ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சமுதாயப் பிரதிபலிப்பும் கந்தர்வனின் படைப்பாளுமையும் (Social reflection and Gandharvan's creativity)

முனைவர். அ.புஷ்பா,உதவிப்பேராசிரியை, தமிழ்த்துறை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோயம்புத்தூர் - 43  தமிழ்நாடு. | Dr.A.Pushpa, Assistant Professor  of Tamil,Avinasilingam Institute for Home science and Higher Education for Women, Coimbatore.43. Tamilnadu,India. 31 Jan 2024 Read Full PDF

Abstract

              Gandharvan was a great progressive thinker. He has reflected the problems he encountered in his life and the practical problems he experienced in his works. Through his works we can understand today's society as it is. He can also be called the mentor of young artists. He has created a style for himself.Although Gandharvan's achievements were great, he was a vibrant young man who wanted to achieve more.Gandharvan was born in a village called Sikal in Mudukulathur circle of Ramanathapuram district. His birth name Nagalingam was initially a civil servant and worked as an officer in the treasury department. He became the leader. After being a trade union leader for many years, Kannadasan first started writing for a newspaper in 1969.Early on he made his debut as a poet and also emerged as a short story writer.As a trade union leader, he saw the labor issues first-hand. Sundharvan therefore in his works the condition of labor is manifested in many places. Also heavily influenced by Marxism are the struggles of the trade union movement in his works. Political movements and people's travails have come to the fore.He had the idea of ​​facing anything according to life and was influential among various progressive democratic movements. He also wrote his poetry.Collected short stories in two volumes published

Keywords

        Caste discrimination, poverty level, Intermittent hungerp pangs, Poverty in old age,Un employment.

ஆய்வுச் சுருக்கம்

     கந்தர்வன் சிறந்த முற்போக்குச் சிந்தனையாளர். இவர் தம்முடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளை, தான் அனுபவித்த நடைமுறைச் சிக்கல்களைத் தம்முடைய படைப்புகளில், பிரதிபலித்திருக்கிறார். உள்ளது உள்ளவாறே அவருடைய படைப்புக்களின் மூலம் இன்றைய சமுதாயத்தை அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது. இவரை இளம்படைப்பாளிகளின் வழிகாட்டி என்றும் கூறலாம். தமக்கென்று, ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். கந்தர்வன் சாதித்த சாதனை பெரியது என்றாலும், அவர் மேலும் மேலும் சாதிக்க எண்ணிய துடிப்புள்ள இளைஞர் என்றே கூறலாம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்துார் வட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் பிறந்தவர் கந்தர்வன்.    இவருடைய இயற்பெயர் நாகலிங்கம் தொடக்கத்தில் ஒரு அரசு ஊழியராய் இருந்து கருவூலத்துறையில் அதிகாரியாய்ப் பணியாற்றினார். தலைவராக விளங்கினார். பல ஆண்டுகள் தொழிற்சங்கத் தலைவராக இருந்து1969-களில் கண்ணதாசன் பத்திரிகையில் முதலில் எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் ஒரு கவிஞராக அறிமுகமாகி சிறுகதைப் படைப்பாளியாகவும் உருவெடுத்தார்.தொழிற்சங்கத் தலைவராக இருந்த தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்கூடாகக் கண்டவர். சுந்தர்வன் எனவே அவருடைய படைப்புக்களில் தொழிலாளர் நிலை பல இடங்களில் வெளிப்படுகிறது. மேலும் மார்க்சியத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் அவரது படைப்புகளில் தொழிற்சங்க இயக்கத்தின் போராட்டங்கள். அரசியல் இயக்கங்கள், மக்களின் துயரங்கள் ஆகியவை வீரியமாய் வெளிப்பட்டுள்ளன. வாழ்விற்கு ஏற்ப எதனையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உடைய இவர் பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவர்.அவர் தமது கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்து இரண்டு தொகுப்பு நூல்களாக வெளியிட்டுள்ளார்.

திறவுச் சொற்கள்

       சாதிப்பாகுபாடு, வறுமைநிலை, காலந்தோறும் பசிக்கொடுமை, முதுமையிலும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஆண்டான் அடிமைச் சமுதாயம்.

முன்னுரை

       சமுதாயம் என்பது தனிமனிதர்கள் ஓர் ஒழுங்கின் அடிப்படையில் சேர்ந்துள்ள அமைப்பு முறையைக் குறிக்கின்றது. சமுதாய நிலை என்பது மக்களின் நற்செயல்களைச் சுட்டுவதற்குச் சமுதாயத்தில் உள்ள சில சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டுவதாகும். கந்தர்வன் தம்முடைய படைப்புக்களில் சாதியப்பாகுபாடு, வறுமைநிலை, வேலை  யில்லாத்திண்டாட்டம், கல்வியின் நிலை, முதலாளி தொழிலாளி பிரச்சினைகள் பற்றிக் கூறியிருக்கிறார். இவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது .

 சாதிப்பாகுபாடு

       சாதி என்பது மனிதனால் தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். தற்போது சாதி மனிதரின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியதாக அமைகின்றது. சாதியால் மனிதன் சமுதாயத்தில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். இன்று சாதியில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று வேற்றுமை பாராட்டுவதும், தாழ்ந்த சாதியினரைக் கொத்தடிமைகள்போல் நடத்துவதும் நடைமுறையில் உள்ளது என்பதை கந்தர்வன் படைப்புக்களின் வழி எடுத்துக் கூறியுள்ளார். "சாதி என்பது ஏற்றத்தாழ்வுகளுள்ள சமூக உறவு நிறுவனமே. இது பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதனின் இருப்பிடம்,தொழில், திருமணம். சடங்குகள். அதிகாரம் ஆசிய அனைத்தையும் நிர்ணயம் செய்கின்றது" என்கிறார் அருட்கடலார். சாதியால் மக்கள் ஒடுக்கப்படுவதும், அவர்களுக்குரிய சலுகைகள் பறிக்கப்படுவதும், தாழ்ந்த சாதியினர் கொடுமைப்படுத்தப்படுவதும் கந்தர்வன் படைப்புக்களில் விளக்கப்படுகின்றன.

சாதியால் சலுகைகள் மறுக்கப்படுதல்

      சாதியால் உயர்ந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் கீழ்ச்சாதியினரை ஒடுக்க எண்ணுவதும்,  அவர்களுக்குரிய சலுகைகளைப் பறிப்பதும் இன்று சமுதாயத்தில் உள்ள இழிநிலை ஆகும். இதனையே 'சாசனம்' என்ற சிறுகதையில் காணமுடிகிறது. உயர் சாதியில் உள்ள பெரியவர் ஒருவர் தனக்கு எவ்வளவுதான் அதிகமாகச் சொத்துக்கள் இருந்தாலும் குறவர் இன மக்களுக்குரிய புளியமரத்தைத் தனக்கு உரிமை உடையதாகக் கொண்டு புளியைத் தனக்காக எடுத்துக் கொள்கிறார். கந்தர்வன் தம்முடைய படைப்புக்களில் சாதியால் இனத்தால் ஒடுக்கப்படுவதைக் கூறுவதோடு அதற்குத் தீர்வையும் கூறியுள்ளார். குட்டக் குட்டக் குனிந்தால் குட்டிக் கொண்டே இருப்பார்கள். எதிர்த்துக் குரல்  கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு விடிவுகாலம் தோன்றும் என்பதைத் தம்முடைய 'சாசனம்' என்ற சிறுகதையில் குறவர் இன இளைஞன் எதிர்த்துத் தங்களின் உரிமைகளைப் பெறக் குரல் கொடுக்கும்போது அவனுக்கு உரிய புளியமரம் கொடுக்கப்படுகிறது என்று சிறுகதையில் முடிவாகக் கூறியுள்ளார்.

தரம் பிரிக்கப்படும் சாதிகள்

      சமுதாயத்தில் சாதிப்பிரிவுகள்  பல தரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் உயர்வான நிலையைத் தாழ் நிலைக்குக் தள்ளி விடுவதாக உள்ளது. இறைவன் எல்லாச் சாதியினருக்கும் பொதுவானவனே அவனை வணங்குவதில் கூட சாதி வேற்றுமை கடைபிடிக்கப்படுகிறது என்கிறார் கந்தர்வன். 

"பிராமணப் பூசாரிக்கு மாவிலை வேண்டும்

பண்டாரப் பூசாரிக்கு வேப்பிலையே போதும்

அரிஜனப் பூசாரிக்கு அருகம்புல் தான் கிடைக்கும்"1

என்று 'தரம்' என்ற கவிதையிலே ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதிகளுக்கு ஏற்ப தரம் பிரித்து இறைவனை வழிபடுகின்ற  நிலையை கந்தர்வன் எடுத்துக் கூறுகின்றார்.

 சாதியால் கொத்தடிமைகளாதல்

      தாழ்ந்த சாதியினராகக் குறிப்பிடப்படுபவர்கள் உயர்ந்த சாதியினருக்கு அடங்கி நடப்பதே வழக்கமாகிவிட்டது. கொத்தடிமைகள் போல் தாழ்ந்த சாதியினர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வயதிற்கு ஏற்ற மதிப்பும் கிடையாது. உயர்ந்த சாதியைச் சேர்ந்த பெரியவர்களைப் பெயரைச் சொல்லியே கூப்பிடுகின்றனர். இதுவே காலம் காலமாக நம் நாட்டில் உள்ள வழக்கமாகக் காணப்படுகிறது என்பதை கந்தர்வன் 'துண்டு' என்ற சிறுகதையில் சுட்டிக் காட்டுகிறார். வாய்ப்பேச்சில் பாசமாய்ப் பேசிவிட்டு அடிமைத் தொழில் செய்யச் சொல்லி வாட்டி வதைப்பது, பணிவு என்பது தாழ்ந்த சாதியினருக்கு இருக்க வேண்டிய பண்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு வேலை செய்ய வேண்டும். துண்டு என்ற சிறுகதையில் வரும் கீழ்சாதியைச் சேர்ந்தவனை வீட்டு முதலாளி சிறிது கூட விடாமல் வேலை வாங்குவதும், எதார்த்தமாக அவன் இடுப்பில் கட்டிய துண்டை வீட்டில் போட்டுவிட்டு வந்தாலும் புதிய துண்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து இடுப்பில் கட்டச் சொல்வதையும் காணமுடிகிறது.வாய்ப்பேச்சில் சாதியில்லை.சாதி ஒழிக என்று கூறிவிட்டு நடைமுறையில் அதனைச் செயல்படுத்த எவரும் முனையவில்லை என்பதை அறியமுடிகிறது.

 வறுமைநிலை

       நம் நாட்டில் வறுமை தலைவிரித்து ஆடக் காரணம் மேல் மட்டத்து மக்கள், பெரிய பதவியில் இருப்போர் அனைவரும் அதிகப்படியான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதால் அடிமட்ட மக்களுக்குச் சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன. இதனால் வறுமை என்ற கீழானநிலை தலைகாட்டுகிறது.இலக்கியங்களில் அன்று முதல் இன்று வரை வறுமை நிலை பேசப்படுகிறது. அன்று புலவர்கள் வறுமை நிலையில் இருந்தனர் என்பது முடத்தாமக் பொருநராற்றுப் படையிலே,

"ஈறும் பேனும் இருந்திரை கூடி

வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த

தன்னற்சிதா அர் துவர நீக்கி"2

என்று தன்னுடைய வறுமைநிலையினைக் குறிப்பிட்டுப் பேசினார். கந்தர்வனுடைய 'கிழிசல்கள்' என்ற கவிதைத் தொகுப்பிலே 'எங்க ஊர்' என்ற கவிதையிலே,

''சூரியன் அஸ்தமனமாகும் போதே

நாங்கள் இரவு உணவிற்காய்ப்

பீங்கான் தட்டுகளைக் கழுவுகிறோம்

 

ஜைன மதத்தை வழிபட்டல்ல

விளக்கெரிக்க

எண்ணையில்லாததால்"3

என்று மது அருந்தும் பீங்கான் தட்டுகளைக் கழுவுவதோடு ஒப்பிட்டுக் கூறி வறுமையின் இழிநிலையை எடுத்துக் கூறுகிறார்.

அரசியல் மாற்றங்கள் வறுமையை ஒழிக்கவில்லை

       நாட்டில் அரசியலில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்களின் வாழ்க்கையிலும், தரத்திலும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை,

"வட்ட மேஜை மாநாட்டிற்கு

பின் வந்த சுதந்திரம்

எங்களுக்கு

வட்டத்தையே தந்தது

வயிறுகளுக்குத் தரவில்லை"4

'இங்கு பாரதி இன்று இருந்தால்' என்ற கவிதையில் உணர்த்தப்படுகின்றன. நாட்டின் இந்நிலையால் தான் மக்கள் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற கருத்தோட்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். கந்தர்வனுடைய இந்தக் கவிதை வரிகள் மூலம், நாட்டில் வறுமையை ஒழிக்க எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தினாலும் முழுமையாக வறுமை ஒழியவில்லை என்பது வெளிப்படுகிறது. 

காலந்தோறும் பசிக்கொடுமை

         நம் நாட்டில் காலங்காலமாய் எத்தகைய மாற்றங்கள் முன்னேற்றங்கள் இருந்தாலும் வறுமை நிலை இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது.

"பாண்டவர் ஆண்ட போதும்

பசிதான்

பாபர் ஆண்ட போதும்

பசிதான்

 

பாண்டியன் ஆண்ட போதும்

பசிதான்

பாரதம் பிறந்த போதும்

பசிதான்"5

இக்கவிதை வரிகள் நாட்டின் உண்மைநிலையை எடுத்துக் கூறுகிறது.  மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை பசிக்கொடுமை மக்களை வாட்டிய நிலையினை அறியமுடிகிறது. இந்த வறுமை நிலையை ஒழிக்க கந்தர்வன் ஒரு தீர்வு கூறுகிறார்.

"பாட்டாளி நானே

பாரதத்தை ஆளுவேன்

பாட்டாளி ஆட்சியில் தான்

பாரதத்துப் பசிபோகும்

பாரதத்துப் பசிபோகும்"6

'உபதேசங்கள்' என்ற கவிதையிலே பாட்டாளிகள் ஆட்சி அமைந்தால்தான் மக்கள் வறுமை நீங்கி வாழமுடியும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்.

முதுமையிலும் வறுமை

        ஆதரவில்லாமல் தனித்துவிடப்பட்ட முதியவர்களை வறுமையானது தாக்கினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை 'சனிப் பிணம்' என்ற சிறுகதையில் கூறியிருக்கிறார். வயதான காலத்தில் ஒரு பாட்டி வேலைபார்த்துத் தன் கணவனைக் காப்பாற்றுகின்றாள். ஆனால் அவருடைய கணவன் தன்னுடைய வீட்டில் வளர்க்கும் கோழியைக் கறிவைத்து சாப்பிட ஆசைப்படுகிறான். அது நிறைவேறவில்லை. அதற்குக் காரணம்

ஏழ்மைநிலை ஆகும்.ஏழ்மையால் அந்தப்பாட்டி வேறொருவருக்கு கோழியைக் கொடுத்துவிட்டு அந்தப் பணத்தை வைத்து உணவு சமைக்கிறாள். அந்த தாத்தாவும் இறந்து விடுகிறார். அதன்பின்பு தான் அவருடைய இறுதிச் சடங்கின்போது பாடையில் ஒரு கோழிக்குஞ்சு தொங்க விடப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும்போது கிடைக்காத கோழிக்கறி அவர் இறந்த பிறகு பாடையிலே கோழியானது தொங்க விடப்படுகிறது. வறுமையானது ஒருவர் விரும்பும் பொருளை நிம்மதியாக உண்ணக்கூட வழி கொடுப்பது இல்லை என்று கூறுகிறார்

வேலையில்லாத் திண்டாட்டம்

        இளைஞர்களுக்கு உரிய முக்கியப் பிரச்சினைகள் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம் ஆகும். வேலையில்லாத நிலை மக்களை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை கந்தர்வன் எடுத்துக் காட்டுகிறார்.

''உழுபவனுக்கு நிலமில்லை

உழைப்பவனுக்கு வேலையில்லை

எங்கள் தேசத்தின் பரப்புக்கும்

எல்லையே இல்லை"7

'இல்லை'என்ற கவிதையிலே நம் நாட்டின் உண்மை நிலை எடுத்துக் கூறப்படுகிறது. பரப்பும் உள்ளது,செழிப்பும் உள்ளது,ஆனால் உழைக்கின்றவனுக்கு நிலம் சொந்தமில்லை. எல்லாம்

அதிகார வர்க்கம் முதலாளி வர்க்கத்தினருக்கே உரியதாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு

       வேலை கொடு என்றால் அனைவருக்கும் வேலை கொடுப்பது யார் என்று இளைஞர்களுக்கு ஒரு வழியைக் காட்டுகிறார்.

"நீ நிற்கும் கால்கள்

உன்னுடையதில்லையா

சொந்தக் கால்களைக்

களற்றியா வைத்தாய்"8

'வடிகின்ற கண்ணீரை' என்ற கவிதையிலே எடுத்துக் கூறுவதன் மூலம் சுயதொழில் செய்து இளைஞர்கள் முன்னேறினால் தேசம் பல வழிகளில் முன்னேற்றப் பாதையை அடைய முடியும் என்று சுய தொழிலை ஊக்குவிக்கின்றார்.

கல்வியிலே ஏற்றத்தாழ்வுகள்

          ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் உதவும் தன்மை உடையது என்று கல்வியின் சிறப்புக் கூறப்படுகிறது. அத்தகைய கல்வியானது அனைவருக்கும் முறையாகக் கிடைக்கவில்லை.

"ஓட்டைக்கல்வி

ஒரு கோடிப் பேருக்கு

உயர்ந்த கல்வி

சில நூறு பேருக்கு"9

என்ற வரிகள் கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வை எடுத்து க் காட்டுகின்றது. கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகளுக்குத்  தரமற்ற கல்வியே கிடைக்கிறது. அதனாலே கீழ்த்தட்டு மக்கள் தாழ்ந்து கொண்டே போகிறார்கள். அவர்களின் உயர்வுக்கு வழியில்லை என்பது கந்தர்வனுடைய ஏக்கமாக உள்ளது.

     கல்வி என்பது நாகரிகத்திற்காகக் கற்கப்படும் ஒன்றாக உள்ளது. பணக்காரர்கள் தம்முடைய குழந்தைகள் ஏழை குழந்தைகளோடு சேர்ந்து படிப்பதா, அப்படி படித்தால் தம்முடைய மரியாதை சமுதாயத்தில் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்று

எண்ணுகின்றனர் என்பதை,

"அந்த பிரபுவின் புத்திரனும்

அந்தக் கூலிப் பயலும்

எவ்வளவு காலம்

ஒரே பள்ளியில்

படிப்பது" 10

என்ற கவிதை வரிகள் மூலம் கல்வியிலே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி கல்வியின் தரத்தை சீர்கெடுக்கும் சமுதாயத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

"தாய் மொழியில் கல்வி இல்லை

தமிழ் மொழியில் கல்வி இல்லை

என தவிக்க வேண்டாம்

அம்மி அடியில் கும்மி அடியில் தமிழ்

சண்டைச் சச்சரவுகளில் சங்கத்தமிழ்"11

என்ற வரிகளின் மூலம் பிறமொழியை வாழவைத்து தமிழ்மொழியை தாழ வைக்கும். தமிழனின் செயலில் உள்ள இழிநிலையைக் கூறுகிறார். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நிலைமாறி இன்று கல்விக்  கூடங்களில்தமிழ்கற்பிப்பது  கேவலமாகக்   கருதப்படுகிறது.      அம்மியடியில்,கும்மியடியில், சண்டைச் சச்சரவுகளில் தமிழ் பேசப்படுகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

"ஆசிரியன் அழும் தேசத்தில்

அக்கினிதான் மூண்டெரியும்

இனியும் வாளாது

எங்கேயும் துவளாது

எழுக நாடே! எழுக"12

என்ற கவிதை 'புதுக்கல்வி தருகிறார்' என்ற தலைப்பின் கீழ் உள்ள இக்கவிதை வரிகள் இடம்பெறுகின்றன. கல்வி கற்பிப்போன் குரு இவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இவர்கள் ‌ மனம் நொந்தால் நாட்டின் நிலையிலே மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் அதனால்தான் கந்தர்வன் ஆசிரியர் அழுதால் தேசத்தில் அக்கினி மூண்டெரியும் என்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.கல்வியின் நிலைதான் தேசத்தின் நிலையைத் தியானிக்கக்கூடியது. அதனால் தமிழ்மொழிக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கந்தர்வன் படைப்புக்கள் அமைந்துள்ளன.

ஆண்டான் அடிமைச் சமுதாயம்

       ‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ’என்று பாடினாலும் சமுதாயத்தில் இன்றும் பாட்டாளியின் உழைப்பு பணக்காரர்களால் சுரண்டப்படுகிறது.

"பழைய சோறும்

பாதாம் கீரும்

ஒரு வயிற்றுணவாய்

ஒருநாளும் ஆவதில்லை

அப்படியே போனாலும்

வர்க்கச் சண்டை

வயிற்றுள்ளும் நடக்கும்"13

'வர்க்கச் சண்டை' என்ற தலைப்பின் கீழ் இக்கவிதை வரிகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதை வரிகள் பணக்காரன், ஏழை என்ற நிலையினைச் சுட்டிக் காட்டுகிறார். முதலாளி, தொழிலாளி என்ற நிலையில் இருவரும் இணைவது என்பது இன்று நடைமுறையில் இல்லாத ஒன்றாகும். அவ்வாறு நடந்தால் அது வர்க்கப் போராட்டமாகவே அமையும் என்கிறார் கந்தர்வன்.

     பாட்டாளி மக்களில் உழைப்பிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களின் உணர்வுகளுக்குக் கொடுப்பதில்லை. அவர்களை மனிதர்களாக மதிக்கக்கூட நல்ல உள்ளங்கள் இல்லாமல் போய்விட்டன. 

"வத்தலகுண்டில் சம்பா விசேஷம்

கோயமுத்தூரில் பீர்க்கு விசேஷம்

வெங்கட்டவ் குறிச்சியில் கத்தரிக்காய் விசேஷம்

இந்த ஊர்கள் எதிலும்

இவைகளை விளைவித்த நாங்கள் விசேஷமில்லை" 14

என்ற கவிதை வரிகள் 'சின்ன சட்டமோ பெரிய சட்டமோ 'என்ற தலைப்பின் கீழே இடம்பெற்றுள்ளது. இவை உழைக்கும் மக்களின் மனவேதனையினை வெளிப்படுத்துகின்றன. முதலாளி வர்க்கம் தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுவதோடு மட்டுமில்லாமல் அவர்களைத் துன்புறுத்தவும் தொடங்கி விட்டார்கள் என்பதை அறிய முடிகிறது.

"முப்பது வருஷமாய்த்

தேச மக்கள் வடித்த

கண்ணீரைஒன்றாக்கிக்

காட்ட நினைத்தால்

செம்பரம் பாக்க ஏரி

சிறுத்துத் தெரியும்

என்றதும்

அந்தப் பக்கமாய் வந்த

முதலாளி சொன்னார்

தேசத்திற்கு இது

மிகப்பெரும் நஷ்டம்

அப்படி

ஒன்றுசேர்த்து வைத்திருந்தால்

அதில் உப்பு எடுத்து

எத்தனை கப்பல்களில்

ஏற்றுமதி செய்திருப்பேன்"15

என்ற கவிதை முதலாளிகள் தொழிலாளியின் கண்ணீரிலே கூட உப்பு தயாரித்து அதன் பயனை தான்மட்டும் அனுபவிக்க எண்ணுகிறார்கள். இவ்வாறு இவர்கள் எண்ணுவதைப் பார்க்கும்பொழுது முதலாளியின் கொடூர மனப்பான்மை புலனாகிறது. இத்தகைய முதலாளி வர்க்கம் நம் நாட்டில் இருப்பதை கந்தர்வன் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

       முதலாளிகளுக்கு உழைப்பின் இலாபம் மட்டும் கிடைப்பதோடு மட்டும் அல்ல, ஆட்சியாளர்களின் அனைத்து ஆதரவுகளும் கிடைக்கின்றன . ஆனால் தொழிலாளிகளுக்கோ இவையெல்லாம் கிடைப்பது இல்லை. தொழிலாளிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைப்பது இல்லை. இந்த ஏற்றத் தாழ்வுகள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைகின்றன.

''வாய்ப்பாடு

முதலாளிகளின் வேதமானது

வயிற்றுப்பாடு

ஏழைகளின் சுலோகமானது"16

 என்ற கவிதை வரிகள் இன்று 'பாரதி இங்கு இருந்தால்' என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. காலங்காலமாக வயிற்றுப்பாடு ஏழைகளின் சுலோகமாக அமைகிறது. தொழிலாளர்கள்தான் வறுமையின் கோரப்பிடியில் எப்போதும் அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்று கந்தர்வன் தொழிலாளர்களுக்காக வருந்துகிறார்.

தொகுப்புரை

*சாதியின் பெயரால் மக்கள் கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று நம்நாட்டின் நிலையினை கந்தர்வன்  படைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

* காலங்காலமாய் வறுமை என்பது ஏழைகளின் சொத்தாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும். 

*அரசியலில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அவ்வாறு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் சுயதொழில் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.

*ஒரு நாட்டின் முன்னேற்றமே கல்வித்துறையின் வளர்ச்சியில் தான் உள்ளது. அந்தக் கல்வி ஏற்றத்தாழ்வு பாராட்டாது அனைவருக்கும் தரமானதாகக் கிடைக்க வேண்டும்.

*உயர்ந்தவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவுமே இருக்கிறான் இந்நிலையில் மாற்றம் வேண்டும். 

அடிக் குறிப்புகள்

1.கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள் (மீசைகள்), ப.118

2. முடத்தாமக் கண்னியார், பொருநராற்றுப்படை, ப.15

3. கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள் (கிழிசல்கள்) 11.67

4. கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள் (மீசைகள்),ப.114

5. மேலது, ப..165

6. மேலது, ப..166

7.கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள் (கிழிசல்கள்), ப.39

8.கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள் (சிறைகள்). ப.229

9. மேலது, ப.233

10. மேலது, ப..232

11. மேலது, ப.236

12. மேலது, ப..236

13. கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள் (கிழிசல்கள்), ப.20

14 மேலது, ப..27

15. மேலது, ப.40

16.கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள் (மீசைகள்), ப.115

துணைநூற்பட்டியல்

1.அருட்கடலார்,கோடைமலைமாதாரியார், மெய்யப்பன்தமி ழாய்வகம்,   

     53 -புது தெரு, சிதம்பரம்- 608001.

2.அடைக்கலசாமி. எம்.ஆர். இலக்கிய வரலாறு,ராசி பதிப்பகம்,90,

     கணேஷ் நகர், சேலையூர் அஞ்சல், சென்னை 600 073.

3.கந்தர்வன், சாசனம், அன்னம் புத்தக மையம் 9. சௌராஷ்டிரா சந்து,

     மேலமாசி வீதி, மதுரை-1. முதற்பதிப்பு டிசம்பர்- 1991.

4.கந்தர்வன், கந்தர்வன் கவிதைகள், சந்தியா பதிப்பகம், 57 A (4.67 60 77)

    53  வது தெரு, அசோக் நகர், சென்னை 600 083.

 5.சுப்பிரமணியபாரதி. சி.பாரதியார் கவிதைகள்,108- உஸ்மான் ரோடு,

     தியாகராய நகர், சென்னை-600017.

6.பரிமணம்.அ.மா. பாலசுப்ரமணியன்கு.வெ.(ப.ஆ)பத்துப்பாட்டு - 1,நியூ

     செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41.பி.சிட்கோ இண்டஸ் டிரியல் எஜடேட்,

      அம்பத்துார். சென்னை- 600098.