ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உரைவழிச் செம்மையாக்கம்: கீழ்க்கணக்குப் பிரதிகளின் ஆய்வுகளும் பதிப்புகளும் (Textual refinement through commentary: Studies and editions on Keezhkanakku texts)

த.செல்வராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை - 642 126.  தமிழ்நாடு, இந்தியா | நெறியாளர்: முனைவர் சு.குணசேகரன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை - 642 126. தமிழ்நாடு, இந்தியா. 31 Jan 2024 Read Full PDF

Abstract

The Classical texts of Tamil such as Tholkappiyam, Sangam Literatures, Pathinen Keezhkanaku etc. have been read by many people at various stages since they were created. It can be seen that these poems were not compiled but selected during the period of the compilers. Changes in the internal and external construction of language occurred with the change of time. Due to this, the medieval people had many problems in understanding these texts. The commentator tradition emerged as a solution to this dilemma. The printing tradition that developed in the nineteenth century produced these copies that were passed down the trail and made them available to us. At the same time as the Tholkapiyam texts were published, the Pathinen keezhkanakku texts also began to be printed. These resulted in major changes to the edition and research platforms. Results found from the Textual citations and commentory notes on Tholkappiyam, changes in the edition of Ainthinai ezhupadhu by the textual citation on Tholkappiyam and the changes in the textual citations on Tholkappiyam by the editions of Ainthinai ezhupadhu are examined in this article.

Key words: Padhinen keezhkanakku, Research traditions, Publishing traditions, Textual Citations, Refinement.

ஆய்வுச் சுருக்கம்

தமிழின் செவ்விலக்கியப் பிரதிகளான தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு போன்ற பனுவல்கள் அவை உருப்பெற்ற காலந்தொடங்கி பல நிலைகளில் பலராலும் வாசிப்புக்கு உள்ளாகின.  தொகுப்பாளர்களின் காலத்தில் இப்பாடல்கள் தொகுக்கப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையினைப் பார்க்க முடிகிறது.  கால மாற்றத்தால் மொழியின் அக மற்றும் புறக் கட்டுமானத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன.  இதனால் இப்பிரதிகளைப் புரிந்து கொள்வதில் இடைக்காலத்தில் சிக்கல்கள்  ஏற்பட்டன.  இச்சிக்கலைப் போக்கும் விதமாக உருப்பெற்றது உரையாசிரியர் மரபு.  பத்தொன்பதாம் நூற்றண்டில் உருவான அச்சு மரபு சுவடி வழியாக கடத்தப்பட்ட இப்பிரதிகளை அச்சாக்கம் செய்து நமக்களித்தது. தொல்காப்பிய உரைகள் பதிப்பிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் கீழ்க்கணக்கு நூல்களும் அச்சாக்கம் பெறத் தொடங்கி விட்டன. இக்கீழ்க்கணக்குப் பிரதிகளின் அச்சாக்கம் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவாதங்களில் தொல்காப்பிய உரைமேற்கோள்களும் உரைக்குறிப்புகளும் அளித்த முடிவுகள், உரைமேற்கோள்களால் ஐந்திணை எழுபதின் பதிப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஐந்திணை எழுபதின் பதிப்புகள் தொல்காப்பிய உரைமேற்கோள்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவற்றை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

திறவுச் சொற்கள்: பதினெண் கீழ்க்கணக்கு, ஆய்வு மரபு, பதிப்பு மரபு, உரைமேற்கோள்கள், செம்மையாக்கம்.

ஆய்வு முன்னுரை

திருக்குறளை உள்ளடக்கிய பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகத் தொகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பதினெட்டு நூல்களில் திருக்குறளுக்குப் பத்து உரைகளும் நாலடியாருக்கு மூன்று உரைகளும் கிடைக்கின்றன. பிற நூல்களுக்கு ஒரு சில பழைய உரைகள் மட்டும் கிடைக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற அச்சாக்க மரபில் இப்பழைய உரைகள் எல்லாம் பதிப்பாசிரியர்களால் வெளியிடப்பட்டன.   பதினெண்   கீழ்க்கணக்கு    நூல்களில்   முதன்முதலாக   திருக்குறள் 1812 - ஆம் ஆண்டு தஞ்சை நல்லூர் ஞானப்பிரகாசரால் அச்சாக்கம் பெற்றது.  ஆனால் இத்தொகுப்பில் உள்ள அக நூல்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் கழித்தே அச்சு வாகனம் ஏறின. ஐந்திணை  எழுபது   என்ற   அகநூல் 1906 - இல் அச்சானது. அச்சான  தொல்காப்பிய உரைப்பதிப்புகளும் ஐந்திணை எழுபதின் பதிப்புகளும் பதிப்பு மற்றும் ஆய்வுத் தளத்தில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின. அவ்வகையில். தொல்காப்பிய உரைமேற்கோள்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதத்தில் எப்படிப் பயன்பட்டன? அவற்றின் பாடமீட்பில் எவ்வாறு துணை நின்றன? பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்புகள் (ஐந்திணைஎழுபது) தொல்காப்பிய உரைமேற்கோள்களில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தின?  போன்றவற்றை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய ஆராய்ச்சி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் வரையறை பற்றிய ஆய்வை சி.வை.தா. தனது கலித்தொகைப் பதிப்பின் முன்னுரையில்(1887) தொடங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து உ.வே.சா. - ஐங்குறுநூறு (1903), ரா.ராகவையங்கார் - திணைமாலை நூற்றைம்பது (1903), வ.உ.சி. - இன்னிலை (1917), இ.வை.அனந்தராமையர் - ஐந்திணை எழுபதும் கைந்நிலையும்  (1931), திருமணம் செல்வகேசவராய முதலியார் - ஆசாரக் கோவை (1944), ச.வையாபுரிப்பிள்ளை - இன்னா நாற்பது (1944), நான்மணிக்கடிகை (1944), திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் (1944) போன்ற நூல்களின் பதிப்பு முன்னுரையிலும் திருவாரூர் சோமசுந்தர தேசிகர் - செந்தமிழ் இதழில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய கட்டுரையிலும் (1916), மயிலை.சீனி வேங்கடசாமி - பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் என்ற நூலிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வுகள் நிறைந்துள்ளன.  இவற்றின் வழியாக நம்மால் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த விவாதங்களை அறிய முடிகிறது.

        “நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

       பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

       இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே

       கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு”

என்ற கீழ்க்கணக்குப் பிரதிகள் பற்றிய இப்பாடல் பல விவாதங்களைக் கிளப்பியது.  இவற்றின் வழியாக எழுந்த விவாதங்களைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுத்துக் காணலாம்.

  • கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் எத்தனை?
  • இவை எப்போது அரங்கேற்றப்பட்டன?
  • இவை எப்போது தொகுக்கப்பட்டன?
  • நாலைந்திணை எனக் கொள்வதா? ஐந்திணை எனக் கொள்வதா?
  • முப்பால்கடுகம் என்பதில் முப்பால் என்பதைக் கடுகத்திற்கு அடையாகக் கொள்வதா?
  • முப்பால் என்பது எதைக் குறிக்கிறது?
  • கோவை என்கிற நூல் யாது?
  • ஐந்திணை நூல்களுள் ஒன்றாகாத் திணைமாலை என்ற நூலைக் கருதுவதா?
  • கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் கொள்வதா? அல்லது இன்னிலையை ஏற்பதா?
  • முதுமொழிக் காஞ்சிக்கு அடையாகிய இன்னிலைசொல் என்பதை இன்னிலை, இன்சொல் என இரண்டு  நூல்களாகக் கருதுவதா?

என பல நிலைகளில் இப்பனுவல்களின் மீதான ஆய்வுகள் அமைந்திருக்கின்றன.  இப்படியான சிக்கல்கள் எழ முக்கியக் காரணமாக மயிலை.சீனி.வேங்கடசாமி,

”18,19 - ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல்களையும் படிக்கக் கூடாது என்னும் கொள்கை படித்தவர்களிடையே பரவிற்று.  சமயப் பற்றுக் காரணமாகத் தோன்றிய இந்தக் கொள்கையினாலே, தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த நூலைப் பாடஞ் சொல்லாமல் விட்டனர்.  படிப்பாரற்றுக் கிடந்தமையால் அந்நூல்களின் பெயர்கூட மறக்கப் பட்டிருந்தன.  சென்ற 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது பற்றிப் படித்த புலவர்களுக்குள்ளே ஐயங்களும் வாதப் பிரதி வாதங்களும் நடந்தன!  கீழ்க்கணக்கு  நூல்கள் பதினெட்டின் பெயர்களைப் பற்றியதே அந்த ஆராய்ச்சி.  அந்த ஆராய்ச்சி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் நடந்த பின்னர் ஓய்ந்தது.  தமிழ் இலக்கிய வரலாற்றிலே இது ஒரு சுவையுள்ள காலகட்டம்.”  

(பத்தொன்பாதம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், ப.247)

எனக் குறிப்பிடுவார். சமயப்பற்று  பழந்தமிழ் நூல்களைப் படிக்கக்கூடாது என்பதைத் தாண்டி அப்பிரதிகளின் பெயர்களைக் கூட மறக்கக் கூடிய அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.  இந்தச் சூழ்நிலையில்தான் நம் பண்டையப் பனுவல்கள் அச்சுவாகனம் ஏறி விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

கீழ்க்கணக்குப் பிரதிகளின் ஆய்வுகளும் உரைகளும்

கீழ்க்கணக்குப் பிரதிகள் மீதான ஆய்வுகளில் ஈடுபட்ட அறிஞர்களுக்குத் உரைமேற்கோள்களும், உரைக்குறிப்புகளும் சில முக்கிய முடிவுகளுக்கு வர பெருந்துணையாய் இருந்துள்ளன.

  • பேராசிரியர் உரைக்குறிப்புகள் (தொல்.செய்.470, 574), மயிலைநாதரின் உரைக்குறிப்பு (நன்.387) ஆகியவற்றைக் கொண்டு கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில்  நிறுவினார் மயிலை சீனி.வேங்கடசாமி. (பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - ப.247, 248)
  • கீழ்க்கணக்குப் பிரதிகளின் நூல்கல்ளைக் குறிப்பிடும் வெண்பாவில் உள்ள முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்காது (கலி.பதி.முன்.) என்று குறிப்பிட்டுள்ளார் சி.வை.தா.   இக்கூற்றை  திருவள்ளுவ மாலையின் சில பாடல்கள், இலக்கண விளக்கப் பாட்டியலின் உரைக்குறிப்பு (நூ.57), திருக்குறளின் பெயரைக் குறிக்கும் பழைய செய்யுள், பேராசிரியர் நச்சினார்க்கினியரின் உரைக் குறிப்புகள் (நூ.547) மற்றும் யாப்பருங்கலக்காரிகையின் (40) உரைக் குறிப்பு ஆகியவற்றின் மூலம் முப்பால் என்பது திருக்குறளையே குறிக்கின்றது என்று நிறுவினார் ச.வையாபுரிப்பிள்ளை.
  • பேராசிரியர் செய்யுளியலின் 159 ஆம் நூற்பாவிற்கான உரையில் பதினெண் கீழ்க்கணக்கின் ஆசிரியர்களைப் பிற்சான்றோர் என்று குறிப்பிடுகின்றார்.  இதன் மூலம் கீழ்க்கணக்கு நூல்கள் கடைச்சங்க காலத்திற்குப் பின் தொகுக்கப்பட்டவை என்பது தெளிவுபெறுகிறது.    (பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம். ப.258)
  • கைந்நிலை என்பது பழைய நூல் என்பதை தொல்காப்பிய இளம்பூரணர் உரை அறிவித்தது.  அவ்வுரை கைந்நிலைக்குரிய சில வெண்பாக்களை மேற்கோள் காட்டி இருப்பதை அறிந்து, அந்த நூல் ஐந்திணை கூறும் அகப்பொருள் நூல் என்று தெளிய முடிந்தது.   அதனால் இன்னிலை பிற்காலத்துப் பொய்ந்நூல் என்பது உறுதியாயிற்று. (மு.வை.அரவிந்தன் - ப.329)
  • ஸ்ரீ த.கனகசுந்தரம் பிள்ளையவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப் பழைய கீழ்க்கணக்குச் சுவடியில், ‘நாலடி நான்மணி’ என்னுஞ் செய்யுள் அதிகஞ் சிதைவுபட்டுக் கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணையம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப்பட்டிருக்கின்றன வென்றும் முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒருவாற்றானுஞ் சுட்டாது முப்பாலென்றே கூறப்பட்டிருக்கிறதென்றும், கைந்நிலை என்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர் தனி நூலாகக் கண்டிருக்கிறதென்றும் கூறியுள்ளார்.  இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு மயிலை சீனி.வேங்கடசாமி ஐந்திணை எழுபது, முப்பால் மற்றும் கைந்நிலை குறித்த விவாதங்களில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

                (பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - ப.251)

உரைமேற்கோள்களும் உரைக்குறிப்புகளும் கீழ்க்கணக்குப் பிரதிகள் மீதான ஆய்வுகளுக்குச் சில தீர்வுகளைத் தந்திருக்கின்றன.  இந்நிலையில் இடைக்கால உரைகளை ஒரு நூலுக்கான விளக்கமாகப் பார்க்காமல் ஆய்வு மற்றும் பதிப்புச் செம்மையாக்கத்திற்கு உதவும் கருவியாகப் பார்ப்பது முக்கியமாகும்.

பதிப்புச் செம்மையாக்கம்

தொல்காப்பிய உரைப்பதிப்புகளையும், ஐந்திணை எழுபதின் பதிப்புகளையும் அவை அச்சான காலவரிசை அடிப்படையில் ஆராய்வது அவசியமாகிறது. இந்நிலையில் பதிப்புகள் தோறும் நிகழ்ந்த மாற்றங்களை நாம் அறியலாம்.

  • 1887: சி.வை.தா.(பதி.), தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம்
  • 1906: இரா. ராகவையங்கார், மூவாதியார் செய்த ஐந்திணை யெழுபது மூலமும் உரையும்,, செந்தமிழ் இதழ், தொகுதி-4, பகுதி - 3 (24 பாடல்களுக்கு மட்டும் எழுதியது)
  • 1916: பவானந்தம்பிள்ளை (பதி.), தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம்
  • 1926: சோமசுந்தர தேசிகர் (பதி.), மூவாதியார் செய்த ஐந்திணை யெழுபது உரையுடன்
  • 1931: இ.வை.அனந்தராமையர் (பதி.), ஐந்திணை எழுபதும் கைந்நிலையும்.
  • 1933: வ.உ.சி.(பதி.), தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம்
  • 1934: கனகசபாபதி பிள்ளை (பதி.) தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம்
  • 1936: அ.நடராசபிள்ளையவர்கள் (பதி.) மூவாதியார் இயற்றிய ஐந்திணை எழுபது மூலமும் பழையவுரையும்

தொல்காப்பிய உரைகளில் ஏற்பட்ட மாற்றம்

     சி.வை.தா. 1887-இல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்தார்.  இதில் களவியல் (ம) கற்பியலில் ஐந்திணை எழுபதின் 13 பாடல்களை மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ளார்.  ஆனால் ஓரிடத்திலும் மேற்கோளாகப் பயன்படுத்திய நூலின் பெயரையோ பாடலின் எண்ணையோ அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.  சி.வை.தா.  இப்பதிப்பை மேற்கொண்டபோது பதினெண் கீழ்க்கணக்கின் அகநூல்களில் ஒன்று கூட அச்சில் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  இதனால் அவருக்கு அம்மேற்கோள் பாடல்கள் பயின்று வந்த இடம் விளங்காமல் போயுள்ளது.

      இப்பதிப்பு வெளிவந்து 19 ஆண்டுகள் கழித்து செந்தமிழ் இதழில் இரா. ராகவையங்கார் ஐந்திணை எழுபதின் முதல் 24 பாடல்களை உரையோடு வெளியிட்டார். இதில் அப்பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. (சி.வை.தா.  குறிப்பிடாமல் சென்ற மேற்கோள் பாடல்களை இரா.ராகவையங்கார் அவர்கள் அடையாளம் கண்டது அவர்தம் ஆய்வுத் தேடலை வெளிக்காட்டுவதாக உள்ளது)

      இதன்பிறகு 1916-இல் பவானந்தம்பிள்ளையின் தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பு வெளிவந்தது.  இப்பதிப்பு இதற்கு முன் வெளிவந்த சி.வை.தா. பதிப்பிலிருந்து பல நிலைகளில் மாறியிருந்தது.  மேற்கோள்களாகப் பயின்று வந்த பல பாடல்கள் இடம் சுட்டி பாடல் எண்ணோடு குறிக்கப்பட்டுள்ளன.   இதில், ஐந்திணை எழுபதின் ஏழு பாடல்கள் (2, 3, 9, 4, 11, 12, 14) அடையாளம் காணப்பட்டு இடம் சுட்டப்பட்டுள்ளன.  இதற்கு முக்கியப் பங்களிப்பைச் செய்தது இரா.ராகவையங்காரின் செந்தமிழ் இதழ் வெளியீடே ஆகும்.

      சோமசுந்தர தேசிகர் 1926-இல் ஐந்திணை எழுபதை ‘மூதறிவுடைய பெரியார் குறித்த உரையோடு வெளியிட்டார்’. இப்பதிப்பில் கிடைக்காமல் போன 25, 26, 30 என மூன்று பாடல்கள் தவிர்த்து 67 பாடல்களை வெளியிட்டார் இப்பதிப்பு 1934-இல்  கனகசபாபதி பிள்ளையால் வெளியிடப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பில்,  சில மாற்றங்களை ஏற்படுத்த உதவியது.   இப்பதிப்பில் ஐந்திணை எழுபதின் ஆறு பாடல்கள் (58, 59, 60, 61, 66)  அடையாளம் காணப்பட்டு இடம் சுட்டப்பட்டுள்ளன. இதற்கு சோமசுந்தர தேசிகரின் பதிப்பு முக்கியப் பங்கினை அளித்தது.

       நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புகளைப் போன்றதொரு நிலை இளம்பூரணர் உரைக்கு இல்லை.  இதற்கு முக்கியக் காரணம் இளம்பூரணர் உரை முழுமையாக வ.உ.சி.யால் 1935-இல் வெளியிடப்பட்டதுதான். இக்கால கட்டத்தில் பல நூல்கள் அச்சாக்கம் பெற்று விட்டன.  இதனால் மேற்கோள் பாடல்களுக்கான நூல்களை அறிவதில் பெரியளவில் சிக்கல் இல்லை எனலாம்.  1933-இல் வ.உ.சி. வெளியிட்ட தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரைப் பதிப்பில் (களவியல், கற்பியல், பொருளியல்) ஐந்திணை எழுபதின் பன்னிரண்டு பாடல்கள் (1, 2, 3, 4, 9, 12, 54, 58, 59, 60, 61, 66) மேற்கோள் பாடல்களாக இடம் சுட்டப்பட்டுள்ளன.  இதற்கு இப்பதிப்புகளின் துணையின்றி மேற்கோள்களின் செம்மையாக்கம்  நிகழ வாய்ப்பில்லை.

இரு நூற்றாண்டைக் கடந்த பதிப்பு வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் அச்சாக்கம் பெற்றிருக்கின்றன. இருப்பினும் தொல்காப்பிய உரைமேற்கோள்களில் இடம் விளங்கா மேற்கோள் பாடல்கள் நூற்றுக்கணக்கில் நிறைந்து காணப்படுகின்றன.. ஐந்திணை எழுபதின் பதிப்புகள் மட்டும் வராமல் போயிருப்பின் நாம் தொல்காப்பிய உரைமேற்கோள்களில் 27 இடங்களையும் விளங்காமல் போயிருப்போம்.

தொல்காப்பிய உரைவழிப் பாடல் மீட்டெடுப்பு

     ஐந்திணை எழுபது என்ற நூலில் முல்லைத் திணையைச் சார்ந்த இரண்டு (25, 26)     பாடல்களும்,   நெய்தல் திணையச் சார்ந்த இரண்டு (69, 70)  பாடல்களும் நான் பார்த்த எந்தவொரு கையெழுத்துப் பிரதிகளிலும் இல்லை என்பார் இ.வை.அனந்தராமையர் (1931). சோமசுந்தர தேசிகர், தனது பதிப்பில் (1926),

      ”முடமுதிர் புன்னைப் படுகோட்டிருந்த

     மடமுடை, நாரைக் குரைத்தேன் – கடனறிந்து

     பாய்திரைச் சேர்ப்பன் பரித்தேர் வரக்கண்டு

     நீதகா தென்று நிறுத்து” (ஐந்.எழு. 69)*

என்னும் பாடலை ’காமம் சிறத்தல்’ என்னும் துறைக்கு உதாரணமாக  நச்சினார்க்கினியரால் எடுத்தாளப்பட்டது (தொ.பொருள்.111) எனக் குறிப்பிட்டு அதைப் பதிப்பித்துள்ளார்.  ஆனால் இ.வை. அனந்தராமையர் அவர்கள் இந்நூலின் பெயரை யாரும் சுட்டவில்லை எனச் சொல்லி தன் பதிப்பில் இதைப் பதிப்பிக்காது விட்டிருப்பார்.  சோமசுந்தர தேசிகர் இப்பாடலை எதன் அடிப்படையில் ஐந்திணை எழுபது என்ற முடிவுக்கு வந்தார்?  என்பதற்கான காரணங்களை அவரது பதிப்பின் முன்னுரையோ குறிப்புகளோ விளக்கவில்லை.  ஆனால் பின்வந்த பதிப்புகளில் இப்பாடல் தனித்து இடம்பெற்று வருகிறது.  இடம் விளங்காமல் இருந்த ’முடமுதிர் புன்னை’  என்ற பாடலின் இடம் விளங்கியதற்கான காரணங்களை சோமசுந்தர தேசிகர் விரிவாக விளக்கியிருப்பின் பின்வந்தோருக்கு ஐயம் நிகழ்ந்திருக்காது. சரியான ஆதாரத்தை முன்வைக்காமல் போனதால் ஐந்திணை எழுபதின் 69-ஆம் பாடல் ஐயத்திற்கு இடமாகவே பதிப்புகளில் தொடர்கிறது.  உரைகளில் உள்ள இடம் விளங்கா மேற்கோள் பாடல்களைத் தனித்து ஆராயும் போது தொகையாக்கம் மற்றும் பதிப்பாக்க மரபுகளில் உள்ள விடுபாடுகளை அறியலாம்.

தொகுப்புரை

     சி.வை.தா. தொடங்கி வைத்த  கீழ்க்கணக்குப் பிரதிகள் பற்றிய ஆய்வை பின்வந்தோர் வளர்த்தெடுத்தனர்.  இவ்வாய்வுச் சிக்கல்களுக்குத் தொல்காப்பிய உரைக்குறிப்புகளும் உரைமேற்கோள்களும் சில தீர்வுகளை முன்வைத்தன.  ஐந்திணை எழுபதின் பதிப்புகள் வெளிவர வெளிவர தொல்காப்பிய உரைப்பதிப்புகளில் இடம் விளங்காமல் போன மேற்கோள் பாடல்களின் இடங்கள் விளங்கின. சோமசுந்தர தேசிகர்  மீட்டெடுத்த ஐந்திணை எழுபதின் 69 ஆம் பாடல் சரியான ஆதாரங்களின்மையால் அப்பாடல் ஐந்திணை எழுபதின் பாடல்தானா? என உறுதிப்படுத்த முடியாமல் பதிப்புகள் தோறும் தொடர்ந்து வருகிறது.  உரைமேற்கோள்கள் மற்றும் உரைக்குறிப்புகள் என்பவை கடினமான பகுதிகளுக்கு விளக்கம் கொடுப்பவை என்பதைக் கடந்து ஆய்வு மற்றும் பதிப்புச் செம்மையாக்கத்திற்கு அவை பெரிய அளவில் பயன்படும் கருவிகள் என்பதை இக்கட்டுரை வெளிக்காட்டுகிறது.

துணைநூற் பட்டியல்

  1. அரங்கராஜ்.ஜெ, செம்மொழித் தமிழ் இலக்கிய இலக்கண மேற்கோள் அடைவு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், முதற்பதிப்பு, 2022.
  2. அரவிந்தன்.மு.வை, உரையாசிரியர்கள், மெய்யப்பன் பதிப்பகம், ஒன்பதாம் பதிப்பு, 2019.
  3. அறவேந்தன்.இரா, உரைவழிப் பாடமீட்டெடுப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், முதல் பதிப்பு, 2019.
  4. அனந்தராமையர் (பதி.), ஐந்திணை எழுபதும் கைந்நிலையும், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931.
  5. இராகவையங்கார்.ரா (பதி.), மூவாதியார் செய்த ஐந்திணை யெழுபது மூலமும் உரையும், செந்தமிழ் இதழ், தொகுதி - 4, பகுதி – 3, 1906.
  6. கனகசபாபதி பிள்ளை (பதி.), தொல்காப்பியப் பொருளதிகார முதற்பாகம், நச்சினார்க்கினியர் உரை, சாது அச்சுக்கூடம், 1934.
  7. சரவணன்.ப (பதி,),  தாமோதரம், சி.வை.தா. பதிப்புரைகள், காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு, 2017.
  8. சி.வை.தா. (பதி.), தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, முதற் பதிப்பு, 1885.
  9. சோமசுந்தர தேசிகர் (பதி.) மூவாதியார் செய்த ஐந்திணை யெழுபது உரையுடன், வஸந்த அச்சுக்கூடம், மாயூரம், 1926.
  10. தமிழ் நூல் தொகுப்பு வரலாறு (சங்க காலம் முதல் சமகாலம் வரை) தொகுப்பு நூல், பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு, 2010.
  11. நடராசபிள்ளையவர்கள்.அ (பதி.), மூவாதியார் இயற்றிய ஐந்திணை எழுபது மூலமும் பழையவுரையும், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1936.
  12. பரமசிவன்.மா, உரையாசிரியர்களின் செவ்விலக்கிய மீட்பு, இராசகுணா பதிப்பகம், 2016.
  13. பவானந்தம் பிள்ளை (பதி.), தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, பவானந்தர் கழகம், 1916.
  14. மயிலை சீனி வேங்கடசாமி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், பரிசல் புத்தக நிலையம், சென்னை. இரண்டாம் பதிப்பு, 2022.
  15. முத்தமிழ்.த, பதினெண் கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020), காவ்யா பதிப்பகம், சென்னை.
  16. வ.உ.சி. (பதி.), தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, வாலிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், 1933.

இதழ்கள்

  1. திருஞானசம்பந்தம்.ப, தமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு, இனம் - பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் - மலர்:3, இதழ்:9, மே 2017.
  2. வேல்சாமி.பொ, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பழைய உரைகளும், வலைத்தமிழ்.காம்.