ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிலம்பில் விழுந்த நிலங்கள் (Silambil Vilundha Nillangal)

ச.பிருந்தா, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம் :

           ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். இந்நூல் மிகப் பெரிய ஆய்வுக் களம் ஆகும். அதில் ஒரு சிறு துளியானதே சிலப்பதிகாரத்தில் காணப்படும் நிலங்கள் என்னும் கருத்தில் அமைந்த ஆய்வுக் கட்டுரை ஆகும். இக்கட்டுரையானது சிலப்பதிகாரதில் காணப்படும் நிலப்பாகுபாட்டினை பகுத்துக் காட்டுவதாக அமைகிறது. அதோடு மட்டுமல்லாமல் சிலம்பின் கதையையும் அதனோடு பொருத்திக் காட்டுவதாக அமைகிறது.

திறவுச்சொற்கள்

              ஐவகை நிலப் பாகுபாடுகள், சிலப்பதிகாரம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

Abstract :

         Silapathikaram is the first one in Imperumkapiyamgal. This book is a huge fild of study. A small part of is a research paper on the concept of lands found in Silapathikaram. This article sets to analyze the land divition in Silapathikaram. Apart from the story of Silapathikaramis also show to match it.

Keywords :

               Five types of land, Silapathikaram, Kurinji, Mullai, Marutham, Neithal, Palai.   

முன்னுரை :

             முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்னும் பல சிறப்புப் பெயர்களைத் தாங்கி நிற்பது சிலப்பதிகாரம் ஆகும். இத்தகு சிறப்பு வாய்ந்த காப்பியத்தின் ஆசிரியர் சேரன் செங்குட்டுவனின் தம்பியான இளங்கோவடிகள்என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், இச்சிலம்பின் கதையும், கதை முடிவும் சிலம்பால் அமைந்தது என்பதும் அறிந்ததே. ஆகவே, யாவரும் அறிந்த ஒன்றினைப் பற்றி விவரித்துக் கூறாமல் சிலம்பில் விழுந்த நிலங்கள்என்ற தலைப்பிற்கு ஏற்றாற் போல கட்டுரையைக் கொண்டு செல்ல விளைகிறேன்.

              சிலப்பதிகாரக் காப்பியத்தில் காணப்படும் நிலப் பாகுபாடுகள் குறித்துக் கூற விளைவதன் காரணமாக சிலம்பில் விழுந்த நிலங்கள்என்னும் தலைப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பிய நிலப் பாகுபாடுகள், சிலம்பில் எங்ஙனம் பொருந்தியுள்ளது என்பதைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

தொல்காப்பிய நிலப் பாகுபாடுகள் :

           தொல்காப்பியம், தமிழ் இலக்கண நூல்களுள் மிகப் பழமையன நூல் ஆகும். இதன் ஆசிரியர் தொல்காப்பியர். தொல்காப்பியம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அவை எழுத்து, சொல், பொருள் என்பவை ஆகும். எழுத்தும், சொல்லும் தமிழ் மொழியின் இலக்கணத்தைக் கூறுவதாக அமைகிறது. பொருளதிகாரம், இவ்வுலகில் காணப்படும் காட்சிப் பொருள், கருத்துப் பொருள் ஆகியவற்றைத் தொகுத்து முதல், கரு, உரி என வகைப்படுத்தி வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆய்வாக அமைகிறது. நிலமும், காலமும் வாழ்க்கைக்கு இன்றுயமையாதன. எனவே, இவை முதற்பொருள். இதைத் தொல்காப்பியம்,

“முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

                               இயல்புஎன மொழிப இயல்புணர்ந் தோரே”        (தொல்.அகம்.பா-4)

என்று கூறுகிறது. முதல் பொருளில் முதன்மையாகக் கூறப்படுவது நிலம் ஆகும். நிலமானது மலை, கடல், காடு, வயல் எனப் பகுக்கப்பட்டுள்ளது. இதைத் தொல்காப்பியம்,

                               “மாயோன் மேய காடுறை உலகமும்

                                சேயோன் மேய மைவரை உலகமும்

                                 ..................................................................

      சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”           (தொல்.அகம்.பா-5)

என்று விளக்குகிறார். இதில் முல்லைக்குரிய இடமாகக் காடும், குறிஞ்சிக்குரிய நிலமாக மலையும், மருதத்திற்குரியது வயல் எனவும், நெய்தலுக்குரியது கடல் எனவும் பகுத்திருப்பதை நம்மால் அறிய முடிகிறது. ஐந்திணை என்று கூறப்படுவனவற்றுள் பாலை நிலத்திற்கு மட்டும் நிலமானது பகுக்கப்படாமல் இருப்பதையும் இதன் வாயிலாக அறிய முடிகிறது.

                        நிலம், பொழுது  இவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவை உலக உயிர்கள். முதற்பொருளை அடியொற்றி வரும் காட்சிப் பொருள்கள் அனைத்தும் கருப்பொருள்கள் ஆகும். முதற்பொருளின் வயிலாக அமைந்த கருத்துப் பொருள்கள் அனைத்தும் உரிப்பொருள்கள் ஆகும். கரு மற்றும் உரிப்பொருளுக்கு அடிப்படையாக அமைவது முதற்பொருள் ஆகும். முதற்பொருள்களுள் ஒன்றான நிலங்கள் சிலம்பில் அமைந்த பாங்கினை அறிந்து கொள்வோம். சிலம்பில் விழுந்த முதல் நிலம் நெய்தல் நிலமாகும்.

சிலம்பில் நெய்தல் :

           நெய்தல் திணைக்குரிய இடமாகக் கருதப்படுவது “கடலும் கடல் சார்ந்த இடமும்” ஆகும். சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியின் கதையானது துளங்கும் இடம் நெய்தல் திணை சார்ந்த புகார் நகரம் ஆகும். புகார் நகரத்தின் பெருவணிகர்கள் மாசாத்துவான் மற்றும் மாநாய்க்கன் என்பவர். இவர்களின் பிள்ளைகளான கோவலனுக்கும் கண்ணகிக்கும் மணம் முடிக்கும் நிகழ்வே சிலம்பின் முதல் காட்சியாகும். இக்காட்சி நிகழும் இடம் கடற்கரை துரைமுக நகரமாகிய புகார் நகரம் ஆகும்.

            காவிரி ஆறானது கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் ஆதலால் காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது என்று கருதலாம். கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும். இதுவே, புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் ஆகும். புகாரே சோழ நாட்டுத் துறைமுகம். பட்டினம், பாக்கம் என்பவை கடற்கரை நகரங்களைக் குறிக்கும் பெயர்கள் ஆகும். “ஒவ்வொரு பெரிய கடற்கரை நகரமும் இரு பாகங்களை உடையதாய் இருந்தன. அவற்றுள், ஒரு பாகம் ஊர் என்றும், மற்றொரு பாகம் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டன” (த.ஊ.பே, த.நி, ப-37-38). பூம்புகார் நகரத்தின் ஒரு பாகம் மருவூர்ப் பாக்கம் என்றும், மற்றொரு பாகம் பட்டினப்பாக்கம் என்றும் பெயர் பெற்றன. இதனைச் சிலப்பதிகாரம், இந்திரவிழவு ஊர் எடுத்த காதை வாயிலாக அறியலாம்.

                             “சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு

                              மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்”    (சில.இந்.வி.கா  பா-38-39)

        இப்பாடல் வரிகள் மருவூர்ப் பாக்கம் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. மேலும், பட்டினம் என்பதற்கு,

                              “பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய

                              பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்” (சில.இந்.வி.கா  பா-57-58)

என்னும் வரிகள் சான்றாக அமைகின்றன.

            மேலும், கோவலன் கண்ணகியை விடுத்து மாதவியை நாடிச் செல்கிறான். அவர்கள் இந்திரவிழாவின் போது புனலாடுவதற்காக காவிரிக் கரையை அடைகின்றனர். புனலாடுதல் என்பது “நீர்த் திருவிழா” என்றும் கூறப்படும்.  தலைவன் தலைவியோடு நீராடுதல், தலைவன் தான் விரும்பிய ஒருத்தியோடு ஆடுதல், மகளிர் தோழியரோடு ஆடுதல், சுனையில் ஆடுதல், ஆடவர் மகளிரோடு சேர்ந்து ஆடுதல் என சங்க இலக்கிய நூல்களின் வாயிலாக புனலாட்டு குறித்து அறிய முடிகிறது. புனலாட்டு குறித்த செய்தியை ஐங்குறுநூற்றின் புனலாட்டுப் பத்து விளக்குகிறது. தலைவன் ஒருவன் தான் விரும்பிய ஒருத்தியோடு புனலாடுவதை,

        “சுதார் குறுந்தொடிச் சுரமை நுடக்கத்து

நின்வெங் காதலி தழீய நெருநை

                                            .................................................................

                                           புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றகு ஒளியே”   (ஐங். பு.ப பா-71)

என்னும் பாடல் கூறுகிறது. அதுபோல, கோவலன் மாதவியோடு புனலாடச் செல்கிறான். அங்கே, இருவரும் யாழிசைத்து நெய்தல் திணைப் பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர். இப்பாடல்கள் கடலாடு காதை, கானல் வரிப் பகுதிகளுல் அமைவதைக் காணலாம்.

“மறையின் மணந்தாரை வன்பரதர்

பாக்கத்து மடவார் செங்கை

..................................................... 

                                                ஊதும் புகாரே எம் ஊர்.”                         (சில.கா.வ பா-29)

               இப்பாடலானது நெயதல் திணைக்குரிய இலக்கணத்தைப் பெற்று அமைந்துள்ளது. கானல் வரிப் பாடல் அனைத்தும் நெய்தல் திணைக்குரிய இலக்கணதைப் பெற்று வருவதால் இப்பகுதி நெய்தல் திணைக்குரியது எனலாம்.

சிலம்பில் பாலை :

நெய்தலை அடுத்து பாலைத் திணையில் சிலம்பு விழுந்தது. தொல்காப்பியர் பாலை

நிலத்திற்கென தனியானதொரு நிலப்பகுதியைக் கூறவில்லை. இதை உணர்த்தும் விதமாக,

                                     “அவற்றுள்

                                      நடுவண் ஐநதிணை நடுவணது ஒழியப் 

                                      படுதிரை வையம் பாத்தியப் பண்பே”             (தொல்.அகம். பா-2)

என்ற நூற்பா அமைந்துள்ளது. ஆனால், பிற்காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்கள் பாலை நிலமானது வறட்சியான பகுதி என்று குறிப்பிடுகிறது. முதற் காப்பியமான சிலம்பில் பாலைக்கான வரையறை கூறப்படுகிறது.

    “முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,

நல்லியல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்துப்,

                                   பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”        (சில.கா.கா. பா-64-66)

            முல்லையும், குறிஞ்சியும் தன் தன்மையில் இருந்து மாறுபட்டு, நல்லியல்புகள் முழுவதும் இழந்து, வழிச் செல்வோரை நடுங்கு துயரம் உறுமாறு செய்து, பாலை எனப்படுகின்ற கொடிய வடிவினைக் கொள்ளும் என்று சிலம்பு கூறுகிறது. தொல்காப்பியர் பாலைத்திணையின் பருவமாக குறிப்பிடுவது வேனிற் காலம் ஆகும். சிலம்பில் எட்டாம் காதையாக அமைந்துள்ளது வேனிற் காதையாகும். இக்காதையில்

“யாழ்-இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை உருத்தது ஆகலின்”

 (சில.கா.வ பா-24)

             கோவலனும் மாதவியும் தம்முள் கருத்து வேறுபட்டு பிரிந்தனர். இதன் காரணமாக கோவலன் மாதவியைவிட்டுப் பிரிந்து போகிறான். கோவலனது பிரிவானது மாதவிக்குத் தரும் துன்பத்தை வேனிற் காதை கூறுகிறது.

                            “மாலை வாரார் ஆயினும், மாண் இழை!

                              காலை காண்குவம் எனக் கையறு நெஞ்சமொடு”       (சில.வே.கா, பா-8)

             இப்பாடல் வரிகள் கோவலனின் பிரிவால் மாதவி மனம் கலங்கும் திறத்தை எடுத்துக் கூறுவதாக அமைவதால் இது பாலைத்திணை ஆயிற்று.

              இதனை அடுத்து கோவலன் கண்ணகியை அடைகிறான். கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளின் துணையோடு பொருள் ஈட்ட மதுரை மாநகரை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் செல்லக் கூடிய வழியைக் கூறுவதாக அமைவன காடுகாண் காதையும், வேட்டுவ வரியும் ஆகும். வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடும், சாலினி தெய்வமேறி கூறும் செய்திகளும் கூறப்படுகிறது. இவையும் பாலைத் திணைக்கு உட்பட்டன.

சிலம்பில் மருதம் :

            நெய்தலிலும் பாலையிலும் விழுந்த சிலம்பானது அடுத்ததாக விழுந்த நிலம் மருதம் ஆகும். மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த சமவெளிப் பகுதியைக் குறிக்கும். பலதரப்பட்ட மக்களும்  பலதரப்பட்ட தொழில்களும், வணிகச் சந்தைகளும் நிகழக்கூடிய ஊர்ப்பகுதி ஆகும். இப்படிப்பட்ட ஊரே மதுரை மாநகரம் ஆகும். சிலம்பு கூறும் மதுரை நகரானது, அரச வீதி, கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடை வீதி, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி போன்ற பலதரப்பட்டதாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

“ஊர் என்னும் பெயர் மருத நிலக் குடியிருப்பைக் குறிப்பதாகும்” (த.ஊ.பே, த.நி, ப-31).

         மதுரையை மாநகர் என்றும் மூதூர் என்றும் குறிப்பிடுவதனால் இது மருதத் திணை என்று கூற வழி உண்டு.

“பதியெழு அறியாப் பண்பு மேம் பட்ட

                                         மதுரை மூதூர் மாநகர் கண்டுஆங்கு”            (சில.அ.கா பா-5-6)

            கோவலனும் கண்ணகியும் பொருள் தேடச் சென்ற மதுரை நகரானது மருதத் திணை சார்ந்தது என்று கூறலாம்.

சிலம்பில் முல்லை :

            சிலம்பு அடித்தபடியாக விழுந்தது முல்லை நிலத்தில் எனலாம். முல்லை நிலம்

என்பது காடும் காடு சார்ந்த பகுதியையும் குறிப்பதாகும். அந்நில மக்கள் ஆயர், ஆய்ச்சியர் எனப்பட்டனர். இதைத் தொல்காப்பியர்,

       “ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”         (தொல்.அகம். பா-23)

என்ற நூற்பாவில் விளக்குகிறார்.

            கோவலன், கண்ணகியைக் கவுந்தியடிகள் மாதரி என்னும் ஆயர் குலப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். கண்ணகியும் கோவலனும் மாதரியின் வீட்டில் தங்குகின்றனர். கோவலன் கண்ணகியின் சிலம்பினை விற்கும் பொருட்டு மதுரை நகரக் கடை வீதிக்குச் செல்கிறான். அங்கு அரண்மனைப் பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கோவலன் கொலைக்களப்படுகிறான்.

            கண்ணகி அடைக்கலமாக இருந்த ஆயர் குடியில் தீ நிமித்தம் ஏற்பட்ட காரணத்தினால் மாயோனை வேண்டி குரவைக் கூத்து ஆடுகின்றனர். குரவைக் கூத்தாடும் பெண்கள் மாயோனது புகழைப் பாடி ஆடுகின்றனர்.

 “கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்

       இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயிற்

       கொன்றையும் தீம்குழல் கேளாமோ! தோழீ!”      (சில.ஆ.கு. பா-9)

என்றவாறு முல்லை நிலக் கடவுளான மாயவனை எண்ணி குரவைக் கூத்து ஆடுகின்றனர். இவ்வாறு அனைவரும் சேர்ந்து இறைவனை வழிபடுவதனால் நமக்கு நேரக்கூடிய ஆபத்தானது நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதன் காரணமாக இப்பகுதி முல்லைத் திணைக்குரியது என்று கூற இயலும்.

சிலம்பில் குறிஞ்சி :

            சிலம்பு இறுதியாக விழுந்த நிலம் குறிஞ்சி நிலம் ஆகும். குறிஞ்சித் திணை என்பது மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிக்கும். குறிஞ்சி நிலத்திற்குரிய மக்கள் குறவன், குறத்தி ஆவர். அந்நிலத்திற்குரிய தெயவம் முருகன்.

      இங்கு சிலம்பில் கண்ணகி தன் கணவனுக்கு அநீதி இழைத்தோரை வென்று மதுரை நகரைத் தீக்கிரையாக்கினாள். கண்ணகி  தன் நிலை எண்ணி

“கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்

மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு’என”    (சில.க.கா பா-20)

என்று வருத்தம் கொண்டவளாக மதுரை நகரை விட்டு வெளியேறினாள். அவள் அடுத்து சென்ற இடம் திருச்செங்குன்றம் ஆகும். அங்கே வேங்கை மரத்தின் நிழலில் பதினான்கு நாளளவில் தன் கணவனைத் தொழுதாள். அவ்விடத்தே, தன் கணவனோடு வானுலகஞ் சேர்ந்தாள்.

            இவையனைத்தையும் கண்ட குறவர்கள் கண்ணகியைத் தம் தெய்வமாகவே பாவித்து குன்றக்குரவை ஆடி மகிழ்ந்தனர் என்பதை,

“பரவலும் பரவுமின், விரவுமலர் தூவுமின்-

                              ஒருமுலை இழந்த நங்கைக்குப்,

                                     பெருமலை துஞ்சாது வளஞ்சுரக்க எனவே”           (சில,கு.கு பா 3)

என்ற பாடல் வழி அறிய முடிகிறது. குன்றக்குரவை முழுவதும் குறிஞ்சி நிலக் கடவுளான முருகப் பெருமானின் புகழைப் பாடி ஆடுகின்றனர். ஆதலால் இப்பகுதியானது குறிஞ்சித் திணைக்குரியது ஆகும்.

முடிவுரை :

                 இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மரபுகள் காணப்படுகிறது. இக்காப்பியமானது மிகப் பரந்து விரிந்த ஆய்வுக் களத்தைக் கொண்டதாகும். மேலும், இதில் அகம், புறம் சார்ந்த ஒழுக்கங்களும் காணப்படுகிறது.

 துணைநூற் பட்டியல் :

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
  2. தமிழகமும் ஊரும் பேரும், ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
  3. ஐங்குறுநூறு மூலமும் உரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 18.

சுருக்கக் குறியீடு :

      அ.கா - அடைக்களக் காதை,

ஆ.கு - ஆய்ச்சியர் குரவை,

இந்.வி.கா - இந்திர விழாவூரெடுத்த காதை,

ஐங்.பு.ப - ஐங்குறுநூறு, புனலாட்டுப் பத்து,

க.கா - கட்டுரை காதை,

கா.கா - காடுகாண் காதை,

கா.வ - கானல் வரி,

கு.கு - குன்றக் குறவை,

சில. - சிலப்பதிகாரம்,

த.ஊ.பே, த.நி - தமிழகம் ஊரும் பேரும், தமிழகமும் நிலமும்,

தொல்.அக. - தொல்காப்பியம், அகத்திணையியல்,

வே.கா - வேனிற் காதை.