ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் பழங்காலக் கல்விமுறைகள் (Ancient Educational Systems in Tamil Classical Texts)

முனைவர் ஜெ. முத்துச்செல்வன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை – 600061| Dr. J. Muthuselvan, Assistant Professor, Department of Tamil, Agurchand Manmull Jain College,  Meenambakkam, Chennai. - 600061. 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சாரம்: இவ்வாய்வின் முதன்மை நோக்கம் தமிழ்மொழியின் செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள கல்விமுறைகளைத் தொகுத்துப் பழங்காலக் கல்வி முறைகளின் தன்மையையும் சிறப்புகளையும் உலகறியச் செய்வதாகும். இவ்வாய்வு தொகுப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் ஒப்பீட்டுமுறை மற்றும் விளக்கமுறை அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும் அறியாமை இருளை அகற்றி நல்வழிப்படுத்துதலே கல்வியின் தலையாய நோக்கமாகும். கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை “உண்டால் அம்ம இவ்வுலகம்” (புறநானூறு,182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் கூறுகிறது. இத்தகைய கல்வியைத் தமிழர்கள் எவ்வாறு சிறந்த முறையில் பன்னெடுங்காலமாகக் கற்றுவந்தனர் என்பதற்குத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களே சான்றுகளாக அமைகின்றன. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பழங்காலக் கல்விமுறைகளின் கருவூலமாகத் திகழ்கின்றன. அக்கருவூலத்திலிருந்து கல்விச் சிந்தனைகள், கல்வியின் வகைகள் (ஏட்டுக்கல்வி, சமூகக்கல்வி), கல்வி நிலையங்கள் (மன்றம், பள்ளிகள்), கல்விமுறை (ஆசிரியரின் தகுதியும் தன்மையும், ஆசிரியராகாதவரின் தகுதியும் தன்மையும், மாணவரின் தகுதியும் தன்மையும், மாணவராகாதாரின் தகுதியும் தன்மையும்), கல்வி கற்கும் முறை (உற்றுழி உதவுதல், உறுபொருள் கொடுத்தல்), மொழிக்கல்வி (தமிழ்மொழிக்கல்வி, பிறமொழிக்கல்வி), கல்வியின் தன்மை (வெளிநாட்டுக்கல்வி, அனைவருக்கும் கல்வி), கல்வி கற்கும் கால அளவு, கல்வியின் பயன்கள், கல்வியால் பெறும் சிறப்புகள், கல்லாதவர்களின் நிலை போன்றவற்றைத் தொகுத்து தமிழர்களின் பழங்காலக் கல்வி முறைகளைத் தற்காலக் கல்விமுறைகளுடன் ஒப்புமைப்படுத்தி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

கருச்சொற்கள்: கல்வியின் வகைகள், சமூகக்கல்வி, ஏட்டுக்கல்வி, கல்வி நிலையங்கள், கல்விமுறை, கல்வி கற்கும் முறை, கல்வி கற்கும் தன்மை, கல்வி அழகே அழகு, கல்வியே அழிவில்லா செல்வம், கல்வியால் பெறும் சிறப்புகள், கல்லாதவர்களின் நிலை.

Abstract

 The primary objective of this study is to compile the educational methods found in the classical texts of the Tamil language and to disseminate the nature and specialties of ancient educational systems globally. The review follows a cumulative design, employing both comparative and descriptive approaches. Education's central aim is articulated as the elimination of ignorance and its transformation for the better. Notably, the passage commencing with "Undal Amma ivulakam" (Purananauru, 182) eloquently elucidates that the purpose of learning is to harmonize with human nature.

Tamil literature and grammar serve as evidence of the Tamils' adeptness in acquiring education in the most effective manner since ancient period. The classical texts in Tamil represent a treasure trove of ancient pedagogy. From this treasury, various aspects of education are explored, including educational ideas, types of education (such as social education), educational institutions (like forums and schools), and the broader educational system. The study delves into the qualifications and character expectations for teachers, non-teachers, and students, while also exploring the method of learning education, encompassing life skills and substantive knowledge. Language education, covering both Tamil and foreign languages, is intricately woven into the educational fabric.

This article comprehensively summarizes the diverse facets of education, including foreign education, education for all, the duration of education and the multifaceted benefits it brings. Education is portrayed as a source of beauty and an everlasting wealth. The consequences of lacking education are scrutinized, drawing comparisons between the ancient Tamil education systems and their modern counterparts.

Keywords:

types of education, social education, secondary education, educational institutions, education system, method of education, nature of education, education is beauty, education is wealth that does not perish, benefits of education, condition of the uneducated.

முன்னுரை

தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பழங்காலக் கல்வி முறைகளின் கருவூலமாகத் திகழ்கின்றன. அக்கருவூலத்திலிருந்து கல்வியின் வகைகள் – சமூகக்கல்வி (இயற்கை அறிவு), ஏட்டுக்கல்வி  (செயற்கை அறிவு), கல்வி நிலையங்கள் (பள்ளி, மன்றம்), கல்விமுறை (ஆசிரியரும் மாணவரும்), கல்வி கற்கும் முறை (உற்றுழி உதவுதல், உறுபொருள் கொடுத்தல்), கல்வி கற்கும் தன்மை, மொழிக்கல்வி (தமிழ்மொழிக் கல்வி, பிறமொழிக் கல்வி), கல்வியின் தன்மை (வெளிநாட்டுக் கல்வி, அனைவருக்கும் கல்வி), கல்வியே அறியாமையைப் போக்கும் மருந்து, கல்வி அழகே அழகு, கல்வியே அழிவில்லா செல்வம்,  கல்வியால் பெறும் சிறப்புகள், கல்லாதவர்களின் நிலை போன்ற தலைப்புகளில் செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள கல்விமுறைகளைத் தொகுத்து விளக்கி பழங்காலத் தமிழர்களின் கல்வி முறைகளை உலகறியச் செய்கிறது இக்கட்டுரை.

பண்பட்ட வாழ்வியலையும் அறிவு சார்ந்த இலக்கியங்களையும் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லும் ஊடகமாகக் கல்வி திகழ்கிறது. ஒரு இனத்தின் அறிவு வளர்ச்சியும், சிந்தனை மரபும் அந்த இனத்தின் கல்வியின் தரத்திலேயே அமைந்திருக்கிறது எனலாம். தமிழர்களைப் பொறுத்தவரையில் அறிவுமரபு என்பது இன்றுமட்டுமல்லாது, அன்றைய காலத்திலும் மிகச் சிறந்துவிளங்கியது என்பதற்குத் தமிழ்மொழியில் உள்ள செவ்வியல் நூல்கள் சான்றுகளாகின்றன. இலக்கியங்கள் இலக்கியங்களாகவும், அதேவேளை அவற்றின் உள்ளடக்கங்கள் கல்விமரபின் சான்றுகளாகவும் விளங்குகின்றன. பழங்கதை பேசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாகப் பன்னெடுங்காலமாக மரபுவழியில் தொடர்ந்து வருகின்ற கல்விமுறைகளையும் அக்கல்விமுறைகளின் வழி இன்றைய சமூகக் கல்விமுறையைச் செம்மாந்த பண்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்வதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி பொருள் விளக்கம்

கல்வி என்ற சொல்லுக்குக் கற்றல், இலக்கியம், பயிற்சி என்று லிப்கோ தமிழ் – தமிழ் – ஆங்கிலப் பேரகராதியும், அறிவு, கற்றல், நூல், வித்தை என்று நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதியும், பயிற்சி, உறுதி, ஊதியம், ஏதி, காரணம், கலை, கேள்வி, கால்பு, விஞ்சை என்று கௌரா தமிழ் அகராதியும் விளக்கம் அளிக்கின்றன.

கல்வி என்பது நூல்களைக் கற்பதால் வரும் அறிவு மட்டுமன்று. அது தன் அன்றாட வாழ்வில் தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைக் காரணக் காரியத் தொடர்புகளுடன் கற்பதன் மூலம் பெறும் அறிவும் கல்வியாகவே கருதப்படும். விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சத்தைத் தருகிறது.

உலக மக்கள் அனைவரும் சிறப்புடன் வாழ அடிப்படைக் காரணியாக அமைவது கல்வி. கல் என்னும் அடிச்சொல்லிருந்து கலப்பை என்ற பெயரும், கல்வி என்ற பெயரும் வந்தன. நிலத்தைப் பண்படுத்துவதற்குக் கலப்பை பயன்படுவது போல, மனிதனின் மனத்தைப் பண்படுத்துவதற்குக் கல்வி பயன்படுகிறது.

அறிவு, பகுத்தறிவு, கல்வி எனப் பல சொற்களால் அறிவுடைமையானது விளக்கப்படுகிறது. தமிழர்களின் தொடக்கக் காலக் கல்விமுறைக்கும் தற்காலக் கல்விமுறைக்கும் இடையே உள்ள நிலையினை நாம் அறிந்துகொள்வதற்குச் செவ்வியல் நூல்கள் துணைநிற்கின்றன.

செவ்வியல் நூல்கள்

செவ்வியல் நூல்கள் என்ற சொல்லாட்சி, தமிழ்மொழிச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதனால் உருவாக்கப்பட்டது. தமிழ்மொழியில் கிடைக்கக்கூடிய பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் (1), தமிழரின் வாழ்க்கை களஞ்சியமான சங்க இலக்கியம் (18), தமிழரின் அறவாழ்க்கையைக் கூறும் நீதி இலக்கியங்கள் (18), முதன்முதலில் தமிழில் தோன்றிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை (2), சேர, சோழ, பாண்டியர்களின் சிறப்பை உணர்த்தும் முத்தொள்ளாயிரம் (1), முதல் உரைநூலான இறையனார் களவியல் உரை (1) ஆகிய 41 நூல்களும் செவ்வியல் நூல்கள் என்று போற்றப்படுகின்றன. வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து நெறிமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள செவ்வியல் நூல்களில் கல்விச் சிந்தனைகளும் மிகுந்து காணப்படுகின்றன.

கல்வியின் தன்மை

பழந்தமிழரின் கல்வியானது வெறும் மொழிக் கல்வியாகவும், இலக்கியக் கல்வியாகவும் அமையவில்லை. மாறாகக் கலை, அறிவியல் பற்றிய அறிவை வளர்க்கும் தன்மையுடையதாக இருந்துள்ளது என்பதை அவர்களின் படைப்புகளான செவ்வியல் நூல்களைக் கொண்டு அறியலாம்.

பழங்காலக் கல்வி வாய்மொழிக் கல்வியாகவே இருந்துள்ளது. கல்வி வாய் மூலமாகக் கற்பிக்கப்பட்டதால் மன உறுதி வலியுறுத்தப்பட்டது. அக்காலத்தில் கற்றவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தமையைச் செவ்வியல் நூல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. கல்வியினை இரு கண்களாகப் போற்றுதல் வேண்டும். அறிவுடையோர் ஆளுவோராலும் மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டனர். அறிவில் சிறந்தவர்களைச் சமுதாய மதிப்போடும் அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்தும் பெருமைப்படுத்துவர். கல்லாதவர்களுக்குச் சமூக மதிப்பு வழங்கப்படவில்லை என்பனவற்றைச் செவ்வியல் நூல்கள் இன்றைய தலைமுறைக்குத் தெரிவிக்கின்றன.

கல்வி என்று சொல்லப்படுவது “வாழ்க்கையோடு தொடர்புடையதாகவும், நாட்டுக்கும் ஆன்மாவுக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும்” என்றும், “கல்வி மாணவரின் மனத்தில் ஆன்மீகப் பண்புகளையும், சமூக அறநெறிப் பண்புகளையும் வளர்பதாக இருக்க வேண்டும்” என்றும் அரவிந்தர் கூறியுள்ளார்.

ப்ராய்டு கல்வித்தத்துவம் என்ற நூலில் கல்வியைப் பற்றிக் கூறும் போது “கல்விச்செல்வம் மனித மனத்தை வளரச்செய்கிறது. கல்வி தன்னை உயர்த்துவதைக் காட்டிலும் தான் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் பெருமையடையச் செய்கிறது” என்பார். இத்தகைய கல்வியை எத்தகு நிலையிலும் கற்க வேண்டும் என்பதைச் செவ்வியல் நூல்கள் விளக்குகின்றன.

செவ்வியல் நூல்களில் கல்விச் சிந்தனை

வாழ்வியல் உண்மைகளை நன்கு வெளிப்படுத்தும் தன்மையுடையன செவ்வியல் நூல்கள். இத்தகைய பண்பு நிறைந்த செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள கல்விச் சிந்தனைகள் குறித்த செய்திகளை இங்குக் காணலாம். ஆசிரியர்க்குக் காணிக்கைத் தருதல், யாகம் செய்தல், தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது விளங்குமாறு பாதுகாத்துச் செய்க. மாறுபட்டு விளங்கின் எக்காலத்திலும், எவ்வுலகத்திலும் தனக்குப் பயன்படாமல் போகும்.

கல்வி கற்க நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு அறநெறியில் நிற்க வேண்டும். அதன்படி வாழ்பவர்களுக்குத் துணையாக யாரும் தேவையில்லை. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி ஒருவற்கு ஏழு பிறப்பிற்கும் நன்மையைத் தரும் தன்மையுடையது. அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பாவர்.

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், வழக்கைத் தீர்த்து வைக்கின்ற அறிஞர்கள் இல்லாத சபையில் இருப்பதும், பகுத்து உண்ணும் பண்பில்லாதவர் பக்கத்தில் இருந்து வாழ்வதும் தீமைகளையே உண்டாக்கும். கற்றோருடன் சேர்ந்து பெறும் இன்பம் தேவர்களோடு வாழ்வது போன்றது.

நல்ல நூல்களைக் கற்ற கீழ் மகனாக இருந்தாலும் அவன் துணைகொண்டு நூல்களைக் கற்கவேண்டும். படகோட்டி எந்தச் சாதி என்று பார்க்காமல் அவன் துணை கொண்டு ஆற்றைக் கடப்பது போல.

நடுவு நிலைமை உடைய ஒழுக்க வாழ்க்கை தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகு. கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. கல்வியைப் போலத் துணையாவது பிறிதில்லை, கல்வியைக் கல்லாதவன் கற்றார் அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும். கல்லாத ஒருவருக்குத் தம் வாயினின்று வரும் சொல்லே இயமன் ஆகும் என்பன போன்ற பல செய்திகளைச் செவ்வியல் நூல்கள் எடுத்துரைக்கின்றன.

கல்வியின் வகைகள் - சமூகக்கல்வி (இயற்கை அறிவு), ஏட்டுக்கல்வி (செயற்கை அறிவு)

கல்வி அறிவை இரண்டாகப் பகுக்கலாம். அவை 1. மரபு வழியாலும் சூழலினாலும் வரும் அறிவு இயற்கை அறிவு, 2. கல்வி கேள்விகளால் வருவது செயற்கை அறிவு என்பனவாகும். ஒருவன் பல நூல்களைக் கற்றதால் பெற்ற செயற்கை அறிவைவிட அவனின் இயற்கை அறிவே மிகுதியாக வெளிப்படும் என்பதை,

“நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தான்

உண்மை அறிவே மிகும்” (குறள் – 373)

என்ற குறளின் மூலம் அறியலாம்.

சமூகக்கல்வி (இயற்கை அறிவு)

கல்வியின் சிறப்பைக்கூறிய திருவள்ளுவர், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல வெறும் ஏட்டுக் கல்வியால் ஒருவனது வாழ்க்கை சிறக்காது என்கிறார். ஏட்டுக்கல்வியோடு அனுபவக்கல்வியாகிய சமூகக்கல்வியும் வாழ்க்கைக்கு உதவக்கூடியது என்கிறது திருக்குறள். சமூகத்தில் மேல்தளத்தில் இருப்பவரானாலும், கீழ்மட்ட நிலையில் இருப்பவரானாலும், தான் வாழும் இடத்தில் உள்ள சமூகத்தோடு ஒத்து வாழத்தெரியாதவன், எத்தனை உயர்ந்த கல்வியைக் கற்றவனாகவே இருந்தாலும் கல்லாதவனாக, அறிவற்றவனாகவே மதிக்கப்படுவான் என்பதை,

“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.” (குறள் - 140)

என்ற குறள் விளக்குகிறது. அனுபவத்தோடு கற்ற கல்வியே! கற்றோர் முன்னிலையில் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தக்கூடியதாக உள்ளதை நாம் உணரலாம்.

ஏட்டுக்கல்வி (செயற்கை அறிவு)

பழங்கால மக்கள் தம் குழந்தைகளுக்குச் சமூகக்கல்வியைத் தம் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொடுத்துள்ளனர். அதாவது ஒருவன் தன் தாய் தந்தையிடம் முதன்முதலில் கற்கிறான். அதன் பிறகு உற்றார் உறவினர்களிடமும் கற்கிறான். அத்தகைய கல்வியறிவானது அவரவர் குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்தும், அவர்கள் வாழும் சமூகத்தைப் பொறுத்தும் அமைகிறது. இந்த வாழ்வியல் கல்வியால் ஒருவன் முழு அறிவையும் பெற்றுவிட முடியாது என உணர்ந்த தமிழர்கள் வாழ்க்கையின் பட்டறிவோடு உலகியல் அறிவையும், கல்வி கற்பதன் மூலம் இலக்கியம், கணிதம், வரலாறு மற்றும் அறிவியல் போன்ற துறைசார்ந்த அறிவையும் பெற்றனர். திருவள்ளுவரும் வாழும் மக்களுக்குக் கண்போன்று சிறந்து விளங்கக்கூடியவை எண்ணும் எழுத்தும் என்பதை,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” (குறள் – 392)

என்ற குறள் வழி விளக்கியுள்ளார். இதன் மூலம் பழங்காலம் முதலே ஏட்டுக்கல்வி இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

கல்வி நிலையங்கள் (பள்ளிகள், மன்றம்)

கல்வி நிலையங்கள் இன்று அழைப்பது போல் பள்ளி (ஆசிரியரும் மாணவரும் ஒன்று கூடும் இடம்) என்ற நிலையில் இல்லை என்றாலும், கல்வி மற்றும் கலைகளைக் கற்பிக்கும் இடமாக இருந்துள்ளதைச் செவ்வியல் நூல்கள் குறிப்பிடுகின்றன.

பள்ளிகளின் அமைவிடம்

பள்ளி என்பது மன்றத்தின் ஒரு பகுதியாகச் சங்ககாலத்தில் இருந்துள்ளது. மன்றம் என்பது பொது இடம். அங்குப் பொதுநிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அதனை ஒட்டியே பள்ளி அமைந்திருக்கின்றது. இப்பள்ளி பாணர்கள் பலர் ஒன்றுகூடிய இடமாக இருந்ததை,

“அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி

நிலை தளர்வு தொலைந்த ஒலுகுநிலைப் பல்காற்

பொது-யில் ஒரு சிறை பள்ளி ஆக

முழாஅரைப் போந்தை அரவாய் மாமடல்

நாளும் போழும் கிணையொடு சுருக்கி

ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ

ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்

புரவு எதிரந்து கொள்ளும் சான்றோர் யார்?” (புறநானூறு. 375: 4-9)

என்ற புறநானூற்று வரிகள் விளக்குகின்றன. பாணரின் வாழ்வியலை விளக்குவதாக அமைந்த இப்பாடல் பனைநார், பனங்குறுத்து இவற்றைக் கிணையொடு சேர்த்துக்கட்டி, ஏர் ஓட்டி வாழும் உழவர் இடத்தில் புகுந்து இரந்துண்ணும் வாழ்க்கையை உடையவர் பாணர் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது. அவர்கள் தங்க இடம் இல்லாது பள்ளியில் தங்கியுள்ளனர். இவ்வகையில் பள்ளி என்ற அமைப்புப் பாணர்கள் தங்கும் இடமாகவும் கல்வி வளர்க்கும் அமைப்பாகவும் விளங்கியுள்ளது.

சமயம் வளர்த்த பள்ளிகள்

பள்ளி என்ற நிலையில் தமிழ் வளர்த்த அமைப்புகள் சில செயல்பட்டுள்ளன. பள்ளி என்பது சமணச் சமயத்தவர்கள் உண்டு உறையும் இடங்கள் ஆகும். இவ்விடங்கள் பகல் பொழுதுகளில் கற்பிக்கும் மையங்களாக விளங்கியுள்ளன. உண்டு உறைந்துக் கற்கும் வழக்கமும் இங்கு இருந்துள்ளன.

மதுரைக்காஞ்சியில் பள்ளிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. பௌத்தப்பள்ளி, அந்தணர் பள்ளி, அமண் (சமணர்) பள்ளி ஆகிய பள்ளிகள் இருந்தனவாகக் குறிக்கப்படுகின்றன. அப்பள்ளிகளின் தன்மை மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கும் பாடல்கள் மதுரைக்காஞ்சியில் இடம்பெற்றுள்ளன.

பௌத்தப்பள்ளி

பேரிளம் பெண்கள் தன் குழந்தைகளைத் தவறவிட்டுவிடாதபடி பௌத்தப்பள்ளிக்குள் நுழைந்து, பூவும் புகையும் இட்டுச்சென்றனர். இப்பௌத்தப்பள்ளியில் கல்விச் செயல்பாடுகளும் நிகழ்ந்துள்ளன. வழிபடுவதற்காகப் பெண்கள் சென்றபோது, அவ்வழிபாடுகளை நிகழ்த்த உரியவர்கள் இருப்பர், அவர்களுக்குப் பௌத்தக்கல்வி போதிக்கப் பட்டிருந்த செய்தியை,

“திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை

ஓம்பினர் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித்

தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்

தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்

காமர் கவினிய பேரிளம் பெண்டீர்

பூவினர் புகையினர் தொடுவனர் பழிச்சி

சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்” (மதுரைக்காஞ்சி, 461-467)

என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

அந்தணர் பள்ளி

சங்க காலத்தில் இருந்த அந்தணர் பள்ளியில் வேதம் விளங்கப் பாடப்பெற்றுள்ளது. அறவழி பிறழாது, அன்புடை நெஞ்சத்துடன் குன்றிலிருந்து குடையப்பெற்ற இடத்தில் இருந்துகொண்டு வீட்டுலகை எண்ணித் தம் செயல்களைச் செய்து கொண்டு அங்கு அந்தணர்கள் இருந்தனர் என்பதை,

“சிறந்த வேதம் விளங்கப்பாடி

விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி

உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்

அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்

பெரியோர் மேஎய் இனிதின் உறையும்

குன்றுகுயின் றன்ன அந்தணர்ப் பள்ளியும்” (மதுரைக்காஞ்சி, 268-274)

என்ற மதுரைக்காஞ்சி வரிகள் விளக்குகின்றன.

அமண் பள்ளி

அமண் பள்ளியில் சாகவர் மலர், புகை கொண்டு வழிபட்டனர். இப்பள்ளியில் முக்காலமும் உணர்ந்தோர் இருந்தனர். இவர்கள் விரதங்கள் இருந்து வானுலகடைய முயல்பவர்கள். கற்று அறிந்த அறிஞர்கள் பலர் அங்கு இருந்தனர். பல குண்டிகைகள் கயிறுகளில் தொங்கவிடப்பெற்றிருந்தன. செம்பு போன்ற சுவரில் பல ஓவியங்கள் பதிய வைக்கப்பெற்றிருந்தன. இப்பள்ளிகள் குன்றுகள் பல தொடர்ந்து இருந்தது போல இருந்ததை,

“வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்து

பூவம் புகையும் சாவகர் பழிச்சக்

சென்ற காலமும் வரூஉம் அமயமும்

இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து

வானமும் நிலனும் தாம் முழுதுஉணரும்

சான்ற கொள்கைச் சாயா யாக்கை

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்

கல்பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்

பல்புரிச் சிமிலி நாற்று நல்குவரக்

கயம்கண்டன்ன வயங்குடை நகரத்துச்

செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து

நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்து ஓங்கி

இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்

குன்றுபல குழீஇ பொலிவன தோன்ற” (மதுரைக்காஞ்சி, 475-488)

என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இக்குறிப்புகள் வழியாகச் சமணச் சமயப் பள்ளிகள் அக்காலத்தில் ஆளுமை பெற்றிருந்தன என்பது தெரியவருகின்றது. மற்றையன ஒன்று என்ற அளவில் இருக்க இவை பல்கிப் பெருகி இருந்துள்ளன. இங்குச் சமயக் கல்வி நடைபெற்று வந்துள்ளது.

மன்றம்

செவ்வியல் நூல்களில் கல்வி நிலையங்கள் தற்போது அழைப்பதுபோல் பள்ளி என்ற பெயரில் அழைக்கப்படவில்லை. ஆனால் கல்வி மற்றும் கலைகளைக் கற்றுக்கொடுக்கும் மன்றம் என்ற அமைப்பின் ஒரு பகுதியாக அவை இயங்கிக் கொண்டிருந்தன.

இளம் தோற்றத்துடன் விளங்கும் இப்பாணன் தற்காலத்தில் இரந்து உண்டு, கல்வி கற்கும் நிலையில் உள்ளான். இவனே எதிர்காலத்தில் வயது, கல்வி ஆகியவற்றில் வளர்ந்து செம்மலாக வரக்கூடும். யானை, குதிரை, தேர், பொன்னணி ஆகியவற்றைப் பெறப்போகின்றவனாக இவன் அமையலாம். எனவே இவனைப் புறந்தள்ள வேண்டாம் என்று தலைவி தன் தோழியிடம் கூறுவதை,

“அன்னாய் இவன் ஓர் இளம் மாணாக்கன்

தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?

இரந்தூண் நிரம்பா மேனியொடு

விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே” (குறுந்தொகை 33 - 1, 2)

என்று படுமரத்து மோசிகீரனார் குறிப்பிடுகிறார். கற்கும்போது இரந்து உண்டாலும் பரவாயில்லை. கற்கவேண்டும் என்ற சிந்தனை இப்பாடலில் அமைந்துள்ளது. இக்கருத்தையே பிற்கால ஔவையாரும் “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று பாடியுள்ளார். இப்பாடல் இளம் வயது பாணன் ஒருவனைப் பற்றிச் சொன்ன பாடலாகும். வாயிலாக வந்த இளம் பாணனை முன்வைத்து வாயில் நேர்வதாகப் பாடப்பெற்றுள்ளது.

தமிழர் பள்ளி போன்ற அமைப்புகளில் கற்ற பாடங்களை ஒருநாள் மன்றத்தில் ஏற்றி அக்காலத்தில் உயர்வு கண்டுள்ளனர். மன்றத்தில் கல்விச்சிறப்பு, போர்ப்பயிற்சி, நாடகம் போன்றன அரங்கேறியுள்ளன. இவ்வாறு பல கலைகள் அரங்கேறும் இடமாக (இன்றுள்ள பல்கலைக்கழகம் போன்று) மன்றம் இருந்துள்ளது. இப்பாடலில் உள்ள இளம் மாணக்கன் என்ற சொல் சங்ககாலம் முதல் இன்றுவரை பொருள் மாறாமல் படிக்கும் மாணவர்களைக் குறிப்பதாகவே வந்துள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

கல்விமுறை (ஆசிரியரும் மாணவரும்)

பழங்காலக் கல்விமுறை என்பது இன்று உள்ளதைப்போல் ஆசிரியரும் மாணவரும் ஓர் இடத்தில் கூடி, ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியரைக் கொண்டு பயிலும் கல்விமுறையாக இல்லாமல், குரு இருக்கும் இடத்தை நாடி மாணவர்கள் சென்று அனைத்து பாடங்களையும் ஒரே குருவிடம் கற்கும் குருக்குல கல்விமுறை இருந்துள்ளதைச் செவ்வியல் நூல்களுள் ஒன்றான தொல்காப்பியம் தெளிவாக விளக்குகிறது.

தொல்காப்பிய பொதுப்பாயிரம் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தகுதியையும் தகுதியின்மையையும் தெளிவாக விளக்குகிறது.

ஆசிரியரை ஈவோன் என்றும் அவர்தரும் கல்வியைப் பெற்றுக்கொள்வதால் மாணவரைக் கொள்வோன் என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுவதை,

“ஈவோன் தன்மை யீதலியற்கை

கொள்வோன் தன்மை கோடன் மரபு” (பொதுப்பாயிரம்)

என்ற நூட்பா விளக்குகிறது.

ஆசிரியரின் தகுதி

சங்ககாலப் புலவர்கள் பலர் ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர் என்பதை ஆசிரியன் பெருங்கண்ணன், மதுரை ஆசிரியர் கோடங்கொன்றனார், மதுரை இளம் பாலாசிரியன் முதலியார் போன்ற பெயர்களைக்கொண்டு அறியலாம். புறநானூற்றில் அடைநெடுங்கல்வியார் என்னும் புலவர் ஒருவர் பெயரும் காணப்படுகிறது.

ஆசிரியர்களுக்குப் பல உவமைகளைக் கூறும் தொல்காப்பியர், ஒரு பொருளின் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி, அதற்குச் சரியான சான்றுகளைக் கூறி, மாணவர்களுக்கு ஐயம் ஏற்படாதவகையில் பாடம் நடத்தப்பட்டது என்பதையும், ஆசிரியர் ஒரு மனநல மருத்துவரைப்போல மாணவர்களின் மனதை புரிந்துகொண்டு தெளிவான முறையில் பாடம் நடத்தும் ஆற்றல் உடையவராக இருக்கவேண்டுமென்பதையும்,

“ஈதலியல்பே யியல்புறக் கிளப்பிற்

பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்

பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்

புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற்

றெளிந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக்

கொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக்

கொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர்.” (பொதுப்பாயிரம்)

என்ற தொல்காப்பிய பொதுப்பாயிரத்தின் மூலம் நம்மால் உணரமுடிகிறது. மேலும், ஆசிரியர்களின் தன்மையை,

“மலை நிலம் பூவே துலாக்கோ லென்றின்னர்

உலைவி லுணர்வுடையார்” (பொதுப்பாயிரம்)

என்கிறது. இதன் வழி ஆசிரியர்கள் மலை, நிலம் போன்றவை போல மேன்மையும் தராசு போல நடுநிலைமையோடு ஆராய்ந்து கூறும் உலகியலறிவும் பொருந்தியிருக்கக்கூடியவரே ஆசிரியராகத் தகுதி உடையவர் என்பதை அறியலாம்.

ஆசிரியராகாதவர் யார்?

ஆசிரியர்களின் தகுதியைக் கூறிய தொல்காப்பியம் ஆசிரியர் ஆகாதரைப்பற்றியும் குறிப்பிடுகிறது. பாடம் கேட்கக்கூடியவனின் தகுதி அறிந்து கற்பிக்காதவனும், தான் கற்ற கல்வியைப் பிறர் அறிவதற்கு அறிதானவனும், முன்பின் முரணாகக் கற்பிக்கும் தன்மையுடையவனும் ஆசிரியராகத் தகுதியற்றவர் என்பதை,

“மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார்

படிறு பலவுரைப்பார் பல்கா னகுவார்

திரிதரு நெஞ்சத்தார் தீயவை யோர்ப்பார்

கடியப்பட் டாரவையின் கண்” (பொதுப்பாயிரம்)

என்ற தொல்காப்பிய பொதுப்பாயிரம் விளக்குகிறது. மேலும் அவர்களின் தன்மையை,

“கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு

குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.” (பொதுப்பாயிரம்)

என்றும் குறிப்பிடுகிறது.

மாணவர்கள்

சங்க காலத்தில் சங்கப் புலவர்கள் பலர் ஆசிரியர்களாகத் திகழ்ந்துள்ளனர். சமுதாயத்தில் ஆசிரியர்கள் மிகவும் மதிக்கப் பெற்றனர்.  மாணவர்களும் தம் ஆசிரியரை மதித்து நடந்தனர். உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் மாணவர்கள் கல்வி கற்றனர்.

மாணாக்கரின் இயல்பு

மாணவர்கள் ஆசிரியர் கூறிய காலத்தில், குறித்த இடத்திற்கு உரிய நேரத்தில் சென்று, ஆசிரியரை வணங்கி, அவர் தம் முன் இருந்தபோதும் அவ்விடத்திலிருந்து சென்றபோதும், அல்லும் பகலும் அகலாது இருந்து, அன்புகொண்ட குணத்தோடு பழகி, ஆசிரியரின் குறிப்பறிந்து அவர் வா என்று அழைக்கும்போது வந்து ஏடு அவிழ்த்து, அவர் சொல்லும் பாடத்தைப் பசியோடு இருப்போன் உணவின்மீது கொண்டுள்ள விருப்பம் போல் விருப்பத்துடன் கற்று, கற்றவற்றை நெஞ்சிலே நிறுத்தும் பண்பைக் கொண்டவனே   கல்வி கற்கும் மாணவன் என்பதை,

“கோடன் மரபு கூறுங் காலைப்

பொழுதொடு சென்று வழிபடன் முனியான்

முன்னும் பின்னு மிரவினும் பகலினும்

அகலா னாகி யன்போடு கெழீஇக்

குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின்

றாசற வுணர்ந்தோன் வாவென வந்தாங்

கிருவென விருந்தே டவிழென வவிழ்த்துச்

சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று

பருகுவ னன்ன வார்வத்த னாகிச்

சித்திரப் பாவையினத்தக வடங்கிச்

செவிவா யாக நெஞ்சுகள னாகக்

கேட்டவை கேட்டவை வல்லனாகிப்

போற்றிக் கோட லதனது பண்பே.” (பொதுப்பாயிரம்)

என்று தொல்காப்பியம் விளக்கிக்கூறுகிறது.

தொல்காப்பியர் காலத்தில் யார்? யாரெல்லாம் மாணவர்களாக இருந்து கல்வி கற்றனர் என்பதைக் கூறும்போது தன் மகன், தன்னுடைய ஆசிரியர் மகன், அரசன் மகன், மிகுதியாகப் பொருள் கொடுப்பவன், தனக்கு வழிபாடு செய்பவன், தான் சொல்லும் கருத்தினை விரைவில் கற்றுக் கொள்ளும் அறிவு உடையவன் என அறுவகையாகப் பகுப்பதை,

“தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளனோ டிவரென மொழிப.” (பொதுப்பாயிரம்)

என்ற நூட்பா மூலம் அறியலாம். மேலும் அவர்களின் தன்மையை,

“அன்னங் கிளியே நன்னிறம் நெய்யரி

யானை யானே றென்றிவை போலக்

கூறிக் கொள்ப குணமாண் டோரே.” (பொதுப்பாயிரம்)

என்றும் குறிப்பிடுகிறது.

மாணவராகாதவர் யார்?

தொல்காப்பியம் கற்பதற்குத் தகுதியற்றோர் எனச் சிலரைக் கூறுகின்றது. கள்குடியனும், சோம்பேறியும், அகங்காரி, காமுகன், கள்வன், அடுநோய்ப்பிணியாளன், ஆறாச்சினத்தன், தடுமாறு நெஞ்சத்தவன் என எண்வகையாகவும் இருப்பதை,

“மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன்
அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன்
தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர்
நெடுநூலைக் கற்கலா தார்,” (பொதுப்பாயிரம்)

என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். மேலும் இவர்களின் தன்மையை,

“குரங்கெறி விளங்காய் எருமை யாடே

தோணி யென்றாங் கிவையென மொழிப.” (பொதுப்பாயிரம்)

என்றும் குறிப்பிடுகிறது.

கல்வி கற்கும் முறை (உற்றுழி உதவுதல், உறுபொருள் கொடுத்தல்),

“ஊதியம் இல்லாக் கல்வி உருப்படாது” என்கிறது பழமொழி. இலவசக் கல்வி நடைபெறும் இந்நாளில் உள்ள கல்விபோலில்லாமல் அந்நாளில் ஆசிரியருக்குப் பெரும் பொருள் கொடுத்தும், வேண்டிய உதவிகளைச் செய்தும் அவர் சினங்கொள்ளாத வகையில் இரு என இருந்து, சொல்லெனச் சொல்லி அடக்கத்துடன் கல்வி கற்றனர் என்பதை,

      “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

      பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறநானூறு, 183-1, 2)

என்ற புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம். மேலும் இப்பாடலடிகள் கல்வி முறையில் இரண்டு வகையான கல்வி முறைகள் இருந்ததை உணர்த்துகின்றன. ஒன்று: குருகுலக் கல்வி, மற்றொன்று: பணம் கொடுத்துப் படிக்கும் கல்வி என்பனவாகும். இரண்டாவது அடி, கற்றல் முறையைக் குறிக்கிறது.

செல்வந்தர்கள் முன்பும் கொடையாளிகள் முன்பும் தன் தேவைக்காக யாசகம் செய்யும் வறியவர்கள் போல அறிவிற்சிறந்த சான்றோர்களிடம் கற்க விரும்பி ஆசையாக அவர்களிடம் தாழ்ந்து, பணிந்து நின்று கற்பவரே கற்றார் எனப்படுவார்கள். மாறாக விரும்பியும் பணிந்தும் கற்காதவர்கள் கீழோர் ஆவர் என்பதை,

“உடை யார் முன்இல்லார் போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.” (குறள் – 395)

என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

      பாடம் நடக்கும் போதும், நடைபெறாத போதும் இருக்கையினின்றும் எழுந்து போக நேரிடின், காலமறிந்து ஆசிரியரிடம் தம் எண்ணத்தைத் தெரியப்படுத்தி, அவரது ஆணையைப் பெற்ற பிறகே எழுந்த சென்றிட வேண்டும் என்பதை அக்கால மாணவர்கள் அறிந்து பின்பற்றியதை,

“நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்

இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்” (ஆசாரக்கோவை - 74)

என்று பெருவாயில் முள்ளியார் குறிப்பிட்டுள்ளார். அன்றைய மாணவர்கள் ஆசிரியர்களிடம் நடந்துகொண்ட முறையும் இன்றைய மாணவர்கள் ஆசிரியர்களிடம் நடந்துகொள்ளும் முறையும் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது.

பிச்சை எடுத்தாலாவது கல்வியைக் கற்பது, அவ்வாறு கற்ற கல்வி தக்க நேரத்தில் ஆன்றோர் அவையில் உதவுவது, முத்துப்பல் புன்முறுவல் கொண்ட பெண்களின் வாய்மொழி, பெரியோர் துணையைச் சேர்ந்திருத்தல் ஆகியன நன்மை தருவனவாக அமைவதை,

“பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே

நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே

முத்து ஏர் முறுவலார் சொல் இனிது ஆங்கு இனிதே

தெற்றவும் மேலாயார் சேர்வு.” (இனியவை நாற்பது - 1)

என்று படலின் மூலம் அறியமுடிகிறது. கற்க வேண்டியவற்றைப் பிச்சை எடுத்தாவது கற்கவேண்டும் என்று செவ்வியல் நூல் குறிப்பிடுவதைத் தற்காலத்திலும் பலர் பின்பற்றி வருகின்றனர். கல்வி கற்பதற்குப் பணம் இல்லாத மாணவர்கள் பிறரின் உதவியுடன் கற்கும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளதை நாம் காண்கிறோம்.

கல்வி கற்கும் தன்மை

 "கல்வி நிலை” என்பது அடிப்படைக் கல்விக்குப் பிறகு தான் விரும்பும் நூலைப் படித்து அத்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல் ஆகும். அவற்றைப்பற்றியும் பழந்தமிழ் நூல்கள் பதிவு செய்துள்ளன. தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாக "நோக்கு' என்பதைக் கூறி அதை ,

"மாத்திரை முதலா அடிநிலை காறும்

நோக்குதற்குக் காரணம் நோக்குஎனப் படுமே'' (செய்.103)

என்று விளக்கியிருப்பது கவிதைப் படிப்பதற்குரிய இலக்கணமாக அமைந்தாலும், எழுத்தை எண்ணிப் படிக்கவேண்டும் என்ற மரபை மீறி, மாத்திரையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்; ஆழமாகப் படிக்க வேண்டும் என்னும் கருத்து இங்கு வலியுறுத்தப்படுகிறது. இன்று இந்த நூற்பா மொழியியல் இலக்கியத் திறனாய்வுக்கு வழிகாட்டியாகக் கொள்ளப்படுவதோடு, வாசிப்பவரின் நோக்கு, வாசிப்புக்கு ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டிருப்பது பலவகை வாசிப்புக்கு இடமளிப்பதாக அமைகிறது. இவ்வாறு சங்க காலக் கல்வி குறித்த பல செய்திகள் செவ்வியல் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முழுமைக் கல்வி

ஆசிரியர் உரைத்ததை மனம் நிறைய ஏற்றுக்கொண்டாலும் ஆசிரியரின் புலமையில் மாணவரால் கால்பங்கு மட்டுமே பெற முடியும் என்பதும், தன்னுடன் பயிலும் மாணவருடன் பழகி சொல்லிப்பார்ப்பதால் கால்பங்கும், தான் கற்றதைப் பிறருக்கு எடுத்துரைப்பதால் அரைப்பங்கும் புலமை பெறமுடியும் என்பதைத் தொல்காப்பியர்,

“ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே.'
'முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.'
'ஆசா னுரைத்த தமைவரக் கொளினுங்
காற்கூ றல்லது பற்றல னாகும்.'
'அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபாற்
செவ்விதி னுரைப்ப அவ்விரு பாலும்
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.'
'பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகுந்
திறப்பட உணருந் தெளிவினோர்க்கே.” (பொதுப்பாயிரம்)

என்ற நூற்பா வழி விளக்கியுள்ளார். தற்கால மாணவர்கள் மனப்பாடம் செய்து சொல்லிப் பார்த்துப் படிப்பதில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதை இன்று நாம் உணரலாம்.

மொழிக்கல்வி (தமிழ்மொழிக்கல்வி, பிறமொழிக்கல்வி)

     மொழிக்கல்வி என்பது ஒருவன் தான் கற்கும் கல்வியை எம் மொழியின் வழி கற்கிறான் என்பதைக் குறிக்கிறது. ஒருவன் தன் தாய்மொழியில் கற்பதை தாய்மொழிக்கல்வி என்றும், தன் தாய்மொழியின் வழி கல்வி கற்காமல் பிறமொழியின் வழி கல்வி கற்பதைப் பிறமொழிக்கல்வி என்றும் அழைக்கலாம்.

தமிழ்மொழிக்கல்வி

கல்வி என்பது தாய்மொழி வழி கல்வியைக் குறிக்கும். இடைக்காலத்தில் பிற மொழி கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் இருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழ்மொழி கல்வி மட்டுமே ஒருகாலத்தில் இருந்துள்ளது. அதன் பின்னர்ப் பிறமொழிகளும் தமிழகத்திற்கு வந்துள்ளன. அதனால்தான் செய்யுள் ஈட்டச் சொற்களில் வடசொல்லைத் தொல்காப்பியர் சேர்த்திருப்பதும் (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே - எச்சவியல்.1) இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

பிறமொழிக்கல்வி

தமிழ்நாட்டில் இருமொழிக் கல்வி இருந்தது என்பதற்குத் தொல்காப்பிய நூற்பாக்களே சான்றுகளாக அமைகின்றன. அதற்கு மேலாக, நூலின் வகைகளாக முதல் நூல், வழி நூல் என்று இரண்டு வகையைக் குறிப்பிட்டு (மரபியல். 95), வழி நூலின் வகைகளில் ஒன்றாக "மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்' என்று கூறுவது (மரபியல்.99) இன்று நாம் வழங்கும் மொழிபெயர்ப்பு நூல்களே. அதன் உட்பொருள் தொல்காப்பியர் காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிக்கல்வி இருந்திருக்க வேண்டும் அல்லது தாய்மொழியில் இல்லாத அறிவுத்துறைகளைப் பிற மொழியில் அறிந்துகொள்ள அந்நாட்டுக்குச் சென்று, அந்த மொழியையும் அறிவுத்துறையும் கற்றுத் தன்னுடைய தாய்மொழிச் சமூகத்துக்காக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கவேண்டும் எனலாம். இதன் மூலம் தமிழ்நாட்டில் தமிழ்மொழியுடன் பிறமொழியையும் அறிந்தவர்கள் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

கல்வியின் தன்மை (வெளிநாட்டுக்கல்வி, அனைவருக்கும் கல்வி)

சங்க காலத்தில் கல்வி பரவலாக இல்லை.  ஆனால் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டிருந்தது.  சங்கம் மருவிய காலத்தில் கல்விக்கு மிகவும் சிறப்புத் தரப்பட்டிருந்தது.  நீதி இலக்கியங்களில் கல்வி வலியுறுத்தப்பட்டுள்ளது.  கற்றார், கல்லாதார் என்ற பாகுபாடு இருந்துள்ளது.

வெளிநாட்டுக்கல்வி

தொல்காப்பிய காலத்தில் பிறநாட்டுக்குக் கல்வி கற்கச் செல்வது வழக்காக இருந்தது. கல்வித்தரத்தில் உயர்ந்தோரை மன்னன் மதிப்பான் என்ற நிலை இருந்தது. கல்வியில் உயர்ந்தோர் சான்றோர் எனப்பட்டனர். கற்றோரையே தூதாக மன்னன் அனுப்பினான். தூது உரைப்பார்க்கு ஆராய்ந்த சொல்வன்மையும் நூல் வல்லவனாக விளங்கும் திறமையும் தேவை. எனவே கல்வியின் பொருட்டும் தூதின் பொருட்டும் பிரிவு நிகழ்ந்துள்ளதை,

“ஓதல் பகையே தூதிவை பிரிவே” (அகத்திணையியல் - 27)
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (அகத்திணையியல் - 28)

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

கல்வியின் பொருட்டு ஒருவன் பிரியும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்பதை,

“வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது” (கற்பியல் - 47)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இக்கல்வியானது தற்காலத்தில் பயிலும் இளநிலைக் கல்வி போன்றே கால அளவைப்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

அனைவருக்கும் கல்வி

கல்வியானது அனைவருக்கும் உரியது. இன்ன சமூகத்தினருக்கு மட்டுமே உடையது என்று யாரும் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது. ஆனால் தொல்காப்பியர் காலத்தில் கல்வியானது உயர்ந்தோராகிய ஒருசாரார்க்கு மட்டுமே கிடைத்துள்ளதை,

“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல். அகத்திணையியல், 28)

என்ற நூற்பா மூலம் அறியலாம். மேலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மாணவர்களாகும் தகுதியைப் பெற்றிருந்ததை,

“தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளனோ டிவரென மொழிப.” (பொதுப்பாயிரம்)

என்ற நூட்பா மூலம் அறியமுடிகிறது. இந்நூற்பாக்களின் வழி தொல்காப்பியர் காலத்தில் அனைவருக்கும் கல்வி என்பது வழக்கில் இல்லை எனலாம்.

சங்காலத்திற்கு அடுத்தக் காலத்தில் தோன்றிய நூலான நாலாடியார் குறிப்பிடுகின்ற “தொல்லை வருணம்” எனும் வரிகள் அக்காலத்தே கல்விமுறையில் வருண பாகுபாடு பின்பற்றப்பட்டதை,

“தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்

            காணிற் கடைப்பட்டா னென்றிகழார்- காணாய்

            அவன்றுணையா லாறுபோ யற்றேநூல் கற்ற

            மகன்றுணையா நல்ல கொளல்.” (நாலடியார் - 136)

என்ற பாடல் வழி அறியலாம். தாழ்குலத்திலும் பிறந்தவனாயினும் அவன் கற்றவனே எனில் அவனது துணையானது, வெள்ளத்தில் கடக்க உதவுகின்ற தோணியைப் போன்றது.  அதனால் அவர்களது நட்பினை போற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம் நாலடியார் காலத்தில் அனைவருக்கும் கல்வி என்ற நிலை இருந்துள்ளது எனலாம்.

கற்றதனால் ஒருவன் எவ்வாறு போற்றப்படுகிறன் என்பதை,

   “கடைநிலத் தோராயினுங் கற்றறிந் தோரை

               தலைநிலத்து வைக்கப் படும்.” (நாலடியார் - 133)

என்ற நாலடியார் பாடல் அறிவிக்கிறது. நாலடியார் காலத்தில் கல்வியானது யாருக்கு மட்டும் கற்பிக்கப்பட்டது. சமூகத்தின் கடைநிலத்தோர் யார்? தலைநிலத்தோர் யார்? என்று நம்மைக் கேள்வி கேட்க தூண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

செவ்வியல் நூல்கள் பழங்காலக் கல்வியின் சிறப்பு, கற்பித்தல், கற்றல் முறை போன்றவற்றை எடுத்து மொழிகின்றன. இவ்வாறு தமிழ்மொழி கல்வி மொழியாக இருந்து, அது அரசு மொழியாக ஆட்சி செய்து சிறப்புற்று விளங்கியதை செவ்வியல் நூல்களில் உள்ள பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

கல்வியே அறியாமையைப்போக்கும் மருந்து

கற்றவர் புகழை இம்மையிலும் மறுமையிலும் வாழச்செய்வது கல்வியே. கல்வியைப் போல் அறியாமை எனும் நோயை போக்கக் கூடிய மருந்து இவ்வுலகில் வேறெதுவும் இல்லை என்பதை,

 “இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

             தம்மை விளக்குமால் தாமுளராக் கேடிண்றால்

             எம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல்

             மம்ம ரறுக்கும் மருந்து.” (நாலடியார் - 132)

என்று குறிப்பிடுகிறது. அறிவுக்கு வள்ளுவர் கூறும் விளக்கமும் இதனை ஒட்டியே அமைவதை,

“எப்பொருள் யார் யார்வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.” (குறள் – 423)

என்ற குறள் உறுதிப்படுத்துகிறது. அறிவு என்பது வாழ்வியலோடு இணைத்தே நோக்கப்பட்டது. குறிப்பிட்ட செயலுக்கான விளைவு எவ்வாறிருக்குமெனச் சிந்திப்பவனை அறிவுடையவன் என்றும், அவ்வாறு விளைவுக்கான பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தெரியாதவனை அறிவற்றவனாகவும் கருதுவதை,

“அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்

அஃதறி கல்லாதவர்.” (குறள் – 427)

என்கிறார் வள்ளவர். அன்றைய தமிழர்கள் தம் வாழ்க்கையினூடாகப் பார்த்ததையும் கேட்டதையும், அனுபவத்தின் வழி கற்றுக்கொண்டதையும் இன்றைய தமிழர்கள் கற்றுக்கொள்ள எளிதாக்கியது முறைப்படுத்தப்பட்ட கல்விமுறை எனலாம்.

கல்வி அழகே அழகு

அழகைச் சுற்றிதான் இவ்வுலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சிகள் அனைத்தும் கல்வியால் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மனிதனுக்கு அழகு என்பது உடலின் அழகும், உறுப்புகளின் அழகும், நடையின் அழகும், கூந்தலின் அழகும் அழகல்ல. அவன் நல்ல நூல்களைக் கற்று, அதன்மூலம் நற்கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லக்கூடிய கல்வியறிவின் அழகே அழகு என்பதை,

“குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவு நிலைமையாற்

கல்வி யழகே யழகு.” (நாலடியார் - 14)

என்று சமண முனிவர்களும்,

“இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு” (ஏலாதி – 74) 

என்று கணிமேதாவியாரும்,

“மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும் - செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு.” (சிறுபஞ்சமூலம் - 35)

என்று காரியாசானும் தம் பாடல்களின் வழி குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியே அழிவில்லா செல்வம்

கல்வியானது தான் வைக்கப்பட்டுள்ள இடத்தினின்றும் பிறரால் களவாடப்பட முடியாதது. கொள்பவர் தகுதியுடை யவராக வாய்த்து, அவருக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அதனால் வளர்ச்சி உண்டேயல்லாமல் அழிவில்லை. மிகுதியான சிறப்பின் காரணமாக அரசர்களே சினங்கொண்டு வந்தாலும் கவர்ந்து சென்றுவிட முடியாது. ஆதலால் ஒருவன் தன் மக்களுக்குத் தான் விட்டுச் செல்லும் செல்வமென்று சேர்த்துவைக்கத் தக்கவை, கல்விப் பொருள்களே யல்லாமல் பிற அல்ல என்பதை,

“வைப்புழிக் கோட்படா, வாய்த்தீயின் கேடில்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின்,-வவ்வார்;

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன

விச்சை மற்று அல்ல, பிற.” (நாலடியார் – 134)

என்று நாலடியாறும், உலகப்பொதுமறை என உலகோர் யாவராலும் போற்றி வழங்கப்படுகின்ற திருக்குறள், ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையான செல்வமாகக் கல்வியைக் குறிப்பிடுகிறது என்பதை,

“கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.” (குறள் - 400)

என்று திருக்குறளும், கல்வி கொடுத்தாலும் குறையாது. பொருட் செல்வம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும். ஆனால் கல்விச் செல்வத்தை வெள்ளம் அடித்துக்கொண்டு செல்லாது; நெருப்பினால் வேகாதது; எடுத்துக் கொடுத்தாலும் குறையாது; திருடர்களால் களவாட முடியாது போன்ற பல சிறப்புகளையுடைய கல்வி உள்ளிருக்க, அழிகின்ற பொருளையெல்லாம் தேடி அழைகின்றார்கள் என்பதை,

“வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி யென்னும்

உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உழல்கின் றீரே.” – (தனிப்பாடல்).

என்று விவேக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன.

கல்வியால் பெறும் சிறப்புகள்,

கல்வியின் பயன்களைச் செவ்வியல் இலக்கியங்கள் தெளிவாகச் சுட்டுகின்றன. சங்ககாலத்திற்குப் பின்னர்க் கல்வி என்பது சமயக் கல்வியாகத்தான் இருந்துள்ளது. சமயக் கல்வி சமய ஒழுங்கு முறைப்படி செயலாற்றுதலையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தியது.

சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்றி நல்வழிப்படுத்தலே கல்வியின் தலையாயப் பயனாகும். பிறர் நலம் நாடும் பண்பினைக் கற்றலினாயப் பயன்களுள் ஒன்றாகக் குறிப்பிடலாம்.

கற்றோர் இந்திரர் அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணார்; பிறருக்குக் கொடுத்தே உண்பார். யாரிடமும் சினம் கொண்டு ஒதுங்க மாட்டார். பிறர் துன்பங்களைக் கண்டு தாங்களும் அஞ்சுவர்; புகழுக்காக உயிரையும் கொடுப்பர்; பழிவருமெனில் உலகமே கிடைப்பதாயினும் கொள்ளார். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்வார் அவர்களாலேயே இவ்வுலகம் இன்றும் இயங்குகிறது என்பதை,

 “உண்டால் அம்ம இவ்வுலகம்” (புறநானூறு - 182)

என்ற புறப்பாட்டு நன்கு எடுத்தியம்புகிறது. சாதிக் கொடுமை அகல, கல்வி ஒன்றே உயர்ந்த கருவி என்பதை,

“கீழ்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவன் அவன்கட் படுமே” (புறநானூறு - 183)

என்ற புறநானூற்றுத் தொடர் நன்கு வலியுறுத்துகின்றது.

குழந்தைகளைப் பெற்றெடுத்த அன்னை தான் பெற்ற பிள்ளைகள் அனைவரிடமும் பாசமிக்கவர்தான். இதனாலன்றோ தாயன்பு தலைசிறந்த அன்பாக மதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பாசம் மிக்கத் தாயும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் மகனையே பெரிதும் விரும்புவாள். அறிவுடையவன் வழி அரசும் நடைபெறும். ஒருவன் பிறப்பால் கீழ்மை பெற்றிருந்தாலும் அவன் பெற்ற கல்வி அவனை மேன்மையுடையவனாக மாற்றும் என்ற கருத்துகள் சங்ககாலத்தில் இருந்துள்ளது. ஆண், பெண், நால் பால் வருணத்தார் அனைவரும் கல்வி கற்றுள்ளனர். குடும்பத்திலும் கற்றவர்களே முன்நிறுத்தப்படுவார்கள் என்பதை,

“பிறப்பு ஒர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பில் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்து நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே.” (புறநானூறு, 183)

என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடல் சான்றாக அமைகிறது. இப்பாடல் மூலம் சங்ககாலத்தில் அனைத்துப் பிரிவினரும் கல்வி கற்றனர் என்பதை அறியமுடிகிறது.

எல்லா ஊரும் எமக்குச் சொந்த ஊர்தான். எல்லோரும் எமக்கு உறவினர்தான். தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல. அவை தாமே வருவன. துன்புறுவதும் துன்பம் தவிர்தலும் (மகிழ்தலும்) அதைப்போன்றவைதான். அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல. அவையும் தாமே வருவனதான். சாதல் என்பது புதியது இல்லை; வாழ்தல் இனிமையானது என்று மகிழ்வதும் இல்லை. உலகின் மேலுள்ள வெறுப்பால் வாழ்வு இனியதல்ல என்று கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையிலுள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்துபோகும் தெப்பம்போல், நமது வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக்கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தல் அதனினும் இல்லை என்ற பக்குவப்பட்ட நிலையை,

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், 5

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 10

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறநானூறு - 192)

என்று ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் கூற்றின் வழி அறியலாம்.

கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்? என்பதை,

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.” (குறள் - 397)

என்று குறள் வழி கேள்வி எழுப்புகிறார் திருவள்ளுவர்.

 ஒரு தாய் தன் மகனை ஈன்றபொழுது பெற்ற மகிழ்ச்சியைவிட, அவனைப் பிறர் கற்றறிந்த சான்றோன் என்று கூற, அதனைக் கேட்டபோது பலமடங்கான மகிழ்ச்சியைப் பெறுகிறாள் என்பதை,

“ஈன்ற பொழிதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.” (குறள் - 69)

என்று திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை உணர்த்துகிறார்.

ஒரு நாட்டின் வளம் நிலவளத்தால் மட்டும் அமைவதன்று, கற்றறிந்த சான்றோராலேயே நாடு மதிக்கப் பெறுகின்றது என்பதை,

“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.” (புறநானூறு - 187)

என்று ஔவையார் வாக்கு வலியுறுத்துகிறது.

கல்லாதவர்களும் கல்வியறிவுடையவர்களுடன் விரும்பி உடனிருப்பவர்கள், அவ்வாறு கல்வியறிவு உடையவர்களுடன் இருப்பதால் அவர்களும் கல்வியறிவு உடையவர்களுக்கு ஒப்பாவர் என்பதை,

“கற்றன்னர், கற்றாரைக் காதலர்;” (நான்மணிக்கடிகை – 55)

என்றும்,

விளக்கின் திரியில் இருந்து வெளிப்படும் அழல் சிறியதாக இருந்தாலும் அதை வணங்குவர். விறகில் எரியும் சுடர் பெரியதாக இருந்தாலும் மக்கள் அதை வெறுப்பர். அவ்வாறே ஒரு குடும்பத்தில் படிக்காத மூத்தவனை விடக் கற்ற இளையவனையே அனைவரும் மதித்துப் போற்றுவர்.

“திரி அழல் காணின், தொழுப; விறகின்

எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்

இளமை பாராட்டும், உலகு.” (நான்மணிக்கடிகை – 63)

என்றும் விளம்பி நாகனார் கல்வியால் பெறும் சிறப்புகளைத் தம் பாடல்கள் வழி விளக்கியுள்ளார்.

கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது என்பதை,

“கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;

மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;” (இனியவை நாற்பது – 16)

என்றும், “கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே’ கற்க வேண்டிய நூல்களைக் கற்று அவற்றின் பொருளை உணர்ந்தவர் சொல்லும் காரியத்தின் பயன் இனிதாகும். “கற்றலிற் காழினியது இல்’ நன்மையுடைய நூல்களைக் கற்பதைப் போல் இனியது வேறொன்றும் இல்லை. என்றும் கல்வியின் சிறப்பைப் பூதஞ்சேந்தனார் கூறுகிறார்.

கல்லாதவர்களின் நிலை

செவ்வியல் நூல்கள் கற்றார் பெருமையை மட்டும் கூறாமல் கல்லாதவர்களின் இழிவையும் கூறுகின்றன. பழங்காலத் தமிழர்கள் கற்றாரைப் பெருமைப்படுத்தியுள்ளதுடன் கல்லாதவரை இகழ்ந்து ஒதுக்கியுமுள்ளனர். நூல்கள் பல கற்றாரை மனிதர்களாகவும் கல்லாதவரை விலங்குகளாகவும் கருதுவதை,

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றா ரோடேனை யவர்.” (குறள், 410)

என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 “கற்றறிவு இல்லா உடம்பு’ அவைக்குப் பாழாவது கல்வி, கேள்வி வீண் சான்ற பெரியோர் இல்லாமை. தனக்குப் பாழாவது கல்வியறிவு இல்லாத புலால் உடம்பு உள்ளமை. “கல்லா ஒருவர்க்குத் தம் வாயிற் சொற் கூற்றம்” கல்லாத ஒருவருக்குத் தம் வாயினின்று வரும் சொல்லே இயமன் ஆகும். “கல்லாதானூருங் கலிமாப் பரிப்பின்னா’கல்வியைக் கல்லாதவன் கற்றார் அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும் என்று நான்மணிக்கடிகை கல்வியறிவு பெறாமையால் ஏற்படும் நிலையைப் பல வகைகளில் விளக்குகிறது.

நன்மைப் பயக்காதவை என்ற பட்டியலில் கணக்காயர் இல்லாத ஊரும்… அதாவது கற்பிப்பதற்கு இயலாதவர்கள் இருக்கின்ற ஊரில் வாழ்வதே வீண் என்று திரிகடுகம் உரைக்கின்றது. மேலும் ஒரு குடும்பத்தில் அல்லது ஊரில் கற்றவர் ஒருவர் இருந்தால், அவரை முறையாக ஆதரிக்காமல், அவரை உற்றாரோ அல்லது ஊராரோ கைவிட்டுவிடுவார்களாயின் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லுலகு இல்லை என்பதைத் திரிகடுகம் திறம்பட விளக்குகிறது.

முடிவுரை

இவ்வாய்வுக்கட்டுரையிலிருந்து செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள பழங்காலக் கல்வி முறையையும் தற்காலக் கல்வி முறையையும் ஒப்பிடும் போது இரண்டிற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் காணமுடிகிறது. பழங்கால ஆசிரியர் மாணவர்களுக்கு இணையாகத் தற்கால ஆசிரியர்களும் மாணவர்களும் இல்லையெனலாம். பழங்காலக் கல்விமுறையில் கற்றுக்கொடுப்பதை முதன்மையாகக் கொண்டிருந்தனர். ஆனால் தற்காலக் கல்விமுறையில் கற்றுக்கொடுப்பது இரண்டாம் நிலையில் உள்ளதை நடைமுறையில் உணரலாம். செவ்வியல் நூல்களில் உள்ள கல்விப்பற்றிய செய்திகளைச் சொல்லச் சொல்ல விரியும், கற்றவரே கண்ணுடையார் என்றும், கல்லாதவர் முகத்தில் புண்ணுடையார் என்றும், கல்வியைக் கண்ணைப் போலக் கருதுதல் வேண்டும் என்றும், கற்றவரே தெய்வத்திற்கு இணையானவர் என்றும் இலக்கியங்கள் பலபடப் பாராட்டுகின்றன.

கல்வியின் தேவை பற்றியும் கல்வி கற்பதால் ஒருவரின் வாழ்வு எப்படிப்பட்டதாக மாற்றமடைகிறது என்றும் செவ்வியல் நூல்கள் சிறப்புற எடுத்தியம்புகின்றன. பன்னெடுங்காலமாகத் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கி வந்துள்ளது. ஆனால் தற்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்விமுறை இல்லாமல் காசு கொடுப்பவர்களுக்கு ஒரு விதமான கல்வியையும், காசு இல்லாதவர்களுக்கு வேறு விதமான கல்வியையும் கற்கும் முறை நடைமுறையில் இருப்பது வருத்ததிற்குரியதாக உள்ளது. மேலும் இக்காலத்திலும் பல நாடுகளில் கல்வியானது பலருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது என்பதை யாரும் மறுத்தற்கில்லை. செவ்வியல் நூல்கள் கல்வித்தொடர்பான பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் அரிய செய்திகளை உள்ளடக்கிய கருத்துப் பெட்டகமாக விளங்குவதை இவ்வாய்வின் மூலம் அறியமுடிந்தது.

துணைநூல்கள்

  1. கல்விச் சிந்தனைகள், சீர்காழி வி. இராம்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2004
  2. சங்க இலக்கியம் (மூலமும் உரையும்), முதன்மை பதிப்பாசிரியர்கள் - முனைவர் அ.மா. பரிமணம், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூ செங்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. 2007
  3. செம்மொழிப் போராட்ட வரலாறு (கால்டுவெல் முதல் கலைஞர் வரை), முனைவர் ஜெ. முத்துச்செல்வன், நாவைத் தமிழ்ச் சங்கம், நாவக்குறிச்சி, சேலம் மாவட்டம். 2022
  4. தொல்காப்பியம் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்) இணைய நூலகம், தமிழ் இணையக்கல்விகழகம், சென்னை.
  5. தொல்காப்பியம், எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும், புன்னாலைக்கட்டுவான் பிரமஸ்ரீ சி. கணேசையர், சுன்னாகம், திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு. 1937
  6. நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி செம்பதிப்பு, பதிப்பாசிரியர் எஸ். கௌமாரீஸ்வரி, சாரதா பதிப்பகம், சென்னை. 2009
  7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (மூலமும் தெளிவுரையும்) முதல் தொகுதி, உரையாசிரியர்கள் - நாமக்கல் கவிஞர், ஜெ. ஸ்ரீசந்திரன், தமிழ்நிலையம், சென்னை. 2007
  8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (மூலமும் தெளிவுரையும்) இரண்டாம் தொகுதி, உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கம், தமிழ்நிலையம், சென்னை. 2007
  9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (மூலமும் தெளிவுரையும்) மூன்றாம் தொகுதி, உரையாசிரியர் - புலவர் அ. மாணிக்கம், தமிழ்நிலையம், சென்னை. 2007
  10. லிப்கோ தமிழ்-தமிழ்- ஆங்கிலப் பேராகராதி, லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிட், சென்னை. 2008