ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வைகுண்டரின் உயரிய சிந்தனையும் சீர்திருத்தமும் (Vaigunder's High Thought and Reformation)

முனைவர் த. பிரகலாதன், தமிழ்த்துறைத் தலைவர், சிந்திக் கல்லூரி, சென்னை 600077 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

          இந்தியாவின் தென்பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவாமி தோப்பு என்னும் ஊரில் வைகுண்டர் 1883 மார்ச் மாதம் தோன்றினார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள உயர் சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகளை எதிர்த்தார். மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை என்ற கருத்தை உணர்த்தினார். அய்யா வழி எனும் புது நெறியை உருவாக்கினார் .அய்யா வழிபாடு இந்து ,முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டில் இருந்து மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது. சமூகப் புரட்சி செயலால் ஒரு சாதியினர் முழு சுதந்திரம் அடைந்தனர்.

திறவுச் சொற்கள்

வைகுண்டர், முத்திரி கிணறு தலைப்பாகை, வழிபாடு

Abstract :

Vaikunder appeared in March 1883 in a village called Swami Thoppu in the Kanyakumari district of southern India. He expressed the idea that living with dignity is self-respect. He created a new tradition called Ayya Vazhi. Ayya worship is very different from Hindu, Muslim and Christian worship. A caste achieved complete independence by the act of social revolution.

Keywords: Nadar(caste), Vaikundar,Thali  Ayya vazhi, patham, parvatipuram

முன்னுரை

                தர்மம் அழிந்து அதர்மம் வரும் போது தர்மத்தை நிலைநாட்ட இறைவன் தோன்றுவான் என்பது மக்களின் நம்பிக்கை.  19ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் ராஜ்யத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே தர்மத்தை அழித்து அதர்மத்தை மன்னன் சுவாதித்திருநாள் மற்றும் உயர்சாதி மக்கள் செய்து வந்தனர். இவர்களுடைய கொடுமைகளில் இருந்து  மக்களை காப்பாற்றி அவர்களுக்குச் சம உரிமையை வாங்கித்தருவதற்காக அய்யா வைகுண்டர் திருவிதாங்கூர் ராஜ்யத்தில் உள்ள சாமித்தோப்பில் பிறந்தார். வைகுண்டர் திருவிதாங்கூர் ராஜ்யத்தைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களுக்கு நடந்த கொடுமைகளையும், அடிமைத்தனத்தையும் பார்த்து மன்னனோடு நேருக்கு நேர் போரிடாது அகிம்சை முறையில் போராடியும், மக்களைவிழிப்படையச் செய்தும் வெற்றி பெற்றார்.

 மக்கள் துயரமும் வைகுண்டர் மனம் இரங்குதலும்

                   திருவிதாங்கூர் மன்னன் மக்களை, சாதிப் பாகுபாடு படுத்தி உயர்குடியினர் எனவும் கீழ்க்குடியினர் எனவும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கினான். இதனால் கீழ்க்குடியினரைத் தீண்டத்தகாதவர்கள் என மேட்டுக்குடியினர் ஒதுக்கி இழிவு செய்ய ஆரம்பித்தனர். நம்பூதிரிகளைக் கண்டால் முப்பது அடிக்கு அப்பால் நின்று சந்திக்க வேண்டும். பொதுச் சாலைகளைப் பயன்படுத்தவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேட்டுக்குடியினர் வாழும் ஊர். தெருக்களில் செல்லக் கூடாது. பொன் அணிகள் அணிந்துக் கொள்ளக் கூடாது. பெண்களுக்கு மாப்பிள்ளை பனை ஓலையால் செய்யப்பட்ட தாலியை மட்டுமே அணிவிக்க வேண்டும். பால் மாடு வளர்க்கவோ, பால் எடுக்கவோ கூடாது. பால், மோர், வெண்ணெய், நெய் முதலானவைகளைத் தீண்டக் கூடாது. மீறி அவர்கள் இவற்றைத் தொட்டு விட்டால் அவை தீட்டுப்பட்டதாகவே கருதப்படும்.

 பெண்கள் இடுப்பில் தண்ணீர்க் குடம் எடுத்துச் செல்லக் கூடாது. தங்கள் மார்பகங்களை மறைத்துக் கொள்ள, தோளில் சீலை அணிந்து கொள்ளக் கூடாது. பள்ளிக் கூடங்களுக்குச் சென்று கல்வி பயிலுதல் கூடாது. தங்களுக்குப் பிறரால் ஏற்படும் துயரங்கள் பற்றியும் அல்லது வேறு எந்தக் காரணத்திற்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக் கூடாது. எளிய மக்களுக்கு ஏற்பட்ட இழிநிலையைப் போக்கவோஅல்லது இடித்துரைத்து ஏனென்று கேட்கவோ எவரும் முன்வராத நிலை இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எளிய பாமர மக்கள் மிருகங்களிலும் கீழாக நடத்தப்பட்ட இழிநிலை கண்டு அய்யா வைகுண்டர் மனம் நொந்தார். இதனையே!

"தோள்சீலை போடுதலோ பிழையோ என்றார்.

தொடுகழலோ மறைத்தாலே கூடாதென்றார் 

கீழ்ச்சாதிக் குலப்பெண்கள் தம்மை மிக்க

 கிழிந்திட்ட ஆடையே கட்டச் சொன்னார்.

நீள்கொண்ட பொன்னணிகள் இவர்களுக்குகூடா

நிறைகுடமும் இவர்இடுப்பில் எடுத்தால் பாவம்"1 

        என்று வைகுண்ட காவிய வரிகள் விளக்குகின்றன.

மரத்திற்கு வரி

  “1947-ல் இந்தியா சுதந்தரம் பெற்றிருந்தாலும் 1949 வரை திருவிதாங்கூரில் மன்னராட்சியே நடைபெற்றது. திருவிதாங்கூரில் தோப்பாக இருந்தால் மரவரியும். நிலமாக இருந்தால் தரை வரியும் வசூலிப்பது வழக்கம். அகஸ்தீஸ்வரம், இரணியல் போன்ற பகுதிகளில் மட்டுமே பூமிக்குத் தனி வரி, அதன் மேல் வளர்ந்துள்ள மரங்களுக்குத் தனி வரி என்று திருவிதாங்கூர் அரசு இரட்டை வரி வாங்கியுள்ளது. ஏனைய சாதியினர் காய்த்த மரத்துக்கு மட்டுமே தீர்வை செலுத்தும் போது நாடார்கள் மட்டும் காய்த்த மரத்துக்கும் காய்க்காத மரத்துக்கும் வரிகட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. தாழ்த்தப்பட்ட ஆண்களுக்கு தாடி முளைத்தால் முடிவரி கொடுக்க வேண்டும். இழிகுலத்தில் பிறந்த பெண்ணுக்கு மார்பு அரும்பினால் முலை வரி கட்ட வேண்டும். நாடார் போன்ற சாதியினர் மீது அரசு 110 வரிகளை வசூலித்ததாக கொல்லம் வருடம் 104 (கி.பி.1865) ஆட்சி அறிக்கை தெரிவிக்கிறது"2 என த.கிருஷ்ணநாதன் குறிப்பிட்டுள்ளார்.

"தாலிக்கு ஆயம் சருகுமுதல் ஆயம்

காலிக்கு ஆயம் கம்புதடிக்கு ஆயம்

தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்த்த

ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே

 வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர் கருப்புக்

 கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே

பனைகேட்டு அடிப்பான் பதனீர் கேட்டு அடிப்பான்

 சில்லுக் கருப்புக்கட்டி சீரகம் இட்டே ஊற்றிக்

 கொல்லைதனில் சான்றோரைக்  கொண்டு வா என்றடிப்பான்

 மீச்சுக்கருப்புக்கட்டி மிளகு பலகாரம் இட்டு

 விச்சுடளே கொண்டு வீட்டில் வா என்று அடிப்பான்

 தோண்டிக்கும் பாய்க்கும் காமடதுக்கும் ஓலை

காலை பதனீர் கண்முற்றா  நொங்குகளும்

 பாலை பதனீர் வற்ற காயும் பதனீர் கொண்டு வா என்றடிப்பான்

 இந்தனையும் வேண்டி இவன் கொண்டு போனாலும்

 புத்தியுள்ள சான்றோர் படுந்துயரம் மாறாதே

 குளம் வெட்டச் சொல்லி கூலி கொடுக்காமல்

களம் பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான்

 வினை கொண்ட பாவி வேண்டி அவன் போனாலும்

சான்றோர்க்கு நன்மை சற்றுச் செய்ய வேனும் என்று மாண்டோர்கள் நீகள் மனதில் வைக்கமாட்டானே'3

என்று அகிலத்திரட்டு அம்மானையும் திருவிதாங்கூர் மன்னர் சான்றோர் மீது விதித்த பல்வேறு வரிக் கொடுமைகளைப் பட்டியல்படுத்தியுள்ளது

              “ கிபி 1807-1808ஆம் ஆண்டு தலைவரியாக மட்டும் அரசுக்குக் கிடைத்த வருமானம் ரூ.88,044/- ஒரு கோட்டை (ஒரு வகை நெல் அளவை முறை) நெல் ரூபாய் ஒன்று என்ற அன்றைய கணக்கில் இந்தத் தொகையின் இன்றைய மதிப்பைஒப்பிட்டு வரிக் கொடுமையின் கொடூரத்தை உணர்ந்து பார்க்கச் சொல்கிறார்.

முலைவரி

                           முலை வரி (மார்பக வரி) கொடுக்க முடியாமல் ஈழவப் பெண்ணொருத்தி தன் மார்னை அறுத்து வரி தண்டல்காரரிடம் கொடுத்ததும், பிள்ளைப் பெற்றுக் கிடந்தவள் வரி கொடுக்காததால் அவளை வெயிலில் நிறுத்தி முதுகில் கல்லேற்றி அதிகாரிகள் சாகடித்ததும், இறந்து போன மகளின் தாலியை விற்று அவளின் தாய் வரிபாக்கி தீர்த்ததும் திருவிதாங்கூரின் இரத்தக் கறை படிந்த வரலாற்றுச் சம்பவங்கள். திருவிதாங்கூர் அரசாங்கத்துக்குக் கீழ்சாதி மக்கள் உழைத்து உழைத்துத் துரும்பாய் இளைத்தனர். ஆனாலும் அரசாங்கம் திருப்தி அடையவில்லை.

 இத்தகைய அரசியல் பின்னணியில்தான் அய்யா வைகுண்டர் கி.பி.1809 மார்ச் மாதம் பிறந்தார். அவர் திருச்செந்தூர் கடலில் மாற்றுப் பிறப்பு (இறையனுபம்) பெற்ற வருடம் 1833 மார்ச். அவர் வைகுண்ட பதவி அடைந்த வருடம் 1851 ஜீன். வைகுண்டர்  வைகுண்டர் நாற்பத்து இரண்டு (1809-1851) ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் வாழும் காலத்தில் ஐந்து பேர் திருவிதாங்கூர் அரண்மனையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அடிமை செய்தனர். மன்னர் சுவாதித்திருநாள் வைகுண்டரை பெருஞ்சோதனைக்குள்ளாக்கினார்”4 என த.கிருஷ்ணநாதன் வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை' என்ற கருத்தைத் தாழ்ந்த இன மக்களுக்கு வைகுண்டர் உணர்த்தி வந்தார். அவரின் புரட்சிகரமான சிந்தனை ஒரு சமுதாய மாற்றத்திற்கு அன்றே வழி வகுத்தது. தன்னைத் தேடி வந்த மக்களிடம் எல்லாம் உங்களைத் தலைப்பாகை கட்டக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இந்த நாட்டில் அனைவரும் சமம். நாம் தாழ்ந்து செல்வதால் தான் நம்மைத் தாழ்ந்த சாதி என்கிறார்கள் என்று முழக்கம் இட்டார். மக்களூம் துணிச்சலுடன் கட்டி நடமாட ஆரம்பித்தனர். தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றி விட்டு உயர்சாதியினர் போல் செயல்படத் தொடங்கினர்.

வைகுண்டரின் புரட்சிகளின் முன்னேற்றத்தை பார்த்து 1995 சூலை 24 ல் சாமித்தோப்பு வந்து தலைமைப் பதியில் தரிசனம் பண்ணிய திருவிதாங்கூர் மன்னர் சித்திரைத்திருநாள் என் முன்னோர் அய்யா வைகுண்டருக்குச் செய்த கொடுமைகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அனைவருக்கும் ஆலயப் பிரவேசம் வழங்கிய சட்டம் வந்த போது (1937) திருவிதாங்கூர் திவான் சர்.சி.பி. இராமசாமி ஐயர் நாம் இன்று செய்வதை வைகுண்டர் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார்”5. என்று த.கிருஷ்ணநாதன் குறிப்பிட்டுள்ளார்.

 பொருளாதாரச் சீர்திருத்தம்

18-19 நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரின் பொருளாதார நிலை வளம் மிகுந்து காணப்பட்ட போதிலும் அங்கு வாழ்ந்த மக்களிடையே ஏற்றத்தாழ்வு கள் மலிந்திருந்தன. உணவு, உடை, உறைவிடம், ஆற்றும் பணி, ஈட்டும் செல்வம் போன்றவற்றில் சாதீய முத்திரை அடையாளப்படுத்தப்பட்டதால் பொருளாதார சமநிலை எட்டாக் கனியாகவே இருந்தது.

            "ஒரு சாணார் நிலத்தை ஒரு நாயர் கையகப்படுத்துவதை யாரும் தடுப்பதில்லை. அரசாங்கமும், காவலர்களும், நாடார்களுக்குத் துணை நிற்பதில்லை.குலத்தொழில் புரிந்து (சாதியின் அடிப்படையில்) வாழ்ந்தாலும் திருவிதாங்கூர் உழைப்பாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமின்றி எண்ணையில்லாத் தலையும் உணவில்லாவயிறும், அழுக்கேறியாடையும் உருக்குலைந்த தோற்றமுமாகவே காட்சியளித்தனர்.சுருங்கக் கூறின் திருவிதாங்கூர் நம்பூதிரி பிராமணர், நாயர் போன்றோர் வியர்வை சிந்தாத தொழிலை விரும்பி ஏற்ற போது ஏனைய சாதியினர் பணிகளை வியர்வை சிந்தச்சிந்தச் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

                   அன்றைய திருவிதாங்கூரில் அரசு ஆவணங்கள் பனை ஓலைகளில் (காகிதம் நடைமுறைக்கு வரவில்லை) பராமரிக்கப்பட்டன. இவ்வாறு ஏடு எழுதுவதற்குரிய பனை ஓலைகளைக் கொண்டு வருவதற்காக நாடார்களுக்கு ஊதியம் எதும் வழங்கப்படுவதில்லை.  நாடார்களின் இப்பணி ஏட்டோலை ஊதியம் என்று சொல்லப்பட்டது.

                             உப்பளங்களில் விளைந்த உப்பைக் கொண்டு வருவதற்குச் சரியான பாதைகள் அக்காலத்தில் கிடையாது. மாட்டு வண்டிகளும், அப்பாதைகளில் செல்ல முடியாது. உப்பைத் தலைச்சுமையாகக் கொண்டு செல்ல நாடார் போன்ற சாதியினர் திருவிதாங்கூர் அரசாங்கத்தால் பணிக்கப்பட்டனர். இப்படி உப்பு சுமப்பதற்கும் ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை. இதனை உப்பு ஊதியம் என்பர்"6 என்று த.கிருஷ்ணநாதன் தெரிவித்  உயர் சாதியினர் வேலை புரிந்த கூலிக்காக நாடார்கள் கட்டிச் சோறு பெற்றுள்ளனர். இக்கட்டிச் சோற்றில் சோற்றுப் பருக்கைகளை விட கல்தான் அதிகமிருக்கும் என்ற வேடிக்கைப் பேச்சும் அக்கால மக்களால் பேசப்பட்டுள்ளது.

சாதி சமய ஒழிப்பினை ஏற்படுத்தித்தந்த முத்திரிக்கிணறு

             வைகுண்டர் வகுத்த சமுதாய மறுமலர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிப்பது 'முத்திரிக்கிணறு' என மக்களால் போற்றப்படும் தீர்த்தக் கிணறாகும். மக்களை இனம் பிரித்தது போன்று கொடியவர்கள் நீர் நிலைகளையும் உயர்ந்தவர்களுக்கென ஒன்றும் தாழ்ந்தவர்களுக்கென மற்றொன்றும் அமைத்துப் பயன்படுத்தி வந்தனர். இறைவனால் மக்களுக்கு அருளிய தண்ணீரும் இனம் பிரிக்கப்பட்ட கொடுமையை வேறெங்கும் காண முடியாது.

                நாகர்கோவில் அருகிலுள்ள பார்வதிபுரம் ஊரில் உயர்சாதியினர் நீராடுவதற்காகப் பயன்படுத்தி வந்த நீர்நிலையொன்றில் தாகத்தால் தவித்த எளிய குலப் பெண்ணொருத்தி தண்ணீர் அருந்தியதற்காக உயர்குலக் கொடியவர்கள் கல்லால் அடித்துக் கொடுமை செய்தார்கள். இப்படி வேதனைப்பட்ட மக்களுக்கு அய்யா வைகுண்டர் பொதுக்கிணறு அமைத்து சாதி, மத பேதமில்லாமல் சமத்துவமாகப் பயன்படுத்த விரும்பியதால் உருவானதே முத்திரிக்கிணறு. இது சமுதாயத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளைப் போக்கிச் சமத்துவத்தை வளர்த்தது"7 என்று என். அமலன் கூறியுள்ளார்.

ஆண், பெண் இணைந்த வழிபாடு

                    வழிபாட்டில் ஆண், பெண் என்ற ஏற்றத் தாழ்வைப் போக்கினால் சமுதாயத்தில் எல்லா நிலையிலும் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானமாய் வாழ முடியும் என்று வைகுண்டர் முதலில் வழிபாட்டுத் தலங்களில் ஆணும், பெண்ணும் இணைந்து வழிபடும் முறையைக் கொண்டு வந்தார்.

"ஆணும் பெண்ணும் கூடி

ஆசாரம் செய்திடுங்கோ"8

 என்று அய்யா அருள்நூலில் கூறியுள்ளபடி வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வழிபடுகின்றனர்.

பெண்ணியம் பேசிய கண்ணியமானவர்

               பெண்ணியம் என்பது சமீபகாலத்திய சிந்தனை. பெண்ணியச் சிந்தனை கூட அய்யா வைகுண்டரின் செயல்பாடுகளில் இடம் பிடித்துள்ளது. ஆணுக்குப் பெண் இனைத்தவள் என்று நினைக்கப் பட்ட காலத்திலே தோசையைப் புரட்டிப் போடுவது போல பெண்ணுக்குச் சமநீதி அய்யா வைகுண்டர் கொடுத்தார்.

 எல்லாப் பெண்களுக்கும் நாமம் சாற்றுதல்

             கணவனை இழந்தவளை அறுதலி (தாலியறுத்தவள்) என்று அழைப்பது குமரிமாவட்ட வழக்கம். பொதுவாக ஒரு அறுதலி குங்குமமோ விபூதியோ பூசிக்கொள்வதில்லை. ஆனால், அய்யாவின் பதிக்கு வழிபட வருகின்ற கணவனை இழந்த பெண்களுக்கும் பணிவிடைகாரர்கள் திருநாமம் இடுகின்றனர்.

பெண்கள் முழுச்சம்மணமிடல்

                           ஆண்கள் உண்டுமுடித்த பின்னர் காலை நீட்டிப் போட்டுக் கொண்டோ, அரைச் சம்மணமிட்டோ, உணவருந்தி வந்த பெண்களை அய்யா வைகுண்டர் உண்பான் வழங்கும் போது ஆணோடு சேர்த்து அவர்களுக்குச் சமமாக முழுச்சம்மணமிட்டு உட்காரச் சொல்லி ஒரே நேரத்தில் ஆண்களையும் பெண்களையும் ஒரு சேர உண்ண வைத்துள்ளார்.

ஆண்களுக்கு தலைப்பாகை

               பாரம் சுமக்கும் கீழ்சாதி ஆண்கள் தலையில் துணித்துண்டு கட்டாமல் வைக்கோலைத் திரித்து (சும்மாடு) வைக்க வேண்டும் என்பது நிர்ப்பந்தம். தன்மான உணர்வூட்டக் கருதிய அய்யா வைகுண்டர் தன்னிடம் வரும் ஆண்களைத் தலைப்பாகையுடன் வரும்படிக் கோரினார். இன்றும் அய்யாவழி ஆண்கள் பதிவலம் (கோவிலைச் சுற்றிவரல்) வரும் போதும், வழிபாட்டு நேரத்திலும், வாகனப்பவனி போன்ற கோவில் நிகழ்வுகளிலும் அயயா வழிமுறைத் திருமணம், முதலான வீட்டு விஷேசங்களின் போதும் தலைப்பாகை கட்டிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அய்யாவழி மக்களிடத்தில் தலைப்பாகை சுயமரியாதையின் சின்னமாக உருவெடுத்துள்ளது.

இடுப்பில் தண்ணீர் குடம் 

        நாடார் முதலான சில சாதி பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் எடுக்கக்கூடாது என்ற திருவிதாங்கூர் அரச கட்டளையினால் மனங்குமுறிய அய்யா வைகுண்டர்

 "என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம்

 இறக்கென்றானே சிவனே அய்யா"9

         என்று அருள் நூலில் பாடியுள்ளார்.

திருமணத்தில் தங்கத்தாலி

            "18,19ம்  நூற்றாண்டுகளில் கீழ்சாதிப் பெண்கள் எந்தவிதமான தங்க நகைகளையும் அணியக்கூடாது என்று அரசாங்கம் தடைவித்தது. உயர்சாதியினர் சந்தைக்குச் சென்ற பெண்களின் தாலியினை அறுத்து எறிந்து போராட்டம் நடத்தினர். பனை ஓலையை கயிறு போல் திரித்து தாலியாக கட்டிவிட்டனர். இச்சமயத்தில் தான் திருமணத்தின் போது தங்கத்தாலான தாலி அணியும் பழக்கத்தினை அய்யா வைகுண்டர் உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்."10 என்று த.கிருஷ்ணநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கண்ணோட்டத்தில் நின்று பார்க்கும்போது இவையெல்லாம் சாதாரண விசயமாகத் தென்படினும் அன்றைய சூழலில் அய்யா வைகுண்டரின் கலாச்சாரப்புரட்சி அத்தியாவசியமான ஒன்றாகும்.

 வைகுண்டர் வழியாடு மற்ற வழிபாட்டில் இருந்து வேறுபடுதல  

                              அய்யா வழிபாடு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ வழிபாட்டில் இருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறது. பூசை செய்தல் என்பதற்கு 'பூ நேமித்தல்' என்றும். பூசாரியை பணிவிடைக்காரர்' என்றும் கூறுகிறார்கள். காணிக்கையை எண்ணெய்க்காசு என்றும், தீர்த்தத்தை 'பதம்' என்றும், வரிப்பணத்தை 'பிச்சைப்பங்கு என்றும் கூறுவதில் இருந்து அய்யா வழிபாடு மற்ற வழிபாட்டில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது என்பதை ஆய்வின் மூலம் மிகத் தெளிவாக உணர முடிகிறது.

 முடிவுரை

                           தற்பொழுது கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தோள்சீலை போடுகின்றனர். தங்கநகை அணிகலன்கள் அதிகமாக இவர்கள் தான் உபயோகப்படுத்துகிறார்கள். இடுப்பில் குடம் எடுக்கின்றனர், ஆண், பெண் சமமாக நின்று வழிபடுகின்றனர். மேல்சாதி கீழ்ச்சாதி என்ற பாகுபாடு இவர்களிடையே காணப்படுவதில்லை. வகுண்டர் சாமித்தோப்பில் பிறந்து அங்கு நடந்த அதர்மத்தைப் போக்கி தர்மத்தை நிலைநாட்டினர். இதனால் இங்குள்ள மக்கள், தர்மத்தை நிலைக்கச் செய்த தெய்வம் என்று வைகுண்டரைப் போற்றி வழிபடுகின்றனர்.

அடிக்குறிப்புகள்

 1.  நா.ராமசுந்தரம், வைகுண்ட காவியம் பக். 12

2.  த.கிருஷ்ணநாதன், வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும், பக். 18 ,19

3.  என். விவேகானந்தன், அகிலத்திரட்டு அம்மானை, பக். 120

 4. த.கிருஷ்ணநாதன், வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும், பக். 36 

5. த. கிருஷ்ணநாதன், வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும், பக். 20, 88

6. த. கிருஷ்ணநாதன் , வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும், பக். 21, 22

7.  என் அமலன், அய்யா வைகுண்டரின் புனித வரலாறு, பக். 87

8. பால ராமச்சந்திரன். த., அருள் நூல், பக். 29

9.  பால ராமச்சந்திரன். த., அருள்நூல், பக்.17 

10 .த.கிருஷ்ணநாதன், வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும்,பக்.96

 துணை நூல் பட்டியல்

1.பால ராமச்சந்திரன். த.,

அருள் நூல், திரு குடும்ப வெளியீடு,

 முடி சூடும் பெருமாள், சாமிதோப்பு.

 2 .விவேகானந்தன். என்.,

 அகிலத்திரட்டு அம்மானை,

 விவேகானந்தா பதிப்பகம்,

நாகர்கோவில், முதற்பதிப்பு 2004.

3. அமலன் .என்.,

 அய்யா வைகுண்டரின் புனித வரலாறு,

 அகிலம் பதிப்பகம்,

சாமிதோப்பு,

முதற்பதிப்பு 1998.

 4.  ராமசுந்தரம்.நா.,

 வைகுண்ட காவியம், தமிழாலயம்,

 சாமிதோப்பு, முதற்பதிப்பு 1997.

5.  கிருஷ்ணநாதன் த.,

  அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும்,

 திணை வெளியீட்டகம்,

நாகர்கோவில், முதற்பதிப்பு 2000