ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

யுகபாரதி கவிதைகளில் குடும்பம் மற்றும் சமூக உறவுகள் (Family and Social Relations Found in Yugabharati Poems)

கட்டுரையாளர்: தீ.மகேஸ்வரி, முனைவர் பட்ட பகுதிநேர ஆய்வாளர், தமிழ்த்துறை, பூ.சா. கோ கலை அறிவியல் கல்லூரி, பீளமேடு -கோவை-641014 | நெறியாளர் : முனைவர் இரா.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, பீளமேடு -கோவை-641014   31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

சமுதாயத்தில் அழிக்க முடியாத அங்கமாகத் திகழ்வது குடும்பமாகும். ஓர் ஆணுக்குத் துணையாகப் பெண்ணும், பெண்ணுக்குத் துணையாக ஆணும், இணைந்து வாழும் அமைப்பின் அடிப்படையில் குடும்பம் உருவாகின்றது. குடும்பத்தை வளர்த்து மேன்மைப்படுத்துவது குடும்ப உறவுகளாகும். குடும்பமானது தனிக் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்ற நிலையில் இரு வேறு அங்கமாகப் பிரிகின்றது. குடும்ப உருவாக்கத்தின் வளர்ச்சி நிலைகளாக இருக்கக்கூடிய காதல் நிலைகள் பற்றியும் திருமண பந்தத்தின் மூலம் இணையும் உன்னத இல்லற வாழ்க்கைப் பற்றியும், மாமியார் மருமகளுக்கு இடையே நடக்கும் நல்லுறவுகள் பற்றியும், தாயன்பின் மேன்மையையும் சமூக உறவுகளில் காணப்படும் மத நல்லிணக்கம் மற்றும் மனித ஒற்றுமை குறித்த உறவுகளின் உன்னதப் பண்பை யுகபாரதியின் கவிதைகள் வாயிலாக ஆராய்வதாக இப்பகுதி அமைந்துள்ளது.

திறவுச் சொற்கள் : குடும்பம், குடும்ப உறவுகள், காதல், சமதர்ம காதல், மனித நேயக்காதல், நிறைவேறாக் காதல், கணவன் மனைவி உறவு, இல்லறமே நல்லறம், மாமியார் மருமகள் உறவு, மதநல்லிணக்கணம், மனித ஒற்றுமை.  

Abstract:

Family is an indestructible part of society. A family is formed on the basis of a system in which a woman is the partner of a man and a man is the partner of a woman. Family relationships are what nurture and enhance the family. The family is divided into two distinct units as single family and joint family. This section explores through the poems of Yugabharati, about the stages of love that can be the developmental stages of family formation, the noble family life connected through marriage, the good relations between mother-in-law and daughter-in-law, the superiority of motherhood, the religious harmony and human unity found in social relations.

முன்னுரை

குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்பு வரை விரிவு பெறுகிறது. ஆதலின் குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வரும் காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூக வயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

சமுதாயம் தோன்றுவதற்கு மனிதர்களும் மனிதர்கள் சார்ந்த உறவுகளும் முக்கிய காரணிகளாகும். உறவுகளுக்கு அடிப்படையாக அமைவது குடும்ப உறவுகளும் குடும்பம் சார்ந்த மற்ற உறவுகளும் ஆகும். குடும்பத்தின் அடித்தளமாக இருப்பவர்கள் தனி மனிதர்கள். சமூக இயக்கத்தின் அடித்தளமாக இருப்பது குடும்பமாகும். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு வாழ்க்கையைக்  கூட்டுப் பொறுப்பில் நடத்துவதையே குடும்பம் என்கின்றோம். தனி மனித உறவில் நீட்சியே குடும்ப உருவாக ஏற்றம்பெறுகின்றது. மனிதர்கள் தனித்து வாழ்வது என்பது இயலாது. ஆகையினால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை உள்ளது. சார்ந்து வாழ்கின்ற மனிதர்கள் இடையே உண்டாகும் உறவு குடும்பஉறவாகவும், சமூகஉறவாகவும் வகைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை தன் எழுத்தின்மூலம் எடுத்து இயம்புவது ஒவ்வொரு படைப்பாளனின் முக்கிய கடமையாகும். அவ் வகையில் வெகுசன தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒரு சேர இயங்கி வரும் யுகபாரதியின் திரையிசைப்பாடல்கள் குறிப்பிட்டு சொல்லத் தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. திரை மொழியையும், மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவரின் கவிதைகளில் காணலாகும் குடும்ப உறவுகளில் நிலவும் திருமணத்திற்கு முந்திய காதலில் சம்மதர்ம காதல், நிறைவேறாக் காதல், மாமியார்- மருமகள் உறவு , இல்லறமே நல்லறம் என்றும்,தாயன்பு பற்றியும் சமூக உறவுகளில் காணலாகும் மதநல்லிணக்கம் மற்றும் மனித ஒற்றுமை போன்றவைகள் இப்பகுதியில் ஆராய்வதாக அமைந்துள்ளது.

குடும்பம்

மனித சமுதாயத்தின் ஒரு அங்கமாகவும் ஆணிவேராகவும் திகழ்வது குடும்பமாகும். குடும்பத்தில் கணவன்,மனைவி, குழந்தைகள் ஆகியோர் இணைந்து வாழும் வாழ்க்கையை குடும்பம்எனலாம். இல்லற வாழ்வு என்பது 'இல்லாளோடு கூடி வாழ்ந்தலின் சிறப்பு' என்றுபரிமேலழகரும்,  'இல்லின்கண் இருந்து வாழும் திறன் கூறுதல் இல்வாழ்க்கை' என்று மனக்குடவரும் குடும்பத்தின் மேன்மையைக் கூறுகின்றனர்.

உலகின் மனித சமூகம் நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. அம்மனிதத் சமூகத்தின் தொன்மையான நிறுவனங்களில் குடும்பமும் ஒன்று என்பதை,

"குடும்பத்தில் தான்  அவனுடைய வாழ்க்கையின் பெரும் பகுதி அமைகின்றது. பிறப்பிலிருந்து இறப்புவரை அவன் இக்குழுவோடு பிணைப்பு வைத்திருக்கிறான். அவனுடைய உடல் உள்ளத் தேவைகளைப் பெரிதும் நிறைவேற்றிஅவனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது குடும்பமே"1என்று வாழ்வியல் களஞ்சியம் உரைக்கிறது.

குடும்ப அமைப்பிற்கான வேறு பெயர்கள்:

இல்லம்,மனை, குரம்பை,புலப்பில், மூன்றில், குடில், கூரை ,வரைப்பு ,முற்றும், நகர் ,மாடம் போன்றவைகள் மனிதர்கள் வாழுகின்ற இடங்களாக கருதப்படுகின்றது. இதில் வாழிடத்தை குறிக்கும் முதல் சொல் மனையாகும். புக்கில் என்பதற்கு தற்காலிகமாக தங்குமிடம்என்றும், தன்மனை என்பதற்கு திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் வாழுகின்ற இடம் என்றும்,நும் மனை என்பது கணவனின் இல்லம் என்றும் பொருள் கொள்ளப்படும்.

குடும்ப உறவுகள்

குடும்பத்தை வளர்த்து மேன்மைப்படுத்துவது குடும்ப உறவுகளாகும். இக்குடும்பம் மிக சிறிய குழுவாகவும், பலர் அடங்கிய பெருங்குழுவாகவும் அமைகின்றது. கணவன் ,மனைவி  மட்டும் தனியே வாழும் வாழ்க்கையைத் தனிக் குடும்பம் என்றும் ,தந்தை ,தாய் ,குழந்தை, அத்தை ,மாமா மகன், மகள், மருமகள், தாத்தா ,பாட்டி ஆகியோர் இணைந்து வாழும் வாழ்க்கையைக் கூட்டுக்குடும்பம் என்றும் அழைக்கின்றோம்.

இக்குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளும் தான் குடும்பத்தின் பலமாகவும் , மிகப்பெரும் சக்தியாகவும் கருதப்படுகிறது.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

 என்று குடும்பத்தின் மாண்பை திருவள்ளுவர் சிறப்பித்துள்ளார்.

இக்குடும்ப உறவுகள் வாழ்க்கைக்குத் தேவையான சில அனுபவங்களையும் சில பாடங்களையும் கற்றுத்தந்து மனிதனை நெறிப்படுத்தும் களமாக அமைகின்றது. குடும்பத்தில் எழும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சனைக்கான தீர்வை ஆராய்ந்து தீர்க்கின்றனர். ஆகவே தான் குடும்பமே சமுதாயத்தின் அடிப்படை என்பது அறியலாகிறது.

காதல்

காதல் என்ற ஒற்றைச் சொல்லிற்கு பரிணாமம் பல உள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இந்நாள் வரையிலும் காதல் என்றச் சொல்லை உச்சரிக்காத கவிஞர்கள் கிடையாது.

ஜாதி, மதம் கடந்து ஒரு சமூக புரட்சிக்கு வித்திட்டது காதல் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. காதல் என்பது அன்பின் வெளிப்பாடு உணர்வு, உணர்ச்சி, பரவசம், தவிப்பு, இப்படி இனம் புரியாத மனித இயல்புகளின் அடையாளமாக இருக்கின்றன. அது மௌனமாய் பிறப்பெடுத்து, மென்மையாய் பரிணமித்தாலும் சில நேரங்களில் துயரக்கதையாகி விடுவதையும் மறுக்கமுடியாது.

இன்று புதுக்கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் காதலை உண்மையாகவும் மலரினும் மேம்பட்ட மென்மையாகவும் தவழவிட்டு வருகிறார்கள். இவ்வரிசையில் யுகபாரதி காதலைப் பலவித கோணங்களில் தன்னுடைய கவிதைகள் மூலம் அளித்து வருகிறார்.

எந்த நிலையிலும் முன்னோடி கவிஞர்களிடமிருந்து தடம் புரளாத முற்போக்குச் சிந்தனைவாதி யுகபாரதி. இவர் மண்ணின் கவிஞர் என்பதால் காதலுக்குள் கற்பைச் சொன்னவர். இவர் படைப்புகளில் காதலின் ரசனை தெரியும். ரசிப்பவனின் ரசனை அறிந்து கவிதை படைத்தவர். காதலன் கொடுத்த நாணயத்தைக் "கடவுளே கேட்டால் கூட காணிக்கைத் தரமாட்டேன்" என்று காதலி சொல்வதாய் பாடல்வரிகள் மூலம் பகுத்தறிவைப் புகுத்தியவர். உன்னைப் பற்றி பேசும் போது உன் நினைவுகளோடு  வாழும்போது செத்துப்போனால் பரவாயில்லை! என்றவர் யுகபாரதி.

சமதர்ம காதல்

இன்பத் துன்பங்களை இருவரும் இணைந்து அனுபவிக்கின்றனர். தன்னுயிர் பிரியும் தருவாயிலும் காதலின் உருவமே கண்முன் நிற்கும் என்பது காதலில் மட்டுமே சாத்தியம். தன் வேதனையைப் பகிர்ந்து கொள்ள இன்னொரு ஜீவன் கிடைத்துவிட்டால் அந்த ஆனந்தம் உன்னதமானது. அவள் அவனாகவும் அவன் அவளாகவும் நிறம் மாறி விடுகிற நிலை காதலின் உச்சம் என்பதையுகபாரதி ,

 “பிறர் கூடும் பெரும் சபையில்

எனக்கு மட்டுமே நேர்ந்துவிடுகிற

அவமானத்தை

உன்னிடம் கொட்டித் தீர்த்து

கதறலாம் போலிருந்தது

எப்படியோ கேள்விப்பட்டு

                     கலங்கிய கண்களோடு நீ எதிர்ப்படுகையில்

எதுவுமே நடவாதது போல்

மாறிய என் முகத்தை

                     என்னவென்று பெயரிடுவது?”             (யு.க.ப.248)

 காதலியின் முகமே காதலனுக்கு ஆறுதலாக அமையும் என்கின்றார்.

மனிதநேயக் காதல்

இவன்காதலிக்கின்றான் என்ற அடையாளத்திற்கு சில கூறுகள் உண்டு. காதலிக்க துவங்கியதும் முதலில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வான். உலகை மறந்து, தன் காதலியின் நினைவுகளை மட்டும் தனக்குள் உலவ விடுவான். அடிக்கடி தன் கைப்பேசியில் அவளின் எண்களை மட்டும் நீட்டிப் பார்ப்பது உண்டு.

என் போல் நீயும் ஆகி

விடக்கூடாது என்று தான்

                    சொல்லாமல் வைத்திருக்கிறேன்

                    உன்னிடம் கூட

என் காதலை”.      (யு.க,ப..45)

'ஆதலினால்' என்ற கவிதையில் காதல் வயப்பட்ட இளைஞன் தன்னைப் போல் சமூக மறந்து, தன்னை மறந்து தன் காதலியும் ஒதுங்கி விடக்கூடாது என்பதற்காக, தன் காதலைக் கூட தன் காதலியிடம் சொல்லாமல் தன் காதலையும் தன் காதலியையும் காப்பாற்றுவதாய்க் கூறுகின்றார்.

நிறைவேறாக் காதல்

"காதல் ஒரு வினோதமான வீடு. அந்த வீட்டின் ஒரு அறையில் வயதின் தேன் துளிகள்; இன்னொரு அறையில் பிரிவின் கண்ணீர்த் துளிகள்; பிறிதொரு அறையில் துரோகத்தின் ரத்தத்துளிகள்; கடைசி அறை கல்லறையாய் இருக்கிறது. காற்றில் மிதக்கும் ஒற்றை இறகென காலத்தைக் கடந்து கீழே விழுந்து நிம்மதியாய் நாம் உறங்குவதும் அந்த அறையில் தான். கடைசி கணங்கள் கண்களில் உறைந்து இருக்க, நிறைவேறாத ஆசையுடன் புரண்டு படுப்பதும் அந்த அறையில் தான்."2என்று நிறைவேறாக் காதல் அடையும் வேதனையை நா. முத்துக்குமார் எடுத்துரைக்கிறார்.

காலத்தால் பிரிக்கப்பட்ட காதல் மீண்டும் இணையும் போது நலம் விசாரித்து மட்டும் நகர்கிறது. நகர்வது உடல் மட்டும் தான் உள்ளம் விட்டுப் போன இடத்தில் தான் யுகயுகமாகக் காத்திருக்கும் என்பதை,

         “சௌக்கியமா என்கிறாய்

நீயில்லாத நானெப்படி

நலத்தோடிருக்க

                    முடியுமென்று

                    கேட்க நினைத்தேன்.

 ----------------

விரத நாளன்று

வைக்கப்படுகிற

பருக்கைகளாய்

கொத்திப் போக

ஆளில்லாமல் நீ

கூப்பிட்ட

களைப்பில் நான்”.(யு.க,பக்.135-136)

இணை சேராத காதலின் வேதனையை  விரதம் என்ற கவிதையில் எடுத்துரைக்கிறார். காலமும் கண்ணீரும் பிரித்த அவர்களை மீண்டும் காலம்தான் ஒன்று சேர்க்கிறது. காதலர்கள் உடலளவில் இருவராக இருப்பினும் உயிரளவில் ஒருவராக உள்ளனர் .

கணவன் மனைவி உறவு

சமுதாயத்தின் அடிப்படையாக குடும்பம் நிலவுகின்றது. ஆணும் பெண்ணும் திருமணத்தால் இணைந்து நல்லறமாகிய இல்லறத்தில்  கணவன் மனைவியாகி வாழ்வது குடும்ப வாழ்வின் தனி சிறப்பாகும்.

சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென் றெண்ணியப்

          பிணைமான் இனிதுண்ண வேண்டிக்

           கலைமாத்தன்  கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர்

          காதலர் உள்ளம் படர்ந்த நெறி”3

அன்பில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை ஐந்திணை ஐம்பது பாடல் வழியே தன் பிணைமானுக்காக தண்ணீர் பருகாமல் விட்டுக் கொடுக்கும் கலைமான் போன்றது இவர்களது காதல்,

"பழங்கஞ்சியும்

பயித்தந்  துவையலும்

ஏருலும் மாமனுக்கு

எடுத்துப் போவாள்"     (யு.க,ப.55)

தன் தலைவனுக்குப் பிடிக்கும் என்று ஈச்சம் பழங்களைத் துண்டில் மூடித்தருவாள். வானம் பார்த்த வறண்ட பூமி ஆனாலும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பானது எப்போதும் பெய்தபடியே இருக்கும் பிரிய மழை தான் என்கின்றார்..

இல்லறமே நல்லறம்

உலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் அமைதித் தேடி காடு மேடெல்லாம்  அலைகின்றனர். ஏனைய சமுதாயத்தார் இத்தகைய அமைதியை நாடி திரியும்போது தமிழன் இல்வாழ்வின் மூலம் அமைதியை அடையும் மிகச் சிறந்த சூழ்நிலையைக் கண்டான். பிறநாட்டார் இல்வாழ்வில் இன்றியமையாமையை அறியும் முன்னரே இவன் அதன் பெருமையை நன்குணர்ந்தான்.

அறன்னெப்   பட்டதே  இல்வாழ்க்கை  அஃதும்

பிறன் பழிப்பது  இல்லாயின்  நன்கு                     ( குறள்- 49)

'இல்லறம் அல்லது நல்லறம் அன்று' என்கிறது ஒளவை பிராட்டியார் அருளிய கொன்றை வேந்தன். குடும்பம் என்பது இல்லறம் ஆகும். இல்லறம் என்பது அறத்தின் கூறாகும். இல்லறத்திற்கு மறுதலையாகத் துறவறம் கூறப்படுவதுண்டு. ஆனால் திரு.வி.க இதனை மறுக்கின்றார்.

"மனமாசின்றும்  நீத்தல் இல்லறத்தின் ஒரு கூறு. இல்லறத்தின் பற்பல நோக்கங்களும் ஒன்றாய் இருப்பது நீர்தல் அல்லது துறவு. இத்துறவு இல்லறத்திற்கு வேறுபட்டு எங்கனம் நிற்கும்? ஆகவே துறவு என்பது இல்லறம் என்னும் அறத்தின் ஒரு கூறு என்றே கொள்க".என்று குறிப்பிடுகிறார்."4

எனவே இல்லறம் நடத்துவது இன்பத்திற்காக மட்டுமில்லை அறத்திற்காகவும் இல்லறம் நடத்தப்படுகிறது என்ற கருத்தைக்  காண முடிகிறது.

இதன் வழி வந்த யுகபாரதி,

                                “மனை துறந்து மக்கள் துறந்து

                                மரணமிலாப்  பெருவாழ்வைத்

           தேடியலையும் ஞானியர்க்குச் சொல்லிவை

                                மரண மில்லாக் காதலை

           மறித்த பின் அடைவது ஞானமல்ல

 ஊனமென்று”. (யு.க,ப.267)

இல்வாழ்க்கையில் வாழ்வதைவிட மிகச் சிறந்த அறம் வேறொன்றுமில்லை. இல்லிருந்து ஆற்றும் அறமே சிறந்தது. மனையறமே மாட்சிமை பொருந்தியது என்கின்றார் .

மாமியார் மருமகள் உறவு

"இல்லறத்தில் அமைதி தவழ வேண்டுமானால் அவ்வில்லத்தில் மனித உறவுகள் மேம்பட்டிருக்க வேண்டும். இவ்வுறவுகளில் மிகவும் இன்றியமையாதது மாமியார் மருமகள் உறவாகும்"5. என்கிறார். சி .வாசுகி

ஒரு குடும்பத்தில் முதியோர்கள் கணவன், மனைவி உடன் பிறந்தவர்கள் சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் வாழ்வது கூட்டு குடும்பமாகும். இவ்வாறு இருக்கும் குடும்பத்தில் சிற்சில சமயம் உறவு, உரிமை சச்சரவுகளும் வந்து போகும் இதில் முக்கியமானதும் தவிர்க்க முடியாததும் மாமியார் மருமகள் உறவு சிக்கல்.

மாமியார், மருமகள் என்றாலே எலியும், பூனையும் தான், என்ற சமூகத்தின் பார்வையை நாம் தான் அம்மா, மகள் உறவாக மாற்றக்கடமைப் பட்டிருக்கிறோம் என்கின்றார் யுகபாரதி.

               ‌      “முந்தியில் ஒட்டிய

         ‌            புழுதியைப் போல

                    வசவுகளையும் உதறுகிற

                    மாமியார் தான் அம்மாவுக்கும்

அம்மா காலை முதல் இரவு வரை செக்காய் சுழன்றாலும், வெகுமதி என்னவோ திட்டாகத்தான் பலவேளைகளில் கிடைக்கும். பாக்கு இடிக்கும் இரும்புரலில் தினமும் அம்மாவின் இயல்பை வருவோர்களிடமும் போவோர்களிடமும் இட்டு மெள்ளுவாள் மாமியார் கிழவி. உப்பு குறைந்தால், வெந்நீர் வைக்கத் தாமதமானால் ருத்ரதாண்டவம் எடுத்துகத்தித் தொலைப்பாள், உறியில் தொங்கும் பானையாய் ஒன்றும் பேசாமல் அம்மா ஊசலாடுவாள். மகனைக் காப்பாற்று என்று கிழவியும் புருஷனுக்கு புரியவையின்னு அம்மாவும் ஒரே தெய்வத்திடம் முறையிட பூசாரிக்கு எட்டணா லாபம் கிடைக்கும்.  இரண்டு பக்கமும் எந்தப் பக்கம் சாய்வது என்றுத் தெரியாமல் அப்பா மனசுக்குள் நெருப்பூட்டப் பட்ட சிகரெட்டாய் புகைவார்.

இத்தனைக் கிடையிலும்

கேட்க மறப்பதில்லை

அம்மா.

அத்த

மாத்திரை சாப்பிட்டீங்களா?”.                           (யு.க, பக்- 52 -53)

ஆயிரம் பிரச்சனைகள் குடும்ப உறவுகளில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகங்கள் காட்டினாலும் அனைவரும் நம்மவர் என்ற நினைப்பில் குடும்ப உறவானது இன்னும் பலப்படுகிறது. ஆலமர விழுதுகள் பலதிசை நோக்கினாலும் எங்கேயோ ஒரு மூலையில் கிடைக்கும் ஈரத்தை உறிஞ்சி நிழல்தருவது போல காலையில் துவங்கிய இவர்கள் பிரச்சனை இரவில் ஈரத்தில் முடிகிறது மாமியாரைப் பார்த்து மருமகள் கேட்கும் மாத்திரை சாப்டீங்களா? என்ற வரிகளில் உறவுகளின் கரிசனம் புலனாகிறது என்கின்றார் யுகபாரதி.

"இல்லறத்தின் உயர்நிலை தியாகத்தில் இருக்கிறது. தியாகம் இல்லாத இல்லற இல்லறமாகாது .உடல் ,பொருள், ஆவி மூன்றையும் பிறர்க்கு உரிமையாக்கிய வாழும் வாழ்வே இல்லறம். அதுவே நல்லறமாகும். அன்பு வளர்ச்சிக்கு அடிப்படை இல்லறமெனில், அதன் காரணமாக தியாகம் நிகழ்ந்தே தீர வேண்டும்"6என்கிறார்திரு.வி..

தாயன்பு:

குணப் பண்புகளின் பரிணாமத்தில் தியாகப் பண்பே உச்ச நிலை என உணர முடிகிறது. தியாகப் பண்பின் ஆக்கத்திற்கு இல்லறம் காரணமாகிறது. அகத்தில் அன்பு புறத்தின் செயல்பாடுகளில் அறமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இருப்பதைப் போல, குடும்பத்தின் இரு பக்கங்களாக அன்பும், அறனும் இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க அன்பும் தியாக உணர்வும் தாயிடம் அதிகளவு காணலாம்.

பெற்றோர்களுக்கு ஒருபோதும் குழந்தைகள் பாரமில்லை. ஆனால் இன்றையக் காலகட்டத்தில் முதுமைப் பருவத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பாரமாக கருதியதன் விளைவு ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் பல்கிப் பெருகிவிட்டன. இன்று நம் பெற்றோருக்குச் செய்வதை நாளை நம் பிள்ளைகள் நமக்கு செய்வார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறைகள் மறந்து விடுகின்றனர். தாயை விட சிறந்த தெய்வம் எதுவுமில்லை. அதனால்தான் தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிறார் ஒளவை.

ஆயிரம் செல்வம் சேர்த்து

                       அணிகலன் பூண்டபோதும்

 பாயிர நூல்கள் கற்று

 பக்குவம் பயின்ற போதும்

தாயிடம் அன்புவைக்கா

தலைமுறை வீழக்கூடும்.                        (யு.க,ப.313)

ஆயிரமாயிரம் பணம் சம்பாதித்தாலும், உடல் முழுவதும் தங்க ஆபரணங்கள் அணிந்தாலும் தாயை மறந்தவன் தலைமுறை வீழ்ந்து விடும் என்கிறார்.

சமூக உறவுகள்:

சமுதாயம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விதிமுறைகளுடன் வாழும் மக்கள் குழுவைக் குறிக்கும் சொல்லாகும். மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள்,சடங்குகள், வாழ்வியல் கூறுகள்,முதலியவற்றை அறிந்து கொள்ளும் துறையாகச் சமூகவியல் அடங்கியுள்ளது. மக்கள் எவ்விதம் கூடி வாழ்கின்றனர் என்பன போன்ற தன்மைகளைக் கண்டறிவது சமூகவியலில் நோக்கமாக இருக்கின்றது.

குடும்ப நபர்கள் அல்லாத மற்ற உறவுகளுடன் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நல்லுறவை சமூக உறவின் வாயிலாக மத நல்லிணக்கணம் ,மனித ஒற்றுமை  போன்ற தலைப்புகளில் இப்பகுதி அமைந்துள்ளது.

மத நல்லிணக்கம்:

                    கடந்த கால வரலாறு போர் பூசல் நிறைந்தது. அது தொடராமல் இருக்க வேண்டும் என்றால் யாவரும் ஒருவரை ஒருவர் நேசித்துப் பழக வேண்டும். பள்ளி வயதில் மதபேதங்கள் ஏதும் இன்றி மாணவர்கள் நட்புப் பாராட்டுகிறார்கள். என் மதம் பெரிது உன் மதம் சிறியது என்று சண்டை இடுவதில்லை. இளம் வயதில் பள்ளி மாணவர்களாக இருந்த போது கவிஞர் தன் நண்பர்களான    ஹமீது மற்றும் பீட்டருடன் சேர்ந்து கோயில் கட்டி விளையாடுகின்றார் .மணலில் கோயில் கட்டி, காட்டாமணக்கை கலசமாக வைத்துக் களிமண்ணால் கர்ப்பகிரகம்  அமைத்துக் காகிதப் பூவால் அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். விளையாட்டுமுடிந்த பிறகு வீடு செல்கின்றனர்.

“மீண்டும் வந்து பார்க்க

கலசத்தில் பட்டிருக்கும்

நீரபிஷேகத்தில்

சற்றே கரைந்திருக்கும்

அதன் உரு

சோகத் தூவானமாய்க்

கண்கள் அரும்பும்

கோயிலைச் சிதைத்த நாயின் மீது

கல்விட்டெறிவர்

ஹமீதும் பீட்டரும்”    (யு.க,ப.31)

          இது ஏதோ சிறுவர்களுக்கான கவிதை என்று எண்ணி விட முடியாது. சிறுவர்களைக் கொண்டு பெரியவர்களுக்கு மதநல்லிணக்கத்தைப் போதித்துள்ளார் எனலாம்.

மனித ஒற்றுமை

நெருக்கம் என்ற தலைப்பில் நெருங்க முடியாத உறவுகளைக் காலம் நெருங்க வைத்து விட்டது. வெண்தாடி வேந்தரின் புரட்சி கனவுகளின் எச்சங்கள் இந்த மண்ணில் மிச்சம் உள்ளது.

          ஒரு பிராமணர் தோழனின் இதயத்தின் மேல் இருக்கின்ற வெள்ளை நூலை கடந்த இதயம் உள்ள மனிதனாய் அவர் தந்த ஆடைகளை உடுத்தும் போது இவனது மானம் காக்கப்பட்டது. இவன் உண்ணும் எச்சில் தட்டின் அசைவ உணவினை பிராமண நண்பன் உண்ணும் போது ஜாதியில் வேற்றுமை தெரியவில்லை.உரிமையோடு உன் மனைவியை அண்ணி என அழைக்கும் என் தங்கைக்கு கூந்தல் வாரும் உன் மனைவி.விருட்சமான மரங்களின் விதை ஒன்றுதான் என்பது நம் அப்பன் பாட்டன்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

இணக்கம் ததும்பும் உறவறியாமல்

போயே போனார்கள்

நமது அப்பாக்கள்.                            (யு.க,ப.217)

என்று மனிதன் வேறு பண்புகளைப் பெறுவதைக் காட்டிலும் மனித நேயம் காப்பது இன்றியமையாதது என்கின்றார் யுகபாரதி.

முடிவுரை:

சமுதாயத்தின் ஆணிவேராகவும் உறவுகளின் பாலமாகவும் குடும்பம் விளங்குகின்றது. ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து அவர்களுடைய இல்லற வாழ்க்கையை சமுதாய மரபுக்கேற்றபடி அமைக்கும் போது கூட்டமைப்பு உருவாகின்றது. இம்முறைகளை அடிப்படையாகக் கொண்டு குடும்பமானது இடம், காலம் கடந்து எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு உலகளாவிய பண்பாக திகழ்ந்து வருகின்றது.

உலகில் வாழும் உயிரினங்களில் உன்னதமான பேற்றினை  மனித உயிரினம் பெறுகின்றது. உலகில் அன்பு கொண்ட மனித இதயங்களால் மட்டுமே நல்லதொரு குடும்பத்தை உருவாக்க முடியும். இவ்வாறு உருவாகக்கூடிய குடும்பத்தில் திருமணத்திற்கு முந்திய காதலின் நிலை, திருமண உறவுகளின் மூலம் இணையும் இல்லறத்தின் மாண்பு, மாமியார் -மருமகள் இடையே நடக்கும் நல்லுறவு, தாயின் அளப்பறியாத அன்பு பற்றியும் சமூக உறவாக கருதப்படுகின்ற மத நல்லிணக்கம் மற்றும் மனித ஒற்றுமை பற்றிய நல்ல உறவுகளில் மேன்மையை இந்த சமுதாயத்திற்கு யுகபாரதியின் கவிதைகள் எடுத்தியம்புகின்றன.

சுருக்கக் குறியீடு

யு.க  - யுகபாரதி கவிதைகள், ப - பக்கம், பக்  – பக்கங்கள்

அடிக் குறிப்புகள்

  1. வாழ்வியல் களஞ்சியம் தொகுதி 7 ( ப. 599),
  2. நா. முத்துக்குமார், கட்டுரைகள் (ப.19)
  3. ஐந்திணை ஐம்பது (ப.38)
  4. திரு.வி.க.பெண்ணின்பெருமை (அல்லது) வாழ்க்கைத் துணை நலம்.,ப.(181)
  5. சி. வாசுகி பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள்.(ப.6)
  6. திரு.வி.க. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். (ப.158)

துணை நூல் பட்டியல்

1.வாழ்வியல் களஞ்சியம் தொகுதி 7,தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,

   முதற்பதிப்பு:1991.

2.நா.முத்துக்குமார் கட்டுரைகள், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,- சென்னை 600 078.

   முதற்பதிப்பு-2023

3. வித்துவான் டாக்டர் எம். நாராயண வேலுப்பிள்ளை, பதினெண் கீழ்க்கணக்கு

     நூல்கள், நர்மதா வெளியீடு.

4. திரு. வி. க,. பெண்ணின் பெருமை (அல்லது) வாழ்க்கைத் துணை நலம்,

    சாரதா பதிப்பகம்.

5. சி வாசுகி,. பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள், நியூ செஞ்சுரி , புக் ஹவுஸ் . 2007

6. திரு .வி. க,. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சாரதா பதிப்பகம்.