ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சமூகவியல் நோக்கில்  நா.முத்துக்குமார் கவிதைகள் (Poems of Na. Muthukumar towards Sociology)

ரா. ஸ்ரீபிரியா, உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பூர் - 641 652 31 Jan 2024 Read Full PDF

ABSTRACT:

Man is a social animal. He can only live with others. Creators contribute to social progress. Na. Muthukumar has expressed a lot of social concepts in his poems. He wrote the events he saw and experienced in poems. Humanity is not yet extinct; Those who help others in distressfs; They live forever. Although India has progressed in all fields, most of the people still live in poverty. Agriculture and farmlands are being destroyed today. The feelings of women and the hardships faced by women are beautifully expressed in Na. Muthukumar's poems. From the social point of view, the poems of Na. Muthukumar are considered in this study.

Keywords: Society, Humanity, Poverty, Women, Agriculture, Poetry, Na. Muthukumar.

ஆய்வுச்சுருக்கம்

மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு. அவன் பிறரோடு இணைந்து தான் வாழ முடியும். சமூக முன்னேற்றத்திற்குப் படைப்பாளர்கள் பங்களிப்பு செய்கின்றனர்.  நா. முத்துக்குமார் தம் கவிதைகளில் சமூகக் கருத்துகளை அதிகமாகவே கூறியிருக்கிறார். அவர் கண்ட, அனுபவித்த நிகழ்வுகளைக் கவிதைகளில் படைத்திருக்கிறார். மனித நேயம் இன்னும் அழிந்துவிடவில்லை; பிறர் துன்பத்தில் உதவுகின்றவர் என்றும்  நிலைத்து வாழ்கின்றனர். இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேறினாலும், பெரும்பாலும்  மக்கள் இன்னும் வறுமையில் தான் வாழ்ந்து கொண்டு  இருக்கின்றனர்.  விவசாயமும் விளைநிலங்களும் இன்று அழிந்து வருகின்றன. பெண்களின் உணர்வுகளும் பெண்கள் படும் இன்னல்களும் நா.முத்துக்குமார் கவிதைகளில் அழகாக வெளிப்படுகின்றன. சமூகப் பார்வையில் நா.முத்துக்குமாரின் கவிதைகள் இவ்வாய்வில் நோக்கப்பட்டுள்ளன.

திறவுச் சொற்கள் :  சமூகம், மனித நேயம், வறுமை, பெண்கள், விவசாயம், கவிதைகள், நா. முத்துக்குமார்.

முன்னுரை

மனிதர்களால்  தனித்து வாழ முடியாது. ஒரு சமூகமாக சேர்ந்து வாழத் தான் முடியும். அவ்வாறு சமூகமாக வாழ்கிற போது பல்வேறு சிக்கல்கள், சவால்கள் எழுகின்றன. இவைகளைச் சரிப்படுத்த சமூகவியல் என்ற ஒன்று தேவைப்படுகிறது. மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆய்வதே சமூகவியல் ஆகும். “சமூகவியலின் முக்கியக் குறிக்கோள் சமுதாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் பற்றிய உண்மை அறிவைப் புகட்டி, மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க முயல்வதாகும்”1   என்று கல்பகம்  கூறுகிறார்.

“சமுதாயம் என்ற சொல் ஆறறிவு படைத்த மக்கள் இனத்தோடு பிணைந்து நிற்கும் ஒன்று. ஆறறிவு படைத்த மக்கள் இனத்துள்ளும் உணர்வற்ற அடிப்படை உணர்வில்லாத மக்கள் கூட்டம் சமுதாயம் என்னும் சொல்லுக்கு இலக்கு ஆகாது”2 என்று  பரம சிவானந்தம் சமுதாயம் குறித்துக் கூறுகிறார்.

சமூகத்தில் வாழும் படைப்பாளர்கள்  சமூகத்தை உற்று நோக்குகின்றனர். சமூகத்தில் நடக்கும் தனிமனிதச் சிக்கல்களையும், சமூகப் பிரச்சினைகளையும் படைப்புகளில் வெளிப்படுத்தி, சமூக முன்னேற்றத்திற்கு அவர்கள் உந்து சக்தியாகத் திகழ்கின்றனர். அவ்வகையில் கவிஞர் நா.முத்துக்குமார் தம் கவிதைகளில் சமூகப் பிரச்சினைகளைச் சுட்டியுள்ளார். சமூகவியல் நோக்கில் நா.முத்துக்குமார் கவிதைகள் என்ற பொருளில்  இக்கட்டுரை அவற்றை ஆய்கிறது.

மனித நேயம்

மனிதநேயம் இன்று செத்துவிட்டது, அருகில் இருப்பவரை ஏறெடுத்துப் பார்க்காத மனித சமூகம் எனப் பலவாறு கூறப்பட்டாலும், மனிதநேயம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது நா.முத்துக்குமாரின் வாதம் ஆகும். அவர் தன் கவிதையில்,

“இன்றைக்கும்…

கைக்குழந்தையோடு

 பேருந்தில் பயணிப்பவர்களுக்கு

எழுந்து இடம் கொடுக்க

ஆள் இருக்கிறது

 

இன்றைக்கும்…

பகலில் விளக்கெரியும்

மோட்டார் சைக்கிளுக்கு

சைகை காட்டுகிறார்கள் .

 

இன்றைக்கும்…

பழக்கத்தில் இருக்கிறது

ஐயோ பாவம் என்கிற வார்த்தை”3

 

 என்று குறிப்பிடுகிறார். இயற்கைச் சீற்றங்கள் எழும்போது பிறருக்கு உதவி செய்யும் இளைஞர்களையும் தன்னார்வத் தொண்டு செய்பவர்களையும் காண முடிகிறது. சாலைகளில் விபத்து நடக்கிறபோது மக்கள் ஓடிவந்து உதவுகிறார்கள். எனவே மனிதநேயம் இன்னும் இந்த மண்ணை விட்டு அழிந்து விடவில்லை.

வறுமை

தமிழ் இலக்கியத்தில் பரவலாகக் காணக்கிடக்கும் செய்தி “விருந்தோம்பல்” ஆகும். விருந்தோம்புதலே இல்லறத்தின் தலையாய பணி எனத் தமிழ் இலக்கியம் சுட்டுகிறது. வறுமையில் உழன்ற பாணர்களுக்கும் கூத்தர்களுக்கும் பரிசுகள் கொடுத்துச் சிறப்பித்தார்கள் மன்னர்கள். இல்லாமையிலும் இருப்பதைக் கொடுத்து உபசரித்த மண் தமிழ் மண். இருப்பினும் இன்றைக்கு குறுகிய மனப்பான்மையின் காரணமாக உபசரிப்பு என்ற பண்பு குறைந்து வருகிறது, என்பதை                            நா. முத்துக்குமாரின்  கவிதை  எடுத்துரைக்கிறது.

“இன்று வேண்டாம்

நாளை வா நிலா

ஊட்டுவதற்குச் சோறு இல்லை”4

 

எந்த விருந்தாளிக்கும்

கத்தாதே காக்கையே

எங்களுக்கே உணவில்லை”5

காக்கையே விருந்தினர் வர நீ கரைவாயாக, உனக்கு நெய்யில் பொரித்த மாமிசத்தை உணவாகத் தருவேன் என ஒரு தலைவி கூறுவதாக நற்றிணையில் ஒரு பாடல் உள்ளது. காக்கை கரைதல் என்பது விருந்தினர் வருகையின் முன்னறிவிப்பு என்பது நம்பிக்கை. அதனால்தான் நா.முத்துக்குமார் காக்கையிடம் இவ்வாறு வேண்டுகிறார்.

வறுமையின் காரணமாகவும், ஆண்கள் சரியாக வேலைக்குப் போகாத காரணத்தினாலும், வேலை செய்கிறப் பணத்தை அவர்கள் குடித்து அழிப்பதாலும் பெண்கள் இன்று கூலி வேலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வேலைக்கு செல்கிறார்கள்.  இதனை  நா.முத்துக்குமார் தம் கவிதையில் குறிப்பிடுகிறார்.

“…………………………..

     பக்கத்து  ஊர்  தொழிற்சாலைக்குப்

புதிதாக

வேலைக்குப் போகத்

துவங்கியிருக்கும்

     வீட்டின் பெண்கள்

     காய்ப்பேறிய தங்கள் கைகளை

யாருமற்ற தனிமையில்

தடவிப்பார்த்துக் கொள்கின்றனர்”6

புதிதாக இவர்கள் வேலைக்குச் சென்ற காரணத்தினால் இவர்களின் கைகள் காய்ப்பேறி விட்டது என்ற வருத்தத்தையும் பதிவு செய்கிறார் நா.முத்துக்குமார்.

விவசாயம்

இந்தியா ஒரு விவசாய நாடு. இருப்பினும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப இன்று உணவை உற்பத்தி செய்ய முடியவில்லை. வளா்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளும் கட்டடங்களும் வீடுகளும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விட்டன.  இவ்வாறு விவசாயம் குறைந்து வரும் நிலையில்  நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் சிந்திக்க வைக்கின்றன.

“…………………………

தங்கள் களத்துமேடுகளையும்

எஞ்சியிருக்கும்

நிலங்களையும்

கான்கிரீட் வனங்களாக

மாற்றிக் கொண்டிருக்கும்

மாநகரத்துக்கு

நெல் மூட்டைகளை

அனுப்பி வைக்கிறார்கள்

விவசாயிகள்”7

பெண்கள் நிலை

அன்று முதல் இன்று வரை பெண்களைப் பற்றியும், பெண் பிரச்சனைகளைப் பற்றியும் பாடாத கவிஞர்கள் இல்லை, எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. காரணம் பெண் தான் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். காலம் காலமாகப் பெண் என்பவள் அடக்கப்படுகிறாள். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அடக்குமுறை நியதிக்குள் நிறுத்தப்படுகிறாள்.

“இன்று வரை அம்மா

கதவுகளின் பின்னிலிருந்து தான்

அப்பாவோடு பேசுகிறாள்

கடைசி வரை அப்பாவும்

மறந்தே போனார்

மனசுக்குள் தூர் எடுக்க”8

வீட்டில் உள்ள கிணற்றில் இறங்கி அப்பா தூர் வாருகிறார். பல பொருட்களை எடுக்கிறார். ஆனால் அவர் தன் மனதை இன்னும் தூர் எடுக்கவில்லை எனக் குழந்தைகள் கூறுவதாக இக்கவிதை அமைகிறது. சமூகத்தில் பெண்ணுரிமை எனப் பேசும் ஆண்களே வீட்டிற்குள் பெண்களுக்கு உரிய சுதந்திரம் கொடுப்பதில்லை என்பதை  நா.முத்துக்குமார் சுட்டிக் காட்டுகிறார்.

வறுமையின் காரணமாக, வரதட்சணையின் காரணமாக திருமணமாகாத பெண்களின் வலியை “தையல்” என்ற கவிதையில் பதிவு செய்கிறார் நா.முத்துக்குமார்.

“வயது முற்றிய

கொலுசுக் கால்களின்

உஷ்ண உரசலை

அதற்கும்  மீறிய

அந்தரங்க வலிகளை

சக ஆணின்

சபலப்பார்வையால்

வேகமாய்ச் சுற்றிய

விரல்களின் கோபத்தை

சிரிப்புடன் சிதறிய

துணிகளின் துணிக்கை என

பனி கொட்டும் இரவில்

எல்லாம் யோசித்தபடி

விழித்துக் கொண்டிருந்தது

ஏற்றுமதி நிறுவனத்தின்

தையல் இயந்திரம்”9

பெண் குழந்தைகள் பிறந்து விட்டாலே செலவுதான் என நினைக்கிறது சமூகம். பெண்களோடு பிறக்கின்ற சகோதரனின் வேலை சகோதரியைக் கல்யாணம் செய்து வைப்பது தான் என்ற பேச்சு சமூகத்தில் உள்ளது. இதனை இக்கவிதையில் பதிவு செய்கிறார் நா.முத்துக்குமார்.

“……………………………

மிகச் சாதாரணமாய்

கேட்டு விட்டாய் நண்பா

உனக்கென்ன

அக்காவா தங்கையா

கஷ்டப்பட்டு சம்பாதித்து

கல்யாணம் பண்ணித் தர

ஒரே பையன் என்று

எனில்

கஷ்டப்பட்டு சம்பாதித்து

கல்யாணம் பண்ணித் தர மட்டுமா

அக்காவும் தங்கையும்”10

இரண்டு நண்பர்களின் உரையாடலில் இப்படிப் பேசப்படுகிறது. பெண்கள் என்றால் திருமணம் தவிர்த்து வேறு மகிழ்வான உறவின் வெளிப்பாடுகளே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

திருமணம் செய்து  வைக்கப்பட்ட  பெண்களின் மனவலியைச் சொல்லவே தேவையில்லை. சொல்லாமலே புரியும். புகுந்த வீட்டில் மாமியாரால், பிறரால் குறை சொல்லப்படவும், விமர்சிக்கப்படவும் ஆளாகிறாள் அவள். எனினும் கணவன் அன்பாக, ஆதரவாக இருந்தால் அவளால் மகிழ்வாக வாழ முடியும்.  கணவனும் சேர்ந்து குறை கூறினால் அவளது வாழ்வு சோகம் தான்.

      திருமணம் முடிந்த பெண் தன் தாய்க்குக் கடிதம் எழுதுகிறாள்.  அதில் தன் பிறந்த வீட்டு உறவுகளை எண்ணிப் பார்க்கிறாள். நினைத்தவுடன் அவளால் சென்று அவர்களைப் பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட மன உணர்வுகளை எல்லாம்  நா.முத்துக்குமார் தம் கவிதையில் காட்டுகிறார்.

“இப்பவும்

என் மனது

நம் வீட்டைச் சுற்றியே

வளைய வருகிறது

 

அம்மா

நீ கொடுத்து அனுப்பிய

காய்ந்த வேப்பம் பூக்கள்

ரசத்தில் மிதக்கும் போதெல்லாம்

 உன் முகம் வந்து வந்து போகிறது.

இங்கு பேப்பர் போடுபவர்

அப்பாவைப் போலவே இருக்கிறார் .

………..

அதிகாலைகளில்

புன்னகையுடன்

சைக்கிளில் அவர் கடந்து செல்வது

சற்று ஆறுத லாயிருக்கிறது.

...........

...........

ஆரம்பத்தில்

ஒழுங்காய் இருந்த இவர்

இப்போதெல்லாம் குடித்துவிட்டு

அகாலத்தில்  திரும்புகிறார்.

 

மற்றபடி

நான் நலமாக இருக்கிறேன்.”11

புகுந்த வீட்டில் பெண்கள் படும் மனத்துன்பங்களை இங்கு பதிவிடுகிறார்        நா. முத்துக்குமார்.

முடிவுரை

நா. முத்துக்குமார் தான் பார்த்த சமூகத்தைக் கவிதைகளில் வடித்துள்ளார். சமூகத்தின் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதும், சமூக அவலங்களை எடுத்துக் கூறுவதும், சமூகம் உயரக் கருத்துக்கள் சொல்வதும், தவறுகள் மறைய வழி சொல்வதும் படைப்பாளர்களின் நோக்கம். ஆகும்.  கவிஞர் நா.முத்துக்குமார் சமூக நிகழ்வுகளைத் தம் படைப்புகளில் எடுத்துக்காட்டியிருக்கிறார். மனிதநேயம் வாழ்கிறது, வறுமை இன்னும் காணப்படுகிறது, விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் தமது கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். மேலும் பெண்களின் உணர்வுகள், பெண்களுக்கு எதிரான செயல்கள் இவைகளை எல்லாம் தமது கவிதைகளில் நா.முத்துக்குமார் விரிவாகப் பேசுகிறார்.  வறுமை மறைந்து,  விவசாயம் செழித்து,  பெண்கள் மகிழ்ந்து வாழ்வதே ஒரு நாட்டுக்கு சிறப்பானதாக இருக்கும் என்ற கருத்தை இவரது கவிதைகளில் வலியுறுத்துவதை ஆய்ந்து உணர முடிகிறது.

அடிக்குறிப்புகள்

  1. கல்பகம்  இரா., சமூகவியல், ப. 2
  2. பரமசிவானந்தம் ஆ.மு., சமுதாயமும் பண்பாடும், ப.24
  3. முத்துக்குமார் நா., நா. முத்துக்குமார் கவிதைகள், ப.21
  4. மேலது, ப.365
  5. மேலது, ப.364
  6. மேலது, ப.235
  7. மேலது, ப.229
  8. மேலது, ப.12
  9. மேலது, ப.22
  10. மேலது, ப.34
  11. மேலது, ப.102

துணை நூல் பட்டியல்

  1. முத்துக்குமார் நா., நா. முத்துக்குமார் கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை,  2020.
  2. கல்பகம்  இரா., சமூகவியல்,  தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.
  3. பரமசிவானந்தம் ஆ.மு., சமுதாயமும் பண்பாடும், தமிழ்க் கலைப் பதிப்பகம், சென்னை, 1972.