகத் தலைவி காத்திருக்கும் காரணத்தால் முல்லைக்கு உரிய ஒழுக்கமாக இருத்தல் அமைகிறது.

தெய்வம்

          முல்லை நிலத்துக்கு உரிய தெய்வமாகத் திருமால் வழங்கப்பட்டதைப் பல்வேறு இலக்கியச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது. இதனை,  "நனந்தலை உலகம் வளைஇ, நேமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல" (முல்லைப். 1 3) - திருமால் வழிபாடு தவிர முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் சிறு தெய்வங்களை வழிபட்டதையும் அறிய முடிகிறது. இதனை, "பல்லான் கோவலர் படலை சூட்ட கல் ஆயினையே கடுமான் தோன்றல்" (புறம். 265: 4 - 5) என்னும் சான்றால் அறியலாம். முல்லை நிலத்தில் விரிச்சி கேட்கும் வழக்கம் இருந்ததை *நெல்லொடு நாழி நறுவீ முல்லை/ அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது" (முல்லைப். 8 – 10) என்னும் சான்றால் அறியலாம்.

முல்லை - குறியீடு

         முல்லை மலர் தூய்மையின் குறியீடாகவும், கற்புக்குக் குறியீடாகவும் முல்லை நிலத்தில் மிகுதியாக மலரும் மலராகவும் அறியப்படுகிறது. "முல்லை மலர் குடும்பத்தில் கொடி பூ வகை சார்ந்தது முல்லை மலர் வெண்மை நிறம் கொண்டது. இம்மலர் அரும்பின் இதழ்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பொருந்தி உள்ளமை நன்கு முறுக்கி வைத்ததுபோல் தோன்றும் அதனால் முல்லை அரும்பின் முனை கூர்மையாக இருக்கும்" (வி. சி. சசிவல்லி, முல்லை, ப. 5) என்று முல்லை மலரின் அமைப்பைக் குறிப்பிடுகிறார். மேலும், "மலர்களில் முல்லை தனித்தன்மை வாய்ந்தது தூய்மை வெண்மை நிறம் வடிவம் மணம் மென்மை கூர்மை போன்ற நல்ல இயல்புகளைக் கொண்டது" (மேலது. 5) என்று குறிப்பிடுகிறார்.

மழைக்காலமும் முல்லை நிலமும்

        குறிஞ்சியை அடுத்துக் காணப்படும் முல்லை நிலம் உயரம் குறைந்த குன்றுகளையும் உயரம் குறைவான மரங்களையும் ஆடு. மாடுகள் வளர்ப்பதற்கேற்ற மேய்ச்சல் நிலங்களையும் கொண்டதாக விளங்கியது. முல்லை நிலத்தின் அமைப்பைக் குறித்து மு. சண்முகம்பிள்ளை கூறும் கருத்து கவனிக்கத்தக்கது. "முல்லைப் பகுதி மேய்ச்சல் நிலங்களைக் கொண்டிருந்தமையால் ஆடு, மாடு வளர்த்தலை முக்கியத் தொழிலாகக் கொண்ட மக்கள் இப்பகுதியில் வாழ்ந்தனர். இவர்களைக் கோவலர் ஆயர் அண்டர் இடையர் என்னும் பெயர்களால் அழைப்பர். இவர்கள் வாழ்ந்த இடங்கள் சிறு சிறு ஊர்களாக இருந்தன. முல்லை நிலத்து ஊர்களைக் கோவலர் பெருந்தண் நிலைய பாக்கம் என்று அழைத்தனர்" (மு. சண்முகம்பிள்ளை, சங்கத் தமிழர் வாழ்வியல், ப. 49). முல்லை நிலத்தில் இயற்கைச் சூழல் அழகு பெறுவதற்குக் காரணமாகக் கார்காலம் விளங்கியது. கார்காலம் மழைப் பொழிவு சிறந்து விளங்கிய காரணத்தால் முல்லை நிலக் காடுகள் அழகு பெற்று விளங்கிய முறையினை இலக்கியங்கள் விரிவான நிலையில் எடுத்துக்காட்டியுள்ளன. இதனை, "செறி இலைக் காயா அஞ்சனம் மலர/ முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்/ கோடல் குவி முகை அங்கை அவிழ/தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப/  கானம் நந்திய செந்நிலப் பெருவழி (முல்லைப். 93 – 97) என்னும் சான்றால் அறியலாம். கார்காலத்தில் முல்லை நிலம் பெற்ற அழகை மு. வரதராசன், முல்லை நிலம் மழைவளம் பெற்றுக் காடெல்லாம் பூத்து அழகுற விளங்கும் காலம் கார் காலமாகும். கார்காலம் என்பது ஏறக்குறைய ஆவணியும் புரட்டாசியும் ஆகிய இரு திங்களுமாகும். அந்தக் காலத்தில் பருவ மழை தொடங்கி எங்கும் நீர் வளம் பெருகச் செய்யும். காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் தழைக்கும். செடிகொடிகள் எல்லாம் செழிக்கும். புதர்களில் பலவகை மலர்கள் மலரும். இத்தகைய கார்காலத்தில் மலர்கள் மலர்ந்து மணம் கமழும் சிறப்புடையது. மாலைக் காலம். ஆதலின் கார்காலத்து மாலை நேரம் முல்லை நிலத்திற்குச் சிறந்த சிறு பொழுதாகும்" (மு. வரதராசன், முல்லைத் திணை, ப. 3) என்னும் சிந்தனையால் விளக்குகிறார். முல்லை நிலத்தின் கார்காலம் அதனால் விளைந்த இயற்கைத் தோற்றங்கள் பாடல்களில் விரிவாக அமைந்துள்ளன. வானில் மேகங்கள் பரவி முல்லை நிலத்தில் பரவிக் காணப்படுவதை அகநானூறு எடுத்துக்காட்டுகிறது (132: 5 6). கார்கால வானில் இடி முழங்கியது (புறம். 81). கார்கால மழையை ஏற்றுத் தெறுழ் மலர்கள் கானகத்தில் பூத்துக் காணப்பட்டன (புறம். 19: 1, 2). முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் கார்கால மழையை மூலதனமாகக் கொண்டு புன்செய் நிலத்தை உழவு செய்து வரகை விதைத்தனர் (புறம். 120: 2) கார்காலத்தில் பலா மரத்தில் பழங்கள் கனிந்து தோன்றும் என்று பட்டினப்பாலை பதிவு செய்துள்ளது (மலைபடு. 12).

 இசை

        முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர்கள் குழல் ஊதி மகிழ்வதைத் தங்கள் பொழுது போக்காகக் கொண்டிருந்தனர். குறிஞ்சிக்கும் முல்லைக்கும் பொதுவாகக் காணப்பட்ட மூங்கில் மரம் வண்டுகளால் துளைக்கப்பட்டுக்  காற்று வீசும்போது இனிய இசை பிறப்பதை அறிந்து அந்த முறையிலேயே முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர்களும் மூங்கிலில் துளையிட்டு இசைத்து மகிழ்ந்தனர் என்பதைப் பெரும் பாணாற்றுப்படை விளக்குகிறது (175 - 182) இப்பாடலடிகளில் மாடுகளை மேய்ப்பதற்காக முல்லை நிலத்தில் தங்கி இருந்த ஆயர்கள் தீக்கடை கோலால் மூங்கிலில் துளையிட்டுப் புல்லாங்குழலை உருவாக்கினர். அக்குழலில் குறிஞ்சிப்பண்ணை இசைத்து மகிழ்ந்த குறிப்பும் காணப்படுகிறது.

நீர்

          குறிஞ்சி நிலத்தில் தோன்றிய அருவி தாழ் நிலப்பகுதியாகிய முல்லையை அடையும்போது சமதளமற்ற நிலப்பரப்பின் காரணமாகக் காட்டாறாகப் பெருக்கெடுக்கிறது. குறிஞ்சி நிலத்தில் மழை பெய்யும் காலத்தில் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும். சீரற்ற மேடு பள்ளமான பாறைகளைக் கொண்ட காட்டாற்று வழி சுழிகளையும் சரிவுகளையும் ஆழமான பள்ளங்களையும் கொண்டதாக விளங்கியது. காட்டாற்றின் கரைகள் வெண்மை நிறமான மணலைக் கொண்டு விளங்கின என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. (16). காஞ்சி மரத்தில் இருந்து, பூக்கள் உதிர்ந்து மணல் வெளிகளில் பரவி கிடந்தன (அகம். 25: 1 5). மணல் மேடுகள் காணப்பட்டன (அகம். 11: 8 11). காட்டாறுகளில் யானைகளை விழுங்கும் அளவில் நீர்ச் சுழிகளும் . வழுக்கும்   பாறைகளும் காணப்பட்டன (மலைபடு. 211 - 215) மழைக்காலத்தில் ஆற்றில் பெருகிய நீர் பெரிய வெள்ளமாகக் கற்களை இழுத்துக்கொண்டு மூங்கில் மரங்கள் மறையுமாறு பெருகியது (நற். 7: 3 – 6). நீர்ச் சுழிகளில் முதலைகள் காணப்பட்டன (நற். 292: 7 – 8). நீரில் பாசி நிறைந்து காணப்பட்டது (நற். 65: ). மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளாகக் காட்டாற்றுப் பகுதிகள் விளங்கின (குறுந். 13). இளவேனில் காலத்தில் பெருகும் நீரில் பூக்கள் மிகுந்து காணப்பட்டன (ஐங். 367). காய்ந்த காயாம் பூக்களையும் இலவ மலர்களையும் நீர் அலைத்துக்கொண்டு சென்றதை அகநானூறு குறிப்பிடுகிறது (அகம். 133: 8 – 13).

முல்லை நில மக்கள்

               முல்லை நில மக்கள் ஆயர், இடையர், அண்டர் முதலான பெயர்களால் அழைக்கப்பட்டனர்.  ஆயர்களின் தோற்றம் குறித்து, "ஆயர்கள் எப்பொழுதும் காலில் செருப்பு அணிந்திருப்பர். இச்செருப்பின் தழும்பு அவர்களின் பாதங்களிலே பதிந்து கிடக்கும். ஆநிரைகளை ஓட்டுவதற்குரிய தடியைக் கையில் ஊன்றிக் கொண்டிருப்பர். தழைகளை இழுத்துப் பறிப்பதற்கு ஏற்ற கவரான கோலும் கொண்டிருப்பர். மரங்களை வெட்டி எறிந்து கொடுப்பதற்கு ஏற்ற கோடரியைத் தாங்கிய கையை உடையவர்களாக இருந்தனர். அதனால் அவர்களின் கை தழும்போடு வலிமையாக இருந்தது." (மு. சண்முகம்பிள்ளை, சங்கத் தமிழர் வாழ்வியல், ப. 50). என்று குறிப்பிடுவது கருதத்தக்கது. ஆயர்கள்  ஆடு மாடுகளை மேய்க்கச் செல்லும்போது தவறாமல் தங்களோடு குந்தாலி என்னும் கருவியையும் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனைக் கொண்டு வன்மையான நிலத்தைத் தோண்டி ஊற்றில் வரும் நீரை ஆடு மாடுகளைக் குடிக்க செய்தனர். காட்டில் பொழுது போக்காகக் குழல் ஊதுவதையும் பல்வேறு மலர்களைப் பறித்து மாலைகளாக்கிக் கட்டிக் கொள்வதையும் இலக்கியங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. முல்லை நில மக்கள் புன்செய் விவசாயம் செய்வதையும் ஆடு, மாடுகளை வளர்ப்பதையும் தொழிலாகக் கொண்டனர். ஆடு, மாடுகளை வளர்த்து அவை தரும் பாலில் இருந்து பால் பொருள்களைத் தயாரித்துப் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று பண்டமாற்றாக விற்பனை செய்தனர். பண்டமாற்றாகக் கிடைத்த பொருளில் தங்களுக்குரிய வாழ்வியல் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டனர். அத்துடன் புதிய கால்நடைகளையும் வாங்கினர். தினை வரகு பால் முதலியவை  முக்கிய உணவுப் பொருள்களாக இருந்தன. தினைச் சோறு வரகுச் சோறு கூழ் முதலியவற்றையும் உணவாக உட்கொண்டனர்.

வீட்டின் அமைப்பு

          முல்லை நில மக்களின் வாழ்க்கையில் குடியிருப்புகள் அந்த நிலத்தில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அமைந்தன. அவர்கள் வாழ்ந்த வீடுகள் குடிசை வீடுகளாக இருந்தன. அந்த வீடுகளுக்குச் சிறிய அளவில் மரத்தாலான கால்கள் அமைந்திருந்தன. அக்கால்களில் ஆடுகள் தின்னுவதற்குரிய இலைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. காடுகளில் கிடைக்கும் மரங்களில் வெட்டப்பட்ட சிறிய கழிகளைக் கொண்டு குடிசை வீட்டில் கதவுகள் செய்யப்பட்டிருந்தன. வரகுத் தாள் கொண்டு அமைக்கப்பட்ட இருக்கை ஆட்டின் தோலால் செய்யப்பட்ட படுக்கை ஆகியவை அமைந்திருந்தன. வீடுகளுக்கு முன்னால் சிறு சிறு கழிகள் நடப்பட்டு அவற்றில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆயர்களின் வாழ்விடம் குறித்த இக்கருத்துக்கு அரண் செய்வதாக, "செற்றை வாயில் செறி கழி கதவின் / கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் /அதளோன் துஞ்சும் காப்பின் உதள / நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் / கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்/ இடு முள் வேலி எரு படு வரைப்பின் /நள் இருள் விடியல் புள் எழ போகி" என்னும் அடிகள் அமைந்திருக்கின்றன. (பெரும்பாண். 149 - 155)

பெண்களின் கடமை உணர்வு

          ஆயர் குலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்களின் அன்றாடக் கடமைகளைச் சிறப்பாகச் செய்பவர்களாக இருந்தனர். அதிகாலை வேளையில் எழுந்து தயிரை மத்துக் கொண்டு கடைந்து தயிர் மோர் வெண்ணெய் நெய் முதலான பொருள்களுடன் உறிகளைச் சுமந்து கொண்டு வேற்று நிலங்களுக்குச் சென்று பண்டமாற்று வியாபாரம் செய்தனர். அவர்கள் குறிஞ்சி நிலத்திற்கு சென்று மோரை விற்பனை செய்தனர். அவர்களின் தோற்றம் அணிகலன்கள் விற்பனை முதலியவற்றை அகப்பாடல் ஒன்று பதிவு செய்துள்ளது. வரகுச் சோறு வேளைப்பூ ஆகியவற்றை வேகதைத்துத் தயிர் கலந்து உண்ட வழக்கைப் புறநானூற்றின் மூலம் அறிய முடிகிறது. "கவைக்கதிர் வரகின் வைப்புறு வாக்கல்/ தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய  / வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ / ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை" (புறம். 215:1 - 4)

ஏறு தழுவுதல்

          ஏறு தழுவுதல் பண்டைத் தமிழர்களின் பண்பாட்டு முறைகளில் ஒன்றாகும். முல்லை நிலத் தலைவியை மணந்து கொள்ளும் ஆடவன் வீரமிக்கவனாக இருக்க வேண்டும் என்னும் சமூக வழக்காறு முல்லை நில வாழ்க்கையில் முக்கியத்துவம் உடையதாகக் கருதப்பட்டது. முல்லை நிலத் தலைவியைக் காதலித்த தலைவன் தலைவி வீட்டார் பற்றிய காளையை வென்று தலைவியை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பது வழக்காகும். ஏறு தழுவுதல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பான பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அப் பரண்களில் இருந்து ஏறு தழுவுதலை மக்கள் கண்டு களித்தனர் . வீரர்கள் தொழுவில் காளைகளை அடக்கப் புகுந்த காட்சியை "சீறரு முன்பினோன் கணிச்சி போல் கோடுசீஇ / ஏறு தொழூஉப் புகுந்தனர் இயைபுடன் ஒருங்கு" (முல்லை. 101: 8 – 9) என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏறு தழுவுவதற்கு முன்பு தொன்மையான மரத்தின் கீழ் இருந்த தெய்வத்தை வழிபட்டுத் தொழுவுக்குள் வீரர்கள் புகுந்ததை, "துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்/ முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ" (கலி. முல்லை. 10113,14) என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

              காளைகள் பல்வேறு நிறங்களை உடையதாக விளங்கின. வீரம் மிகுந்த ஆண்கள் காளைகளை அடக்கத் துணிந்தனர். அவர்கள் மண்ணுக்குள் புகுந்த தன்மையினையும் காளைகளைத் தழுவிய முறையினையும் முல்லைக் கலியால் அறிய முடிகிறது. எழுகின்ற தூசுப் படலம் வானத்தை மூடுமாறு வீரர்கள் தொழுவில் புகுந்தனர். காளைகளை அடக்கி வெற்றிகொள்ளும் பொருட்டுக் களத்தில் இறங்கிய வீரர்கள் காளைகளின் கொம்புகளைப் பிடித்து மார்பில் பொருந்துமாறு தழுவிக் கொண்டனர். சிலர் காளைகளின் கழுத்தில் அடங்கிக் கிடந்து சோர்வடையுமாறு சிலர் தழுவினார்கள். தங்கள் தோள்களின் நடுவில் கழுத்தை நுழைத்துக் காளைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு விடாமல் கிடந்தனர். கொம்புகள் காயப்படுத்திய போதும் எந்தவிதமான அச்சமும் கொள்ளாமல் காளைகளை எதிர்கொண்டனர். இதனை,  "எழுந்தது துகள்/ ஏற்றனர் மார்பு/ கவிழ்ந்தன மருப்பு/  கலங்கினர் பலர்" (கலித். 102: 21-24) என்னும் அடிகள் விளக்குகின்றன. ஆயர் குலப் பெண்கள் காளைகளுக்கு அச்சம் கொண்டு அதனைத் தழுவ முன் வராத ஆடவனை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. என்பதைக் கலித்தொகை பதிவு செய்துள்ளது. இதனால் பண்டைத் தமிழரின் வாழ்க்கையில் ஏறுதழுவுதல் ஒரு பகுதியாக விளங்கியது. என்பதை அறிய முடிகிறது இதனை, "கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்/ புல்லாளே ஆய மகள்" (கலித். 103:63 -64) என்னும் அடிகள் உணர்த்தும்.

முல்லைத்திணையும் அக வாழ்வும்

         முல்லைத்திணை அக ஒழுக்கத்தில் இருத்தலைத் தனக்கு உரிய உரிப்பொருளாக கொண்டு விளங்குகிறது. தலைவன் போரின் பிரிந்து சென்று போர்ப் பாசறையிலோ அல்லது பொருள் தேடும் பணியிலோ இருப்பான். அவன் நினைவாக அவன் மீண்டு வரும் காலம் வரை தலைவி தலைவன் நினைவோடு அவனுக்காகத் தன் இல்லத்தில் காத்திருப்பாள். மு. வரதராசன் முல்லைத்திணை என்னும் நூலில் "தங்கணவன்மாரின் வரவை எதிர்பார்த்து ஆற்றியிருத்தலையே இருத்தல் என்று சுருங்கக் குறிப்பிட்டனர்" (மு. வரதராசன், முல்லைத்திணை, ப. 8) என்று குறிப்பிடுகிறார். இருத்தல் என்பது ஒழுக்கமாகும். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் முல்லைத்திணைப் பாடல்கள் இருத்தல் ஒழுக்கத்தை மிகுதியாகப் பேசுகின்றன. தலைவன் மீண்டு வருவதாகக் கூறும் கார்காலம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்ட போதும் கார்கால மழை பெய்யத் தொடங்கிய போதும் தலைவன் நினைவால் தலைவி வாடுவது இயற்கை. அவன் வருவதாகக் கூறிய காலம் வந்துவிட்டது என்று கூறிப் புலம்புவதும்; அவனுடையை சொற்கள் பொய்யாகிப் போய்விட்டது என்று கூறுவதும்; அவன் வாய்மை உடையவன் எனவே இது கார்காலம் அல்ல என்று தெளிவதும்; கார்காலம் தொடங்கிய நிலையில் அவன் வராபோது அதற்காக மிகுதியாக வருத்தம் கொள்வதும்; தோழி அவளைத் தேற்றுவதும் இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்திருக்கின்றது. தலைவன், "கார்ப் பருவம் வருவேன்" என்று கூறிப் பிரிந்து சென்றதை நற்றிணை (248) குறிப்பிடுகிறது. "சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ//பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப/ தண் புதல் அணிபெற மலர/ வண் பெயல் கார் வரு பருவம்" என்றனர் மன் இனி, (நற். 248:1 - 4) என்னும் அடிகளில் தலைவி முல்லைக் கொடியில் பூக்கள் மலருமாறு கார்காலம் தொடங்கிவிட்டது. ஆனால் தலைவன் வரவில்லை என்று வருந்துவதைக் காண முடிகிறது. தலைவன் குறித்த காலத்து வராதபோது தலைவியின் துன்பம் பெருகும் நிலையை, "அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்" எனப்/ பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்/ கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை/ வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல / நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை /  யாங்கனம் தாங்குவென்" (நற். 381:1 - 6) என்னும் அடிகள் விளக்குகின்றன. இவ்வடிகளில் தலைவி தன் துன்பம் மிக்க மனநிலையை விளக்குவது கருதத்தக்கது. தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை. அவன் வராத காரணத்தால் நான் துன்பத்தால் இறந்து விடுவேன் போலிருக்கிறது என்று கூறி வருந்துவதைக் காண முடிகிறது. தலைவன் வருவதாகக் கூறிய கார்காலத்தில் மழை பெய்யத் தொடங்குகிறது. இதன் காரணமாகத் தலைவி வருத்தம் கொள்ளத் தொடங்குகிறாள் ஆனால் தோழி இது கார்காலம் மழை அல்ல என்று தன்னுடைய கருத்தை உணர்த்தித் தலைவியை அமைதிப்படுத்துவதை அறிய முடிகிறது. இதனை நற்றிணை (316) விளக்கும். தலைவன் தன் கடமை முடிந்து திரும்பி வரும் வரை தலைவி ஆற்றி இருத்தல் முல்லைத் திணைக்கு உரிய சிறப்புகளில் ஒன்றாக அமைகிறது. முல்லையின் இருத்தல் ஒழுக்கத்தை அறிந்துகொள்வதற்கு முல்லைப்பாட்டு மிகுந்த உதவி செய்கிறது. தலைவன் வேனில் பாசறையில் தன்னுடைய கடமையைச் செய்வதற்காகக் காத்திருக்கும் சூழலில் தலைவி தலைவனை நினைத்துத் துன்புறும் சூழல் விரிவான நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை  "காணாள், துயர் உழந்து/ நெஞ்சை ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு /நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்/ மையல் கொண்டும், ஓய்யென உயிர்த்தும்/ ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து/ பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல/  இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து/ முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி / இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்/அஞ்செவி நிறைய ஆலின" (முல்லைப். 80 – 89) என்னும் அடிகளால் அறியலாம். போராட்டமான மன நிலையும் அவன் மீண்டு வரும் தேரின் ஒலி தலைவியின் செவியை நிறைப்பதையும் மேற்கண்ட அடிகள் பதிவு செய்துள்ளன.

தலைவன் மனநிலை

        போரின் பொருட்டாகவோ அல்லது பொருள் தேடும் பொருளாகவோ தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தன்னுடைய கடமை முடிந்தவுடன் தலைவியைச் சந்திக்கும் எண்ணம் கொள்வான். அதனால் கடமை முடிந்ததும் உடனடியாக காலம் தாழ்த்தாமல் கிளம்புவதை நோக்கமாகக் கொள்வான். கார்காலத்தில் மீண்டு வருவேன் என்று தலைவியிடம் கூறிச் சென்ற அவன் சரியான காலத்தில் வரவில்லை என்றால் தலைவி துன்புறுவாள் என்பதை உணர்ந்தவனாக இருப்பான். ஆனால் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவி கார்காலத்திற்கான குறிகள் தோன்றிய உடன் வருத்தம் கொள்ளத் தொடங்குவாள். முல்லைத்திணைப் பாடல்கள் தலைவியின் மனநிலையை எடுத்துக்கூறுவதோடு மட்டுமல்லாமல் தலைவன் மனநிலையினையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. தலைவன் தன் கடமை முடிந்ததும் தலைவியுடன் வாழ்கின்ற நாட்களே பயனுள்ள நாட்கள் மற்ற நாட்களெல்லாம் பயனற்றவை என்று எண்ணுவதை அறிய முடிகிறது. இதனை,  "எல்லாம் எவனோ பதடி வைகல் / அரிவை தோளணைத் துஞ்சிக்/ கழிந்த நாள் இவண் வாழும் நாளே" (ஐங். 479) என்னும் சான்றால் அறியலாம். கடமை முடிந்தது இனியும் காலம் தாழ்த்தாமல் தலைவி இருக்கும் இடத்தை விரைந்து சென்று சேர வேண்டும் என்று அவன் எண்ணும் போது தலைவனின் மனம் தலைவியை விரைந்து சென்றடைய எண்ணுவதை அறிய முடிகிறது (குறுந்.323)

முடிவுரை

       குறிஞ்சி நிலச் சூழலில் இருந்து முல்லை நிலம் சற்று மாறுபட்டதாகும். மிக உயர்ந்த சிகரங்களையும் மலைத் தொடர்களையும் உடையது குறிஞ்சி நிலம். முல்லை நிலம் குறிஞ்சியின் சரிந்த மலையின் அடிப் பகுதியில் தொடங்குகிறது. அங்கிருந்து மழை வளம் குறைவதன் காரணமாகக் காடுகள் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய தாவரங்களையும் குறைந்த மழையை ஏற்று விளையும் பயிகளையும் கொண்டதாக அமைந்திருக்கின்றன. முல்லை நிலத்தில் வாழ்கின்ற மக்கள் அச்சூழலில் வாழப் பழக்கியவர்களாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொண்டவர்களாக நிலவியல் மூலமாக அறியப்படுகிறார்கள்.

துணை நூல்கள்

அகநானூறு மூலமும் உரையும், சென்னை: என் சி. பி. எச்,  2004

ஐங்குறுநூறு, மூலமும் உரையும், சென்னை: என் சி. பி. எச்,  2004

கதிர்முருகு, முல்லைப்பாட்டு மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம், 2009

கதிர் முருகு, மலைபடுகடாம் மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம், 2009

கதிர்முருகு, பெரும்பாணாற்றுப்படை மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம், 2009

கலித்தொகை , மூலமும் உரையும், சென்னை: என் சி. பி. எச்,  2004

குறுந்தொகை, மூலமும் உரையும், சென்னை: என் சி. பி. எச்,  2004

சசிவல்லி, வி.சி, முல்லை, சென்னை: உலகத்  தமிழாராய்ச்சி நிறுவனம், 1980

சண்முகம்பிள்ளை மு, சங்கத் தமிழர் வாழ்வியல், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004

தொல்காப்பியம், பொருளதிகாரம், சென்னை: சாரதா பதிப்பகம், 2007

நற்றிணை மூலமும் உரையும், சென்னை: என் சி. பி. எச்,  2004

புறநானூறு மூலமும் உரையும், சென்னை: என்.சி.பி.எச். 2004

வரதராசன் மு , முல்லைத்திணை, சென்னை: சாது அச்சுக்கூடம், 1995